Advertisement

அத்தியாயம் இருபத்தி எட்டு :
முதலில் அவனின் ரூம் தான் அழைத்து சென்றான்.
தரை தளத்தில் வீட்டு மளிகை சாமான்கள் பிரிவு பிரமாண்டமாய் இருக்க, அதனின் ஒரு ஓரத்தில் அவனின் ரூம். அங்கு மட்டுமல்ல ஒவ்வொரு தளத்திலும் இருக்கும்.    
உள்ளே சென்றதும் அங்கே இருந்ததை பார்த்து அசந்து விட்டாள். அவர்களின் திருமண புகைப்படம் வெகு அழகாக பெரிய ப்ளோ அப் செய்து மாட்டப்பட்டிருந்தது. அதன் தனித்துவம் அது வரையப்பட்டிருந்தது. ஆம் புகைப்படத்தை பார்த்து அதை வரைந்து இருந்தனர். கருப்பு வெள்ளை ஓவியம் அப்படியும் சொல்லலாம், பென்சில் ஸ்கெட்ச் என்றும் சொல்லலாம். ஆனாலும் அத்தனை தத்ரூபமாய் இருந்தது.
“அழகா இருக்கு, எப்போ மாட்டுணீங்க, ஏன் எனக்கு இதை யாரும் அனுப்பலை, இது நம்ம கல்யாண ஃபோட்டோ பார்த்து வரைஞ்சதா, யாரு வரைஞ்சா?” என்று கேள்விகளை அடுக்கினாள்.
“பின் நம்ம கல்யாண ஃபோட்டோ நான் பார்க்கலையே” 
“ஆம், அவள் ஜெர்மனி கிளம்பும் வரை அது வரவில்லை, வந்த பிறகு அதை பார்க்க ஆள் இல்லை. யாரிடம் காட்டுவான், அவனுக்கு காண்பிக்க யார் இருக்கிறார்”
“நீ ஊருக்கு போன பிறகு வந்தது, நானே இன்னும் பார்க்கலை”
“ஏன் நான் ஊருக்கு போன கோபமா?” என்று அவள் தயங்கித் தயங்கி கேட்க,
“இல்லை” என்பது போல தலையசைத்தான்.
“அப்புறம் ஏன் ஏன் பார்க்கலை?” என்று சற்று ஏமாற்றமும் கோபமாயும்  குரல் வந்தது.  
“யாரோட பார்ப்பேன், தனியா பார்க்க பிடிக்கலை. அதனால பார்க்கலை. அதை விட யார் கிட்ட காண்பிப்பேன்” என்று இனம் புரியாத பாவனையில் பேசினான்.   
“ஏன் என்கிட்டே ஃபோன்ல சொல்ல வேண்டியது தானே”
“சொன்னா நீ பறந்து வந்திருக்க போறியா, போடி”  
“எங்க அம்மா வீட்டுக்கு குடுத்து விட்டிருக்க வேண்டியது தானே”
“உங்க வீட்லயும் யாரும் கேட்கலை, நானா குடுக்க எனக்கு பிடிக்கலை”  
“அவங்களுக்கு உங்களுக்கு பார்த்தா ஒரு பயம், ஒரு தயக்கம்” என்று பிறந்த வீட்டிற்காய் பேச,  
“போடி” என்றான் எரிச்சலான குரலில்.
“என்ன பதில் பேசுவது?” என்று தெரியாமல் அப்படியே  அமர்ந்து விட்டாள்.
மருது வெளியில் சென்று விட்டான். 
அப்போது அவ்வளவு அழகாய் தெரிந்த ஓவியம் இப்போது அவளுக்கு பிடிக்கவில்லை.
அவனின் தனிமை அவள் வராதது எல்லாம் அவனுக்கு கோபத்தை கொடுத்திருப்பது புரிந்தாலும், அவனின் தனிமையை போக்க சந்தர்ப்பம் கொடுக்காமல் மேலும் மேலும் பேசினால் என்ன செய்வது என்றே அவளுக்கு தெரியவில்லை.
இதோ பார்த்து பார்த்து அவனுக்காய் அலங்கரித்து வந்தது, அவளை பார்த்து சிரிப்பது போல தோன்ற, கண்களில் நீர் வந்து விட்டது. கைகளில் முகத்தை புதைத்து அப்படியே அமர்ந்திருந்தாள்.
