Advertisement

அத்தியாயம் இருபத்தி ஏழு :
ஆகிற்று, ஜெயந்தி மருதுவின் வீடு வந்து ஒரு வாரம் ஆகிற்று. இன்னும் “என் வீடு” என்று அவளுக்கு சொல்ல வரவில்லை, மனதிலும் தோன்றவில்லை. என்ன இருந்தாலும் வீட்டை விட்டு அவன் போ என்று சொன்னது மனதில் ஆறாத வடு தானே! அடித்தது கூட பெரிதாக தோன்றவில்லை. ஆனால் போ என்று சொன்னது, எந்த க்ஷணம் அது நினைவில் வந்தாலும், அவளையும் மீறி கண்களில் நீர் வழிந்தது.
எதிர்கால வாழ்க்கையைப்  பற்றிய அக்கறையில் அவனோடு வசிக்க வந்து விட்டாள். கூடவே மருதுவினோடு ஒரு வாழ்க்கை அவளுக்கும் வேண்டும் என்று ஆசை. அது கணவன் என்ற உறவாலா இல்லை ஜெயந்திக்கு அவனை அவ்வளவு பிடித்து இருக்கிறதா பகுத்தறிய முடியவில்லை. எப்போதும் அவன் நினைவு தான்.
ஆனாலும் “போ” என்று சொன்ன மருதுவுடன் வாழ வந்து விட்ட அவளுடைய செய்கையை அவளின் மனதின் ஒரு ஓரம் ஏற்க முடியாமல் தவித்தது உண்மை.  
மருது சமையலுக்கு ஆள் வைத்து விட்டான். இப்போது தான் ஜெயந்தி வீட்டில் இருக்கின்றாளே. அவன் தனியனாய் இருக்கும் போது வீட்டுக்குள் யாரும் வருவதை விரும்ப மாட்டான்.
சுத்தம் செய்யும் அக்கா தான் வந்து போவார், அதுவும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை.
சமையலுக்கு சாமான் எல்லாம் மீண்டும் புதிதாய் வாங்கினர். “நான் வாங்கி வெச்ச மளிகை சாமான் எல்லாம் எங்கே?” என்று ஜெயந்தி கேட்ட கேள்விக்கு மருது பதில் சொல்லவில்லை.
அவன் தான் ஜெயந்தியை அழைக்கும் எண்ணத்திலேயே இல்லையே. அப்போதே அந்த அக்காவிடம் “எடுத்துக் கொண்டு செல்லுங்கள்” என்று விட்டான்.
ஆனால் அதை இப்போது சொல்லவில்லை.
“என்ன வேணும்னு சொல்லு கடையில இருந்து கொண்டு வரச் சொல்றேன்” என்று முடித்துக் கொண்டான்.
இதோ இப்போது வரை மருது ஸ்டோர்சிற்கு வா என்று அழைக்கவில்லை.
“இவ்வளவு கோபாமா இல்லை ஈகோ வா என்ன?” என்று அவளுக்கு புரியவில்லை.
பேசவில்லை என்று சொல்ல முடியாது தேவைப்பட்டால் பேசினான், இயல்பான பேச்சு தான், ஆனாலும் அது கணவன் மனைவி பேச்சு கிடையாது.    
உரிமையும் இல்லை! நெருக்கமும் இல்லை!
சில சமயம் அப்படி ஒரு ஆத்திரமும் கோபமும் கிளம்பும், “என்னடா பண்ணினேன் உன்னை நான். என்ன பண்ணினேன்?” என்று கன்னம் கன்னமாக அறையும் ஆத்திரம் கிளம்பும்.
“பேசாமல் என்னை திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் நானாவது நன்றாக இருந்திருப்பேன்” என்று தோன்றியது.
அதுவரை அவளுக்கு நன்றாக புரிந்தது அவனும் நன்றாக இல்லை என்று.
