Advertisement

அத்தியாயம் முப்பது :
மருதுவும் கமலனும் உள்ளே வருவது தெரிந்து, வேகமாய் படுக்கையறை உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். இப்போது கமலனை பார்க்கும் மனநிலையில் இல்லை.  
மனது முழுவதும் மருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் மட்டுமே! சினிமாவில் வேண்டுமென்றால் இந்த ரௌடியிசம் ஹீரோவின் செயலாக பார்க்கப்படலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது தானே!
அவனை பற்றி எல்லாம் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இப்போது தான் வந்தது. ஆனால் தெரியாமல் அடுத்த வேலை செய்ய முடியும் போலத் தோன்றவில்லை.
“உன் கணவன், ஆனால் அவனை பற்றி எதுவும் உனக்கு தெரியவில்லை. எதனைக் கண்டு ஓடினாய், அவன் சொல்ல வந்த போது ஏன் எதுவும் தெரிந்து கொள்ளவில்லை. ஏன் அவனை தவிர்த்தாய். நீ செய்தது எந்த வகையிலும் சரி கிடையாது” என்ற எண்ணம் வந்து விட அவளின் செயலே அவளை நிந்தித்தது.
“சரியோ தவறோ எதிர்கொண்டு இருக்க வேண்டும், ஒரு வேளை தெரிந்து விட்டால் அவனோடு குடும்பம் நடத்த முடியாதோ? அவனோடு திருமணதிற்கு முடியாதோ? என்று நினைத்தது முட்டாள் தனத்தின் உச்சம். படிப்பை படித்த அளவிற்கு வாழ்க்கையை நீ படிக்கவில்லை, இதில் நீ பெரிய ஜீரோ” என்று மனது ஏகத்திற்கும் அவளை சாடியது.
“இவ்வளவு நாளா நீ எங்க போயிருந்த, உன் வேலையை பார். நான் தானே தப்பு செஞ்சேன். நானே சரி பண்ணிக்கறேன், நீ போடி, எனக்கு இன்னும் மனக் கஷ்டம் கொடுக்காதே” என்று திட்டி அதனை ஒதுக்கி வைத்தவள், கண்மூடிக் கொண்டாள்.       
கமலன் உள்ளே வந்து “தேங்க்ஸ் மாமா” என பல முறை சொல்ல,
“டேய் போதும்டா” என்றவன் அவனின் முன்னேயே விஷாலிற்கு அழைத்து, “கமலன் வருவான், அவன் முன்னே, என்ன வேலை செஞ்சானோ அதை அப்படியே செய்ய சொல்லிடு” என்றான் மருது.
“ஸ்டோர்ஸ் போயிடுடா” என்று கமலனை பார்த்து, அவன் யோசித்து நின்றான்.
“ரொம்ப யோசிக்காத ஸ்டோர்ஸ் கிளம்புடா” என்றான், அது உரிமையோடு கூடிய ஒரு அதட்டல்.
“அக்கா இல்லை” என்று மருதுவிடம் கேட்க,
“ஆம், எங்கே அவள்?” என்று பார்வையால் துலாவியவன்,
“எங்கன்னு பார்க்கறேன்” என்று சொல்லி அவன் சமையலறை தேடி பின் படுக்கையறை வந்தான்.
அங்கே பார்த்தது படுத்திருந்த ஜெயந்தியை தான்.  
“என்ன ஜெயந்தி படுத்திருக்க?”  
“ஏன் படுக்கக் கூடாதா?” என்றாள் அவள் பட்டென்று.
“படுக்கலாமே” என்றவன், “இப்போ தான தூங்கி எழுந்த அதான் கேட்டேன்”
“எனக்கு கமலனை பார்க்கப் பிடிக்கலை, கேட்டா தூங்கறேன் சொல்லுங்க” என்று கண்களை மூடிக் கொள்ள, இந்த பாவனையில் பேசும் ஜெயந்தி மருதுவிற்கு புதியவள்.
எதுவும் பேசாமல் வெளியே சென்றவன் “தூங்கறாடா, ஒரு குரல் கொடுத்தேன் எழுந்துக்கலை” என்று சமாளித்தான்.
