Advertisement

அத்தியாயம் பதினைந்து :
கால நிலைகளா? தோஷ நிலைகளா? மன நிலைகளா? என்னவென்று அறியாத ஒன்று நம்முள் இறங்கி, நம்மையும் மீறி செயல்கள் செய்ய வைத்து விடும். நமக்குமே பிடிக்காத செயல்கள் அவை…
வந்தவன் நேரே சென்று குளித்து விட்டு வந்தான், அவன் வரவுமே உணவை மேஜை மீது ஜெயந்தி எடுத்து வைக்க.. மிகுந்த பசியில் இருந்தவன், கிச்சிடி சட்னியை வேகமாக உண்டு முடித்து சென்று டீ வீ போட்டு அமர்ந்து கொண்டான்.. ஆம்! எழுத தெரியாது, படிக்க சிரமம் என்பதால் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள செய்திகள் தானே அவனிற்கு..
அவன் செய்தியில் ஆழ்ந்து விட அப்போது தான் கவனித்தான், ஜெயந்தி அமர்ந்து உண்பதை..
“ஏன் என்னோட உட்கார்ந்து சாப்பிட மாட்டாளாமா இவ” என்று அவன் நினைக்க..
“நீ சாப்ட்டுட்டியா, என்னோட உட்கார்ந்து சாப்பிடு சொல்ல மாட்டானாமா இவன்” என்று நினைத்து அவளும் அவனோடு உண்ணவில்லை.
பின்பு உண்டு எழுந்து விட்டவள், எல்லாம் எடுத்து வைத்து, அவனுக்கு பால் கொடுத்து படுக்கையறை உள்ளே சென்றாள்.
இரவில் அவனுக்கு பால் குடித்து பழக்கமில்லை, சேர்ந்து இருந்த ஒரு மாதத்தில் அவனுக்கு என்ன நடந்தது என்ற ஞாபகம் கூட இல்லை. இருந்தது எல்லாம் அவனும் அவளும் உறவாடிய பொழுதுகள் மட்டுமே!
உண்மையில் அந்த ஒரு மாதத்தில் அப்படி ஒன்றும் ஜெயந்தி அவனுக்கு பார்த்து பார்த்து செய்யவில்லை, அவனை பழகவே அந்த ஒரு மாதம் ஆகிவிட்டது கூடவே ஜெர்மனி செல்ல ஏற்பாடுகள்.. அந்த மாதத்தில் அவனை பிடிக்குமா? செல்ல வேண்டுமே? இப்படி தான்! வேறு நினைவுகள் ஜெயந்திக்கு இல்லை.
அதையும் விட மருதாசாமூர்த்தி எதையும் வாழ்க்கையில் இழந்தவனாகவோ. இல்லாதவனாகவோ காட்டிக் கொண்டதே இல்லை.. “நீ போகணுமா? போகணுமா? போகாமா இருக்க முடியாதா? நான் இங்க உனக்கு எல்லாம் செய்து தர்றேன்” இப்படி தான் அவனின் வார்த்தைகள்..
“நீ இல்லாம என்னால இருக்க முடியாது ஜெயந்தி” என்றோ, “என்னால இனிமேயும் தனியா இருக்க முடியாது” என்றோ மனதை திறந்ததில்லை..
அவளின் கனவுகளுக்கும் இவனின் நனவுகளுக்கும் இடையில் ஊசலாடி “போ” என்று அனுப்பி விட்டான். இப்போது “ஜெயந்தி வரவில்லை, என்னையும் அழைக்கவில்லை” என்று மனம் முரண்டி ஒரு கோபத்தின் உச்ச நிலைக்கு சென்று, இப்படி சொல்லாமல் கொள்ளாமல் ஒரு பயணம்.
ஜெயந்திக்கு படுக்கையை பார்த்ததும் அங்கே படுக்க பிடிக்கவேயில்லை, “என்னை, என் அணைப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டு எழுந்து சென்றான் தானே, இனி நான் இங்கே அவனாய் அழைக்கும் வரை படுக்க மாட்டேன்” உறுதி எடுத்துக் கொண்டாள்.
வேகமாக ஒரு பெட்ஷீட் எடுத்து கீழே விரித்து படுத்துக் கொண்டாள்..
