Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

12

இரண்டு நாட்கள் சென்றது..

அப்போதுதான், கடை அடைத்துவிட்டு.. கார்த்திக் உடன் சென்று உணவு உண்ண வந்திருந்தான், நீலகண்டன். 

என்னமோ இன்று தம்பியின் நினைவு அதிகமாக எழுந்தது அவனுள் கார்த்தியிடம் புலம்பல்கள் நீலகண்டனுக்கு, குகனை பற்றி. மனது உறுத்த தொடங்கியது.. நான்கு நாட்கள் பேசாமல் இருப்பான்.. ஐந்தாவது நாள்.. ஒன்று வந்து நிற்பான், இல்லை.. ஒரு வாய்ஸ் மெசேஜ் செய்வான்.. இப்படி, தம்பி இருந்ததில்லையே என புலம்பிவிட்டான் அண்ணன்.

கார்த்திக் “விடாமல் கூப்பிடுங்க..” என சொல்லிக் கொண்டிருந்தான்.

வீடு சென்றவன் தானே அழைத்தான்.. நான்கு முறை அழைப்பிற்கும் பதில் சொல்லவில்லை குகன். நீலகண்டனுக்கு என்னமோ என தோன்ற, அவனின் உடன் தங்கியிருக்கும் நண்பனுக்கு அழைத்தான். அவர்களும் எடுக்கவில்லை.

விடாமல் நீலகண்டன் அழைத்தான் குகனை.. இருபது முறையை கடந்தும், ஏதும் பதிலில்லை.. நீலகண்டன், சென்னை கிளம்ப எண்ணினான். எனவே, தனக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டே.. தம்பியின் நண்பர்களுக்கு அழைத்தான்.

ஒருவழியாக, குகனோடு தங்கியிருக்கும் நண்பன் ஒருவன் போனை எடுத்துவிட்டான். நீலகண்டன் “வெற்றி, என்னடா ஆச்சு, குகன் எப்படி இருக்கான்.. ஏன் போனை எடுக்கலை” என கேள்விகளாக கேட்டான் அண்ணன்.

வெற்றி தடுமாறினான் “அண்ணா, தெரியலை ண்ணா, நான் ஊருக்கு போயிட்டு இப்போதான் வந்தேன், இருங்க சாய்கிட்ட தரேன்” என சொல்லி போனை சாய் என்பவனிடம் கொடுத்தான்.

நீலகண்டனுக்கு இது இன்னும் குழப்பத்தை தந்தது.

சாய் “ஹலோ” என்க.

நீலகண்டன் “என்னாச்சு சாய், ஏதாவது சொல்லு, நான் சென்னைக்கு கிளம்பிட்டேன், குகன் போனை எடுக்கலை.. என்கிட்டே பேசி ஒருவாரம் ஆச்சு அவன்” என பரபரப்பாக பேசினான், அவனின் இயல்பை தொலைத்து.

சாய் “அண்ணா, அ..வன் ஹாஸ்ப்பிட்டலில் இருக்கான் அண்ணா” என்றான் சாய்.

நீலகண்டன் “என்னாச்சு டா, சொல்ல மாடீங்களா.. ஏன் டா, இப்படி பொறுப்பில்லாமல் இருக்கீங்க.. என்ன இது.  என்னாச்சு அவனுக்கு” என்றான்.. ஓய்ந்த குரலில்.

சாய் “அண்ணா.. அவனுக்கு ஒன்னும் இல்லை. இது, நான் சொல்ல முடியாது ண்ணா.. அவனோட போன் இங்கேயே வைச்சிட்டு போயிட்டான்.. நான் இன்னொரு நம்பர் தரேன் அதில் கூப்பிடுங்க, அவன்கிட்ட பேசுங்க..” என சொல்லி ஒரு எண் கொடுத்தான் அந்த நண்பன்.

நீலகண்டன் குழம்பி.. யோசிக்கவே முடியாமல்.. சாய் கொடுத்த எண்ணிற்கு அழைத்தான். மணி பதினொன்றுக்கு மேல்.

