Advertisement

அத்தியாயம் பதினொன்று:

திருமணம் முடிந்து அவளின் வீட்டிற்கு தான் அழைத்து சென்றனர்.. மிக சிறிய வீடு.. அந்த மாதிரி சிறு வீட்டினில் தான் அவனின் வாழ்க்கை ஆரம்பமானது. ஆனால் அவன் மட்டும் தானே அங்கே.. இங்கே நிறைய பேர்..

காலையில் திருமணம், மாலையே வரவேற்பு என்றானது.. பின் மணமக்கள் பெண் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்றனர்.

அவனுக்கு அங்கே செல்லக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஆனால் தங்க முடியும் அங்கே என்று தோன்றவில்லை. தனிக்காட்டு ராஜாவாய் இதுவரை வாழ்க்கை. அவனுக்கு சட்டென்று புது இடத்தில் பொருந்த முடியும் என்று அவனுக்கே தோன்றவில்லை.    

அவர்களும் இரவு நேரம் அழைத்து சென்று ஆரத்தி எடுத்த பின், “இங்க உங்களுக்கு சௌகரியம் பத்தாது, ஹோட்டல் ரூம் புக் பண்ணியிருக்கேன், அங்க போயிடலாமா” என்று விமலன் கேட்க..

ஜெயந்தியை தான் பார்த்தான் “என்ன இது?” என்பது போல…

அவளிற்கும் இது தெரியாது, “இல்லை எனக்கு தெரியாது” என்று உடனே சொல்ல..

“ஹோட்டல் எல்லாம் வேண்டாம், எங்க வீட்டுக்கு போறோம்!” என்றான்.

“இல்லை, அது முறையா நாளைக்கு தான் போகணும்” என கலைச்செல்வி சொல்ல..

“ஹோட்டல் போகலாம், ஆனா வீட்டுக்கு போகக் கூடாதா? போகலாம் கா! நாளைக்கு காலையில வந்துடறோம். பின்ன நீங்க கொண்டு போய் விடுங்க” என்று உடனே முடிவெடுத்தான். 

உண்மையில் அவனின் வீட்டிற்கு தான் கொண்டு போய் விடுவதாக இருக்க எதுவும் பேசிக்க கொள்ளவில்லை. ஆனால் வந்திருந்த அவர்களின் உறவில் இருக்கும் மூத்த பெண்மணி “நம்ம பழக்கம் இங்க தான் கூட்டிட்டு வரணும்” என்று விட அதனைக் கொண்டே அவசரமாய் இந்த ஹோட்டலில் ரூம் ஏற்பாடு..

இவர்களை விட்டு அவனின் பக்கமாய் நின்ற ஜீவாவும் விஷாலும் அவரவர் குடும்பத்துடம் கிளம்பியிருக்க.. நேரமும் பதினோன்றிற்கு மேல் இருக்க.. காலையில் திருப்பதி சென்ற களைப்பு பின்பு வரவேற்பு களைப்பு ஜெயந்தி சோர்ந்து இருப்பது தெரிய,

“நாங்க போறோம்” என்று உடனே கிளம்பினான்.

“எப்படி போவீங்க?”  

அவர்களை விட்டு கார் கிளம்பியிருந்தது, வாடகை கார் தான் பேசியிருந்தான். இன்னும் கார் வாங்கவில்லை… ஆம்! தனியன் என்பதால் யாரோடு காரில் போகப் போகிறேன் என்று நினைத்தே வாங்கவில்லை. இனி தான் எல்லாம்!

“ரெண்டு வீதி தானே நடந்து போயிடறோம்” என்று சொன்னவன், ஜெயந்தியை பார்க்க தலையை ஆட்டினாள்.

மெதுவாக நடக்க ஆரம்பிக்க… அவன் பட்டு வேஷ்டி சட்டையில், அவள் பட்டு புடவையில். அந்த புடவையும் அவள் அணிந்திருந்த நகைகளும் மருது நிச்சயத்தின் போது அவளுக்கு கொடுத்தது…

அதுவும் அவர்களை புடவை எடுக்க அழைத்தான். “எங்க பழக்கம் நாங்க கூட எல்லாம் போக மாட்டோம். நீங்களே எடுத்துக்கங்க” என்று என்று விட்டனர். அவனுக்கு என்ன  தெரியும்? தங்கத்தை தெரியும், ஆனால் நகையை தெரியாது. புடவை சுத்தம்.. அவர்கள் மீது கோபம் கோபமாய் வந்தது..  

