Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

ஊரின் முக்கிய மார்கெட் வீதி.. மாலை நேரத்தில் பரபப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த பரபரப்போடு ஒரு புதிய கடையின் வேலையும் நடந்துக் கொண்டிருந்தது, அங்கு.

நான்கு கடைகள்  சேர்ந்தாற் போல, ஒரு கடையை  கட்டிக் கொண்டு இருந்தார்கள்.. பெயின்ட் வேலை இன்றோடு முடியும் போல.. நல்ல பெரிய கடையின் வேலை நடந்து முடிந்தது.

இன்று.. இப்போது.. ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு.. ஒரு புதியவன் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். இருட்ட தொடங்கும் நேரத்தில்.. எல்லோருக்கும் செட்டில்மெண்ட் போல பணத்தை கொடுத்து பேசிக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் நான்கு மாதமாக தனது கடையிலிருந்தே.. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அதியமான்.. ம்.. இன்றல்ல.. நேற்றல்ல.. நான்கு மாதங்களாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்..

அவ்வபோது அங்கே வேலை செய்யும் ஆட்களிடமும் கட்டுமான பணி செய்யும் இஞ்சினியரிடமும் கேட்ப்பார்.. “யார் இடம்ப்பா.. என்ன கடையிது..” என மனது குறுகுறுக்க கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அந்த இஞ்சினியரோ அங்கே வேலை செய்பவர்களோ எந்த கடை என விவரம் சொல்லவில்லை. அந்த இஞ்சினியர் “நீலகண்டன் இடமுங்க..” என மனது கேட்க்காமல், அவரின் வயதை கருத்தில் கொண்டு பதில் சொல்லுவார்.

அன்று பெரியவர், அதான் அதியமானுக்கு, யார் அந்த நீலகண்டன் என தெரியவில்லை. “எல்லாம் புதுசு புதுசா வராங்க..” என முனகிவிட்டு கடந்து விடுவார். ‘ம்… இருபது வருஷத்துக்கு முன்னே வாகைசூடன் இருந்த இடம்.. இப்போ யார் வாங்கியிருக்காங்களோ.. என்ன பண்ண போறாங்களோ ” என  மனதுக்குள் புலம்பிக் கொண்டே செல்லுவார்.

இன்று, மதியத்திற்கு மேல்தான் அவன், அவரின் கண்ணில் தென்பட்டான்.. இஞ்சினியரோடு.. புதிதாக ஒருவன்.. ட்ராயரை அணிந்துக் கொண்டு.. கூச்சமே இல்லாமல்.. ஒரு தோரணையாக நிற்பதும்.. நடப்பதும்.. வேலை வாங்குவதுமாக.. அந்த உருவம்.. அதியமானை யோசிக்க வைத்தது,  எதோ பார்த்த முகம்.. என்னமோ ஒரு பரிசையமான முகம்.. எதோ சாயலில் அவருக்கு தெரிகிறது. ஆனால், இது.. இவர்.. என கண்டு கொள்ள முடியவில்லை அவரால்.

எனவே, குறுகுறுவென தனது இருப்பிடத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார், எதிர் கடையை.

அழகான சின்ன ஊர்.. நகரத்தின் சாயலும்.. கிராமத்தின் சாயலும் கொண்ட ஒரு சிற்றூர். இப்போது குட்டி நகரம் என சொல்லும் அளவு நாகரிகமாக மாறி இருந்தது அந்த ஊர். அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் சாரல் காற்றுடன் மழை, பூவாய் தூவி செல்லும் இதமான காலைநிலை கொண்ட ஊர்.

இப்போதெல்லாம் முதியவர்கள் இங்குதான் தங்களின் ஒய்வு காலத்தை கழிக்க வருகிறார்கள்.. பருவநிலை இதமாக இருப்பதால்.  அதனாலோ என்னமோ மலையை குடைந்து நிலத்தை கூறு போட்டு, அதை ராக்கெட் விலைக்கு விற்கிறார்கள். எது எப்படி இருந்தால் என்ன.. எந்த கடையிலும் கூட்டம் குறைவதே இல்லை. இங்கு மட்டுமல்ல இப்படி இந்த ஊரில் இருக்கும் எல்லா தொழிலும் சற்று சூடு பிடிக்க.. ஊர் செழிப்பாகவே இருக்கிறது.

