Advertisement

அந்த ஐந்து நிமிடத்தில் நாலு தரம் பார்த்திருப்பான் நீலகண்டன்.. எதோ க்ரே கலர் காட்டன் சுடிதார்.. லெகின்ஸ்.. நீண்ட பின்னல்.. கண்ணில் அஞ்சனம்.. ஜிமிக்கைகள் ஆட வண்டியை லேசாக பின்னால் இழுத்து.. அதில் வாகாக அமர்ந்து, எதோ முனுமுனுத்தபடி ஸெல்ப் ஸ்ட்ராட் செய்ய.. அதுவும் ஸ்டார்ட் ஆனது அழகாக. அப்போதுதான் அவனுக்கு ‘ஓ ப்ரே பண்ணியிருக்கா..’ என தோன்ற மீண்டும் அவனின் இறுகிய உதடுகளில் சிறு புன்னகை, அவனே உணராமல்.

என்னமோ, அவளின் தடுமாற்றமான உடல்மொழியும்.. திணறிய பார்வையும் அவனை ஈர்த்தது என இல்லை, கவனிக்க சொன்னது அவளை. அத்தோடு வண்டி ஸ்டார்ட் ஆகுதா என ஒரு எண்ணம்.. அதையும் பார்த்தான் அவ்வபோது. அப்போது அவனின் கண்கள் அவளின் உடை ஜிமிக்கை.. எல்லாவற்றையும் ரசித்தது.

நேரம் சென்றது..

எட்டு மணி ஆக ஆக வயிறு காந்தியது. உண்பதற்காக மெஸ் சென்றான் நீலகண்டன். வீட்டில் சமைக்காத போது இப்படி உண்பான். இன்று மெஸ்ஸில் கார்த்தி இருந்தான். அதியமான் மகன்.

நீலகண்டனுக்கு சட்டென தெரியவில்லை. பின் பில் கொடுக்கும் போது அருகில் பார்க்கவும் ஒரு தயக்கமான புன்னகை இருவருக்கும். நீலகண்டன் “ஹாய்.. சட்டுன்னு தெரியலை..” என்றான்.

கார்த்தியும் “ம்.. எனக்கும்தான். எல்லோரும் மாமா பொண்ணு கல்யாணம்ன்னு ஊருக்கு போயிட்டாங்க.. நான் மட்டும்தான், அதான் அப்படியே சாப்பிட்டு கிளம்பளாம்ன்னு வந்தேன்.. குகன் எப்படி இருக்கார்..” என்றான். கார்த்திக் எந்த தயக்குமும் இல்லாமல் இயல்பாக பேசவும், நீலகண்டனுக்கு கொஞ்சம் இலகுவானது. காலையிலிருந்து யோசனை.. மதியமும் சரியாக உண்ணவில்லை.. மண்டை காய்ந்தது.. இதில் கார்த்தியின் பேச்சு கொஞ்சம் இதமாக இருந்தது.

நீலகண்டன் “ம்.. நல்லா இருக்கான்.. உங்க வொர்க் எப்படி போகுது” என இவனும் சகஜமாக பேச.. அரைமணி நேரம் இருவரும் தங்களின் வண்டியில் சாய்ந்தபடியே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.. கார்த்திக்கு எப்படியோ நீலகண்டனுக்கு ரிலாக்ஸ்சாக இருந்தது.

விடைபெறும் போது நீலகண்டன் “வாங்க கடைக்கு..” என சொல்லி இன்முகமாக விடைபெற்றான்.

இரவு எந்த யோசனையும் இல்லாமல் உறங்கினான், நீலகண்டன்.

நாட்கள் வேகமாகத்தான் சென்றது.

கண்ணன், நீலகண்டன் அழைப்பான் என மருத்துவமனையில் காத்திருந்தார்.  ஆனால், அவன் அழைக்கவில்லை. நீலகண்டனுக்கு ரகு பேசியது.. மாதவன் பார்த்தது.. எல்லாம் ஒரு சொல்ல முடியாத உணர்வை தந்திருந்தது. நானென்ன.. இவர் வேலையாளா, வானா வரணும்.. கையெழுத்து போடுன்னா போடனும்மா.. வரட்டும் பேசிக்கலாம் என அந்த இளையவர்கள் மேல் கோவம்.

கண்ணன் மேல் கோவம் இருக்கிறது, ஆனால், அவரின் நிலை, அவர் மேல் கோவபடாமல் ‘அய்யோ பாவம் ‘ என அவரை நினைக்க வைத்து. எனவே, அமைதியாக இருந்துக் கொண்டான். தான் சொல்லி ஏதும் அங்கே மாறபோவதில்லை என.

