Advertisement

அத்தியாயம் மூன்று :

திருமணம் அவளோடு நடக்க இருக்கின்றதோ இல்லையோ சிநேகிதம் பண்ண வேண்டும், பேச வேண்டும், அவளின் துயர் எதுவென்றாலும் துடைக்க வேண்டும் போல தோன்ற, அந்த ஆர்வத்தை கட்டுப் படுத்த முடியாமல்… என்ன செய்வது என்றும் தெரியாமல்… யாரிடமும் இதனை பற்றி பேசவும் முடியாமல் திணறி விட்டான்.

ஒரு சின்ன இனுக்கு யாருக்கு தெரிந்தால் கூட “அண்ணிடா” என்று ஏரியா முழுக்க பரப்பி விடுவர்.

தன்னால் ஒரு பெண்ணின் பெயர் அடிபடுவதை விரும்பவில்லை. இந்த சில நல்ல குணங்களுக்காக தான் அவனின் கடத்தல் தொழிலில் கூட அவன் மாட்டவில்லையோ? 

காலையில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வந்து அமர்ந்தான். ஆரம்பித்து ஒரு வருடம் தான் ஆகின்றது மருது ஸ்டோர்ஸ்.

பெயருக்கு ஒரு தொழில் வைத்து அமர்ந்தது தான். பெரிதாக ஆர்வமில்லை. அவனுக்கு தெரிந்த இரு தொழில்கள், ஒன்று டீக்கடை இன்னொன்று கடல் கடந்த வாணிபம். ஹ ஹ கடத்தலுக்கு அவன் கொடுத்துக் கொண்டிருக்கும் பெயர்.  

இவ்வளவு சொத்துகளை வைத்துக் கொண்டு டீக்கடை வைக்க முடியாது. கடல் கடந்த வாணிபம் விட்டாயிற்று.

அவன் பெரிதாக ஆர்வமில்லாமல் வைத்தாலும், நம்ம அண்ணன் கடை என்றோ… இல்லை இங்கேயும் அவனுக்கு நேரம் நன்றாய் இருந்ததோ என்னவோ… நல்ல வியாபாரம்.

அவன் படிக்காவிட்டால் என்ன? படித்தவர்களை அருகில் வைத்திருந்தான். “விஷால்” என்றழைக்க “அண்ணா” என்று வந்து நின்றான் ஒருவன். எல்லோருமே மருதுவை “அண்ணா” என்று தான் அழைப்பர்.

இதற்கு விஷால் அவனை விட ஒரு வயது மூத்தவன், எம் பீ ஏ பட்டதாரி. ஆனாலும் வேலை டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் மேனேஜர். அது மட்டுமன்று இன்னும் மருது சொல்லும் வேலைகளை செய்வான். அதனால் அவனுக்கு நல்ல சம்பளம் கூட…

“சாயந்தரம் மட்டும் வேலைக்கு வர்ற மாதிரி பசங்களை பார்க்க சொன்னேனே… பார்த்தீங்களா?”

“இல்லைண்ணா சொல்லி வெச்சிருக்கேன், இன்னும் வரலை” என்றான்.

அங்கே மொத்தமாக எழு பேர் வேலை பார்த்தனர், மூன்று ஆண்கள் நான்கு பெண்கள். “பொண்ணுங்களை ஆறு மணிக்கு அனுப்பிடணும், சாயந்தரம் ரெண்டு பசங்களை வேலைக்கு வைங்க, மொத்தமா அப்போ அஞ்சு பேர் இருப்பீங்க. நீங்க இங்க பில் போட இருந்தாக் கூட நாலு பேர் சமாளிக்கலாம்”

“சாயந்தரம் கூட்டம் அதிகமா வரும், அப்போ ஆளுங்க இல்லைன்னா கஷ்டம்”

“அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது, பொண்ணுங்களை ஆறு மணிக்கு அனுப்பிடுங்க” என்றான் கட்டளை போல.

“சரிண்ணா” என்று விட்டான்.