“மாமா அக்கா எழ மாட்டா, கும்பகர்னி அவ தூங்கறதுல” என்று சொல்லி அவன் கிளம்ப,
“எங்கடா போற” என்ற மருதுவிடம்,
“வீட்டுக்கு போய் குளிச்சிட்டு உடனே கிளம்பிடுவேன்”
“சரி” என்று மருது தலையாட்டினான்.
உள்ளே வந்து “அவன் கிளம்பிட்டான்” என்ற பிறகே எழுந்து வெளியே வந்தாள்.
“இப்போ அவன் ஸ்டோர்ஸ் போறான், அங்கே அவனை பார்ப்பியே” என்றான்.
மருது இயல்பாக பேசுவதை உணர்ந்தாள், “இங்க அவன் என்னை பார்க்க வரலை, என்கிட்டே எதுவும் பேசிக்கலை, அதனால எனக்கு அவனை பார்க்கப் பிடிக்கலை” என்று முடித்துக் கொண்டாள் மேலே பேசவேண்டாம் என்ற பாவனையோடு.
முறுக்கி பேசும் அவளை தான் பார்த்திருந்தான். பட்டென்று பேசும் அவளின் இதழ்களை பாடாய்படுத்த ஒரு உந்துதல் கிளம்பியது. ஆம்! நேற்று இரவில் இருந்தே ஜெயந்தியின் அண்மையை உடல் வெகுவாக விரும்பியது.
எவ்வளவு நாள் தான் அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பது. ஒரே கட்டிலாய் இருந்திருந்தால் நேற்று நிச்சயம் நெருங்கியிருப்பான். தனி தனி கட்டில் அதுவும் அவன் செய்கையாக வேறாகிப் போக, முயன்று மனதை நிலைப்படுத்தினான்.
நேற்றைய அவனின் நிலையினால் இன்று பேச்சுக்கள் சற்று இயல்பாயும் உரிமையாயும் ஜெயந்தியிடம் வந்தன.
அப்போது விஷால் வந்தான் மருதுவிடம் கையெழுத்து வாங்க, ஜெயந்தி அவனை பார்க்கவுமே, “எப்போ வாடகை வாங்கி உங்க ஃபிரண்ட் கிட்ட குடுக்க போறீங்க” என்று சற்று கோபமாய் கேட்டவள், “அவங்க நமக்கு ஹெல்ப் பண்ணியிருக்காங்க, அப்போ நாம கரக்டா குடுத்துடணும்” 
விஷால் யோசிக்கவேயில்லை “இவருக்கு தான் நீங்க குடுக்கணும்” என்று விட்டான் உடனே, பின்னே பார்க்கும் போதெல்லாம் ஜெயந்தி கேட்டுக் கொண்டே இருந்தால் அவனும் தான் என்ன செய்வான்.
“அட, இவனை” என்று மருது நினைத்த போதும், ஜெயந்தியை தான் பார்த்திருந்தான்.   
“இவருக்கு ஏன் குடுக்கணும், இவர் முன்னமே உங்க ஃபிரண்ட்க்கு வாடகை குடுத்துட்டரா?”
அவளின் அறியாமையில் புன்னகை எட்டிப் பார்த்தது மருதுவிற்கு.  
“ம்ம், அப்படியும் சொல்லலாம், இல்லை அந்த வீடே அவரோடதுன்னு கூட சொல்லலாம்” என விஷால் சொல்ல,
“என்ன?” என்று அதிர்ந்து ஜெயந்தி மருதுவை பார்த்தாள்.
“எதுக்கு இவ்வளவு ஷாக் மேம், அங்க இன்னும் ஒரு வீடு கூட அண்ணனுக்கு இருக்கு” என்றான்.
“ஓஹ்” என்றவளின் குரலில் இருந்த பாவனை மருதுவை அவளையே பார்க்க வைத்தது.
ஏதோ ஒரு வகையில் தன்னை மருது விடவில்லை என்ற ஆசுவாசம் இருந்த போதும், “இத்தனை சொத்துக்களா எப்படி? எப்படி? ஒரு டீ மாஸ்டரினால் இவ்வளவு சம்பாதிக்க முடியும். நிச்சயம் நேர் வழி அல்ல” என்று புரியவும்,
மனது மிக மிக ஏமாற்றமாய் உணர்ந்தது.
