Advertisement

“அய்ய, இவன் புதுசு அண்ணாத்தே, இவனுக்கு உன்னை பத்தி என்ன தெரியும்.. நீ இன்னாமா நீ வேலைல இருக்க வேண்டாமா?” என்று நர்சிடம் சொல்ல..
அதற்குள் ஃசீப் டாக்டரிடம் யாரோ பிரச்சனை என்று சொல்லியிருக்க..  
அவரே வந்து விட்டார்.. இந்த ஹாஸ்பிடல் கட்டும் போது ஒரு பிரச்சனை ஆகியிருக்க அதை சுமுகமாக முடித்து வைத்தவன் மருது.. அவனுக்கு அது ஞாபகம் இருந்தது ஆனால் “கூப்பிடு உன் டாக்டரை” என்று அவன் கெத்து காண்பிக்கவில்லை.. அவர்களாக பேசினால் தான் பேசுவது இல்லையென்றால் பேசுவது இல்லை..
இவனை பார்த்ததும் “ஹல்லோ மருது, எப்படி இருக்கீங்க? நிறைய வருஷம் ஆகிடிச்சு பார்த்து” என்று அவர் சொல்லவும் .. “உங்களுக்கு என்னை ஞாபகமிருக்கா” என்று அவன் கேட்க..
“ஏன் இல்லாம எனக்கு உதவி செஞ்சவங்களை நான் மறக்கறது இல்லை” என்று ஃசீப் சொல்லவும்..
பக்கத்தில் இருந்தவன் நடந்த பிரச்சனையை சொல்ல.. “வாட் டாக்டர் வாட் இஸ் திஸ்” என்று அந்த டாக்டரிடம் அவர் கேள்வி எழுப்ப..
அவனும் ஆங்கிலத்தில் “இந்த பொண்ணுக்கு அடிபட்டிருக்கு, யாரோ அடிச்சிருக்காங்க, வேற எதுவும் தப்பா கூட நடந்திருக்கலாம், அதுதான் என்னன்னு கேட்டேன்.. ஒரு வேளை இவனே ஹர்ராஸ் பண்ணிட்டு கூட்டி வந்திருந்தா” என்று அவன் சொல்ல..
ஒரு சிலருக்கு புரிந்தாலும் மருதுவுக்கு அவன் பேசுவது புரியவில்லை..
“வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்” என்று அதற்குள் ஜெயந்தி எகிறியிருந்தாள்.
அவள் எகிறியத்தை பார்த்ததும் “என்ன? என்ன சொல்றான் இவன்?” என்று மருது மிக மிக சீரியஸ் மோடிற்கு மாறியிருக்க..
அவனின் முகத்தை பார்த்தே “அச்சோ, அவனை அடித்து விடுவானோ” என்று பயந்து விட்ட ஜெயந்தி “ஒண்ணுமில்லை விடுங்க.. நாம வேற ஹாஸ்பிடல் போகலாம் எனக்கு இங்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டாள்.
அடிதடி தான் ஆனால் அவளின் கணவனை ஒருவன் குற்றம் சாட்ட அதனை கேட்டு இருப்பதா? அவளால் முடியாது..   
“அவசரப்படாதீங்க, பெண்களுக்கு எதிரா எத்தனையோ குற்றங்கள். அப்போ இது என்னவோன்னு உங்களுக்கு உதவ தான் அவங்க திரும்ப திரும்ப கேள்வி கேட்டிருக்காங்க. அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்கறேன்” என்று சூழ்நிலையை அந்த ஃசீப் கையில் எடுத்து கொண்டு “நீங்க போங்க” என்று அந்த டாக்டரியும் சிஸ்டரையும் அனுப்பிவிட்டு வைத்தியம் பார்த்தார்.
அந்த குற்றச்சாட்டு, அதன் கணம், மருதுவால் தாங்க முடியவில்லை.. அவனின் முகமே மாறிவிட்டது.. “என்னை பார்த்து ஒருவர் இப்படி நினைப்பதா? இப்படி சொல்வதா?” என்று..
“இன்னா சார் பேசறீங்கோ, எங்க ஏரியால பொண்ணுங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அண்ணாத்தே தான் முன்ன வந்து நிப்பாரு. அண்ணாத்தே சொக்க தங்கம் சாரு” என்று அவனை தெரிந்தவன் பேசிக் கொண்டே போக,
மருதுவால் அங்கே நிற்கவே முடியவில்லை..
“வெளிய இருக்கேன்” என்று சொல்லி அவன் கிளம்ப முற்பட..
