Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு :
சோர்ந்த நடையுடன் ஜெயந்தி அந்த ஹாஸ்பிடலின் நீண்ட காரிடாரில் நடந்து வந்து கொண்டிருந்தாள். முகத்தில் கர்சீப் கட்டியிருந்தாள்.
அப்போது தான் மருது வந்து அமர்ந்திருந்தான். இன்று புண் எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு, தையல் பிரிக்கலாம் என்று வரச் சொல்லியிருந்தார்கள்.    
மருதுவுடன் அந்த ஹாஸ்பிடலில் பணிபுரியும் ரிசப்ஷன் ஆள் நின்று கொண்டிருந்தான். டாக்டர் வந்ததும் முதல் ஆளாய் அவனை உள்ளே அனுப்பிவிட உடன் இருந்தான்.
மெதுவாக நடந்து வந்தாள். வேகமாக நடந்தால் இடுப்பில் இன்னும் வலி இருந்தது. வேறு எந்த பகுதியாக இருந்தாலும் அப்படியே விட்டிருப்பாள், இடுப்பு என்பதால் உள்ளே எதுவும் அடிபட்டு இருந்தால் நாளை குழந்தை பிறப்பு என்று வரும் போது எதுவும் பிரச்சனை வந்து விட்டால் என்ற பயம்.
வந்தவள் அங்கிருந்த நர்சிடம் “சர் பார்க்கணும்” என்று சொல்லி அப்பாயின்ட்மென்ட் வாங்கி அமர்ந்து கொண்டாள்.
அங்கேயே அமர்ந்திருந்த மருதுவை பார்க்கவேயில்லை.
ஆனால் மருதுவின் பார்வை முழுவதும் அவளிடம் தான். நடந்து வரும் போதே கவனித்தான். அவளின் நடை சரியில்லாததை, இன்னும் சரியாகலையா என்று தான் பார்த்திருந்தான். மனதை பிசைந்தது.
ஜெயந்தியை பார்க்கும் வரை அவள் வேண்டாம் என்று சூரியனாய் தகித்திருந்த மனது, அவளை பார்த்ததும் பனியாய் உருகத் துவங்கியது.
அன்று அவர்களிடம் சண்டை போட்ட சிஸ்டர் “என்னடா ரெண்டும் தனியா தனியா உட்கார்ந்து இருக்கு, “புட்டுக்கிச்சா, பின்ன அந்த அடி அடிச்சிருக்கான்” என்று மனதிற்குள் நினைக்க,
சரியாய் அந்த நேரம் பார்த்து சீஃப் டாக்டர் வந்து விட, வெளியில் அமர்ந்திருந்த அவனை பார்த்ததும் “வாங்க, வாங்க மருது” என்று அவனை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றார்.
அப்போது தான் அந்த குரலில் “மருது” என்ற பெயரில் சுற்றம் உணர்ந்து வேகமாய் நிமிர்ந்து பார்க்க,
அவன் டாக்டருடன் உள்ளே சென்று கொண்டிருப்பது தெரிந்தது, உள்ளே நுழையுமுன் அந்த சிஸ்டரிடம், “என் மனைவியையும் உள்ளே அனுப்புங்க”  என்று சொல்லிச் சென்றான்.
சிஸ்டர் உடனே “மேடம் உங்களை உள்ளே கூப்பிடாங்க” என்று சொல்ல,
“என்னய்யா கூப்பிடுகிறான்” என்று நினைத்ததும் அவளின் முகம் மலர்ந்து விட முடிந்த வரை வேகமாய் தான் சென்றாள்.
உள்ளே சென்றவள் மலர்ந்த முகத்தோடு மருதுவை பார்க்க அவன் கண்டு கொள்ளவேயில்லை. மலர்ந்த முகம் சுருங்கி விட அமைதியாய் சென்று அமர்ந்தாள்.
