Advertisement

அத்தியாயம் பத்து:

செந்திலுடன் பேசிவிட்டு வந்து சரியான எரிச்சலில் இருந்தாள் ராஜி. “கொஞ்சம் கூட அடங்கவே மாட்டேங்கிறானே. ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டேன்னு நக்கல் வேற….. ஆளையும் பாரு அவனையும் பாரு”, என்று மனதிற்குள் சற்று நேரம் அவனை நினைத்து பொருமினாள்.

 மறுபடியும் அவளின் அம்மாவை தேடிய ராஜி அவரின் ரூமிற்குள் இருக்கிறாரா என்று பார்க்க போனாள். உள்ளிருந்து ரூம் கதவு தாளிடப்பட்டு இருந்தது.

“ஒரு வேலை தூங்கறாங்களோ………. எழுப்பலாமா வேண்டாமா”, என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தியவள்……….. பின்பு வேண்டாம் என்று முடிவு செய்து….. “பசிக்கிறது”, என்று சாப்பிட போனாள்.

செந்திலுடன் வம்பிழுத்து வந்ததினால் மனது சற்று அதில் லயித்திருந்தது. ஆகாஷ் அவளிடம் பேசியது அவளுக்கு ஞாபகத்தில் இல்லை.

சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் கழித்த பிறகு தான் ஆகாஷ் பேசியது ஞாபகத்திற்கு வந்தது.

என்னவாக இருக்கும் என்று மூளையை போட்டு மறுபடியும் கசக்க ஆரம்பித்தாள்.          

வெகுநேரம் அன்னையும் தந்தையும் வெளியே வராதது கண்டு அதற்குமேல் பொறுமையில்லாமல், “அம்மா! அம்மா!”, என்று ரூமின் முன்னின்று கூப்பிட்டாள்.

அவளின் குரல் கேட்ட தேவிகா வந்து கதவை திறந்தார்.

“தூங்குணீங்களா? எழுப்பிட்டனா!”,

“இவ்வளவு வருஷமா ஒண்ணும் தெரியாம தூங்கிட்டு தான் இருந்திருக்கேன்”, என்றார் தேவிகா.

அம்மாவின் பேச்சு ராஜியை, “என்னமா என்ன ஆச்சு?”, என்று கேள்வி கேட்க வைத்தது.

தேவிகாவிற்கு அவளிடம் சொல்ல வேண்டும் தான். ஆனால் அப்போது இருந்த மனநிலையில் சொல்ல முடியும் போல தோன்றவில்லை.

“ஒண்ணுமில்லை”, என்று சொல்லி………… “எதுக்கு கூப்பிட்ட”, என்றார்.

“ரொம்ப நேரம் ஆச்சேன்னு கூப்பிட்டேன்! எழுப்பிட்டேன்னு கோபமா?”, என்றாள்.

“உன்னையும் கோவிச்சிகிட்டு நான் எங்க போவேன்”, என்றவர்……… “இல்லை! நான் தூங்கலை” என்றார். மாலை நேரம் ஆகிவிட்டதால் மகளுக்கும் கணவருக்கும் அவரையறியாமல் காஃபி கலக்க சென்றார்.

“ஏம்மா ஏதோ மாதிரி பேசற”, என்று அவரின் பின்னேயே சென்றாள்.

அம்மாவின் முகம் பார்த்த ராஜிக்கு ஏதோ சரியில்லை என்று புரிந்தது.

“என்னம்மா ஏதாவது பிரச்சனையா”, என்று கேட்டாள்.

மகளிடம் மறைத்து வைக்க தேவிகாவால் முடியாதுதான். உடனேயே பேச விருப்பம் இல்லாமல், “அப்புறம் பேசலாம்”, என்றார்.

ராஜிக்கு விஷயம் தெரியாவிட்டால் மண்டையே வெடித்துவிடும் போல ஆகியது. பொறுமையின்றி  அப்பாவை பார்க்க போனாள்.

“ஏன் அப்பா அம்மா ஒருமாதிரி இருக்காங்க?”, என்று அண்ணாமலையிடம் கேட்க…… அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதிகாத்தார்.

“என்னப்பா பிரச்சனை”, என்றாள் மறுபடியும்.

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா”, என்று கீழே போனார்.

அவர்கள் இருவரின் முகம் பார்த்தே ராஜிக்கு புரிந்தது ஏதோ விஷயம் பெரிது என்று. அப்போதுதான் தோன்றியது ஆகாஷ் சொன்னதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்று.

மறுபடியும் அம்மாவிடம் போனாள்……….தேவிகா அவளிடம், “காஃபி எடுத்துக்கோ, உங்கப்பாவுக்கு இதை கொண்டு போய் கொடுத்துடு”, என்றார்.

“அம்மா…….”, என்று அவள் ஆரம்பிக்க………

“சொன்னதை செய் பாப்பா”, என்றார் சலிப்பாக……

மறுபேச்சு பேசாமல் காபியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தவள்…….. மேலேயிருந்து அப்பாவிடம், “அப்பா காபி”, என்க…….

