Advertisement

“ஜானிக்கு அப்புறம் என்னோட ரொம்ப சிநேகிதம்னா இது தான்” என்று காண்பித்து கொடுத்தான்.
எதிரில் பார்த்தாள், கடல் மட்டுமே!
“கடலா?” என்று அவள் கேட்க,
“இல்லை, இந்த இருட்டு” என்றவன் அப்படியே அமைதியாகி விட, இன்னும் அவனை நெருங்கி நின்று கொண்டாள். கிட்ட தட்ட அவன் மேல் சாய்ந்த நிலை, அவளின் செய்கையில் மருது தான் காலை நன்றாய் ஸ்திரமாய் ஊன்றி நின்று கொண்டான்.
“இந்த கடலம்மா எனக்கு அம்மா மாதிரி, சில சமயம் ரொம்ப தனியாய் உணர்ற சமயத்துல இவ கிட்ட தான் பழியா கிடப்பேன்” என்றான் உள்ளார்ந்து.
இன்னும் இன்னும் ஜெயந்தியின் பிடியும் நெருக்கமும் அதிகரிக்க “ஓய், நீ என்னை கீழ தள்ளப் போற, இவ்வளவு கெட்டியா பிடிக்காத, மேல சாயாத” என்று அவளின் சாய்ந்த நிலையை குறைத்தான். குறைக்க மட்டும் தான் முடிந்தது. அப்போதும் அவள் விலகவில்லை.  
“ம்ம்ம், எங்க விட்டேன், டீ கிளாஸ் கழுவற வேலை தான். ஆனா அங்கேயே தங்கிக்கலாம், பத்து வயசுல ஆரம்பிச்சது பன்னண்டு வயசுல டீ மாஸ்டர் ஆகிட்டேன். அதுல இருந்து இன்னும் நாலு வருஷம் அந்த வேலை தான். பதினாறு வயசுல தான் இந்த கடலம்மா கிட்ட வந்தேன்” என்று நிறுத்தினான்.
ஜெயந்தி அவனின் முகத்தையே பார்ப்பது புரிந்தாலும், அவளை நோக்கி திரும்பவில்லை. “என்கிட்டே டீ குடிக்க வர்ற ஒரு போலிஸ்காரர் தான் சரக்கு கடல்ல மாட்டிகிச்சு கப்பல்ல இருக்கு, எடுத்துட்டு வர ஆளுங்க போவாங்க, கூட எனக்கு நம்பிக்கையா ஆள் வேணும், போய் எடுத்துட்டு வருவியான்னு கேட்டார்”
“சரி செஞ்சு தான் பார்ப்போமேன்னு தோணிச்சு, போனேன், வேலை எனக்கொன்னும் கஷ்டமா இல்லை, முடிச்சு கொடுத்தேன், பெரிய தொகை வந்துச்சு” 
“என்ன வேலை?” என்றாள் பயத்தோடு.
“கடல்ல கப்பல் நிக்கும், அதுல தங்கம் இருக்கும். அதை நான் கஸ்டம்ஸ்ல மாட்டிக்காம கரையில வந்து சேர்க்கணும்” என்றான்.
“சரக்கு” என்றவுடனே அவளுக்கு தோன்றியது போதை பொருள் ஒன்றே. அது இல்லை என்றவுடனே மனது அப்படி ஆசுவாசமாய் உணர்ந்தது.
ஆனாலும் சஞ்சலத்தோடு “தங்கம் கடத்துவீங்களா?” என்றாள்.  
“என்னது கடத்தறேனா? யார் சொன்னா? நான் செஞ்சது கடல் கடந்த வாணிபம் ஜெயந்தி” என்று கெத்தாய் சொல்ல,
“ஒஹ், செய்யற தப்புக்கு இந்த மாதிரி ஒரு பேரா?” என்று ஜெயந்தி எரிச்சலான குரலில் நக்கலாய் சொன்னாள்.
