Advertisement

“அடிக்க வேண்டாம்” என்று ஜெயந்தி பயந்து சொல்ல,

“நீ வாங்க வேண்டிய அடியை தான் அவன் வாங்கிட்டு இருக்கான். ஏதாவது பேசின கொன்னுடுவேன். அவன் சொன்னா நீ உட்காருவியா? அறிவு வேண்டாம் உனக்கு. முதல்ல வீட்டுக்கு போ, கூட்டிட்டு போடா அவளை!” என்று விமலனிடம் கத்திக் கொண்டே தன் பைக் சாவியை வீச,

அது கீழே விழுந்தது.

விமலன் எதுவும் பேசாமல் அதனை எடுத்துக் கொண்டு அவளை அழைத்து கொண்டு நகர்ந்து விட்டான்.

வாட்ச்மேனிடன் வந்தவன் “என்னை தேடி ஏதாவது ஒரு பொண்ணு வந்திருக்கா?” என,

“இல்லை?” என்று அவன் தலையாட்ட,

“அப்போ என்னை தேடி ஒரு பொண்ணு வந்திருக்கான்னா, அவ எனக்கு முக்கியம்னு தெரிய வேண்டாம். அவன்னு இல்லை எந்த பொண்ணையும்  இருட்டுல உட்கார வைப்பியா. அதுவும் சிகரெட் பிடிச்சிட்டு இருக்கீங்க” என்று மீண்டும் அடி பின்ன,

“ண்ணா, எதோ தெரியாம பண்ணிட்டான் விடுண்ணா, அங்க பொண்ணு இருக்குறது எங்களுக்கும் தெரியாது. தெரிஞ்சிருந்தா உடனே உன்னாண்ட சொல்லியிருப்போம்” என்று அவர்கள் சமாதானம் செய்ய,

“சொல்லி வைங்கடா, தொலைச்சிடுவேன்” என்று மீசையை முறுக்கியபடி செல்ல,

“என்னடா பண்ணின?” என்று அவனின் சகாக்கல் கடிய,

“எனக்கு என்னடா தெரியும், அந்த பொண்ணு அண்ணனுக்கு வேண்டிய பொண்ணுன்னு. உதார் உட்டுச்சு, ஒரு காட்டு காட்ட அப்பால குந்து சொல்லிட்டேன்” என்று அவன் சொல்ல,

நடக்க நடக்க அதனை கேட்ட மருது “உதார் விட்டா உட்கார வைப்பியா நீ?” என்று மீண்டும் அடிக்க பாய,

“ண்ணா விட்டுருண்ணா, தப்பா நினைச்சு எல்லாம் எதுவும் பண்ணலை, என்னை பத்தி உனக்கு தெரியாதா?” என்று அவன் மருதுவின் காலடியில் விழுந்து காலை பிடித்து கொள்ள,

கோபம் அடங்காத போதும் அவனை விட்டு சென்றான். வெகு வருடங்களாய் தெரிந்தவன், தப்பானவன் கிடையாது என்று தெரிந்து மேலும் எதுவும் பேசாமல் சென்றான்.

ஆனால் இருட்டில் இருந்து ஜெயந்தி வெளி வந்த தோற்றம், கலைந்த தலை, சோர்ந்த முகம், நேர்த்தியில்லாத உடை.. என்னென்னவோ கேள்வி படும் நிலையில் அவளை பார்த்ததும் மனதில் தோன்றிய பயம். அப்பா, வார்த்தைகளால் வடிக்க இயலாது!

அந்த கோபமே எல்லாம் செய்ய வைத்தது..

அந்த எஞ்சியனியர் பெண் எல்லாம் அதுவரை பயந்து பார்த்து நின்றாள்.

“சாரி, நீங்க கிளம்புங்க, நேரமாச்சு” என்று சொல்லி எதில் செல்கிறாள் என்று அவளின் பத்திரத்தை பார்த்து பின் கடைக்கு வந்தான்.

கமலன் அங்கே தான் இருந்தான், அவனுக்கு நடந்தது எதுவும் தெரியாது..

“அக்கா உங்களை பார்க்க வந்ததே”

“எதுக்குடா வந்தா?