இரண்டு பெண்கள் அவனிடம் நேரடியாக கேட்டிருந்தனர். “ண்ணா, ஆறுமணிக்கு விட்டா புள்ளைங்களைப் பார்க்க சௌகரியமா இருக்கும்” என்று.

“சரி” என்று விட்டான்.

அவர்கள் கேட்டது அவர்களுக்கு சாதாரண விஷயம்.

ஆனால் இவனுக்கு… பார்ப்பதற்கு யாருமன்றி வளர்ந்தவன் அல்லவா. “பத்து மணில இருந்து ஆறு மணி வரைக்கும் இருங்க” என்று விட்டான்.

கேட்டவர்களை மட்டுமல்ல எல்லா பெண்களையும் அதை போலவே வரச் சொன்னான். அதற்காக ஆண்களுக்கு அநியாயம் என்பது போல கிடையாது அவர்களுக்கு இரண்டு மணியில் இருந்து பத்து மணி வரை.

மாலை வேளைகளில் மூன்று பேர் சமாளிப்பது சிரமம் என்பதால் தான் மாலை வேளைகளில் மட்டும் ஆட்கள் பார்க்க சொன்னான்.

“சொல்லி எதுக்கு வைக்கறீங்க, போர்ட் மாட்டுங்க ஆள் தேவைன்னு” என்று சொல்ல…

அன்றே போர்ட் மாட்டப் பட… மாலையில் அந்த சாலையில் நடந்த ஜெயந்தியின் கண்களில் அது பட்டது.

யோசிக்கவேயில்லை உள்ளே புகுந்து விட்டாள் விவரம் கேட்க…

காலையில் இருந்து பண விபரம் மண்டைக்குள் ஓடியது. ஏதாவது செய்ய மனது நினைக்க இதோ…

மறந்தே விட்டாள் அவள் இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் போக வேண்டும் என்பதை.

உள்ளே செல்ல பில்லில் விஷால் அமர்ந்திருந்தவன், இவள் சென்று நிற்கவும், “பொருட்களை கொடு” என்பது போல கை நீட்டினான்.

“சாமான் இல்லை, முன்னாடி போர்ட் மாட்டியிருந்தது அதை பார்த்துட்டு வந்தேன்” என்றாள்.

மருது அங்கே தான் இருந்தான். ஒரு சிறிய தடுப்பறை இருக்க அதன் உள் அமர்ந்திருந்தான்.

இவளை பார்த்ததுமே கண்கள் விரிய, சுற்றி யாரோ லலலலா பாடினர்.

“வேலைக்கா?” என்று விஷால் கேட்க,

“ஆமாம்” என்று சொன்னாள்.

“எங்களுக்கு பொண்ணுங்க வேண்டாம், பசங்க தான் வேண்டும்” என்று சொல்ல..

“ம்ம் சரி” என்று திரும்பிப் போனவளின் முகம் சுருங்கி விட்டது.

அதற்குள் விஷாலை தொலைபேசியில் அழைத்த மருது – “அந்த பொண்ணு எதுக்கு வந்தது?”  

“வேலை கேட்டு ண்ணா” என்று சொல்லு போதே ஜெயந்தி வெளியில் நடக்க ஆரம்பித்தாள்.

“கூப்பிடு அவங்களை” என்றான் அவசரமாக.

“ண்ணா போயிட்டாங்க” என்றான். நினைத்திருந்தால் உடனே அழைத்திருக்கலாம். ஆனால் அவனின் டக்கு மிகவும் மெதுவாய் இருக்க அவள் வெளியில் நடக்க ஆரம்பித்து இருந்தாள். அது மருதுவிற்கு கடுப்பைக் கொடுத்தது.   

“இப்ப அவங்க இங்க வரணும், இல்லை நீ வேலையை விட்டு போயிடணும்” என்று மருது கோபமாக சொல்ல..   

அவனின் கோபத்தை கைபேசியிலேயே உணர்ந்தவன், வேகமாக வெளியில் சென்று “மேம்” என்றழைக்க…

அவளா திரும்புவாள்.. அவள் அப்போதும் போல செல்ல… ஓடிச் சென்று தான் விஷால் அவள் முன் நின்றான்.