மருது வந்து பார்த்தது கீழே படுத்திருக்கும் ஜெயந்தியை தான், “ஓஹ், நான் வேண்டாம்னு கீழே படுத்திருக்கா, உன்கிட்ட வந்து கெஞ்சிட்டு நிற்கணும்னு உனக்கு நினைப்போ, போடி, நீ எனக்கு வேண்டாம்” என்று நினைத்து படுத்துக் கொண்டான்.
ஒன்று அவன் பேச செய்திருக்க வேண்டும், இல்லை அவள் பேச செய்திருக்க வேண்டும். இருவருமே முறுக்கி கொண்டர்..
வெகு நேரம் கழித்தே இருவரும் உறங்கினர்.. காலையில் ஜெயந்தி எழும்முன்னர் எப்போதும் மருது எழும் நேரம் தான், ஆனால் மன அலுப்பு, பயண அலுப்பு, எல்லாம் சேர்ந்து அவனை ஏதோ செய்திருக்க, அவள் எழும் போதும் உறக்கத்தில் இருந்தான்..
எழுந்தவள் குளித்து சமைக்க நின்ற போது தான் அவன் விழித்து வந்தான்.. வந்தவன் எப்போதும் போல செய்திக்காக தொலைக்காட்சி முன் அமர்ந்து விட்டான்.
அவனை பார்த்ததும் மௌனமாய் டீ தயாரித்து அவன் முன் வைத்து அவள் நடக்க,
“கைல குடுக்கமாட்டாலாம் இவ” என்று நினைத்த போதும், அது கொடுக்க வீட்டினில் ஒருத்தி இருக்கிறாள் என்பதே போதுமானதாய் இருக்க, எடுத்து அதை அருந்தியனுக்கு தோன்றியது, “ஷப்பா, இப்போ கொஞ்சம் சுமாரா இருக்கு, முன்ன மாதிரி கேவலமா இல்லை”
குடித்து அவன் குளித்து விட்டு வந்து கடவுள் முன் நிற்கும் போது, வாயில் காவலாளி இன்டர்காம் மூலம் அழைக்க இவள் தான் எடுத்தாள்.
எடுதவளிடம் “அண்ணனை பார்க்க ஆளுங்க வந்திருக்காங்க” என,
ஆம்! அவனின் பஞ்சாயத்து வேலைகள் அது பாட்டிற்கு நடக்கும். என்ன பிரச்சனை என்றாலும் ஏரியா ஆட்கள் இன்னும் அவனிடம் தான் வருவர்.
“பார்க்க வந்திருக்காங்களாம்” என்று அவள் குரல் கொடுக்க,
“வரச் சொல்லு” என்று அவனும் வணங்கிக் கொண்டே குரல் கொடுத்தான்.
முன் வராண்டாவில் நிறைய இடம் இருக்கும்.. அங்கே சேர்கள் அடுக்கி இருக்கும், அமர்பவர் எடுத்து போட்டுக் கொண்டு அமர்ந்து கொள்ளலாம்.
ஆனால் இவன் வெளியே செல்லும் வரை அவர்கள் நின்று கொண்டே இருந்தனர், பக்கம் பக்கம் வீட்டு பிரச்னை, கை கலப்பு வரை சென்று இவனிடம் வந்திருக்க.. இவன் அமர்ந்து அவர்களையும் அமர வைத்து மிரட்டி பேசி இனி ஒருவரை ஒருவர் வம்பிழுக்கக் கூடாது என்று சொல்லி அனுப்பினான்..
அவன் உள்ளே வரும் போதே குருமாவின் வாசம் மனம் வீசியது, அதுவே பசியை கிளப்பியது, இவளுக்கு சமைக்க வருமா என்று யோசித்துக் கொண்டே வந்தான்..
ஹாட் பேக்கில் சப்பாத்தியும் குருமாவும் இருக்க, அவனாய் எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான், அவள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கவெல்லாம் இல்லை. ஏன் அவள் சமைக்கவே இல்லை என்றாலும் எதிர்பார்த்திருக்க மாட்டான். இன்னும் அதற்கெல்லாம் அவன் பழகவே இல்லை. யாரோ சமைத்துப் போட்டு உண்டு..    
அப்படி ஒன்றும் சமையல் வராது ஜெயந்திக்கு. அதன் ரகசியம் ஒன்றுமில்லை. இதுவரை சமைக்கும் அவசியம் பெரிதாய் இல்லை..