“என்ன தப்பு செஞ்சேன்? எனக்கு இது தப்பு கிடையாது. சரக்கை கை மாத்தி விடுவேன் அவ்வளவு தான். முதல்ல கூலிக்கு செஞ்சேன். அப்புறம் சொந்தமா செஞ்சேன். எவ்வளவு ரிஸ்க் தெரியுமா இதுல? ஆனா ஒரு தடவை கூட மாட்டினது கிடையாது. அது என்னோட நேரமா இல்லை திறமையா ஏதோ ஒன்னு. அது ஒரு ஏழெட்டு வருஷம் செஞ்சேன். கொஞ்சம் சொத்து சேர்ந்ததும், போதும்னு எல்லாதையும் விட்டு ஒதுங்கி கடை போட்டு உட்கார்ந்துட்டேன்”
“அந்த சொத்துகளை மூலதனமா வெச்சு தான் இவ்வளவு வளர்ச்சி. நான் வேண்டாம்னு விட்ட பிறகு கடத்தல் தங்கம் பக்கம் திரும்பி கூட பார்க்கலை. அதுக்கு முன்ன வந்தது தான் கப்பம் கட்டாத உழைப்பு. அதுக்கு அப்புறம் எல்லாம் கப்பம் கட்டின உழைப்பு” என்று அவன் சொல்ல,
புரியாமல் பார்த்தவளிடம் “ஆல் லீகல் பிசினெஸ் வித்து டேக்ஸ் மா” என்றான் அவனின் உடைந்த ஆங்கிலத்தில். ஏதோ ஒரு சினிமாவில் பார்த்து கேட்ட வாக்கியம் அவனுக்கு பொருந்தி போக அவன் பிடித்துக் கொண்டான் அதை. இப்போது அதை ஜெயந்தியிடம் சொல்ல வேறு செய்தான்.  
“பார்றா செஞ்ச வேலையை எப்படி நியாயப் படுத்துறான்” என்று தோன்ற அவனை பார்த்திருந்தாள், அவளின் கண்கள் பிடித்தமின்மையை திருப்தியின்மையை வெளிப்படுத்திய போதும் மருது பேசுவதை நிறுத்தவில்லை.
பிடித்திருந்த கையை ஜெயந்தி விலக்காததே அவனுக்கு போதுமானதாய் இருந்தது. ஆம்! அந்த க்ஷணத்தில் பயத்தில் பிடித்திருந்தாளா இல்லை கையை விட்டால் அவனை விட்டு விடுவோமோ என்று பிடித்திருந்தாளா யாராலும் வகையறுக்க முடியாது.     
“கொஞ்சம் பணவகையில செட்டிலான பின்ன வாழ்க்கையில செட்டிலாக முடிவெடுத்து எனக்கு நானே பொண்ணு பார்த்தேன். அப்போ கண்ல மாட்டினவ தான் நீ. அப்போ நான் உன்னை லகான்னு தான் கூப்பிடுவேன் மனசுக்குள்ள” என்றான் உற்சாகமாக.
“குதிரைக்கு லகான் கட்டின மாதிரி யாரையும் பார்க்க மாட்ட, அப்படியே நேரா போவ நேரா வருவ, என்னை பார்க்கவேயில்லை அதுதான் நான் உன்னையே பார்த்து இருந்தேன்” என்றான் ரசனையாய்.  
அவன் பேசுவதில் கவனம் வைத்திருந்தாலும் மனது அவளின் ஆராய்ச்சியில் தான் இருந்தது. கொலை கொள்ளை போதை மருந்து பஞ்சாயத்து அடி தடி இப்படி பலதும் நினைத்திருந்தவளுக்கு இந்த தங்கம் கடத்தல் என்பது ஒன்றுமே இல்லாததாய் தான் தோன்றியது.
“நீங்க யாரையும் சாகர வரை அடிச்சி இருக்கீங்களா?” என்றாள் சந்தேகக் குரலில்.
“ஹ ஹ” என்று சிரித்து விட்டவன், “நிறைய சினிமா பார்ப்ப போல, நான் எல்லாம் டம்மி பீஸ் மா, நான் தான் சொன்னேனே, அடிதடி இருக்கும், ஆனா அது என்னை பெருசா பாதிக்காதுன்னு தெரியற வரை தான். அதுவும் இப்போல்லாம் எதுவுமே செய்யறது இல்லை. அதான் நம்மகிட்ட பணம் இருக்கு, சொன்னா செய்ய ஆளுங்க இருக்காங்க, நான் எதுவுமே செய்யறதில்லை” 
“இந்த கடத்தல் தப்பில்லையா”
“தப்புன்னு நினைச்சா தப்பு, தப்பில்லைன்னு நினைச்சா தப்பில்லை, இந்த தப்பை எல்லோரும் தானே செய்யறாங்க. இதனால மட்டும் தான் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுமா என்ன? ஒட்டு வாங்கி ஜெயிச்சவனுங்க நம்மை சுரண்டும் போது, நான் சுரண்டக் கூடாதா? கார்பரேட் கம்பனிக்காரன் நம்மை எவ்வளவு ஏய்கறான், யார் கேட்கறா? ஒன்னுமில்லை ஒரு இடம் வாங்கறோம், வாங்கற விலைக்கு பத்திரம் வாங்கறோமா என்ன? இல்லையே, கவர்மென்ட் சொல்லியிருக்கறதை விட பத்து மடங்கு அதிகம் வாங்கறோம், ஆனா பத்திரம் அந்த விலைக்கு பதியறதில்லை?”