“மேம், அண்ணா கூப்பிடறாங்க” என்றவனை ஜெயந்தி புரியாமல் பார்த்து நிற்கவும்…

“எங்க முதலாளி கூப்பிடறார்” என்றான் அவளுக்கு புரியும் படியாக.. ஆம் “மேம்” என்று தான் அழைத்தான்.. மருது கோபப்பட்டதாலா இல்லை அவளின் மரியாதையான தோற்றத்துடன் கூடிய பாவனைகளா.. தானாகவே வந்தது.  

அதுதான் பெண்கள் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டார்களே பின்னே எதற்கு கூப்பிடுகிறார்கள் என்ற தயக்கம் ஜெயந்தியிடம் வந்து ஒட்டிக் கொண்டது.   

“இல்லை, நான் வரலை” என்று திரும்பி நடக்கப் போக,

“அச்சோ மேம், வந்திடுங்க, அண்ணா சொல்லி நடக்கலைன்னா பிரச்சனை ஆகும். ப்ளீஸ்! அவர் நீங்க உள்ள இருந்தப்போவே சொன்னார், நான் சொல்ல லேட் பண்ணிட்டேன், நீங்க கிளம்பிட்டீங்க” என்றான் கெஞ்சலாய்.

அவனுக்காக திரும்பி வந்தாள்.

அழைத்து விட்டான் தான், ஆனால் உள்ளுக்குள் பரபரப்பாய் உணர்ந்தான்  மருது. கடத்தல் பொருள் கைமாற்றும் போதோ அல்லது எடுத்து வரும் போதோ கூட இவ்வளவு பதற்றமில்லை.

உள்ளே வந்ததும் அந்த ரூம் என்று காண்பித்து கொடுத்தான்.

அப்போதும் ஜெயந்தி தயங்க..

“வாங்க” என்று அவனே கூட்டிக் கொண்டு சென்று “ண்ணா” என்று உள் சென்று விட்டான்.

அவனை பார்த்ததும் சற்று அதிர்வு ஜெயந்தியிடம், அவளுக்கு நன்றாய் ஞாபகம் இருந்தது “அப்பா சொன்ன தாதா இவன் தானே” என்பது போல.

அவளின் முகத்தின் அதிர்வை இனம் கண்டு கொண்டான் மருது..

“எதுக்கு இப்படி ஒரு அதிர்வு?” என்று அவன் மனம் சுணங்கியது கூடவே “இவளுக்கு என்னை தெரியுமா? எப்படி என்னை தெரியும்?” என்ற எண்ணமும்.

“உட்காருங்க!” என்றான் முகத்தில் ஒன்றையும் காண்பிக்காமல்.

கண்களால் விஷாலிற்கு “நீ கிளம்பு” என்ற செய்தி கொடுக்க அவன் சென்று விட்டான்.

“இந்த அண்ணா ஏன் இப்படி பண்ணுறார் இன்னைக்கு” என்ற எண்ணம் தான் அவனிற்கு.

“சொல்லுங்க எதுக்கு வந்தீங்க” என்றான் விபரமே தெரியாதது போல.   

“போர்ட் பார்த்தேன், வந்தேன், ஆனா பொண்ணுங்க வேண்டாம் சொல்லிடாங்க!” என்று கடகடவென்று சொல்லி…“நான் போகவா?” என்று எழுந்து கொண்டாள்.

அவளின் வேகத்தில் மருதுவிற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை

அவனின் வாரத்தைகள் எங்கோ காணாமல் போய்விட… இந்த பதிலை சொன்ன விஷால் மேல் கட்டுக் கடங்காத கோபம் வந்தது.

“நீங்க என்னை முன்னமே பார்த்திருக்கீங்களா?” என்றான்.

அவனுக்கு தினம் அவன் பார்ப்பதை போல அவளும் பார்த்திருப்பாளோ என்ற உத்வேகம்.

“ம்ம்” என்று தலையசைத்தவள் “அன்னைக்கு கோவில் முன்ன பிரச்சனை ஆச்சு, நீங்க கூட எங்களை போக சொன்னீங்க” என..

