Advertisement

ஜெயந்தியை பார்வையிலேயே தள்ளி நிறுத்தினான் மருது.
அப்போதும் விடாமல் “என்ன தப்பு பண்ணினேன்? ஏதாவது பண்ணியிருந்தா மாத்திக்கறேன்” என்றாள் கெஞ்சலாய் எல்லோர் முன்னும். சொல்லும் போதே எல்லோர் முன்னும் இதை சொல்ல நேர்ந்ததற்கு அவமானத்தில் அவளின் குரல் உள்ளே போனது.  
அவளின் குரலே எல்லோரையும் கலங்க செய்தது.
“நீ தப்பில்லை, நான் தான் தப்பு. இந்த தப்பானவன் கூட நீ இருக்க வேண்டாம், கிளம்பிடு, உனக்கும் எனக்கும் சரி வராது” என்று விட்டான் ஸ்திரமான குரலில்
நேற்றும் இதே தான் சொன்னான், இன்றும் இதே தான் சொல்கிறான்!  ஜெயந்தி அவனை விடாமல் பார்க்க, மருது அவளை பார்க்கவேயில்லை.
விமலன் “என்ன மாமா இப்படி பேசறீங்க? நாங்க இருக்கக் கூடாதுன்னா போயிடறோம். ஆனா ஜெயந்தியை வேண்டாம் சொல்லாதீங்க” என்று மன்றாடும் குரலில் கேட்டான்.   
அதற்கு மருது அவனிடம் பதில் சொல்லாமல் “இவங்க ரெண்டு பேரையும் இங்க இருந்து போகச் சொல்லு விஷால்” என்று கத்தினான்.
விமலன் அசையாது நிற்க, ஜெயந்தி தான் அவனின் கையை பிடித்து வெளியே அழைத்து வந்தாள். அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்கவில்லை.
விஷால் மனம் பொறுக்காது “அண்ணா, உங்களுக்கு உறவுகளோட அருமை தெரியலைண்ணா, இவ்வளவு பெரிய முடிவு இப்படி எடுக்க வேண்டாம்” என்றான்.
“உறவுகளோட அருமையை யாரும் எனக்கு தெரிய வைக்கலைடா” என்று விரக்தியாய் சொன்னவன், “நான் தனியா நிற்கணும்ன்றது என் விதி போல, இனி நீ என்கிட்டே இது பத்தி பேசக் கூடாது. பேசற மாதிரி இருந்தா நீயும் என்னை விட்டு கிளம்பிடு” என்று விட்டான்.
“என்ன கிளம்பறதா? இவ்வளவு சம்பளம் எனக்கு யார் குடுப்பா? நீ வாழு, வாழாம போ, எனக்கென்ன?” என்று மனதிற்குள் நினைத்தவன்,
“இப்போ மேம் அந்த வீட்ல இருக்காங்க, அது உங்க வீடுன்னு தெரியாது. அதை சொல்லி அவங்களை வெளிய அனுப்பிடட்டுமா?”  
“என்னவோ ஒரு மாசத்துல ஜெர்மனி போறாளாம். அது வரை இருக்கட்டும். அதுக்கு மேல லேட் ஆனா இருக்க வேண்டாம்” என்று கண்களை மூடிக் கொண்டான்.  
விஷால் வெளியே வர அதற்காக காத்திருந்தது போல நின்ற ஜெயந்தி அவனை பார்த்ததும் “அவரை பார்த்துக்கோங்க” என்று சொல்லி, “வீட்டு சாவி” என்று கேட்டவள், கூடவே “எத்தனை நாள் நான் அங்கே தங்க முடியும். எதுக்கும் ஏதாவது ஹாஸ்டல் சீக்கிரம் பார்க்கறேன்” என்று என்ன முயன்றும் அடக்கமுடியாமல் கண்களில் நீர் வர பேசினாள்.
“மேம், நீங்க போங்க, அங்கயே இருங்க. நீங்க எதுவும் பார்க்க வேண்டாம். அப்படி அந்த வீடு வேணும்னு என் ஃபிரண்ட் சொன்னா நானே உங்களுக்கு பத்திரமா ஒரு இடம் பார்த்து கொடுக்கறேன்” என்று சொன்னான்.
விமலன் “நான் வேணா அவர் கிட்ட திரும்ப மன்னிப்பு கேட்கறேன்” என்று கிளம்ப,
“வாண்ணா எதுவும் கேட்க வேண்டாம்” என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.  
வெளியில் வந்ததுமே “அண்ணா நீ வீட்டுக்கு கிளம்பு, நான் தங்கியிருக்குற வீட்டுக்கு போறேன், எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும், தயவு செஞ்சு என்னை வீட்டுக்கு கூப்பிடாதே, எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கலை,   அவர் பேசினதை எல்லாம் இப்போதைக்கு வீட்ல சொல்ல வேண்டாம். அப்புறமா சொல்லிக்கலாம்” என்றாள்.
“அம்மா, இப்போ நான் வேலைக்கு போகலைன்னா கேட்பாங்களே”
“ஏதாவது சொல்லி சமாளிண்ணா”
“உன்னை போக சொல்லிட்டார்” என்றான் மனம் தாளாமல்.  
“அதான் நேத்தே சொல்லிட்டாரே விடு, இனி பேசி பிரயோஜனமில்லை. எனக்கு இப்படி முகத்தை வெச்சிகிட்டு வெளில வர கஷ்டமா இருக்கு, கொஞ்சம் சரியாகட்டும். நானே கூப்பிடறேன். மெசேஜ் மட்டும் பண்ணு”   
“கமலன் எதுவும் போய் கலாட்டா செய்யப் போறான் பார்த்துக்கோ” என்று சொல்லியவள் வீடு கிளம்ப “என்கிட்டே பணமில்லை, எடுத்துட்டு வரலை, நூறு ரூபா கொடு” என்றாள்.