“இங்கயே கொண்டுவாம்மா”, என்றார் அவர்.

ராஜி காஃபி கொண்டு வந்ததில் இருந்தே அவளுக்கு இன்னும் விஷயம் தெரியாது என்று அண்ணாமலைக்கு புரிந்தது.

 எப்போதும் அப்படி சொல்ல மாட்டார் இன்று என்ன ஆயிற்று……… இருவருக்கும் ஏதாவது சண்டையா இவர்களுக்குள் என்று யோசித்தபடியே எடுத்துக்கொண்டு கீழே வந்து கொடுத்துவிட்டு போனாள்.

மேலே வந்த ராஜியிடம் தேவிகா………. “ராஜி நைட்க்கு ஏதாவது நீ சமைச்சிடு…. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்”, என்று சொல்லி ரூமிற்குள் போகப் போக………

“என்ன ஆச்சும்மா? உடம்பு ஏதாவது சரியில்லையா…….. டாக்டர் கிட்ட போகலாமா”, என்றாள் ராஜி.

தேவிகா அமைதியாகவே இருக்க………. “அம்மா எதுவா இருந்தாலும் சொல்லுங்க, சின்னதா இருக்கும் போதே டாக்டர் கிட்ட காட்டிடலாம்….. பெருசு பண்ணிக்காதீங்க”, என்றாள் அக்கறையாக.

மகளின் கரிசனத்தில் கண்கள் கரித்தது தேவிகாவிற்கு. கண்களில் இருந்து கண்ணீர் மளமளவென்று வெளியேறியது.

அம்மா அழுவதை பார்த்த பதறிய ராஜி……….. “என்னமா, என்ன ஆச்சு? அப்பாவுக்கும் உனக்கும் சண்டையா?……… அதுக்கு போயா அழுவற, அப்பா ஏதாவது திட்டினாரா?……. சும்மா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போவியா…….. அதுக்கு போய் இப்படி பீல் பண்ற…………”, என்று……. என்ன விஷயம் என்று தெரியாமலேயே தேவிகாவை சமாதானப்படுத்தினாள்.

“நம்ம மோசம் போயிட்டோம் பாப்பா”, என்றார் தேவிகா அழுதபடியே…….

ராஜிக்கு விஷயம் சுத்தமாக புரியவில்லை………

“ஏம்மா தொழில்ல ஏதாவது பெரிய நஷ்டம் வந்துடுச்சா……… நம்மால சமாளிக்க முடியலையா”,

“இல்லை பாப்பா! இது தொழில் நஷ்டம் இல்லை! வாழ்க்கை நஷ்டம்! உங்கப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருக்கு பாப்பா”, என்றார் தேம்பியபடியே…….

ராஜிக்கு சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை……… தன் தந்தையை அப்படி நினைக்க முடியவில்லை அவளால்.

தன் அன்னையை அதட்டினாள்………. “அம்மா என்ன உளர்ற? யார் என்ன சொன்னாலும் நம்பிடுவியா? நம்ம அப்பாவை பத்தி நமக்கு தெரியாதா”,

“அடுத்தவங்க சொன்னா நம்பிடுவனா பாப்பா……. உங்க அப்பாவே தான் சொன்னாரு”,

“அவர் சும்மா உன்னை கலாட்டா பண்ணியிருப்பாரும்மா”, என்றாள் ராஜி அப்போதும் தன் தந்தையின் மேல் இருந்த நம்பிக்கையால்.

“அப்படி ஏதாவது இருக்கக் கூடாதான்னு தான் என் மனசு அடிச்சிக்குது……. ஆனா அப்படி எல்லாம் எதுவும் இல்லை பாப்பா………. எல்லாம் நிஜம்! என் தலையில உங்கப்பா கல்லை தூக்கிப்போட்டுட்டார்………. இத்தனை வயசுக்கு மேல இப்படி எல்லாம் நடக்கும்னு கனவா கண்டேன் நான்………. உங்கல்யாணம், என் பேரக்குழந்தைங்க இப்படி நினைச்சிக்கிட்டு இருக்க…….. இங்க என்னெனவோ நடந்து போச்சே”, என்றார் தேவிகா.

தன் தந்தையின் மேல் இருந்த நம்பிக்கை சற்று ஆட்டம் கண்டது.                             

இன்னும் தன் அம்மாவின் வார்த்தையின் மேல் நம்பிக்கை வராமல் பார்த்தாள்.

தன் மகளின் கண்களில் அப்பாவின் செய்கையை நம்பாத தன்மை இருந்ததை பார்த்த தேவிகா…….. அவருக்கும் தன் கணவருக்கும் நடந்த உரையாடலை அப்படியே தெரிவித்தார்.