“ஓஹ், அங்கே பார்த்தது தானா?” என்று ஆசுவாசப் பட்டான்… கூடவே “இத்தனை மாசமா பார்க்கிறேன் இவ கண்ல நான் படவே இல்லையா?” என்ற ஏமாற்றமும் கூட…  

“இப்போவும் பாட்டு போடறாங்களா?” என்றான் இலகுவாக.

இத்தனை நாட்கள் எல்லோரிடமும் பழகியதா பெரிய விஷயம் இப்போது பேசுவது தான் சிநேகிதம் பிடிப்பது தான் என்று புரிந்தது.

“போடறாங்க, ஆனா ரொம்ப இல்லை. அப்புறம் விடியற் காலையும்  இல்லை. அது ஒன்னும் பிரச்சனையில்லை” 

“அன்னைக்கு அவ்வளவு தைரியமா பேசினீங்க, இன்னைக்கு இவ்வளவு தயங்கறீங்க”  

“அது நீ பெரிய தாதான்னு எங்கப்பா சொன்னார்” என்றா சொல்ல முடியும்,

“இல்லையே, நான் தயங்கலையே” என்று சமாளித்தவள்.. “ஒரு சின்ன யோசனை… என்னை எதுக்கு வலுக்கட்டாயமா கூப்பிட்டீங்கன்னு” என்று கேட்டே விட்டாள்.

ஒரு சின்ன அதிர்வு மனதினில் முகத்தினில் காண்பிக்காமல் “நானா? இல்லையே!” என்றான் அசால்ட்டாக.

பின்ன அவர் எதுக்கு ஓடி வந்து “நீங்க வரலைன்னா முதலாளி பிரச்சனை பண்ணுவார் சொன்னார்” என்று கேட்டு விட..

விஷால் மட்டும் எதிரில் இருந்தால் மருது விடும் உதையில் பறந்து சென்று விழுந்திருப்பான்.

“அப்படி இல்லைங்க, நான் சொன்ன வேலையை செய்யணும், மாத்தி பேசினான் அதுதான்” விஷால் சொன்ன பதிலும் அதுதானே சமாதானமாகிவிட்டாள்.

“எங்களுக்கு இப்போ அவசியமா ஆளுங்க தேவை, பொண்ணுங்கன்னா முதல்ல வேண்டாம் சொன்னேன், இப்போதைக்கு இருக்கட்டும்ன்னு யோசிக்கறேன்” என்று மெதுவாய் சம்மதம் சொன்னான்.

எடுத்தவுடனே பேசாமல் அவளிடம் இலகுவான பேச்சுக்கள் கொடுத்து பின்பு சொன்னான். ஆனாலும் அவள் சம்மதம் சொல்ல மனது பந்தையக் குதிரையின் வேகத்திற்கு துடிப்பை உணர்ந்தது.   

பின்பும் உடனே அவள் பதில் சொல்ல விடாமல்…

“உங்க வீடு கோவில் பக்கம் தானே இருக்கு, அப்போ இங்க இருந்து பக்கம் தானே. நீங்க என்ன பண்ணறீங்க படிக்கறீங்களா?” என்றான் ஒன்றுமே தெரியாதது போல..

பள்ளி செல்லும் சிறு குழந்தை கூட “அக்கா காலேஜ் போறீங்களா?” என்று கேட்கும் தோற்றம் தான் அவளிற்கு..

அவளின் உடலின் அளவை அளவாய் தழுவிய முழுக்கை டாப்ஸ், குர்தி போல அல்லாமல் இருந்தாலும் முழங்கால் மேல் வரை இருக்க, அதற்கு கீழே பார்மல் பேன்ட்.. தோளில் இருந்த அவளின் அமெரிக்கன் டூரிஸ்டர்.. நெற்றியில் இருக்கும் சிறிய பொட்டு.. தோள் வரை மட்டுமே இருக்கும் அடர்த்தியான கூந்தலை ஏற்றி போனி டெயில் போட்டிருந்தாள்.