ஜெயந்தியால் அவனின் முக மாற்றத்தை கூட தாங்க முடியவில்லை. “இங்க வாங்க ஒரு நிமிஷம்” என்று ஜெயந்தி கூப்பிட அவன் அருகே சென்றதும் அவனின் கையை பிடித்து கொண்டவள்.. “இங்கயே இருங்க” என்று சொல்லி கையை விடவில்லை.
“என்னம்மா ஆச்சு அடிபட்டதா?” என்ன என்று அந்த ஃசீப் கேட்க..
அதுவரை என்ன பதில் சொல்வது என்று யோசித்து வைத்து இருந்தவள் ..
“இவருக்கு ரொம்ப கோபம் வரும் சர், கோபத்துல ஒருத்தரை அடிக்க கை நீட்டிட்டார், அதை தடுக்க நான் நடுவுல வந்தேன். இவர் கவனிக்கலை. இவர் கை என் கன்னத்துல பட்டுடுச்சு.. அதுலயும் அடி, கீழ விழுந்ததுல.. இடுப்புளையும் அடி, இந்த சைட் தலை வேற தரையில மோதிடிச்சு” என்று அவள் அவள் எங்கெங்கு அடிபட்டது என்று வரிசையாய் சொல்ல..
மருதுவிற்கு முகமும் உதடும் தானே தெரியும்.. என்ன செய்து விட்டேன்.. இவளுக்கு ஏதாவது ஆகியிருந்தாள்.. நினைக்கவே முடியவில்லை..    
அவர் காயத்தை பார்த்து சுத்தம் செய்து.. “என்ன மருது யாரைன்னாலும் இப்படி கை ஒங்குவீங்களா.. சில சமயம் படாத இடத்துல பட்டா, ஆள் கூட காலி ஆகிடலாம்” என்று சொல்லியபடி முகத்திற்கு இடுப்பிற்கு எக்ஸரே தலைக்கு சீ டீ ஸ்கேன் என்று எழுத..
மருதுவின் முகம் இறுகி விட்டது.. என்னால் எல்லாம் என்னால் என்பது போல
“இவ்வளவு அடி பட்டிருக்கும்” என்று அவன் அனுமானிக்கவில்லை..
எக்ஸரே எடுக்கும் இடத்தில் ஜெயந்தி மட்டும் இருக்கட்டும் இவனை வெளியில் இருக்குமாறு சொல்ல, ஜெயந்தி போக வேண்டாம் என்று தலையசைக்க..  
“இல்லை நான் இருக்கிறேன்” என்று விட்டான்.. முகத்திற்கு எடுத்ததும் இடுப்பிற்கு எடுப்பதற்காக, அவளை எக்ஸ்ரே எடுக்க தோதுவான உடை அணிய சொல்ல..
மருதுவை அழைத்தவள் “இந்த எக்ஸ்ரே அப்புறம் எடுத்துக்கலாம், எனக்கு பீரியட்ஸ் இப்ப வேண்டாம்” என்று சொல்ல..
மண்ணுக்குள் புதைந்து விட தான் தோன்றியது மருதுவிற்கு.
“அம்மாடி! என்ன மாதிரி ஒரு நிலை, நான் அடித்து வேறு இருக்கிறேன்” அவனால் தன்னையே மன்னிக்க முடியவில்லை..
அவளின் முகத்தை பார்க்க, “இப்போ வேண்டாம்” என்று அவள் பரிதாபமாய் சொல்ல..
“ம்ம்” என்பது போல தலையாட்டியவன்.. அவளை அழைத்து செல்ல,
அவளுக்கு பார்த்து முடித்த பிறகு டாக்டர் “பெருசா ஒண்ணுமில்லை, இடுப்புக்கு அப்புறம் வந்து எடுத்துக்கங்க ஒரு நாலஞ்சு நாள் விட்டு. ஆனா இந்த காயம் எல்லாம் ஆற ஒரு பத்து நாள் ஆகும், முகம் வீக்கம் குறையவும் நாள் ஆகும். இவ்வளவு கோபம் வேண்டாம் மருது” என்று அந்த டாக்டர் தன்மையாய் சொல்ல..
“திரும்ப எப்போ வரணும்” என்று கேட்டு அவன் எழவும்..
“சர், இவர் கையிலயும் காயம் இருக்கு பாருங்க” என்று ஜெயந்தி சொல்ல
“இல்லை ஒண்ணுமில்லை” என்று மருது காண்பிக்க மறுத்தான்.
“காட்டுங்க மருது” என்று டாக்டரே பார்க்க..
