ரவிக்குமாரின் முன் வந்தவர் “எதுக்கு கூப்பிட்டிங்க?” என்றார்.

“அவங்க இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்களாம் காயத்ரி. ஆதிரா ரெடி ஆகியாச்சா?” என்றார் பதட்டமாய்.

“இப்ப ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?” என்றார் காயத்ரி கவலையாய்.

“இல்ல, அவங்க கேட்டதும் ஒரு வேகத்துல சரின்னு சொல்லிட்டேன். இப்ப இதெல்லாம் சரியா வருமான்னு யோசனையா இருக்கு. என்ன தான் இருந்தாலும் சினிமாகாரங்களை நம்புறது உள்ளுக்குள்ள உதறலா இருக்கு காயத்ரி” என்றார் மனதை மறையாமல்.

“நீங்க விசாரிச்சதா சொன்னிங்களே? அவங்களும் நல்ல விதமா தானே சொன்னாங்க?” என்றார்.

“அதெல்லாம் பையனைப் பத்தி யாரும் எந்த குறையும் சொல்லலை. அவங்க அண்ணா தான் கொஞ்சம் அப்படி இப்படின்னாங்க” என்றார்.

“அப்பறம் என்னங்க? வரட்டும் பார்த்துக்கலாம்” என்றார் காயத்ரி. ரவிக் குமாரும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் தான். தஞ்சாவூரில் ஆடிட்டராக உள்ளார். முக்கிய புள்ளிகளுக்கு ஆடிட்டிங் பார்ப்பது தான் அவர் வேலை. அந்த வகையில், பழக்க வழக்கத்தில் விசாரித்து வைத்திருந்தார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர்கள் வீட்டு ஹாலில் கால்மேல் கால் போட்டு பற்களை கடித்தபடி அமர்ந்திருந்தான் சத்ய தேவ் . சிவகாமி அவன் புறம் திரும்பவே இல்லை. அவரின் முகத்தைப் பார்த்த யுவனுக்கு கூட சிரிப்பாய் வந்தது.

சத்ய தேவ்  என்னும் மலையைக் கட்டி இங்கு இழுத்து வர அவர் பட்ட பாடுதான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே.

“உங்கம்மாவுக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை. உங்க தம்பி ரேஞ்ச் என்ன? அவங்க அவரை இங்க அழைச்சுட்டு வந்திருக்க நோக்கம் என்ன? இன்டஸ்ட்ரியில கண்டிப்பா இது பேசு பொருளா இருக்கப் போகுது” என்றாள் சாரு நிவேதா.

“எனக்கு தான் அவங்க விருப்பட்ட மாதிரி மேரேஜ் பண்ண முடியலை. அவனுக்காவது பண்ணனும்னு நினைக்கிறாங்க. அவங்க ஆசையை நாம ஏன் கெடுக்கணும்? சம்பந்தபட்டவனே அமைதியா இருக்கான். நமக்கென்ன?” என்றான் யாதவன்.

“ஏன்? என் தங்கச்சிக்கு என்ன குறைச்சல்?” என்றாள் கோபமாய்.

“எல்லாமே குறைச்சலாய் இருக்குறது தான் பஞ்சாயத்தே” என்றவனை முறைத்தாள் சாரு.

ரவிக் குமாருக்கு பதட்டத்தில் பேச்சே வரவில்லை என்றால் காயத்ரிக்கு அதற்கு மேல் இருந்தது. சிவகாமி தான் அனைத்து தயக்கங்களையும் கலைந்தார்.

“பொண்ணை வர சொல்லலாமே?” என்றார் சிவகாமி.

காயத்ரி, ஆதிராவை அழைக்க, அதற்காகவே காத்திருந்தவள் போல் வெளியே வந்தாள். புடவை உடுத்தி சர்வ லக்ஷ்ணமாய் இருந்தவளை பார்த்தவுடனே சிவகாமிக்கு பிடித்துவிட்டது. திரும்பி மகனைப் பார்க்க,தேவ் எதையும் முகத்தில் காட்டாது அமைதியாய் அவளை பார்த்திருந்தான்.