குகனுக்கு, இந்த இரவில் தன் அண்ணின் எண்ணை பார்த்ததும்.. ஒரு நிம்மதி.. பயம்.. ஆசுவாசம்.. தயக்கம்.. ஆறுதல்.. என எல்லாம் சேர்ந்தே வந்தது. ஆனால் எடுப்பதற்கு தயக்கம்.. ‘என்னவென சொல்லுவேன் நான்..’ என தம்பிக்கு தயக்கம்.

அங்கே குகன் மருத்துவமனையின்… வெளி வராண்டாவில் அமர்ந்திருந்தான். மக்கள் நடமாட்டம் உள்ள மெயின் ரோட்டில்.. ஒரு சின்ன நர்சிங்ஹோம். அங்கே, பெரிதாக கூட்டம் இல்லை.. ஆனால், அவன் இருந்த அறையின் வாயிலில் மட்டும் நான்கு ஆண்கள் நின்றிருந்தனர். அந்த ரூமில் ஒரு பெண்மணி இருந்தார்.

குகன் யாரையும் பாராமல்.. யாரின் முகத்திலும் விழிக்க முடியாமால்.. ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான்.

இந்த இரண்டு நாட்களாக உணவு என்பதை அவன் மறந்திருந்தான். எதோ டீ.. பிஸ்கட் என உண்டுக் கொண்டிருக்கிறான் அவ்வளவுதான். ஒரு பிடி குறைந்து.. தளர்ந்து.. ஓய்ந்து அமர்ந்திருந்தான். யாரும் அவனின் அருகில் வரவில்லை.. ஒரு டம்பளர் தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அவனை சுற்றிலும் வெட்டவா.. குத்தவா.. என மனிதர்கள் நிற்கிறார்கள்.

இந்த இரண்டு நாட்கள் அவன் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்.. மறக்க கூடாத நாட்கள். தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன்.. செய்யும் போது தவறின் அளவும்.. அதன் வீரியமும் தெரியவில்லை. ஆனால், இப்போது மருத்துவமனையின் வாசலில் அமர்ந்திருக்கும் போது.. தான் செய்த தவறின் அளவு.. விஸ்வரூபம் எடுத்து மிரட்டியது அவனை.

‘எப்படி என் அண்ணன் முகத்தில் விழிப்பேன்.. எப்படி அவனிடம் சொல்லுவேன்..’ என இந்த ஒருவாரமாக யோசனை ஓடிக் கொண்டிருக்கிறததுதான். ஆனால், இந்த இரண்டு நாட்கள்.. அவன் முழுவதுமாக மிரண்டு போன நாட்கள். 

யாரின் நினைவும் இல்லை.. ‘உள்ளே இருப்பவள்.. பத்திரமாக இருக்க வேண்டும்.. அதை மட்டும்.. அவளை மட்டும் கொடுத்திடு ஆண்டவா..’ என அவன் வேண்டிக் கொண்டே இருந்தான். மற்ற எண்ணங்கள் ஏதும் அவனிடம் இல்லை. 

குகன், அர்ச்சனா என்ற தன்னோடு வேலை பார்க்கும் பெண்ணை விரும்புகிறான்.. கடந்து இரண்டு வருடங்களுக்கு மேல். 

அப்போதுதான், அந்த அலுவலகத்தில் அர்ச்சனா புதிதாக சேர்ந்திருந்தாள். தன் கேபின்.. தன் லீட்.. பஸ்.. என மட்டுமே இருந்த முதல் மூன்று மாதம் காலம் அது. அன்றுதான், அவள் கேண்டீன் வந்தாள்.. முதல்முறை. 

குகன், அப்போதுதான் ஒரு சமோசா எடுத்துக் கொண்டு.. அங்கே வேலை செய்பவரிடம் “ப்ரோ, அவளுக்கு என் கணக்கில் கொடுத்திடுங்க..” என்றபடி விரலை பின்னால் காட்டி, திரும்பி கூட பார்க்காமல் சொல்லி.. சென்று அமர்ந்துக் கொண்டான் குகன்..

அர்ச்சனாவிற்கு, என்னவென தெரியவில்லை.. காசில்லாமல் ஒரு சமோசா கிடைத்தது.. அர்ச்சனா “எங்க பே பண்ணும்” என்றாள். 

வேலை செய்பவர்.. எரிச்சலாக.. “போ ம்மா.. அவர் சொல்லிட்டார்” என சொல்லி திரும்பி வேறு வேலையை பார்க்க அமர்ந்துக் கொண்டார்.

