Advertisement

         நீதானே தாலாட்டும் நிலவு

 

கடவுள் அமைத்து வைத்த மேடை

இணைக்கும் கல்யாண மாலை

இன்னார்க்கு இன்னாரென்று

எழுதி வைத்தானே தேவன் அன்று……..  

ஒரு கவிஞனின் சத்தியமான வார்த்தைகள்………. நம் வாழ்க்கை துணையாக யார் வருவர் என்பது அவர் வரும்வரை நம்மால் சொல்ல முடியாது. நாம் என்ன தான் புத்திசாலிகளாக இருந்தாலும் நம் துணை இப்படி வேண்டும் அப்படி வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தாலும் அது வருவது மாதிரி தான் வரும். நம்மால் ஒன்றுமே செய்யமுடிவதில்லை.

வெகு சிலருக்கு மட்டுமே அவர்களுக்கு ஏற்றமாதிரி இணை அமையும். நம்முள் பலருக்கு அவர்களின் வாழ்க்கைத் துணைக்காக ஏதோ ஒரு வகையில் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழும் வாழ்க்கையே அமையும். அது அவர்களுள் சிலருக்கு ஒரு விஷயமாக தோன்றாத போது மிக சிலருக்கு அது ஒரு விஷயமாக பட்டுவிடுகிறது. ஆனால் அதையும் மீறி திருமணங்கள் பல வெற்றி அடையத்தான் செய்கின்றன. எங்கோ ஒன்றிரண்டு தான் தோல்வியில் முடிகின்றன.

இது இறைவன் போடும் முடிச்சு. இதை அறிவர் எவரும் இலர்.  

டீக்கடையில் பாட்டு ஒலித்துக்கொண்டிருக்க அதை கேட்டுகொண்டே டீ அருந்திக்கொண்டிருந்தனர் செந்தில் வேலவனும் அசோக்கும்.

அது ஒரு சிறிய ஊர்………. பெயர் வெண்ணந்தூர், சேலம் மாவட்டத்தை அடுத்து இருக்கும்  ஊர். அங்கே உள்ள ஒரு டீக்கடையில் தான் அமர்ந்திருந்தனர், அந்த இரு நண்பர்களும். 

“என்னா பாட்டுறா கவிஞர் சும்மா உணர்ந்து அருமையா எழுதி வெச்சிருக்கார்”, என்று பாடலை கேட்டு சிலாகித்த அசோக், அப்படியே தன் நண்பன் செந்தில் வேலவனையும் ஒரு பார்வை பார்த்தான். 

பதிலுக்கு அவனை முறைத்தான் செந்தில்.

“என்னை எதுக்குடா முறைக்கற”,

“அந்த பாட்டை பாராட்டிகிட்டு என்னை எதுக்குடா லுக்கு விடற…….. இப்போ நீ இதனால என்ன சொல்ல வர்ற”,

“அந்த பாட்டுல சொல்றது தண்டா நிஜம். கடவுள் அமைச்சு கொடுக்கறது தான் கல்யாணம்………. அதனால உன் முயற்சியை கைவிட்டு உன் பொழைப்பை பாருடா”,

மனதுக்குள்,” நான் என் பொழைப்பை தாண்டா பார்க்கிறேன்”, என்று சொல்லிக்கொண்ட செந்தில்…….. “நான் உன்கிட்ட அறிவுரை கேட்டனா இல்லையில்லை அப்போ திருவாயை மூடிட்டு உட்காரு”, என்றான் அசோக்கை பார்த்து.

“என்கிட்ட கோவப்பட்டு பிரயோசனமில்லை ராசா…. நீயும் தான் இந்த டீக்கடையில உட்கார்ந்து ஒரு வருஷமா லுக்கு உடுற……. அந்த பொண்ணு உன்னை திரும்பியும் பாக்குதா”,

“உனக்கு தெரியுமா அது என்னை பார்க்கலைன்னு”,

“இன்னும் எனக்கு கண்ணு நல்லாதாண்டா தெரியுது”,

“இதெல்லாம் கண்ல பார்க்க கூடாதுடா…… மனசுல பார்க்கணும்டா”,

“வசனமெல்லாம் நல்லா தான் பேசற………. பொண்ணு தான் உன்னை பார்க்க மாட்டேங்குது”, என்று போலியாக பெருமூச்சு விட்ட அசோக்………. “அப்படி என்ன அந்த பொண்ணு கிட்ட இருக்குன்னு இப்படி ஒரு வருஷமா நாள் தவறாம வந்து உட்கார்ந்து அந்த பொண்ணை பார்க்கிறேன்னு எனக்கு தெரியலை”,