ராஜிக்கு சொல்ல முடியாத அதிர்ச்சி……….. “இன்னொரு பெண்ணுடன் தொடர்பு….. அவள் கர்ப்பமாக இருக்கிறாள்………. இப்போது அதை திருமணத்தில் முடிக்க வேண்டும்……. அதற்காக வந்தவன் தான் இந்த ஆகாஷா………”,

“எப்படி? எப்படி? என் அம்மாவிற்கு துரோகம் செய்துவிட்டு இந்த வீட்டில் வந்து இருந்து விருந்தாடி சென்றிருக்கிறான் அந்த ஆகாஷ். இவர்களுக்கு எல்லாம் மனசாட்சி என்பதே கிடையாதா………”,

“என்னை அவனுக்கு பிடித்திருக்கிறதாமா……. அவனின் அக்காவிற்காக என்னை திருமணம் செய்துகொள்வானாமா…….. என்ன ஒரு துரோகம்……….. என்கிட்ட அடுத்த முறை இப்படி பேசட்டும் மவனே இருக்குடா உனக்கு……. ராஜி உனக்கு அவ்வளவு ஈஸியா போயிட்டாளா……”,

“நீ ஹான்ட்சம்னா அது உன்வரைக்கும்……….. நீ படிச்சிருந்தா அது உன்வரைக்கும்…… உன்கிட்ட பணமிருந்தா அது உன்வரைக்கும்…….. இதுல எல்லாம் மயங்கி என் அம்மாவுக்கு துரோகம் பண்ணின வீட்டுக்கு நான் போவேனா…….. என்னை என்ன உப்பு போட்டு சாப்பிடாதவன்னு நினைச்சிட்டாங்களா”,    

அடுத்தவனைப் பற்றி பேசி என்ன ஆகப்போகிறது என் தந்தை சரியில்லாத போது…… நீண்ட நாள் தொடர்பு……… இப்போது அதை சமூக அங்கீகாரமாக மாற்ற விழைகிறார் என்று நன்கு புரிந்தது.

அப்போது நான் பார்த்த இரண்டு முறையும் ஆகாஷ் பேசியது அவள் அக்காவிடமா……… அவனது அக்காவினது வாழ்க்கையை சரி படுத்த அடுத்தவர் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறான்.

ராஜிக்கு கண்மண்தெரியாத கோபம் வந்தது…… அழுகை எல்லாம் வரவில்லை. தன் தந்தையை ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆத்திர ஆத்திரமாக வந்தது.

தன் அம்மாவை பார்க்க அழுகையில் கரைந்து கொண்டிருந்தார். “அம்மா…….. நீ அழுதா மட்டும் இந்த பிரச்சனையை தீர்ந்திடுமா என்ன? முதல்ல அழுகையை நிறுத்து! அவர் இவ்வளவு உன்கிட்ட சொன்ன பிறகும் நீ கடமை தவறாத மனைவியா அவருக்கு  காஃபி கொடுத்து விட்டிருக்கிற……….. உன்னை என்ன செய்யலாம்? உன்னை மாதிரி பொம்பளைங்க இருக்கிற வரைக்கும் இந்த ஆம்பிளைங்க தப்பு செஞ்சிட்டே இருப்பாங்கம்மா”,

“போடா நீயும் வேண்டாம்……… உன் உறவும் வேண்டாம்னு……… தூக்கி போட்டுட்டு போவியா…… எப்படி அவரை சும்மா விட்ட……… அட்லீஸ்ட் இதை கேள்விப்பட்ட உடனே அவர் மண்டையையாவது உடைச்சிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன்”, ….. கட்டுக்கடங்காத கோபம் வார்த்தைகள் தடுமாறின…….

“நாம இனிமே அவர்கூட இருக்க வேண்டாம்மா”,

“எங்கடி போவோம் நாம்? இது நம்ம வீடு! நாம ஏன் போகணும்? எதுக்காகவும் யாருக்காகவும் நான் வீட்டை விட்டு வரமாட்டேன்”.

“அப்போ அவரை போகச்சொல்லு”,

“எதுக்கு போகச்சொல்லனும்…….. அது தான் சாக்குன்னு உங்கப்பா போய் அங்க உட்கார்ந்துக்கவா………. அப்போ நாம இதையெல்லாம் நினைச்சி வருத்தப்பட்டுட்டு இருப்போம்……….. அவர் விட்டது தொல்லைன்னு நம்மளை கை கழுவி விட்டுட்டு  அவளோட போய்  நிம்மதியா குடும்பம் நடத்துவாரா”,

“அப்போ என்ன தான் செய்யலாம்னு இருக்கேம்மா”,

“எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை……… ஆனா நான் கண்டிப்பா இந்த வீட்டை விட்டும் போகமாட்டேன் அவர் வாழ்க்கையை விட்டும் போகமாட்டேன்…… நடுவுல வந்தவ நடுவுல போகட்டும்”,