“முதல்ல யாரை பார்க்கட்டும்” என்று டாக்டர் கேட்க,
மருது பதில் சொல்லும் முன்னமே “இவரை பாருங்க” என்றாள்.
அவர் கை கட்டை பிரிக்க சொல்லி ஆராய்ந்து பார்த்து தையல் பிரித்து, “ஒரு இருபது நாளைக்கு ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க, கம்ப்ளீட் ரெஸ்ட்” என்று சொல்ல,
“பைக் ஓட்டலாமா?” என்று கேட்டான்.
“ம்கூம், கூடாது நல்லா ஆறட்டும்” என்றார்.
அதன் பிறகு ஜெயந்தியை பார்க்க “முகம் எல்லாம் சரியாகிடுச்சு” என்று அவள் சொல்ல,
“எங்க சரியாகிடுச்சு” என்று நினைத்தவன், அவளிடம் சொல்லவில்லை.
“ஆனா இடுப்பு வலி இருக்கு, நடந்தா வலிக்குது” என்றாள்.
“எக்ஸ்ரே எடுத்துடலாம்” என்று அவர் சொல்ல, எடுக்க எழுந்து வெளியே போனவள், மருதுவை பார்க்க, அவன் அங்கேயே தான் அமர்ந்திருந்தான்.
அவள் சென்று விட,
“டாக்டர் இன்னும் முக வீக்கம் இருக்கே”
“சரியாகிடும், முன்ன விட குறைஞ்சிருக்கு”
“கண்ணு சுத்தி கருப்பா இருக்கு”
“நாளாகும் சரியாகிடும்”
“தழும்பாகுமா?”        .
“ஆகாது, எதுக்கும் கிரீம் எழுதி தர்றேன், எக்ஸ்ரே எடுத்துட்டு வரட்டும்” 
பிறகு தான் எழுந்து வெளியே வந்தான்.
எக்ஸ்ரே எடுக்குமிடம் சென்றால், அங்கே நிறைய ஆட்கள் இருக்க, இவள் வெளியே தான் அமர்ந்திருந்தாள்.
ரிஷப்ஷனில் இருப்பவனுக்கு அழைத்தவன் “உள்ளே விட சொல்லுடா” என, அவன் விரைந்து வந்து அனுப்பினான்.
ஜெயந்தி அவனை கலக்கமாய் திரும்பி திரும்பி பார்த்தாள், “கூட வாயேன்” என்பது போல்.
“வேண்டாம்” என்று நினைத்தாலும், தன்னை மீறி அவளை நினைத்து கலங்குவது அவனுக்கேப் பிடிக்கவில்லை. அவளின் வீட்டினர் யாரும் உடன் வந்திருந்தால் நான் பாட்டிற்கு சென்றிருப்பேனே என்று நினைத்தவன், அந்த கோபத்தை மறைக்காது அவளிடம் காண்பித்தான்.
“உன்னை யாரு தனியா வரச் சொன்னா, உங்கம்மாவை கூட்டிட்டு வர வேண்டியது தானே” என்று வார்த்தைகளை அவளுக்கு மட்டும் கேட்குமாறு அருகில் வந்து கடித்து துப்பினான்.
கண்களில் நீர் நிறைந்து விட்டது. மருது அதற்கும் அவளை பேச வர,
நொடியில் அவளின் பாவனை மாறியது. கண்களில் நீர் நிறைந்து இருந்தாலும் கலக்கம் மறைந்து அதில் ஒரு சீற்றம் தெரிய, வாய் மேல் ஒற்றை விரல் வைத்து “பேசாதே” என்ற பாவனையை கொடுத்தவள் உள்ளே சென்று விட்டாள்.
“பாரேன் திமிரை” என்று எள்ளலாய் நினைத்தவன் அங்கேயே அமர்ந்து கொண்டான். விட்டுச் செல்லவும் மனதில்லை.  
