Advertisement

பொதுவாய் மதிய நேரம் உறங்க எல்லாம் மாட்டாள், ஆனால் அன்று சென்று படுத்துக் கொண்டாள். என்ன வாழ்க்கை இது என்று கண்களில் நீர் வந்தது.
மிகவும் தனியான உணர்வு கூட!     
மருது இவளை கவனிக்கவேயில்லை, அவன் அதற்குள்ளாகவே வேலையில் இறங்கியிருந்தான். ஆம்! அவன் கொடுத்த அட்ரெஸ் ஏரியா பார்த்து யாரையோ அழைத்தவன், “அண்ணா” என்று ஆர்ப்பாட்டமாய் அழைத்து “எப்படி இருக்கீங்க?” என்று ஆரம்பித்து விவரங்கள் சொல்லி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி, பேசி முடிக்க கிட்ட தட்ட அரை மணி நேரம் ஆகியது.
அதற்குள் ஜெயந்தி உறங்கி இருந்தாள், இவன் வந்து பார்க்கும் போது நல்ல உறக்கத்தில் இருக்க, முகமும் வாடி இருக்க, அவளை தனியே விட்டு செல்ல மனமில்லாமல் வீட்டிலேயே அவனும் இருந்து கொண்டான்.      
அவளின் முக வாட்டம் மருதுவிற்கு தெரியாதா என்ன?
ஜெயந்தி வந்த நாளாக அவளுக்கு தெரியாது, ஆனால் அவனின் தலையாய வேலை அவளை பார்வையால் தொடர்வது தான்.
ஸ்டோர்ஸ் சென்று அமர்ந்து கொண்டால், சிசிடிவி மூலம் அவளை மட்டுமே பார்த்திருப்பான். இதற்கு அப்படி ஒன்றும் முகம் தெளிவாக தெரியாது. ஆனாலும் அவளையே பார்த்திருப்பான்.
என்ன தடை? ஏன் இப்படி இருக்கின்றான். அவனின் மனது அவனுக்கே புரியாத விஷயம்.
நன்றாய் பேச வேண்டும், நன்றாய் நடக்க வேண்டும் என்று மனது நினைத்தாலும், ஒரு ஒதுக்கம் வந்து விடுகிறது.
அதுவும் இரவில் அவளின் அருகில் செல்ல மனம் துடித்தாலும், இருமுறை அவளை போ என்று துரத்தி விட்டு இப்போது அருகில் செல்ல முடியவேயில்லை.
பத்து வயதிற்கு முன் என்ன எப்படி எதுவும் பெரிதாய் ஞாபகமில்லை, பத்து வயதில் இருந்து தனியன், இன்னொரு வார்த்தையில் அனாதை,
இதோ அவனாய் அவனை செதுக்கி கொண்டிருக்க, இவளின் அப்பா வந்து அவனை எல்லோர் முன்னும் தலைகுனிவை ஏற்படுத்துவதா? அவனால் அதை மன்னிக்கவும் முடியவில்லை! மறக்கவும் முடியவில்லை!
உறவுகளோடு வளர்ந்திருந்தால் மன்னிக்க மறக்க முடிந்திருக்குமோ என்னவோ? ஆனால் தனியன் தானே! அதெல்லாம் அவனுக்கு வரவில்லை.
அவளின் முகம் பார்த்திருந்தான்.
“என்னிடம் வர வேண்டும் என்று தோன்றியிருந்தால், அடுத்த நிமிடம் வந்திருக்க வேண்டாமா?” என்று யோசித்த படியே பார்த்திருந்தான்.
அதுவும் அவன் பசியால் மயங்கியிருக்கிறான் என்பது ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
உணவிட யாரும் இல்லாது தனியாய் நின்ற போதே, தன்னுடைய வயிற்றை வாடாமல் பார்த்துக் கொண்டவன், “நான் உண்ணவில்லை என்று சொல்லியும் என்னை மயங்கும் படி விட்டு விட்டாள். நான் இவளை நினைத்த அளவிற்கு இவள் என்னை நினைக்கவில்லையோ?” என்று தினம் தினம் மனம் வெம்பி வெம்பி வதங்கிக் கொண்டிருந்தது.
