Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

11

நீலகண்டன் இரவு உறங்க நேரம் ஆனாலும்.. அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது அவனுக்கு. பரபரப்பாக குளித்து.. கிட்சேன் சென்றான்.

காலையில் எப்போதும் போல.. பாட்டு சத்தம் கேட்டது..

“பிட்டுக்கு மண் சுமந்து..

கங்கை தலை சுமந்து..

உமையை தன் இடம் சுமந்தவன்..

ஈசன்.. உமையை தன் இடம் சுமந்தவன்..”

என எதோ பாட்டு அவன் காதில் விழுந்தது. இழுத்து ஒரு பெருமூச்சு விட்டான்.. தான் சென்று தன் அறையின் கதவை சாற்றினான் ‘இருக்கிற இருப்பில் இது வேறா.. முதலில் குகன் சொன்னது போல வீடு மாத்தனும்’ என எண்ணிக் கொண்டான்.

அதை தொடர்ந்து ‘ஏன் போன் பண்ணலை.. அவன்..’ என எண்ணம் எழுந்தது. போனை சார்ஸ்ஜிலிருந்து எடுத்தான். மணி இன்னும் ஏழாகவில்லை ‘தூங்குவான்.. கூப்பிடனும்.. ரெண்டு நாளாக பேசலை.. என்னாச்சு..’ என எண்ணிக் கொண்டே.. பருப்பை குக்கரில் வைத்தான்.

நீலகண்டன், பரபரப்பாக கிளம்பினான். தம்பிக்கு அழைக்க மறந்துவிட்டான். உண்டு, மதியத்திற்கு எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றான்.

கடையை திறந்தான்.. கடை குப்பையாக இருப்பதாக தோன்றியது அவனுக்கு.. எப்போதும் அப்படிதான், இரவில் பத்து மணிவரை கடை இருப்பதால்..வேலை செய்பவர்கள் கொஞ்சம் களைத்து விடுவர். அதனால், பொருட்கள் இறைந்து கிடக்கும். நேற்று ஒருநாள் தான் இல்லாததால்தான் இப்படி இருக்கிறது என நீலகண்டனுக்கு சட்டென தோன்றியது.. கடையை பார்த்தது.

அவனுக்கே அது கொஞ்சம் அதிகபடியாக தெரிந்தது போல.. முகத்தில் மெல்லிய புன்னகை ‘ஓய்… உனக்கே இது அதிகமா தெரியலை’ என எண்ணிக் கொண்டே, பொறுமையாக பொருட்களை ஒழுங்கு செய்தான். நேற்றைய சிந்தனை ஏதும் இல்லை.. கடை வேலை மட்டுமே கருத்தில் இருந்தது.

சரக்குகளை கணக்கு எடுத்துக் கொண்டிருந்தான், சற்று நேரத்தில் கடையை கிளீன் செய்ய இரு பெண்கள் வந்தனர். அவர்கள் துடைக்க பெருக்க ஈசியாக இவன் வெளியில் சென்றான். 

அப்போதும் கடையின் வாசல் சென்று.. தண்ணீர் தளித்துக் கொண்டிருந்தான்.

கோகுல் வந்தான்.. இருவரும் ‘என்ன என்ன ஆர்டர் செய்யணும்’ என பேச தொடங்கினர்.

கடையில் வேலைக்கு இருக்கும் மற்ற மூன்று நபர்களும் வந்தனர். அன்றைய நாள் இனிமையாக தொடங்கியது. 

கூட்டம் ஏதுமில்லை.. நீலகண்டனுக்கு, தன் தம்பியின் நினைவு வந்தது. அழைத்தான் அவனை.. போன் எடுக்கவில்லை தம்பி.

நீலகண்டனுக்கு, இந்த பெண்.. ரஞ்சனி, மாமாவின் செயல்.. எல்லாம் சஸ்பென்ஸ் கணக்காக தோன்றியது போல.. அதை ஓரமாக வைத்து அன்றாட வேலைகள் அவனை இழுத்தால், அதில் தன் நினைவை செலுத்தினான். ஆனால், அந்த சிறு பெண்ணின் மனது.. அல்லாட தொடங்கியது. என்னமோ சரியாக இல்லை என அவளின் மனது அசாதரண நிலையை உணர்ந்தது.

ம்.. அன்று மாலையில் கூட்டம் எல்லாம் சென்றுவிட்டது.. வீட்டு மனிதர்கள் மட்டும்தான். பெரியம்மா பெரியப்பா.. பக்கத்தில் உள்ள ஒரு வயதான கண்ணனின் பெரியம்மா, அவரின் பசங்க இருவர்.. ரகுவின் குடும்பம் இரண்டு பிள்ளைகளும் சேர்த்து.. அடுத்து மாதவன் அவனின் நண்பன் பிரசாந்த்.. முக்கிய ஆட்கள் மட்டும்தான்.

