Advertisement

அத்தியாயம் பத்து :

ஆனால் விமலனுக்கு தான் சஞ்சலம், ஜெயந்திக்கு சிறிதும் இல்லை… வீட்டில் எல்லோரும் விஷயம் கேட்டதும் ஸ்தம்பித்து விட, சிறிது நேரம் யோசித்தவள் “சரின்னு சொல்லிடுங்கண்ணா” என்று விட்டாள்.

அவளின் மனதில் இருந்த பாரம் குறைந்தது, என்னவோ ஒரு விடுதலை உணர்வு, ஏன் என்று உணர முடியவில்லை!

மாலையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் அப்படி.. மருதுவின் கோபம் அதையும் விட, அவனின் கண்களில் தெரிந்த அவளிற்கான தவிப்பு.. யோசித்த இந்த க்ஷணத்தில் கர்வமாய் உணர்ந்தாள்.

“வேண்டாம் போடின்னு எல்லாம் சொன்னாலும், அவனால என்னை விட முடியலை” தெள்ளத் தெளிவாய் மனதிற்கு புரிந்தது.  

வீட்டினர் யாருக்கும் அப்படி ஒரு திருப்தி இல்லை… ஏன் விமலனுக்கே இல்லை என்பது தான் உண்மை.. ஆம்! அவனை எது செய்ய சொன்னாலும் செய்வான், அவனின் உயிரே மருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் போட்ட பிச்சை தான்.

ஆனால் அவன் உயிரை கூட கொடுப்பான், அதற்காக தங்கையை கொடுக்க முடியுமா?

மருதாச்சலாமூர்த்தியின் உயரமும் வேறு, இந்த நாட்களாய் காண்கிறான் தானே! இவர்கள் எங்கும் சமம் கிடையாது.

கூடவே விமலனாய் கண்டறிந்தது அவனுக்கு எழுத படிக்க வராது.

நெஞ்சம் முழுவதும் நன்றி இருந்த போதும் நன்றிக்காக அமையும் திருமண வாழ்க்கை எத்தனை சிறப்பாய் அமையும் என்று சொல்ல முடியாது அல்லவா?

ஜெயந்திக்கு மருதுவை பிடிக்காது போய் விட்டால், இருவர் வாழ்க்கையும் நரகம் அல்லவா?

அதுவும் அவனின் பின்புலம் தாதா என்கின்றனர். ஏதும் கேஸ் இருக்குமோ? ஜெயில் எல்லாம் சென்று வந்திருப்பானோ? என்கௌண்டர் லிஸ்டில் எல்லாம் இருப்பானோ? என் தங்கையின் வாழ்க்கை என்னாவது?  இப்படி தான் தோன்றியது.

ஆம்! இன்னும் அவனின் கேஸ் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் சேனலில் முக்கியமான பொறுப்பில் இருந்தவர் வேறு, “உன்னை நம்பி தானே பணம் கொடுத்தோம், நீ தான் பொறுப்பு” என்று பயப்படுத்த வேறு செய்ய,

அவன் பயந்து மருதுவிடம் சொல்ல…

“அப்படியா?” என்று தான் கேட்டுக் கொண்டான். அவனிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் மூன்றே நாட்களில் அந்த பொறுப்பில் இருந்தவர் தாக்கப் பட்டு மருத்துவமையில் இருந்தார்.

மருது நேரடியாக அவரிடம் சென்று “ஏன்டா டேய், சின்ன பையன்னு மிரட்டுவீங்களா, தக்க பாதுக்காப்பு இல்லாம பணத்தை கொடுத்து, அவனை செத்து பிழைக்க வெச்சிருக்கீங்க.. இப்போ காண்பிச்சது சும்மா தான், மூணு நாள்ல டிச்சார்ஜ் ஆகிடுவ”

“இனியோருதடவை பண்ணின, மூணு மாசம் தான். எனக்கு இந்த கொலை பண்றது எல்லாம் பிடிக்காது, பண்ணினதும் இல்லை. அதனால் நீ டிச்சார்ஜ் ஆகி வந்தேன்னா, திரும்ப ஆஸ்பத்திரி போவ, திரும்ப வருவ, திரும்ப போவ, இப்படி தான் போய்கிட்டே இருப்ப” என்று அவனிடம் பேசியதை கண்கூடாக பார்த்திருந்தவன்,

“ஐயோ, அம்மா” என்று இரண்டு நாட்கள் உணவே விமலனுக்கு இறங்கவில்லை.