நிச்சயம் அந்த புருவங்கள் த்ரிடிங் பார்த்ததில்லை.. இன்னும் அழகு நிலைய வாசலை மிதித்திராத இயற்கையான அழகு முகம்… அதில் இன்னும் மாறாத டீன் ஏஜ் பருவம்…          

“ம்ம், காலேஜ் போறேன் சர்”

“சாயங்காலம் வந்தா உங்க படிப்பு கெடாதா?” அவள் சம்மதம் சொல்லாமலேயே சம்மதம் வாங்க முயன்றான்.

“இல்லை சார், படிச்சுக்குவேன்”

“என்ன படிப்பு?”

“ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்”

“அட பெரிய படிப்போ? வண்டி ரிப்பேர் பண்றதோ?” எனத் தோன்றியது.

விவரங்கள் தெரியாவிட்டாலும் ஆட்டோ மொபைல் என்ற வார்த்தை புரிந்தது.

நிறைய பேசினால் இவள் சந்தேகப்பட்டு வராமல் இருந்து விட்டால் என்ன செய்வது என்று தோன்ற..

“வர்ற மாதிரி இருந்தா அப்பாவை அழைச்சிட்டு வாங்க பேசிக்கலாம்” என்றான் நல்ல பிள்ளையாக.

உடனே எழுந்து விட்டவள்.. “சரி” என்று தலையசைத்து கிளம்பினாள்.

திரும்பி கதவு வரை வந்தும் விட்டாள், “எங்கே போய் அப்பாவை கூட்டிக் கொண்டு வர, இவன் தான் தாதா பேசக் கூடாது” என்றனர், “இங்கே எப்படி வேலை செய்ய அனுமதிப்பர்” என்று  யோசனை வந்து விட, கூடவே “மட்டி, உனக்கு ட்ரைனிங் போகணும். எப்படி நீ வேலைக்கு வருவ” என்ற ஞானோதயமும் பிறந்தது.

பின்பு அவனை பார்த்து திரும்பி நின்றாள்.

“என்ன?” என்பது போல அவன் பார்க்க..

“என்ன சம்பளம் கொடுப்பீங்க?” என்றாள் தயங்கி தயங்கி..

“அம்மா தாயே, கடையே உன் பேர்ல மாத்திடவா, வேணும்னா நீ எனக்கு சம்பளம் கொடு” என்று மனதிற்குள் நினைத்தாலும்…

“வேலை பொறுத்து தான் சம்பளம். நீங்க செய்ங்க, பின்ன சொல்றேன். கண்டிப்பா ரொம்ப குறைவா இருக்காது” என்றான் உறுதியான குரலில்.

“தேங்க் யு” என்று கதவில் கை வைத்தவள் திரும்பவும் அவனை பார்த்தாள்.

“என்ன?” என்று அவனும் பார்க்க…

“அது என் தம்பிக்கு கூட வேலை கொடுப்பீங்களா?”  

“அவனை கூட்டிட்டு வாங்க பார்த்துட்டு சொல்றேன்” என்றான்.

கொஞ்சம் வழிசல் காண்பிக்கவில்லை… வழிசல் அவனுக்கு வரவும் வராது. வழிபவர்களை அவளுக்கு பிடிக்க வாய்ப்பேயில்லை என்றும் மனது உறுதியாக சொல்லிற்று. பல சமயம் அறிவை விட மனதை கேட்டு முடிவெடுப்பவன் அவன்.    

அவளுக்கு பிடிக்காமல் போய் விட்டால் என்று யோசித்து யோசித்து பேசினான்.

கதவை திறந்தவளிடம் “நீங்க கூட வருவீங்களா இல்லைனா பேர் சொலி அனுப்புவீங்களா?” என்றான்.

அவனுக்கு பேர் தெரிய வேண்டுமே!

“நான் வருவேனா தெரியலை, அவனை அனுப்பிவிடறேன். என் பேர் ஜெயந்தி” என்று சொல்லிச் சென்று விட்டாள்.

“ஜெயந்தி … ஜதி …” என்று சொல்லிக் கொண்டான்.