“அப்போ அவளை விட்டுட்டு வந்தா அப்பாவை நீ மன்னிச்சு விட்டுடுவியா”,

“நடந்ததை இனி யாராலயும் மாத்த முடியாது. அவர் கண்டிப்பா அவளை விட்டிட்டு வரமாட்டார் எனக்கு தெரியும். என் குழந்தைன்னு பொறக்காத குழந்தையை அவ்வளவு பாசமா சொல்றார். அந்த குழந்தைக்காகவாவது அவளை விடமாட்டார்”, 

“அப்போ என்னதான்மா பண்ணபோறோம்”,

“ஒண்ணும் பண்ண மாட்டோம்! என்ன பண்ண முடியும் நம்மால! ஒண்ணும் பண்ண முடியாது! அது தான் நிஜம்! நம்மளால பண்ண முடிஞ்ச ஒண்ணே ஒண்ணு அவர் வாழ்க்கையை விட்டு விலகி போறதுதான்”.

“அப்போ போயிடலாம்”.

“அப்படியெல்லாம் என்னால போகமுடியாது”.

“அப்படி என்னம்மா அவரோட இருக்கணும்னு………. நம்மளால தனியா பொழைக்க முடியாதா……… இல்லை நம்ம பொண்ணை தானே பெத்து வெச்சிருக்கோம், அவ நம்மளை பார்த்துக்க மாட்டான்னு நினைக்கிறியா………. உன் காலம் உள்ள வரைக்கும் நான் உன்னை பார்த்துக்றேன்மா……… உன்னை விடமாட்டேன்”, என்றாள் ஆவேசமாக.

மகளின் பாசமான வார்த்தைகள் அவருக்கு மிகுந்த நிம்மதியையும் சந்தோஷத்தையும்  கொடுத்தது……… கணவன் தான் அப்படி போய்விட்டான் மகளாவது தனக்கு நம்பிக்கை கொடுக்கிறாளே என்று…….

“நடைமுறையில இது சாத்தியம் தான் ராஜி……… நான் இல்லைன்னு சொல்லலை! ஆனா நம்ம எல்லோருக்கும் ரெண்டாம் பட்சம் ஆகிடுவோம். உங்கப்பாவோட சேர்ந்து இருக்கிற வரைக்கும் தான் எனக்கு முதல் மரியாதை! நான் போற வர்ற இடத்துல எல்லாம் என்னை மரியாதையா பார்ப்பாங்க! நான் அவரை விட்டு போயிட்டேன்னா சொந்தபந்தங்க நம்ம கிட்ட நல்லா பேசினாலும் நான் அவங்களுக்கு இரண்டாம் பட்சம் ஆகிடுவேன்”.

“ஒரு பரிதாபமா பார்ப்பாங்க…… புருஷனை விட்டு பிரிய தகுந்த காரணம் இருந்தாலும்…… நீ செய்யறது தான் சரின்னு பலர் சொன்னாலும்……. சமூகத்துல அந்த பொண்ணுக்கு இரண்டாம் இடம் தான்……. அதுக்காக ஆண்கள் என்ன செஞ்சாலும் பொருத்துட்டு போகனும்னு நான் சொல்லலை………. என்னால எதுக்காகவும் என் மரியாதையையும் கௌரவத்தையும் விட்டு கொடுக்க முடியாது”.    

“அவரோட  ஒட்டிக்க வந்தவ அப்புறம் முழுசாவே அவளுக்கு உரிமைக்காரி ஆகிடுவா. எப்படி இருந்தாலும் இப்போதைக்கு அவ தான் உங்கப்பாவுக்கு என்னைவிட  முக்கியம். ஆனா என்னால அதை ஊருக்குள்ள பரப்பமுடியாது……. அது எனக்கு தான் கேவலம் அசிங்கம்”.

“அவரைப் பத்தி நான் என்ன தப்பா சொன்னாலும் என் முகத்துலயே நான் துப்பிக்கற மாதிரி தான்”. 

“நான் அவரோட இருக்கிற வரைக்குமாவது எனக்கு கொஞ்சம் பயந்து அவளை முன்னிலைப் படுத்த மாட்டார். ஆனா நான் போயிட்டேன்னா அவளே எல்லாமாகி போவா அவருக்கு. அவருக்கு எப்படியோ என்னால இதையெல்லாம் ஒத்துக்கவும்  முடியாது………. தாங்கவும் முடியாது”,

“நாம அநாதை மாதிரி தனியா போய் கஷ்டப்படுவோம்….. அவங்க சந்தோஷமா இருப்பாங்களா? என்னால முடியாது……..”, என்றார் தீர்மானமாக.

அம்மாவின் வாதம் ராஜிக்கு புரியவேயில்லை.

“நாம உள்ள இருந்து எதிர்ப்பை காட்டலாம் ராஜி………. எப்படியும் அதுக்கு பிரயோஜனம் இருக்க போறது இல்லை……… ஆனா வெளில போயிட்டோம்னா அந்த எதிர்ப்பை காட்டக் கூட சந்தர்ப்பம் இருக்காது”, என்றார்.