ஆனால் அப்படி ஒரு விஷயம் நடந்தது போல கூட மருது பின்பு காண்பிக்கவில்லை.. என்னவோ இருவேறு முகமோ அவனுக்கு என்று தோன்றியது. எல்லாம் இப்போது நினைக்க பயம் கொடுத்தது..   

இப்படி பல குழப்பங்கள் இருந்த போதும் வீட்டினில் சொல்லிவிட.. வீட்டில் எல்லோரும் யோசிக்க.. ஜெயந்தி சரி என்று சொல்லுங்கள் என்றாள்.

பூதம் வந்தே விட்டது என்று தோன்றியது கோபாலனிற்கு, தடை சொல்ல முடியாது.. மகளே உடனே சரி என்று சொல்லும் போது என்ன செய்வார்? நதி போகும் போக்கில் படகை செலுத்துவது உத்தமம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார். 

“வேலை?” என்று அப்பா இழுக்க..

“பேசிக்கலாம் பா”  

எப்படியாவது பேசி ஒரு இரண்டு வருடத்திற்கு சம்மதம் வாங்கிவிடலாம் என்ற எண்ணம் இருந்தது.

பிடித்து சரி என்று சொன்னாளா தெரியாது? ஆனால் இருவருடமாய் அவனை எதற்காகவேணும் நினைத்துக் கொண்டு தான் இருக்கிறாள். அப்போது வேறு ஒருவனை எப்படி திருமணம் செய்வது.

அதுவமன்றி இரண்டு முழு வருடங்கள் ஆகப் போகிறது, அவன் பிடித்து இருக்கிறது என்று சொல்லி.. இடையில் சில சண்டைகள் சச்சரவுகள், ஆனாலும் திரும்ப கேட்கிறான். அப்போதும் மிகவும் பிடித்து இருக்க வேண்டும் தானே என்று தோன்ற, “சரி” என்றாள்.

முன்பு அவன் எப்படியோ? இப்போது அவளுக்கு தெரிந்து பெரிய சண்டை சச்சரவுகள் எல்லாம் இல்லை. அப்படி தாதா என்ற பெயருக்கு தக்கார் போல எந்த வம்பு வழக்கும் இல்லை.  

“உனக்கு பிடிச்சிருக்கா ஜெயந்தி? பிடிக்கலைன்னா அவரோட வாழ்றது கஷ்டம்! உனக்கும் கஷ்டம், அவருக்கும் கஷ்டம், யாரும் அவருக்கு சொந்தம்னு கிடையாது.. அப்போ பிடிக்காம போச்சுன்னா அவரோட நிலைமையும் கஷ்டம்” என்று பொறுமையாக பேசினான்.

“பிடிச்சிருக்கா தெரியலை? ஆனா கல்யாணம் பண்ணிக்கலாம் தோணுது!”

“நன்றிக்காக கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது ஜெயந்தி”

“வரதட்சனைக்காக கல்யாணங்கள் நடக்கும் போது, நன்றிக்காக கல்யாணம் நடக்கக் கூடாதா? பிடிச்சிருக்குன்னு பொய் சொல்லி மறைச்சா என்ன பண்ணுவீங்க? எனக்கு தோன்றது ஒன்னு தான். நான் நன்றி கெட்டவள் ஆகிடக் கூடாது!”

கலைச்செல்வி தான் அவளின் உறுதியில் தெளிந்தவராக.. “அதான் சரின்னு சொல்றாள்ள” என்று விட்டார்.  

பின்னர் விமலன் பெண் கேட்பதற்கு “சரி” என்று சொல்லி விட்டான்.

