Advertisement

அத்தியாயம் ஆறு:

இவன் என்ன அவனை பார்த்து பயப்படுகிறான், அதனால் தான் அமைதியாக நிற்கிறான் என்று நினைத்தால்………. இவன் என்ன கொஞ்சமும் பயம் இல்லாமல் இப்படி அவனை அடித்துவிட்டான். ஒரு அடி என்றாலும் என்ன அடி. இதில் கூட நின்றவர்களை வேறு சண்டைக்கு கூப்பிடுகிறான். அவர்கள் ஆளை விட்டால் போதும் என்று ஓடி விட்டனர்.

பெரிய ஆள் தான் போல என்று நினைத்தாள். அப்போது பார்த்து செந்தில் அவளை பார்க்க……. சற்று பயத்துடன் அவனை பார்த்தாள்.

அவளை பார்த்தவுடனே பார்வையை திருப்பிக் கொண்டான். பிறகு அவன் பாட்டிற்க்கு சென்று படி அருகில் நின்று கொண்டான்.

ஊர் வரும் வரையில் ராஜியின் பார்வை பலமுறை அவனை தழுவி மீண்டது. ஆனால் செந்தில் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.

வீட்டிற்கு வந்தால் அங்கே அவளின் வீட்டின் முன் ஒரு பெரிய கார் நின்றுகொண்டிருந்தது. அவர்களுடையது டாட்டா சுமோ தான். அதில்லை வேறு ஒரு கார் இருந்தது.

யார் வந்திருப்பர் என்ற ஆரய்ச்சியோடே உள்ளே போனாள். செந்தில் அவளுக்கு முன்னேயே வீட்டிற்கு வந்திருந்தான். உள்ளே செந்திலும் சீனியப்பனும் மற்றும் சில வேலையாட்களுமே கீழே இருந்தனர்.

“யார் வந்திருப்பார்”, என்று யோசித்தபடியே மேலே ஏறினாள்.

அங்கே அவளது தந்தையுடன் ஒரு புதியவன் சோபாவில் அமர்ந்திருந்தான். அப்பா எப்போது ஊரிலிருந்து வந்தார், யார் இவன் என்று பல யோசனைகள் ஷணத்தில் அவள் மனதில் உலாவ……..

இவளை பார்த்தும் அந்த புதியவனின் பார்வைகள் அவளை ஆராய்வது போல பார்த்தது.

“இது தான் என் பொண்ணு ராஜ ராஜேஸ்வரி……….. ஆகாஷ்”, என்று ராஜியை அவனுக்கு அறிமுகப்படுத்திய அண்ணாமலை……… “இது ஆகாஷ்மா நமக்கு வேண்டியவங்க”, என்று அவளுக்கும் அறிமுகப்படுத்தினார்.

அவன் தன்னை ஆராய்வது போல பார்க்கலாம் நான் அவனை ஆராய கூடாதா என்று ராஜியும் அவனை கண்களால் அளவெடுத்தாள்.

பார்க்க நன்றாக இருந்தான் என்று சொல்ல முடியாமல் சூப்பராக இருக்கான் என்று சொல்ல தோன்றும்படியாக தான் இருந்தான். பார்க்கும்போதே அவன் தோற்றத்திலேயே ஒரு செல்வ செழிப்பு தெரிந்தது. செம சைட்டா இருப்பான் போல என்று எண்ணிக்கொண்டாள். 

“யாராக இருக்கும்? இவன் நமக்கு வேண்டியவங்க என்று அப்பா சொல்கிறாரே…… நம் சொந்தம் என்றால் எனக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை”.

அதற்குள் அவளின் என்ன வோட்டத்தை தடுத்தது……….அவனின், “ஹாய் ராஜ ராஜேஸ்வரி”, என்ற வார்த்தை.

பதிலுக்கு இவள் என்ன, “ஹாய் ஆகாஷ்”, என்றா சொல்ல முடியும்.” ஹாய்”, என்றவள் புதியவன் முன் நிற்க சங்கோஜப்பட்டு…… தந்தையிடமும் பேசமுடியாமல்…. மேலும் அங்கே நிற்காமல் உள்ளே போனாள்.

