சிட்டியின் பிரதானப் பகுதியில் அமைந்திருந்த அந்த அரங்கம் முழுவதும் வண்ண விளக்குளால் ஜொலித்துக் கொண்டிருக்க, ரசிகர்களின் கரவொலி அந்த அரங்கத்தையே நிறைத்திருந்தது. எங்கு நோக்கினும் ஆடம்பரம். எதிலும் ஆடம்பரம். செயற்கை வண்ண ஒளிகள், கண்களின் இயற்கை ஒளித் திறனை கூசச் செய்து கொண்டிருந்தது. திரை உலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் அனைவரும் வருகை தந்து கொண்டிருக்க, கேமராக்களின் வெளிச்சம் அனைவரின் மீதும் பட்டு அவர்களை தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தது.
“இயக்குனர் யாதவன் சார் வர்றார்” என்ற பேச்சில் அனைவரும் கேமராவைத் தூக்கிக் கொண்டு யாதவனை நோக்கி சென்றனர்.
“ஹலோ சார்..! நீங்க ஜூரி டீம்ல இருக்கிறதால தான் உங்க தம்பிக்கு விருது கிடைக்குதுன்னு பேசிக்கிறாங்களே உண்மையா சார்?” என்று ஆரம்பத்திலேயே எக்குத் தப்பாக கேள்விகள் முன் வைக்கப்பட, அதில் எரிச்சலுற்றவன்,
“ஜூரிங்கிறது நான் மட்டும் கிடையாது. அது ஒரு டீம். நான் எந்த முடிவுகளையும் தனிப்பட்டு எடுக்க முடியாது.” என்றான்.
“உங்க தம்பிக்குத் தான் பெஸ்ட் ஆக்டர் அவார்ட்னு சொல்றாங்களே சார். உண்மையா?” என்றனர்.
“அதை அவார்ட் குடுக்கும் போது தெரிஞ்சுக்கங்க” என்றவன் சட்டென்று அந்த இடத்தில் நில்லாமல் செல்ல முற்பட, அவர்களோ அவனை விடாமல் கேள்விகளால் துளைத்துக் கொண்டே பின் சென்றனர்.
இதையெல்லாம் கண்ட யாதவனுக்கு உள்ளுக்குள் தீயாய் எறிந்து கொண்டிருந்தது. எதையும் வெளியில் காண்பிக்கும் நிலையில் இல்லை அவன்.
அங்கிருந்த செயற்கை அலங்காரங்களையும், செயற்கை புன்னகைகளையும் பிடிக்காத ஒருவன், வேறு வழியின்றி இருந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தான். அவன் தான் இயக்குனர், நடிகர் என பன் முகங்களைக் கொண்ட சத்ய தேவ் .
நேவி புளு பேண்ட்டும், க்ரீம் கலர் ஷேர்ட்டும் அணிந்து, நாயகனுக்கு உரிய அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்தவனின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. ஜிம் பயிற்சியின் மூலம் அவன் உடல் இறுகியிருந்ததைப் போல, அவன் முகமும் மனமும் இறுகிக் கிடந்தது. அவனுக்கு இது போன்ற விருதுகளில் பெரிதாய் ஆர்வமில்லை. ஆனால் உழைப்பிற்கு கிடைக்கும் அங்கீகாரத்தை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு நல்லவனும் இல்லை. இந்த துறையில் வெற்றியும் விருதுகளும் மட்டும் தானே அடுத்த கட்ட வளர்ச்சியை தீர்மானிக்கிறது.
இளம் கதாநாயகிகள் பலரும் அவனிடம் ஆர்வமுடன் பேச முற்பட, அனைவரையும் சிறு புன்னகையுடன் கடந்து விட்டான் சத்ய தேவ் . அவன் கடைசியாய் இயக்கி நடித்த திரைப்படத்திற்காக, சிறந்த கதாநாயகன் விருதும், சிறந்த இயக்குனர் விருதும் அவனுக்கு அளிக்கப்பட, அவன் பெயரை அறிவித்தவுடன் ஏற்பட்ட ரசிகர்களின் கரவொலி அடங்கவே சிறிது நேரம் எடுத்துக் கொண்டது.
நிதானமாக மேடை ஏறியவனின் நடை ரசிக்கப்பட்டது. உடை ரசிக்கப்பட்டது. ஆளுமை ரசிக்கப்பட்டது. அவன் சிகை கூட ரசிக்கப் பட்டது. மொத்தத்தில் அனைவராலும் அவன் ரசிக்கப்பட்டான்.
விருதுகளை வாங்கியவனின் முகத்தில் மலர்ச்சியில்லை,பதட்டமில்லை. கைகளிலும் நடுக்கமில்லை. மொத்தத்தில் எந்த ஒரு எம்பேரிசிங் மூமென்ட்டும் அவனிடம் இல்லை.