“சார், நிஜமாவே அழகா இருக்காங்க சார்” என்றான் யுவன். சத்ய தேவ் அவனை முறைக்க, அந்த முறைப்பில் அடங்கினான் யுவன்.

“எல்லாருக்கும் காபி குடும்மா” என்று காயத்ரி சொல்ல, அவனின் அருகில் சென்றவளுக்கு மூச்சடைத்தது. திரையில் பார்த்த ஒருவனை தன் வீட்டு ஹாலில், தனக்கு மணாளனாக பார்ப்பதில் இன்னமும் நம்பிக்கை வரவில்லை அவளுக்கு. அவனின் தோற்றத்திலும் கம்பீரத்திலும் முற்றிலுமாக தன்னைத் தொலைத்திருந்தாள் ஆதிரா.

“பொண்ணு ஓகே தான். அழகா இருக்கா” என்றாள் சாரு.

“ம்ம்” என்று யாதவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வெளியில் இருந்து வீட்டிற்குள் ஒருத்தி வர, ‘யாரது?’ என்று அனைவரும் பார்த்தனர். யாதவனோ ஒரு படி மேலே போய்,

“வாவ்..! வாட் அ கிளாசிக் பியூட்டி” என்று வாயைப் பிளக்க, சாருவுக்கு தான் எரிச்சலாய் இருந்தது.

“கொஞ்சம் வாயை மூடுங்க. இங்க வந்தும் உங்க புத்தியை காட்டாதிங்க” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

ஆம்..! அவனின் இயக்குனர் புத்தியை அங்கும் காட்டியிருந்தான் யாதவன். அதே பார்வையில் அவளை பார்த்தும் வைத்தான்.

செதுக்கிய சிலை. செப்பு இதழ்கள்.பால் வண்ண நிறம். இடைவரை நீண்ட கூந்தல். அதை ஏனோ தானோவென்று பின்னியிருந்தாள். கழுத்தில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு ஒரு சிறிய டாலர் வைத்த செயின்.நெற்றியில் சிறிய கருப்பு பொட்டு. மெரூன் மற்றும் காபி பிரவுன் நிறத்தில்,ஒன் புளோட்டிங் விட்டு அவள் கட்டியிருந்த அந்த ப்யூர் லினன் காட்டன் புடவையில் கம்பீரமான அழகில் மிளிர்ந்தாள் ஆரண்யா.

ஏதோ ஒரு யோசனையில் வந்தவள் அப்போது தான் அங்கிருந்தவர்களை கவனித்தாள். ஒரு நடிகனை தன் வீட்டில் பார்த்தவளுக்கு சிறு வியப்பு வந்தாலும், அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“வாங்க.!” என்றாள் மரியாதை நிமித்தம்.

“இந்த பொண்ணு” என்று சிவகாமி கேட்க,

“எங்க மூத்த பொண்ணு ஆரண்யா” என்றார் காயத்ரி.

“பேஷன் டிசைனிங் படிச்சுட்டு திருச்சியில சொந்தமா பொட்டிக் வச்சிருக்கா”  என்றார் கூடுதல் தகவலாய்.

‘இப்ப அதெல்லாம் இவங்க கேட்டாங்களா?’ என்று பல்லைக் கடித்தாள் ஆதிரா.

“ஏன் உங்க மூத்த பொண்ணுக்கு பார்க்காம இளைய பொண்ணுக்கு பார்க்குறிங்க?” என்ற கேள்வியில் விதிர்விதித்தார் ரவிக்குமார். காயத்ரி கண் கலங்கினார்.

ரவிக்குமார் வாயைத் திறக்கப் போக,

“எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு ஆன்ட்டி. என் ஹஸ்பண்ட் இறந்துட்டார்.நான் ஒரு விடோ” என்றாள் ஆரண்யா பட்டென்று. தந்தையின் தயக்கத்தை உணர்ந்தாளோ என்னவோ. மகளை வைத்துக் கொண்டு அவர் சொல்லத் தயங்கியதை தானே சொல்லிவிட்டாள்.

அவளின் வார்த்தைகளைக் கேட்ட சிவகாமிக்கு ‘ஐயோ’ என்றிருந்தது.