அவளுக்கு மட்டுமே ஜெர்மனியில் எதாவது ஒன்றிரண்டாய் செய்து கொள்வாள். மற்றபடி காய்கறி, பழங்கள், பிரட், ஜாம் துரித உணவுகள் என்று ஒட்டி விடுவாள்.
குர்மா சற்று உப்பு, சப்பாத்தி அவ்வளவு கடினம். ஆனால் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அதனை வயிறு நிறைய உண்டு விட்டு எழுந்தவன், தயாராகி ஸ்டோர்ஸ் சென்று விட்டான்
செல்லும் முன் “ஸ்டோர்ஸ் போறேன்” என்று சொல்லி சென்று விட..
அதுவரை இருந்த பொறுமை, அமைதி போய் மீண்டும் கோபம் கனன்ற ஆரம்பித்தது. மருது ஜெயந்தியை ஸ்டோர்ஸிற்கு அழைக்கவேயில்லையே. 
இப்போது தேவையில்லாது எல்லாம் ஞாபகம் வந்தது.
அவன் வீட்டிற்கும் தானே அழைக்கவில்லை, நீயாக தானே அவன் வந்தால் தான் வருவேன் என்று ஏர்போர்டில் அமர்ந்திருந்தாய்.. ஒரு வேளை அழைக்கும் எண்ணமே அவனுக்கு இல்லையோ என்னவோ?
ஏதோதோ தேவையில்லாதது எல்லாம் மனதை போட்டு குழப்பிக் கொண்டாள்.
சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் அவளின் உணவை உன்ன , மிக மிக சுமார் ரகம் என்று கூட சொல்ல முடியாமல் இருந்த உணவை கஷ்டப் பட்டு உண்டவள் செய்த முதல் வேலை.. “ம்மா, எனக்கு சமையல் வரலை, கத்துக் கொடு” என்று கைபேசியில் சொன்னாள்.
பின்னே ருசியில்லாத உணவு அவளுக்கு இறங்காது.. வசதி வாய்ப்புகள் எப்படியோ கலைசெல்வி வகை வகையாக அவளுக்கு பிடித்தமானதாய் சமைப்பார்.. நன்கு உண்டு வளர்ந்தவள் .. அவர்கள் யாருக்கு இருக்கிறதோ இல்லையோ அவளுக்கு வக்கனையாய் இருக்கும்..
இப்படி உணவு அவளுக்கு இறங்காது. அதனால் சமைத்து பழக வேண்டிய கட்டாயம். “நாளைக்கு என் பசங்க என்னை மாதிரி இருந்துட்டா, எப்படி என் சமையல் அவங்களுக்கு பிடிக்கும்” என்ற யோசனை ஓடியது.. மருது கூட இதில் இல்லை.     
“நீ சமைச்சிட்டு இங்க வா, எனக்கு சமைக்க சொல்லிக் கொடு” என்று அம்மாவை அழைத்து அவரை வைத்து சமைத்தவள், “அம்மா இன்னும் கொஞ்சம் நாள் வந்து சொல்லிக் கொடு” என்றாள்.
“அப்போ நீ வேலைக்கு போகலையா?” என்றார் அவர்.
அவள் அதை பற்றி எதுவும் இன்னம் யோசிக்கவில்லை. இந்தியா வருவது மட்டுமே பிரதான எண்ணமாய் இருக்க, வந்த பின் மருது செய்த கலாட்டாவில் அவன் மட்டுமே பிரதானம். இன்னம் இரண்டு நாட்கள் கூட ஆகவும் இல்லை.. அம்மா கேட்கவும் அவள் விழிக்க,
“ஏன் உன் வீட்டுக்காரர் போகக் கூடாது சொல்லிட்டாரா?” என்றார்.
“நாங்க அதை எதுவும் பேசிக்கலை மா”
“வேலைக்கு ஒன்னும் அவசரமில்லை கண்ணு, முதல்ல குழந்தை பெத்துக்கோ, ரெண்டு புள்ளையாவது பெத்துக்கணும்” என்றார்.
அதற்கு ஜெயந்தி பதில் எதுவும் சொல்லவில்லை.
என்ன சொல்ல முடியும்? என்ன சொல்லுவாள்? எத்தனை ஏக்கமான இரவுகள். வந்தால், இவன் முறுக்கிக் கொண்டு திரிகிறான். எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கட்டும் என்று தோன்றிவிட
அமைதியாக தான் இருந்தாள்..