“சார், நீங்க அதிகம் பேச மாட்டிங்கன்னு தெரியும். விருது வாங்கியதைப் பத்தி இரண்டொரு வார்த்தை பேசலாமே?” என்ற தொகுப்பாளரின் கேள்விக்கு சிறு புன்னகை சிந்தியவன்,
“என்னோட உழைப்புக்கான அங்கீகாரம் இது. அது ரசிகர்கள் மூலமா என்னை வந்து சேர்ந்திருக்கு. நான் உழைப்பை போட்டேன். அவங்க காசை போட்டு படம் பார்த்தாங்க. அவங்களுக்கு படம் பிடிச்சிருந்தது. ஏதோ ஒரு வகையில் என்னையும் பிடிச்சிருந்தது.படம் சக்சஸ். அது அவார்டையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கு. ரசிகர்களுக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி” என்று சிறு புன்னகையுடன் கூறியவன், அங்கிருந்து நகர முற்பட,
“உங்க வீட்ல இரண்டு இயக்குனர்கள் இருக்கீங்க. உங்களோட வெற்றியை உங்க அண்ணன் யாதவன் சார் எப்படி பார்க்குறார்?” என்ற கேள்விக்கு,
“அவரும் ஸ்டேஜ்க்கு வருவார். அவர்கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோங்க” என்றவன் நகர்ந்து விட்டான்.
அவனின் பேச்சை சிலர் ரசித்தனர். சிலர் அகம்பாவம் என்று எண்ணிக் கொண்டனர். சிலருக்கு திமிராகத் தெரிந்தது. அவனிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அது அவனின் இயல்பாகத் தெரிந்தது. மொத்தத்தில் அவரவர் கண்ணோட்டத்தில் அவனுக்கான முகம் வேறு வேறு.
“கங்கிராட்ஸ் தேவ் சார்” என்று ஒரு இளம் நடிகை அவனை அணைத்து வாழ்த்து சொல்ல, அவளின் அணைப்பையும் வாழ்த்தையும் எதிர்பார்க்காதவன், நாகரீகம் கருதி ஏற்றுக் கொண்டான். கேமராக்களுக்கும், மீடியாக்களுக்கும் அதுவே அன்றைய கன்டென்ட்.
‘மறுநாள், இளம் நடிகையுடன் காதலா, திருமணமா? ரகசிய பழக்கமா?’ இப்படி ஒவ்வொரு தலைப்புகளிலும் அவனே நிறைந்திருப்பான் என்று அவனுக்குத் தெரியும். தனக்குள் சிரித்துக் கொண்டவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
“இருந்தாலும் உங்க தம்பிக்கு இவ்வளவு திமிர் ஆகாது யாதவன். இந்த வெற்றிக்கு காரணம் என் அண்ணன் தான்னு சொல்றதுல அப்படி என்ன ஈகோ. நானும் பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு திமிர் பிடிச்ச ஆளை பார்த்ததில்லை.” என்று பொருமித் தள்ளினாள் சாரு நிவேதா.
“வாயை மூடு சாரு. அவன் வெற்றிக்கு நான் எப்படி காரணம் ஆவேன். அது அவனோட உழைப்பு. சொல்லப் போனா இப்போ நானே அவனை நம்பித்தான் இருக்கேன்” என்றான் யாதவன்.
“அது எனக்குத் தெரியாதா? இப்படி ஸ்டேஜ்ல உங்களைப் பத்தி பெருமையா சொன்னா தான, உங்களுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும்” என்றாள் சாரு.
“அவன் குணம் தெரிஞ்சும் அப்படியெல்லாம் எதிர்பார்ப்பு வச்சுக்கிறது உன்னோட முட்டாள்தனம்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“ஹெலோ யாதவன் சார்” என்று ஒரு நாயகி வர, அவளிடம் வாயெல்லாம் பல்லாக பேச ஆரம்பித்துவிட்டான் யாதவன். தம்பிக்கு அப்படியே நேரெதிர் குணம்.
“இதெல்லாம் திருந்தாத ஜென்மம்” என்று தலையில் அடித்துக் கொண்டாள் சாரு. அவளும் நடிகை தான். யாதவன் இயக்கிய படத்தில் நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அது எவ்வளவு பெரிய அபத்தம் என்று இப்போது உணர்கிறாள். இருவருக்கும் இருந்த பல காதல்களில் இதுவும் ஒரு காதல் அவ்வளவே!
காரில் சாய்ந்து ஓய்ந்து கண்களை இறுக மூடியிருந்த சத்யதேவ்வின் உடல் ஓய்விற்கு கெஞ்சியது.
“நாம எங்க போயிட்டு இருக்கோம் யுவன்?” என்றான் தன் உதவியாளனிடம்.
“டு வாட் ஐ சே மேன். ஐ நீட் சம் ரெஸ்ட். அப்பாயின்மென்ட்டை ரீ-ஷெட்யூல் பண்ணிடு யுவன்” என்றான் சோர்வாக.
“சார் ரொம்ப டல்லா தெரியரிங்க? நாம வேணும்னா ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்றான் யுவன் கவலையாய். கடந்த மூன்று மாதமாக அவனுக்கு சரியான தூக்கமும் ஓய்வும் இல்லை. அதை யுவன் நன்கறிவான்.
அதற்கு மேல் யுவனாலும் பேச முடியாது. ஏதோ இன்றுதான் இவ்வளவு பொறுமையாய் பதில் சொல்லியிருக்கிறான் சத்ய தேவ். இல்லையென்றால் கூர் தீட்டப்பட்ட ஒரே பார்வை தான். அதில் தான் அனைத்து பதில்களும் அடங்கியிருக்கும்.சத்யதேவிடம் உதவியாளனாக சேர்ந்த பிறகு,கோபமும் குணமும் ஒரே இடத்தில் இருக்குமென்பதை அனுபவ ரீதியாக உணர்ந்திருந்தான் யுவன்.