எக்ஸ்ரே எடுப்பவன் வந்து “உங்க வைஃப் கூப்பிடறாங்க சார்” என்றான்.
“பேசாதேன்னு மிரட்டிட்டு போனா, எதுக்கு கூப்பிடறா” என்று உள்ளே சென்றான்.
அவனை பார்த்ததும் “ட்ரெஸ் மாத்த சொல்றாங்க, கூட இருங்க” என்றாள்.
இதற்கு அங்கே ஒரு பெண்ணும் இருந்தாள்.
உள்ளே ஒரு சிறிய அறை போல இருக்க “அங்கே மாத்திட்டு வாங்க” என்று சொல்லப் பட, அவள் சென்றதும் உடன் சென்றான்.
“அந்த பொண்ணை கூப்பிட வேண்டியது தானே” என்று கடிக்க,
“ஒரு வயசுக்கு மேல எங்கம்மா முன்ன கூட நான் டிரஸ் மாத்தினதில்லை, வேற பொண்ணை கூப்பிட சொல்வீங்களா” என்று அவளும் காட்டமாய் பதில் சொன்னாள்.
சுற்றும் முற்றும் பார்த்து லைட்ஸ் ஆஃப் செய்து, பின்பு போட்டு, என்று கேமரா எதுவும் இருக்கிறதா என்று சரி பார்த்து பின் மருதுவிற்கு முகத்தை காண்பிக்காமல் திரும்பி நின்று கொண்டு,     
வேகமாக உடையை கழற்றி, அவர்கள் கொடுத்திருந்த உடையை அணிந்து, பின்புறம் அந்த உடையில் இருந்த முடிச்சை கட்டி விடுங்கள் என்று சொல்ல,
முதலில் அவள் என்ன செய்தால் என்றே அவனால் கிரகிக்க முற்படவில்லை , பின்பு தான் கேமரா எதுவும் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று புரிய, உடனே உடையை கழட்டி, வேறு அணிந்தாள்.   
மனைவி தான் பார்த்திராதவள் இல்லை. ஆனால் கிட்ட தட்ட இரண்டு வருடம் அவள் அருகில் இல்லாத வாழ்க்கை, இப்போது இப்படி அருகில் உடை மாற்றும் போது பார்க்க, அவளின் வாசனையை கூட உணர்ந்தான்.
உள்ளே இருந்த இருதயம் துடித்து வெளியே விழுந்து விடுமோ என்று தோன்ற, இருக்கும் இடம் கொண்டு நிலை கண்டு மனதை சமன் செய்தான்.
“இவள் வேண்டும் என்றே செய்கிறாளோ? நான் தடுமாறுவேன் என்று நினைத்தாளோ? நான் தடுமாற மாட்டேன்” என்று நினைத்தாலும் சற்று தடுமாறி தான் போனான்.  
ஆனால் ஜெயந்தி அப்படி கிஞ்சித்தும் நினைக்கவில்லை, பக்கத்தில் படுத்து அணைத்த பிறகு அவன் ஒரு நாள் முழுவதும் காணாமல் போனது, கை பிடிக்க வந்தால் முகத்தை திருப்பிக் கொண்டது என எதையும் அவள் மறக்கவில்லை. அதனால் மருது தன்னை கண்டு தடுமாறுவான் என்ற எண்ணம் சிறிது அவளிடம் இல்லை.
இரண்டு வருடத்திற்கு முன் இருந்த அவனோடான ஒரு மாத வாழ்க்கை தற்போது அவளின் நினைவடுக்கில் ஒரு முன் ஜென்ம நிகழ்வு தான்.    
ஜெயந்தி மருதுவை அழைத்தது ஒரு பாதுகாப்பிற்காய் மட்டுமே! 
