நிச்சயம் முடிந்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்திருக்க, அப்போதே தொடங்கிவிட்டான் சக்தி.
“யாரைக் கேட்டு அடுத்த மாசம் தேதி குறிச்சிங்க நீங்க. உங்ககிட்ட என்ன சொன்னேன்? நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க.” என்று அவன் கத்த,
“என்ன இப்போ? நீ கல்யாணத்துக்கு ஒப்புதல் கொடுத்தது நெசம் தானே. நீ ஆறு மாசம் கழிச்சு வைக்க சொன்ன, நான் கொஞ்சம் முன்னாடி நடத்த நினைக்கிறேன். என்ன கெட்டு போச்சு இப்போ?” என்று சொக்கநாதர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் கேட்டு வைத்ததில் கொதித்து போனான் சக்தி.
“தாத்தா. சும்மா எதையாவது பேசிட்டு இருக்காதீங்க. படிக்கிற பிள்ளை என்ன விளையாட்டா போச்சா? நான் சொன்னது போல ஆறு மாசம் கழிச்சு தேதியை மாத்துற வழியைப் பாருங்க. இல்ல,”
“இல்ல… இல்லன்னா என்ன செய்வ சக்தி? சொல்லு அதையும் கேட்டுகிட்டே என் முடிவை சொல்றேன்”
“நான் சொன்ன தேதியில கல்யாணம் நடக்கலைன்னா, நான் தாலி கட்ட மாட்டேன். உங்க பேரனை போல ஓடி எல்லாம் போகமாட்டேன். ஆனா, கல்யாணம் பண்ணவும் மாட்டேன்.” என்று ஒரே பிடியாக அவன் மறுத்து விட, மனோன்மணி தான் இடையிட்டார்.
“என்ன பேசற சக்தி நீ? எப்போ இப்படி எல்லாம் பேச கத்துகிட்ட? உன் தாத்தா பேச்சுக்கு பதிலுக்கு பதில் பேசத் தெரியுமா உனக்கு?” என்று அவர் கேட்கவும் தான் கொஞ்சம் அடங்கினான் சக்தி. ஆனால், திருமணத்திற்கு சம்மதமும் கொடுக்கவில்லை.
“நிச்சயம் முடிஞ்சு இன்னும் என் பேத்தி கழுத்துல இருந்து மாலை கூட இறங்கி இருக்காது. நீ தாலி கட்ட மாட்டேன்னு சொல்ற. உனக்கும் உன் தாத்தனுக்கும் நடக்கிற பஞ்சாயத்துக்கு என் பேத்தி தான் கிடைச்சாளா? எப்படி நீ சொல்லலாம்? அவளும் இந்த வீட்டு பிள்ளை. நிச்சயம் முடிஞ்சு போச்சு உனக்கு. நீ பேசுறதுக்கு முன்ன, அவளை யோசிக்க வேண்டாமா?” என்று கண்டிப்புடன் மனோன்மணி கேள்வி கேட்க,
“பாட்டி அவ படிப்புக்காக யோசிச்சு தான் பேசிட்டு இருக்கேன்”
“அதுதான் காரணம்னா அவ கல்யாணம் முடிச்சு படிக்கட்டும். அதுக்கு யாருமே மறுப்பு சொல்லலையே.”
“இதெல்லாம் பேச நல்லா இருக்கும் பாட்டி.”
“எல்லாமே நாம எடுக்கிற விதத்துல தான் சக்தி இருக்கு. தாலி கட்டி முடிச்ச நிமிஷம் உன் பொண்டாட்டி அவ. நீயும் அவளும் எடுக்கிறது தான் முடிவு. அவ என்ன சொல்றாளோ, அதை கேட்டு நீ முடிவெடுக்க போற. இதுல என்ன குழப்பம் வந்தது?” என, பதில் இல்லை சக்தியிடம்.
“பதில் சொல்ல முடியலயா. இல்ல, இதை தாண்டி எதுவும் காரணம் இருக்கா?” என்று மீண்டும் அவர் கேட்க,
“என்ன காரணம் கேட்கறீங்க? இல்ல, என்ன நினைச்சு கேட்கறீங்க? உங்க செல்ல பேரனைப் போல, எவளையாவது இழுத்துட்டு வந்திடுவேன்னு தோணுதா?” என்றுவிட்டான் சக்தி.
