Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று :
“என்னால எதுவும் முடியாது வேணும்னா நீ சாப்பிட்டுக்கோ” என்று சொல்லி அவள் திரும்ப நடக்க,  
“எவ்வளவு நேரமானாலும் எத்தனை நாளானாலும் நீ குடுக்காம நான் சாப்பிட மாட்டேன்” என்று விட்டவன் திரும்ப கண் மூடிக் கொள்ள,
“ஓ அப்படியா சரி, நானும் சாப்பிடலை நீங்க சாப்பிடறவரை” என்று சொல்லி அவளும் சென்று படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
அவளாவது இரண்டு நேரம் உண்டு விட்டாள், இப்போது தானே உண்ணவில்லை. படுத்தவள் இருந்த மன உளைச்சலுக்கும், உதிரப் போக்கிற்கும், அசதிக்கும், மருந்தின் வேகத்திற்கும் உறங்கி விட்டாள்.
இது தானோ விதியின் சதி என்பது.  
மருது உண்ணவில்லை, மருந்தும் உட்கொள்ளவில்லை, கையை வேறு குளிக்கும் போது நனைத்து விட்டான். கட்டினை மாற்ற சொல்லியிருக்க அதுவும் செய்யவில்லை, கூட மனதில் ஜெயந்தியை அடித்த குற்ற உணர்வு, கை புண் வலி வேறு தெரிக்க ஆரம்பித்தது.   
கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் வருவாளா வருவாளா என்று பார்க்க வரவேயில்லை. மனது வெறுத்துப் போனது, என்னடா வாழ்க்கை இது என்ற ஒரு விரக்தி! காலையில் இருந்து சாப்பிடவில்லை என்று சொல்கிறேன், சொல்லப் போனால் நேற்று மதியம் சாப்பிட்டது தானே. நான் சாப்பிடாதது அவளுக்கு ஒன்றுமே இல்லையா? அவளின் பிடிவாதம் தான் பெரிதா?
சௌகர்யமாய் அவளை அடித்தது வீட்டை விட்டு துரத்தியது எல்லாம் நினைவில் வரவில்லை.      
வந்து விடுவாள் வந்து விடுவாள் என்று அவளின் அறையையே பார்த்திருக்க, மீண்டும் ஒரு தவறு அவளை அறியாமல் நேர்ந்தது. காலச் சூழ்நிலை இப்படி ஒரு விஷயத்தை உருவாக்கியது.
“அவளுடைய அம்மாவாவது வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கேட்டார். என்னை யார் கேட்பார்? யாருமில்லை தானே எனக்கு!” என்று தோன்ற,
“யாரும் தேவையில்லை எனக்கு” மனதில் ஒரு பிடிவாதமும் தோன்ற உறங்க முற்பட்டான் உறங்கியும் விட்டான். இரவில் அவனே எதிர்பாராமல் காய்ச்சல் வந்து விட, ஜெயந்தி என்று அழைக்க எண்ணிய போதே  மயங்கி சரிந்தான். 
காலை ஐந்து மணிக்கு தான் ஜெயந்திக்கு விழிப்பு வர, எழுந்து வெளியே வந்து பார்த்தாள் சோஃபாவில் இருந்தவன் கீழே கவிழ்ந்து இருக்க ஒரு கை அவனின் உடலுக்கு அடியில் இருந்தது.
மனது அபஸ்வரமாய் உணர, “ஏன் இப்படி படுத்து இருக்காங்க?” என்று வேகமாக வந்து அவனை தொட்டாள். உடல் அனலாய் கொதித்தது, பதறி அவனை திருப்பி எழுப்பினால், அவன் எழவில்லை.
வேகமாய் தண்ணீர் கொண்டு வந்து அவனை அவனின் முகத்தில் வேகமாய் அடிக்க, “இல்லை அவனிடம் அசைவில்லை, பயந்து போனாள். வேகமாய் அவனின் நெஞ்சில் படுத்து பார்க்க இதயம் துடித்தது, வேகமாய் விமலனிற்கு அழைத்தாள், அவனின் போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது சார்ஜ் இல்லாமல் அவனின் கைபேசி சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்க, உடனே விஷாலிற்கு  அழைத்தாள்.