சொல்வதை சொல்லிவிட்டோம் என்று நினைத்த கலைச்செல்வி, “விமலனுக்கு பொண்ணு பார்க்கலாமா ஜெயந்தி, இருபத்தி எட்டு ஆகுது, நீ வர தான் காத்திருந்தோம், ஊர்ல சொல்லி வெச்சிருக்கோம், இன்னம் ஜாதகம் எதுவும் வாங்கலை” என்று சொல்ல,
“பொண்ணு பார்க்கலாம் மா” என்று ஜெயந்தி சொல்ல, இப்படியாக பேச்சுக்கள் முடிந்து அவர் வீட்டிற்கு செல்ல..  
சமைத்த உணவோடு மருதுவிற்காக காத்திருந்தாள்..
மதிய உணவிற்கு வந்தவன் அவனாக எடுத்து போட்டு உண்ண ஆரம்பித்தான்.. உணவு சுவையாக தான் இருந்தது. ஆனால் அது என்னவென்று தான் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
அவனுக்கு தெரிந்தது என்ன? கடையில் உண்பவன். சாம்பார் தெரியும், புளிகுழம்பு தெரியும், கூட்டு பொறியல் இப்படி கடையின் உணவு வகைகள் தானே தெரியும்… அசைவ உணவுகள் தெரியும்.. வீட்டு சாப்பாடு என்பது அவனுக்கு கிடையவே கிடையாது.. என்ன என்று அவளிடம் கேட்டால் தானே தெரியும்!
ஆனால் கேட்க மனதில்லை நன்றாய் இருக்கிறது என்று சொல்லவும் மனதில்லை.  
அமைதியாய் உட்கார்ந்து திரும்பி பார்த்திருந்தால் கூட உடனே வந்து பரிமாறியிருப்பாள், அவனோ கண்டுகொள்ளவேயில்லை.    
சாதம் குழம்பு ரசம் பொரியல் என்று சூடாய் இருக்க, மீண்டும் ஒரு கட்டு கட்டினான்..
ஜெயந்தியும் தள்ளி இருந்து பார்த்திருந்தால், ஆனால் அருகில் கூட வரவில்லை..
தெளிவாய் இருந்தான் மருதாச்சலமூர்த்தி இந்த முறை.. முதலில் ஜெயந்தி என்னை தெரிந்து கொள்ளட்டும் என்பது தான் அது.. அவளுக்கு பிடித்தமோ இல்லையோ என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..
பக்கம் சென்றால் அவ்வளவு தான் இருவருமே உருகி கரைந்து விடுவர் என்பது அவனுக்கு நிச்சயமே.. அந்த ஒரு மாதமுமே வேறு எதுவுமே அவர்கள் பேசிக் கொள்ளவில்லை.. மீண்டும் அப்படி ஒரு வாழ்க்கை ஆரம்பிக்க முடியாது.
அவள் என்னை தெரிந்து கொள்ள வேண்டும், அவளாக கேட்க வேண்டும் என்பது தான். எத்தனை முறை அவனாக பேச முயன்றும் அவள் இடம் கொடுக்கவேயில்லை..
“அப்படி என்ன நான் குறைந்து விட்டேன். நல்லதோ கெட்டதோ என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா. அப்படி எதுவும் தெரிந்து கொள்ளாமல் அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டிய அவசியமென்ன” என்ற இறுமாப்பு வந்து அமர்ந்து கொண்டது..
அதனால் தான் மருது ஸ்டோர்ஸ் அழைக்கவில்லை, “டிக்கெட் அனுப்பினேன் வரவில்லை. இப்போது இவளாக வரவேண்டும் தானே. இவளை யார் வரவேண்டாம் என்று சொன்னது இவளாய் தான் வரவேண்டும்’   
வயிறு நிறைய உண்டது சற்று களைப்பாய் இருக்க.. சோபாவில் அமர்ந்தவன், சாய்ந்த வாக்கில் அமர்ந்தது தான் தெரியும் உறங்கி விட்டான்.
“என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன், பேச மாட்டானாமா போடா” என்று மனதிற்குள் நினைத்தாலும் அப்படி ஒரு அழுகை வந்தது மருதுவின் பாராமுகத்தினாள்.
அவளாய் சென்று பேசவும் பிரியமில்லை, பிரியமில்லை ஒரு புறம் மீண்டும் வண்டியை கிளப்பி எங்காவது சென்று விட்டால். அந்த பயம் ஒருபுறம்.