அர்ச்சனா, அப்போதுதான் கேஷ் கவுண்டர் எங்கிருக்கிறது என பார்த்தாள்.. கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்க.. அங்கே சென்று.. ஒரு சமோசாக்கு என பணம் கொடுத்து பில் செய்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம், அங்கே.. குகன் சொல்லி சென்ற அவன் தோழி வந்து.. குகனிடம் நின்றாள்.. “ஒரு சமோசா கூட வாங்கி தரலை.. கஞ்ஜூஸ், உனக்கு போய் ஹெல்ப் பண்ணேன் பாரு” என கோவமாக வந்து அமர்ந்தாள்.

குகன் “ஹேய்ய் சொல்லிட்டுதானே வந்தேன்..” என்றவன் தனக்கு சர்வ் செய்த ஆளை தேடினான்.. அவர் சற்று உள்தள்ளி இருக்கவும்.. குகன் எழுந்து சென்றான். குகன் “நான் அவளுக்கு சமோசா கொடுக்க சொன்னேனே. என் கணக்கில் போட சொன்னேனே.. கொடுங்க”  என்றான்.

வேலை செய்பவர் “ஒருத்தருக்குதானே சொன்னீங்க.. இரண்டு பேர்ன்னு சொல்லை சர்.. சரி இந்தாங்க” என்றான், இன்னொரு சமோசாவை அவனிடம் நீட்டியபடியே.

குகன் அதை வாங்காமல் “அந்த ஒருத்தருக்குத்தான் நீங்க கொடுக்கலை” என்றான்.

வேலையாள் “இல்லை, கொடுத்திட்டேன்..” என யாரையோ தேடினான்.. பின் “இது இரெண்டாவது..” என சொல்லி “பையா தீன் சமோசா..” என தன் சீனியரிடம் குகனின் பெயர் சொல்லி.. கணக்கில் சேர்க்க சொல்லிக் கொண்டிருந்தான்.

குகன் வாக்குவாதத்தில் இறங்கினான். அந்த நேரம் சரியாக அர்ச்சனா டேபிள் நோக்கி சென்றாள்.

வேலையாள் “இவங்களுக்குதான் கொடுத்தேன்” என அர்ச்சனாவை காட்டினனான். 

குகன் ‘யாருடா அது ஓசி சமோசா கேஸ்..’ என பார்க்க, அழகான பெண்.. முதல் பார்வையிலேயே அவனின் கவனத்தை ஈர்த்தாள்.

குகன் “யாரு லவண்டார் கலர்.. அந்த பெண்ணா” என்றான்.

வேலையாள் “மேடம்.. ஹலோ மேடம்… இந்தாங்க, “ என அழைத்து “அவர் சமோசாவை நீங்கதானே வாங்குனீங்க” என அவன் நியாம் கேட்டான்.

அர்ச்சனா “இல்ல.. நான்.. பே பண்ணிட்டேன்” என விளக்க தொடங்கினாள்.

குகனை பார்த்திருக்கிறாள் அர்ச்சனா. அவளின் வெல்கம் மீட்டிங்கில்.. இருந்தான். மேனேஜர் லெவல் போல.. வந்து நின்றுவிட்டு போய்விட்டான். எனவே, குகனை பார்த்திருந்ததால்.. அர்ச்சனா நேரடியாக குகனிடம்  “சாரி சர், அது சர், பில் கவுன்ட்டர் எங்கிருக்குன்னு தெரியாமல் நின்னேனா.. இவங்க கையில் சமோசா கொடுத்திட்டாங்க.. நான் இப்போ பில் பே பண்ணிட்டேன் சாரி சர்..” என்றாள்.

குகன் “அந்த பில்லை நீங்களே வைச்சிக்க கூடாது எக்ஸ்ப்ளைன் பண்ணனும், சரி போங்க.. அந்த பில் கொடுங்க” என சொல்லி.. அந்த பில்லை காட்டி மற்றொரு சமோசாவை வாங்கிக் கொண்டு, தன் தோழிக்கு என வேலையாள் கொடுத்த சமோசாவையும் எடுத்துக் கொண்டு.. அர்ச்சனாவின் அருகில் வந்தான் “யாரு உங்க லீட்..” என்றான், கொஞ்சம் மிட்ட்லான குரலில்.