அந்த கடுப்பில் “பொண்ணு வீட்ல இருந்து மாப்பிள்ளைக்கு நாங்களும் வாங்கற பழக்கம் எதுவுமில்லை” என்று விட்டான்..

பின்பு ஜெயந்திக்கு வாங்க இவனாய் அதற்கொரு வழி கண்டு, இவனாய் விஷாலின் கைபேசியில் இருந்து கேட்லாக் மாடல்கள் அனுப்பி எதுவென்று அவளை தேர்வு செய்ய வைத்தான்.

ஜெயந்தியின் தேர்வு எப்போதும் அருமையாய் இருக்கும் என்பதால் நகை புடவை எல்லாம் சிறப்பாய் இருந்தது. 

அவனிடம் பட்டன் மொபைல் தான். எழுத படிக்க வருமா வராதா அவனுக்கே தெரியாது. தடுமாறி படிப்பான். பின் எங்கே ஆன்ட்றாய்ட் மொபைல்கள்… அதனால் விஷாலின் மொபைலில் இருந்து அனுப்பியிருந்தான்.

இது மட்டுமே அப்படி செய்தது, பிறகு அவ்வளவே. வேறு எதுவும் பெரிதாய் இல்லை. பெரிதாய் எடுத்து செய்ய ஆளில்லை.. மருதுவும் ஜீவாவும் விஷாலும் கேட்கும் போது இது போதும் என்றிடுவான்.

ஜெயந்தி ஆலோசித்திருந்தால் இன்னும் கூட சிறப்பாய் இருந்திருக்கலாம். ஆனால் அவளும் செய்யவில்லை. பின்னே பணமாய் அவனுக்கு பார்த்த நாள் முதல் செலவு வைத்து விட்டு, என்ன எதிர்பார்ப்பாள்? என்ன பேசுவாள்?.

இருவரும் அந்த ஏகாந்த இரவில் நடந்து போக, “ஏன் என்கிட்டே முன்னமே இந்த ஹோட்டல் விஷயம் எல்லாம் சொல்லலை, சொல்லியிருக்கணும் தானே, இப்போ வேண்டாம்னு மறுத்தது அவங்களுக்கும் கஷ்டம்”

“இல்லை, எனக்கு தெரியாது” என்று அவள் பேச..

“தெரிஞ்சிருக்கணும் இல்லையா, கல்யாணம் முடிஞ்சு எங்க போவோம் எல்லாம்”

“இல்லை நான் யோசிக்கலை, சாரி” என்று ஜெயந்தி பேச,

“இல்லை, நான் யோசிக்கலைன்னு சொல்லு, சாரி எல்லாம் சேர்க்காதே” என்று பட்டென்று சொன்னான்.

“ம்ம்” என்ற தலையாட்டல் மட்டும்.

கூடவே “எனக்கு தோணிச்சு, ஆனா உங்க வீட்ல யார் கிட்ட பேசறதுன்னு தெரியலை, எனக்கா இதை பேசவும் முடியலை.. சரி இங்க தான் வருவோம் போல நினைச்சிருந்தேன்” என்றான். 

உண்மையில் விமலன் கமலன் கலைச்செல்வி எல்லோரோடும் சகஜமாய் பேசும் ஆள் தான் மருது.. ஆனால் திருமண விஷயம் ஆரம்பித்ததில் இருந்து அந்த சகஜம் மறைந்து இருந்தது, அவர்களாலா இவனால அவனுக்கே தெரியவில்லை.

அதற்குள் வீடு வந்திருக்க, அவனாய் கேட்டை திறந்து உள்ளே சென்றவன்.. கதவை திறக்க போக, “உங்க நாய் இருக்குமே!” என்றாள் முதல் நாள் அந்த வீட்டிற்கு வந்ததை ஞாபகப்படுத்தி.    

“ஜானி சொல்லணும்” என்று அடுத்த நொடி எடுத்துக்கொடுத்தான்.

“ம்ம்” என்ற தலையாட்டாள்.

“இங்கயே நில்லு” என்று அவன் உள்ளே போக..