“இரு வீடு வரை வர்றேன்” என்று ஆட்டோவில் ஜெயந்தியுடன் சென்று அவளுக்கு உணவும் வாங்கி கொடுத்து “மாத்திரை போட்டுக்கோ, விட்டுடாதே. எனக்கு அப்பப்போ மெசேஜ் பண்ணனும் இல்லை உன் வீட்டுக்கு வந்துடுவேன்” என்று சொல்லி தான் வந்தான்.
வந்ததும் அப்படியே அமர்ந்து விட்டாள், எங்கு தவறிவிட்டாள் என்று தெரியவேயில்லை. தனிமை கிடைத்ததும் அப்படி ஒரு அழுகை, எப்படி எப்படி என்னை வேண்டாம் என்று விட்டான். மனது ஆறவேயில்லை!
எல்லாம் முடிந்த ஒரு தோற்றம்.
மதியம் வரை அப்படியே இருந்த இடம் விட்டு அசையாமல் இருந்தவள், தான் இருக்கும் நிலை கண்டு மெதுவாய் சென்று குளித்து வந்தாள். விஷாலிற்கு அழைத்து “எப்படி இருக்காங்க?” என்று கேட்க,
“டிஸ்சார்ஜ் ஆகிட்டோம். வீட்ல விட்டுட்டு வந்தேன். எனக்கு திரும்ப போக முடியலை. இங்க விமலனும் இல்லை கமலனும் இல்லை, வேலை பென்ட் எடுக்குது”
“எனக்கு கணக்கு வழக்கு தான் தெரியும். வேற எல்லாம் விமலனுக்கு தான் தெரியும், என்ன ஸ்டாக் இருக்கு? என்ன புதுசா வாங்கணும்? எங்க ஆர்டர் பண்ணனும் எல்லாம்!”
“அவன் இல்லைன்னா வியாபாரம் அப்படியே கொல்லாப்ஸ் ஆகும், என்ன பண்ணன்னு புரியலை!” என்று புலம்பினான்.
உடனே விமலனிற்கு அழைத்தவள் “அண்ணா டேய், நீ வேலைக்கு போ, கமலன் வேண்டாம். அவர் கிட்ட பேசு, வேற வேலை கிடைக்கற வரை வர்றேன்னு சொல்லு, என் பேச்சு எடுக்காதே. என்னைக் கொண்டு எதையும் பேசாதே. அங்க நீ வேலைக்கு மட்டும் தான் வர்றேன்னு சொல்லு. சொந்தக்காரன் எல்லாம் கிடையாதுன்னு சொல்லு!”
“நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது, ஆனா நீ அங்க திரும்ப வேலைக்கு சேரணும் இன்னைக்கு போகாத, நாளைக்கு போ” என்று சொன்னவள்,
விஷாலிற்கு அழைத்து “அங்க உங்களால தனியா சமாளிக்க முடியலைன்னு சொல்லுங்க. எப்படியாவது விமலன் இருந்திருந்தா பரவாயில்லைன்னு சொல்லுங்க. நான் நாளைக்கு அண்ணனை வந்து பார்க்க சொல்றேன். மன்னிப்பு கேட்க சொல்றேன், எப்படியாவது திரும்ப சேர்த்துக்கோங்க”
“அவரை தனியா விட முடியாது” என்று சொல்லி, “அவர் உடம்பு எப்படி இருக்குன்னு இப்போ போய் பார்த்து சொல்றீங்களா?” என்று கேட்க,
“சரி மேம்” என்றவன், அவனை பார்த்து வந்து “இன்னும் காய்ச்சல் இருக்கு” என்றான்.
“சாப்பாடு யாரு வாங்கி தர்றா?”
“மெஸ்ல சொல்லியிருக்கேன். அவங்க குடுத்துடுவாங்க”  
அதன் பிறகே உண்டவள் உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் மருதுவின் கை காலில் விழுந்து எப்படியோ வேலைக்கு சேர்ந்து விட்டான் விமலன்.
கமலன் “ஏன் நான் மட்டும் வேண்டாம்?” என்று கேட்க,
அதன் பிறகே நடந்த அத்தனையும் எல்லோருக்கும் தெரிய “என்ன ஜெயந்தியை வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களா?” என்று வீட்டினர் அத்தனை பேரும் செய்வதறியாது ஸ்தம்பித்தனர்.
ஜெயந்தியோ நாட்களை அமைதியாய் கொண்டு செல்ல நினைத்தாள். தனியாக தான் இருந்தாள். அம்மாவை அப்பாவை அண்ணன் தம்பியை என்று யாரையும் பார்க்கவில்லை. வீட்டை விட்டு வெளியே வரவில்லை எதற்கும். இருக்கும் இரண்டு உடைகளை மாற்றி மாற்றி அணிந்து கொண்டாள். முன்பே காய்கறியும் வந்திருக்க, மளிகை சாமானும் இருக்க அவளே சமைத்து உண்டு என நாள் சென்றது. மருது எப்படி இருக்கிறான் என்று விஷாலிடம் மட்டும் கேட்டுக் கொள்வாள்.     
அவளே தான், ஐந்து நாட்கள் கழித்து முக வீக்கம் குறைந்திருந்த போதும், இடுப்பு வலி இருக்க, அதனை காண்பித்து விடலாம் என்று நினைத்து ஹாஸ்பிடல் செல்ல,   
மருதுவும் அன்றைக்கு உடம்பை காட்டுவதற்கு அந்த நேரம் வந்தான்.
விதியின் சதியில் , சதி அவர்களை சேர விடாமல் இழுக்க, விதி அவர்களை பிரிய விடாமல் இழுத்தது. 

Advertisement