அங்கே அவளின் அம்மா அவர்களுக்காக சிற்றுண்டியும் காபியும் தயாரித்துக் கொண்டிருந்தார்.

“என்னமா பண்றீங்க……… யார் அது?”, என்றாள்.

“பஜ்ஜி போடறேன் உங்கப்பாவோட ஆர்டர்”

“யார் அது”, என்றாள் மறுபடியும்,

“எனக்கு மட்டும் என்ன தெரியும்……… நமக்கு வேண்டியவங்கன்னு சொல்றார் உங்கப்பா”,

“எப்படின்னு சொல்லலையா”,

“தெரிஞ்சவங்க பையனாம்……. சென்னை ல வீடு……. இப்போ ஆஸ்திரேலியாவுல வேலை பார்க்கறாங்கலாம்……… இங்க லீவுக்கு வந்திருக்காங்கலாம், இப்ப நம்ம வீட்ல ஒரு வாரம் தங்க வந்திருக்காங்க”,

“நம்ம வீட்ல எதுக்கு தங்கனும்”, என்று கேட்டபடியே பஜ்ஜியை எடுத்து சுவை பார்த்தவள்…….. “உப்பு கம்மிமா”, என்று சொன்னாள்.

“பார்த்து நீயே போடு”, என்று அவளின் அம்மா அவளிடம் உப்பு டப்பாவை நீட்ட…… சரி பார்த்து போட்டாள். ஸ்கூல் காலேஜ் நேரம் போக மற்ற எல்லா நேரமும் ராஜேஸ்வரி அவளின் அம்மாவுடன்  செலவழிப்பாள்…….. அதனால் சமையல் அவளுக்கு நன்றாகவே வரும்.

“எதுக்கு தங்கனும்”, என்றாள் மறுபடியும்.

“எனக்கு என்னம்மா தெரியும்…….. உங்கப்பா பார்த்து பண்றதுதான்”.

“எதையும் அவர்கிட்ட கேட்காத……… அவர் சொல்றதுக்கு எல்லாம் தலையை தலையை ஆட்டு. எத்தனை தடவை சொல்றேன்…….. அவர் என்ன பண்றார்…….. ஏது பன்றார்…….. எங்க போறார்……… எங்க வர்றார்ன்னு கேளுன்னு……… கேக்கறதேயில்லை…….”,

தேவிகா எப்பொழுதும் கணவனின் சொல் மீறி நடக்க மாட்டார்…….. அவரை ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கமாட்டார்…….. அவரின் மேல் அதீத நம்பிக்கை………. அவர் எது செய்தாலும் தங்களின் நலனுக்காக தான் இருக்கும் என்று. 

“அவர் எதுக்கு பண்ணுவார்……. நம்ம நல்லதுக்கு தானே எதுன்னாலும் பண்ணுவார், அப்புறம் எதுக்கு நம்ம அவரை கேள்வி கேட்கனும்”, என்று தேவிகா சொல்ல……

“ஆமா அவரை கேள்வி கேட்க சொன்னா நீ என்னைய கேளு”,

“சரி! சரி! முதல்ல வேலையை பாரு………. இந்த பஜ்ஜியையும் காபியையும் கொண்டு போய் குடு”, என்றார்.

மறுபடியும் அவனின் முன் போவதா ஏதோ ஒரு கூச்சம் தடுத்தது. “அம்மா! நான் இன்னும் முகம் கைகால் கூட கழுவலை”, என்று சிணுங்கியவளை……

“இதை கொண்டு போய் கொடுத்துட்டு போ பாப்பா”, என்றார்.

“சரி குடு”, என்று எடுத்துக்கொண்டு போகும்போது…….. “இவங்க என்ன என்னை பொண்ணு பார்க்கவா வந்திருக்காங்க? நான் இவங்களுக்கு பஜ்ஜியும் காபியும் கொண்டு போக”, என்று நினைத்தபடியே போனாள்.

அவளுக்கு தெரியவில்லை அவள் நினைத்தது முற்றிலும் உண்மை என்று…… ஆகாஷ் அவளை பெண் பார்க்கத் தான் வந்திருந்தான்.