இப்போது அந்த ஷார்ட்ஸ் அணிந்த வாலிபன் போன் பேசிக் கொண்டே நின்றான்.. ஒருமணி நேரமாக.

நேரமும் சென்றது.

இரவு ஓன்பது மணிக்கு எல்லா கடைகளும் அடைக்கப்பட்டுவிடும். அப்படி, அதியமானின் மளிகை கடையும் அடைக்கப்பட்டது. இரண்டு வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொறுப்பாக எல்லாம் செய்ய.. இப்போது கடைக்கு வெளியே வந்த.. அதியமான், இறுதியாக கதவை மூடியவுடன் பெரிய கற்பூரத்தை கடையின் முன் ஏற்றி விட்டு, தனது.. ஆக்டிவா வண்டியை எடுத்து கொண்டு சென்றார்.

இரவெல்லாம் யோசனை அது யார்… என. ஆனால், விடை கிடைக்கவில்லை.

இப்படியே நாட்கள் செல்ல.. ஒருநாள்.. இரவு இவர், கடையை சாற்றிக் கொண்டு கிளம்பும் நேரம்.. இரண்டு லாரிகள் வந்து நின்று, பொருட்கள் இறங்க தொடங்கியது.

பார்த்தும் பார்க்காதது போல, அதியமான் அங்கே பார்க்க.. இப்போது நிறைய செல்ப்கள் வந்து இறங்கின.. பார்த்த மனிதருக்கு ‘பக்கென’ ஆனது. இந்த ஊரில் தன் கடைதான் நல்ல.. சிறந்த.. தரமாக பொருட்கள் தரும் மளிகை கடை. அதிலும் பெரிய மளிகை கடை..

இப்போது இவன் கட்டியிருக்கும் கடையின் அளவும்.. இப்போதும் இறங்கும் இந்த செல்ப்களையும் பார்த்தவருக்கு பயம் பிடித்துக் கொண்டது. அத்தோடு உறுதியே ஆகிவிட்டது அவருக்கு ‘இது ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர்’ தான் என.

‘அப்போவே என பிள்ளைகள் சொன்னார்கள்.. நான்தான், கடையை எடுத்து கட்டினா.. கஸ்ட்டமர்ஸ் இடம்மாறி என் கடையை மறந்து போயிடுவாங்கன்னு நினைச்சு.. இப்படியே இருந்துட்டேன்.. இப்போ பாரு.. எவ்வளோ பெரிய கடை.. எத்தனை லாரி..’ என எண்ணிக் கொண்டே தன் வண்டியை எடுக்க சென்றார்.

இவர்.. தன் கடையை ஒட்டிதான் தனது வண்டியை நிறுத்தி இருப்பார்.. நல்ல பெரிய சாலைதான் அதுவும் 6௦ அடி இருக்கும்.. இப்போது இவர் செல்வதற்கு ஏதுவாக.. வண்டியில் அமர்ந்துக் கொண்டு நகர்த்தவும்.. லாரியில் பொருட்களை அப்போதான் இறக்கிக் கொண்டிருந்த.. நபர்கள்.. அந்த நீட்டமான இரும்பு ரேக்கை.. நான்கு நபர்களாக பொறுமையாக தூக்கிக் கொண்டு வந்தவர்கள்.. வெயிட் அதிகமாக கீழே ரோட்டில் வைத்து விட்டனர்.

இப்போது அமர்ந்துக் கொண்டே வண்டியை எடுத்த.. அதியமானின் பின் வீலில், இந்த இரும்பு ரேக்… குத்திக் கொண்டது.. “புஸ்…” என  சின்ன சத்தம்.. உடனே டயரில்.. காற்று போகி கீழிறங்கிற்று.

அதியமான்.. என்னவென விழிக்க, இப்போது அங்கே கீழே குத்துகாலிட்டு அமர்ந்திருந்தவர்கள்.. என்னவென பார்க்க.. டயரில் ஆணியும் இரும்பு ரேக்கும் அழுந்தியத்தில் பஞ்சர் என தெரிந்தது.

