Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஒன்று :
இதோ வேம்புலியம்மன் கோவில் முன் நிறுத்தி BMW X5 விற்கு பூஜை போட்டுக் கொண்டு இருந்தனர் மருதுவும் ஜெயந்தியும். அவள் நேற்று இரவு சொல்லியிருக்க , இன்று காலையிலேயே ஷோ ரூமிற்கு கிளப்பியிருந்தான் அவளை.
நேற்று இரவு பேச்சுக்கள் பின் தொடரேவேயில்லை. மருதுவின் கேள்விக்கு ஜெயந்தி பதில் சொல்லவில்லை, அவளுக்கு உண்மையில் பதில் சொல்லத் தெரியவில்லை.
சில நிமிட அணைப்பு, சொல்லப் போனால் அவளின் பதிலுக்காய் மருது காத்திருக்க, அவளோ உன் அணைப்பே போதும் என்பது போல நின்றிருந்தாள்.
சில நேரங்களில் பொய் கூட அழகானது தானே, ஆனால் ஜெயந்தி பொய் கூட சொல்லவில்லை, அமைதி மட்டுமே!
மருதுவிற்கு மனம் முழுவதும் ஒரு ஏமாற்றம் சூழ்ந்த போதும் அவன் எதையும் காண்பித்து கொள்ளவில்லை. அவள் உணவு சமைக்க, பின்பு உண்டு, உறங்க வரும் வரை எந்த பேச்சுக்களும் இருவரிடமும் இல்லை.
உறங்க ஆரம்பிக்கும் முன் சில நொடி நின்றான், கட்டில் சேர்த்து போடலாம் என்று பார்வையால் வினவியபடி, அந்த பார்வைக்கு பதில் கொடுக்காமல் “நீங்க உங்களை பத்தி சொல்ல மாட்டீங்களா?” என்று ஜெயந்தி நின்றாள்.    
“சும்மா என்னை கோபப்படுத்தாதே பேசாம தூங்கு” என்றவன் எப்பொழுதும் போல அவன் ஒரு கட்டில் அவள் ஒரு கட்டில் என்று படுத்துக் கொண்டனர்.
உண்மையில் அவளுக்கு அந்த நேரம் அவனை பற்றி தெரிந்து கொள்ள ஒரு உந்துதல் தான், ஆனால் அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
எப்போதும் மருது விழித்திருப்பான், ஜெயந்தி உறங்குவாள். அன்று அதற்கு நேரெதிராய் மருது உறங்கிவிட, ஜெயந்தி விடியற் காலையில் தான் உறங்கினாள். அது தான் துணை இருக்கிறதே மொபைல், அதை நோண்டிக்கொண்டே படுத்திருந்தாள்.
இதோ காலையில் ஷோரூம் சென்று கார் பார்த்து முழு பணமும் மருது செலுத்த நினைக்க, “வேண்டாம் டியூவில் வாங்கலாம், அப்போது தான் என்னுடைய பங்களிப்பு இருக்கும், நான் வாங்கிக் கொடுத்தாய் இருக்க வேண்டும்” என்று அவள் சொல்ல மருது மறுக்கவில்லை.
ஜெயந்தி சொல்லியபடி செய்தவன், மாலை வந்து கார் எடுத்துக் கொள்வதாய் சொல்லி கிளம்பிவிட, அங்கே அவனை எதுவும் மறுத்துப் பேசாமல் வெளியில் வந்த பிறகு “ஏன், இப்போ எடுத்தா என்ன?” என்றவளிடம்,
“எனக்கு ஓட்டத் தெரியாதே, டிரைவர் வேண்டாமா?”  
“என்ன, கார் ஓட்ட தெரியாதா?” என்பது போல அவள் பார்க்க,
“நான் கார் வாங்கின பிறகு தான் கத்துக்கணும்னு கத்துக்கவேயில்லை, தனியா இருக்குறதுக்கு எதுக்கு கார் வாங்கணும்னு இதுவரை வாங்கலை, நீ ஜெர்மனில இருந்து வந்த பிறகு வாங்கலாம்னு நினைச்சிருந்தேன், பின்ன ஒரே பிரச்சனை, அதனால் கார் என்னோட ஞாபகத்துக்கே வரலை” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.