“அக்காக்கு ஜெர்மனில” என்று ஒரு கார் கம்பனியின் பெயரை சொன்னவன், அங்கே வேலை கிடைச்சிருக்காம் சொல்ல வந்தா”

“ஓஹ்” என்று முடித்துக் கொண்டவன், பேசாமல் அவனின் கேபின் சென்று அமர்ந்து கொண்டான்.. மனதில் என்னவோ ஒரு ஏமாற்றம் சூழ.. போகப் போகிறாளா என்று பதறவும் செய்தது. அதுநாள் வரை ஒன்றும் தெரியவில்லை, அவளை மாலையில் பார்த்த அந்த நிமிடம், இப்போது வெளிநாடு போகிறாள் என்று தெரிய வருவது.. அவனுக்கு மனதிற்கு என்னவோ செய்தது.

அப்படியே அமர்ந்து விட்டான்.

ஒரு மணி நேரம் கழிந்த விமலன் வந்தவன், சாவியை அவனின் மேஜையில் வைத்து.. “சாரி சர், ரொம்ப அழுகை, அதான் லேட் ஆகிடுச்சு, பயந்துட்டா” என்றான்.

மருது அவனை ஒரு பார்வை பார்க்க, அந்த பார்வை “உன்னை யார் அவளை தனியாய் அனுப்ப சொன்னது” என்று இருந்தது.

“நான் வர்றேன்னு தான் சொன்னேன் சர், பக்கம் தானே நான் போயிக்கறேன்னு சொன்னா, அப்போ நிறைய கஸ்டமர் வேற இருந்தாங்க” என்று விளக்கம் கொடுக்க,

“எல்லோரும் நல்லவங்கன்னு தான் நினைக்கறோம். ஆனா யார் எப்படின்னு உண்மையா நமக்கு தெரியாது. நம்ம ஜாக்கிரதைல நாம இருக்கணும்”

“அந்த வாட்ச் மேன் நமக்கு தெரிஞ்சவன் தான், ஆனா அவனை பார்க்க வர்றவங்களோ, இல்லை கட்டிடம் கட்ட நிறைய வட நாட்டு பசங்க இருக்காங்க, அவனுங்க ஏதாவது வந்தாலோ, ஒரு ஆளா வாட்ச்மேன் மட்டும் என்ன செய்வான், அவனை அடிச்சு போட்டுட்டு பில்டிங் பின்ன தூக்கிட்டு போனா, நம்மாள கண்டுபிடிக்கவே முடியாது..”

“ப்ச்” என்று வார்த்தையை முடிக்காதவன்..

“நம்ம பத்திரத்துக்கு நம்ம தான் பொறுப்பு. நம்மளை மீறி நடக்கற விஷயத்துக்கு நாம ஒன்னும் பண்ண முடியாது. ஆனா நாமளா எந்த சந்தர்ப்பத்தையும் யாருக்கும் உருவாக்கி கொடுக்க கூடாது”

“கேள்விப்படறது அதிகம் இந்த விஷயங்கள் தான், தொடர்ந்து இப்படி இருக்குற சூழ்நிலையில, நீ இங்க எதுக்கு அவளை தனியா அனுப்பின, நான் வர்றவரை கடையில காத்திருக்க முடியாதா?” என பொரிய,

தலை குனிந்து தான் நின்றிருந்தான் விமலன்.

“போ, போய் வேலையை பாரு போ” என்று சொல்லி விட்டு மருது தலையை பிடித்து அமர்ந்து கொண்டான்.

என்னவோ அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் சுழன்று அடித்தது.

பிரச்சனைகள் எல்லாம் இருவருக்குள்ளும் வந்த பிறகு ஜெயந்தி என்ற ஒருத்தியை வாழ்க்கையில் கடந்து போய் விடலாம் என்று தான் நினைத்திருந்தான்.

ஆனால் இன்று தெள்ளத் தெளிவாய் புரிந்தது, முடியாது அவளை மறக்கவும் முடியாது, விடவும் முடியாது என்று.

அதுவும் அணைத்துக் கொள்ள துடித்தது, அவனே எதிர்பாராதது, இப்படி எல்லாம் எப்போதும் உணரந்தது இல்லை. காதலுக்கோ பாதுகாப்பிற்கோ, எதுவாகினும் அணைத்துக் கொள்ள நினைத்தது முதல் முறை.

யோசனைகள் சூழ அமர்ந்து விட்டான்.

அங்கே முகம் பார்க்கும் கண்ணாடி எதுவுமில்லை இருந்திருந்தால் நான் வயசான மாதிரியா தெரியறேன் என்று அதனையும் பார்த்திருப்பான். அவளின் அதனை குறிக்கும் வார்த்தைகள் மறக்க முடியவில்லை.

