Advertisement

 அத்தியாயம் இருபத்தி ஒன்பது :
தாமரை இலை தண்ணீர் போல, ஒட்டியும் ஒட்டாத வாழ்க்கை வாழ ஆரம்பித்து இருந்தாள் ஜெயந்தி.
ஆம்! தினமும் மருது ஸ்டோர்ஸ் வந்து மேற்பார்வையும் கணக்கு வழக்குகளையும் பார்க்க ஆரம்பித்து இருந்தாள் ஜெயந்தி.
அன்று மருது ஸ்டோர்ஸ் வந்தது அங்கே தீயாய் பரவியிருக்க, இதோ அவளும் கடையின் முதலாளி என்று மருதுவால் அடையாளம் காட்டப்பட்டு இருக்க, இந்த ஒரு வாரமாக மருது ஸ்டோர்ஸ் வர ஆரம்பித்து இருந்தாள்.   
காலையில் ஒன்பதரை மணிக்கு மருது கிளம்பிவிட, இவள் பத்தரை மணிக்கு சமையல் செய்யும் அம்மா மதிய சமையல் முடித்தவுடன்  கிளம்புவாள்.
முதல் இரண்டு நாட்கள் தன்னை போல சுற்றிக் கொண்டிருந்தாள் மருது ஸ்டோர்ஸ் முழுவதுமே, ஆம்! வரட்டுமா வேண்டாமா என்றெல்லாம் கேட்கவில்லை. 
விஷால் எனும் தூதுவன் அவளுக்கு இருக்க, எல்லாம் அவன் மூலம் பேசிக் கொள்வாள் தொழில் விஷயங்கள். மருதுவிடம் அவசியதிற்கான பேச்சுக்கள் மட்டுமே அவனை போல.
வேலைகளுக்கா பஞ்சம், தன்னை போல வேலைகள் இழுத்துக் கொண்டன.
பிறந்த வீட்டினருடன் இவள் தள்ளி நின்றாளா? இல்லை அவர்கள் தள்ளி நின்றார்களா? ஏதோ ஒன்று ஒரு இடைவெளி விழுந்தது.  
மதியம் உணவருந்த வருபவர்கள் உணவருந்திய பின் மருது ஒரு குட்டி உறக்கம் போட, அவள் மருது ஸ்டோர்ஸ் சென்று விடுவாள், நடக்கும் தூரம் தானே உடலுக்கு நல்லது என்று நடந்து விடுவாள். பின்பு இவள் எட்டு மணிக்கு வீடு வந்து விட அவன் வர பத்து மணியாகும்.
இரவு சமையல் அவள் தான். இரவு உணவு உண்ட பின் ஜெயந்தி உறங்க அறைக்கு சென்ற பின்னும் மருது எப்போது உறங்க வருவான் என்றே தெரியாது.
ஒரே அரை தான், ஆனால் கட்டில்கள் தனி தனி.
ஆம்! சேர்ந்திருந்த இரட்டை பெரிய கட்டில் தனி தனியாக பிரிந்து விட்டது, அவள் திரும்ப வந்த நாளாக.
இதுவரை ஏன் இப்படி என்று அவனும் சொல்லிக் கொள்ளவில்லை அவளும் பேசிக் கொள்ளவில்லை. ஜெயந்தியின் மனதை இந்த விஷயம் வெகுவாக பாதித்து இருந்தது. ஆனால் அவள் கிஞ்சித்தும் அதை மருதுவிடம் பிரதிபலிக்கவில்லை.   
இப்படியாக ஒரே வீட்டை பகிர்ந்தாலும் ஒரே கட்டிலை பகிரவே இல்லை இன்னும். 
என்ன மனதில் நினைத்திருக்கிறான் என்று புரியவில்லை, கேட்கவும் ஒரு பயம், தயக்கம். மீண்டும் மீண்டும் சண்டை சச்சரவுகள் அவளுக்கு பிடித்தமில்லை.
அன்று மதியம் உணவு உண்டு மருது சோஃபாவில் கால்களை நீட்டி வைத்து உறங்க தயாராக, அவன் முன் வந்து நின்றாள் ஜெயந்தி.