அதியமான் ஊரிலிருந்து திரும்ப வந்ததும்.. நீலகண்டன் கடைக்கு வந்தார். கண்ணன் பற்றி கேட்க்கலாமா வேண்டாமா என எண்ணி வந்தார். நீலகண்டனே சொன்னான்.. அங்கு நடந்தவைகளை. அதியமானுக்கே கொஞ்சம் சங்கடமாக போனது.. நீலகண்டனிடமே “நான் எதோ உயிர் போற நேரத்தில் பார்க்க கூப்பிட்டான்னு நினைச்சேன்.. இப்படி சொத்து பிரச்சனைக்கு கூப்பிட்டிருப்பான்னு தெரியாது பா, சரி விடு.. இது அவர்களுக்குதான் முக்கியம்.. பார்க்கலாம்.” என்றார்.

நீலகண்டன் “உங்களுக்கு அவரை பற்றி தெரியாதா” என்றான்.

அதியமான் “பெருசா தெரியாது.. அவன் அப்போதிய நிலையில் உதவினான் தெரியும்.. ஏன்னா, அவனுக்கு குழந்தையில்லை.. அதனால் ட்ரீட்மென்ட் கோவில் என பெரிய பெரிய செலவு அவனுக்கு அப்போது, பொண்டாட்டின்னா கொஞ்சம் உதறும்..அவனுக்கு. உங்க தாத்தா பாட்டி இருந்திருந்தா பொண்ணுக்கு கொடுன்னு சொல்லி இருப்பாங்க.. பெரியவர்கள் இல்லை, அதான்.. செலவை பார்த்துக் கொண்டு.. உங்க அம்மாக்கு சேர வேண்டியதை தரமால் விட்டுட்டான் போல.. நம்ம ஆளுங்க இருக்காங்க.. என்னான்னு விசாரிக்கிறேன்.. ம்..” என்றார் அவரும் நீலகண்டனின் தோள் தொட்டு.

நீலகண்டன் “இனி என்ன ஆகபோகுது” என்றான்.

அதியமான் “அப்படி சொல்லாத.. காரணம் இல்லாமல் நடக்குமா எதுனாலும்” என்றார்.

நீலகண்டன் “எங்களுக்கு நடந்ததுக்கு காரணம் தேடி சொல்லுங்க பார்ப்போம்” என்றான்.

“விடுகதையா இந்த வாழ்க்கை..

விடை தருவார் இங்கு யாரோ..”

குகன் இந்த இரண்டு வாரமாக வரவில்லை வேலை என்றான் அண்ணனிடம். நீலகண்டனும் அதை பார் என்றான்.

இப்போதெல்லாம் கார்த்திக் வருகிறான் கடைக்கு. ம்.. அதியமான் குடும்பம் ஊருக்கு சென்ற அந்த ஒரு வாரத்தில் கார்த்திக்கும் நீலகண்டனும் நண்பனாகி இருந்தனர்.

கார்த்தி முதலில் முறைத்தாலும்.. நீலகண்டனின் இறுகிய தோற்றமும்.. ஸ்திரமாக பேசும் சுபாவமும்.. எதற்கும் அலட்டிக் கொள்ளாத போக்கும் கார்த்தியை கவர்ந்தது. எனவே தானாகவே கடைக்கு சென்று.. கடை சாற்றி நீலகண்டன் வரும் வரை நின்று இருவரும் உண்டு வந்தனர்.

அதில் ஒரு அழகான நட்பு இருவர்குள்ளும்.. இப்போதெல்லாம் தினமும் வருகிறான் கார்த்தி. இரவு ஒன்பது  மணிக்கு வருவான். தங்களின் கடைக்கு செல்லுகிறானோ இல்லையோ.. நீலகண்டன் கடைக்கு வருவான். இவன் வரும் நேரம் அதியமான் கடையை சாற்றிக் கொண்டிருப்பார். எனவே வாகை ஸ்டோர்ஸ்சில் இருப்பான், கார்த்திக்.

கடை சாற்றும் வரை இருந்து.. நீலகண்டன் கணக்கு பார்க்கும் வரை இருப்பான்.. பின் இருவரும் நீலகண்டன் வீட்டிற்கு செல்வர்.. ஏதாவது உண்டு பதினோரு மணி வரை கீழே நின்று அரட்டை அடித்து விட்டுதான் வீடு வருகிறான் இப்போதெல்லாம், கார்த்தி. 

இன்றும் அப்படியே.. நீலகண்டன் கடை சாற்றி முடிக்கவும் கார்த்தி “என்ன இன்னிக்கு ஸ்பெஷல் “ என்றான்.

நீலகண்டன் “இல்ல, கார்த்தி இன்னிக்கு டயர்டா இருக்கு.. நாலு இட்லி சாப்பிட்டுடலாமா” என்றான்.