“ஏண்டா அவளுக்கு என்னடா குறை”,

“என்னா குறையா……. டேய் பொண்ணு எப்படி இருக்கணும் தெரியுமா சும்மா கண்ணை பறிக்கிற நிறத்துல….. வெள்ளையா……. உயரமா……. ஒடிசலா…… முகம் பார்த்தவுடனே அப்படியே மனசுல ஒட்டிகிற மாதிரி இருக்கணும்………. நீயும் தான் தினமும் அவளை பார்க்குற…….. இதுல ஏதாவது ஒண்ணு இருக்குதா”,

“அவ ஒல்லி இல்லைனாலும் குண்டு இல்லைடா….. அவ உயரம் இல்லைனாலும் குள்ளம் இல்லைடா……… அவ சிகப்பு இல்லைனாலும்  கருப்பு இல்லைடா…… முகம் பார்த்த உடனே மனசுல ஒட்டிக்கலைன்னாலும்……… பார்க்க பார்க்க ஒட்டிக்கும் டா”, என்றான்.

இதை சொன்ன அவன் கண்களில் கட்டாயம் மையல் இல்லை அது என் பொருள் என்ற உரிமையே அதிகம் இருந்தது.

“நான் குடும்பம் நடத்த தாண்டா பொண்ணை பார்க்குறேன்…….. கேலண்டர்க்கு என் பொண்டாட்டி போஸ் கொடுக்க பொண்ணை தேடலை”.

“நல்லா பேசறடா……… நீ என்னவோ எட்டாத கொம்பு தேனுக்கு ஆசைப்படற மாதிரி தெரியுது”,

“மனுசன்னு இருந்தா ஆசைகள் இருக்கணும்டா……… அது நடக்குமா நடக்காதான்றது எல்லாம் வேறு விஷயம்”, என்றான் செந்தில்.

இப்படி தான் இருவருக்குள்ளும் எப்பொழுதும் எதற்கும் தர்க்கம் நடக்கும். ஆனால் அதையும் மீறி அவர்கள் செந்தில் வேலவனும் அசோக்கும் இணைபிரியா நண்பர்கள்.

அவர்கள் அவர்களுக்குள் விட்டுக்கொடுத்துக்கொண்டாலும் அடுத்தவர்களிடத்தில் விட்டுகொடுக்கவே மாட்டார்கள். சிறு வயது முதலே நண்பர்கள். நட்பு அவர்கள் இருவரிடத்திலும் ஓர் இலக்கணம் வகுத்துள்ளது.

“நம்ம சண்டைய ஓரம் கட்டுவோம்……. உன் ஆளு வருதுடா”, என்று அசோக் செந்திலிடம் சொன்னான்.

“தங்கச்சின்னு உரிமையா சொல்லுடா”, என்று செந்தில் சொல்ல…….

“எனக்கு தங்கச்சிங்களுக்கா பஞ்சம்…….. மூணு பேரு வீட்ல இருக்காளுக……”, அவனின் கடமை அவனுக்கு…….. அவன் மூன்று தங்கைகளுடன் பிறந்தவன்.

“அப்போ என் பொண்டாட்டி உனக்கு தங்கச்சி இல்லையா……”,

“மொதல்ல அது நடக்கட்டும்……… அப்புறம் பேசுவோம்”,

“நடக்கும்டா, நடத்திக் காட்டுறேன்”, என்று சவால் விடுவது போல செந்தில் பேசினான். இருவரும் யாருடைய கவனத்தையும் கவராமல் மிக மெதுவாக தான் பேசினர்.   