இன்னும் வண்டி கூட இல்லை, அது கூட அவளுக்கு தெரியவில்லை. அவள் அதனை கவனிக்கவேயில்லை.
ஒரு மூச்சு அழுது முடித்தவள், பின்பு உணவை உண்டு அவனின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.. வேறு என்ன செய்ய என்று கூட தெரியவில்லை.
அவளின் பெட்டிகள் கூட இன்னும் பிரிக்கவில்லை, உண்மையில் அவளுக்கென்று ஜெர்மனியில் இருந்து எதுவும் வாங்கவில்லை. அவளின் அம்மா வீட்டிற்கு வாங்கினாள், பின் எல்லாம் மருதாச்சலமூர்த்தி, அவனுக்கு அவனுக்கு மட்டுமே..
இந்த சினிமாவில் வருவது போல வெகு நாட்களுக்கு பிறகு பார்த்தால், ஓடி வந்து கட்டிக் கொள்ள மாட்டானா? முத்தம் கொடுக்க மாட்டனா என்று தோன்ற அவனையே பார்த்து அமர்ந்திருந்தாள்..
அணு அணுவும் அவனுக்காய் ஏங்க, என்ன செய்ய முடியும். அவளாய் சென்று அணைத்து கூட படுத்தாகி விட்டது அவனின் ஆதரவிற்காய்.  இனி மருதுவாய் வராமல் அருகில் கூட போக, அவளாய் நினைத்தால் கூட அவளால் முடியாது.
அவனையே பார்த்து வெகு நேரம் அமர்ந்திருந்தவள், அவனிடம் சிறிது அசைவு தெரியவும் எழுந்து உள்ளே சென்று அவனுக்கு டீ வைத்து வந்தவள் அவன் முன் வைக்க,
“என்னடா இது இப்படி நம்மை கவனிக்கறா?” என்று மருதுவிற்கு தோன்றியது.. இது அவனுக்கு முற்றிலும் புதிது கூட.. சொல்லப் போனால் இன்று தான் முதல் நாள்..
குடித்து விட்டு வெளியே கிளம்ப போனவனிடம் “எனக்கு வீடு எப்படி பூட்டணும்னு சொல்லிக் கொடுங்க, சாவியும் வேணும்.. எனக்கு பூட்ட தெரியாததால எங்கயும் போக முடியலை” என்றாள்.
“எங்க போகணும்?” என்றான் உடனே.
“மருது ஸ்டோர்ஸ்” என்றோ “நம்ம கடைக்கு” என்றோ பதிலை அவன் எதிர்பார்க்க,
“இதென்ன வீட்லயே இருக்க முடியுமா? எங்காவது போகணும்னா, அம்மா வீட்டுக்கு போகணும்னா கூட போக முடியலை” என்றவளின் பதில் இருந்தது.
“ஓஹ்” என்ற பதிலுடன் முடித்துக் கொண்டவன், அவளை அழைத்து சொல்லிக் கொடுத்து அவளுக்கு ஒரு சாவியும் எடுத்து கொடுத்து சென்று விட்டான்..
அவனின் பாராமுகம் உறுத்த, அவனின் சட்டையை பிடித்து உலுக்கி சண்டை போடும் ஆவேசம் எழுந்தது.. “இந்த நன்றி என்ற ஒரு கருமம் தேவையில்லை.. முதலில் அவனின் பணத்தை அவனிடம் கொடுத்து விட்டு அவனை நிச்சயம் நன்றாய் கேள்வி கேட்க வேண்டும். நான் என்ன அப்படி தவறு செய்தேன் இப்படி என்னிடம் நடந்து கொள்ள” என்று முடிவெடுத்தாள்.
அதுவே இன்னும் பெரிய பிரச்னையை அவர்களுக்குள் கொடுக்க போகிறது என்று அவள் அறியவில்லை..
எல்லா பிரச்சனைகளையும் உடனுக்குடனே முடிக்க நினைக்க கூடாது!
அவசரத்தில் முடிக்க வேண்டியதும் உள்ளது!
ஆறப் போடவேண்டியதும் உள்ளது!
மாற்றி செய்தோமானால் பிரச்சனைகள் முடியாது!
குத்தி கிளறி விட்டுவிடுவோம்!
ரணங்கள் அதிகமாகும்!                
    
         
  
                                 

Advertisement