அர்ச்சனா எழுந்து நின்று பவ்யமாக லீட் நேம் சொன்னாள். 

அதுமுதல், குகன் காலையில் ஒருமுறை மதியம்.. ஒருமுறை.. மாலையில் ஒருமுறை.. என மூன்று முறையும் எந்த வேலை இருந்தாலும்.. அர்ச்சனாவின் ப்ளோர் சென்றுவிடுவான். எதோ காரணம்.. என்னமோ பேச்சு.. எப்படியோ வந்து நின்றிருந்தான் ஒருமாதம்.

அடுத்த மாதம் வரவில்லை.. காரணம், அர்ச்சனாவின் நம்பர் வாங்கிவிட்டான்.. அடுத்து போனில் அவளிடம் அழைத்து பேசி.. நட்பாகி.. காதலாகி என குகன் அர்ச்சனாவை தன்னவள் என செய்துக் கொண்டான் ஆறு மாதத்தில்.

இவர்கள் கதை ஆபீசில் காஸிப் மெயில் போட்டு எல்லோருக்கும் சொல்லும் படி.. பேசு பொருளானது. அதையும் குகன் ரசித்தான்.. அதனால் கொஞ்சம் நஞ்சம் இருந்த வெட்கமும் அவனை விட்டு செல்ல.. காலையில் அவள் பஸ்ஸில் அலுவலகம் வரும் போது வாட்சிமேன் போல அவளின் எதிரில் நிற்கும் அளவுக்கு வந்திருந்தான்.

அலுவலகம் முடியும் போது பை மெசேஜ் அனுப்புவது.. மதியம் சாப்பிட்டியா என கேட்பது.. இந்த வாரம் ஊருக்கு போகனுமா என ஏங்குவது.. ஊரிலிருந்து என்ன கொண்டு வந்தாய் என விசாரிப்பது என  இப்போதெல்லாம் குகன் அவளின் காதலன் வேலையை சரியாக செய்தான்.

அழகான காதலாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. இரண்டு வருடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நடந்தது அவர்களின் காதல். அர்ச்சனா வீட்டில் திருமணத்திற்கு என பார்க்க தொடங்கினர். அதுமுதல் குகன் திணற தொடங்கினான். 

அர்ச்சனா “வீட்டில் பேசுங்க.. எனக்கு பயமா இருக்கு “ என கடைசி எட்டு மாதமாக சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.

ஆனால், குகன் எப்படி தன் அண்ணிடம் சொல்லுவது என யோசித்துக் கொண்டே நின்றான். அத்தோடு ‘அண்ணன் அவனாக தனக்கு என ஏதும் செய்துக் கொள்ள மாட்டான், நான் செய்து வைத்தால்தான் உண்டு.. அதனால் அண்ணனுக்கு கல்யாணம் ஆகட்டும்’ என அர்ச்சனாவிடம் சொல்லிக் கொண்டே இருந்தான்.

ஆனால், அப்போதாவது குகனும் அர்ச்சனாவும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். எங்கே தவறினர்.. ம், அண்ணன் சென்னையில் இருந்தவரை.. குகன் ஒரு கட்டுப்பாட்டில் இருந்தான்.

நீலகண்டன் இந்த ஆறுமாதமாக சென்னையில் இல்லாமல் போகவும்.. குகனின் கட்டுபாடுகள் எல்லாம் காற்றில் பறந்தது. எதோ ஒரு விடுமுறையில், அழகான மாலை நேரத்தில்.. நண்பர்கள் தங்களின் அறையில் இல்லாத நேரத்தில் என காதலர்கள் கொஞ்சம் எல்லை மீறியிருந்தனர். ஆனாலும் எப்போதும் பாதுகாபபாகதான் இருந்தனர். என்னமோ விதியோ.. சதியோ என்பார்களே, அப்படி எதோ ஒன்று.. குகன் அர்ச்சனாவை பழி ஏற்க செய்துவிட்டது.