“இழுத்துட்டு வரணும்னு எண்ணம் இருந்தா கூட முதவே சொல்லிடுப்பா. அவன் செஞ்சதை முழுங்கிட்டு உசுரோட இல்ல. செத்தா போயிட்டேன்… இதையும் முழுங்கிடுவேன். ஆனா, என் பொண்ணு தாங்க மாட்டா. அவ பொண்ணு வாழ்க்கை ரெண்டாம் முறையா அந்தரத்துல தொங்குறத பார்க்க அவ உசுரோட இருக்க மாட்டா.” என்றவருக்கு தன்னை மீறிக் கொண்டு கண்ணீர் வெடித்து வர, சக்தியின் வார்த்தைகளில் வெகுவாக காயம் பட்டுவிட்டார் அவர்.
“பாட்டி” என்று சக்தி அவரை நெருங்க, அவன் கையை தடுத்துவிட்டு அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.
“அத்தை” என்று வடிவு அவரை நெருங்க,
“உன் மகன் அவன் கல்யாண விஷயமா என்ன முடிவெடுக்கிறான்னு நீயே கேட்டு சொல்லிடு வடிவு. எங்களுக்கெல்லாம் பேச உரிமையில்ல. முடிவு எடுக்கிற அதிகாரமும் இல்ல. பெத்தவங்க நீங்க பேசி முடிங்க” என்றவர் எழுந்து கொள்ள,
“என்ன அத்தை. நீங்களும் அவன் கூட சேர்ந்துட்டு. அவன் கோபத்துல எதையோ..”
“கோபத்துல என்ன வேணா பேசுவானா உன் மகன்? என் புருஷன் பண்ண நிச்சயத்தை ஒன்னுமில்லாம பண்ணுவானா?” என்று ஆதங்கத்துடன் மனோன்மணி கேட்க, சக்தியைத் தான் பார்த்தார் வடிவு.
“என்ன சக்தி” என்று தங்கபாண்டியன் வாய் திறக்க,
“என்னப்பா இப்போ” என்று அவரிடமும் முறுக்கித்தான் நின்றான் சக்தி.
“எப்போ இருந்தாலும் நடக்க போற கல்யாணம் தானே. எதுக்காக இப்படி பெரியவர்களை எதிர்த்து பேசிட்டு இருக்க?” என்றவரை ஆயாசத்துடன் பார்த்த சக்தி, “என்னவோ பண்ணுங்க. ஆனா, இனி எதுக்கும் என்கிட்டே வரக்கூடாது. கல்யாணத்தன்னைக்கு தாலி கட்ட வந்து நிற்பேன். அவ்வளவு தான்” என்றுவிட்டு வேகமாக படிகளில் ஏறிவிட்டான்.
அவன் நகரவும், “நான் தான் அவன்கிட்ட பேசிட்டு இருக்கேன்ல. நீ ஏன் மனோ குறுக்கே வந்த?” என்று சொக்கநாதர் ஆரம்பிக்க,
“வாயை மூடிடுங்க சொல்லிட்டேன். அவன்தான் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டான் இல்ல. அவன் போக்குக்கே விட வேண்டியது தானே. ஏன் இல்லாத ஏழரையை இழுத்து விடறீங்க” என்று அவர் கணவரையே சாட,
“எதுவும் ஏழரை வந்திடக்கூடாதுன்னு தான் அவசரப்படறேன் மனோ” என்று தலையசைத்தபடி கூறினார் சொக்கநாதர்.
“என்னங்க” என, மீண்டும் ஒரு யோசனையான தலையசைப்பு.
“சொல்லுங்க”
“அந்த பொண்ணு சும்மா இருக்கமாட்டா”
“என்னங்க” “எந்த பொண்ணுப்பா” “மாமா” என்று மூவரும் ஒரே நேரத்தில் பதற,
“நிச்சயமா சொல்றேன் மனோ. அந்த பொண்ணு இதோட விடமாட்டா. அவளால என் பேரன் வாழ்க்கைக்கு எந்த இடையூறும் வந்திடக்கூடாது.”