அவனுக்கு புரியவில்லை, ஜெயந்தி மிகவும் பக்குவமான பெண், எல்லோரிடமும், ஆனால் அவனிடம் இல்லை, அவளை பொறுத்தவரை மருது அவளை பார்த்துக் கொள்வான், மருதுவிற்கு மனதளவில் தன்னுடைய தேவை இருக்கக் கூடும் என்ற அனுமானம் கூட இல்லை.
இதோ கிட்ட தட்ட இரண்டு மணி நேர நல்ல உறக்கம், அவளை பார்த்த படி அமர்ந்திருந்தான். அவளிடம் அசைவு தெரியவும் எழுந்து வெளியே வந்து விட்டான்.
கண்விழித்து எழுந்து வெளியே வந்தவள் கண்டது அமர்ந்திருந்த மருதுவை தான். அழுதுவிட்டது தூங்கி எழுந்தது சற்று அவளின் மனநிலையை சற்று மாற்றி இருந்தது.
“நீங்க ஸ்டோர்ஸ் போகலையா?” என்றாள் இயல்பாக.
“நீ நல்லா தூங்கின, எப்படி தனியா விட்டுட்டு போகன்னு போகலை” என்றான்.
இதழ்பிரியா புன்னகை அவளிடம், “டீ வைக்கிறேன்” என்று சமையலறை செல்ல,
அவனும் பின்னோடு வந்தவன் “நீ தள்ளு நான் வைக்கிறேன்” என்று வேலையை ஆரம்பிக்க,
அவள் எதுவும் பேசாமல் அங்கிருந்த மேடை மீது ஏறி அமர்ந்து மருதுவையே பார்த்திருந்தவள், “நீங்க வேலை செஞ்ச கடை எங்க இருக்கு?”  
“என்ன கடை?” என்றான் அவளை பார்த்து.
“அதான் நீங்க… உங்க… டீ போடற வேலை” என்று தயங்கி தயங்கி கேட்டாள். அவன் எதுவும் தப்பாய் எடுத்துக் கொள்வானோ என்ற பயம்.
மருதுவின் குறையே அவனை பற்றி அவள் எதுவும் தெரிந்து கொள்ளாதது தானே.
“அந்த கடையே இல்லையே” என்றான் மலர்ந்து, ஜெயந்தி அவனின் முகத்தை பார்க்க,
“அந்த இடத்துல தான் மருது ஸ்டோர்ஸ் இருக்கு” என்றான்.
“அந்த இடம் வாங்கிட்டீங்களா, ஆனா எப்படி? டீ போடற வேலையில இருந்து அது வாங்கற அளவுக்கு எப்படி வசதி வந்துச்சு?”  
நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தவன் “ம்ம், கடல் கடந்த வாணிபம் பண்ணினேன்” என்றான்.
“அப்படின்னா என்ன வேலை?” என்று கேட்க,
மருது பதில் சொல்லாமல் நிறுத்தினான், சொன்னால், அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற ஒன்று. இன்னொன்று அது அவனின் ரகசியம், இதுவரை அவனை தெரிந்த யாருக்கும் தெரியாது, இதை யாரிடமாவது அவள் சொல்லிவிட்டால் அவளின் அம்மா அண்ணன் என்று.
இன்னும் அவளின் மனதினில் அவனின் இடம் என்ன என்று அவனிற்கு தெரியாதே?
அதற்குள் டீ தயாராகி இருக்க அதை கொடுத்தவன் அவனுக்கும் எடுத்துக் கொண்டு வெளியே வர,
இன்டர்காம் ஒலித்தது, “அண்ணா, உங்களை பார்க்க ஆளுங்க வந்திருக்காங்க” என்று.
“யார்?” என்று கேட்டறிந்தவன், “கமலன்க்கு போன் பண்ணு” என்றவன் அமர்ந்து டீ அருந்த கமலனிற்கு உடனே அழைத்தாள் ஜெயந்தி.