“ராஜிக்கு அம்மா சொல்வதில் உடன்பாடு இல்லை……… அப்படி என்னமா அவரோட குடும்பம் நடத்தணும்னு உனக்கு”,

“யாருக்காவும் என்னால என்னோட உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. என் உடம்புல இந்த உயிர் இருக்கிற வரைக்கும் அது நடக்காது. அப்படி என் உரிமை பறிபோகும்னு நினைச்சா என் உடம்புல உயிர் இருக்காது”, என்றார் உறுதியாக.

அம்மாவின் பேச்சு ராஜிக்கு பயத்தை கொடுத்தது.

“அம்மா ஏதாவது பண்ணிக்குவியா நீ”, என்றாள் கலவரமாக…….. உடனேயே கோபமாக ராஜியே கத்தினாள்……… “அவரை ஏதாவது பண்ணிடுவேன்னு சொன்னா கூட ஒரு அர்த்தம் இருக்கு………. நீயேன்மா பண்ணிக்குவ”,

மகளின் கோபத்தை பார்த்தவர்………. “எவ்வளவு செல்லமாக வளர்த்து, இப்படி ஒரு கஷ்டத்தை மனஉளைச்சலை பெண்ணுக்கு கொடுத்துவிட்டோமே”, என்று இருந்தது.

கணவர் சொன்னது வேறு பயமுறுத்தியது……… இந்த காரணத்தை வைத்து திருமணத்திற்கு பிறகு இவளை யாராவது குத்திக் காட்டி பேசினால் தன் மகள் நிச்சயம் பொறுத்துப் போகமாட்டாள் என்று தெரியும். அவளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமே என்று பெற்ற நெஞ்சம் பதறியது. தன்னுடைய பிரச்சனை தேவிகாவிற்கு பின்னுக்குப் போனது. 

இவரால் மகளின் வாழ்க்கை கேள்விகுறியாகிவிட்டதோ????? நெஞ்சுப் பதைத்தது……

எதையும் இப்போது யோசிக்க வேண்டாம் தள்ளிப் போடு என்று மனம் சொல்ல…… “பாப்பா இந்தப் பிரச்சனையை ஒத்திப்போடுவோம்…….. என்னால எதுவும் யோசிக்க முடியலை விடு! அப்புறம் பார்க்கலாம்!”,

“என்னம்மா இப்படி பேசுற? இது விடக்கூடிய பிரச்சனையா………”,

“நம்ம இதுல செய்யறதுக்கு ஒண்ணுமில்லை…….. அதுதான் நிஜம். விடு! விடு!”,

“நான் இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னேன்………. அப்பா எங்க போறாரு எங்க வர்றாருன்னு பாருன்னு என் பேச்சை கேட்டியா??”,

“எங்க போறாரு எங்க வர்றாருன்னு பார்த்தா மட்டும் இப்படி நடக்காம இருந்திருக்குமா….. நடக்கறது எப்படி இருந்தாலும் நடந்திருக்கும்…….. ஏமாத்தறவங்க எப்படி இருந்தாலும் ஏமாத்த தான் செய்வாங்க…. அதுவுமில்லாம இது வாழ்க்கை பாப்பா………. இந்த கணவன் மனைவி உறவுல நம்பிக்கை ரொம்ப முக்கியம்…. இதுல கண்ணுல விளக்கெண்ணையை விட்டுட்டு பார்த்துட்டு இருக்க முடியாது”.

தன் அம்மா அழுதாலும் மிகவும் நிதானமாக இருப்பதாக தோன்றியது ராஜிக்கு.  அவளின் இந்த அம்மா அவளுக்கு முற்றிலும் புதியவராக தோன்றினார். தன்னுடைய அம்மா அவளின் கண்களுக்கு இப்போது தைரியமான பெண்மணியாக தோன்றினார்.

இந்த மாதிரி பிரச்சனைகளை எல்லாம் அணுகுவது அவ்வளவு சுலபம் அல்ல என்று ராஜிக்கு தெரியும்.

தன்னுடைய வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு நிகழ்வு வந்தால் தானெல்லாம் மிகவும் மனதொடிந்து விடுவோம் என்று தோன்றியது. வேண்டாம் வேண்டாம் இப்படி ஒரு சூழ்நிலையோ இப்படி ஒரு வாழ்க்கையோ எனக்கு வேண்டாம்.    

இந்த விஷயத்தில் தான் தன் அம்மாவிடம் இதற்குமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டது போல தோன்றியது.

இதற்கு தான் அந்த ஆகாஷ் தன்னை அத்தனை முறை போன் செய்யச் சொன்னானா…… அவனின் செய்கையை நியாயப்படுத்த முயல்வான்…….. அவளுக்கு அவனோடு பேசவே பிடிக்கவில்லை.