“நம்ம சக்த்தி அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க”
“என் பேரனை எனக்கு தெரியாதா.”
“அப்புறம் என்ன?”
“ஏதாவது எக்குத்தப்பா நடந்து, அவன் சங்கடத்துல மாட்டிக்ககூடாது. அதற்காகத் தான் அவசரப்படறேன். அவ அடுத்து என்னன்னு யோசிக்கிறதுக்குள்ள என் பேரன் கல்யாணத்தை நான் முடிச்சுடணும்” என்றார் முடிவாக.
என்னப்பா பேசிட்டு இருக்கீங்க நீங்க?” என்று தங்கப்பாண்டியன் புரியாமல் வினவ, அவருக்கு அப்போதுதான் அத்தனை விஷயங்களும் கூறப்பட்டன.
அமைதியாக கேட்டுக்கொண்டவர் அதிர்ந்து நிற்க, “பார்த்துக்கலாம்டா. இத்தனைப் பேர் இருக்கோம். நம்ம பிள்ளையை விட்டுடுவோமா?” என்று மகனுக்கு தந்தை ஆறுதல் கூறினார்.
“இதையெல்லாம் அண்ணன்கிட்ட நேராவே சொல்லி இருக்கலாம் தாத்தா” என்று அதுவரை வாய் மூடி நின்ற வேல்விழி வாய் திறக்க,
“வேலு” என்று அதட்டினார் வடிவு.
“அண்ணா பாவம் தாத்தா” என்று அவள் மீண்டும் தாத்தனிடமே பேச,
மேலும் சில நிமிடங்கள் இப்படியான பேச்சு வார்த்தைகளிலே கழிய, அதன்பிறகே உறங்கச் சென்றனர் அவர்கள்.
ஆளுக்கு முன்னதாக அறைக்கு வந்தவன் உறங்காமல் பால்கனியில் இருந்த பீன் பேக் மீது அமர்ந்தபடி, அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.
காட்சியில் கவனம் பதியாமல், கைகள் அதன் பாட்டிற்கு அலைபேசியை தேய்க்க, அதன் விளைவாக நொடிக்கொரு ரீல்ஸ் மாறிக் கொண்டிருந்தது. அந்த அலைபேசிக்கு வாய் இருந்திருந்தால் நிச்சயம் அழுதிருக்கும். அப்படி பாடாக படுத்தி வைத்து கொண்டிருந்தான் சக்தி.
அத்தனைப் பேரும் ஒன்று சேர்ந்து தன்னை நெருக்குவது போல் உணர்ந்தவன் மூச்சுக்கு தவித்தவனாக பால்கனியில் தஞ்சம் புகுந்திருக்க, சற்றுமுன் அவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள் அழைப்பு விடுத்தாள் அவனுக்கு.
சட்டென மூச்சடைத்தது சக்திக்கு. ‘என்ன பேசப் போறா… கேள்வி கேட்பாளோ…‘ என்று யோசித்தபடியே இருந்தவன் அழைப்பை கோட்டை விட, நின்று மீண்டும் ஒளிர்ந்தது அலைபேசி.
விடமாட்டாள் என்று புரிய, வரவைத்துக் கொண்ட அமைதியுடன் அழைப்பை ஏற்றான் சக்தி.
“என்ன மாமா கோபமா இருக்கீங்களா?” என்று அவள் தொடங்க,
“ஹான்… இல்லையே” என்றான் சக்தி.
“அப்போ கொஞ்சம் பேசுவோமா?” என்றாள் அழகாக.
“என்ன” என்று அவன் மொட்டையாக கேட்க, “என் பேர் மீனாட்சி. வீட்ல மீனு. நீங்களும் அப்படியே கூப்பிடலாம்” என்று அவள் நீட்ட,
“சொல்லுடா” என்றான் சோர்வாக.
“என்னாச்சு மாமா. ஏன் இவ்ளோ சோகம்”
“ஏன்டி படுத்தி வைக்கிற? என்ன வேணும் உனக்கு?” என்று அவளிடமும் கத்திவிட்டான் சக்தி.