இப்போது வேலைக்கு வந்த நபர்கள் “ஐயோ.. சாரி சார், சாரி… “ என பேச

அதியமான் “ரோட்டில் இப்படிதான் வேலை பாப்பீங்களா.. “ என சத்தமாக பேச தொடங்கினார்.

அது கேட்டு அங்கிருந்தே அந்த ட்ராயர் அணிந்த வாலிபன், கடையின் உள்ளிருந்தே எட்டி பார்த்தான்.. இறுக்கமான பார்வையாக பார்த்தான், வெளியே வரவில்லை.

அதியமான் “பொறுப்பே கிடையாது.. என்னதான் வேலை பார்க்கிறீங்களோ.. இப்போ பஞ்சர் போடறவன் இந்த நேரத்தில் இருக்கமாட்டான்..” என வண்டியிலிருந்து இறங்கி.. தன் போனை எடுத்துக் கொண்டு யாருக்கோ அழைக்க தொடங்கினார்.

எடுக்கவில்லை போல அந்தபக்கம்..

இப்போது ஒரு வேலையாள் வந்து “சர், வண்டியை காலையில் பஞ்ச்சர் போட்டுக்கலாம்.. நான் ஆட்டோ கூட்டி வரவா” என்றான்.

அதியமானுக்கு கோவம் வந்தது.. ‘அது எனக்கு தெரியாதா’ எனதான் கோவம். அமைதியாக அந்த பணியாள் சொல்லுவதை காதில் வாங்காதவர் போல போனில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

இப்போது மீண்டும் அழைத்து பார்க்க.. இப்போது பேசினார் அதியமான்.

இப்போது அங்கே வந்தான் இறுக்கமான முகத்தோடு அந்த ட்ராயர் அணிந்த வாலிபன்.. அதியமானை பார்த்து  “வணக்கம்..” என்றான் இரும்பு குரலாக. குரல் அப்படி கரகரப்பாக இறுக்கமாக இருந்தது.

அதியமான் யாரென தன் மூக்கு கண்ணாடியை சரிசெய்துக் கொண்டு பார்க்க.. அந்த வாலிபன்.. அதே தோரணையாக.. ஆனால், இறுக்கமாக நின்றான். அதியமான் அந்த வாலிபனை நிமிர்ந்து பார்க்க வசதியாக இரண்டடி பின் நகர்ந்தார்.. கிட்ட பார்வை போல அவருக்கு.

ஆனாலும் இவன் ஆறடிக்கு மேல்தான் இருப்பான் எப்படியும்.. மாநிறத்தில் இறுகிய முகபாவம்.. படிந்து நிமிர்ந்தி வாரிய சிகை.. அகன்ற நெற்றி.. துளைக்கும் பார்வை.. பரந்த தோள்கள்.. இறுகிய தாடையுமாக.. எதோ சிற்பமாக அசையாமல் அவரின் பதிலுக்காக காத்து நின்றான், அவன்.

அதியமானுக்கு ‘முதல்முறை ஒரு மனிதனை பார்க்கும் போது புன்னகை வராதா.. இவ்வளவு வளர்ந்தவனுக்கு தெரியாதா.. மரம் மாதிரி நிற்கிறான்’ எனத்தான் தோன்றியது.

பதில் வரவில்லை பார்த்துக் கொண்டே நிற்கிறார் முதியவர் எனவும் வாலிபன் “பசங்க வேலை செய்துகிட்டு இருக்காங்க.. கொஞ்சம் பார்த்து வண்டியை எடுத்திருக்கலாம்.. பரவாயில்ல, வண்டியை இங்கேயே விட்டுட்டு போங்க.. நாங்க நைட் முழுசும் இங்கதான் இருப்போம்.. காலையில் என்ன செலவோ அதை நான் கொடுத்திடறேன்.. இங்க, இந்த நேரத்திற்கு ஆட்டோ இருக்குமா.. இல்ல, நான் ட்ரோப் பண்ணவா” என்றான் எந்த பாவனையும் இல்லாத இயந்திர குரலில்.. நாங்கள் தவறு செய்யவில்லை.. நீங்கள்தான் தவறு செய்தீர்கள் என்ற வார்த்தைகளால் பேசினான் வாலிபன்.

Advertisement