நீ மட்டும் நிஜமாக 6

இரவு பதினோரு மணி அளவில் தன் வீட்டு வாசலில் வந்து நின்ற அண்ணனையும், தந்தையையும் எதிர்பார்க்கவே இல்லை வள்ளியம்மை. பதறிப் போனவராக, “என்னப்பா… என்ன ஆச்சு? இந்த நேரத்துல… யாருக்கும் எதுவும் முடியலையா?” என்று படபடத்தார்.

“ஆத்தா… ஒண்ணுமில்ல தாயி. என் மக வீட்டுக்கு நான் வர நேரமென்ன காலமென்ன? உன்னை பார்க்கணும்னு தோணுச்சு. கிளம்பி வந்துட்டேன். அவ்ளோதான்மா. என் மருமகன் எங்கே?” என்று பெரியவர் வள்ளியை சமாதானப்படுத்த, 

“ஒன்னும் பிரச்சனை இல்லலப்பா” என்று அப்போதும் சந்தேகமாக தான் கேட்டார் வள்ளி.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல வள்ளி. நீ போய் மச்சானை கூட்டிட்டு வா” என்று தங்கப்பாண்டியன் கூற,

“இதோ…” என்றபடி படியில் ஏறினார் வள்ளியம்மை.

முத்தையனும் அந்த நேரத்தில் அவர்களை எதிர்பார்க்கவில்லை. விழித்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால், இறங்கிச் செல்ல மனம் வரவில்லை. ‘என் பொண்ணை விட்டுட்டாங்க‘ என்று ஆதங்கம் அவருக்கு.

இப்போது வள்ளியம்மை வந்து அழைத்தபின்னும் அவர் யோசனையுடன் அமர்ந்தே இருக்க, “என்ன செஞ்சு வச்சீங்க?” என்று நின்றார் வள்ளி.

“நான் என்னடி பண்ணேன்? போய் உன் அண்ணனை கேளு.” என்று அவர் வாய்விட,

“அப்போ உங்க ரெண்டு பேருக்கும் தான் பிரச்சனையா? அதுதான் அப்பா இந்த நேரத்துல அண்ணனை கூட்டிட்டு வந்து நிற்கிறாரா?” என்றார் வள்ளியம்மை.

“நான் பிரச்சனை எதுவும் பண்ணல வள்ளி. உன் அண்ணன் அவன் பிள்ளைக்கு பொண்ணு பார்க்கிறான். இதுல நான் என்ன பிரச்சனை பண்றது?” 

“யாருக்கு பொண்ணு? சக்திக்கா?” என்று வள்ளி கேட்டதற்கு முத்தையா தலையை மட்டும் அசைக்க, வள்ளிக்கும் இது அதிர்ச்சி தான். தன்னிடம் யாரும் சொல்லவே இல்லை என்பது அவருக்கு. ஆனாலும், எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

“எழுந்து வாங்க” என்று கணவரிடம் கூறிவிட்டு கீழே இறங்கிவிட்டார். ‘நீ வந்தாக வேண்டும்‘ என்ற மனைவியின் தொனி புரிய, அவர் இறங்கிய சில நிமிடங்களில் முத்தையா கீழே வந்தார்.

இதற்குள் வள்ளியம்மை வந்தவர்களுக்கு காஃபி வைத்து கொடுத்திருக்க, முத்தையா வந்து அமரவும், “தொந்தரவு பண்ணிட்டேனா மருமகனே?” என்றுதான் ஆரம்பித்தார் சொக்கநாதர்.

“என்ன மாமா நீங்க?” என்று மருமகன் தழைந்துவிட,

“தப்பில்ல முத்தையா. யார் மனசும் சங்கடப்படக் கூடாதுன்னு யோசிக்கிறவன் நீ. என் மருமகனுக்கு கோபம் வந்தா கூட அதுல ஒரு நியாயம் இருக்கும். என்ன செய்ய? நம்ம வீட்டு ஆளுங்களுக்கு கிறுக்கு பிடிச்சு போயிருக்கு. அதுவும் உன் அத்தைக்கு பேரன் கல்யாணம் நின்னு போனதுல, உலகமே சுத்தாம நின்னுப் போச்சு. அதுக்கு எதையாவது பண்ணிட மாட்டோமான்னு கிடந்து தவிச்சுட்டு கிடக்கிறா?”