அவளோ தேவிகாவோ அப்படியும் இருக்கும் என்று சற்றும் நினைக்கவில்லை.

அவள் கொண்டுவந்து சிற்றுண்டிகளை வைத்து உடனே திரும்பியும் விட்டாள். அப்போதும் ஆகாஷின் பார்வை அவளையே தொடர்ந்தது.

இவன் ஏன் என்னை ஆராய்ச்சி பார்வை பார்க்கிறான்  என்று எண்ணிக்கொண்டே இருந்தாள். இவனும் அப்பாவும் அதிகம் பேசிக்கொள்வது போலவும் தெரியவில்லை.

ஆம்! அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தனர். டீவி மட்டும் ஓடிக்கொண்டிருக்க அதை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

பிறகு அவளின் அம்மா அவனுக்கு ஒரு ரூமை ரெடி பண்ணி கொடுக்க சொல்ல அந்த வேலை சரியாக இருந்தது.

அவனுக்கு ரூம் ரெடி ஆன உடனே ரூமிற்குள் போய் புகுந்து கொண்டான். “அவனே டிரைவ் பண்ணிட்டு வந்தான் அதான் டையர்ட் டா இருக்கும்”, என்று அவளின் தந்தை விளக்கம் வேறு கொடுத்தார்.

அவன் எப்போது தூங்கினால் நமக்கென்ன இந்த தந்தை ஏன் விளக்கம் கொடுக்கிறார் என்றிருந்தது.

“நைட்க்கு  என்ன சமைக்க”, என்று தேவிகா அண்ணாமலையிடம் கேட்டார்.

“முத முதலா நம்ம வீட்ல சாப்பிடறாங்க……… சைவமே சமைச்சிடு”, என்றார்.

“சரி”, என்று தலையாட்டி தேவிகா உள்ளே போக……. “இந்தம்மா வழக்கம் போல எதையும் கேட்காம உள்ளே போகுது………”,. என்று தலையில் தட்டிக் கொண்டவள்,

“யாருப்பா அவங்க…….. எதுக்கு இப்படி ஸ்பெஷலா கவனிக்கறீங்க”, என்றாள்.

இதற்கு அண்ணாமலையால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. உன்னை பெண் பார்க்க வந்திருக்கிறார் என்று சொல்லி அவளின் மனதில் ஆசையை விதைக்க விரும்பவில்லை.

ஏனென்றால் ஆகாஷிற்கு முதலில் இவளை பிடிக்க வேண்டும். அது தெரியாமல் ராஜியிடம் சொல்ல அவருக்கு மனமில்லை.

“நமக்கு ரொம்ப வேண்டியவங்க ராஜி அதான்”,

“எப்படி நமக்கு வேண்டியவங்க”, என்று மறுபடியும் துருவினாள்.

“எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க பையன்”, என்று பொறுமையாக மறுபடியும் விளக்கம் கொடுத்தார் அண்ணாமலை.

“எனக்கும் அவங்களை தெரியுமா”,

“உனக்கு அவங்களை தெரியாது”,

“அம்மாக்கு”,

“அம்மாக்கும் தெரியாது”,

“உங்களுக்கு எப்படி தெரியும்”,

“எப்படி தெரியும்னா? தெரியும்! இது என்ன கேள்வி”, என்றார்.

இதற்கு மேல் என்ன கேட்பது என்று தெரியாமல் மௌனமாகிவிட்டாள் ராஜேஸ்வரி.

இரவு டிபன் சாப்பிட தான் ரூமை விட்டு வெளியே வந்தான் ஆகாஷ்.

தேவிகா நிறைய வெரைட்டி சமைத்து இருந்தார்.

அவனுக்கு அதை பார்த்ததும் சிரமப்பட்டு செய்திருப்பார் என்று தோன்றியது.

“எதுக்கு இவ்வளவு சிரமப்பட்டீங்க… ஏதாவது ஒண்ணு செஞ்சாலே போதும், ரொம்ப சிரமப்படாதீங்க”, என்றான் சகஜமாக.