கார்த்தி “ஹய்யோ.. வாங்க பாஸ்.. நான்தான் சொல்றேன், எத்தனை வேலை செய்யறீங்க நீங்க.. சமையளுக்காவது ஆள் வைத்துக் கொள்ளுங்கன்னு சொல்றேன் கேட்க மாட்டேங்கிறீங்க” என்றவன் தன் வண்டியை எடுத்துக் கொண்டே “வாங்க.. என் வண்டியில் போலாம்.. அப்புறம் வந்து உங்களோடதை எடுத்துக்கலாம்” என்றான்.

நீலகண்டன் வண்டியில் ஏறவும், கார்த்தி விடாமல் “சொல்லுங்க அம்மாகிட்ட சொல்லி ஏற்பாடு செய்யவா” என்றான்.

நீலகண்டன் “ம்ஹூம்.. இப்போ வேண்டாம் கொஞ்ச நாள் ஆகட்டும்.. இந்த சிக்ஸ் மந்த் போனாதான் என்னால் கொஞ்சம் ரெலாக்ஸ் ஆகவே முடியும்.. நோ பெர்சனால் எச்பென்செஸ்..” என்றான்.

இருவரும் இன்னும் எதோ பேசியபடியே சென்று உண்டு வந்தனர்.

நீலகண்டன் கடைக்கு வந்து தத்தமது வண்டியில் இருவரும் தங்களின் வீடு நோக்கி சென்றனர்.

நீலகண்டனுக்கு குகன் அழைத்துக் கொண்டே இருந்தான். எடுக்கவேயில்லை. இந்த நாட்களில், குகன் அண்ணனின் திருமணத்திற்கு என நிறைய வரங்களை தேர்வு செய்து அனுப்பினான். இதுவரையில் ஒன்றையுமே பார்க்கவில்லை அண்ணன்.

எனவே கோவம் குகனுக்கு, அதில் இரண்டு நாட்கள் முன்பே.. டைம் கொடுத்து இன்றுக்குள் சொல்லு என்றிருந்தான். ஆனால், நீலகண்டன் இன்னமும் எதையும் கண்ணால் கூட பார்க்கவில்லை. எனவே கடை சாற்றும் நேரத்தை கணக்கில் கொண்டு.. அழைத்துக் கொண்டே இருக்கிறான்.

வீடு வந்ததும் “மோர்னிங் பார்க்கிறேன்” என செய்தி அனுப்பி உறங்கிவிட்டான் அண்ணன்.

எப்போதும் போல அதிகாலையிலேயே விழிப்பு வந்தது நீலகண்டனுக்கு. அன்றாட வேலைகளை கவனிக்க தொடங்கினான் நீலகண்டன்.

குகன் அழைத்தான் “அண்ணா.. இப்போவே பாரு.. ப்ளீஸ்” என்றான்.

நீலகண்டனுக்கும் ‘எத்தனைநாள் கடத்துவது.. சும்மா பார்த்துட்டு பிடிக்கலை சொல்லிடனும்..’ என எண்ணிக் கொண்டே லாப் எடுத்தான்.

பொறுப்பாக மெயில் திறக்க.. கிட்ட தட்ட இருபது ப்ரோஃபையில் இருக்கும்.. பொறுமையாக எல்லாம் பார்க்க தொடங்கினான்.

இப்போது பால்கனி வழியாக பாட்டு சத்தம்.. கூடவே சலங்கை சத்தமும்.. நீலகண்டனின் மனமும் கண்ணும் லேபிள் பதிய மறுக்கிறது. மெல்லிய சலங்கை சத்தம்.. அவனின் காதுகளை தீண்டி தீண்டி தென்றலோடு கலக்கிறது.. இவனுக்கும் மனம் அந்த சலங்கை ஒளிக்கும்.. காற்றோடு செல்லும் ஒளிக்கும் இடையில் லாப்போடு தடுமாறினான். 

சட்டென எந்த பெண்ணின் விவரங்களும் அவனின் மனதில் பதியவில்லை.. எந்த பெண்ணின் புகைப்படமும் அவனை ஈர்க்கவில்லை.. அந்த அரைமணி நேரமும் முயன்று எல்லாம் பார்த்துவிட்டு.. லாப் மூடி வைத்து அமர்ந்து கொண்டான் அதே இடத்தில்.

இப்போது சலங்கை சத்தம் இல்லை.. அவனின் மனதிலும் சத்தமில்லை.

சற்று நேரத்தில் மீண்டும் ஒரு பாட்டு 

“யமுனை ஆற்றிலே.. 

ஈர காற்றிலே.. 

கண்ணோடு நான் ஆட..

பார்வை பூத்திட..

பார்வை பார்த்திட…

பாவை ராதையோ வாடா..” 

ஒரு குழந்தையின் குரலும் சேர்ந்தது.. “யா…மு..னை..” என மழலையின் குரல் ஒன்றும் கேட்க.. நீலகண்டன் எழுந்துக் கொண்டான், வாரீசுருட்டிக் கொண்டு.

Advertisement