“சக்தி கல்யாணம் மட்டும் தான் நின்னு போச்சா அப்பா?” என்று சரியான இடத்தில் வள்ளி வாய் திறக்க,

“அம்மா” 

” என் மக வாழ்க்கைப்பா. வெற்றிக்கு தான் மீனாட்சின்னு சொல்லி சொல்லியே பழக்கிட்டிங்க. அவ மனசுல என்ன நினைச்சு இருந்தாளோ, இல்ல, இப்ப என்ன நினைப்புல இருக்காளோ ன்னு கிடந்து துடிச்சுட்டு இருக்கேன் நான். சக்தி கல்யாணம் நின்னுப் போனது எங்களுக்கும் வருத்தம் தான்பா. ஆனா, அவனுக்கு அடுத்து ஒரு நல்லது பண்ண யோசிக்கும்போது என் குடும்பத்துக்கு என் நியாபகமே வரலையா” என்றுவிட்டார்.

“வள்ளியம்மை” என்று தங்கப்பாண்டியன் தொடங்க, 

“நீ பேசாத அண்ணே. வெற்றி இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்து நின்ற பிறகும் கூட, உன்னை ஒரு வார்த்தை நான் குறையா பேசலையே. என் பொண்ண நினைக்கலையே. நீ ஏன் என்னை நினைக்காம போன” என்று பொட்டில் அடித்துவிட்டார் வள்ளியம்மை.

தங்கபாண்டியன், “வள்ளியம்மை என்னை பேச விடு. அம்மா போட்டோவை காட்டி விசாரிக்க சொல்லவும், சட்டுன்னு எடுத்து மச்சான்கிட்ட நீட்டிட்டேன். அவ்ளோதான். மத்தபடி உன் அளவுக்கு எல்லாம் யோசிக்கலம்மா. என்னைக்கு நான் உன்னை பிரிச்சு பார்த்திருக்கேன். உனக்கு அண்ணனை தெரியாதா” என்று கலங்க, 

“விடுங்க மச்சான்” என்று முத்தையா தான் ஆற்றுப்படுத்தினார் அவரை.

“சொல்லுங்க மாமா. என்ன செய்யணும் நான்? பொண்ணு குடும்பத்தை பத்தி விசாரிக்கணுமா? பொண்ண பத்தி விசாரிச்சு சொல்லணுமா” என்று சொக்கநாதரிடமும் அவர் கேட்க, 

“பொண்ணு கொடுத்து என் வம்சத்தை வாழ வைக்கணும்” என்று மருமகனின் கையைப் பிடித்துக் கொண்டார் சொக்கநாதர்.

மருமகனுக்கு அதுவே குளிர்ந்து போனது. “என்ன மாமா என்கிட்டே…” என்று அவர் பேச்சு வராமல் தடுமாற, 

“ஆமாய்யா. எனக்கு இதுதான் எண்ணம். எல்லாம் கொஞ்சம் அடங்கியதும் நிதானமா உன்கிட்ட பேசலாம்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள, என்னென்னமோ நடந்துடுச்சு.” என்று அவர் தன்னிலையை விளக்க,

“விடுங்க மாமா” என்றார் முத்தையா.

“பதில் ஒன்னும் சொல்லலையே மருமகனே” என்று அவர் விடாப்பிடியாக நெருக்க,

“இதுல அவர் சொல்ல என்ன இருக்குப்பா. என் மக விருப்பம் தான் இனி எல்லாம். இனியொரு முறை அவ விஷயத்துல நாங்களா எதுவும் முடிவெக்கிறதா இல்ல. அவ என்ன சொல்றாளோ அதுதான்.” என்றுவிட்டார் வள்ளி.