“என்ன ஜெயந்தி?” என்று கேட்க,
“நான் ஒரு வீட்ல இங்க இருந்து போன பிறகு தங்கியிருந்தேன். விஷால் ஃபிரெண்ட்து, வாடகை வாங்கிக்க சொன்னா இதோ அதோன்றான் வாடகை குடுக்கணும், ரொம்ப கேட்டா அண்ணனுக்கு தெரிஞ்சவங்க தான் அவர் கிட்ட பேசிக்கங்க சொல்லிட்டான். வாடகை குடுக்கணும், அங்க இருக்கிற என்னோட சில திங்க்ஸ் எடுக்கணும், அங்க போயிட்டு வரலாமா?”  
அவளை ஒரு பார்வை பார்த்தவன், “இப்போவே போகணுமா என்ன?, மெதுவா போகலாம்” என்று அவன் சொல்லும் போதே வாயில் காவலாளி இன்டர்காமில் அழைக்க, ஜெயந்தி தான் எடுத்தாள்.
“சாரை பார்க்கணும்னு உங்க தம்பி கமலன் வந்திருக்காங்க மேடம். உள்ள போங்கன்னு சொன்னா, இல்லை நீங்க கேளுங்கன்னு நிக்கறார்”
“கமலனா”  
“ஆமாங்க மேடம்”
“கமலன்க்கு உங்களை பார்க்கணுமாம், வந்திருக்கான். உள்ள போங்கன்னு சொன்னா கேட்டுட்டு நிக்கறானாம்”  
“எதுக்கு?” என்று ஜெயந்தியிடம் கேட்டான் மருது.
“நான் அவனை பார்த்து பேசி பலநாள் ஆச்சு” என்றவள் “உள்ளே விட சொல்லட்டுமா?”  
“ம்ம்” என்று மருது தலையசைத்து எழுந்து அமர்ந்தான்.
உள்ளே வந்த கமலனை பார்த்த ஜெயந்தியின் கண்கள் அதிர்ந்து விட்டன. இளைத்திருந்தான், கறுத்திருந்தான், உடைகள் ஒழுங்கற்று இருந்தன.
“என்ன கமலா? ஏன் இப்படி இருக்க?” என்று அருகில் வர அக்காவை சிறிதும் கண்டு கொள்ளவில்லை, அவனின் பார்வை மருது மீது தான்.
“என்னடா?” என்று திரும்ப ஜெயந்தி கேட்க,
“நான் அவரை தான் பார்க்க வந்திருக்கேன்” என்று மருதுவை காண்பித்தான்.
“முதல்ல வா உட்காரு” என்று தண்ணீரை குடிக்க கொடுக்க, “வேண்டாம்” என்று மறுத்து விட்டவன்,
“எனக்கு ஒரு பிரச்சனை, யார் கிட்ட சொல்றதுன்னு தெரியலை, நீங்க எனக்கு உதவி பண்ணுவீங்களா?” என்றான்.
“என்ன சொல்லு?” என்று மருது சொல்ல,
“நீங்க வேலையை விட்டு அனுப்பின உடனே எனக்கு வேலையில்லை. என் ஃபிராண்ட் கிட்ட சொன்னேன் வேலைக்கு, அவன் கனடாக்கு வேலைக்கு அனுப்புற கன்சல்டன்சி ஒன்னு சொன்னான், அவனோட சித்தப்பாது,  போய் பார்த்தேன், மூணு லட்சம் கட்ட சொன்னாங்க, கட்டினா  இம்மிகரேஷன் வாங்கி கொடுத்து வேலைக்கு அங்க அனுப்பறோம் சொன்னாங்க, நானும் நல்லா விசாரிச்சேன், நல்ல மாதிரி தான் சொன்னாங்க, அதனால பணத்தை வட்டிக்கு வாங்கி கட்டினேன்”  
ஜெயந்தி அதிர்ச்சியாய் பார்த்திருந்தாள், எதுவும் அவளிடம் சொல்லவில்லை.
“வீட்ல யார் கிட்டயும் சொல்லலையா?”
“இல்லை, நானா சுயமா செய்யலாம்னு நினைச்சேன்”
“உன்னை நம்பி யார் பணம் குடுத்தா?”