ஒரு வாரம் வகை வகையாக சமைக்கச் சொல்லி நன்றாக உண்டு உறங்கினாள். அது அவளின் அடிபட்ட காய்ந்த தோற்றத்தை சற்று மாற்றி ஒரு செழு செழுப்பை கொடுத்தது.
வீட்டை விட்டு ஒரே ஒரு முறை அதுவும் முன்தினம் தான் வெளியே சென்றிருந்தாள் தையல் பிரிக்க, அதற்கு முன் ஒரு நர்ஸ் வீட்டிற்கு வந்து பிளாஸ்டர் மாற்றி இருந்தார். கால் வலி இன்னும் இருந்ததினால் காலில் க்ரெப் பேண்டேஜ் சுற்றி இருக்க, பத்து நாட்கள் நடப்பதை தவிர்க்க சொல்லியிருக்க , அத்தியாவசிய வேலைகள் தவிர்த்து முற்றிலும் நடப்பதை தவிர்த்து விட்டாள்.    
இந்த ஒரு வாரமாக பிறந்த வீட்டினருடன் அலைபேசியில் மட்டுமே தொடர்பு. அவர்கள் யாரும் வரவில்லை, வரவா என்று கேட்கவில்லை, இவளும் வாருங்கள் என்று அழைக்கவில்லை.  
இன்று மதிய உணவை ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்தாள். எதிரில் மருது இவள் உண்ணுவதை பார்த்தும் பாராமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆம்! அவனுடன் தான் மூன்று வேளையும் உண்ணுவது. தேவையானதை அவரவரே பரிமாறிக் கொள்வர்.
சூடான சாதத்தில் முதலில் பொடி போட்டு நல்லெண்ணை விட்டு உண்டு, பின்பு பருப்பில் சில வாய், பின்பு கீரையில் சில வாய், என்று தொடரந்து ரசம் கட்டி தயிர் என்று முடிந்தது.
மருதுவிற்கு அவள் உண்ணும் அழகில் சிரிப்பு வர பார்த்தது. “சாப்பிடறதுக்குன்னே பொறந்த மாதிரி சாப்பிடறா?” என அவன் நினைக்க,
உண்டு முடித்து தலை நிமிர்ந்தவள் அவனின் பார்வையை பார்த்து அதில் இருந்த லகுத்தன்மையை ஜெர்மனியில் இருந்து வந்த நாளாக முதல் முறை பார்த்து அவளும் இயல்பாய் பேசினாள்.
“சாப்பிடறதை இப்படி கண்ணு வெச்சா எனக்கு வயிறு வலிக்கும்”
பதில் எதுவும் பேசவில்லை மருது அமைதியாக தான் இருந்தான்.
“என்ன இது சாப்பாடே பார்த்திருக்காத மாதிரி சாப்பிடறான்னு  நினைச்சீங்களா?” என்று அவனை விடாது பேச்சில் இழுத்தாள்.
“இல்லை” என்பது போல தலையாட்டினான்.
“அப்புறம் என்ன நினைச்சீங்க?”
“சாப்பிடறதுக்கே பொறந்த மாதிரி சாப்பிடறான்னு நினைச்சேன்” 
“தோடா, அப்போ கண்ணு வெச்சிட்டீங்க. எனக்கு மட்டும் வயிறு வலிச்சது…” என்று அவனை மிரட்டும் தொனியில் பேச,
“கண்டிப்பா வலிக்கும், இவ்வளவு சாப்பிட்டா எப்படி ஜீரணமாகும்?” 
என்னவோ அதுவரை அவனின் பேச்சுக்களை ஈசியாக எடுத்து கொண்டவளுக்கு சட்டென்று ஒரு கோபம் வர,
“ஏன் ஆகாது, அதெல்லாம் ஆகும்” என்று முறைத்தபடி எழுந்து சென்று கை கழுவி வந்தவளை எதிர்கொண்டவன், “கோபம் வந்துடுச்சா?” என்றான்.
“பின்ன சாப்பிடறதை பேசினா வராதா?”