கேட்டு விட்டான் தான், ஆனால் யாரையும் அழைத்துப் போக மனதில்லை.. சொந்தம் என்று இல்லாததால் நட்பு வட்டம் மட்டுமே. அதில் வீடு வரை இவன் யாரோடும் வைத்துக் கொள்ள மாட்டான்..

என்ன செய்வது என்று தெரியவில்லை… விமலன் சரி என்று சொல்லி நான்கு நாட்கள் ஆகிவிட்டது..

மருதுவிற்கு ஜெயந்தியை பார்க்கும் ஆர்வம் நீரில் மூழ்கி தவிக்கும் ஒரு உணர்வை கொடுத்தது என்றால் மிகையல்ல.

“என்னடா சொல்லிட்டான், பின்ன ஒன்னும் காணோம்” என்று ஜெயந்திக்கே தோன்றியது.

ஆனால் பார்ப்பதற்கும் வழியில்லை, கடையில் அண்ணன் இருப்பான் முழுநேரம்.

ஆனால் என்ன வாகிற்று என்று தெரியாமல் மண்டை உடையும் போல இருக்க, விட்டால் நாளையே அவன் தாலியோடு வந்தாலும் கழுத்தை நீட்டிவிடும் உத்தேசத்தில் இருந்தாள்.

மீண்டும் முறைத்துக் கொள்வானோ என்று தான் தோன்றியது.

ஆம்! அவனின் கோபம் பயத்தை கொடுத்தது… “பா, எவ்வளவு கோபம்” என்று தான் தோன்றியது. வேலையை பற்றியும் பேச வேண்டுமே!

“ண்ணா” என்று விமலனை கைபேசியில் அழைத்தவள், உங்க பெல் பாட்டம் முதலாளி கிட்ட நான் பேசணுமே!”  

“எதுக்கு?” என்றான் அவசரமாக.   

“வேலை பத்தி பேசணும்னா?” என்றாள்.

“அவர் பொண்ணு கேட்கட்டும் பேசிக்கலாம்” என்று விமலன் சொல்ல,

என்னவோ மருதுவை பார்க்க வேண்டும் போல தோன்ற, “அண்ணா முன்னமே பேசியே ஆகணும், திடீர்ன்னு வந்து பொண்ணு கேட்கும் போது போகக் கூடாது சொல்லிட்டா?”

“உனக்கு அங்க போகறது கனவு சொல்லியிருக்கேன்”

“ப்ச், அண்ணா எனக்கு பார்க்கணும்” என்று விட,

“இப்போ நான் என்ன பண்ணனும்?”

“நீ ஒன்னும் பண்ணாதே, நான் பார்க்க போறேன், ஜஸ்ட் உன் கிட்ட சொன்னேன்” என்று முடித்துக் கொண்டவள்..

மருதுவிற்கு அழைத்தாள், அவன் எஞ்சினியரிடம் பேசிக் கொண்டிருந்ததால் எடுக்கவில்லை.

திரும்பவும் விமலனிடம் கேட்க மனதின்றி விஷாலுக்கு அழைத்தவள் “எங்க உங்க முதலாளி?” என,

“இங்க என் பக்கத்துல” என்று விட்டான், எஞ்சினியரிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று சொல்லும் முன்னேயே.

“குடுங்க அவங்க கிட்ட”  

வாட்ச்மேன் அடிவாங்கியதை அறிந்து இருந்தவன் எதற்கு வம்பு என்று தோன்ற “அண்ணா ஃபோன்” என்று நீட்ட,

“அதான் பேசிட்டு இருக்கேன்ல யாருடா?” என்று அவன் எரிந்து விழ,

“மேம்” என்று அவன் சொல்ல

“ஜெயந்தியா?” என்று கேட்டு தெரிந்து கொண்டவன்,

வாங்கி “எதாவது முக்கியமான விஷயமா? எல்லோரும் இருக்காங்க!” என்று மெதுவான குரலில் பேச,

“நான் என்ன இவனை கொஞ்சவா கூப்பிட்டேன், ஆனாலும் இவன் ஓவர்!” என்று தோன்ற “சரி” என்று வைத்து விட்டாள்..

அரை மணிநேரத்தில் அழைத்து விட்டான் “என்ன ஜெயந்தி?” என்று கேட்டபடி.

