Advertisement

அத்தியாயம் ஒன்பது :

“எஸ் எஸ்” என்று மனது குதூகலித்தது… இதோ படிப்பை முடித்ததும், இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை.. இதோ வேலை ஜெர்மனியில். உலகின் புகழ் பெற்ற பல கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கும் இடம்.

பெர்லின் செல்லப் போகிறாள்.. மனது குதித்தது..

ஒரு புகழ் பெற்ற கார் நிறுவனத்தில் செலக்ட் ஆகிவிட்டாள்… யுரோவில் சம்பாதிக்கப் போகிறாள் ..

நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடி விட்டன.. இப்போது தான் கல்லூரியில் சேர்ந்தது போல இருக்கிறது, படித்து முடித்து விட்டாள். ஏன்? கமலனே இரண்டாவது வருடத்தில் இருந்து மூன்றாவது வருடம் போகப் போகிறான்.

அம்மாவிடம் சொன்னவள், அப்பாவிற்கு கைபேசியில் அழைத்து சொல்லி விட்டு நேரம் பார்த்தாள்..

“மா, ஆறரை மணி தானே ஆகுது. நான் அண்ணாக்கு போய் சொல்லிட்டு வரட்டா, கமலனும் அங்கே தானே இருப்பான்” என்று கேட்டாள்.

ஆம்! இன்னும் கல்லூரி முடிந்து வந்தால் மருது ஸ்டோர்சில் தான் அவனுக்கு மாலை நேர வேலை.

“சரி, போயிட்டு வா” என்றவர், “சும்மாவா போவ இரு” என்று அன்று அவர் செய்திருந்த பால் கொழுக்கட்டையை கொடுத்தவர், “தம்பி இருந்தா அவருக்கும் குடுத்துட்டு சொல்லு” என்றார்.

அவனால் தானே இது உண்மையில்!

ஆம், அவனுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருந்ததால் தான் நூறு சதவிகித உழைப்பை கொடுத்திருந்தாள்.

ஒரு வகையில் அவனால் கிடைத்த வெற்றி… பார், நான் சாதித்து விட்டேன் என்று அவனிடம் சொல்லும் ஆர்வம். அவனிடம் போட்ட சண்டையை என்றுமே அவள் விரும்பியதில்லை.

“ம்ம் குடுங்க” என்று சொல்லி எடுத்து போக, அங்கே மருது ஸ்டோர்ஸில் அவன் இல்லை.

விமலனிடமும் கமலனிடமும் பகிர்ந்து கொண்டவள், விஷாலிடமும் சொல்ல, எல்லோருக்கும் மகிழ்ச்சி.

“எங்க உங்க பெல் பாட்டம் முதலாளி” என்று விமலனிடம் ரகசியமாய் கேட்க,

“சைட்ல இருப்பார்” என்றான்.

ஆம், புதிய மருது ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய் வளர்ந்து கொண்டிருந்தது.

“பக்கம் தானே! இரு, அவர் கிட்ட சொல்லிட்டு வர்றேன்” என்று சென்றாள்.. “நான் வரவா” என்றவனிடம், “பக்கம் தானே போய்க்கறேன்” என்று சொல்லிச் செல்ல,

அங்கே தடுப்புகள் மறைத்திருக்க, சிறு இடம் உள்ளே நுழைவதற்கு இருக்க.. உள்ளே நுழைந்து விட்டாள். ஆனால் அந்த இடத்தில் தெரிந்த அமைதி ஒரு பயத்தை கொடுக்க, திரும்ப நினைத்த போது, அங்கிருந்த வாட்ச் மேன் “யாரு, என்ன வேணும்?” என்றான்.

“சார் இருக்காங்களா?”

“இருக்காரு நீ யாரு”

“நீ” என்ற ஒருமை அழைப்பு கோபம் கொடுக்க,

“அதெல்லாம் சொல்ல முடியாது, சார் இருக்காரா, அதுக்கு பதில் சொல்லுங்க” என்றாள்.. அவன் அங்கே தான் இருக்கிறான் என்பது தைரியம் கொடுத்திருந்தது.. இல்லையென்றால் பேசியிருக்க மாட்டாள்

ஒரு நாற்பது வயதிருக்கும் அவனிற்கு..

“இன்னாமே உதார் உடுற, யாரு நீ” என்றான்.

ஜெயந்தியை முன்னே பின்னே பார்த்தது இல்லை, உடையும் வீட்டில் இருக்கும் வெகு சாதாரண பழைய உடை, முகம் கூட கழுவவில்லை… கேள்வி பட்டதும் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்க.. அப்படியே வந்திருந்தாள்.

தன் உடை முகம் என்று எதையும் யோசிக்காமல் வந்திருந்தாள்..

“நான் யாரா இருந்தா உங்களுக்கென்ன, சார் இருக்காரா? அவரை கூப்பிடு!” என்றாள் அவளுமே அதட்டலாக..

“அதெல்லாம் கூப்பிட முடியாது, முக்கியமா பேசிட்டு இருக்காங்க, அண்ணாத்த வர்றப்போ பார்த்துக்கோ” அங்கே ஒரு இடத்தில் மணல் குவிந்திருக்க.. “தோ, அப்பால குந்து” என்றான்.