அமைதியாக எல்லோரும் மாத்வனுடம் பேசிவிட்டு.. ஊள்ளூரில் உள்ள, கண்ணின் பெரியம்மா.. அவர்களின் இரண்டு பசங்கள் இருவரும் விடைபெற்றனர். அடுத்து ரஞ்சனிக்கு வேலையாட்கள் மூலமாக உணவு கொடுத்து.. உண்ண செய்தனர்.

மறுநாள், காலையில் ஏழு மணியிருக்கும்.. ரஞ்சனியின் பெரியம்மா மாடியேற முடியாததால் ரஞ்சனியை கீழே வர சொன்னார். ரஞ்சனி, இரவு உறங்கும் உடையுடனேயே.. ஒரு நைட் பேண்ட்.. மேலே ஷர்ட் மாடலில் இருந்த உடையை அணிந்துக் கொண்டு வந்தாள். 

தலையில் ஈரம் காயாமல் இருந்தது.. ஒரு பாண்டில் தன் சிகையை முடிந்துக் கொண்டிருந்தாள். பெரியம்மா அவளை சின்ன ஸ்டூலில் அமர வைத்து அவளின் தலையை துவட்டிக் கொண்டிருந்தார் “என்ன பாப்பா.. கொஞ்சம் அந்த கரண்டு மிஷினை போட்டிருக்கலாமில்ல.. திரும்பவும் ஏதாவது வந்திர போது.. டா” என பேசியபடியே துவட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது ஹாலில் யாரும் இல்லை.

சற்று நேரத்தில் ரகுவின் மனைவி “அத்தை, காலை சாப்பாட்டுக்கு” என வந்து நின்றாள்.

அவரும் “எல்லோருக்கும் இட்லி சொல்லிக்கலாம் ஏன் அத்தை” என கண்ணனின் பெரியன்னையிடம் ஒரு வார்த்தை ககேள்விக் கேட்டு நிறுத்தினார்.

அவரும் ‘சரி’ எனும் விதமாக பேசவும்.. எத்தனை நபர்கள் என கணக்கு பார்த்து.. எங்கே சொல்லுவது என ரகுவும், அவன் மனனவியும் பேசிக் கொண்டே சென்றனர்.

இப்போது மாதவனும் அவனின் நண்பன் பிரசாந்தும் வந்தனர். 

மாதவன் எனோ தானோவென அமர்ந்திருந்த தன் தங்கையை பார்த்தபடியே வந்தான்.. அவளின் அருகில் ஒரு சோபாவில் அமர்ந்தான். 

பிரசாந்த்.. அதை பார்த்தபடியே எதிர் சோபாவில் அமர்ந்தான்.

மாதவன் “என்ன டா..” என்றான், தங்கையிடம்.

ஒன்றும் சொல்லாமல் தங்கை அழுதாள். மாதவன் அவளை அணைத்தபடி தன் மார்போடு சேர்த்துக் கொண்டான், அமர்ந்த வாக்கிலேயே. 

பெரியம்மா “டேய், இப்போதான் தலை கொஞ்சம் காயுது.. நீ அழ வைக்காத.. ஈரம் கோர்க்க போகுது.. ஜுரம் வரும் திரும்பவும்” என்றார்.

ரஞ்சனி இன்னும் பெரிதாக அழுதாள்.. “அண்ணா, பயமாயிருக்கு ண்ணா, என்னை விட்டுட்டு ஏன் போனார்” என அழுதாள்.

மாதவன் “டேய்.. அவர் இன்னமும் கஷ்ட்டப்படனும்ன்னு நினைக்கிறியா..  நிறைய வலி.. ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டார் ரஞ்சி. தைரியமா இரு.. நான் இருக்கேன்.. பெரியம்மா இருக்காங்க..” என்றான், தன்னிடமிருந்து அவளை பிரித்து அவளின் முகம் பார்த்து.. கண்களை துடைத்துவிட்டுக் கொண்டே சொன்னான்.

ரகு “சாப்பிடலாம் அம்மா” என்றான், எல்லோரையும் அழைக்கும் விதமாக சொன்னான்.

பெரியம்மா பிள்ளைகளை உண்பதற்கு அழைத்தார். மாதவன் “வா சாப்பிடலாம்” என்றான், தங்கையிடம்.

ரஞ்சனி “பசிக்கலை நான் அப்புறம் சாப்பிடுறேன்” என்றவள் எழுந்து தன் தலையை முடிந்துக் கொண்டு மேலேற நின்றாள். என்னமோ தன்னை உறுத்துவதாக உணர்ந்தாள்.. பெண்.

மாதவன் “சாப்பிட்டுதான் போகனும் ரஞ்சி, மாத்திரை போடணும்“ என்றான் அமர்ந்துக் கொண்டே.

ரஞ்சனி “இப்போ வேண்டாம் ப்ளீஸ்..” என்றபடி மேலேறினாள்.