போன வாரம்.. விடுமுறை நாளில் அர்ச்சனா ஊருக்கு சென்று வந்தாள். அப்போது மாப்பிள்ளை பார்ப்பதன் வேகம் தன் வீட்டில் அதிகமாக இருப்பதாக குகனிடம் வந்து பகிர்ந்தாள். 

குகன், ‘அண்ணிடம் சொல்லி விடுகிறேன்.. பெண் கேட்டு வருகிறேன்.. நீயும் அடுத்த வாரம் உங்கள் வீட்டில் சொல்லிடு.. ஆனால், திருமணம் அண்ணன் திருமணம் முடிந்ததுதான்.. உனக்கு ஓகே தான்..’ என கேட்டு அவளிடம் சம்மதமும் வாங்கியிருந்தான்.

அதற்குள்.. கண்ணன் இறந்த செய்தி வந்தது.. அதற்கு, அண்ணன்  சென்று வந்தது எல்லாம் கோவம். கொஞ்சம் இடைவெளி விட்டு தன் விஷயத்தை நேரில் சென்று சொல்லாம் என எண்ணி இருந்தான், குகன்.

ஆனால், அதற்குள்.. அர்ச்சனாவின் உடலில் மாற்றம் வர தொடங்கியது. என்னமோ அசதி.. அடிக்கடி தலை சுற்றுவது என தோன்ற.. தன்னை பற்றி தானே யோசிக்க தொடங்கினாள் அர்ச்சனா. இந்த வாரம் ஊருக்கு செல்லவில்லை.. உறங்கி எழுந்தாள்.. அளவுக்கு மீறி உறக்கம் வர.. அப்போதுதான் ப்ரீயட்ஸ் கணக்கெடுத்தாள் பெண்.. ஐயோஓஓஓ.. என மனதில் பெரிய ஓலம். ஆனாலும், மனதில் ஒரு நப்பாசை ‘எல்லாம் பாதுகாப்பாக்தானே.. இருக்காது… வேறு ஏதாவது..’ என ஒரு நப்பாசை.

குகனை, அழைத்து பேசி.. அழுது.. கிட் வாங்கவர சொல்லி.. அந்த விடுமுறை தினம் அந்த ஜோடி பட்ட வேதனை.. ப்பா.. கலவரம்தான். ஆனாலும் கலவரம்… பூகம்பமாக வெடித்தது அடுத்த ஒருமணி நேரத்தில்.

குகன், அர்ச்சனாவின் அழைப்பில் அடித்து பிடித்து.. அந்த கிட் வாங்கி கொண்டு, அவளின் பிஜி வந்து சேரவே நேரம் ஆனது. அர்ச்சனா, உடனே செக் செய்ய.. பூகம்பம் வெடித்தது. இரு காதல் பறவைகளுக்கும்.. சிறகுகள் நடுவானில் காற்றோடு போக.. வானத்திலிருந்து தலைகுப்புற கீழே விழுந்த நிலை..

“ஒருமுறைதான் ஒருமுறைதான்.. 

ஒருசில தவறுகள் ஒருமுறைதான்..

ஒருமுறைதான் தவறியதால்..

அடைகிற வேதனை பலமுறைதான்..”

குகன், இடிந்து போனான்.. அவனுக்கு சட்டென பேசவே வரவில்லை. போனில் அர்ச்சனா கதறிக் கொண்டிருந்தாள்.

குகன், சற்று நேரம் சென்று தன்னை தானே தைரியப்படுத்திக் கொண்டு அர்ச்சனாவிடம் சமாதான பேசினான் “ஹேய்ய்… ஹனி, பயப்படாத, இப்போவே நான் உங்கள் வீட்டில் பேசறேன்.. ப்ளீஸ், நீ அழாத.. இல்ல, அண்ணன்கிட்ட போவோமா.. இல்ல, வா.. உங்க ஊருக்கு போலாம் வா.. நான்தான் காரணம் வா.. ஹனி.. ப்ளீஸ்.. தைரியமா இரு.. நான் பார்த்துக்கிறேன்” என பலமணி நேரம் பேசி அவளை சாப்பிட வைத்தான்.. அதுவரை பேசிக் கொண்டே இருந்தான் குகன்.