கத்தி கீறல் ஆழமாய் தான் இருந்தது.. அதையும் சுத்தம் செய்து பத்து தையல் போட்டு பெரிய கட்டாய் கட்டி அவர் அனுப்ப..
ஜெயந்தி தான் அவன் முகத்தை முகத்தை பார்த்தாள்.. அவனின் பார்வை அவளை பார்க்கவேயில்லை.
வரும் வழியில் “சாப்பிட என்ன வாங்கட்டும்?” என்று மருது கேட்க.. “ஜூஸ் மட்டும் எனக்கு போதும், சாப்பிட முடியாது வலிக்குது” என்று அவள் உதடு அசையாமல் பேச,
அவளுக்கு ஜூஸ் வாங்கியவன் அவள் அருந்தியபின்.. பின்பும் சில வகைகளை வாங்கி கிளம்ப..
“உங்களுக்கு” என்றவளிடம்..
“வேண்டாம்” என்பது போல தலையசைக்க..
“ஏன்? ஏன் வேண்டாம்? மாத்திரை சாப்பிடணும், அதுக்கு ஏதாவது சாப்பிடணும்” என்று கட்டாயப்படுத்தி சொல்ல..
அவனுமே ஒரு ஜூஸ் மட்டும் அருந்த.. “உங்களுக்கு பத்தாது” என்றாள்..
ஜெயந்தி அவனிடம் சண்டை போட்டால், கோபம் காண்பித்தால், ஏன் அடித்தால் கூட பரவாயில்லை என்று தோன்றியது.
இப்படி ஜெயந்தி பரிவாய் பேசியது அவனுக்கு பிடிக்கவே இல்லை.
அதுவும் அடிப்பதே தப்பு, இதில் என்ன மாதிரி நிலையில் அடித்திருக்கிறான்.. ஆட்டோவில் தான் வீடு வந்தனர்.
அவன் இன்னும் கார் வாங்கவில்லை. ஜெயந்தி வந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று வாங்கவில்லை.
ஆட்டோவில் இருந்து இறங்கியதும் அவனுக்கு தனிமை தேவையாய் இருக்க, “எனக்கு வேலை இருக்கு ஜெயந்தி நான் அப்புறம் வர்றேன்” என்று அவன் கிளம்ப, மணி அப்போது பதினொன்று..
“நான் இருக்குறது உங்களுக்கு தொந்தரவா இருக்குன்னா, நான் வேணா அம்மா வீட்டுக்கு போயிடறேன். நீங்க இந்த நேரத்துக்கு வெளில சுத்தாதீங்க.. போய் படுங்க. நான் இந்த ஆட்டோல கூட போயிடறேன்” என்று அவள் ஸ்திரமாய் பேச..  
“ஏற்கனவே காயம் வர்ற அளவுக்கு அடிச்சிருக்கேன். இதுல நடு ராத்திரில வீட்டை விட்டு துரத்தின பாவம் வேற எனக்கு வேணுமா? அப்புறம் நீ சொன்ன மாதிரி அப்பா கிடையாது, அம்மா கிடையாது, நீயும் கிடையாது” என்றவனுக்கு அதற்கு மேல பேச வார்த்தைகள் வரவில்லை.. தொண்டையில் எதோ அடைக்க..
கேட்டிலிருந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
“அடிச்சது என்னை! காயம் எனக்கு! என்னால அந்த கோபத்தை காண்பிக்க முடியாம இவனுக்காக பார்த்தா, இப்படி பேசறான் இவன். கைல கீறினதுக்கு பதிலா பேச முடியாம இவன் வாயை கீறி விடணும்” என்று தோன்றிய போதும் அப்படி ஒரு அலுப்பு.. வீட்டின் உள் வந்தவள் உடை மாற்றி உறங்க வர..
அவனை காணவில்லை.. அவளுக்கு முடியவில்லை.. எட்டி பார்க்க உள் கதவு பூட்டியிருக்க வேறு ரூமில் இருப்பானாயிருக்கும் என்றவளுக்கு அவனை தேட கூட முடியவில்லை.. படுத்துக் கொண்டாள்..
அவன் இருந்ததோ மொட்டை மாடியில்..
வானத்தை வெறித்து கட்டாந்தரையில் படுத்துக் கொண்டிருந்தவன் யோசித்தது இதுதான் “நான் சரியாய் வளரவில்லையோ.. யாரும் எனக்கு கிடையாதோ” என்பதாக தான்..