உண்மையில் வேறு விஷயமாய் இருந்தால் கோபம் வந்துடுச்சா என்ற கேள்வியை கேட்டிருக்க மாட்டான். உணவை பற்றிய விஷயம் என்பதால் பேசினான்.  “சே, சே, கிண்டலுக்கு சொல்லலை நிஜமா தான் சொன்னேன், இன்னும் உன் கால் வலி சரியாகலை, நடக்கவும் கூடாது, பேண்டேஜ் போட்டு ரொம்ப அவசியம்னா தான் நடக்கற, அப்போ எப்படி செரிமானம் ஆகும்” என்றான் அக்கறையாய்.
“ஒரு ஒருத்தர் உடம்பு ஒரு மாதிரி, நான் எப்பவுமே நல்லா சாப்பிடுவேன். நான் சாப்பிடற அளவு யாராவது சாப்பிட்டா உப்பி வெடிச்சிடுவாங்க, ஆனா எனக்கு சதை போடாது பாருங்க. எனக்கு எங்கேயாவது எக்ஸ்ட்ரா சதை இருக்க என்ன? அதுவும் ஜெர்மனில சாப்பாடு இல்லாம காஞ்சு கிடந்தேன். இங்க வந்தும் தனியா போயிட்டு சாப்பிட எதுவும் இல்லை, சமைக்க மூடும் இருக்காது, பசியும் இருக்காது, இப்போ ஒரு வாரமா உங்க கூட இருக்கவும் தான் பசிக்குது. நீங்க இப்படி என்னை கண்ணு வைக்க கூடாது” என்றாள் சீரியசாக.
மெதுவாக அவன் இதழ்களை இழுத்து பிடிக்க “ஒஹ் இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல சிரிப்பா?” என்றாள் கிண்டலாக.
மருதுவின் மனம் வெகுவாக தான் கனிந்தது, ஆம்! உங்களோட இருக்கவும் தான் பசிக்குது என்ற வார்த்தையில். அதோடே அவன் பார்த்திருக்க,    
“எங்கேயாவது எனக்கு எக்ஸ்ட்ரா சதை இருக்கா என்ன?” என்ற கேட்ட கேள்வியில் அவளை தான் பார்த்திருந்தான். ஆனால் பார்வை மாறியது. கனிவு மாறி மனைவியின் உடலை பார்வையில் ஆராய, என்ன தெரிந்தது அங்கே சொல்ல, ஒரு நைட் பேன்ட் ஷர்ட், அதுவும் அந்த சட்டை கூட, முழுக்கை சட்டை.
“எனக்கு ஒன்னும் கண்ணுக்கே தெரியலையே, எக்ஸ்ட்ரா சதை போட்டிருக்கான்னு பார்க்க” என்று மனதில் தோன்றிய போதும் அவளுக்கு சரிக்கு சரி எல்லாம் அவன் பேசவில்லை.
ஜெயந்தியும் முடிந்தவரை பேச்சில் இழுப்பாள்.
ம்கூம், மருதாச்சலமூர்த்தி ஷப்பா அவனை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை.
“எப்போ ஜெயந்தி நீ இவன் கூட குடும்பம் நடத்தி குழந்தை பெத்துக்கப் போற” என்று மனதிற்குள் நொந்து கொண்டாள்.
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனிற்கு அழைப்பு வர, அதை எடுத்து காதில் வைத்தவன் பேசிக் கொண்டே “நான் போகிறேன்” என்று சைகையில் சொல்லியபடி கிளம்பி விட்டான். 
“போடா, உன்னை என் பின்னால சுத்த விடறேன், இப்போ நீ என்னை சுத்த விடற மாதிரி” என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள்.