“வேண்டாம், வேண்டாம், ஜானி வந்தா?” என்று அவள் இழுக்க,

“ரூம் உள்ள இருக்கான், எல்லோரும் வர போக இருப்பாங்கன்னு உள்ள வெச்சு பூட்டியிருக்கேன், அதுவுமில்லாம அவனுக்கு வயசாகிடுச்சு. முன்ன மாதிரி குறும்பு கிடையாது. கொஞ்சம் சோர்வா தெரியறான். பயந்துட்டே இருந்தேன், நம்ம கல்யாணத்துகுள்ள அவன் எதுவும் இழுத்து வைப்பானோன்னு” என்று பேசியபடி உள்ளே சென்றான்.  

அவனின் பேச்சு அவளுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது, ஏதோ மனிதனை பேசுவது போல பேசுகிறான் என்று.

கூடவே இன்னும் ஒரு மாதத்தில் ஜெர்மனி பயணம் தான். ஆனால் அதுவரை ஜானியோடு இருக்க வேண்டுமா என்ற பயமும் வந்து ஒட்டிக் கொண்டது.

“என்னால் இருக்க முடியாது” என்று சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தாள். ஆனால் இப்போது மருது பேசுவதை பார்த்தால், அவனிடம் அதை சொல்ல முடியாது என்று தான் தோன்றியது.

யோசனைகள் ஓடும் போதே அவனாக ஒரு தட்டில் ஆராத்தி எடுத்து வந்தான்.

அதுவரை ஜெயந்திக்கு பெரிதாக எதுவுமில்லை. அவன் அதை எடுத்து வரவும் தான் என்னவோ மனதிற்குள் பிசைந்தது.

“என்ன பெரிய பழக்கம், இந்த அம்மாவாவது வந்து ஆராத்தி எடுத்து உள்ளே விட்டு சென்றிருக்கலாம், இல்லை யாரையாவது நிறுத்தி வைத்திருக்கலாம். இன்னும் கூட தான் விஷயங்களை கிரகித்து சீர் செய்திருக்க வேண்டுமோ” என்று தோன்றியது.

அவளின் அருகே வந்து நின்று கொண்டவன், “பெருசா என்ன என்ன போடணும் தெரியலை, எனக்கு தெரிஞ்சதை போட்டிருக்கேன்” என்று சொல்லி அவளுடன் நின்று அவர்களுக்கு அவனே சுற்ற முற்பட,

“எனக்கு தெரிஞ்சு பொண்ணுங்க தான் சுத்துவாங்க” என்று  ஜெயந்தி சொல்ல,

“ஆனா நீ வீட்டுக்கு வர்றதுக்கு தானே சுத்தறோம்” என்று மருது சொல்ல..

“இருங்க ரெண்டு பேருமே சுத்திக்கலாம்” என்றவள் அவளும் அவனுமாய் கை பிடித்து சுற்றி பின் அவள் அவனுக்கு பொட்டு வைக்க, அவன் அவளுக்கு பொட்டு வைக்க” என்று ஒரு நெகிழ்ச்சியான தருணம்.

அவளை விட்டு சென்றவன்.. கேட்டிற்கு இந்த புறம் நின்று தண்ணீரை வீசி விட்டு உள்ளே வந்தான். அதுவரை அவனுக்காக நின்றவள் அவனுடன் சேர்ந்தே உள்ளே சென்றாள்..

வாசலில் இருந்த வாழை மரம், பந்தல், முன் வாயிலில் கட்டி இருந்த மாவிலை தோரணம், இதை  தவிர திருமண வீடு என்று உள்ளே எதுவுமே இல்லை. அவசியதிற்காய் பொருட்கள்..

சமையலறை என்று ஒன்று இல்லவே இல்லை.. அங்கே இருந்தது எல்லாம் கேன் தண்ணீர் அவ்வளவே. ஒரே ஒரு பிரிட்ஜ் மட்டுமே. ஒரு பேச்சிலரின் ரூம், ஆனால் அது பெரிய வீடாய் இருந்தது.

உள்ளே வந்ததும் ஜெயந்தி விழிக்க, “எத்தனை தடவை பேச முயற்சி பண்ணினேன், என்ன வாங்கணும்னு கேட்க, நீ பேசவேயில்லை. நானா ஏதாவது வாங்கி உனக்கு பிடிக்கலைன்னா, அதான் ஒன்னும் வாங்கலை, நீ வந்த பிறகு வாங்கலாம்ன்னு விட்டுடேன்” என்று பேசிக் கொண்டே பூஜை அறை அழைத்து சென்றான்.