“ஏன் பெண் கேட்டு வரவில்லை?” என்றா கேட்க முடியும்.

“அது..” என்று இழுக்க..

“ஏதும் பிரச்சனையா?” என்றான் அவசரமாக உடனே.

“பிரச்சனை ஏதாவது இருந்தா தான் உங்க கூட பேசணுமா?” என்ற குரலில் சலிப்பு,

அது அவனுக்கும் தெரிய, “என்ன ஜெயந்தி?” என்றான் மீண்டும் ஆழ்ந்த குரலில்.

அவனின் குரல் “நீ எதுவும் என்னிடம் பேசலாம்” என்று உணர்த்தியதோ,

“இல்லை, ரெண்டு வருஷமா ஒருத்தர் பொண்ணு கேட்கட்டுமா கேட்கட்டுமான்னு கேட்டுட்டே இருக்கார், அப்புறம் வேண்டாம் சொல்றார், பின்ன கேட்கறார், இப்படியே போகுதே.. நடுவுல பார்க்கும் போதெல்லாம் சண்டை வேற வருதே.. இப்படி போகறதினால என்னால யாரையும் ப்ரீயா சைட் கூட அடிக்க முடியலை, கேட்பாரா? மாட்டாரா? இல்லை நான் சைட் அடிக்கட்டுமா?” என்று இலகுவான குரலில் கேட்டாள்.

“நீ ஏன் வரவில்லை?” என்ற செய்தி இருக்க…

அது புரிந்தாலும் மருது அதற்கு பதில் சொல்லாமல், “ரெண்டு வருஷமா யாரையும் நீ அடிக்கலையா? அப்போ அதுக்கு முன்ன அடிச்சிருக்கியா?” என்றான்.

இப்படி அவனுக்கு கூட பேச வரும் என்பது அவனுக்கே அன்று தான் தெரியும்.. அவன் கேட்க நினைத்த கேள்வியே வேறு.. “நீ என்னை சைட் அடிச்சிருக்கியா இல்லையா?” என்று தான். ஆனாலும் சைட் என்ற வார்த்தையை விட்டுவிட்டு பேசினான்.

“யாரை அடிக்க? எதுல அடிக்க?” என்றாள்.

“அது கண்ல தானே அடிப்பாங்க. அதுல இல்லையா?” என்று அவளிடமே கேட்டான்.

“நக்கலு” என்றவள் அப்படியே அமைதியாகிவிட..

அவனும் அமைதியாகி விட்டான்..

சில நொடி மௌனங்கள்!

மருது பேசட்டும் என்று ஜெயந்தி காத்திருக்க, “அது யார் கூட வர்றதுன்னு தயக்கம்? என்ன பேசறதுன்னு தயக்கம்? எனக்கு யார் கிட்டயும் போய் எனக்கு பொண்ணு பார்க்க போகணும், வாங்கன்னு கேட்க பிடிக்கலை!” என்று விட்டான்.

“ஷப்பா, இவனுக்கு ஈகோ மிகவும் அதிகம்!” என்று அந்த நொடியில் தெள்ளத் தெளிவாய் புரிய,

“இந்த மாதிரி விஷேஷத்துக்கு நாலு பேர் சேர்ந்து தான் வருவாங்க இதுல நீங்க இவ்வளவு தயங்க வேண்டிய அவசியமில்லை.. நான் பார்த்துக்கறேன். விஷால் வந்து கேட்டா நீங்க சரின்னு சொல்லி அவனோட வாங்க போதும்”  

“ம்ம், சரி” என்று விட்டான் உடனே. கூடவே “உனக்கு பிடிச்சு சம்மதம் சொல்லிட்டியா?” என்று கேட்க மனது துடிக்க..

இனி ஒரு சண்டை இழுக்க அவன் தயாரில்லை..

அவளாக ஏன் வரவில்லை என்று கேட்டதே போதுமானதாக இருக்க.. விஷால் வந்து அவனிடம் பேசுவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

ஆம்! எல்லாம் யோசித்து யோசித்து தனக்காய் செய்வது என்பது மிகப் பெரிய கொடுமை அல்லவா?