“என்னவோ உன்கூட சேர்ந்ததுக்கு என்னையும் ஒரு வழியாக்காம விட மாட்ட போல… அவங்கப்பனுக்கு தெரிஞ்சது  நாமகாலிடா மவனே”, என்று அசோக் செந்திலிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவர்களை நெருங்கி வந்து விட்டாள் ராஜ ராஜேஸ்வரி……

ராஜ ராஜேஸ்வரி, அண்ணாமலைக்கும் தேவிகாவுக்கும் பிறந்த ஒற்றை மகள். ஒரு ஆண்மகவு வேண்டும் என்று இருவருக்கும் கொள்ளை ஆசை தான். ஆனால் அது நிறைவேற தான் இல்லை.  

ராஜ ராஜேஸ்வரி அப்படி ஒன்றும் பேரழகி என்று சொல்லமுடியாது. ஆனால் செந்திலின் கண்களுக்கு அவள் அழகியே……. அவள் மிகவும் சாதாரண தோற்றத்தில் இருக்கும் பெண்……. செந்தில் வர்ணித்தது போல தான் இருந்தாலும் யாருடைய கண்ணையும் கருத்தையும் கவரும் பெண்.

தோற்ற பொலிவு என்று சொல்ல முடியாவிட்டாலும், அவளுடைய நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை இவை மற்றவர்களிடத்தில் அவளுக்கு மிகவும் மரியாதையான தோற்றத்தை கொடுக்கும். எப்போதும் செல்வ செழிப்பு யாருக்கும் ஒரு சோபையை தரும். அது அவளிடம் நிறைய இருந்தது.

ராஜ ராஜேஸ்வரி அந்த ஊர் செல்வந்தரான பெரிய வீட்டுக்காரரின் பெண் என்பதால் அந்த செழிப்பு அவளிடத்தில் நன்றாகவே தெரியும்.   

நம் செந்திலின் மிக தீவிரமான காதலி என்று சொல்வதை விட அவன் தற்போது ஒரு வருடமாக வேலை செய்து கொண்டிருக்கும் ப்ரொஜெக்ட்  அவள். ஆம் அவனை பொருத்தவரை ராஜ ராஜேஸ்வரி அவன் விரும்பி திருமணம் செய்ய நினைக்கும் பெண்.

அது காதலா அல்லது கருமமா அதையெல்லாம் அவன் அறியான். அவனை பொறுத்த வரை அவள் ஈஸி வே டு செட்டில் இன் லைஃப். அவனின் பார்வையில் அழகியாக தெரிந்த ராஜ ராஜேஸ்வரி அவர்களின் ஊர் பெரும் தனக்காரரின் ஒரே வாரிசு. ஏகப்பட்ட சொத்துக்களுக்கு அதிபதியான அண்ணாமலையின்  ஒரே மகள் ஆசை மகள். தற்போது சேலத்தில் இருக்கும் ஒரு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி எஸ் ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி.

இருவரும் ஒரே பிரிவு…… அதுவுமில்லாமல் அண்ணாமலையின் வீட்டு கணக்கு வழக்குகள் மற்ற விஷயங்கள் எல்லாம் பார்த்துக்கொள்வது செந்தில் வேலவனின் தந்தை சீனியப்பன்…. அந்த வகையிலும் அவளின் வீட்டு நிலவரங்கள் செந்திலுக்கு தெரியும். அதனால் அவர்களின் செல்வ நிலைமை செந்தில் வேலவன் அறிந்ததே. 

அவனின் தந்தையை சாக்காய் வைத்து மாலையில் அவள் இருக்கும் நேரமாக ஏதாவது காரணத்தை வைத்து வீட்டிற்கும் சென்று வருவான். காதல் என்று வந்துவிட்டால் யாரும் எதுவும் மறுப்பு சொல்ல முடியாது…….. எப்படியாவது அவளை காதலிக்க வைத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தான்

பலன் தான் ????????????????????????

ராஜ ராஜேஸ்வரி அவனை இதுவரை திரும்பியும் பார்த்தது இல்லை. அவன் பார்ப்பது அவளுக்கு தெரியும். இங்கே மட்டுமல்லாமல் வீட்டிற்கும் அவ்வப்போது தந்தையை  சாக்கு வைத்து வருவான் என்று தெரியும். அவனை சிறு வயதில் இருந்து பார்த்தவள் தான் ராஜேஸ்வரி. முன்பெல்லாம் ஓரிரண்டு வார்த்தைகள் அவனோடு பேசுவாள். பெரிய பெண் ஆன பிறகு அவளின் அன்னை ஆண்களுடன் அதிகம் பேசவிட்டது இல்லை.   