பின்பும் மெதுவாய் முணுமுணுத்தான்

“இவள்லாம் உன்னைப் பார்க்க மாட்டா, பேசாம இவங்க குடும்பத்துல யாரையாவது கரக்ட் பண்ணி பொண்ணு கேளு” என்று சொல்லிக் கொண்டான்.

ஆம்! முடிவே செய்து விட்டான் ஜெயந்தியை தான் திருமணம் செய்வது என்று.

பக்கத்தில் பார்த்ததும் இன்னும் இன்னும் பிடித்தது.

அந்த அலைபாயாத கண்கள் பிடித்தது… அவளின் தோற்ற வசீகரம் பிடித்தது… என்னவோ பிடித்தது… வர்ணிக்கும் வார்த்தைகள் எடுக்க மனது வரவில்லை.

இருபத்தியேழே வயதேயான அக்மார்க் பிரம்மச்சாரி இளைஞன், தோற்றப் பொலிவும் உண்டு. ஆனால் உடை அதனோடு பொருந்தாது. பேச்சில் செயலில் ஒரு முதிர்ச்சி இருக்கும். பஞ்சாயத்து செய்து செய்து வந்த முதிர்ச்சி அது.

ஆனால் ஜெயந்தி பார்க்க பார்க்க அழகானவள், கூட இளமையானவள் .. அதனால் பார்க்க மாட்டாள் என்று முடிவு செய்து விட்டான்.

நிஜமும் அதுதான்! ஜெயந்திக்கு நன்கு படிக்க வேண்டும், ஃபாரின் போகவேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தை உயர்ந்த வேண்டும், ஒரு ஐந்து வருடத்தில் இந்தியா வந்து நல்ல வேலையில் அமர்ந்திட வேண்டும். இப்படி பல கனவுகள். ஆம்! அப்துல் கலாமின் காலேஜ் சேர்ந்தது மட்டுமல்ல… அப்துல் கலாம் சொன்னது போல நிறைய கனவு காணுவாள். எல்லாம் முன்னேற்றம் குறித்தே. இன்னும் வாழ்க்கை துணை பற்றி ஒரு சின்ன கற்பனை கூட இல்லை.

அதற்கு அவளின் காரணம்… அதனை கொண்டே அவளைப் புரியும்..

“இப்போ நான் ஒரு பொசிஷன்ல இல்லை. அப்போ இப்போ கனவு கண்டா சப்பையா தான் இருக்கும். நான் ஒரு பொசிஷன்க்கு வந்து கனவு காண்றேன். அப்போ தான் என் கனவுல கூட சூப்பரா வருவான்” என்பது போல…

“ஹ, ஹ” என்று சிரிப்பு வந்தாலும்… அவளுடைய எதிர்பார்ப்புகள் இன்னும் அவளின் கனவுக்குள்ளே கூட வராதவை.

பணம் என்று ஒன்று மட்டுமில்லை… மற்றபடி அழகு, அறிவு, பண்பு, ஒழுக்கம், படிப்பு என்று கொட்டிக் கிடக்க எதிர்பார்ப்பு என்ன என்று கூட இன்னம் வரையறுக்க வில்லை…    

இவன் ஐந்தாம் வகுப்பு, பெயர் மட்டுமே எழுதத் தெரிந்த கை நாட்டு, சிரமப் பட்டு தமிழ் படித்துக் கொள்வான். அதுவும் இப்போது சில வருடங்களுக்கு முன் தான் ஆசிரியர் வைத்து கற்றுக் கொண்டான்.

சாத்தியமா? சாத்தியமில்லையா? அவனுக்கே தெரியவில்லை! ஆனால் முயற்சி செய்து பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டான்.

முயற்சி என்றால் காதல் சொல்வது இல்லை, பெண் கேட்பது தான்!

காதல் சொல்ல முடியும் என்று அவனுக்கே தோன்றவில்லை!

முதலில் இதற்கு பெயர் தான் காதலா என்றும் தெரியவில்லை!  

           

 

 

 

 

 

 

 

      

       

    

              

 

 

 

  

Advertisement