அவன் எடுக்கவும் எடுத்துட்டான் என்ற ஜெயந்தியிடம், “கொடு” என்று வாங்கியவன் அவனிடம் “எங்க இருக்க?” என,
“வீட்ல” என்றவனிடம்,
“இன்னும் அஞ்சு நிமிஷத்துல இங்க இருக்கணும்” என்று சொல்லி வைத்து,
“வெளில வராத” என்று சொல்லி கதவை முன் புறம் தாளிட்டு அவன் வெளியே செல்ல,
“அச்சோ என்ன நடக்கிறது?” என்று பார்க்காவிட்டால் மண்டை வெடித்து விடும் ஜெயந்திக்கு.
முன்புற ஜன்னலை மெதுவாய் திறந்து மிக குறைந்த இடைவெளி விட்டு பார்க்க, இவன் சென்று அங்கிருந்த சேரில் அமர, அதன் பிறகே அவர்கள் வந்தனர்.
ஆம்! வந்தவர்கள் கமலன் பணம் கொடுத்தவர்கள், அவனின் சிநேகிதனும் அவனின் சித்தப்பாவும்,
உடன் இன்னுமொருவன், வந்தவர்கள் பணத்தை அவனிடம் நீட்டினர்.    
யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அவர்கள் எல்லாம் நின்றிருக்க, அமர்ந்திருந்தவன் மருது மட்டுமே, அதுவும் கால் மேல் கால் போட்டு தோரணையாய் அவன் அமர்ந்திருந்த விதம், அவனின் பார்வை, எதிரில் இருப்பவருக்கு நிச்சயம் பயம் கொடுக்கும்.
அவனின் பார்வை திறந்திந்த ஜன்னல் புறம் தொட்டு மீள, தன்னை பார்த்து விட்டான் என்று புரிந்தது.
ஆனாலும் ஜெயந்தி நகரவில்லை.
ஐந்தே நிமிடம் கமலன் வந்து விட, அவனை நோக்கி கை காட்டினான் மருது. அந்த பணத்தை அவனிடம் உடனே கொடுத்தனர்.
“நீ யார் கிட்ட பணம் வாங்கின?” என்று மருது அவனிடம் கேட்க,
“தெரியலை, இவனுக்கு தான் தெரியும்” என்று நண்பனை காண்பிக்க,
“கூப்பிடச் சொல்லுடா அவனை, நீ எதுவும் பேப்பர்ல கையெழுத்து போட்டு குடுத்திருந்த அதையும் எடுத்துட்டு வரச் சொல்லு” என்றான்.
அவனும் ஒரு அரை மணி நேரத்தில் வர, பணத்தை அவர்களுக்கு கொடுக்க வைத்தவன், “ஏதாவது இவனுக்கு தொந்தரவு குடுக்கணும்னு நினைச்சீங்க ஒருத்தனுக்கும் கையும் காலும் இருக்காது” என்று மிரட்டல் விடுத்து அனுப்பி வைத்தவன்.
அழைத்து வந்தவனிடம் “அண்ணாக்கு நாளைக்கு காலையில பணம் வந்துடும்ன்னு சொல்லிடு” என்று அனுப்ப நினைக்க,
அவன் தலையை சொரிய, “படா பேஜாருடா உன்னாண்ட” என்று சொல்லி ஜோபில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க,
ஏதோ திரைப்பட காட்சிகள் போல இருந்தது ஜெயந்திக்கு, கூடவே கவலையாகிப் போனது அவனின் தாதாகிரியில். “யார் இவன்? என்ன செய்து கொண்டிருந்தான்? யாரையும் கொலை எல்லாம் செய்திருப்பானோ? தேடல் லிஸ்டில் இருப்பானோ? என்கவுண்டர் லிஸ்டில் இருப்பானோ?”  
அவனின் வாழ்க்கையை கேட்காத தன் முட்டாள் தனத்தை தானே நொந்து கொண்டாள்.
கூடவே அப்படி ஒரு பயம் வந்தது, அவனுக்கு எதிரிகள் யாரும் இருப்பார்களோ? அவனை என்னவும் செய்து விடுவார்களோ? என்று
இவனால் தானே என்னை அடித்தான் ஒருவன், நாளை எனக்கு குழந்தை பிறந்தால் அதனையும் எதுவும் செய்வார்களோ? ஏனென்னவோ தோன்றியது.    
“முதலில் அவனின் வாழ்க்கையை தெரிந்து கொண்டே ஆக வேண்டும்!”    
    

Advertisement