தன் அக்கா தப்பு செய்யாமல் பார்ப்பதை விட்டு………. செய்த தப்பை சரி செய்ய முயல்கிறான். 

தன் அப்பாவிற்கு குழந்தை பிறக்கப் போகிறதா………… எப்படி? எப்படி? அவளால் இதெல்லாம்   ஜீரணிக்கவே முடியவில்லை……. ஒரே நாளில் அவளின் தந்தை அவளுக்கு அந்நியமாகி போனார்.

மகளின் முகபாவங்களையே  பார்த்துக்கொண்டிருந்த தேவிகா……….. “போ ராஜி! போ! எதையாவது சமைச்சு வெச்சிடு………. நான் படுத்திருக்கிறேன்”.

“அம்மா நான் சமைச்சு வெப்பேன்………. ஆனா அவர் வந்தா அவருக்கு பரிமாறுன்னு எல்லாம் சொல்லக்கூடாது”, என்றாள் கறாராக……

“இல்லை! சொல்ல மாட்டேன்”, என்றார் மகளின் மனம் புரிந்தவராக. இத்தனை நாட்கள் இருந்தது போல இனிமேல் தன்னுடைய வாழ்க்கை இருக்கப்போவதில்லை என்று அவருக்கு நன்கு புரிந்தது.

ராஜியும் தன் அம்மா சொல் தட்டாமல் சமைத்து வைத்துவிட்டு தன் ரூமிற்குள் போய் புகுந்து கொண்டாள்.

கீழே அண்ணாமலை சீனியப்பனிடம் பேசினார்………. “கொஞ்ச நாளைக்கு ராஜியை நம்ம வண்டிலயே காலேஜ்க்கு அனுப்பி வைக்கலாம்னு பார்க்கிறேன்… அதுக்கு டிரைவர் வேணும்………. யாரை சொல்லலாம்”.

“யாரை சொல்லலாம்னு நீங்க நினைக்கறீங்க?”,

“ஒரு நாள் ரெண்டு நாள்ன்னா கூப்டா வருவானுங்க……….. தினமும் காலைலயும் சாயந்தரமும் யார் வருவா தெரியலையே”.

“அதுக்கு பெர்மனண்டா தான் ஒரு டிரைவரை வெக்கணும்………. ஆள் சொல்லி வைக்கிறேன்”, என்றார் சீனியப்பன்.

“அப்போ நாளைக்கு என்ன பண்றது…….. நான் தான் போகணும் போல”, என்றார் அண்ணாமலை. அவருக்கு சந்தேகமாக இருந்தது…… ராஜி தன்னுடன் வருவாளா என்று.

அவருக்கு தெரியும் எப்படியும் இந்நேரம் தேவிகா அவளிடம் விஷயத்தை சொல்லியிருப்பார்……… அதனால் ராஜி தன் மேல் கோபமாக தான் இருப்பாள் என்று தெரியும். அதனால் தான் அவர் யோசித்தார்.

“வேற யாரும் இல்லையா”, என்று சீனியப்பனிடமே மறுபடியும் கேட்க…….

“செந்தில் கூட நல்லா வண்டி ஒட்டுவான்…… அவனை வேணா டிரைவர் கிடைக்கிற வரைக்கும் ஓட்டச் சொல்லட்டுமா………..”,  

இந்த யோசனை சரியாகப்பட்டது அண்ணாமலைக்கு. அவர் சற்றும் யோசிக்கவில்லை ஒரு வயதுப் பையனுடன் எப்படி தன் பெண்ணை தனியாக அனுப்புவது என்று. செந்தில் மேல் அவருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.

“சரி! செந்திலை கூப்பிடுங்க! அவன்கிட்டையும் சொல்லிடுவோம்”, என்றார்.

சீனியப்பன் செந்திலை அழைக்க…….. வந்தவனிடம்……….

“நாளைல இருந்து நம்ம ராஜியை காலேஜ்க்கு சுமோல கொண்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வந்துடு”, என்றார்.

“என்னது அந்த பிசாசையா……….. அவ வேற வாயை தொறந்தாளே என்னை வசை மாரி பொழிவா…. அவளையா”, என்று ஒரே யோசனையாக இருந்தது.

ஒரு வருடமாக அவளின் கடைக்கண் பார்வைக்காக ஒரு டீக்கடையில் தினமும் காத்திருந்தவன்……….. இப்போது அவளின் அருகில் தினமும் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இருக்கும் வாய்ப்பு பிடிக்கவில்லை.

அவனின் முகத்தில் யோசனையை பார்த்த அண்ணாமலை, “என்ன செந்தில்”, என்றார்.

“தினமுமா”, என்றான்.

“டிரைவர் கிடைக்கிற வரைக்கும் தான்”, என்றார்.

வேறு வழியில்லாமல், “சரி”, என்று ஒத்துக்கொண்டான்.