முன்னறையில் இருந்து உணவறைக்கு சென்றவள், அங்கே உணவு மேஜை முன் அமர்ந்து கொண்டாள்.   
விஷாலிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஏதோ எடுப்பது போல உள்ளே வந்து ஜெயந்தியை பார்த்து சென்றான் மருது.
அவளின் முகம் தீவிர யோசனையை காண்பித்தது.
“என்ன பிரச்சனை இப்போ?” என்ற யோசனை மருதுவிற்கு ஓடிய போதும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை மருது.
விஷாலை பேசி அனுப்பியவன் அவன் செல்லும்முன் சொல்லியிருந்தான், “இன்னைக்கு போய் அங்க இருக்குற ஜெயந்தி பொருள் எல்லாம் எடுத்துட்டு வந்துடுவோம். அப்புறம் சொல்றேன், நாளைக்கு ஆள் வெச்சு சுத்தம் பண்ணிட்டு வாடைக்கு விட்டுக்கலாம்” என்று.
உள்ளே வந்தவன் “அங்க இருக்குற வீட்டுக்கு போய் உன்னோட சாமான் எல்லாம் எடுத்துட்டு வரலாமா?” என்று கேட்க,  
“அது உங்க வீடுன்னு அப்போதான் சொல்லலை, இப்போ நான் இங்க வந்த பிறகும் ஏன் சொல்லலை?” என்றாள் பதில் கேள்வியாக.
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்து “இன்னும் நாம சரியா பேசிக்கலை, பேசியிருந்தா சொல்லியிருப்பேன்” என்று மருது சொல்ல,
“எப்போ பேசிக்குவோம்” என்றாள் அடுத்த நொடி.
இதற்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்து தான் நின்றான் மருது, பின்னே “அவளிடம் நீ பேசி நான் பேசாமையா இருந்தேன், இல்லையே. நானும் உன்கிட்ட பேசிக்கிட்டு தானே இருந்தேன். சரி விடு, இப்போ அங்க போயிட்டு வரலாம்” என்று அவனின் பைக்கை எடுக்க செல்ல,
இவளும் பின்னோடு சென்றாள். மனது முழுவதும் யோசனை, “என்ன பதில் இது எனக்கு புரியவேயில்லையே”.
பைக்கில் ஏறும் போது தான் நினைவு வர, “இங்கே வந்த நாளாக சூழல் சரியில்லை, சொல்ல முடியவில்லை. ஆனால் இப்போது சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம், இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருந்தன”
திரும்ப வரும் போது சொல்லிவிட வேண்டும் என்று தோன்ற அதே யோசனை அதே சிந்தனை.  
மருதுவின் புல்லட் மிதமான வேகத்தில் சென்ற போதும் வீடு விரைவாய் வந்து விட்டது.
வீடு போட்டது போட்டபடி இருக்க, கிட்ட தட்ட பதினைந்து நாட்கள் உபயோகப்படுத்தாமல் இருக்க, பிரிட்ஜில் இருந்ததை எல்லாம் ஒரு பையில் எடுத்துப் போட ஆரம்பித்தாள் குப்பையில் போடுவதற்காக.
பார்த்திருந்தவன் அவளின் கையில் இருந்து அதை வாங்கி வைத்து, “உன்னோட சாமான் மட்டும் எடுத்துக்கோ, இதெல்லாம் ஆள் வந்து சுத்தம் செஞ்சிக்குவாங்க” என்று விட்டான்.  
அங்கிருந்த அவளின் உடைகள் மட்டும் எடுத்து வைத்தாள். ஆனால் எடுத்துக் கொள்ள அங்கே பேக் போல எதுவுமில்லை.
உடனே விஷாலை அழைத்து பை கொடுத்து விடச் சொன்னவன் சோபாவில் அமர, ஜெயந்தியும் அமர்ந்தாள்.