“ஓட்டு வாங்கவும் இலவசம், பொருள் விக்கவும் இலவசம், எல்லாம் வியாபார யுக்தின்னா, நான் செஞ்சதும் அப்படியே சொல்லிக்கலாம்” என்றான் கைதேர்ந்த வியாபாரியாய்.
“செய்யற தப்புக்கு கௌரவமா ஒரு பேர் குடுத்துக்கறீங்க?”
“நிச்சயமா, என்னை பொறுத்தவரை அது தப்பு கிடையாது. ஏன்னா சரக்கு என்னோடதில்லை. சரக்கை நான் விக்கவும் இல்லை. கை மாத்தி தான் விடுவேன். மாட்டுனா பரலோகம் தான், எவனுக்கும் சரியா சுட தெரியாது, காலுக்கு கீழ சுடுங்கடான்னா தலைக்கு தான் சுடுவானுங்க. அதையும் விட அவனுங்க சப்போர்ட் இல்லாம என்னால செஞ்சிருக்க முடியுமா என்ன?”
“அதெல்லாம் தொழில் ரகசியம் மா. என்னை பத்தி சொல்லலாம்! அதிகாரத்துல இருக்கிறவனை பத்தியெல்லாம் சொல்லக் கூடாது! அப்புறம் நம்மை ஒளிச்சிடுவானுங்க! பாயற இடத்துல பாயணும், பதுங்கற இடத்துல பதுங்கணும், சரக்கு மாத்தி விடறதுல மட்டும் தான் என்னோட வீர தீர சாகசம் எல்லாம்! பாக்கி இடத்துல எல்லாம் நான் அவனுங்களுக்கு அடங்கி நடக்கற புள்ள” என்று நீளமாய் பேசினான்.
அப்போதும் அவள் சரியல்ல என்ற பார்வை பார்த்து நிற்க,
“சும்மா தப்பு சொல்லக் கூடாது! நான் சம்பாதிக்கறதுக்கும் வரி கட்டுறேன், செலவு பண்றதுக்கும் வரி கட்டுறேன், அவ்வளவு ஏன் பேங்க்ல என் பணத்தை எடுத்தா அதுக்கு காசு பிடிக்கறாணுங்க”
“இதை யார் கேட்கறா? கேட்டாலும் என்ன பிரயோஜனம்? நான் சொல்றது ஒரு உதாரணம்! இப்படி எத்தனையோ? இப்படி எல்லாம் நடக்கும் போது நான் செஞ்சதும் தப்பு கிடையாது! ஏன்னா நான் செஞ்சது மனுஷங்க யாரையும் பாதிக்கலை! இந்திய அரசாங்கத்தை பொறுத்தவரை தப்பு!”
“ஆனா என்னைவிட பதவில இருக்குறவங்களும் ஓட்டு வாங்கி ஜெயிச்சவங்களும் அரசாங்க உத்தியோகத்துல இருக்குறவங்களும் அதிகம் செய்யறாங்க? ஏன் சந்தர்ப்பம் கிடைச்சா சாமான்யனும் செய்யறான், அப்படி தான் நானும் செஞ்சேன். ஆனா இப்போ எதுவும் இல்லை” என்று முடித்து பெருமூச்சு ஒன்றை விட்டவன்,
“இவ்வளவு தான் என் கதை, இதை கல்யாணத்துக்கு முன்னமே சொல்லணும்னு நினைச்சேன். ஆனா நீ கேட்கவும் விரும்பலை, எனக்கு சந்தர்ப்பமும் குடுக்கலை” என்று அவன் முடிக்க,
ஜெயந்தியின் முகம் முழுவதும் சிந்தனைகள், ஆனால் அவனின் சட்டையை பிடித்திருந்த இறுக்கம் குறையவில்லை.
எல்லாம் சொல்லி முடித்ததும் மருது படகை நிறுத்தி விட்டான்.
கரையிலிருந்து தூரம் வந்திருந்தார்கள், சுற்றி எங்கும் கும்மிருட்டு. இப்போது தானாய் ஜெயந்தியின் கைகள் அவனின் சட்டையை விட்டு அவனை பற்றிக் கொண்டது.
மருதுவோடான அவளின் வாழ்க்கையும் அப்படி தானே, அவளால் எங்கேயும் போக முடியாது. நடுக் கடலில் நிற்பது போல தான், தனியாகவும் நிற்க முடியாது, அவனை இறுக்கப் பற்றிய கைகள் அதனை தான் சொன்னது.      
ஆனால் அதையெல்லாம் உணரும் மனனிலையில் இல்லை மருது என்றும் சொல்லலாம், இல்லை எதையும் உணர விரும்பவில்லை என்றும் சொல்லலாம்.
சொல்லி முடித்தவன் ஆசுவாசமாகிவிட்டான், மனதில் இருந்த பாரம் இறங்க, மனம் லேசாகி விட்டது.