மனது வெகுவாக விட்டு போனது. “போடா, நீ எனக்கு வேண்டாம் போடா” என்று தூக்கி எரியும் ஆவேசம், ஆனால் என்ன செய்ய? தனியாய் எல்லாம் அவளால் இருக்க முடியாது. அவளுக்கு மருது வேண்டும்.
கிட்ட தட்ட அரைமணி நேரம் கழித்து, மருது உள்ளே வர, அங்கே அவன் பார்த்தது கைகளில் முகம் புதைத்து இருந்த ஜெயந்தியை தான்.   
மனதிற்கு என்னவோ செய்த போதும் அமைதியாய் வந்து அமர்ந்தான். எதிரில் அவன் அமரும் அரவம் கேட்கவும் தலை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளின் கலங்கி இருந்த கண்கள் மனதை அசைத்த போதும் சமாதான வார்த்தைகள் எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு அது வரவில்லை.  
இவ்வளவு கோபம் தேவையில்லை என்று புரிந்தது, நிறைய அவளை காயப்படுத்துகிறான் என்று புரிந்தது. அவள் நிறைய தளைந்து போகிறாள் என்று புரிந்தது, ஆனாலும் மருதுவால் ஜெயந்தியிடம் இறங்கிப் போகவே முடியவில்லை.   
இத்தனை வருடம் தனியனாய் வாழ்ந்து விட்ட வாழ்க்கையா? தனியனாய் தன்னை செதுக்கிக் கொண்டதாலா? தெரியவில்லை!
அவனின் ரூம் உள்ளே ரெஸ்ட் ரூம் இருக்க, அங்கே சென்றவள் தன்னை சீர்படுத்தி வெளியில் வந்தாள்.
ஜெயந்தியின் முகம் பார்த்தான் மருது , கலங்கிய கண்கள் பார்த்து பழகியவர்களுக்கு தெரியும், ஆனால் அந்த கண்களில் கலக்கமில்லை. ஆம் கலங்கிய கண்கள் ஆனால் கலக்கமில்லை. மருதுவிற்கு இந்த வித்தியாசம் புரிந்தது. ஏதோ முடிவெடுத்தவள் போல தோற்றம். ஆம், முடிவெடுத்து விட்டாள். வாழ்க்கையில் எதையும் இனி எதிர்பார்ப்பதில்லை என.    
“நான் போய் சுத்தி பார்க்கட்டுமா?” என்றவளிடம், 
“இரு விஷால் இல்லைன்னா விமலன் வர சொல்றேன்” என்றான்.
“இல்லை வேண்டாம், நான் தனியா போறேன்”
“நான் வர்றேன்” என்று மருது எழ,
“என்னவோ உங்களை பார்க்கணும்னு தோணிச்சு, அப்படின்னு சொல்றதை விட, நீங்க என்னை பார்க்கணும்னு தோணிச்சு. அதான் கால்ல செருப்பு கூட போட முடியலை அப்போவும் நடந்து வந்தேன்”
“இப்போ எனக்கு தனியா நடக்கணும் போல இருக்கு, தனியா சுத்தி பார்க்கறேன்” என்று வெளியேறினாள்.
சத்தியமாய் அவள் என்ன பேசினாள் என்றே மருதுவிற்கு புரியவில்லை, அதன் அர்த்தம் எங்கே அவனிற்கு புரியும்.   
அவளையே அவன் பார்க்கவில்லை, இதுல காலில் செருப்பு இருக்கிறதா இல்லையா என்றா அவனின் கண்களுக்கு தெரியும்.
அமைதியாய் அமர்ந்து கண் மூடிக் கொண்டான்.
ஆறு மாடிக் கட்டிடம், பிரம்மாண்டம் தான் மருது ஸ்டோர்ஸ். எழாவது மாடி டெரஸ் மட்டும், அங்கே உணவகம்.
விஷாலிற்கு மட்டும் தான் ஜெயந்தி வந்தது தெரியும். க்ராசரி செக்ஷன் முழுவதும் சுற்றிப் பார்த்து முடித்து மேலே ஏறினாள்.
துணிகள் செக்ஷன் அது பெண்களுக்கானது, பின் ஒவ்வொரு மாடியாய் ஏற
நான்காவது மாடியில் ஆண்களுக்கான பிரிவில் விமலன் ஏதோ வேலையாய் இருந்தான்.