“அம்மாடி”

“அதுதான்ப்பா சரியா இருக்கும். அவ மேல படிக்க போறதா வேற சொல்லிட்டு இருந்தா. ஏற்கனவே வெற்றி விஷயத்துல அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியல. இதுல நாங்களா என்ன வாக்கு கொடுக்கறது உங்களுக்கு. நீங்க எதுவா இருந்தாலும் உங்க பேத்தி கிட்ட பேசிக்கோங்க” என்று முடித்துவிட்டார் வள்ளியம்மை.

முத்தய்யனுக்கும் இப்போது மனைவி பேசுவது தான் சரியென்று பட, அவரும் மனைவியின் பேச்சுக்கே தலையாட்டினார்.

சொக்கநாதரின் முகம் சற்று வாடினாலும், மகள் சொல்வது தான் சரியென்றுப் பட்டது. “வாழ வேண்டியவள் அவள் தானே?”.

“மீனுக்குட்டி எங்கே?” என்று அவர் கேட்க, 

“அவ அப்போவே தூங்க போயாச்சு. நான் காலையில அவகிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்றேனேப்பா.” என்று பிடிகொடுக்காமல் பேசினார் வள்ளியம்மை.

“இன்னும் என்ன தாயி” என்று சொக்கநாதர் மகளைப் புரிந்து கொண்டவராக கேட்க, 

“பயமா இருக்குப்பா. என் மக வாழ்க்கை என்னாகுமோன்னு பயந்து வருது. அவ மனசை பெத்தவளா மொத நான் புரிஞ்சிக்கிறேன். பிறகு, நீங்க யார் வேணாலும் பேசுங்க” என்றார் வள்ளியம்மை. இதைச் சொல்லும்போதே அவருக்கு கண்கள் கலங்கிவிட, முத்தையா தலையைக் குனிந்தபடி தான் இருந்தார்.

தங்கபாண்டியனுக்கு தங்கையின் நிலை புரிய, “இங்கே பாரு வள்ளியம்மை. வெற்றி விஷயத்துல நடந்தது நாம யாரும் எதிர்பார்க்காதது. ஆனா, சக்தி விஷயம் அப்படி இல்ல. எப்போதுமே மீனாட்சியோட அவனை சேர்த்துப் பார்த்ததே இல்லை. அவன் கல்யாண விஷயத்துல மீனாட்சியை யோசிக்காம போனதுக்கு அது ஒண்ணுதான் காரணம். மத்தபடி, எனக்கு உறவுன்னு சொல்லிக்க ஆயிரம் பேர் இருந்தாலும், அத்தனையும், என் தங்கச்சி வீட்டுக்காரனை தாண்டி தான். உனக்கும் இது தெரியும். சும்மா, வீம்புக்கு பிடிவாதம் பிடிக்காத.”

“சக்தி கல்யாண விஷயத்துல கூட ஏன் இத்தனை அவசரம்னு தான் தோணுது எனக்கு. ஆனா, உன் அம்மாவும், அண்ணியும் ஒரே பிடியா நிற்கிறாங்க. அவங்க படுத்தின பாட்டுல நான் நேரா வந்து உன் வீட்டுக்காரன்கிட்ட நின்னுட்டேன். எனக்கும் இந்த முத்தய்யனை விட்டா யார் இருக்கா” என்று எடுத்து கூறினார் அவர்.

“அட ஏன் மச்சான் இதெல்லாம். அதெல்லாம் அவளே பேசிட்டு நல்ல முடிவா தான் சொல்லுவா. இல்லேன்னாலும், நீயே காலையில வந்து உன் மருமககிட்ட பேசு. விடுங்க இதோட” என்றுவிட்டார் முத்தையா.

