இரண்டு நாட்களாகவே சற்று உற்சாகமாகத் தான் காணப்பட்டான் வெற்றி. தேங்காய் வியாபாரம் நல்ல இலாபம் ஈட்டிக் கொடுத்திருக்க, அது கொடுத்த நம்பிக்கையில் அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிட்டான். காத்தன் உற்ற துணையாக கூடவே இருக்க, இவன் தடுமாறும் நேரங்களில் சரியாக அறிவுரை கொடுத்தான் அவன்.
தேங்காய் நல்ல லாபம் கொடுத்து விட்டாலும், அங்கிருந்த மற்ற காய்கறிகளோ, ஊடு பயிர்களோ அந்த அளவுக்கு லாபம் கொடுக்காது என்பதை வெற்றிக்கு காத்தன் எடுத்துரைத்து இருக்க, அதற்கேற்றபடி அடுத்து என்ன என்று சிந்திக்கத் தொடங்கி இருந்தான் அவன்.
இதில் இடையில் ஒருநாள் கிணற்றில் கிடந்த மீன்களை பிடித்து, உள்ளூர் வியாபாரியிடம் கொடுக்க, அது ஒரு ஐயாயிரம் கிடைத்து இருந்தது. இப்படி எல்லாமே ஏதோ ஒரு வகையில் சில்லறை லாபம் கொடுக்குமே தவிர, நிரந்தர வருமானத்திற்கு தான்தான் வழி தேட வேண்டும் என்பது புரிந்திருந்தது வெற்றிக்கு.
உள்ளூரில் சக்தியை மீறி யாரும் அவனுக்கு வேலை கொடுப்பதாக இல்லை எனவும், அக்கம்பக்கத்தில் உள்ள ஊர்களில் வேலை தேடிக் கொண்டிருந்தான்.
இந்த நிலையில் தான் அவன் நண்பன் அவன் தந்தையை வைத்து பேசி, உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் கார் ஓட்டும் வேலையை வெற்றிக்கு வாங்கி கொடுத்திருக்க, புதிய வேலை கொடுத்த நம்பிக்கையில் இன்னும் ஒரு உத்வேகம் வந்திருந்தது அவனுக்கு.
தேங்காய் விற்ற பணத்தில் தேனருவிக்கு ஒரு அலைபேசியை வாங்கி கொடுத்திருந்தான். அவனுக்கு அவன் நண்பன் பழைய அலைபேசி ஒன்றை கொடுத்திருக்க, தற்சமயத்துக்கு அது போதும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
முதல் நாள் வேலைக்கு புறப்படும் அவசரத்திலும் மனைவியிடம் ஆயிரம் பத்திரங்கள் சொல்லிக்கொண்டு அவன் கிளம்ப, வேலை அத்தனை சுலபமாக இல்லை. காலையில் அந்த அரசியல்வாதியுடன் கிளம்பினால் அன்று மொத்தமுமே அங்கே, இங்கே என்று அவருடன் சுற்றிக் கொண்டே தான் இருந்தான்.
கார் ஓட்டுவது பிடித்தம் தான் என்பதால் அது கடினமாக இல்லை. அந்த அரசியல் பிரமுகரும் நல்ல மனிதராக இருக்க, உணவு, நேரத்திற்கு ஏற்ப டீ, இதர சலுகைகள் என்று எல்லாமே நன்றாகத் தான் இருந்தது.
ஆனால், அவனுக்கு இருந்த ஒரே சங்கடம் அவர் உள்ளூர்க்காரர் என்பது தான். உள்ளூரில் நடக்கும் நல்லது கெட்டது என்று அத்தனைக்கும் மனிதர் சென்று நிற்க, அங்கே இருப்பவர்களின் பார்வை வெற்றியின் மீது அழுத்தமாக படியும் போதெல்லாம் செய்த தவறு குறுகச் செய்கிறது அவனை.
அதிலும் சிலர், “நீ சக்தி தம்பிதானே, நீ சொக்கு பேரன் தானே, நீ தங்கம் மவன் தானே” என்று போகிற போக்கில் ஏதோ ஒன்றை கேட்டு வைத்து விட்டு, ‘உனக்கு இது தேவையா’ என்று ஒரு பரிதாபப் பார்வையும் பார்த்து வைத்து விட்டுப் போக, இதை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை அவனுக்கு.
பல நேரங்களில் காரை விட்டு தலையைக் கூட வெளியில் நீட்டாமல் தான் அமர்ந்திருக்கிறான். சில நேரங்களில் வண்டியை நிறுத்திவிட்டு வருவதாக கூறி வெகுதூரம் தள்ளி நின்று கொள்கிறான். அவராக, அழைத்தால் மட்டுமே அருகில் செல்வது.
அவருக்கும் வெற்றியை பற்றிய அத்தனை விஷயங்களும் அரசல்புரசலாக தெரிந்தே இருக்க, அவரும் பெரிதாக தோண்டுவதில்லை. அவனது தயக்கம் புரிந்து அவனுக்கு ஏற்றபடியே வளைந்து கொடுத்துக் கொண்டார்.