“இதுல என்ன சிரமம் இருக்குது தம்பி, எனக்கு இதெல்லாம் ஒரு வேலையே இல்லை. அதுவுமில்லாம பாப்பா கூட ஒத்தாசை பண்றா இல்லை”,

“பாப்பா வா யாரது”, என்பது போல அவன் பார்க்க………. “ராஜியை தான் அவ சொல்றா”, என்றார் அண்ணாமலை.

அவன் அதற்கு பதில் எதுவும் பேசவில்லை.

நிறைய இருந்ததால் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டும் வயிறு நிரம்பி விட்டது. சற்று நடந்தால் தேவலை போல தோன்றியது.

சாப்பிட்டவுடன், “நான் இப்படியே ஒரு சின்ன வாக் போயிட்டு வர்றேன்”, என்று கிளம்பினான்.

“உனக்கு இங்க எதுவும் தெரியாதே”, என்றார்.

“பரவாயில்லை சின்ன ஊர் தானே………. ஒண்ணும் சிரமம் இருக்காது…….. அப்படியே ஏதாவது இருந்தா………. நான் உங்களுக்கு போன் பண்றேன்”, என்று சொல்லி கிளம்பினான்.

அவன் கீழே இறங்கி வரும்போது தான் செந்தில் அவனை பார்த்தான்.

“யாரிது புதுசா? அதுவும் ஆள் சும்மா ஹீரோ கணக்கா இருக்கான். யாராயிருப்பான்”, என்று யோசித்தபடியே பார்த்தான்.

ஆகாஷ் கீழே இறங்கி வரும்போதே பார்வையை சுழல விட்டு தான் இறங்கினான். அங்கே இருப்பவர்களை எல்லாம் பார்த்தபடியே வெளியே போனான்.

இறங்கியவனுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. இந்த வீட்டில் அதிக நேரம் இருந்தாலும் ஏதோ மூச்சு முட்டுவது போல இருந்தது.

ஏனென்று தெரியவில்லை. தான் ஏதாவது தப்பாக செய்கிறோமா? இது சரியா ஒன்றும் புரியவில்லை. ராஜியை பார்த்து அவனுக்கு பெரிதாக ஆர்வமெல்லாம் வரவில்லை. பார்பதற்க்கு மிகவும் சாதாரண தோற்றத்தில் இருக்கும் பெண். தன் மனைவியை பற்றிய கற்பனைகளே வேறு அவனுக்கு. தங்களுக்குள் நிச்சயம் தோற்ற பொருத்தம் இல்லை என்று நன்றாக தெரிந்தது அவனுக்கு.

மற்ற பொருத்தங்கள் எப்படியோ தெரியவில்லை. அவளை பிடிக்கிறதா இல்லையா என்று பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.  யோசித்தபடியே சற்று தூரம் வந்துவிட்டான்.

அப்போதுதான் பார்த்தான்……. வழியை கவனிக்காமல் வந்து விட்டோமே…… என்ன செய்வது என்று.

ஒரு மாதிரி காரை ஒட்டிக்கொண்டு போனது சிறிது ஞாபகம் இருந்தது. ஆனால் அது மெயின் ரோட்டில் இருந்து தான். அதனால் மெயின் ரோட் போனான்………. அவனுக்கு இருந்த டென்சனிற்கு ஒரு தம்மடித்தால் தேவலை போன்று தோன்ற…….. அங்கே இருந்த டீக்கடைக்கு போனான்.

நம் செந்திலும் அசோக்கும் தினமும் அமரும் டீக்கடை. 

அந்த டீக்கடைக்காரர் அவனை இதுவரை அங்கே பார்த்திராததால்…… “ஊருக்கு புதுசா தம்பி”, என்றார்.

“ஆமாங்க”, என்றான்.

“யார் வீட்டுக்காவது ஒரம்பறையா வந்திருக்கீங்களா”, என்றார்.

அவனுக்கு புரியவில்லை…… அவன் புரியாமல் பார்க்க………. “விருந்தாளியா வந்திருக்கீங்களா”, என்றார்

“ஆமாங்க”, என்றான்.

“யார் வீட்டுக்கு”, என்றார்.