அவன் அவளை இந்த வருஷ காலமாக ஆர்வமுடன் பார்ப்பதை உணர்ந்து தான் இருந்தாலும்…….. இருந்தாலும் சட்டை செய்ய மாட்டாள்…….. ஏன் என்னை பார்க்கிறாய் என்பது போல கோபமாக கூட பார்க்க மாட்டாள். ஏன் கல்லை மண்ணை பார்ப்பது போல கூட பார்க்கமாட்டாள். இரு கை தட்டினால் தான் ஓசை வரும் என்று நன்கு அறிந்தவள்.

அதனால் கோபமாக பார்த்தால் கூட தான் ஏதோ ஒரு வகையில் அவனுக்கு  பதிலளித்தது மாதிரி ஆகிவிடும் என்று கண்டு கொள்ளவே மாட்டாள். அது இன்னும் இன்னும் அவளை பார்க்க செந்திலுக்கு ஒரு தூண்டுதல் ஆகிவிட்டது. எப்படியாவது அவளை திரும்பி பார்க்க வைத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து, எப்போதும் அமைதியாக உட்கார்ந்து அவளை பார்ப்பவன்……… இன்று அவள் செல்ல பின்னாலேயே செல்ல எழுந்தான்.

அவன் அவளின் பின்னால் செல்ல முடிவெடுத்து எழவும்……… அதை உணர்ந்தவனாக அசோக், “டேய், என்ன பண்ண போற”, என்று பதறினான்.

“பின்னாலேயே கொஞ்சம் தூரம் போயிட்டு வர்றேன் மச்சி”, என்று அவன் கிளம்ப….

“டேய்! அவங்கப்பாக்கு தெரிஞ்சது தொலைச்சிடுவார்டா”, என்று அசோக் பதட்டப்பட…..

“நீ வராத மச்சி…….. நான் பார்த்துக்கறேன்”, என்று செந்தில் அவனின் பேச்சையும் மீறி சென்றான்.

சிறிது இடைவெளி விட்டு அவளை தொடர்ந்தான்.

ராஜ ராஜேஸ்வரிக்கு  இருக்கும் வசதிக்கு அவள் தினமும் காரிலேயே சென்று வரலாம். ஆனால் தன் மகள் உலகம் தெரிந்து வளர வேண்டும் என்று நினைத்த அவளின் தந்தை அவளை பஸ்சிலேயே தினமும் அனுப்பி வைத்தார். அவருக்கு தன் மகள் யாருக்கும் எதற்கும் பயப்படாமல் தைரியமாக வளர வேண்டும். தனக்கு பின் தன் சொத்துக்களை கட்டி ஆள வேண்டும் என்று நினைத்தார். ஏனென்றால் ராஜ ராஜேஸ்வரி அவரின் ஒரே மகள்.  

சிறிய ஊர் என்பதால் ஜன நடமாட்டம் சற்று கம்மி. அப்போதைக்கு பள்ளி செல்பவர்களும் கல்லூரி செல்பவர்களுமே அங்கங்கே நடந்து சென்று கொண்டிருந்தனர். காலை நேர பரப்பரப்பில் இவர்களை கூர்ந்து கவனிப்பார் யாரும் இல்லை.

எப்போதும் அங்கங்கே எங்கேயாவது உட்கார்ந்து பார்க்கும் செந்தில் இன்று தன் பின்னால் நடந்து வருவது ராஜேஸ்வரிக்கு நன்கு தெரிந்தது. அது கவனத்தில் பதிந்தாலும் கருத்தில் கொள்ளாது, அவள் பாட்டிற்கு நடந்து சென்று பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டாள்.

புதிதாக சந்தேகமே வந்துவிட்டது செந்திலுக்கு…….. நிஜமாகவே இவளுக்கு நாம் அவளை பார்ப்பதும் தொடர்வதும் தெரியுமா இல்லையா என்று.

அதற்குள் சேலம் செல்லும் பேருந்து வரவும் அதில் ஏறிக்கொண்டாள். அவனும் இன்று அவளா நானா பார்த்துவிடுவது என்ற முடிவோடு அவளின் பின்னால் பேருந்தில் ஏறிவிட்டான்.                    

