தேனு அவனை கவனித்து விசாரிக்க, “சக்திக்கு நிச்சயம் பண்றாங்க” என்றான் அமைதியாக.

“ஓஒ” என்றவளுக்கும் மேலே என்ன பேசுவது என்று புரியவில்லை. வெற்றிக்கு அவன் குடும்பம் எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்தவள் அவள். அப்படியிருக்க, இது அவனை எத்தனை பாதிக்கும் என்பதும் புரிய, வெற்றியின் கையைப் பிடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டாள் அவளும்.

இவர்கள் இப்படி சோகத்தில் ஆழ்ந்திருந்த நேரம் தான் மீனாட்சி வெற்றியை அழைத்தது.

வெற்றி, “சொல்லுடா”  என,

“என்ன சொல்லுடா. நான் இதுக்குதான் கல்யாணம் வேண்டாம் சொன்னேன். கேட்டியா?” என்றாள் மீனு.

“என்னடி. என்ன பிரச்சனை?” என்று அவன் பதற,

“நீ இல்லாம எனக்கு நிச்சயம் வேண்டாம் வெற்றி” என்றாள் மீனு.

“பைத்தியம் மாதிரி பேசக்கூடாது மீனு” என்று வெற்றி கண்டிக்க,

“என்ன வேற என்னதான் செய்ய சொல்ற. இங்கே யாருமே மாமாகிட்ட பேச தயாரா இல்ல. அவர் கல்யாணத்துக்கு சம்மதிச்சதே பெரிய விஷயம்னு மொத்தமா முடிச்சுட்டாங்க. நானே போய் உன் அண்ணன்கிட்ட கேட்டதுக்கும், உனக்கு வேணும்னா கூப்பிட்டுக்கோ, ஆனால், நீ அவன் வீட்டுக்கு போகக்கூடாது. அவன்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்றாங்க. எனக்கு பிடிக்கவே இல்ல வெற்றி” என்று மீனு கலங்கிய குரலில் கூறி முடித்தாள்.

வெற்றிக்கு அவள் சொன்ன தகவல் அதிசயமாக இருந்தது.

“நீ சக்திகிட்ட எனக்காக பேசினாயா?”

“ம்ம்ம்”

“அவன் உன்னை எதுவும் சொல்லலையா”

“அதுதானே உன்கிட்ட பேசக்கூடாது சொல்லிட்டாங்களே.”

“ஹே லூசு. என்னைப்பத்தி பேசுனதுக்கு அவன் உன்னை திட்டலையா”

“இப்போ அதுதான் முக்கியமா?”

“ஏய். அவன் இருக்கிற கோபத்துக்கு உன்னை அடிக்காம விட்டதே பெருசு. நான் பண்ணி இருக்க காரியம் ரொம்ப பெரியது மீனு. நீ என்ன நினைக்கிற? அத்தனை சுலபமா அவன் மன்னிச்சுடுவானா. அவன் கல்யாணமே நின்னு போயிருக்கு.”

“அதுதான் இப்போ நடக்க போகுது இல்ல”

“அதுக்காக நான் செஞ்சது தப்பில்லன்னு ஆகிடாது”

“ம்ம்ம்”

“இப்படி சோகமா இருக்காத. கூப்பிட்டுக்கோன்னு அவன் சொன்னதே பெரிய விஷயம். அதுவும் உனக்காக மட்டும்தான் சொல்லி இருக்கான். இதை இப்படி யோசி. என் மேல இருக்க கோபத்தை விட நீ அவனுக்கு முக்கியம். அவன் சரியா இருக்கான் மீனு. நீ புரிஞ்சு நடந்துக்கோ. இனி ஒருமுறை கல்யாணம் வேண்டாம்னு உன் வாயில இருந்து வரக்கூடாது. எனக்கு என் அண்ணனும் முக்கியம். புரியுதா?” என்று வெற்றி பொறுப்பாக அறிவுறுத்த,

“போடா” என்றாள் அத்தை மகள். தேனருவி சட்டென சிரித்துவிட,

“பக்கி பயபுள்ள. தொண்டை தண்ணி வத்த பேசினது மொத்தமும் வீணாய் போச்சே” என்று புலம்பிக் கொண்டான் வெற்றி.

அவன் புலம்பலில் மீனுவும் சிரித்துவிட, “நீ வருவியா எனக்காக?” என்றாள் அப்போதும்.

வெற்றிக்கு என்ன பதில் கூறுவது என்று நிச்சயமாக புரியவில்லை. தேனருவி வேறு அவனுடன் இருக்க அவளைக் குறித்தும் அவன் யோசிக்க வேண்டுமே.

எனவே, “நான் சொல்றேன் மீனு. நீ இப்போ இதையெல்லாம் யோசிக்காத. நிச்சயத்துக்கு ஜாலியா ரெடியாகிற வேலையைப் பாரு” என்று கூறி பேச்சை முடித்து வைத்தான்.