அவனுக்கு அவர்களை எப்படி சொல்வது என்று தெரியவில்லை…… அவரின் பெயர் மட்டும் தான் தெரியும்…….. செய்யும் தொழில் தெரியும்….. ஆனால் அவர்களின் தொழில் செய்யும் பெயர் எல்லாம் தெரியாது. 

“அவர் பேரு அண்ணாமலைங்க”,

“ராஜ ராஜேஸ்வரி எக்ஸ்போர்ட்ஸா”, என்றார்.

“அது எனக்கு சரியா தெரியலைங்க…….. ஆனா அவர் பொண்ணு பேரு அதுதான்”, என்றான்.

“அவரே தாங்க………… நம்ம அண்ணாமலை அய்யா வீட்டுக்கு வந்திருக்கீங்களா”, என்றார்.

ஆகாஷ் நொந்தே போனான்…..

இவ்வளவு நேரமா அதைத்தானே சொல்லிட்டு இருந்தேன்……….. இவர் என்ன புதுசா கேட்கறார் என்று நினைத்தான்.

“ஆமாங்க”, என்றான் பரிதாபமாக…… 

“நம்ம செட்டி தெருவுல முதல் வீடு தானுங்களே”, என்றார் மறுபடியும்.

“அய்யோ! எனக்கு சிகரெட்டும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்”, என்று நினைத்தவன்…… “எனக்கு தெரியலைங்க”, என்று கிளம்ப போக……..

“ஆனா எனக்கு தெரியுமே”, என்றவர் கடைசியாக……… “என்ன வேண்டும்”, என்று கேட்டே விட்டார்.

அவன், “சிகரெட்”, என்று சொல்ல….. அங்கே அவன் குடிக்கும் பிராண்ட்கள் இல்லை அவசரத்திற்கு என்ன செய்வது என்று இருப்பதை வாங்கினான். 

இன்னும் ஒரு நொடி தாமதித்தால் கூட அவர் மறுபடியும் பேச்சு கொடுக்க ஆரம்பித்துவிடுவார் என்று நினைத்து திரும்பி வந்த வழியே வேகமாக வீட்டை நோக்கி ஒரு குத்துமதிப்பாக நடந்தான்.

அப்போதும், “தம்பி அவருக்கு என்ன முறை ஆகணும்னு கேட்காம விட்டுடனே…… அதுக்குள்ள போயிடிச்சே”, என்று அவர் வருத்தப்பட்டுக்கொண்டார்.

எல்லாம் தலைகீழாக நடப்பதே நம் தலையெழுத்தா என்றே அவனின் யோசனைகள் ஓடின.

வீட்டையும் சரியாக கண்டுபிடித்து விட்டான்.

வீட்டில் ஆகாஷ் வெளியே போனவுடனேயே……… செந்தில் சீனியப்பனிடம், “யாருப்பா இவன்”, என்றான்.

“எனக்கு தெரியாது”, என்றார் அவனின் தந்தை.

“அவங்க சொந்தக்கார பையனா”, என்றான் மறுபடியும்.

“எனக்கு தெரியாதுன்னு சொல்றேன்……. மறுபடியும் அவங்க சொந்தக்கார பையனான்னு கேட்கற”,

“இத்தனை வருஷமா இந்த வீட்ல இருக்கீங்க……… எப்படி அவங்க சொந்தம் உங்களுக்கு தெரியாம போகும்…… அவங்க சொந்தக்காரங்க வர்றவங்க எல்லாம் உங்ககிட்ட பேசிட்டு தான் போறாங்க நான் பார்த்திருக்கேன்”.  

“செந்திலு தெரியாதுன்னு சொன்னா ஒரு பேச்சுல விடு…….. சும்மா நோண்டாதே”, என்றார் அவனது அப்பா.

“இவருக்கு நிஜமாகவே இவனை யாரென்று தெரியாதா……… இல்லை தன்னிடம் சொல்ல இஷ்டப்படவில்லையா”, என்று அவனுக்கு அவனே கேள்வி கேட்டான்.

“அவருக்கு உன்னிடம் மறைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவருக்கு நிஜமாகவே தெரியாமல் இருக்கும்”, என்று அவனுக்கு அவனே பதிலும் சொல்லிக்கொண்டான்.