படகை நிறுத்தியிருந்தவன், அவளை இடையோடு அணைத்து பிடித்திருந்தான். “இந்த மாதிரி என் மனைவியை கூட்டிட்டு வரணும்னு என்னோட ரொம்ப நாள் ஆசை” என்றவன் அவளின் முகம் பார்க்க
அவளும் மருதுவை பார்த்திருந்தாள் என்ன மாதிரியான மனிதன் இவன் என்று.
“இந்த மாதிரி கடத்தல் எல்லாம் பண்ணினா தண்ணி, தம்மு, பொண்ணுங்க, இப்படி எல்லாம் இருக்குமே” என்றாள் தயங்கி தயங்கி.
“அக்மார்க் நல்ல பையன் மா, எனக்கு அந்த மாதிரி எந்த பழக்கமுமில்லை” என்று கர்வமாய் சொன்னவன், “என் வாழ்க்கையில வந்த முதல் பொண்ணு நீதான், ஏன்னா எனக்கு அம்மா கிடையாது, பாட்டிக்கு அப்போவே வயசாச்சு, ஆனா கடைசி பொண்ணு நீ கிடையாது” என்று நிறுத்தினான்.
ஜெயந்தி முகம் சுருக்கி பார்க்க “ஏன்னா எனக்கு பொண்ணை நீ பெத்துக் குடுக்கணும், அவளுக்கு பொண்ணு பொறக்கணும்” என்று அனுபவித்து பேச,  
ஜெயந்தி அதை கருத்தில் கொள்ளாமல், எல்லாம் விடுத்து, “நிஜமா பொண்ணுங்களே இல்லையா” என்றாள்.
“என்ன நான் பொய் சொல்றேனா, இல்லை என்னை பார்த்தா பொண்ணுங்க பின்னே போறவன் மாதிரி இருக்கா” என்று குரலில் லேசாய் கோபம் எட்டி பார்க்க,
“பார்த்தா கடத்தல் பண்ணினவன் மாதிரி கூட தான் தெரியலை” என்று ஜெயந்தி பட்டென்று சொல்லிவிட்டாள்.
மருதுவின் முகம் நொடியில் மாறிவிட்டது.
“இந்த நிஜம் உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியணும். வேற யாருக்கும் எப்போவும் தெரியக் கூடாது, தெரிஞ்சது” என்று மிரட்டலாய் முடிக்க,
“சொன்னா என்ன பண்ணுவ?” என்ற பதில் பார்வையை ஜெயந்தி பார்க்க,
மருது தீவிரமாய் அவளை பார்த்து சொன்னான்.
“இது என்னோட ரகசியம், சொல்லவா வேண்டாமான்னு சில சமயம் எனக்குள்ள தோணும் போதும், இது என்னோட ஜெயந்திக்கு தெரியாம இருக்கக் கூடாதுன்னு சொன்னேன். இதுக்கு மேல எப்படி இருக்கணும்ன்றது உன்னோட முடிவு” என்றான் அவளை நேர் பார்வை பார்த்து. அந்த பார்வை “நீ சொல்லமாட்டாய்” என்று நம்பிக்கையாய் பார்த்தது.
அந்த பார்வை அவளை என்னவோ செய்ய “சாரி” என்று அவள் வாய் வார்த்தையாய் சொல்ல,
“சாரியெல்லாம் எனக்கு வேண்டாம். நான் இதை வீர தீர சாகசம்னு சொன்னாலும், இது அப்படி தான், எந்த சாமான்யனாலும் சட்டுன்னு செய்ய முடியாதுன்னாலும், இது அப்படி கிடையாது. இது தப்பில்லைன்னு சொன்னாலும் தப்பில்லைன்னு ஆகிடாது. அதனால மறந்தும் இது உன் வாயில இருந்து வரக் கூடாது. இது என்னோட இல்லை நம்மோட ரகசியம் இனி” என்று அவன் நிறுத்த,
புரிந்தும் புரியாமல் சஞ்சலத்தோடே தலையை அணைத்து பக்கமும் உருட்டினாள்.
அவளின் சஞ்சலமான கண்களை நேருக்கு நேர் பார்த்தவன், “உனக்கு பிடிச்சாலும் சரி, பிடிக்கலைன்னாலும் சரி, என்னை விட்டுட்டு மட்டும் போயிடாதே” என்றான் ஆத்மார்த்தமான குரலில்.
எப்போதும் போல இதற்கு என்ன பதில் சொல்வது என்று ஜெயந்திக்கு தெரியவில்லை. ஆனால் அவனை எப்படி விட முடியும் விட்டால் அவளுக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது.  
அவனின் அணைப்பிற்குள் இருந்தவள் மெல்ல எம்பி அவனின் இதழ் மீது இதழ் பதிக்க, மருது அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் கைகளாலும் இதழ்களாலும்.

Advertisement