வள்ளியம்மை கணவன் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாமல் அடங்கிவிட, தங்கப்பாண்டியன், “சரி மச்சான். அப்போ நாங்க கிளம்பட்டுமா?” என்று எழ, 

“மீனாட்சியை கட்டிக்க விருப்பமான்னு முதல்ல சக்திகிட்ட கேளுங்கப்பா. அவன் சம்மதம் சொன்னா, நான் மீனாட்சிக்கிட்ட பேசறேன்” என்றார் வள்ளியம்மை.

அவர் கவலை அவருக்கு. சொக்கநாதருக்கும் மகளின் நிலை புரிய, “நானே சக்திகிட்ட பேசறேன்மா. பேசிட்டு உன்கிட்ட வரேன்” என்று விட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

வள்ளியம்மை அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தவர் சோபாவில் அமர்ந்துவிட, “என்ன வள்ளி” என்று முத்தையா அருகில் அமரவும், 

“இதுக்குதான் குட்டிப் போட்ட பூனையாட்டமா நடந்துட்டு இருந்திங்களா?” என்றார்.

“கொஞ்சம் மனசு சங்கடப்பட்டுப் போச்சு வள்ளி” என்று அவர் மறைக்காமல் கூறிவிட, 

“இது சரியா வருமாங்க” என்று சந்தேகமாகவே கேட்டார் வள்ளி.

“ஏன் வள்ளி. நம்ம சக்தி தானே”

“வெற்றியையும் இப்படித்தானே நம்பினோம்.”

“வெற்றி விஷயம் வேற. சக்தி வேற வள்ளி”

“உங்க அப்பா தான் பேசறேன்னு சொல்லி இருக்காரே. அதோட சக்தி எனக்கு தெரிஞ்சு நிதானமானவன். நாலையும் யோசிச்சு நல்ல பதிலா சொல்லுவான். நீ குழப்பிக்காத” 

“சக்தியைப் பத்தி எனக்கு தெரியும்ங்க. ஆனா, மீனாட்சிக்கு யோசிக்கும்போது தான் மனசு தடுமாறுது. அவனோட பொறுப்புக்கும், இவளோட விளையாட்டு தனத்துக்கும்…” என்று அவர் நிறுத்த, 

“அதெல்லாம் உன் மருமகன் பார்த்துக்குவான். வா வந்து படு” என்று மனைவியை அழைத்துச் சென்றார் முத்தையா.

மகளிடம் சொல்லி வந்தது போலவே, அடுத்தநாள் பேரனிடம் பேசுவதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் சொக்கநாதர். தங்கப்பாண்டியன் மனைவியிடம் நேற்றிரவு நடந்த அத்தனையையும் கூறியிருக்க, விஷயம் அவர் வழியே மனோன்மணிக்கும் தெரிய வந்திருந்தது.

அவரையும் காலையிலேயே சொக்கநாதர் வைத்து வாங்கியிருக்க, ஆள் அமைதியாகி விட்டார். சொக்கநாதர் ஒரேடியாக, “என் பேரன் கல்யாணத்தை நான் பார்த்துக்கறேன் மனோ. வீணா, பொண்ணு பார்க்கிறேன், மாப்பிளை பார்க்கிறேன்னு ஆரம்பிக்காத” என்று விட, 

“இதைத் தானே நான் முதவே சொன்னேன். அப்போவே என் பேத்தி இருக்கான்னு ஒரு வார்த்தை வந்ததா உங்க வாயில. நீங்க அமைதியா இருந்தா, உங்களோட சேர்ந்து நானும் சோகம் பிடிக்கணுமா? ஏன், உங்க மக மட்டும் என்ன? சக்தி கல்யாணம் நின்னுப் போனது தெரியாது.

ஏன்னே கவலைப்படற? என் பொண்ணு இருக்கா. குறிச்ச தேதில கல்யாணத்தை முடின்னு சொன்னாளா.”

“என்ன பேசற மனோ. ஏற்கனவே வெற்றிக்குன்னு பேசிட்டு இப்போ சக்தியை கேட்பாளா?”

“இப்போ மட்டும் எப்படி கேட்டா?”