உடனேயே “முடியாது போலயே” என்று அவளுக்கு அவளே சலித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
பின்பு ஒரு உறக்கம், இப்படியாக மேலும் மூன்று நாட்கள் கழிந்தது. முகத்தினில் நெற்றில் தழும்பு இருக்க, முன்பு அடிப்பட்டது எல்லாம் எதுவுமில்லை, கண்களுக்கு கீழ் ஒரு சிறு கரு வளையம், அதுவும் அவளின் முகத்திற்கு ஒரு சோபையான அழகை கொடுத்தது.
பத்து நாள் ஆகிவிட, மெதுவாக கால்களில் இருந்த கிரெப் பேண்டேஜ் எடுத்து நடந்து பார்த்தாள். வலி ஒன்றும் இல்லை. இருந்தாலும் இன்னும் ஒரு வாரம் போட்டுக் கொள்ள முடிவெடுத்து அதனோட நடக்க செய்தாள்.
நடக்க ஆரம்பித்த பிறகு வீட்டில் கால் நிற்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்ய, மருது காலையில் எழுந்து குளித்து வேம்புளியம்மனை தரிசிக்க செல்ல, “நானும் உங்க கூட வரட்டுமா?” என்று அவனின் முன் நின்றாள்.
அப்போது தான் எழுந்து டீ அருந்திக் கொண்டிருந்தாள், அதுவும் மருது போட்டுக் கொடுத்தது, மணி ஏழு. மருதுவே காலையில் இருவருக்கும் இப்போது போட்டு விடுகிறான். 
சமையல் செய்பவர் ஏழரை மணிக்கு தான் வருவார், இரண்டு பேருக்கு தானே, எட்டரை மணிக்கு சுட சுட எல்லாம் பரிமாறுவார். 
“இன்னும் நீ குளிக்கலை, உனக்காக காத்திருந்தா நான் போக நேரமாகும். நாளைக்கு என்னோட வா, இன்னைக்கு எனக்கு வேலை இருக்கு” என்றான்.
“என்ன வேலை?”
“பண்டிகை வருது அதுக்கு என்னன்னு பார்க்கணும்”  
“ஓஹ் ரேடியோ வைக்கிற பண்டிகையா?” என்று அவள் பேச,
“ம்ம், ஆடி மாச பண்டிகை” என்று எடுத்துக் கொடுத்தவன் கிளம்பிவிட,
வேகமாய் குளித்து சுரிதார் பேன்ட் ஷர்ட் எல்லாம் ஓரம் கட்டி, ஒரு ஜார்ஜெட் புடவை எடுத்து அணிந்து பளிச்சென்று தயாராகி நின்றாள். திருமணதிற்கு தைத்தது, இப்போது அந்த ப்ளவ்ஸ் சற்று லூசாக இருந்தது. அது ஒரு அழகை கொடுக்க,   
முகத்திற்கு மேக் அப் போட்டுக் கொண்டிருகிறாள் என்று தெரியாத வகையில் ஒரு லைட் மேக் அப், மருதுவிற்கு காத்திருக்க அவன் காலை உணவிற்கே வரவில்லை.
ஒன்பதரை மணி போல அழைத்தவன் “இங்க ஸ்டோர்ஸ் வந்துட்டேன், லோட் ஒன்னு வந்தது, பத்து மணிக்கு தான் இவனுங்க வருவானுங்க, நானே வந்துட்டேன்” என்று சொல்லி விட,
அவனுக்காக பார்த்து பார்த்து அலங்கரித்து நிற்க அவன் வராமல் போனது மிகவும் கடுப்பாகி விட்டது.
அந்தக் கடுப்பில் வேண்டுமென்றே “முதல்லயே சொல்லணும் தானே. இப்போ சமைச்சது எல்லாம் ஆறிப் போச்சு, நானாவது சூடா கொட்டிகிட்டு இருப்பேன்ல” என்றாள் எரிச்சலான குரலில்.
“உன்னை நான் கொட்டிக்க வேண்டாம்ன்னா சொன்னேன்” என்றான் அவனும்.