“பெரிய பணக்காரனா இருப்பான் போல…….. அவன் வந்திருக்கிற காரே சொல்லுதே……. கார் தான் சொல்லனுமா? அவனை பார்த்தாலே உனக்கு தெரியலையா”, என்று அதற்கும் அவனே பதில் சொல்லிக்கொண்டான்.

இப்படி ஆகாஷை பற்றி பல பல யோசனைகளில் அவன் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கும் போதே போன ஆகாஷ் திரும்ப வீட்டிற்கு வந்துவிட்டான்.

மதியமும் சாப்பிடாதது செந்திலுக்கு வயிற்றை கிள்ளியது. வீட்டிற்கு போக விரும்பியவன், “என்னப்பா முதலாளி கூட தான் இவன் வந்ததா எல்லாரும் சொல்றாங்க. அவர் என்னடான்னா இன்னும் கீழேயே இறங்கி வரலை……. நான் எப்போ கணக்கை ஒப்படைச்சிட்டு போறது”, என்றான்.

“ஏண்டா அவசரப்படர”,

“வசூலுக்கு போன இடத்தில மத்தியானம் லேட் ஆயிடுச்சு……. அதனால சாப்பிடவேயில்லை”,

“சரி என்கிட்ட சொல்லிட்டு போ”,

“உங்ககிட்ட சொல்லிட்டாலும்……….. உங்களுக்கு புரியவெச்சு…….. நீங்க அவர்கிட்ட சொல்லி………. மறுபடியும் நாளைக்கு நான் வந்தவுடனே கேட்டு…… எத்தனை வேலை…. அதுவுமில்லாம மூணு நாள் கணக்கு……… உங்களுக்கு புரியாது…… அவருக்கு தான் புரியும். அதனால அவரையே கூப்பிடுங்க……… சொல்லிட்டா எனக்கு ஒரே வேலை………. பண விஷயம் வேற. நான் கணக்கை கரக்டா சொல்லனும்”, என்று நீளமாக பேசினான்.   

“நீ பேசறது எனக்கு மூச்செடுக்குதுடா…….. நேரம்டா நான் இத்தனை வருஷமா இங்கே இருக்கேன்……… நீ இப்போ ரெண்டு மூணு மாசமா வந்துட்டு……. எனக்கே புரியாதுங்கற”,

“அப்பா சொன்ன கேளுங்க கூப்பிடுங்க”, என்றான்.

வேறுவழியில்லாமல் மேலே இருக்கும் பெல்லை அடித்தார் சீனியப்பன்.   

எட்டிப் பார்த்த அண்ணாமலையிடம், “செந்தில் கணக்கு குடுக்கணுமாம்”, என்றார்.

“என்ன அவசரம் சீனி…… நாளைக்கு பார்த்துக்கலாம்”,

“சொன்னேன்………. அவன் கேட்க மாட்டேங்கறான்”,

அவர் கீழே இறங்கி வராமல்……… “சரி அவனை மேலே அனுப்பு”, என்றார்.

அவன் மேலே போனபோது ஆகாஷும் அவருமே ஹாலில் அமர்ந்து இருந்தனர்.

இவனை பார்த்தவுடனே, “என்ன செந்தில் அவசரம்? நாளைக்கு சாவகாசமா பார்க்கலாம்னு இருந்தேன்”,

“இன்னைக்கு வசூலானது கொஞ்சம் பெரிய அமௌன்ட். உங்க கிட்ட குடுத்துட்டா பரவாயில்லை……. அதுதான்”, என்று விளக்கமளித்தான்.

“சரி! கொடு எவ்வளவு”,

“ரெண்டு லட்சத்து நாற்பதாயிரம்”,

“அந்த கே எஸ் காரங்ககிட்ட இன்னும் வசூல் ஆகலையா”,

“ஆகிடுச்சே நேத்தே அம்மா கிட்ட கொடுத்துட்டேனே”,

“அப்படியா சரி, நான் தேவிகா கிட்ட கேட்டுக்கறேன்”,

இத்தனை சம்பாஷனைகளும் இவன் நின்று கொண்டிருக்க……… அவர் அமர்ந்து கொண்டும் நடந்துகொண்டிருந்தது. அதை கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு ஆகாஷ் பார்த்துக்கொண்டிருக்க…….. செந்திலுக்கு அது சற்றும் பிடிக்கவில்லை.