“சரி உங்களுக்கு ஓட்ட தெரியாது, ஆனா அதுக்கு எதுக்கு டிரைவர்?”  
புரியாமல் பார்த்தவனிடம் “எனக்கு தெரியும்?” என்றாள்.
“ம்ம், இவ்ளோ பெரிய கார் நீ ஓட்டுவியா?” என்றான் சந்தேகமாய்.
“தோடா, நான் படிச்சது ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், நான் வேலைல இருந்தது கார் கம்பனில, அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு?” என்று இடுப்பில் கை வைத்து கேட்டவளிடம்,
“சரி எடுத்துக்கலாம், நீ கார் எடுத்துட்டு வா, நான் பைக்ல வர்றேன்”  
அடுத்த நொடி, “நீங்க வர்ற மாதிரி இருந்தா நான் கார் எடுக்கறேன், இல்லை நீங்க டிரைவர் வெச்சு எடுத்துக்கங்க” என்று அவள் முறுக்கி நிற்க,
“சரி வா” என்று மருது தான் விட்டுக் கொடுக்கும்படி ஆகிற்று.
மனைவி காரோட்ட ஒரு பயணம் மருதுவிற்கு புதிதாய் இருந்தது. கர்வமாயும் இருந்தது. அழகான ஜெயந்தி, அவனுக்கான உறவாய் ஜெயந்தி, அவளுடன் வெளியே வருவது அவனுக்கு அத்தனை பிடித்தமாய் இருந்தது.    
புதிய கார் என்பதால் மிக கவனமாய் தான் ஜெயந்தி ஓட்டினாள். அந்த வகை கார்களை அவள் ஓட்டி இருந்ததால் அவளுக்கு எளிதாய் தான் இருந்தது, ஆனால் சென்னை டிராஃபிக் சற்று சிரமம் கொடுத்தது.
இதோ நேராய் வேம்புலியம்மன் கோவிலில் நின்றனர்.
யாரோ என்று எட்டி பார்த்த கலைச்செல்வி இவர்களை பார்த்ததும் பரபரப்பாய் அன்று வீட்டில் இருந்த கோபாலனிடம் “ஏங்க ஜெயந்தி வந்திருக்கா கோவில் கிட்ட” என்றார்.
இருவரும் வாசலில் நின்று மகளை பார்த்திருந்தனர். இதை மருதுவும் ஜெயந்தியும் கவனித்தே இருந்தனர்.    
பூஜை முடிந்ததும் “அப்பாவும் அம்மாவும் பார்த்துட்டே இருக்காங்க, நான் போய் ரெண்டு நிமிஷம் பேசிட்டு வந்துடட்டுமா?” என்று தவிப்பாய் ஜெயந்தி நிற்க, “போ” என்றான்.  
அவளும் வேகமாய் அங்கே விரைய, “எப்படி இருக்க ஜெயந்தி?” என்று கன்னம் தொட்டு கலைசெல்வி கலங்கியவராக கேட்டார்.
“மா, நான் நல்லா இருக்கேன் சரியா, நீ இவ்வளவு இமோஷனல் ஆகாதே” என்றவள்.
“மா, அவர் அங்கே நிக்கறார், அவர் வீட்டுக்கு வர்றாரோ இல்லையோ போய் வாங்க சொல்லிட்டு, அவரை வீட்டுக்கு கூப்பிடுங்க” என்று சொல்லிக் கொடுத்தாள்.
அதன்படி அவர்களும் செய்ய மருது எதுவும் முகம் திருப்பிக் கொள்ளவில்லை, “இன்னொரு நாள் வர்றேன்” என்று சொல்லிவிட்டான்.
அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
“வர்றேன்” என்று ஜெயந்தியும் சென்று விட, செல்லும் காரையே பார்த்து நின்றிருந்தார்கள்.