இதெல்லாம் செய்யும் போது அவளின் இதயம் துடிப்பது அவளுக்கு கேட்டது.
விஷால்  எடுக்கவும், “இவர் மயங்கிட்டார், இங்க உடனே வீட்டுக்கு வாங்க” என்று தகவலை துரிதமாய் கொடுத்தவள்,
வேகமாய் நெட்டில் பார்த்து அன்று காண்பித்த ஹாஸ்பிடலுக்கு அழைத்தவள் அம்புலன்ஸிற்கு சொல்ல,  
விஷால் விரைந்து வந்து “என்ன ஏது?” என்று பார்த்தான்.
“நான் உள்ள படுத்திருந்தேன், அவர் இங்க படுத்திருந்தார். காலையில் வந்து பார்த்தா இப்படி இருக்கார்” என்று தேம்பினாள்.
“மேம் ஒன்னுமில்லை, பயப்படாதீங்க மயங்கிட்டார் போல” என்று விஷால் அவளை சமாதானம் செய்தாலும் மனது முழுக்க பயம், திடகாத்திரமான மனிதன் மருது இப்படி மயங்கி விழும் அளவுக்கு என்ன வந்தது என்று.
“நைட் சாப்பிட்டாரா?” என்றான்.
“தெரியலை” என்று தேம்பியபடி சொல்ல,
அதற்குள் ஆம்புலன்ஸ் வர அவனை ஏற்றுவதற்குள் ஹப்பா அவர்களுக்கு முடியவில்லை. ஒரு வழியாய் ஏற்றி, ஹாஸ்பிடல் கொண்டு சென்று ட்ரிப்ஸ் ஏற்றி மருந்துகள் செலுத்திய பின் தான் விழித்தான்.
அதுவரை ஜெயந்தியின் மனம் பட்ட பாடு அவளுக்கு தான் தெரியும். அவள் உள்ளே சென்று பார்த்தாள். ஆனால் மருது எதுவும் பேசவில்லை. அவளும் வெளியில் தெரியாதிருக்க முகத்தில் கர்சீப் கட்டியிருந்தாள்.
வெளியில் தெரிந்த கண்கள் அவனிடம் கதை பேச முற்பட அவன் அதை பார்க்கவேயில்லை, ஒரு பாராமுகம். பயந்து இருந்தாள், ஒரு அதீத பயம். ஏதோ மிகவும் கெட்டதாக வரப் போகிறது என்ற பயம்.        
டாக்டர் அவனின் கை கட்டை எடுத்து மாற்ற முயல, அப்போது தான் சொன்னர், கை ஈரத்தில் ஊறி இருக்க, தையல் போட்ட இடத்தில சீல் பிடித்திருந்தது.
எமெர்ஜென்சி வார்டில் வைத்து எல்லாம் சரி செய்து பின் ரூமிற்கு மாற்றினர்.
விஷால் அங்கேயே தான் இருந்தான் , விமலன் ஃபோனை சார்ஜ் போட்டதும், அதில் அவளின் மிஸ்ட் கால் பார்த்து அவளை அழைக்க ஜெயந்தி எடுக்கவில்லை. ஏனென்றால் அவளிடம் மொபைல் இல்லை, பணம் இல்லை, எதுவும் இல்லை, எதுவும் எடுத்து வரவில்லை. 
ரூம் உள் இருந்தவள் “எதுவும் குடிக்கறீங்களா?” என்றாள் தயங்கி தயங்கி.  
“வேண்டாம்” என்பது போல தலையசைத்தான்.
“கொஞ்சம் குடிங்க, தெம்பா இருக்கும்” என்று சொல்ல,
“இதை நேத்து நீ எனக்கு குடுத்திருந்தா இப்போ நான் ஹாஸ்பிடல்ல படுதே இருக்க மாட்டேன்” என்றான் என்ன வென்று இனம் பிரிக்க முடியாத குரலில்.
அதை கேட்டதும் பயந்த மனது இன்னும் பயம் கொள்ள மளுக்கென்று கண்களில் நீர் வந்தது.