ஏறிய சிறிது தூரத்திலேயே அவளுக்கு உட்கார இடம் கிடைத்துவிட அவள் உட்கார்ந்து கொண்டாள்.

அவள் தன் கண்களுக்கு தெரியுமாறு வசதியாக நின்று கொண்டான் செந்தில் வேலவன். அவளையே யாரும் அறியாமல் விடாமல் பார்த்து வந்தான்.

இத்தனை நாட்களாக கட்டி காப்பாற்றிய ராஜேஸ்வரியின் பொறுமை சற்று காற்றில் பறக்க ஆரம்பித்தது. இது தான் தினமும் வரும் பேருந்து யாராவது கவனித்து விட்டால் தனக்கு தான் அசிங்கம் என்று ராஜேஸ்வரி நினைத்தாள்.

யார் கவனத்தையும் கவர கூடாது என்று கடவுளை வணங்கிய படியே வந்தாள். இந்த அவஸ்தை சேலம் வரையிலும் தொடர்ந்தது.

அவள் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி ஷேர் ஆட்டோ பிடித்து செல்ல வேண்டும். அவள் இறங்கியவுடன் வேகமாக ஆட்டோ பிடிக்க செல்ல…….. அதையும் விட வேகமாக அவளை பின்தொடர்ந்து அவளின் அருகில் நடக்க ஆரம்பித்து அவளிடம் பேச்சு கொடுத்தான் செந்தில்.

“ராஜி எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே”, என்றான்.

அவள் கண்டுகொள்ளாமல் நடந்து கொண்டே இருக்க….

“ப்ளீஸ் ராஜி……. கொஞ்சம் நில்லேன், ஒரு அஞ்சு நிமிசம் இருந்தா போதும்”, என்று பேசியபடியே அவளோடே நடந்தான்.

அவன் ராஜி என்று அவளின் பெயரை சுருக்கி உரிமையாக கூப்பிட்டது ராஜேஸ்வரிக்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது……. இருந்தாலும் அவனிடம் பேச விரும்பாதவளாக ஆட்டோ வில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

அது செந்திலுக்கும் கோபத்தை கொடுத்தது…… “அட ஐ லவ் யூ ன்னு சொல்லாட்டி போறா……. ஆனா என்னை கோபமா திட்ட கூட என்னை பார்க்க மாட்டேங்கறாளே”, என்று சற்று எரிச்சலாக வந்தது. “என் பின்னாடி வராதன்னு கூட வாயை தொறந்து சொல்ல மாட்டேங்கறாளே, என்ன பொண்ணுடா இவ”, என்றிருந்தது.

அவன் யோசிக்கும் போதே ஆட்டோ கிளம்பி விட்டது. அன்று மாலை வரை சேலத்தில் இருந்த சிறு சிறு வேலைகளை பார்த்தவன்……… அவள் காலேஜ் விடும் நேரம் வாசலில் போய் நின்றான். நடுவில் அசோக், “எங்க இருக்கடா”, என்று அழைத்த போதுகூட  ஏதோ சொல்லி சமாளித்தான். அவளை அத்தனை பெண்களில் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அவனால் தான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தோழிகளோடு பேசிக்கொண்டே வந்த ராஜேஸ்வரி அவனை பார்த்துவிட்டாள். காலையில் இருந்து சற்று மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் துளிர் விட தொடங்கியது.

அவன் கவனிக்கும் முன் வேகமாக ஆட்டோ வில் ஏறி சென்று விட்டாள். பஸ்சில் ஏறி அமர்ந்த பின் தான் சற்று ஆசுவாச பெருமூச்சு விட்டாள். இப்படி அவன் தன்னை விடாமல் தொடர்வது கோபத்தையும் கொடுத்தது, அதே சமயம் இவன் பின்னால் வருவதால் தன் பெயர் கெட்டுவிடக் கூடாதே என்ற பயத்தையும் ஒருங்கே கொடுத்தது.     

சற்று நேரம் காத்திருந்து பார்த்து ராஜேஸ்வரி வராததால் அவள் பேருந்து நிலையம் சென்றிருக்கலாம் என்று நினைத்து……… பிறகு வேகமாக அவள் ஏறும் பஸ் தெரியுமாதலால் அதை பிடிக்க பேருந்து நிலையமே மறுபடியும் வந்தான். பேருந்து பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பி கொண்டிருக்க வேகமாக ஓடி அதில் ஏறினான்.