ஆகாஷுடைய பார்வை தன்னை அலட்சியமாக பார்ப்பதாக எண்ணினான் செந்தில். என்னவோ அவன் மிகவும் கீழிறக்கப்பட்டது போல உணர்ந்தான்.   

“டேய்! நீ இங்க வேலை செய்ய வந்திருக்க……… அவன் இந்த வீட்டுக்கு வந்த விருந்தாளி………. அவனோட இப்ப நீ எதுக்கு உன்னை இணைச்சுக்குற”, என்று மனசாட்சி இடித்துரைக்க சற்று அமைதியானான்.

அவன் சென்ற பிறகு ராஜியை அழைத்தார் அண்ணாமலை. “ராஜி! ஆகாஷ் இங்க சேலத்துக்கு புதுசு. இங்கே இருக்கிற இடங்களை தெரியாது. நாளைக்கு அவர் இங்கே நம்ம இளம்பிள்ளைக்கு பக்கத்துல இருக்கிற சித்தர் கோயில் போகணுமாம்…….. நீ நாளைக்கு அவர் கூட போயிட்டு வர்றியா”, என்றார்.

“நானா?”, என்று விழித்தாள் ராஜேஸ்வரி.

“நீதான்மா”, என்றார் அண்ணாமலை.

தேவிகா கூட விழித்தார்…….. “என்ன இது? ஒரு வயசுப்பையனுடன் அவளை தனியாக அனுப்புகிறார். என்ன தான் தெரிந்தவர்களாக இருந்தாலும் ஊர் உலகத்தில் என்ன பேசுவர். கொஞ்சமாவது ஏதாவது யோசித்து நடந்து கொள்கிறாரா”, என்று தோன்றியது.

ஆகாஷ் முன்னிலையிலே எப்படி மறுத்து பேசுவது என்று எண்ணியவராக தனியாக பேசிக்கொள்ளலாம் என்று அமைதி காத்தார்.

தந்தை சொன்னவுடனேயே அன்னையின் முகத்தை தான் முதலில் பார்த்தாள் ராஜி. அவர் ஏதாவது மறுத்து பேசுவார் என்று எதிர்பார்த்திருக்க அவர் ஒன்றும் பேசும்வழியாக காணோம்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நிற்க……….. “நாளைக்கு போயிட்டு வந்துடும்மா”, என்று ஒரே பேச்சாக முடித்துவிட்டார் அண்ணாமலை.

“ஏன்? அப்பா இப்படி நடந்து கொள்கிறார்”, என்று யோசனையாக இருந்தது ராஜிக்கு. அவளுமே ஆகாஷ் முன்னிலையில் எப்படி பேசுவது என்ற யோசனையில் அமைதி காத்தாள்.

அம்மாவும் மகளும் உள்ளே போய்விட………. “நாளைக்கு அவகிட்ட பேசி பார்த்துட்டு என்னோட முடிவை சொல்றேன். நீங்க எதுவும் அவங்க கிட்ட பேசலையே”, என்றான் ஆகாஷ் அண்ணாமலையை பார்த்து.

“இல்லை பேசலை”, என்றார் அண்ணாமலை.

“அப்படியே இருக்கட்டும். ஒருவேளை எனக்கு பிடிக்காம போயிடுச்சுன்னா…… வீணா அவங்க மனசுல ஆசையை வளர்த்த மாதிரி இருக்கக்கூடாது இல்லையா…… அதனால தான்”, என்று விளக்கம் கொடுத்தான்.

அண்ணாமலையின் மனமும் ஒரு நிலையில் இல்லை…….. “எல்லாம் சரிவர வேண்டுமே. இருவருக்கும் பிடிக்க வேண்டுமே. நல்ல படியாக நடக்க வேண்டுமே”, என்று கவலையாக இருந்தது.