அவள் முடித்ததும் இங்கே அருவி தொடங்கிவிட்டாள்.

“அதுதான் உங்க அண்ணா வர சொல்லி இருக்காங்க இல்ல. நீ போயிட்டு வாங்க. மண்டபத்துக்கு தானே” என்று அவள் வற்புறுத்த,

“அவ தான் யோசிக்காம பேசறா. நீயுமா?” என்றான் வெற்றி.

தேனு புரியாமல் பார்க்க, “ஏற்கனவே நம்மை வச்சு நிறைய பேச்சு வாங்கிட்டாங்க தேனு. இப்போ நிச்சயத்துக்கு போய் நின்டா, அங்கேயும் நம்மை பத்தின பேச்சுதான் அதிகமா இருக்கும். இதெல்லாம் தேவையா? நம்ம ஊரும், உறவும் அவன் வீட்டு அழுக்கை விட, அடுத்த வீட்டு அழுக்கை அலசிவிட தான் அதிகமா வருவாங்க. இதுல நானும் போய் முன்னாடி நின்னுட்டா, சொல்லவே வேண்டாம்.”

“கொஞ்ச நாளைக்கு இதுக்கெல்லாம் ஆசைப்படக் கூடாது. என்ன இப்போ, நம்ம மீனு தானே. நாம அன்னைக்கு போல கோயிலுக்கு கூப்பிட்டு பார்த்துக்கலாம்” என்றான் முதிர்ச்சியுடன்.

தேனு அவன் பேச்சு புரிந்தவளாக, அவன் தோளில் சாய்ந்து கொள்ள, அவள் தலையுடன் தன் தலையை வைத்து லேசாக இடித்தான் வெற்றி.

“எவ்ளோ நாளைக்கு இதெல்லாம்?” என்று இருந்தபடியே அவள் கேட்க,

“நம்ம கல்யாணத்தைவிட பெருசா எதுவும் சம்பவம் நடக்கிற வரை. வெற்றி அவன் பொண்டாட்டியை நல்லவிதமா வாழ வச்சுட்டான்னு இந்த ஊர் பேசற வரை” என்றான் வெற்றி.

தேனு கலங்கிய கண்களை அவனுக்கு காண்பிக்காமல் மறைத்துக் கொள்ள,அவள் மண்டையில் தட்டி, “போய் சோத்தை போடுடி. எல்லாத்துக்கும் அழுகாச்சி சீன் காட்டிட்டு” என்று சிரித்தபடி எழுந்துச் சென்றான் வெற்றி.

இதோ அதோ என்று நிச்சயத்திற்கென நிச்சயிக்கப்பட்ட நாளும் வந்துவிட, சக்தியை எங்கும் செல்ல அனுமதிக்காமல் பிடித்து வைத்துவிட்டார் மனோன்மணி.

“படுத்து தூங்கு. வெளியே எங்கேயும் போகக்கூடாது” என்று கண்டிப்புடன் சொல்லிச் சென்றிருக்க, தனது அறையில் அமர்ந்து அவன் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம், அலைபேசி அழைத்தது.

ஏதோ புது எண்ணாக இருக்கவும், அவன் யோசனையுடன் அழைப்பை ஏற்க, “சார். மேலூர் ஸ்டேஷன்ல இருந்து பேசறோம். சக்திதான” என்றது எதிர்முனை.

அவன்தான் என்ற உறுதிப்படுத்தலுக்குப் பின், “சார் உங்க பேர்ல கம்பிளைன்ட் வந்திருக்கு. ஸ்டேஷன் வரைக்கும் கொஞ்சம் வர முடியுமா?” என, சக்திக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.

“என்ன கம்பிளைன்ட். யார் கொடுத்தது?”

“சார் நீங்க நிச்சயம் பண்ணிட்டு ஏமாத்திட்டதா சுவேதாங்கிற பொண்ணு புகார் கொடுத்திருக்கு. நீங்க முதல்ல ஸ்டேஷனுக்கு வாங்க சார். பேசிக்கலாம்” என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

சக்திக்கு, ‘இதேதடா புது தலைவலி’ என்று தோன்றிவிட, சில நிமிடங்கள் யோசித்தவன் பின் சொக்கநாதரை அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டான்.

கேட்ட சொக்கநாதருக்கு ரத்தம் கொதித்தாலும், கோபம் கொள்ளுவதற்கான நேரம் இதுவல்ல என்று தன்னை அடக்கிக் கொண்டார் மனிதர். அவர் கையைப் பிசைந்து தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டுவர, “அப்பாகிட்ட சொல்ல வேண்டாம் தாத்தா. நீங்க என்னோட வாங்க” என்று அவரை மட்டும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றான் சக்தி.

அங்கு சுவேதாவின் சார்பில் அவள் மட்டுமே அமர்ந்திருக்க, பார்த்தவுடனே ஓரளவுக்கு சூழலை கணித்துக் கொண்டான் சக்தி.