அதிலேயே எதிர்முனை அமைதியாகிவிட, தலையில் தட்டிக்கொண்டு, “ஹேய் இருக்கியா?” என்றான் மீண்டும்.
“நான்… நான் அப்புறம் பண்றேன்” என்று திக்கி திணறி பதில் வர,
“ஏன் இப்போ என்ன?”
“இல்ல. ஒன்னும் இல்ல”
“சாரிடா”
“இல்ல மாமா. அதெல்லாம் ஒன்னும் இல்ல.”
“நான் கொஞ்சம் பேசவா. கேட்பியா” என,
“ம்ம்ம்… சொல்லுங்க” என்றாள் அவசரமாக.
சக்தி மூச்சை நன்றாக இழுத்து வெளிவிட்டு, “கொஞ்சம் கோபம் தான். நம்ம வீட்டு ஆளுங்க மேல. உன் வெற்றி மேல. இன்னும் எல்லார் மேலேயும்.” என்றவன் சிறு இடைவெளி கொடுக்க, இட்டு நிரப்புவதாக இல்லை அவள்.
மீண்டும் அவனே, “இவ்ளோ அவசரமா இதெல்லாம் தேவையான்னு கொஞ்சம் யோசனை. அதோட உன்னைப்பத்தியும், என்னைப்பத்தியும் சில குழப்பங்கள்” என்று ஒவ்வொன்றாக அவன் அடுக்க,
“குழப்பம் நம்மை பத்தினது மட்டும் தானே” என்றாள் மீனு.
“புரியல”
“எனக்கும் புரியல மாமா. நம்மோட வாழ்க்கைல என்ன குழப்பம்?” என்று மீண்டும் அழுத்தினாள் அவள்.
“உன்னோட படிப்பு, என்னோட கடந்தகால சங்கடங்கள்…”
“என் படிப்பு விஷயமே இல்ல மாமா. தாலி கட்டி முடியவும், நீங்களே என்னை கொண்டு போய் சென்னையில விட்டுடுங்க. அடுத்து… உங்களோட கடந்தகாலம். நம்மை பொறுத்தவரைக்கும் அது கடந்து போனதாகவே இருக்கட்டும். இந்த நிமிஷம் நிஜம் நான் தான். நான் மட்டும்தான்” என்று மீனு சட்டமாக கூறிவிட, இவளுக்கு இப்படியெல்லாம் பேச வருமா என்று தான் யோசித்தான் சக்தி.
“எதை மறக்க சொல்ற. இன்னைக்கு காலையில் கூட ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்திருக்கேன். தெரியுமா உனக்கு?”
“நீங்க கல்யாணம் பண்ணிப்போமான்னு கேட்ட வரைக்கும் தெரியும். அதோட வெற்றியை தம்பின்னு சொன்னதும் தெரியும்”
“என்ன”
“எனக்கு தெரியும் மாமா”
“உனக்கு பயமா இல்லையா?”
“ஏன் நீங்க என்னை விட்டுட்டு அவளை கட்டிக்க போறீங்களா?”
“ச்சேச்சே”
“பிறகு நான் ஏன் பயப்படணும்?”
“ம்ம்ம்”
“அவங்களை கட்டிக்கிற எண்ணம் இருந்திருந்தா, நிச்சயமா நீங்க நிச்சயத்துக்கு வந்திருக்க மாட்டிங்க மாமா. எனக்கு தெரியும். நமக்குள்ள காதல், கத்தரிக்காய் எல்லாம் இல்ல. ஆனா, எனக்கு என் மாமா குணம் தெரியும். என்னவோ, ஒரு அபஸ்வரம் உங்களுக்குள்ள. இல்லன்னா, அந்த நிச்சயம் நின்னு போயிருக்காது. உங்களுக்கு வேணும்னு முடிவு பண்ணி இருந்தா தூக்கிட்டு வந்திருப்பீங்க. வேணாம்… அதுதான் விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறீங்க” என்றாள் அவனை முழுதும் தெரிந்தவளாக.