“பின்ன கொட்டிக்க தானே பொறந்திருகேன், நீங்க என்னை கட்டிக்கவா பொறந்திருக்கேன், அதொண்ணுமில்லைல” என்று சொல்லி அலைபேசியை அணைத்தாள்.
ஜெயந்தியின் பேச்சில் மருதுவின் முகத்தில் ரம்மிய சிரிப்பொன்று மலர்ந்தது.
அப்போது தான் விமலன் வேலைக்கு வந்தான், “வா விமலா” என்று அவனாய் மருது பேச,
விமலனிற்கு கண்களில் நீரே வந்து விடும் போல ஆகிற்று. பின்னே மருது என்ற மனிதனின் பாராமுகம் அவனை அவ்வளவு வருத்தி இருந்தது.
“ஹான் சர்” என்று அவன் விரைந்து வர, “இந்த லோட் எவ்வளவு என்னன்னு குறிச்சு வெச்சுக்கோ” என்றான்.
அதை சொல்லும் போது மருதுவிற்கு கமலனின் ஞாபகம், விமலனிற்கும் அதுவே, பின்னே இதெல்லாம் அவனின் வேலை.
இப்போது இந்த ஒரு மாதமாக வெட்டியாய் சுற்றிக் கொண்டிருந்தான். அதனால் நண்பர்கள் சேர்க்கை அதிகரிக்க, இரவில் அவ்வப்போது குடிப் பழக்கமும் வந்திருக்க, வீட்டில் இன்னம் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தெரியவில்லை. விமலன் மட்டுமே கண்டு கொண்டிருக்க, மருதுவிடம் அவனை வேலையில் திரும்ப சேர்த்துக் கொள்ள கேட்போம் என்று நினைத்தவன், முதலில் ஜெயந்தியிடம் பேசுவோம் என்று விட்டு விட்டான்.
வீட்டிலா, ஜெயந்திக்கு பார்த்து பார்த்து தயாரான பிறகு மருது தன்னை பாராமல் சென்றது ஒரு ஏமாற்றத்தை தர, மதிய உணர்விற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த சமைக்கும் பெண்மணியை “அக்கா, நான் வெளில போறேன் வந்து ஃபோன் பண்றேன்” என்று விட்டாள்.
காலையில் சமைத்தது எல்லாம் மேஜை மேல் இருக்க, இதோ வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டாள் மருது ஸ்டோர்சிற்கு. வீட்டிற்கே வசிக்க வந்து விட்டாய் இன்னும் அவன் ஸ்டோர்சிற்கு அழைக்கவில்லை என்று முரண்டு பிடிப்பாயா என்று நினைத்து.
இதோ வந்து விட்டாள், மெதுவான பொறுமையான நடை கால்களில், இன்னம் கிரெப் இருக்க காலணி அணிய முடியவில்லை. ஆனாலும் வெறும் காலுடனே நடந்து வந்துவிட்டாள்.
அப்போது தான் ஸ்டோர்ஸ் திறந்து வேலை செய்பவர்கள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். இவள் வெளியில் நின்று அதன் தோற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்
முதலில் இவளை பார்த்து அப்போது தான் உள்ளே வந்து கொண்டிருந்த விஷால். பைக்கில் வந்தவன் இவளை பார்த்தும் அந்த இடத்திலேயே நிறுத்தி “மேம் எப்படி இருக்கீங்க?” என்று வேகமாய் வந்தான்.
அடிபட்ட அன்று பார்த்தது தான், பின்பு ஜெயந்தியை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, மருதுவிடம் பார்க்க கேட்க பயம்.
“நல்லாயிருக்கேன்” என்பது போல ஒரு சிறு தலையசைப்பு. 
“ஏன் இங்கயே நின்னுட்டீங்க?”
“உள்ள போயிட்டே இருக்கேன்” என்று அவள் மெதுவாக நடக்க
“அண்ணா பைக்கை நிறுத்திடுங்க” என்று சாவியை செக்யுரிட்டியிடம் தூக்கி போட்டவன் அவளோடு வெகுவாய் இடைவெளி விட்டு நடக்க ஆரம்பித்தான்.