பின் வெளியே வந்து அவளுக்கு எக்ஸ்ரே எடுத்து, பின் அவள் மீண்டும் உடை மாற்றி வெளியே வந்து ரிப்போர்ட் வாங்கி, டாக்டரிடம் காண்பித்து அவர் ஒன்றுமில்லை தசைப் பிடிப்பாய் இருக்கும் என்று ஆயின்மென்ட் மட்டும் கொடுத்து அனுப்பினார். அதுவரையிலும் மருது எதுவும் பேசவில்லை, அதன் பின்னும் எதுவும் பேசவில்லை, மருது அப்படியே அமைதியாகி விட்டான். 
பின் இருவரும் டாக்டரின் அறையில் இருந்து வெளியே வந்ததும், அவனின் முகத்தை பார்க்க, மருது அவளின் முகம் பார்ப்பதை தவிர்த்து எங்கேயோ பார்வை பதித்திருந்தான்.   
ஜெயந்தியை பார்த்தால் தானே மனது இளகுகிறது, இனி பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்து எங்கேயோ பார்த்தான்.
சில நொடி பார்த்தவளுக்கு அவன் திரும்புவதாய் காணோம் என்று உணர, மேலும் அவனை சிரமப்படுத்த விரும்பாமல் “தேங்க்ஸ்” என்ற ஒற்றை வார்த்தை உதித்தவள் சென்று விட்டாள். ஆம்! சென்றே விட்டாள்.   
அமைதி அமைதி அவளினுள் ஒரு ஆழ்ந்த அமைதி!
என்ன வயது அவளிற்கு? இருபத்தி நாலே வயது. பக்குவம், உலக அனுபவம் எல்லாம் வயதுக்கு மீறி இருந்தாலும், மருதுவிடம் அவள் வெறும் ஜெயந்தி மட்டும் தான். அவனிடம் அதெல்லாம் அவளிற்கு வரவில்லை. மருது தன்னை பார்த்துக் கொள்வான் என்ற வகை நின்று விட்ட மனது தான். நான் அவனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வகை மனதே இல்லை.
மருது பெரியவன் அவனுக்கு எல்லாம் தெரியும் என்ற நினைவு தான். எங்கேயோ எல்லாம் தப்பி விட்டது.    
இன்னும் அவனிடம் எப்படி நடந்து கொள்ள என்றே தெரியவில்லை. இதோ பிரிவு, பிரிவு, பிரிவு!   
பின் விமலனுக்கு அழைத்தவள், “அண்ணா, அம்மாவுக்கு என்னை பார்க்கணும்னா வந்து பார்த்துக்கச் சொல்லு” என்று சொல்ல,   
அன்று மாலையே கலைச்செல்வி பார்க்க வந்தவர், அவளை பார்த்ததும் ஒரு மூச்சு அழுது தீர்த்தார். “அப்பா, உன்னை பார்க்க வரட்டுமான்னு கேட்டார்” என்று சொல்லும் போது அவளுக்கு உருகி தான் போனது.
வசதி இருந்ததோ இல்லையோ அவர்கள் ஏழையோ பாழையோ அவள் கோபாலனுக்கு இளவரசி தானே. மகளை அப்படி தானே அருமை பெருமையாய் வளர்த்தார்.
கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து, அவர்கள் உண்டும் உண்ணாமலும், இதோ இப்போது லட்ச லட்சமாய் பணம் அனுப்பிய போதும், எதுவும் எடுத்து செலவு செய்யவில்லையே. இன்னும் எளிய மக்கள் தானே! 
“வரச் சொல்லுங்கம்மா” என்றாள்.
உடனே அவரும் கமலனும் வந்து விட்டனர். “நான் வேணா போய் மன்னிப்பு கேட்கட்டுமா?” என்று அவரும் அவர் பங்கிற்கு ஆரம்பிக்க,
“பா விடுங்க, இனி நீங்க இதுல எதுவும் பேசக் கூடாது. நடந்தது நடந்ததாவே இருக்கட்டும்” என்று சொல்லி விட்டாள்.
கமலன் எதுவும் பேசவில்லை.