“நானே போய் பார்த்துக்கறேன்”

“அதெல்லாம் போவ முடியாது, அப்பால குந்து” என்று அவன் அலட்சியமாய் சொல்ல,

என்னவோ அந்த அலட்சியம் அவளுக்கு அழுகை கொடுக்க, அந்த மணலில் போய் அமர்ந்து கொண்டாள்.. சிறிது மாலை மங்கிய வெளிச்சம் இருந்தது, சில நிமிடங்களிலேயே நன்றாக இருட்டி விட்டது.

அவள் செய்வது பைத்தியக்காரத்தனம் என்று தோன்றிய போதும் “இருடா உன்னை என்ன செய்யறேன், சார் வரட்டும்” என்று நினைத்து அமர்ந்து கொண்டாள்.. மருதுவை பார்க்காமல் போக மனதேயில்லை. பத்து நிமிடம் அங்கேயே இருக்க..

சிறிது நேரத்திலேயே இன்னும் இரண்டு பேர் வந்து அந்த வாட்ச்மேனிடம் பேசிக் கொண்டிருக்க, கூடவே சிகரெட் பற்ற வைத்து பிடிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கும் அவள் அங்கே இருந்தது தெரியவில்லை. தெரிந்திருந்தால் உடனே மருதுவிடம் சொல்லியிருப்பர், சிகரெட் எல்லாம் பிடித்து இருக்க மாட்டர்.

“வேண்டாம் இனி இங்கிருக்க வேண்டாம்” என்று யோசித்து அவள் எழ நினைக்க,

அப்போது பார்த்து யாரிடமோ பேசிக் கொண்டே கட்டிடத்தை விட்டு வெளியே வந்தான் மருது. ஐந்து மாடிக் கட்டிடம் பிரமாண்டமாய் வளர்ந்து கொண்டிருந்தது..

யாரிடம் என்று பார்க்க.. ஒரு பெண் இருந்தாள்.. அவனின் கட்டிடம் கட்டும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை செய்யும் இஞ்சினியர்.. மருது மாலை ஒரு மாற்றம் சொல்லியிருக்க அதை என்ன என்று பார்ப்பதற்காக வந்திருந்தாள்..

சிறு பெண் என்பதால் யாரையும் அனுப்பாமல் அவனே அவளின் பத்திரத்திற்காய் வந்திருந்தான்.. யாரென்று தெரியாத ஒரு பெண், அவளின் பத்திரம் கூட அவனுக்கு முக்கியமாய் இருக்க.. ஜெயந்தியின் பத்திரம் எவ்வளவு நினைப்பான் அவன்..

இவனை பார்த்ததும் சிகரெட்டை முதுகிற்கு பின் மறைத்து பவ்யமாய் நின்றனர்..  ஆனால் மருது கவனித்து விட்டான்.. அவர்கள் சிகரெட் பிடிப்பதையும் பின் இவனை பார்த்ததும் அவசரமாய் மறைத்ததையும்.

ஜெயந்தி இவனை பார்த்து விட்டாலும் யாரோ ஒரு பெண் என்பதால் அருகே போகமால் அவள் வெளியேற காத்திருந்து அங்கேயே இருந்தாள்..

ஆனால் மருது பேசிக் கொண்டே அவளோடு தடுப்பின் வெளியே போக பார்க்க..

“சார்” என்று அவளையும் அறியாமல் சத்தமாகக் கூப்பிட்டு விட்டாள்.

ஜெயந்தியின் குரல் போல இருக்க அப்படியே மருதுவின் நடை நின்றது..

திரும்பி பார்க்க அவள் மணல் மேல் அமர்ந்திருப்பாள் என்று கனவா கண்டான். அந்த இடமும் இருட்டாக இருந்தது.

பார்வை அவளை தேட அங்கேயிருந்த வாட்ச்மேன் மற்றும் அவனோடு பேசிக் கொண்டிருந்த ஆட்கள் கண்ணில் பட,

“யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது” என்று மருது கேட்க,

ஒரு ஆர்வத்தில் ஜெயந்தி வந்து விட்டாள்.. மருதுவை பார்த்து பல மாதங்கள் இருக்கும்.. நேரில் பார்க்கவும் ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொள்ள.. நடையில் தயக்கமும் வந்து விட்டது.

இருட்டில் இருந்து மெதுவாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருந்தாள், ஆனால் திரும்ப குரல் கொடுக்கவில்லை.

ஜெயந்தியின் குரலோ என்று தோன்றிய அடுத்த நிமிடம் வாட்ச்மேனிடம் கேள்வி கேட்டாலும், விமலனுக்கு கைபேசியில் அழைப்பு விடுத்திருந்தான்.