வீடு வந்து காரை நிறுத்திய பின் அதனை ஒரு சுற்று சுற்றி வந்தவள் “உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்றாள்.
“ம்ம்” என்று தலையசைப்பை கொடுத்தான் வெள்ளை நிற கார்,
“கலர்ஸ் இருந்தது, ஆனா எனக்கு இது தான் இஷ்டம், உங்களுக்கு கலர் பிடிச்சிருக்கு தானே, இல்லை நீங்க வேற கலர் வாங்க யோசிச்சு இருந்தீங்களா?” என்று படபடப்பாய் கேள்வியை அடுக்கினாள்.
“நான் கார் வாங்கவே யோசிக்கலை, இதுல கலர் யோசிப்பேனா, நல்லா இருக்கு, எனக்கு இது அதிகம் பரிச்சயமில்லை” என்றவனிடம்,
“இது ரொம்ப நல்லா இருக்கும் இந்த மாடல்” என்று விடாமல் காரை ஜெயந்தி விவரிக்க, விவரிக்கும் இதழ்களை அவளின் முக பாவனையை இப்படி தான் பார்த்திருந்தான் மருது. ஜெயந்தி சொன்ன ஒரு வார்த்தை கூட காதில் விழவில்லை.
ஆனால் ஜெயந்தியினது சல சல பேச்சு, அவனுக்கு இந்த மாடல் கார், அதன் கலர் எல்லாம் பிடிக்க வேண்டுமே என்று பெரிய கவலை, அதனால் அவள் அதன் சிறப்புக்களை பேசிக் கொண்டே செல்ல,      
“எனக்கு கார் பத்தி அதிகம் தெரியாது, நீ யோசிக்காமையா வாங்கணும்னு நினைச்சிருப்ப, எதுக்கு இவ்வளவு விளக்கம், நானே வாங்கணும்னு நினைச்சிருந்தா கூட உனக்கு பிடிச்சதை தான் வாங்கியிருப்பேன், மெதுவா கார் பத்தி ஒன்னொன்னா கத்துக் குடு” என்று அவன் சொல்ல,
அடுத்த நொடி “அப்போ ஃபோன் கத்துக் கொடுக்கட்டுமா, மாத்திக்கறீங்களா?” என்றாள் ஆர்வமாய்.  
அவன் பதில் சொல்லும் முன்னமே “உங்க ஃபோன் குடுங்க” என்று அதனை வாங்கி சிட்டாய் அவள் வீட்டின் உள் விரைந்து விட்டாள்.
அவள் ஓடின வேகத்திற்கு அவளின் துப்பட்டா பறந்து கீழே விழ அதனை ஒரு புன்னகையோடே எடுத்துக் கொண்டு உள்ளே போனான் மருது.
அவளோ அதற்குள் அந்த மொபைலை எடுத்து சிம் மாற்ற ஆரம்பித்து இருந்தாள். எப்போதும் திறந்திருக்கும் வீட்டின் கதவை மருது சாற்றியதை ஜெயந்தி கவனிக்கவேயில்லை. 
மாற்றியவள் மொபைலில் ஒரு கண் வைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்த அவனை பார்த்து பக்கத்தில் அமருமாறு காண்பிக்க, ஒன்றும் சொல்லாமல் சோஃபாவில் அவளின் பக்கத்தில் அமர்ந்தான்.
“இப்போ என்னோட மொபைல்ல இருந்து கால் பண்றேன், நீங்க எடுத்து பேசுங்க, ஜஸ்ட் பேச மட்டும் செய்ங்க. அப்புறம் எப்படி கால் பண்றதுன்னு சொல்றேன், இப்போதைக்கு அது போதும் பின்ன ஒன்னொன்னா கத்துக்கலாம்” என்று சொல்லி முடிக்கக் கூட இல்லை,
தன் கையினால் அவளின் முக தாடையை இறுக்கப் பற்றியிருந்தான் மருது, “மொதல்ல நீ என்னை கத்துக்கோ, அப்புறம் எல்லாம் நான் கத்துக்கறேன்” என்று சொன்னவன், மறுகையால் அவளை வளைத்து பிடிக்க, அவள் மேல் முற்றிலும் சாய்ந்த நிலை தான்.