“என் அந்த ஃபிரண்டே வாங்கி குடுத்தான், இப்போ என்னடான்னா அந்த கன்சல்டன்சி பார்ட்னர் பிரிஞ்சிட்டாங்களாம், அவன் சித்தப்பா தனியா போயிட்டார். வேலை கேட்டா நீங்க பணம் குடுத்தவர் தனியா போயிட்டார், அவரை பார்த்துக்கோங்கன்னு சொல்றாங்க”
“அவர் கிட்ட போனா நான் இன்னும் ஸ்டெடி ஆகணும். நான் ஆளுங்களை அனுப்ப ஆறு மாசம் ஆகும் சொல்றான், அதுவரை எனக்கு வட்டி கட்ட முடியாது பணம் திரும்ப குடுங்க சொன்னா, வேலை தான் ஏற்பாடு செய்வேன், அதுவும் ஆறு மாசம் கழிச்சு, அப்போவும் பத்து லட்சம் சூயுரிட்டி நீங்க குடுத்துக்கணும், நீ எங்க வேணா போ, இந்த பணம் எல்லாம் திரும்ப குடுக்க முடியாது சொல்றான்”  
“நீ என்னோட சொந்தக்காரன்னு தெரியுமா?” என்ற மருதுவின் கேள்விக்கு,
“என் ஃபிரண்ட்க்கு தெரியும், ஆனா நீங்க என்னை கடையை விட்டு அனுப்பிட்டீங்கன்னு, அக்காவையும் தள்ளி வெச்சிட்டீங்கன்னு தெரியும்”
கேட்டிருந்த ஜெயந்திக்கு ஆத்திரமாய் வந்தது, `என்னுடைய வாழ்க்கையை அடுத்தவரிடம் பேசியிருக்கிறான் என்று.  
“இப்போ அவன் கிட்ட உன் சித்தப்பா கிட்ட கேளுடா சொன்னா, அதெல்லாம் கேட்க முடியாது நீ வட்டிக்கு ரெடி பண்ணு, இல்லை பத்து லட்சம் ரெடி பண்ணு, நான் உன்னை அடுத்த மாசம் அனுப்பற மாதிரி ஏற்பாடு பண்ண சொல்றேன் சொல்றான்”
“இப்ப என்ன வேணும் பத்து லட்சம் வேணுமா?” என்றான் மருது.
“இல்லையில்லை” என்று அவசரமாய் மறுத்த கமலன், “பணம் திரும்ப கிடைச்சா போதும். அதை மட்டும் வாங்கி குடுங்க. நான் வட்டிக்கு வாங்கின இடத்துல குடுத்துடுவேன்”
“நீ அட்ரெஸ் குடு ஆள் யாருன்னு விசாரிக்கலாம்”  
எழுதி கொடுத்தவன் உடனே கிளம்ப, “சாப்பிட்டியா, சாப்பிட்டு போ கமலா” என்று ஜெயந்தி சொல்ல,
“இல்லை வேண்டாம்” என்று அவன் கிளம்ப,
“இருடா” என்ற ஜெயந்தியை விட்டு மருதுவை பார்த்தவன்,
“விமலனை வேலைக்கு சேர்த்துர்க்கிட்டீங்க, ஆனா அவனுக்கு முன்ன இருந்து நான் உங்ககிட்ட படிக்கும் போது இருந்து வேலைல இருக்கேன். என்னை மட்டும் ஏன் வேண்டாம் சொல்லிட்டீங்க, நான் என்ன தப்பு செஞ்சேன்” என்று கேட்டு, 
“வீட்ல யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். யாருக்கும் தெரியாது” என்று ஜெயந்தியையும் பார்த்து சொல்லி விட்டு நடந்து விட்டான்.
மருது எதுவும் பதில் சொல்லு முன்னே நிற்காமல் நடந்து விட்டான். கமலனின் பாவனைகளில் மருதுவிற்கு மனதிற்கு கஷ்டமாக போய்விட்டது.
ஆம்! வேலை விஷயத்தில் அவனிடம் ஒரு குறையும் சொல்ல முடியாது, விமலனை இருக்கட்டும் என்று விட்ட போது கமலனையும் விட்டிருக்க வேண்டும் தானே.
இந்த யோசனைகளில் இருக்க ஜெயந்தியை கவனிக்கவில்லை.     
ஒரு கஷ்டம் என்றால் என்னிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லையா இவனிற்கு என்று ஜெயந்தி பார்த்திருக்க, கமலன் வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.
அதுவும் அவளின் வாழ்க்கையை எல்லோரும் பேசுவது பிடிக்கவில்லை. அக்காவின் வாழ்க்கை அதை அடுத்தவரிடம் பேசக் கூடாது என்ற அறிவு கூட இவனிற்கு இருக்காதா?    
வெகுவாக மனதிற்கு ஏதோ செய்தது, எல்லா இடத்திலும் அன்னியப் பட்டு போன உணர்வு!

Advertisement