அவனை பார்த்ததும் அவனின் அருகில் சென்று நின்றாள். விமலன் கவனிக்கவே இல்லை.
“அண்ணா டேய்”  
ஜெயந்தியின் குரலில் விரைவாக திரும்பியவன் அவளை பார்த்ததும் “ஜெயந்தி” என்று பரவசமாய் அழைத்தான்.
“எப்படி இருக்க?” என்று பரபரப்பாய் அவளை ஆராய்ந்தான், கைகள் உயர்ந்து அவளின் நெற்றி காயத்தை தொட்டு பார்த்தது.
இதனை மருது பார்த்துக் கொண்டிருந்தான். ஆம்! அவனின் மேஜை முன் இருந்த பெரிய ஸ்க்ரீனில் சிசிடிவி மூலம் ஜெயந்தியை தான் பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான்.
அடுத்த அடுத்த தளத்தை அவள் படிகளின் மூலம் தான் எறிக் கொண்டிருந்தாள், லிஃப்ட் உபயோகிக்கவில்லை. மருதுவிற்கு அவள் அது ஏறும் போது தான் செருப்பு போடாமல் வந்திருப்பது புரிந்தது.        
இப்போதும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“எப்படி இருக்க?” என்ற விமலனிற்கு,  
“எப்படி இருக்கேன்? சாப்பிடறேன், தூங்கறேன், அப்போ நல்லா தானே இருப்பேன்” என்றாள்.
“சாப்பிட்டா, தூங்கினா, நல்லா இருக்கிறதா அர்த்தமா?” என்றான் தங்கையை ஆழ்ந்து நோக்கி.
“அப்படி தான் நாம நல்லா இருக்கணும்னா நாம நல்லா இருந்து தான் ஆகணும் அண்ணா” என்றாள்.
“என்ன சொல்ல வர்ற?” என்று விமலன் கவலையாய் கேட்க,
“பேசாத வாயை மூடுன்னு சொல்றேன்” என்றாள் கைகளை கட்டி சற்று திமிரான பாவனையோடு.
கோபம், கோபம், அவளிற்கு கோபம். “ஏன் விமலன் மருதுவிடம் பேசியிருந்தால் அவன் பதில் பேசாமலா இருந்திருப்பான்? ஏன் அப்படி ஒரு சகஜ பாவனையை வளர்த்துக் கொள்ளவில்லை? இப்போது நான் தானே சிரமப்படுகிறேன்” என்று அந்த கோபத்தை விமலன் மீது காண்பித்தாள்.   
விமலன் மேலே பேச வர “ஷ்” என்று உதட்டின் மேல் கை வைத்தவள், “பேசாதே” என்பது போல ஒற்றை விரல் நீட்டி சொல்ல,
அந்த பாவனையில் தன் தங்கை மருதுவின் மனைவியாய் விமலனிற்கு தோன்ற அவன் வேறு பேசவில்லை. ஜெயந்தியின் பதில் அவனை காயப் படுத்தியது.  
அவர்கள் பேசுவது மருதுவிற்கு கேட்காது தானே, இருவரும் பேசுவதை பார்த்திருந்தவன்,
விமலனிற்கு கைபேசியில் அழைப்பு விடுக்க, அதை விமலன் எடுத்ததும், “ஜெயந்தி, கால்ல செருப்பு போடாம இருக்கா, ரெண்டு மூணு சைஸ் ஒரே பேட்டர்ன்ல எடுத்து பேண்டேஜ் சுத்தியிருக்குற காலுக்கு பெரிய சைஸ் போட்டுட்டு, இன்னொரு காலுக்கு கரக்ட் சைஸ் போட்டுக்க சொல்லு. அந்த செக்ஷன்க்கு கூட போய் எடுத்துக் குடு, இன்னும் அவ யாருன்னு யாருக்கும் தெரியாது. பில் என் பேர்ல போட சொல்லிடு” என்றான்.
“ம்ம் சர்” என்ற விமலன் ஜெயந்தியை அழைத்து பெண்களின் காலணிகள் இருந்த இடம் சென்றான். “இது எப்போ ஆச்சு” என்று கேட்டுக் கொண்டே,
ஜெயந்தி எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அவளின் அடிபட்ட கதைகளை பேச அவளுக்கு விருப்பமில்லை.    