ரஞ்சனிக்கு இப்போது மீண்டும் உறுத்த.. திரும்பி பார்த்தாள்.. பிரசாந்தின் கண்கள்.. அவளையே கவ்வி நின்றது.. கண்களில் எதோ பாவம்.. இதுவரை இந்த வீட்டில் அவள் அப்படி ஒரு அசூசயை உணர்ந்ததில்லை.. என்னமோ மனது அங்கே இருக்காதே என சொன்னது.. மேலேறிவிட்டாள்.. அண்ணன் பேச்சை கேட்க்காமல்.

மாதவன் அதட்டிக் கொண்டிருந்தான் இப்போது “ரஞ்சி” என, அதெல்லாம் காதில் வாங்கவில்லை அவள்.

மேலேயே உணவு வந்தது.. ரஞ்சனி உண்டு மாத்திரை விழுங்கினாள். உறக்கம் வரவில்லை.. எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

கீழே வீட்டு மனிதர்களின் குரல் கேட்கவேயில்லை.. புதிதாக வந்தவனின் குரல்தான் கேட்டது “இல்லை, எட்டாம்நாள் காரியம் வைச்சிக்கலாம்.. நமக்கு காட்பாடியில் மீட்டிங் இருக்கே மாதவ்” என்றான்.

வீட்டார் ஏதும் பேசவில்லை.. போல, அமைதி இப்போது.

பிரசாந்த் “ரஞ்சனி இரண்டு வாரம் கழிச்சி காலேஜ் போகட்டும்..” என்றான்.

பின் ரகு “இல்ல அவளுக்கு எக்ஸாம் இருக்கு.. நெக்ஸ்ட் வீக்..” என்றான்.

பிரசாந்த் “நெக்ஸ்ட் டைம் எழுதட்டுமே.. இப்போது எதுக்கு அவளை வெளியே அனுப்பனும்..” என்றான் எரிச்சலான குரலில்.

ரஞ்சனியின் காதுகளில் இது விழுந்தது.. ஏனோ கோவமாக வந்தது அத்தோடு அழுகையும் வந்தது.. என்னென்ன்று அவளுக்கே தெரியவில்லை.. தான் அமர்ந்திருந்த சேரிலிருந்து எழாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.. கண்களில் கீர் இறங்கியது ‘அப்பா..’ என இன்னமும் அவளாள் அவரை தவிர வேறு யோசிக்க முடியவில்லை.

இன்னமும் எதோ பேச்சு கேட்டது, ஆனால், அவளின் கவனம் அங்கு செல்லவில்லை அதன்பின்.

இரண்டு நாட்கள் சென்று மாலையில், ரஞ்சனியின் தோழிகள் இருவரின் பெற்றோர் வந்திருந்தனர் துக்கம் கேட்க.. அதனால் ரஞ்சனி கீழே இருந்தாள். 

அவர்களும் சென்று நேரம் ஆகியிருந்தது.. ஆனாலும் அழுகை அவளை விடவில்லை.. கண்ணீர் கசிய, அங்கே டேபிளில் வைத்திருந்த தன் தந்தையை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

பெரியம்மாவிற்கு இடுப்பு வலி அதனால் ஒரு அறையிலேயே முடங்கிக் கொண்டார், வெளியே வரவில்லை அவர். பெரியப்பா அவ்வபோது “ரஞ்சனி.. சூடா ஏதாவது குடி” என பேச்சுக் கொடுத்துக் கொண்டே எதோ புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

இரவு உணவு நேரம்.. ரஞ்சனியும் ரகுவின் மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள்.. எதோ விளையாடிபடியே இருந்தது. நேரம் ஆக.. பிள்ளைகள் உண்ண தொடங்கியது. ரஞ்சனியிடம் கேட்டனர் “இப்போது வேண்டாம் கொஞ்ச நேரம் ஆகட்டும், அண்ணன் வரட்டும்” என காரணம் சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

மாதவனும் பிரசாந்தும் வந்தனர் இப்போது. கூடவே வேலையாள் போல ஒருவர் வந்தார்.. மாதவன் ஹாலில் அமர்ந்திருந்த தங்கையை பார்த்து அதிர்ந்தார் போல ஒரு தோற்றம்.. அதை ரஞ்சனியும் கவனித்தாள்.

மாதவன் இயல்பாக்கிக் கொண்டு தங்கையிடம் வந்தான்.

பிரசாந்த் அந்த  வேலையாளிடம் மேலே கைகாட்டி எதோ பேசிக் கொண்டிருந்தான்.. பின் உள்ளே வந்தான். 

மாதவன் அதற்குள் உள்ளே வந்து தங்கையின் அருகில் அமர்ந்தான்.

ரஞ்சனி, மேலே செல்லும் அந்த வேலையாளை பார்த்தாள்.. கையில் பார்சல்.. அதை பார்த்தும் தெரிந்தது எதோ தவறாக இருக்கிறது என.

இப்போது அமர்ந்த தன் அண்ணனை பார்த்தாள் “எங்க அண்ணா, போனாய்” என்றாள்.

மாதவன் “ஆபீஸ் வரைக்கும் டா.. மணியாச்சு, நீ இன்னும் தூங்கலையா” என்றான்.

Advertisement