அண்ணாமலை வேலை முடித்து மேலே வந்தபோது வீடு மிகுந்த அமைதியில் இருந்தது. அந்த அமைதியே மகளுக்கும் விஷயம் தெரியும் என்று சொன்னது.

எப்போதும் மகளை அழைத்துக்கொண்டே மேலே வரும் அவருக்கு……. இன்று மகளை அழைக்கத் தயக்கமாக இருந்தது. 

டைனிங் டேபிளில் சமைத்தது எல்லாம் வைக்கப்பட்டு இருந்தது. பார்த்தாலே தெரிந்தது, இன்னும் யாரும் சாப்பிடவில்லை.

ரூமினுள் போனால் அங்கே தேவிகா படுத்துக்கொண்டு இருந்தார். நேரம் மணி ஒன்பது என்றது.

“சாப்பிடலாமா”, என்றார் தேவிகாவை பார்த்து……..

“எனக்கு பசிக்கலை”, என்றார் தேவிகா.

“நீ மாத்திரை சாப்பிடணும் தேவி…….. எழுந்து வா சாப்பிடலாம்”, என்று மறுபடியும் அழைத்தார். தேவிகா அசையவேயில்லை.

திரும்பத்திரும்ப சொல்லியும் தேவிகாவிற்கு எழுந்து வரும் எண்ணம் இருப்பது போல தெரியவில்லை.  மேலே அண்ணாமலையும் பேசவில்லை……… அவரும்  ஒன்றும் சாப்பிடாமல் படுத்துக்கொண்டார்.

தேவிகாவிற்கு அவர் பசி தாங்க மாட்டார் என்று மனம் கவலை கொள்ளத் துவங்கியது. சற்று நேரம் அப்படியே படுத்திருந்த அவரால் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை, “எழுந்து வாங்க”, என்றார்.

அண்ணாமலை அப்படியே படுத்திருக்க………. “எழுந்து வாங்கன்னு சொன்னேன்”, என்று அவரை ஒரு அதட்டல் போட்டார்.

அவர்கள் இருவரும் சாப்பிடும் அறைக்கு வந்த போது ராஜி அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள். இவரை பார்த்ததும் முகத்தை வேறு புறம் திருப்பினாள். அண்ணாமலை சாப்பிடுவதற்கு அங்கே அமர்ந்தவுடனேயே அவளின் தட்டைத்தூக்கிக் கொண்டு அவளின் ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.

அண்ணாமலைக்கு முகத்தில் அடித்தது போல இருந்தது. அவர் உடனே சாப்பிடாமல் எழ முற்பட……….. “உட்காருங்க! இனிமே இப்படித்தான் இருக்கும் வாழ்க்கை! யாரும் யாருக்காகவும் சாப்பிடாம இருக்க முடியாது”, என்றார் தேவிகா.

மனமில்லாமல் அமர்ந்து உண்ண ஆரம்பித்தவர், “நீ சாப்பிடலை”, என்றார்.

“இப்போதானே யாரும் யாருக்காகவும் சாப்பிடாம இருக்க முடியாதுன்னு சொன்னேன்! நீங்க சாப்பிட்டிட்டு போங்க! நான் சாப்பிட்டுக்கறேன்!”

தேவிகாவிடமிருந்த வார்த்தைகள் வந்த விதம் மேலே தேவிகாவிடம் பேச அண்ணாமலைக்கு தைரியத்தை கொடுக்கவில்லை.

அவர் அங்கே இருந்து ரூமிற்குள் போகும் வரையிலும் ராஜி வெளியேயே வரவில்லை. அவளிடம் போய் பேசுவதற்கும் அண்ணாமலையால் முடியவில்லை.

அடுத்த நாள் ராஜி காலேஜ் கிளம்பி கொண்டிருக்கும் போதே தேவிகாவிடம் அண்ணாமலை சொல்லிவிட்டார்………. “இப்போ செந்தில் வருவான், அவன் வந்து நம்ம வண்டில அவளை காலேஜ் கொண்டு போய் விட்டுடுவான்”, என்றார்.

தேவிகா அதை ராஜியிடம் சொல்ல…….. “என்ன செந்தில் கூடயா”, என்றாள்.

“ஏன் பாப்பா”,

இப்படி கேட்கும் அம்மாவிடம் என்ன சொல்வது என்று ராஜிக்கு தெரியவில்லை. அவனோடு போனால் நிச்சயம் அவனுக்கு அவளுக்கும் சண்டை வரும் என்று தெரியும்.

அம்மா தன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்து வேறு வழியில்லாமல் “சரிம்மா”, என்றாள்.

அவள் கீழே வந்த போது இவளை எதிர்பார்த்து செந்தில் நின்றிருந்தான். அண்ணாமலையும் அங்கே தான் இருந்தார்.

ராஜி எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் வாசலை நோக்கி போனாள். “அவ போறா செந்தில் நீ போ”, என்று அண்ணாமலை அவனை அனுப்ப……..