அவன் ஃபோன் பேசும் போது அவனின் அலைபேசியை பார்த்திருந்தவள், அவன் அன்று தான் இயல்பாய் பேசியிருக்கவும்,  அவளின் நெடு நாளைய சந்தேகமான “நீங்க ஏன் வேற மொபைல் வாங்கலை, இந்த பட்டன் ஃபோன் வெச்சிருக்கீங்க” என்று கேட்டாள்.
அவளையே பார்த்திருந்தவன் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து பின்பு சொல்லியே விட்டான். “தமிழ் சிரமப்பட்டு படிப்பேன், ஆனா எழுத வராது”  
“அதுக்கும் மொபைல்கும் என்ன சம்மந்தம்?” என்றாள் வெகு இயல்பாக. அதில் அவனை கீழாக நினைக்கும் பாவனையோ இல்லை இன்னும் அவன் நாலாவது பாஸ் அஞ்சாவது பெயிலிற்கு வருந்தும் முக பாவனையோ கிஞ்சித்தும் இல்லை. ஜெயந்தியின் முகத்தை ஆராய்ந்து பார்த்தவனுக்கு புரிந்தது.     
“புதுசா வாங்கினா எனக்கு எழுத வராதுன்னு நான் எனக்கு அந்த ஃபோன் உபயோகிக்க கத்து கொடுக்கறவன் கிட்ட காமிக்கணும். எப்படியும் ரொம்ப சிலருக்கு தெரியும், ஆனா அதை நானா காண்பிக்க முடியாது இல்லையா?”
“நமக்கு ஒரு விஷயம் தெரியலைன்னா அதை கத்துக்கணும். அதை தெரிஞ்சிக்காமையே விடக் கூடாது” என்று பெரிய மனுஷியாய் அவனிடம் பேச,
மெலிதாய் புன்னகைத்தவன் “அப்படியும் சொல்லலாம். ஆனா சில விஷயம் நமக்கு தெரியலைன்றது அடுத்தவனுக்கு தெரியவே விடக் கூடாது, நமக்கு தெரியாத விஷயத்தை கத்துக்கறதுல தப்பில்லை. ஆனா இந்த விஷயம் அதாவது எனக்கு எழுத படிக்க தெரியாதுன்னு யாருக்காவது தெரிஞ்சா என்னை ஏமாத்த வாய்ப்பிருக்கு. அதுக்கு நான் இடம் குடுக்க கூடாது இல்லையா?” என்றான் தெளிவாய்.
அவன் சொல்வது நூற்றுக்கு நூறு சரி தானே!
“அப்போ என்ன பண்ண அதை?” என்றாள் சற்று முகம் சுருக்கி.  
“எதை?” என்றான் புரியாது.
“நான் உங்களுக்கு வாங்கின ஃபோனை”
இது அவனிற்கு புது செய்தி தானே!
“எப்போ வாங்கின?”
“நான் ஜெர்மனில வாங்கினேன்” என்று ஜெயந்தி சொல்லும் போதே மருதுவின் முகம் மலர்ந்தது, மலர்ச்சியை மறைக்க முற்பட்டாலும் முடியவில்லை.
முதல் முறை அவனுக்கு யாரோ ஒருவர் வாங்கிக் கொடுக்கிறார், ஆம்! எல்லாம் அவனுக்கு அவனே தானே, திருமணத்தின் போதும் சீர் வரிசை வைத்தார்கள் தான். ஆனால் மாப்பிள்ளைக்கு என்று எதுவும் இவன் வாங்கிக் கொள்ளவில்லையே, ஜெயந்தி அவனை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாத கோபத்தில் வாங்கும் பழக்கம் இல்லை என்று சொல்லி விட்டானே.   
ஆம்! இதுவரை யாரும் எதுவும் வாங்கிக் கொடுத்தது இல்லை! அவனின் வசதி வாய்ப்பிற்கு இது ஒன்றுமே இல்லை தான். ஆனாலும் மனதிற்கு அவ்வளவு ஒரு மகிழ்வை கொடுத்தது. மருதுவிற்கு மனதை மயங்க வைக்கும் ஒரு நிலை.  
ஒன்றுமற்ற ஒரு சிறு செய்கை ஆனால் அவன் மனம் முழுவதும் மலர்ந்து மனம் வீசியது.   

Advertisement