அவன் கைபேசியில் பேசுவதை பார்த்து வாட்ச்மேன் பதில் சொல்லாமல் நிறுத்த,

“ஜெயந்தி இங்க வந்தாளா?” என்றான் எடுத்த உடனே,

“ஆமாம் சர், பில்டிங்க்கு உங்களை பார்க்க வந்தா”

அவன் சொன்ன பதிலில் அதிர்ந்து விட்டான், பரபரப்பான அந்த சென்னையில், தடுப்பிற்கு உள்ளே ஏகாந்தம் தான். அதுவும் இருட்டி விட்டது. இங்கேயானால் இவன்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“அவளை தனியா அனுப்பிட்டு நீ என்ன பண்ற?” என்று மருது கத்திய கத்தல் கைபேசி இல்லாமலேயே விமலனுக்கு கேட்டிருக்கும்.

மனம் எங்கே அவள் என்று அடித்துக் கொள்ள, பார்வை சுற்று புறம் அலச “யாரு என்னை பார்க்க வந்தா?” என்று மருது கேட்க,

“ஒரு பொண்ணு, தா அங்க” என்று வாட்ச் மேன் காண்பிக்க சரியாய் அந்த நேரம் ஜெயந்தி வெளிச்சத்திற்கு வர,

அவளை பார்த்து விட்ட ஆசுவாசம் இருந்தாலும் மருதுவின் கோபம் கட்டுக்கடங்காமல் செல்ல,

“என்ன பண்ற நீ இங்கே?” என்று பாய்ந்து வந்தான் அவளின் அருகே.

அவனின் கோபத்தில் தடுமாறியவள் “பார்க்க வந்தேன்” என.

பார்வையால் அவளை அலசினான் எதுவும் சேதாரமோ என்று. ஒன்னும் இல்லை என்று புரிய, மனதில் நிம்மதி அமர்ந்த போதும், கோபம் பெருகியது. அதுவும் அவளின் அழுங்கிய தோற்றம், அழுத விழிகள் என்னவோ செய்ய..

அவனுடைய கைகள் அவளை சிறையெடுக்க பரபரத்தன.. இழுத்து அணைத்துக் கொள்ள மனது சில நொடிகள் என்றாலும் துடித்து விட்டது.

“உன்னை யாரு இங்க வர சொன்னா? வந்தா என்னை பார்க்க வர மாட்டியா, இல்லை ஃபோன் பண்ண மாட்டியா? இருட்டுல இப்படி உட்கார்ந்து இருப்பியா? அறிவிருக்கா உனக்கு?” என்று அடித்து விடுபவன் போல பேச,

ஜெயந்தி தைரியமெல்லாம் எங்கேயோ போய்விட்டது.

“எதுக்கு வந்த முதல்ல அதை சொல்லு” என்று எரிந்து விழ,

ஜெயந்திக்கு வார்த்தையே வரவில்லை.. “அது” என்று தயங்கி கையில் இருந்த சிறு டிஃபன்பாக்சை வேறு பார்க்க,

“இதை குடுக்கவா வந்த” என்று அவனாய் அனுமானித்து, இத்தனை மாதங்கள் கழித்து இதற்காக வருவாளா என்று கூட யோசிக்காமல் அவளின் கையில் இருந்ததை பிடுங்கி தூர எறிந்தான்.. கோபம்! கோபம்! தலைகால் புரியாத கோபம்… கோபம் வந்துவிட்டால் என்ன செய்கிறான் என்று அவனுக்கே தெரியாது. அவனின் மிகப் பெரிய பலவீனம் அது.

அவன் டிஃபன் பாக்ஸ் எரிய, அந்த சமயம் தான் விமலன் என்னவோ ஏதோவென்று பதறி வந்தான். இதனை பார்த்ததும் ஓடி வர,

இவன் டிஃபன் பாக்சை தூர பிடுங்கி எறிந்த அதிர்ச்சியில் இருந்தவள், விமலனை பார்த்ததும் ஜெயந்தி தேம்பி தேம்பி அழ,

“என்ன ஆச்சு? என்ன ஆச்சு?” என்று விமலன் பதறினான்.

“என்ன ஆச்சுன்னு இப்போ கேட்க கூடாது, உள்ள என்ன நடந்தாலும் வெளில தெரியாது. நான் இங்க இருக்காம வெளில போயிருந்தா, உன்னை யார் அவளை தனியா அனுப்பச் சொன்னா, இருட்டுல உட்கார்ந்து இருக்கா, ஏதாவது ஒன்னு ஆகியிருந்தா, உன்னை யாருடா தனியா அனுப்ப சொன்னா?” என்று விமலனை வார்த்தைகளால் குதறினான்.

அண்ணனை திட்டுவது பொறுக்காமல் “நான் சார் பார்க்க கேட்டேன், வாட்ச் மேன் தான் அங்க உட்கார சொன்னான்” என்று அவள் தேம்பிக் கொண்டே சொன்னது தான் தாமதம்,

“இங்க வாடா” என்று வாட்ச்மேனை அருகில் அழைத்தவன், “உன்னை யாருடா அந்த இருட்டுல அவளை உட்கார வைக்க சொன்னா” என்று ஓங்கி ஒரு அரை விட தூர போய் விழுந்தான் அவன்.

பார்த்த எல்லோரும் பயந்து விட்டனர்.

Advertisement