அதனை பார்த்தவன் “தயவு செஞ்சு என் முன்ன அழாத நீ, போயிடு, அது என்னவோ எனக்கு நானே ஒரு கொடுமைக்காரன் எண்ணம் கொடுக்குது, உன்னை இனி நான் எதுக்கு தொல்லை குடுக்க மாட்டேன், ஊருக்குள்ள ஒரு சொல்லு இருக்கு, மருது சொன்னா சொன்ன மாதிரி நடப்பான்னு”
“உனக்கு இனி என்னோட தொல்லை கிடையாது, என் வாழ்க்கையில இனி நீ வேண்டாம். நானே தப்பா இருந்துட்டு போறேன், நீ கிளம்பிடு” என்று முடிவாகச் சொல்ல,
அவன் பேசப் பேச, பதில் பேசக் கூட இயலவில்லை. அப்படி ஒரு கேவல் அவளிடம் வெடிக்க, மருது முகத்தை திருப்பிக் கொண்டான், என்ன என்று கூட கேட்கவில்லை.    
அழுகையை அடக்கி தேறிக் கொண்டவள், வெளியில் வந்து அமர்ந்தாள், “அவருக்கு குடிக்க டீ வாங்கி குடுங்க” என்று விஷாலிற்கு சொல்ல, அவனும் உடனே சென்று வாங்கி வந்தான் இருவருக்குமே!
“கொண்டு போய் குடுங்க மேம்” 
“நான் குடுத்தா குடிக்க மாட்டார். நீங்க போங்க, இப்போ அவர் ஏதாவது குடிக்கறது தான் முக்கியம்” என்று ஜெயந்தி சொல்ல, பதில் பேசாமல் ஜெயந்தி சொன்னதை செய்தான் விஷால்.
பின்னர் அவனும் வெளியே வந்து அமர,
அப்போது விமலன் அவனுக்கு அழைத்து விட்டான் “காலையில ஜெயந்தி போன் பண்ணியிருக்கா, நான் திரும்ப போன் பண்ணினா எடுக்கலை, அவ இருந்த வீட்டுக்கு போய் பார்த்தேன். அது பூட்டியிருக்கு, மருது சர் வீட்டுக்கும் போனேன். அதுவும் பூட்டியிருக்கு. எங்க போனான்னு தெரியலை, சர்ரோட இருக்காளா கேட்டு சொல்லுங்க?” என்றான் பதட்டமாக.  
“இங்க தான் இருக்காங்க மேம் என்னோட. அண்ணாவை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணியிருக்கோம்” ,
“என்ன எந்த ஹாஸ்பிடல்?” என்று பதறி சிறிது நேரத்தில் வந்து விட்டான்.
உள்ளே சென்று மருதுவை பார்க்க, இவன் எப்படி இருக்கிறது என்று கேட்கும் முன்னமே, “இனி நீ என் கடைக்கு வரவேண்டாம்” என்றவன் விஷால் என்று சத்தமாய் குரல் கொடுக்க,
என்னவோ ஏதோ என்று பதறி விஷால் உள்ளே வர, அவனுடன் ஜெயந்தியும் வந்தாள்.
“இனி இவன் என் கடைக்கு வரக் கூடாது” என்று விமலனை காண்பித்து சொன்னவன், “இவனுக்கு என்னவோ செட்டில் பண்ணிடு. இவனுக்கு மட்டுமில்லை இவனோட தம்பிக்கும் சேர்த்து பண்ணிடு”
“நாமளா அனுப்பினா மூணு மாசம் சம்பளம் கொடுப்போம் இல்லையா? ஆறு மாசமா குடுத்துடு. இவங்க யாரும் என் கண்ல படக் கூடாது. கோவில் கிட்ட இருக்குற இவங்க வீட்டை காலி பண்ண சொல்லு. நம்ம ஏரியால யாரும் இருக்கக் கூடாது” என்று மளமளவென்று உத்தரவுகள் பிறப்பிக்க,
அங்கிருந்த மூன்று பேருமே பேச்சற்று நின்றனர்.

Advertisement