அது ஐந்தாவது மாடி பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், அவர்களின் மற்ற உபயோகப் பொருட்கள் அனைத்தும் அங்கே இருக்கும்.
அங்கே தான் விமலன் அவளை அழைத்து சென்றான்.
“நான் போய்கறேன் அண்ணா”  
“நான் உன்னோட அண்ணன்னா உன்னோட வரலை, மருது சர் சொல்லியிருக்கார், அதனால் நான் முதலாளியம்மாவோட வர்றேன்” என்றான்.  
“அண்ணா” என ஜெயந்தி பேச வர,
“அவர் கேமரால நம்மளை பார்த்துட்டு இருக்கார். அதனால தான் நீ என்கூட இருக்குறது பார்த்து, உனக்கு சப்பல் எடுத்து குடுக்க சொல்லியிருக்கார்”
“அவர் பார்த்துட்டு இருக்கார். சோ, நாம இப்போ வாக்குவாதம் பண்ண வேண்டாம் நட” என்று தங்கையிடம் சொல்ல,
ஜெயந்தி அமைதியாய் நடந்து விட்டாள்.
அந்த பிரிவு வந்ததும், விற்பனை பெண்கள் இளைப்பாற இருக்கும் ஸ்டூல் எடுத்து போட்டான்.  காலணி அணிந்து பார்க்கும் இருக்கைகளில் பெண்கள் அமர்ந்திருந்தனர்.
ஜெயந்தியை அமரும்படி செய்து, அவனாகவே அங்கே ஒரு டிசைன் எடுத்து விட்டான் பக்கிள்ஸ் போடுவது போல. அந்த மாதிரி வேறு சைஸ்கள் வேண்டியிருக்க,
அங்கே இருக்கும் பெண்களை பார்த்து “இது மாதிரி வேற பெரிய சைஸ் எடுங்க” என்றான்.
எப்போதும் விமலன் இறுக்கமாய் முகம் வைத்து சுத்தும் ஆசாமி. யாரும் வணக்கம் வைத்தால் கூட தலையசைப்போடு நடந்து விடுவான். வேலையில் வெகு கண்டிப்பு, அதனால் அவன் பெரிய பந்தா ஆசாமி என்ற உருவகம் தான்.  
அதுவும் கஸ்டமர்சை சரியாக கவனிக்காவிட்டால் பேசி விடுவான். இன்று அவன் வரவும், “வணக்கம் சொன்னா கூட சும்மா தலையசைசிட்டு போவான், இவன் சொன்னா நாம செய்யணுமா என்ன?” என்ற நினைப்பு,
இருவர் மேம்போக்காய் தேடி பார்த்து “இல்லை” என்றனர்.
“இருக்கும் நல்லா தேடிப் பாருங்க”  
ஜெயந்தியை யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அங்கே யாருக்கும் தெரியாது. இப்போது புதிதாய் வேலைக்கு வந்தவர்கள் தான் அனைவரும். இதில் விமலன், மருதுவின் உறவினன் என்றே வெகு சிலருக்கு தான் தெரியும்.    
“அட இல்ல சார்” என நீட்டி முழக்க,
“சரி” என்று தேடி வேறு ஒன்றை எடுத்தவன், அதற்கு சைஸ் கேட்க நிஜமாகவே அதற்கு சைஸ் இல்லை.
அதற்கும் “சைஸ் இல்லை” என்றனர்.
“ஷீபா மேம் கூப்பிடுங்க” என்றான்.
அவர் அந்த பெண்களின் செக்ஷ்ன் இன்சார்ஜ்,
அவர் உடனே வர “எனக்கு இந்த மாதிரி வேணும், தேடி எடுத்து கொடுக்க சொல்லுங்க. இல்லை வேற மாடல் இந்த மாதிரி டிசைன் வேற வேற சைஸ்ல எடுக்க சொல்லுங்க” என்றான்.
“ஒரு சாதாரண செருப்பிற்கு என்னை கூப்பிடுவதா? எனக்கு மேலே இருந்தால் என்னை வேலை வாங்குவானா?” என்று அந்த பெண்மணிக்கு தோன்றியது.

Advertisement