“நான் தூங்க போறேன்”, என்று அவன் சொல்லி உள்ளே சென்று கதவை சாத்தியதும் தான் ……… அவன் எப்போது செல்வான் என்று பார்த்துக்கொண்டிருந்த அம்மாவும் மகளும் அவரிடம் வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

“என்னங்க நீங்க……… ஒரு வயசு பையனோட அவளை தனியா அனுப்புவீங்களா”, என்று கேட்க…….

ஆகாஷின் காதில் விழுந்துவிடுமோ என்று பயந்த அண்ணாமலை……. “மெதுவா பேசு!”, என்று தேவிகாவை கடிந்து உள்ளே ரூமிற்கு கூட்டிக்கொண்டு போனார்.

“இப்போ சொல்லு”, என்றார் அண்ணாமலை.

“எனக்கு என்னவோ தனியா அனுப்பறது சரியா படலை………. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க”,

“ஒண்ணும் நினைக்க மாட்டாங்க…….. யாராவது கேட்டா அவர் சேலம் போறார்…….. இவ அவரோட காலேஜ் போறான்னு சொல்லிக்கலாம்”,

“அப்படி என்ன தனியா அனுப்பணும்னு……….. வேலை செய்யறவங்க யாரையாவது அனுப்பலாம் இல்லையா”,

“நான் ஏதாவது செஞ்சா ஒரு காரணம் இருக்கும் தானே………. அமைதியா இரு….. எனக்கு தெரியும், அவ எனக்கும் பொண்ணு தான். உன் அளவு அக்கறை எனக்கும் இருக்கும். எதுவும் பிரச்சினை ஆகாது……… அனுப்பி வை”,

கணவனின் பதிலில் மனம் சரியாகாத போதும் அவரை எதிர்த்து எதுவும் பேச முடியாதவராக அமைதி காத்தார் தேவிகா.

ராஜியும் அவளுடைய பங்குக்கு ஒரு முறை…….. “எனக்கு தனியா போக பிடிக்கலைப்பா”, என்றாள்.

“அப்பாக்காக ஒரு தடவை போயிட்டு வாம்மா”, என்றார் அண்ணாமலை….. அவரின் குரலில் மறுத்து பேச இயலாதவளாக, “சரிப்பா”, என்றாள் ராஜ ராஜேஸ்வரி.

அப்போதுதான் ஆகாஷை பார்த்த பிறகு அவனை பற்றி யோசித்ததால் பஸ்சில் நடந்ததை சொல்ல மறந்தது ஞாபகத்திற்கு வந்தது.

அவளின் அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்ல……. இருவருக்கும் சற்று கவலையாகி போயிற்று.

“செந்தில் இல்லைனா என்ன நடந்திருக்கும்”, என்று பயந்தார் தேவிகா.

“இல்லைனாலும் சமாளிச்சு இருப்பேன்மா…….. டிரைவர் கண்டக்டர் எல்லாம் தெரிஞ்சவங்க தான். ஆனாலும் செந்தில் இருந்தது பரவாயில்லாம போச்சு”, என்றாள்.

“எதுக்கும் கொஞ்ச நாளைக்கு பஸ்ல போகாத….. நம்ம சுமோல போ….. நான் யாரவது டிரைவர் பார்க்கிறேன்”, என்றார் அண்ணாமலை.  

“அதெல்லாம் வேண்டாம்பா…… எனக்கு ஒண்ணும் பயமில்லை”, என்றாள்.

“சொல்றதை கேளு! கொஞ்ச நாளைக்கு நீ சுமோல போ……. அப்புறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்”, என்று விட்டார் முடிவாக.

தேவிகாவிற்க்கும் அதுவே சரியென்று பட அவரும் அதை ஆமோதித்தார்.

அதன் பிறகும், “நாளைக்கு ஆகாஷோட சித்தர் கோயிலுக்கு போகணும்……. போய் சீக்கிரம் படு”, என்று அவளை அனுப்பினார். ஆகாஷுடன் வெளியே செல்வது ராஜிக்கு சற்று படபடப்பாக இருந்தது.  அது கவலையா இல்லை ஆவலா அவளுக்கே தெரியவில்லை.

Advertisement