பத்து வயதில் இருந்து அதைத்தானே செய்கிறான்.. அவனுடைய கடல் கடந்த வாணிபத்தை செய்து கொண்டிருந்த போது அதில் ஒரு சாகசம் இருக்க.. வாழ்க்கை சுவாரசியமாய் சென்றது.

இப்போது அதெல்லாம் விட்டு அமர்ந்து விட்ட போது மனது அவனின் வாழ்க்கையை பற்றி சுய அலசல் தான் மேற்கொள்ளும்.

“சாப்பிட்டானா? தூங்கினானா? என்ன செய்கிறான்? ஏது செய்கிறான்? கேட்பதற்கு ஆள் இல்லை!

பல சமயங்களில் மனது சோர்வை உணர ஆரம்பித்து இருந்தது..

என்னவோ மனது எதிர்பார்த்தது? என்னவென்று அவனுக்கே தெரியவில்லை?

திகட்ட திகட்ட அன்பு வேண்டுமோ? பாசம் வேண்டுமோ? நேசம் வேண்டுமோ? காதல் வேண்டுமோ?

விஷால் அவனிடம் சிறிது நேரத்திலேயே வந்தவன், “ண்ணா, வாழ்த்துக்கள்!” என்றான் மலர்ந்த முகத்தோடு

அவனின் மலர்ந்த முகம் சிறிது புன்னகையோ கொடுக்க “எதுக்குடா?” என்றான்.

“எதுக்கா? மேம் என்கிட்டே விளையாண்டாங்களோ, என்னை அடி வாங்க வைக்க ப்ளான் பண்றாங்களோ” என்று மனதிற்குள் நினைத்தாலும் முகம் கவலையை காண்பிக்க..

அவனின் முக போக்கை பார்த்தவன் “என்னடா?” என்றான்.

“இல்லை, அது மேம்” என்று தடுமாற..

“மேம் வேண்டாம், அண்ணி சொல்லு!” என்று விட,

அப்படி ஒரு மலர்ச்சியினை விஷாலின் முகம் காண்பித்தது. “ண்ணா, போங்கண்ணா, பயப்படுத்திட்டீங்க” என்று சலுகையாக குறை சொன்னவன்,

“நான் என் அம்மாகிட்டயும், லக்ஷ்மிகிட்டயும், என்ன பண்ணணும் கேட்கட்டுமா?” என்று கேட்க,

“சரி” என்றவன், “ஜீவா கிட்டயும் பேசுடா, அப்புறம் என்னை விட்டுட்டீங்கனு சண்டை போட்டு என்னை கொள்வான்” என்றான் மருது..

லக்ஷ்மி விஷாலின் மனைவி, திருமணமாகி ஒரு வருடமாகியிருந்தது. இப்படியாக கிளம்பி பெண்பார்த்து முடிவாகி, திருப்பதியில் திருமணம் முடித்து, இங்கே சென்னையில் ஒரு வரவேற்பும் வைத்தாகி விட்டது. அவனின் ஏரியா மக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டாமாய் அவனின் வரவேற்பை ஜமாய்த்தனர்..  

எல்லாம் இரண்டே மாதங்களில்..

இடையில் மருது தன்னை பற்றி ஜெயந்திக்கு எதுவும் தெரியாது, பேசிவிட வேண்டும் என்று பலமுறை முயற்சித்தான்.

ஜெயந்தி “அப்புறம் பேசிக்கலாம், பேசிக்கலாம்” என்று தள்ளி தள்ளி போட்டுக் கொண்டதே வர  

இதோ திருமணமே முடிந்து விட்டது!

உண்மையில் ஜெயந்தி எதுவும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. ஏதேனும் விரும்பத் தகாத விஷயங்கள் இருந்து அவளுக்கு பிடிக்காமல் போய் விட்டாள்.. முடிவெடுத்த திருமணத்தில் இருந்து பின் வாங்க அவள் விரும்பவில்லை.

இலகுவான பேச்சுக்கள் மருதுவிடம் பேச வந்தாலும் ஒரு நெருக்கம் இன்னும் அவனிடம் உணரவில்லை.