சில நேரங்களில் பேசக் கூடாது, அனுபவிக்க மட்டுமே செய்ய வேண்டும் மருதுவிற்கும் தெரியவில்லை ஜெயந்திக்கும் தெரியவில்லை. இரண்டு வருடங்கள் ஓடி அதன் பின் சில மாதங்கள் முடிந்து ஒரு முத்தம் கூட பஞ்சமாகிப் போன நிலையில் இன்னுமே பேச்சை மருது துவங்க, ஜெயந்தி முடித்தாள்.   
“என்ன கத்துக்கிறியா?” என்றான் ஆழ்ந்த கணமான குரலில்.
இன்னுமே இன்னுமே சில விஷயங்களை ஒத்துக் கொள்ள முடியாத ஜெயந்தி பேசிவிட்டாள். அதுவும் ஊரிலிருந்த வந்த தினம் அவனை அணைத்து படுக்க, மருது ஜெயந்தியை தள்ளி விட்டு, வீட்டை விட்டு எங்கோ சென்றது, அதை நினைக்கும் நேரமெல்லாம் மனது வலித்தது.
“நான் எப்பவுமே எதையுமே கத்துக்க மாட்டேன்னு சொன்னதில்லை, நீங்க தான் உங்களுக்கு இஷ்டமான போது கத்துக் குடுக்கறீங்க, இல்லைன்னா விட்டுடறீங்க. உங்களுக்கு எப்போ இஷ்டமோ அப்போ கத்துக் குடுக்கற மாதிரி, எனக்கு எப்போல்லாம் இஷ்டமோ அப்போ நானும் கத்துக்கணும், அந்த உரிமை நீங்க எனக்கு இன்னும் குடுக்கவேயில்லை” என்றாள் அவனை தீர்க்கமாய் பார்த்து.
முதலில் அவளின் பதிலில் அசந்து நின்று விட்டான், என்ன பதில் சொல்வது என்று கூட தெரியவில்லை.
இன்னும் அவளின் மேல் நன்றாய் சாய்ந்து “எனக்கு இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை” என்று உண்மையாய் சொல்ல,
“இது பதில் சொல்ற விஷயமில்லை, நீங்களும் நானும் வாழற வாழ்க்கை நமக்கு சொல்லப் போகும் விஷயம்” என்றாள் அவனின் கண்களையே பார்த்து.
“நான் தான் சொல்றேனே, எல்லா விஷயத்தையும் தூக்கி தூர வை, இப்போவே எனக்கு முப்பத்தி ஒன்னு வயசு. இன்னும் எத்தனை நாள் தனியா இருக்கிறது, ஒரு மூணு குழந்தையாவது நாம பெத்துக்கணும். எனக்கு பெரிய குடும்பம் வேணும், வீடு நிறைய ஆளுங்க வேணும்”
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், நீ என் மனைவி, ஆனா உன்னோடயே என்னால அட்ஜஸ்ட் பண்ண முடியலை, பயமா இருக்கு, ஒருவேளை நான் தான் தப்போ, என்னால யாரோடவும் இருக்க முடியாதோன்னு”
“எப்பவுமே தனியா இருக்கிறது, என்னை என்னவோ பண்ணுது. வாழ்கையில தோத்துட்டு இருக்கனோன்னு தோணுது, சில சமயம் தனியாவே செத்துப் போயிடுவனோன்னு தோணுது” என்று நன்றாய் பேச ஆரம்பித்தவன் கலங்கிய குரலில் முடிக்க,
அவ்வளவு தான் ஜெயந்திக்கு அப்படி ஒரு கோபம் பொங்க, எப்படி தான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ அவளின் மீதிருந்த அவனை ஒரே தள்ளாய் தள்ளி எழுந்து நின்றிருந்தாள்.