அர்ச்சனாக்கு, குகன் பேசும் வரை ஒன்றும் தெரியவில்லை.. போனை வைத்ததும்.. தன் அம்மாவின் நினைவு வர.. மீண்டும், அதே பூகம்பம் அவளுள். ‘அம்மா அப்பா அண்ணன் முகத்தில் எப்படி முழிப்பேன்.. குடும்பத்திற்கே குழந்தை நான்.. ஐயோ! எவ்வளோ பெரிய தப்பு செய்திருக்கேன்..’ என தோன்ற.. வேகமாக சென்று.. அவர்களின் அறையில் ஃப்ரஸ்ட்எயிட் பாக்ஸ்சில் இருந்த ஸ்ப்ரிட் எடுத்து குடித்துவிட்டாள். 

அவளின் அறை தோழி பார்த்து.. உடனே, குகனுக்கு சொல்லிவிட்டாள். பிஜியில் உள்ள தோழிகளிடம் உடல்நலமில்லை என சொல்லி ஒரு சின்ன மருத்துவமனை அழைத்து வந்துவிட்டான் குகன்.

மருத்துவமனையில் அத்தனை கேள்விகள். 

குகன், தனக்கு தெரிந்த மெடிக்கல் கடை நண்பரை அழைத்து.. அந்த சின்ன மருத்துவமனையில் அனுமதிக்க சொல்லி.. அதன்பின்தான் வைத்தியம் பார்த்தனர். ஸ்ப்ரிட் குடித்தது ஒன்றுமில்லை என்றாலும்.. அவளின் பயம் அவளை அசைய விடக்கவில்லை.. முழு அதிர்ச்சி.. பயம்.. எனவே மயக்கத்தில் இருந்தாள், அர்ச்சனா.

அது இரவு நெருங்கும் நேரம்..  யோசிக்காமல் உடனே.. அர்ச்சனாவின் வீட்டிற்கு அழைத்து சொல்லிவிட்டான், குகன். அவர்களும் இரவில் வந்து சேர்ந்தனர்.

அந்த இரவு யாருக்கும் ஏதும் புரியவில்லை.. ‘குகன், யாரிவன்?’ என எல்லோரும் பார்த்துக் கொண்டே நின்றனர். 

அதிகாலையில்தான் கண் விழித்தாள் அர்ச்சனா.. அப்போது அன்னை தந்தை என அவர்களை பார்த்ததும் இன்னும் அவளுக்கு உடல் பலமில்லாமல் போனது.. மீண்டும் மயக்கநிலைக்கு சென்றாள். எனவே, மருத்துவர்களின் திவீர கண்காணிப்பில் வந்துவிட்டாள். icuவில் இருக்கிறாள். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. 

இன்று இரவில்தான், எட்டு மணிக்குத்தான் குகன் சென்று பார்த்து வந்தான் அர்ச்சனாவை. 

நேற்று பார்த்தவளா இவள்!.. என அதிர்ந்து போனான். இப்போது கொஞ்சம் நம்பிக்கையாக பேசினான் குகன் “யாரும் ஒன்னும் சொல்லல.. உன் அண்ணன், என்ன மாப்பிள்ளை.. அர்ச்சனா சொல்லி இருந்தா, நாங்க கல்யாணம் செய்து வைச்சிருப்போம்ன்னு ஈசியா பேசறாரு.. நீ தைரியமா இருக்கணும்.. நாங்க சாப்பிட போறோம்.. உன் அண்ணன் கூடதான் போறேன். நீயும் சாப்பிடு, உங்க அம்மாகிட்ட பேசு” என நாலு வார்த்தை அவளை தேற்றுவதற்காக பேசி வந்தான்.

ஆனால், உண்மை அதுவல்ல.. இன்னமும் அர்ச்சனாவின் வீட்டர் அவனிடம் பேசவேயில்லை. நெருக்கவும் இல்லை.. புயலுக்கு பின் வரும் அமைதி போல.. ஆழ்ந்த அமைதியில் இருக்கின்றனர். குகனுக்கு அதுவே கலக்கமாக இருக்க.. குகன் ஓய்ந்து இருந்தான்.

இப்போது அண்ணன் அழைக்கவும் ஒரு நிம்மதி.. பயம்.. ஆசுவாசம்.. தயக்கம்.. ஆறுதல்.. என எல்லாம் சேர்ந்தே வந்தது, குகனுக்கு.

Advertisement