“இந்த சின்ன வயசுல இப்படி நடந்திருக்க வேண்டாம்மா” என்றார் கவலையுடன்.

“இட்ஸ் ஓகே ஆன்ட்டி. நானே அதை கடந்து வந்துட்டேன்” என்றாள் சோர்ந்த புன்னகையுடன்.

“என்னோட அடுத்த படத்துல ஹீரோயினா நடிக்கிறியாமா?” என்றான் யாதவன் வேகமாக.

சிவகாமி அவனை கோபமாக பார்க்க,

அதுவரை ஆரண்யாவை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்த சத்ய தேவ் எரிச்சல் பார்வை பார்த்தான் அண்ணனை.

“நோ சார். எனக்கு அதுல விருப்பமில்லை” என்றவள்  உள்ளே செல்ல முற்பட,

“எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு சார். ஐ மீன் உங்க மூத்த பொண்ணை பிடிச்சிருக்கு” என்றான் சத்ய தேவ்  பட்டென்று. அவனின் பதிலில் அனைவரும் திகைக்க, ஆதிராவோ ஒரு படி மேலே போய் தன் அக்காவை முறைக்க ஆரம்பித்தாள்.

அவனின் வார்த்தைகளில் அதிர்ந்து திரும்பியவள்,

“என்ன பேசிட்டு இருக்கீங்க?தங்கச்சியை பார்க்க வந்துட்டு அக்காவை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இருக்கீங்க? எனக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகிடுச்சு” என்றாள் ஆரண்யா சீற்றமாய்.

“அந்த லைப் தான் இப்ப இல்லைன்னு ஆகிடுச்சே” என்றவன்,

“சார் எனக்கு உங்க பெரிய பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு. உங்களுக்கு ஓகேன்னா நீங்க பேசிட்டு சொல்லுங்க” என்றவன் அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதை போல் எழுந்து நிற்க,

“அது எப்படி சரியா வரும் தேவ்? ஒரு விதவைப் பொண்ணை கல்யாணம் பண்ணனும்ன்னு உங்களுக்கு என்ன தலையெழுத்தா?” என்றாள் சாரு வேகமாய்.

“நான் உங்க கிட்ட சஜஷன் கேட்கவே இல்லை அண்ணி. நான் என்னோட முடிவை சொன்னேன். அவங்க முடிவை அவங்க சொல்லுவாங்க. இதுல யாரும் தலையிட வேண்டாம்” என்றான் உறுதியாக.

“வாய்ப்பே இல்லை சார்.இன்னொரு கல்யாணம் பண்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. இது தான் என்னோட முடிவு” என்ற ஆரண்யா யாரையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று அறைக்குள் சென்று விட்டாள்.

“தேவ் என்னப்பா இது? இது சரியா வராது” என்று சிவகாமி ரிஷியைப் பார்த்து சொல்ல,

“அம்மா எனக்கு அந்த பொண்ணைப் பிடிச்சிருக்கு. ஓகேன்னா மேற்கொண்டு பேசுங்க. இல்லையா கிளம்புங்க” என்றான்.

அவர் புரியாமல் காயத்ரி-ரவியைப் பார்க்க, அவர்களுக்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை.

“எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை தம்பி. இதுக்கு அவ கண்டிப்பா ஒத்துக்க மாட்டா. நாங்க ஏற்கனவே பேசி முடியாமப் போன விஷயம். விடாப்பிடியா இன்னொரு கல்யாணம் பண்ணவே மாட்டேன்னு சொல்லிட்டா” என்றார் ரவி இயலாமையுடன்.

“ஓகே சார்” என்றவன்,

”யுவன்” என்று அவனைப் பார்க்க,

“காரை எடுக்க சொல்லிட்டேன் சார்” என்று வேகமாய் சொல்ல,

“சாரி மிஸ். ஆதிரா” என்றவன் அதற்குமேல் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் சென்று விட்டான்.

“எதுவா இருந்தாலும் பேசிட்டு சொல்லுங்க” என்ற சிவகாமி மூத்த மகன் மருமகளுடன் கிளம்பினார்.

ஆதிரா அழுகையுடன் அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொள்ள, பெற்றவர்கள் தான்  திகைத்து நின்றனர்.