மனது வெகுவாக விட்டு போயிற்று.. கண்களில் நீர் தானாக இறங்கியது.. அடித்து விட்டான்.. எதுவும் அவளுக்காக செய்வான் என்பது போய் அவளை அடித்து விட்டான். இப்படி காயம் வரும் அளவிற்கு.. எனக்கு எதற்கு இப்படி ஒரு கோபம் என்று தோன்ற..
இப்படியாக உறக்கம் என்பது அணுகவேயில்லை..
ஜெயந்தி எப்போதும் போல திரும்பி படுக்க அடிபட்ட கன்னம் இருந்த பக்கம் படுக்கவும் வலியில் உறக்கம் கலைந்து விட்டது.. எழுந்து நேரம் பார்த்தால் அதிகாலை இரண்டு மணி.. அப்போதும் மருது அந்த ரூமில் இல்லாமல் இருக்க..
திரும்பவும் எங்காவது போய்விட்டானோ என்று பயந்து வெளியில் வந்து பார்க்க உள் கதவு தாளிட்டு இருக்க.. எல்லா ரூமும் தேடியவள் பின்பு மாடிக்கு ஏறி வர அங்கு அவன் படுத்திருப்பது தெரிய, மனது அவ்வளவு ஆசுவாசமாய் உணர்ந்தது..
அவளின் மெல்லிய கொலுசொலி கேட்க.. உறக்கம் வராமல் இருந்த மருது, திறந்திருந்த கண்களை அவசரமாக அவள் காணும்முன்னே மூடி கொண்டான்..
மருதுவின் அருகில் வந்து நின்று பார்த்தவள், அவன் உறங்குவதாக நினைத்துக் கொண்டு.. சிறிது நேரம் அவனை பார்த்து நின்றவள் .. பின்னே கீழே இறங்கி சென்றாள்.
அவள் செல்லும் அரவம் உணரந்து கண்களை திறந்து பார்த்தவனுக்கு, “போய் விட்டாளா” என்று தோன்ற கூட என்னென்னவோ தோன்றியது..
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா” என்றெல்லாம் தோன்றியது..
சில நிமிடங்களில் மீண்டும் மெல்லிய கொலுசொலி, வேகமாக திரும்ப கண்களை மூடி கொள்ள..
வந்தவள் ஒரு மெத்தை விரிப்பை விரித்து அதில் தலையணை போட்டு படுத்துக் கொண்டாள்..
உடலில் அடிப்பட்டது வலி வேறு, கீழே அமர்ந்து படுக்கவும் அவளையும் மீறி வலியில் “ஷ்” என்று சத்தம் வந்தது .. பின்பு ஒருமாதிரி வலி அதிகம் தெரியாத நிலையில் படுத்துக் கொண்டாள்..
ஆனாலும் அவனை விட்டு வெகுவாக தள்ளி தான்! அருகில் செல்ல வேண்டும் அவனின் தோள் சாய வேண்டும் என்று தோன்றிய போதும், இருமுறை ஏற்பட்ட கசப்பான நிகழ்வு, இனி அவளால் அவன் வராமல் நெருங்க மனது இடம் கொடுக்கவில்லை. அவ்வளவு கூடவா தன்மானமற்று போய்விடுவாள். அவனுக்காக இறங்க செய்வாள், இப்போது அடித்தது கூட அவன் வருந்துகிறான் என்று புரிந்த பிறகு பெரிது படுத்த தோன்றவில்லை.
ஆனால் அருகில் செல்ல முடியாது! அதற்காக அவனை தனியாய் விடவும் மனதில்லை! அதனால் இடைவெளி விட்டு படுத்துக் கொண்டாள். உடனே உறக்கமும் வந்து விட்டது.        
ஜெயந்தியின் வலியின் சத்தம், அவளின் முகத்தை பார்க்கும் தைரியம் கூட அவனுக்கு வரவிடவில்லை..
கண்களை இறுக மூடிக் கொண்டான்..   அவள் தவறா நீ தவறா எதுவாகினும் உன் செயல் தவறு என்று மண்டையில் அவனின் மனசாட்சி ஓங்கி ஓங்கி அடிக்க..
ஏன்? எனக்கு மட்டும் இப்படி.. இன்னும் கூட என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கலாமோ..   
“உன் மனைவியிடம் நீ தவறாய் நடந்து கொண்டாய் என்று அனுமானிக்கும் அளவிற்கு உன் நடத்தை இருக்கிறது இதுவா நீ” என்று தோன்ற.. அதன் கணம் அவனால் தாங்கவே முடியவில்லை..
எங்கோ அவனின் மொத்த கர்வமும் அடிபட்டு போனது!

Advertisement