அவன் ஓடி வந்து ஏறும்போதே பார்த்துவிட்டாள் ராஜேஸ்வரி. இப்போது மனம் சற்று பதட்டப்பட ஆரம்பித்தது. ஏறியவன் அவளை கண்களால் தேடி அவளை பார்த்த பிறகு அவளை போலவே அவனும் ஆசுவாச பெருமூச்சு விட்டான்.

அவன் பார்க்கும் பொழுது அவளும் அவனை பார்க்க…….. அவளை பார்த்து சிரித்தான். இப்போது அவனை பார்க்கும் பார்வையில் ஒரு முறைப்போடு அவனை பார்த்தாள்.

“யப்பா என்னை பார்த்து முறைக்க வைக்கவே ஒரு வருஷம் ஆகிடுச்சா……. அப்போ என்னை பார்த்து ஐ லவ் யூ சொல்ல வைக்க????”, என்று செந்திலுக்கு கவலை ஏறிக்கொண்டது.

அவனை பார்த்து முறைத்துவிட்டு பார்வையை ஜன்னலை நோக்கி திருப்பியவள் தான் பிறகு ஊர் வரும் வரையிலும் பார்வையை அவனை நோக்கி திருப்பவில்லை. அவளின் உள் கோபம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அவள் ஊர் வந்தவுடன் இரண்டு பேரும் இறங்கினர். யார் கவனத்தையும் கவராமல் மறுபடியும் அவளை பின்தொடர்ந்தான். ஆள் அரவம் இல்லாத இடம் வர……. வேகமாக அவளின் முன் வந்து அவளை மறைப்பது போல நின்றான்.

“என்னோட  பேச மாட்டியா நீ”, என்றபடி முன்னாள் வந்து நின்றவனை பார்க்குமுன் யாராவது அவளை கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டாள்.

அவளின் பார்வையை கவனித்தவன், “யாரும் பார்க்கலை”, என்றான்.

இப்போது அவனை நேருக்கு நேர் முறைத்து பார்த்தாள்.

அப்போதும் ஒரு சொல் உதிர்த்தவளில்லை………

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு……. ஐ லவ் யூ”, என்றான்.

“அதுக்கு”, என்றாள் முதல் முறையாக அவனை பார்த்து.

மறுபடியும் ஒரு முறை, “ஐ லவ் யூ”, என்றான்.

“சரி, அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற”, என்றாள் கடுப்பாக.

“நீயும் என்னை காதலிக்கணும்”,

“அது ஆகாத வேலை….. அப்புறம்”, என்றாள் அலட்சியமாக.  

“ஏன் ஆகாத வேலை”,

“நீ என்ன பைத்தியமா…….. ஏன் ஆகாதுன்னு கேட்கற………. உனக்கு என்னை பிடிச்சா எனக்கும் உன்னை பிடிக்கணும்னு என்ன சட்டமா? சும்மா என் பின்னாடி வர்ற வேலையெல்லாம் வெச்சிக்காத……. உங்கப்பா முகத்துக்காக பார்த்து சும்மா இருக்கேன்………. எங்கப்பா கிட்ட சொன்னா என்ன ஆகும்னு தெரியுமா”, என்று ஏறக்குறைய மிரட்டல் குரலில் சொன்னாள்.

“சொல்லேன் இந்த ஒரு வருஷமா சொல்லாதவ தான் இப்போ சொல்ல போறியா…… உனக்கும் என் மேல ஆசையிருக்கு, அதான் சொல்லாம இருந்திருக்க”, என்று அவனாக ஒரு காரணம் சொன்னான்.

“ஆசையுமில்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை…… உன்னை மாதிரி ஒருத்தன் என் பின்னால சுத்தறான்னு சொல்றதே எனக்கு பிடிக்கலை. அதான் சொல்லலை என்னைக்காவது உன்னை நான் திரும்பியாவது பார்த்திருக்கேனா……. அப்புறம் எப்படி ஆசை அது இதுன்னு உளர்ற”, என்று வார்த்தைகளை ஏகத்துக்கும் விட்டாள்.