முடியாது! விட முடியாது! உன்னை பிடித்தோ இல்லை எதற்காகவோ சரி என்று சொன்னால் தானே. பிச்சை என்ற வார்த்தை காதினுள் ரீங்கார மிட்ட போதும், அவள் எனக்கு பிச்சை இட்டாலும் சரி, அவள் தான் வேண்டும் என்று மனது அந்த நொடி கிடந்து தவித்தது.

ஆம்! திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டான்! அவள் என்னை கீழாக நினைத்தாலும் சரி, மேலாக நினைத்தாலும் சரி, அவள் வேண்டும் அவ்வளவு தான்!

முடிவெடுத்த பிறகு அமைதியாய் அமர்ந்து கொண்டான்.

நேரமாகிவிட விமலன் வந்து “கிளம்பறேன் சர்” என,

“கமலனை அனுப்பிட்டு வா”

அனுப்பிவிட்டு இவன் வந்து அமர கூட விஷால் வந்தவன் “ண்ணா கிளம்பலாமா?” என,

“ஏன்? ஒரு நாள் லேட்டா போக மாட்டியா நீ!” என்று எரிந்து விழுந்தான்.

“நானா? நான் எப்போ அப்படி சொன்னேன்! நைட் இங்கயே படுத்துக்கறேன். எனக்கு ஒண்ணுமில்லை” என்று சொல்லி வேகமாய் வெளியே வந்து விட்டான்.

மருதுவின் முகம் பார்த்தே ஏதோ டென்ஷன் என்று புரிந்து விட அதுதான் வந்து விட்டான்..

விஷால் சொன்ன விதத்தில் விமலனின் முகம் புன்னகை பூசியது, எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குவாண்டா என்பது போல.

ஆனால் மருதுவின் முகத்தினில் மருந்துக்கும் புன்னகை இல்லை…. தன்னுடைய புன்னகையை விட்டவன் மருதுவை பார்க்க,

அவனின் முகத்தினில் அப்படி ஒரு தீவிரம்!

கேட்கலாமா? வேண்டாமா? ஏற்கனவே அவளிடம் பேசியாகிவிட்டது. வேண்டாம் என்று சொல்லியாகி விட்டது! ஆனாலும் அவள் வேண்டுமே.

திருமணம் முடிந்து காலம் முழுமைக்கு சண்டை போட்டாலும் அவள் தான் வேண்டும்!

அவள் என்னை மதித்தாலும் மிதித்தாலும், அவள் தான் வேண்டும் என்ற தீவிரம் தீவிரமாய் குடிகொள்ள,

“நான் பொண்ணு கேட்டா, ஜெயந்தியை எனக்கு கட்டி குடுப்பீங்களா?” என்று கேட்டு விட.. விமலன் வாயடைத்து போய் பார்த்திருந்தான்..

“எனக்கு யாரும் கிடையாது, நான் மட்டும் தான். சொந்தம்னு யாரும் கிடையாது. அதனால பொண்ணு கேட்கவும் யாரும் கிடையாது. நானே கேட்டு கிட்டா தான்” சொல்லும் குரலில் ஆதங்கம் வருத்தம் என்பது போல எல்லாம் இல்லை.

தன் நிலையை சொல்லி இருந்தான்.

“உங்கப்பாம்மா கிட்ட தான் பேசணும், உங்கப்பா கிட்ட கேட்க முடியாது. எனக்கும் அவருக்கும் சரி வராது. அதுவுமில்லாம அவர் சம்மதம் சொல்வார்ன்னு எனக்கு தோணலை. அவர் கிட்ட பேசாம உங்கம்மா கிட்ட பேசினா நல்லா இருக்காது. அதான் உன்கிட்ட பேசினேன்” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க,

பெண் கேட்பதற்கு இருந்த தயக்கம் எல்லாம் போய் ஒரு கம்பீரம் வந்து அமர்ந்து கொண்டது.

“அவளோட வெளிநாட்டு வேலை அவளுக்கு பெரிய கனவு லட்சியம்” என்று விமலன் சொல்ல,

“நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்”

“நான், நான் பேசிட்டு சொல்லட்டுமா?” என்றான் விமலன்.

“எப்போன்னாலும் சொல்லுங்க” என்று சொல்லி பேச்சை முடித்து விட.. இதனை சற்றும் எதிர்பாராத விமலன் மனது முழுவதும் சஞ்சலம் வந்து அமர்ந்து கொண்டது…

Advertisement