மருதுவுமே அதனை உணர்ந்தான், நன்றாக தான் பேசினாள்.. ஆனாலும் அதில் அவன் எதிர்பார்ப்பது இருக்கிறதா தெரியவில்லை. அவனின் மனது இது எனக்கு போதாதே என்று சொல்ல வேறு செய்தது.

அதுவும் அவளின் குடும்பத்தினர்.. கோபாலனுக்கு இஷ்டம் இருக்காது தெரிந்தது தான். ஆனால் விமலன் அவனின் முகம் அப்படி ஒன்றும் மலர்ச்சியை காண்பிக்க வில்லை.. கமலன் எப்போதும் போல தான் இருந்தான். ஆனால் அவனுமே உரிமையை காண்பிக்கவில்லை.

கலைசெல்வி! இது வரை நன்றி தெய்வமே என்ற பார்வை பார்த்தது போய், இப்போது அவனை ஆராய்ச்சி பார்வை பார்ப்பது போல உணர்ந்தான்.

அவர்கள் வீட்டினர் எல்லோருக்கும் ஜெயந்தியின் வாழ்க்கை குறித்த பயம்! அது மருதுவிற்கு புரியவில்லை! 

ஏதோ ஒன்று அவர்களின் நிலை உணர்ந்து மருது, திருமணதிற்கு பணம் இருக்காது என்று புரிந்து, விஷால் மூலமாக விமலனிடம் பேசி, வேலை செய்யும் இடமாக அங்கே லோன் கொடுத்து, மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள செய்து, எப்படியோ திருமணத்தை நடத்திக் கொண்டான்.

அதுவும் இன்னும் ஒரே மாதத்தில் அவள் ஜெர்மனி செல்ல வேண்டும் என்ற நிலையில்.

நல்லவன் மாதிரி “சென்று விடு, ஆனால் இரண்டு அல்ல மூன்று வருடத்தில் திரும்பி விட வேண்டும்” என்று சொல்லி, “சரி” என்றும் சொல்லி விட்டான். ஜெயந்தி அவனின் வாழ்க்கையில் வந்தால் போதும் என்ற நிலை மட்டுமே!  

ஆனால் இப்போது மனது அவனிடம் சண்டை பிடித்தது. “உன்னை யார் சரி என்று சொல்லச் சொன்னது” என்று.

“கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் தீயை யாசித்தேன்…”

திருமணம் அப்பாடி ஒரு ஆசுவாசத்தை கொடுத்தது ஜெயந்திக்கு!

ஆம்! எனக்காக என்று எதற்கு செய்தானோ, அதை நிறைவேற்றி விட்டேன். ஆம்! எனக்காக என்று தானே என் குடும்பத்தை சிதையாமல் காத்தான். இதோ அவன் ஆசைப்பட்டபடி திருமணம் செய்து கொண்டு விட்டேன்.  

இனி அவனின் பணத்தை திரும்ப கொடுத்து விட வேண்டும்!

அப்போது அவனிற்கான நன்றி எல்லாம் போய்விடும்!

அவனுடனான வாழ்கையை நன்றாக வாழ வேண்டும், அவனை எதுவும் அடிதடி என்று போக விடக் கூடாது!  

இப்படியாக திட்டங்கள்!

திட்டம் போட்டு கொண்டு சொல்வதா வாழ்க்கை!

அதுவும் சிறு சொல் பொறுக்காத மருது, அதீத கோபம் கொள்ளும் மருது, யாரிடமும் எதற்கும் நிற்கக் கூடாது என்று நினைக்கும் மருது என்ற மனிதனை கொண்டு..

எல்லாம் இவளின் இவளுக்கான திட்டங்கள்!

இதில் மருது என்ற மனிதன் வரவில்லை. அவனோடு தான் திட்டங்கள் ஆனால் இது அவனுக்கான திட்டங்கள் அல்லவே?  

எல்லாம் எல்லாமாய் ஒருத்தி வரவேண்டும் என்று அவன் எதிர்பார்த்து காத்திருக்க…  

  

     

    

      

Advertisement