அப்போது பார்த்து ஊரிலிருந்து ஃபோன், விமலனுக்கு பார்க்கலாமா என்று நினைத்திருந்த பெண் வீட்டில் இருந்து அழைப்பு வர, “இல்லைங்க இப்போதைக்கு பையனுக்கு கல்யாணம் பண்ணலை” என்று விட்டார் கலைச்செல்வி.
“என்னம்மா இப்படி சொல்ற?” என்று ஜெயந்தி சொல்லும் போதே “விமலன் வேண்டாம்ன்னு சொல்லிட்டான் ஜெயந்தி, முதல்ல உன் வாழ்க்கை சரியாகட்டும்ன்னு சொல்லிட்டான்”
“மா, என்ன இது பைத்தியக்காரத்தனம், நான் லீவ்ல தான் வந்திருக்கேன். இப்போவே பதினஞ்சு நாள் போயிடுச்சு, இன்னும் பதினஞ்சு நாள் தான் இருக்கு, நான் ஜெர்மனி போறேன் திரும்ப” 
“என்ன?” என்று அதிர்ந்தவர்கள், “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ போக வேண்டாம். மருது தம்பியோட குடும்பம் நடத்துற வேலையை பாரு” என்று கலைச்செல்வி சொல்ல,
“மா, வேண்டாம்னு சொல்றவங்க கால்லையா விழ முடியும், அப்படியே நான் விழுந்தா கூட அவர் சேர்க்க மாட்டார் போல, என் வாழ்க்கை இப்படி தான் ஆகணும்னு விதி இருந்தா யார் என்ன செய்ய முடியும்?” என்று தத்துவம் பேச,
“அவரோட சேர்ந்து வாழறயோ இல்லையோ. இனி நீ ஜெர்மனி போகக் கூடாது. இங்கேயே ஒரு வேலையை தேடிக்கோ” என்றார் அவசரமாக.
அவருக்கு பயம், திரும்ப ஜெர்மனி சென்று அங்கேயே அமர்ந்து கொண்டால், இந்த பிரிவு நிரந்தரப் பிரிவு ஆகிவிடுமோ, மகளின் வாழ்வு என்னாகுமோ என்று.
மகளை அதனால் தான் தங்களின் வீட்டிற்கு அழைக்க பெரிதாய் பிடிவாதம் பிடிக்கவில்லை. தனியாய் இருக்கிறாள் என்றாலாவது மருது சேர்த்துக் கொள்ள மாட்டானா என்று.   
“மா, அந்த சம்பளம் வராதும்மா”
“வரலைன்னா போகுது, பணமில்லாதப்போ கூட நிம்மதியா சந்தோஷமா தான் இருந்தோம்” என்றார்.
பின் கமலனை பார்த்தவள் “இன்டர்வியு என்ன ஆச்சுடா?” 
அவன் அதற்கு பதில் சொல்லாமல் “வீட்டை பத்து நாள்ல காலி பண்ண சொல்லி வீட்டுக்காரங்க சொல்லிட்டாங்க” என்றான்.
அப்படியே ஒரு கோபம் பொங்க,
விஷாலிற்கு அழைத்தாள், “எடுத்தவுடனயே எங்கே உங்க பாஸ், பக்கம் இருக்கிறாரா இல்லை தூரமா?” என,
“அவர் அவர் இடத்துல, நான் என் இடத்துல” என்று விஷால் பேச,
“ஓய், என்ன லந்தா? அவர் கிட்ட போய் ஃபோனை ஸ்பீக்கர்ல போட்டு என்கிட்டே பேசு” என்றாள் அதிகாரமாக.
“எதுக்கு அண்ணி பிரச்சனை? அண்ணன் கோபம் குறையும் வரை அமைதியாய் இருங்க. பின்னே பேசலாம்” என தணிவாய் விஷால் பேச,
“நானா பிரச்சனை பண்றேன். அவர் தான் பண்றார். நான் அமைதியா இருக்கிறதால, என்ன வேணா செய்யலாம்னு நினைக்கறார் போல, சொன்னதை செய்ங்க!” என்று அதட்டினாள்.