“சரி! இது வரைக்கும் இல்லைனா பரவாயில்லை….. இனிமேல வந்துட்டு போகட்டும்”, என்றான் செந்தில்.

“சும்மா லூசு மாதிரி உளறிட்டு………. என்னை பார்க்கிறதை……… என் பின்னால வர்றதை எல்லாம் நிறுத்து………. இல்லை எங்கப்பா கிட்டயே சொல்லிடுவேன். அப்புறம் நடக்கறது எதுக்கும் நான் பொறுப்பில்லை”,

அவள் தந்தையை பற்றி பேசவும் உள்ளக்குள் சற்று பயம் உதித்தது செந்திலுக்கு. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் நின்றான்.

அதற்குள் ஆட்கள் வருவது போல தெரிய அந்த இடத்தை விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள் ராஜேஸ்வரி……….. யாரும் பார்த்து விடுவார்களோ என்று எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தான் செந்தில்.

எரிச்சல் மிகுதியாக இருந்தது ராஜேஸ்வரிக்கு………. அவள் காலேஜ் போக ஆரம்பித்த நாள் முதலாக செந்தில் தன்னை அங்கே இங்கே அமர்ந்து பார்ப்பது தெரியும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கத்தான் பழகினாள். இன்று அவன் பின்னாலேயே வந்து பேச்சு கொடுத்தது அதிகப்ரசிங்கித்தனத்தின் உச்சமாக தெரிந்தது ராஜேஸ்வரிக்கு.

“இவனுக்கு பிடித்தால் எனக்கும் இவனை பிடிக்க வேண்டுமா……. எவ்வளவு தைரியமாக சொல்கிறான்…….. அப்பாவிடம் சொல்லி விடலாமா”, என்று தோன்றியது. பிறகு வேண்டாம் அவனால் தங்களிடம் வேலை செய்யும் அவனுடைய அப்பாவிற்கு தான் தலைகுனிவு என்று விட்டுவிட்டாள்.

செந்திலின் தந்தை சீனியப்பன் அவள் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர்களிடம் வேலை செய்கிறார். சொல்ல போனால் அவர்களின் வீட்டு நிலவரங்கள் அவளின் தந்தையை விட அவருக்கு தான் நன்றாக தெரியும். அவரின்றி ராஜேஸ்வரியின் வீட்டில் எதுவும் அசையாது. மிகவும் நல்ல மனிதர், நேர்மையானவர், நாணயமானவர், சொல்ல போனால் அவளை தூக்கி வளர்த்தவர். செந்திலின் அன்னை அன்னபூரணியையும் நன்கு தெரியும் ராஜேஸ்வரிக்கு. இவர்களுக்காக பார்க்க வேண்டி இருந்தது.  

அதுவுமில்லாமல் அவர்கள் வீட்டு தொழில் விவரங்கள் எல்லாம் அவளின் தந்தையான அண்ணாமலையை விட சீனியப்பனுக்கு தான் நன்கு தெரியும். இதை நன்கு அறிவாள் ராஜேஸ்வரி. பத்தொன்பது வயதே நிறைந்தவள் என்றாலும் மனிதர்களை கணக்கிடுவதில் வல்லவள்.

செந்திலை பற்றி ஏதாவது சொல்ல போய் அந்த நல்ல மனிதருக்கு ஒரு தலை குனிவை ஏற்படுத்த வேண்டாம் என்று அமைதி காத்தாள்.

ஆனால் அவன் இன்று செய்தது அவளுக்கு சற்று பயத்தை கொடுத்தது. இதை தந்தையிடம் சொல்லுவோமா இல்லை விட்டுவிடுவோமா என்று மிகுந்த குழப்பத்தில் இருந்தாள்.

தந்தையிடம் சொன்னால் அவனை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார் என்று தெரியும்……… அதற்கும் பயந்தே யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டாள். பார்ப்போம் இன்று சற்று மிரட்டி தானே வைத்திருக்கிறோம் என்ன செய்கிறான் என்று பார்ப்போம் என்று மனதை சற்று தேற்றினாள்…….. அதற்குள் வீடு வந்திருந்தது.

நன்கு பெரிய வீடு………. தொழில் வேலைகளும் அங்கே தான் நடக்கும், வீடும் அதன் மேலயே தான். கீழே முழுவதும் தொழிலுக்கு மேலே வீடு.