“இவள் ஏன் தன் தந்தையிடம் கூட சொல்லாமல் போகிறாள்”, என்று நினைத்த செந்தில்……  

“நாங்க கிளம்பறோம்”, என்று சொல்லி வண்டியை கிளப்பச்சென்றான். அவன் சென்றபோது வண்டி அருகில் நின்றுக் கொண்டு இருந்தாள்.

அவள் எதற்கோ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருப்பது செந்திலுக்கு நன்கு புரிந்தது. ஒரு காலத்தில் தினமும் தவமிருந்து பார்த்த முகம் அல்லவா…… அதன் மாற்றங்கள் எப்படி அவனுக்கு தெரியாமல் போகும்.

“வீட்ல ஏதோ சண்டை போட்டுட்டு வந்திருப்பா போல”, என்று நினைத்தவன்….. “இவளால யாரோடயும் சண்டை போடாமலேயே இருக்க முடியாதா”, என்று யோசித்தான்.

அவர்கள் மெயின் ரோட்டை எட்டிய போது அந்த டீக்கடையில் அசோக் அமர்ந்திருப்பது செந்திலுக்கு தெரிந்தது.

“அச்சோ! நான் இவன்கிட்ட சொல்ல மறந்துட்டேனே”, என்று வண்டியை ஓரமாக நிறுத்தி அவனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகலாம் என்று கீழே இறங்க போக…..

ராஜி அவனிடம், “எங்கப் போற?”, என்றாள்.

அவளும் அசோக் அங்கே அமர்ந்திருந்ததை பார்த்தாள்…….. இவன் அசோக்கை பார்க்கத் தான் போகிறான் என்றும் தெரியும்……… இருந்தாலும் கேட்டாள்.

“இப்போ வந்துடறேன்”, என்று அவளுக்கு பதில் சொல்லியபடி செந்தில் போக……

“நண்பேண்டா”, என்று அவளின் வாய் முணுமுணுத்தது.

இவன் வண்டியிலிருந்து இறங்கி வருவதை பார்த்த அசோக்……. “என்னடா”, என்றான்.

“டேய்! அவளை கொண்டுபோய் காலேஜ்ல விட சொல்லியிருக்கார்டா அவங்கப்பா! உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்…….. நீ கிளம்பு! நான் போறேன்”, என்று கிளம்பினான்.

“ஏண்டா அதை முன்னாலேயே சொல்ல மாட்டியா? எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்றது……… மிஸ்டு கால் குடுக்க கூட என் மொபைல்ல காசில்ல”,

“சாரி மச்சி”,

“போ! போ! அப்படியே என் போனை ரீச்சார்ஜ் பண்ணிவிடு….. நூத்தி இருபத்தி ஒண்ணுக்கு புஃல் டால்க் டைமாம்………. அதை பண்ணு……”, 

அவள் அங்கே தனியாக உட்கார்ந்து இருக்கிறாள் என்று……. “சரி! சரி!”, என்று சொல்லி அவசரமாக நடையை எட்டி போட்டான் செந்தில்.

“ஃபிகர பார்த்தா நண்பனை மறந்துடராங்கடா…….. நண்பேண்டா”, என்றான் இவனும்.  

இதை பார்த்துக்கொண்டிருந்த டீக்கடைக்காரர்………. “நாம நேத்து தானே அவ்வளவு சொன்னோம்………. மறுபடியும் இன்னைக்கு இந்த பையனோட போக விட்டிருக்காங்களே………. எல்லாம் கைமீறி போறவரைக்கும் இவனுங்க ஒண்ணும் செய்ய மாட்டானுங்க போல”, என்று நினைத்தார். 

 அவன் வரும்வரை மறுபடியும் அப்பாவின் செய்கையை பற்றி நினைத்துக்கொண்டிருந்தாள்……. ஏறி அமர்ந்த செந்தில் வண்டியை கிளப்பினான். வண்டியின் ஓட்டத்தோடு அவளின் நினைவலைகள் கலைந்தன.

அவன் வண்டி ஓட்டுவதை பார்த்தபடி வந்தவள்……… “நல்லா தான் ஒட்டுறான்”, என்று மனதிற்குள் சர்டிபிகேட் கொடுத்தாள்.

காரில் ஒரு மௌனம் சூழ……. “பாட்டு கொஞ்சம் போடறீங்களா”, என்றாள்…….. அவன் கேசட் பிளேயரை ஆன் செய்ய……….  அது………

பூவே இளைய பூவே…..                                                                                                             வரம் தரும் வசந்தமே…..                                                                                                         மடி மீது தேங்கும் தேனே….                                                                                                           எனக்குத் தானே……….. எனக்கு தானே………

என்று பாடியது. இருவரின் பார்வையும் அவர்களை மீறி ஒருவரை ஒருவர் ரீவர்வியு மிர்றர் வழியாக பார்த்தது.  

Advertisement