உள்ளே சென்றவளின் கண்கள் மருதுவை தேடினாலும் விஷாலிடம் கேட்கவில்லை.
உடன் வந்த அவனிடம் “அன்னைக்கு அந்த வீட்டை விட்டு வந்தது தான், திரும்ப நான் போகவேயில்லை உங்க கிட்ட சொல்லவுமில்லை, இன்னைக்கு சாயந்தரம் போயிட்டு என்னோட திங்க்ஸ் எடுத்துட்டு உங்ககிட்ட சாவி கொடுக்கறேன். எவ்வளவு ரெண்ட்ன்னு சொல்லுங்க குடுத்துடலாம். நீங்க செஞ்சது ரொம்ப டைம்லி ஹெல்ப் தேங்க்ஸ் அ லாட்” என்றாள் மனமார்ந்து.
“அச்சோ மேம், இதெல்லாம் ஒன்னுமேயில்லை அண்ணன் எனக்கு செஞ்சிருக்குறதுக்கு” என்று விஷால் சொல்ல,
“அப்போ உங்க அண்ணனுக்காக தான் செஞ்சிருக்கீங்க, எனக்காக இல்லை” என்று அவள் சொல்லும் போது அந்த இடத்திற்கு மருதாச்சலமூர்த்தி வர, அவனை பார்த்ததும் ஜெயந்தி அமைதியாகிவிட, விஷால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.
மருதுவிற்கு அங்கே ஜெயந்தியை பார்த்ததும் கண்களில் ஒரு பரவசம் தான். ஆனால் அவளை பார்த்து கேள்வி தானாக வந்தது
“ம்ம் இவ்வளவு நாள் ஆச்சு உனக்கு இங்கே வர”
“அம்மாடி எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல்ல இருந்து போடறீங்களா? என்னால சத்தியமா முடியாது” என்று ஜெயந்தி பதட்டத்துடன் பட படத்து விட
விஷாலிற்கு என்ன முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை, சத்தமாய் சிரித்து விட்டான்.        
“டேய்” என்ற மருதுவின் குரல் வேகமாய் ஒலிக்க வேகமாய் மருதுவின் கையை பிடித்துக் கொண்ட ஜெயந்தி “ஓடிப் போய்டுங்க, அடி வாங்காதீங்க” என்று இலகுவாய் பேச,   
நொடியில் சிரிப்பை நிறுத்திய விஷால் வேகமாய் நடந்து விட்டான்.
மருதுவிற்கு விஷாலின் சிரிப்பில் சட்டென்று கோபம் பொங்கிய போதும் ஜெயந்தியின் செய்கையில் தணிந்தான். ஆனாலும் பார்வையில் முறைப்பு இருக்க,
சுற்றி வேறு எல்லோரும் பார்க்க, அவனின் கையை உடனே விட்டு “சாரி” என்று கண்களில் மன்னிப்பை யாசித்தாள்.   
“எப்போ பார்த்தாலும் சொதப்புவியாடி நீ” என்று தன்னை தானே திட்டி கொண்டு, கண்கள் மன்னிப்பை மருதுவிடம் யாசித்தாலும் முகத்தில் உடல் மொழியில் சிறு பிள்ளை தனத்தை கை விட்டு ஒரு கம்பீரத்தை கொண்டு வந்து விட, மருது நடக்க அவனோடு நடக்க ஆரம்பித்தாள், “நீதாண்டி இவன் பின்ன சுத்துற” என்ற பெரிய மனக் குறையோடு.    
எப்படி இருக்குமோ தன் வாழ்க்கை என்று இங்கே வந்த நாளாய் தோன்றும் பயம் மீண்டும் வந்தது.
மருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் மலை இறங்க மாட்டானா என்று மனதில் பெரும் ஆயாசம் எழுந்தது.   
        
       
  
        

Advertisement