அவள் உள்ளே நுழைந்ததும் எதிர்ப்பட்டவர் செந்திலின் தந்தை சீனியப்பன் தான். அவர் மட்டும் அங்கே இல்லை இன்னும் நிறைய பேர் அங்கே துண்டையும் வேஷ்டியையும் மூட்டை போட்டுக் கொண்டு இருந்தனர். அது தான் அவர்களின் தொழில்…….. துண்டு நெய்வதும், வேஷ்டி நெய்வதும்…. அவர்களுக்கு இதற்காக நிறைய விசைத்தறி ஓடிக்கொண்டு இருந்தது. அது மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் அதை வாங்கி உள்நாட்டிற்குள் பல இடங்களுக்கு அனுப்பினர்.   

அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஊரைச்சுற்றி நிலபுலன்களும் இருந்தன.     

“என்ன பாப்பா, இன்னைக்கு எப்பவும் வர்றதை விட பத்து நிமிஷம் லேட்டு….. உன்னை காணோம்னு அம்மா எட்டி எட்டி பார்த்துட்டே இருக்காங்க….. நான் உன்னை பார்க்க தான் பஸ் ஸ்டாப் கிளம்பிட்டே இருந்தேன்”, என்றார் அக்கறையாக.

“அது வழில என் பழைய ஃபிரண்ட்டை பார்த்தேன், பேசிட்டு இருந்தோமா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு”, என்று பொய்யுரைத்தாள்.

“வழில நின்னு யாரோடயும் அதிக நேரம் பேசாத பாப்பா”, என்று அறிவுரை வேறு வழங்கினார்.

அவளின் பேச்சு சத்தம் கேட்டவுடனே எட்டி பார்த்த அன்னை தேவிகா…… “ஏன் பாப்பா லேட்டு”, என்றார் அவரின் பங்குக்கு.

அவருக்கும் அதே விளக்கத்தை அளிக்க……. அவரும் சீனியப்பன் சொன்னதையே சொன்னார்………. “வழில எல்லாம் நின்னு பேசாத பாப்பா……. ஒருத்தர் கண்ணு மாதிரி இன்னொருத்தர்து இருக்காது…. பொண்ணு  அடக்கமேயில்லாம திரியுதுன்னு நிமிஷத்துல பேசிடுவாங்க”, என்றார்.

“சரிம்மா, இனிமே இது போல நடக்காம பார்த்துக்கறேன்”, என்று அவளின் அன்னையை சமாளித்தாள்.

இப்படி தான் தேவையில்லாமல்  செந்திலால் பொய் பேச வேண்டி வந்துவிட்டதே என்று செந்தில் மேல் கோபம் கோபமாக வந்தது. “லூசுப் பய, காதலாம் கன்றாவியாம் அவனையும் பாரு அவன் மூஞ்சி முகரக்கட்டையும் பாரு”, என்று இஷ்டத்திற்கு அவனை மனதிற்குள் வருத்தெடுத்துக்கொண்டிருந்தாள்.

அவள் சொல்வது போல அப்படி ஒன்றும் செந்தில் மோசமில்லை……. உயரமாக, நல்ல முகவெட்டுடன்  மாநிறத்தில் பார்பதற்க்கு நன்றாக தான் இருப்பான். என்ன சற்று ஒல்லியாக இருப்பான். உயரத்திற்கு தகுந்த உடல் வந்தால் அழகனே…….. ஆனால் அதெல்லாம் ராஜேஸ்வரியை சற்றும் கவரவில்லை.

அவள் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே உள்ளே நுழைந்தார் அண்ணாமலை…… “என்ன ராஜிம்மா முகம் வாட்டமா தெரியுது”, என்றார் அவளை பார்த்த உடனே அவளின் அன்புத் தந்தையாக…….

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா இன்னைக்கு கிரௌண்ட் ல கொஞ்ச நேரம் நின்னோம், அதனால இருக்கலாம்”, என்று அவரிடமும் சமாளித்தாள்.  இவனால் எத்தனை பொய் பேச வேண்டியிருக்கிறது என்று செந்தில் மேல் கோபம்  கோபமாக வந்தது ராஜ ராஜேஸ்வரிக்கு……..   

Advertisement