அந்த வீட்டினில் சுத்த பத்தமாய் இருந்தது அது மட்டுமே!

“விளக்கேத்து” என்றான்.

எல்லாம் இரவு பன்னிரெண்டை நெருங்கும் போது, தானாய் ஒரு பொறுப்பு அவளிடம் வந்து அமர்ந்து கொள்ள.. உள்ளே சென்று விளக்கேற்றி வணங்க.. அவளின் அருகே வந்து நின்று கொண்டான்.

“அப்பா, அம்மா இல்லை தெரியும். அப்பா அம்மா போட்டோ எங்கே” என்று அவள் கேட்க..

“அவங்களும் என்னை பார்த்ததில்லை, நானும் அவங்களை பார்த்ததில்லை, அதனால போட்டோ எல்லாம் கிடையாது” என்று சொல்ல,

ஜெயந்தி புரியாமல் பார்க்க “நான் பிறக்கும் போது அம்மா பிரசவத்துல இறந்துட்டாங்க. என்னை பார்க்கலை, எங்கப்பா என்னை அவர் தலையில கட்டிடுவாங்கன்னு பொண்டாட்டி காரியத்தை செய்ய வந்தவர், என் முகத்தை கூட பார்க்கலையாம், அப்படியே போயிட்டாராம். அப்புறம் பாட்டி தான். அவங்க பத்து வயசுல இறந்துட்டாங்க. அப்போ இருந்து நான் தனி தான்”

“வேற சொந்தக்காரங்க”

“இருந்தாங்க, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை எல்லாம். எனக்கு ஞாபகம் இருக்கு. ஆனா பாட்டி இறந்த பிறகு யாரும் சேர்த்துக்கலை. நானும் யார் வீட்டு வாசல்லயும் நிக்கலை. அப்போவே வேலைக்கு போய் தான் சாப்பிட்டேன்” என்றான்.

அவன் பேசியதெல்லாம் மனதை எதோ செய்தது. ஆனால் அவன் உரைத்தது எல்லாம் செய்தி போல தான். ஒரு அனுதாபத்தையோ பரிதாபத்தையோ தேடும் குரல் அல்ல.   

“அப்போ படிப்பு” என்று மெதுவான குரலில் கேட்டாள்.. “நாலாவது பாஸ் சொல்லலாம், அஞ்சாவது பெயில்ன்னும் சொல்லலாம்” என்று இலகுவான குரலில் சொல்ல,

மருது டிக்ரீ எல்லாம் படித்திருப்பான் என்று ஜெயந்தியே நினைக்கவில்லை. ஆனால் ஒரு பத்தாவது பன்னிரெண்டாவது இப்படி நினைத்திருக்க, என்ன அஞ்சாவதா? அதிர்ச்சியில் அவளுக்கு விக்கலே எடுத்து விட்டது.

அவளின் அதிர்ச்சி புரிய, “நான் நிறைய முறை உன்கிட்ட பேச முயற்சி பண்ணினேன்” என்று அவன் சொல்ல,  

“பரவாயில்லை, சொல்லலை” என்று தான் அவளிற்கு தோன்றியது.. சொல்லியிருந்தால் திருமணதிற்கு முழு மனதோடு ஒப்பியிருக்க மாட்டாள்.

“நீங்க படிக்கலைன்னா என்ன? நான் தான் படிச்சிருக்கேனே” என்று அவள் சொல்ல வேண்டும் என்று மனம் எதிர்பார்க்க, அவள் அப்படி எதுவும் சொல்லவில்லை.

அவளின் அதிர்ச்சி மனதுக்கு வருத்தத்தை கொடுக்க மௌனமாய் எழுந்து ஜானியை பார்க்க போனான்..

“படிக்கறது எதுக்கு? சம்பாதிக்க தானே. அது தான் நான் செய்யறேனே!” என்று மனது சொல்லிக் கொண்ட போதும், “இதுக்கே இவ்வளவு அதிர்ச்சின்னா, என்னோட கடல் கடந்த வாணிபம் அதை என்ன சொல்லுவா?” என்ற குழப்பம் வந்து அமர்ந்து கொண்டது.

Advertisement