மலங்க மலங்க தான் விழித்தான் மருது, அவனின் கை பொம்மையை யாரோ பிடுங்கி கொண்டது போல, அந்த நொடி மருது என்ற மனிதன் மிகவும் நெகிழ்ந்திருந்தான், அவனின் நெடு நாளைய மனவுளைச்சல் வார்த்தை வடிவம் பெற்று வந்திருந்தன.
ஆனால் மிக சில நொடிகளே மீண்டும் தேறி இருந்தான்.
இப்போது தள்ளி விட்ட ஜெயந்திக்கு “என்ன செய்கை இது?” என்ற பதில் பார்வையை கொடுத்தான்.
ஜெயந்திக்கு கண் மண் தெரியாத கோபம்.
“எந்திரிங்க” என்றாள் அவனை பார்த்து சிறிதும் தயங்காது அஞ்சாது.
அவன் மௌனமாய் எழுந்து நின்ற போதும் மனம் முரண்டி தான் நின்றது.  
“வாங்க” என்று பூஜையறை நோக்கி நடந்தாள், மருது அவளின் பின் செல்ல, பூஜை அறைக்குள் நின்றவள், “நூறு தோப்புக்கரணம் போடுங்க” என்றாள்.
“என்ன?” என்று மருது அதிர்ந்து விழிக்க,
“போடுங்க, இப்படி பேசுவீங்களா? சாமி கிட்ட அப்படி எல்லாம் எதுவும் நடக்கக் கூடாதுன்னு வேண்டிகிட்டு போடுங்க, நானே பயத்துல இருக்கேன். இதுல இப்படி எல்லாம் பேசி வெச்சா, போடுங்க, இல்லை நீங்க போடலைன்னா உங்களுக்காக நான் போடறேன்” என்று அவள் போட ஆயத்தமாக,
“விடு” என்றவன், அவன் போட ஆரம்பித்தான். நூறு எண்ணிக்கை முடிந்ததும் கடவுளிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
மருது தோப்புக்கரணம் போட்டாலும் மருதுவின் முக இறுக்கம் அப்படி ஒரு பதட்டத்தை பயத்தை ஜெயந்திக்கு கொடுத்தது.
“அவனுக்கு பதிலா நீ போட மாட்டியா? நீ யார் அவனை போட சொல்ல, உனக்கெல்லாம் எவ்வளவு பட்டாலும் புத்தி வராது, திரும்ப உன்னை அடிக்க போறான், இல்லை வீட்டை விட்டு துரத்த போறான்” என்று நினைத்து பயத்தோடு பார்த்திருந்தாள்.
போட்டு முடித்தவன் ஜெயந்தியின் முகத்தை பார்க்க “சாரி, யோசிக்காம சொல்லிட்டேன், கோபம் வேண்டாம், நான் கூட போட்டிருக்கலாம், சாரி சாரி” என்று மன்னிப்பை வேண்ட,
ஜெயந்தியின் முகத்தில் இருந்த பயமும் பதட்டமும் என்னவோ வாழ்க்கையில் மோசமாய் தோற்றுக் கொண்டிருக்கும் உணர்வை தான் கொடுத்தது.
மருதுவின் முக இறுக்கம் மேலும் கூடுவதை உணர்ந்தவள், “ரொம்ப கோபம் வந்தா அடிக்க கூட செஞ்சிக்கோங்க, ஆனா வீட்டை விட்டு எல்லாம் போக சொல்ல வேண்டாம். இனிமே இப்படி பேச மாட்டேன், எதுவும் சொல்ல மாட்டேன், என்னாலையும் தனியா இருக்க முடியாது, உங்களையும் தனியா விடமாட்டேன்” என்று மேலும் மேலும் தன்னை புரிய வைக்கும் நோக்கில் பதட்டமாய் பேசினாள்.   
மருதுவிற்கு “ஐயோ” என்றானது, சூழலின் கணம் தாளாமல் “நான் ஸ்டோர்ஸ் போயிட்டு வர்றேன்” என்று அவன் கிளம்பிவிட,
ஜெயந்தி செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றாள்!        
     
         
     

Advertisement