அவனும் மருதுவின் கேபின் சென்று “அண்ணி பேசணுமாம்” என்று சொல்ல,
“எனக்கு யார் கிட்டயும் பேச விருப்பமில்லை போடா” என்று மருது அதட்டினான்.
“உங்க கிட்ட இல்லை, என்கிட்ட!”
“அதை எதுக்குடா என்கிட்டே சொல்ற?” என்று காய
“அண்ணா, உங்க முன்ன நான் அவங்க கிட்ட பேசணுமாம் ஸ்பீக்கர் போட்டு!” என்று முழுதாய் விளக்கம் கொடுத்து, ஸ்பீக்கரில் பேசினான்.
“என்ன உங்க பெல் பாட்டம் முதலாளி பக்கத்துல தான் இருக்காறா?” என்றாள் நக்கல் குரலில்.
மருதுவின் முகம் கோபத்தை காண்பிக்க, அதை பார்த்து பயந்து விஷால் “அண்ணி இப்படி பேசாதீங்க” என்றான் அவசரமாக.
“அப்படி தான் பேசுவேன். என்ன எங்கம்மா வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்களாம். யார் சொன்னா? நீங்க சொன்னீங்களா? அதுவும் பத்து நாள்ல?”  
“அடடா, சிக்கிக் கொண்டோமே” என்று நொந்து கொண்டவன் அமைதியாய் இருக்க, அதுவே சொன்னது மருது சொல்லி அவன் தான் செய்தான் என்று.
“உங்க முதலாளி சொல்லி நீங்க தான் சொல்லியிருக்கணும். அவங்க காலி பண்ண மாட்டாங்க. மீறி காலி பண்ண வெச்சா, நான் வந்து உங்க முதலாளி வீட்ல உட்கார்ந்துக்குவேன்!”
“பாவம், அவருக்கு என் முகத்தை பார்க்கப் பிடிக்காது. அப்புறம் அவர் என் முகத்தை பார்க்க பிடிக்காம, வீட்டை விட்டு போகணும்! அவர் தான் வீடில்லாம நிற்பார், பரவாயில்லைன்னா அவங்களை காலி பண்ண வைங்க” என்று அலட்சியம் போல பேசினாள்.
“ஜெயந்தி என்ன இப்படி பேசற?” என்று கோபாலன் இடையிட,
கோபாலன் குரல் கேட்கவும் மருதுவிற்கு ஆத்திரம் அவனின் மண்டை உச்சிக்கு ஏற “டேய், கட் பண்றா ஃபோன, அப்படியே சொல்லிடு, அவங்க வீடு காலி பண்ண வேண்டாம்னு. அப்புறம் இது தான் சாக்குன்னு இவ வந்து என் வீட்ல உட்கார்ந்துக்க போறா” என்று திமிராய் பேசினான். 
“ஷப்பா, வீடு காலி பண்ணும் வேலை இல்லை” என்ற போதும், அவனின் வார்த்தைகள் மேலும் மேலும் மனதை ரணமாக்கியது.
ஆனாலும் பெற்றோர் முன் அவன் பேசியது ஒன்றுமில்லை என்பது போல காண்பித்து கொண்டாள். கமலன் விடாது அவளின் முகத்தை பார்க்க “டேய், உன் இன்டர்வியு என்னாச்சுன்னு கேட்டேன்” என்று அதட்டி பேச்சை மாற்றி அவர்களை அனுப்பினாள்.  
அப்போதும் அவர்கள் “நீ ஜெர்மனிக்கு மீண்டும் செல்லக் கூடாது” என்று தீர்மானமாய் சொல்லித் தான் சென்றனர். 

Advertisement