இப்படியே ஒருவழியாக ஒளிந்து மறைந்து வெற்றி முதல் வாரத்தை கடந்துவிட, அன்றிரவு வேலை முடிந்து கிளம்பும் நேரம் அவனை அழைத்து ஒரு கவரை அவன் கையில் கொடுத்தார் அவனது முதலாளி செண்பகபாண்டியன்.
“ஐயா” என்று வெற்றி வாங்காமல் நிற்க,
“உன் சம்பளம் தான் வச்சுக்கோ” என்று சிரித்தான் செண்பகப்பாண்டியன்.
“புரியலையே ஐயா. என் வேலை எதுவும் புடிக்கலையா. அதுதான் கணக்கு முடிச்சு விட பார்க்கிறிங்களா” என்று படபடவென வெற்றி கேட்டுவிட்டான். அவன் பயம் அவனுக்கு. இருக்கும் வேலையை தொலைத்துவிட்டு எங்கே சென்று நிற்பது.
செண்பகப்பாண்டியன் சிரித்தபடி, “வாங்குடா மொத.” என்று அதட்டி அவன் கையில் திணித்துவிட்டு, “புது கல்யாணம். இப்போதான் வேலைக்கு சேர்ந்து இருக்க. ஏதாவது செலவு இருக்கும்ல. அதுக்குதான் கொடுத்தேன். கையில வச்சுக்கோ. ஒழுங்கா நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு வந்து சேரு” என்று துரத்திவிட, “ரொம்ப நன்றிங்க. சரியா வந்துடறேன்” என்று கூறி கிளம்பினான் வெற்றி.
கையில் கிடைத்த பணத்தை நல்ல பிள்ளையாக அப்படியே வாங்கி வந்து தேனருவியின் கையில் கொடுக்க, அவள் முகம் மகிழ்ந்தாலும், அவன் இருந்த நிலையை நினைத்துப் பார்த்து கவலை கொண்டது.
நொடியில் மாறிய மனைவியின் முகம் கண்டவன், “பைத்தியம் போல யோசிக்காத தேனு. ரெண்டு பேருக்குமே கஷ்டம் தான். உன் வீட்ல உன்னை எப்படி வளர்த்தினாங்க? இப்போ எப்படி இருக்க? எல்லாம் இருக்கும் தான். அதெல்லாம் யோசிக்கக்கூடாது கொஞ்ச நாளைக்கு” என்று விட்டு குளிக்கச் சென்றான்.
அடுத்தநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் காத்தனின் வீட்டிற்கு முன்னே நின்றவன், “அண்ணே. குட்டை ஒன்னு வெட்டி விடணும். ஆளுக்கு சொல்லுங்க” என,
“அதுக்கு ஏன் தம்பி ஆளு, நானே போதும்.” என்றவர், “குட்டை எதுக்கு தம்பி” என,
“ஒரு ஏக்கருக்கு வெட்டணும்ண்ணே. கொஞ்சம் ஆளுங்களை சேர்த்துக்கோங்க. என்ன கூலியோ கொடுத்திடலாம். சீக்கிரம் முடிக்கணும். நான் இருக்கமாட்டேன். நீங்க தான் பார்க்கணும்” என்றுவிட,
“மீனுக்கா தம்பி” என்றார் காத்தன்.
வெற்றியின் சிரிப்பில், “நல்ல யோசனை தம்பி. நான் உடனே முடிச்சுடறேன்” என்றார் உற்சாகமாக.
அவர் சொன்ன வேகத்தில் வேலையிலும் இறங்கிவிட, அடுத்தடுத்த நாட்களில் செயற்கை குளம் ஒன்று அழகாக தயாராகி இருந்தது.
அதில் உணவுக்காக வளர்க்கப்படும் மீன்குஞ்சுகளை வாங்கி விட்டவன், கூடவே பத்து நாட்டு கோழிகள் மற்றும் வாத்துகளையும் வாங்கிவிட அவன் செயல்கள் காத்தனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
வெற்றி ஒருங்கிணைந்த விவசாயத்தில் ஈடுபட்டு வந்த பெரியவர் ஒருவரின் ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படியே அந்த ஐந்து ஏக்கர் நிலத்தை லாபம் கொழிக்கும் இடமாக மாற்ற போராடிக் கொண்டிருக்கிறான்.
அவன் பட்டியலில் இன்னும் நாட்டு மாடுகள், கறவை பசுக்கள், வான் கோழிகள் என்று சில இருக்க, இப்போதைக்கு கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப, அடியெடுத்து வைத்து கொண்டிருந்தான் அவன்.
இந்த நிலையில், சக்தியின் நிச்சயம் வேறு நெருங்கிக் கொண்டிருக்க, ‘வீட்டிலிருந்து யாரவது அழைத்து விட மாட்டார்களா’ என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது.
ஆனால், இதோ இரண்டு நாட்களில் நிச்சயம் என்ற நிலை வந்தபின்னும் கூட யாரும் அவனை அழைக்கவே இல்லை. இருக்கும் கவலைகளோடு அதுவும் சேர்ந்து கொள்ள, சற்று சோர்வாகத் தான் காணப்பட்டான் வெற்றி.