“என் பொண்ணு கேட்கல. நான் கேட்டேன். என் மருமகன்கிட்ட”

“எல்லாம் ஒத்த தாளத்துக்கு ஆடுற ஆட்கள் தான். என் பேத்தியைப் பத்தியும் எனக்கு தெரியும். என் பேரனையும் எனக்கு தெரியும். என் பேத்தி மனசுல துளிகூட வேற எண்ணம் இல்ல. வெற்றி பண்ணது அவளை எந்த வகையிலேயும் பாதிக்காது. சட்டுபுட்டுன்னு பேசி முடிவெடுத்து, என் பேரன் கல்யாணத்தை நடத்தி முடிக்கிற வழியைப் பாருங்க.”

“இல்ல, இப்படியே பேசி நீங்களும், உங்க மகளும் நாளைக் கடத்தினா, நிச்சயம் என் பேரனுக்கு வேற ஒருத்தியை பிடிச்சு கட்டி வச்சுடுவேன்” என்று மிரட்டிச் சென்றார் மனோன்மணி.

‘கிழவி ஒரு முடிவோட தா இறங்கியிருக்கா போல‘ என்று தனக்குள் முனகியபடி, பேரனின் ஷோரூமில் வந்து அமர்ந்திருந்தார் சொக்கநாதர்.

“சக்திவேல் எங்கோ வெளியேச் சென்றிருக்க, இவர் வந்து ஒருமணி நேரம் கழிந்தபின் தான் கடைக்கு வந்தான் அவன்.

வந்ததும் வராததுமாக, ” என்ன தாத்தா. என்ன பேசணும்?” என்று பேரன் கேட்க,

“என்னப்பா”

” ஒருமணி நேரமா இங்கே உக்காந்துட்டு இருக்கீங்க. நிச்சயம் முக்கியமான விஷயமா தான் இருக்கும். சொல்லுங்க” என்று பேரன் கேட்கவும், ‘என்ன சொல்ல‘ என்று விழித்தார் சொக்கநாதர்.

பேரன் அவரையே பார்த்திருக்க, “பேசனும்தான் சக்தி. பேசித்தான் ஆகணும்” என்று அவர் மென்று விழுங்க, 

“பாட்டி நல்லா வேப்பிலை அடிச்சு விட்டு இருக்காங்க போல” என்று சிரித்தான் பேரன்.

“என்னை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்காடா.” என்று கோபம் கொண்டவர், “உன் கல்யாண விஷயமா என்ன தான் முடிவு எடுத்திருக்க” என்று பேரனிடம் கேட்டு வைக்க, 

“என் முடிவு இருக்கட்டும். நீங்க என்ன திட்டம் போட்டு இருக்கீங்க? அதை சொல்லுங்க”

“என்னடா கொள்ளைக் கூட்டமா நடத்துறேன். திட்டம் போட, எனக்கு என் பேரன் கல்யாணம் நடக்கணும். அம்புட்டுதேன்”

“அதுதான் மாப்பிளையோட சேர்ந்து சதித்திட்டம் தீட்டிட்டு இருக்கீங்களா”

“என்ன சதி. என் பேரனுக்கு என் பேத்தியை கட்டி வைக்கணும்னு ஆசைப்படறேன். அதே ஆசை என் மருமகனுக்கும் இருக்கு. இதுல சதி எங்கே இருந்து வந்தது சக்தி?” என்று சொக்கநாதர் கேட்க,

“சின்னப்பொண்ணு தாத்தா” என்றான் பேரன்.

“என்னடா வயசு. உன் பாட்டிக்கும் எனக்கும் 12 வயசு வித்தியாசம்.”

“நீங்க கல்யாணம் பண்ணது எந்த வருஷம். இது எந்த வருஷம்? பழைய கதை எல்லாம் பேசாதீங்க தாத்தா. அவளோட விருப்பம்ன்னு இருக்குல்ல” 

“அதெல்லாம் உனக்கு எதுக்கு. என் பேத்திகிட்ட நான் பேசிக்கிறேன். நீ உன் விஷயத்தை பேசு.”

” எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் தாத்தா”

“சரி. எப்போ பண்ணிக்கிறதா உத்தேசம். அதை சொல்லு.”

“கொஞ்ச நாள் போகட்டுமே.”

“ஒரு மாசமா, வருஷமா, இல்ல இன்னும் கூடவா. எனக்கு நேரம் காலத்தோட சொல்லு சக்தி”

“அதெப்படி தாத்தா சொல்ல முடியும்? நான் வர்றவளை வச்சு வாழனும் இல்ல. அதுக்கு நான் தயாராக வேண்டாமா?”

“வாழனும்ன்னு எண்ணம் இருக்கு இல்ல. அதுவே போதும். மத்தது தானா நடக்கும். நீ அதையெல்லாம் யோசிக்காத. இப்போ மீனாட்சி விஷயத்துக்கு வா. பிடிக்குது. இல்ல. பட்டுன்னு உடைச்சுடு” என்று அவர் ஊக்க. 

“எனக்கு அவமேல எந்த எண்ணமும் கிடையாது தாத்தா. வீட்ல ஓடித் திரியற ஒரு குட்டி பொண்ணா தான் பார்த்து இருக்கேன். அவளை எப்படி?”

“இது மட்டும் தானே சக்தி.” என்றவரை சக்தி நிமிர்ந்து பார்க்க,

“இல்ல, வெற்றிக்கு பேசி வச்சவன்னு” என்று தாத்தா முடிப்பதற்குள்

“தாத்தா” என்றுவிட்டான் சக்தி.

“சும்மா இல்ல சக்தி. கல்யாண விஷயம். ஒரு பக்கம் என் பேரன். இன்னொரு பக்கம் என் பேத்தி. ரெண்டுமே உசுரா போச்சே. நான் எல்லாத்தையும் விசாரிச்சுக்கணும் இல்ல.” 

“சும்மா எதையாவது யோசிக்காதீங்க தாத்தா.” என்று பேரன் ஆறுதல்படுத்த, 

“ஏற்கனவே வெற்றி விசயத்துல நான் நினைச்சது பொய்யா போச்சுதே சக்தி. உன் கல்யாணமும் இப்படி நிச்சயம் வரைக்கும் வந்து… நான் எப்படி யோசிக்காம இருக்க முடியும்? என் பேரப்பிள்ளைங்க வாழ்க்கை என்னாகும்ன்னு தெரியாம நிற்க வச்சுட்டாளே என் தாய் மீனாட்சி” என்று பெரியவர் கலங்க,

“ஏன் தாத்தா இப்படி எல்லாம் பேசறீங்க. என்ன நடந்து போச்சு இப்போ?”

“அய்யா சத்தி. என் மக பாவம்யா. அவ பொண்ண என் வீட்டுல வாழ வச்சு பார்க்கணும்னு ஆசைப்பட்டுட்டா. இப்போ நடக்காம போயிடுமோன்னு கிடந்து மருகிட்டு இருக்கா. அவ வெளியே சொல்லாம போனாலும், மலையளவு வருத்தம் அவளுக்குள்ளே இருக்கு. நீ சொல்ற வார்த்தையில எல்லாம் மறைஞ்சு போகும் சக்தி” என்று சொக்கநாதர் வருத்தமாக கூறிவிட, 

“என்னவோ பண்ணுங்க போங்க. ஆனா, மீனுவை கேளுங்க மொத. அதோட கல்யாணத்தையும் ஒரு ஆறு மாசம் கழிச்சு பார்த்துக்கலாம்” என்றுவிட்டான் சக்தி.  

சொக்கநாதருக்கு அவன் இந்தளவு இறங்கி வந்ததே போதுமாக இருக்க, அதற்குமேல் பேரனை நெருக்காமல் கிளம்பினார் அவர்.

ஆனால், அவருக்கு தெரியாது. ஆறுமாதம் இல்லை, அடுத்த மாதத்திலேயே திருமணம் முடிக்க வேண்டி வரும் என்று.