நீ மட்டும் நிஜமாக 3

காவல் நிலையத்தில் இருந்து நேரே தங்களுக்கு சொந்தமான அந்த தோட்டத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் வெற்றி. அந்த தோட்டத்தில் இருந்த ஓட்டு வீட்டின் படியில் அவன் அமர்ந்திருக்க, அவன் அருகில் தேனருவி. இருவருக்குமே அடுத்து என்னவென ஒன்றும் புரியாத நிலைதான். பார்த்து பழகி, காதலித்து, இன்று வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளவே முடிவெடுத்து இருந்தாலும், அருகில் இருப்பவரிடம் பேசவே பயந்த நிலையில் தான் இருந்தனர் இருவரும்.

வெற்றிக்கு இவளை எப்படி வாழ வைக்கப் போகிறோம் என்ற பயம். உண்மையில் பயந்துதான் இருந்தான் அவன். சில நாட்களுக்கு முன்பு வரை எந்த பொறுப்பும் இல்லாமல், பெற்றவர்கள், பெரியவர்களின் அரவணைப்பில் சீராடிக் கொண்டிருந்தவன் அவன். தாத்தா தொடங்கி தங்கை வரை அத்தனைப் பேருக்கும் பிடித்தமானவன் வெற்றி.

பெரியவன் சக்தி எப்போதுமே சற்று இறுக்கத்துடன் தான் காணப்படுவான் என்பதால், வள வள வென்று பேசி, சிரித்தபடி, எல்லாரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் வெற்றியை இன்னமும் சிறுபிள்ளையாக தான் நினைத்துக் கொண்டிருந்தது அவன் குடும்பம்.

அப்படிப்பட்ட தன் குடும்பம் தன்னை இப்படி மொத்தமாக ஒதுக்கிவிட்டது அதிர்ச்சிதான் அவனுக்கு. கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை அவன். தந்தை தான் கொஞ்சம் கோபப்படுவார் என்று நினைத்திருக்க, மொத்த குடும்பமும் தன்னை விட்டுச் செல்லும் என்று நினைக்கவில்லை அவன்.

வேண்டுமென்று எதையும் செய்யவில்லையே என்று அவன் மனம் மறுகிக் கொண்டிருக்க, என்றாவது ஒருநாள் புரிந்து கொள்வார்கள் என்று தன்னையே தட்டிக் கொடுத்துக் கொண்டான் அவன்.

ஆனால், அவனுக்கு மிகப்பெரிய கவலை அன்றாட வாழ்க்கைக்கு என்ன செய்வது என்பதை குறித்து தான். இரவு உணவிற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் நிலை தான் இருவருக்கும்.

உணவு முடிந்தாலும், உடுத்தியிருக்கும் ரத்தம் படிந்த ஆடைகளை தவிர்த்து மாற்று உடை கூட கையில் இல்லாத நிலை. கையில் இருந்த அலைபேசியும் சக்தி அடித்ததில் எங்கோ சென்று விழுந்திருக்க, யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலைதான்.

இவன் அடுத்து என்ன என்று சிந்தித்தபடி இருக்க, அத்தனையும் தன்னால் தான் என்று முடிவு செய்து கண்ணீர் விட்டு கரையத் தொடங்கியிருந்தாள் தேனருவி. வெற்றி முதலில் அவள் அழுகையை கவனிக்கவே இல்லை.

சிறிது நேரம் கழித்தே அவள் அழுவதை உணர்ந்தவன், “உனக்கு என்ன பிரச்சனை தேனருவி. எதுக்காக இப்படி ஓயாம அழுதுட்டு இருக்க. என்ன உன் அப்பா சொன்ன மாதிரி உன்னை கடத்திட்டா வந்துட்டேன். எதுக்கு அழற நீ”என்று அதட்டிவிட்டான்.

“சாரி வெற்றி. சாரி… என்னாலதான் எல்லாமே. உன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துட்டேன்.” என்று அவள் புலம்ப,

“வாயை மூடுடி. கெடுத்துட்டாளாம். என்கிட்டே சொன்னதால தான் உயிரோட இருக்க. இல்ல, உன் அப்பன்காரன் கொன்னு இருப்பான். பிறகு, நானும் தேவதாஸா தெருத்தெருவா தான் அலைஞ்சு இருக்கணும். சரியான நேரத்தில் வெளியே வந்ததால தான் இங்கே இப்படி உயிரோட உட்கார்ந்துட்டு இருக்கோம் தேனு. சில முடிவெல்லாம் அந்த நேரம் கஷ்டமா இருந்தாலும், சரியா தான் இருக்கும். நம்ம கதையும் அப்படிதான்.”

“என் வீட்டை பத்தி எல்லாம் யோசிக்காத. அவங்களுக்கு அண்ணன் கல்யாணம் நின்னுப் போச்சுன்னு அந்த கோபம். நாம சொல்றத கேட்கிற பொறுமை இல்ல. போகப் போக சரியாகிடும். நான் இப்போ அடுத்து என்ன செய்யுறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.” என்றான் வெற்றி. 

“பசங்களுக்கு ஒரு போன் போடணும். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன். நீ இங்கே இரு” என்றபடி அவன் எழ, அவனது நண்பர்கள் மூவர் அவனைத் தேடி அங்கேயே வந்துவிட்டனர்.

“நான் இங்கே இருக்கறது எப்படிடா தெரியும்?” என்று வெற்றி விசாரிக்க,

“மீனாட்சி தான்டா சொல்லுச்சு. ஊருக்கு வந்திருக்கு. உங்க அப்பாவை பார்க்க” என்று அவன் நண்பன் விவரம் சொல்லவும் மெல்ல தலையசைத்துக் கொண்டான் வெற்றி.

வண்டியில் இருந்து சில பைகளை எடுத்து நீட்ட, என்ன என்பது போல் வெற்றி பார்க்கவும், “மீனாட்சி தான்” என்றனர் மீண்டும்.

“இதையும் கொடுக்க சொன்னா” என்று கொஞ்சம் பணத்தையும் அவர்கள் கொடுக்க, தன் அத்தை மகளை நன்றியுடன் நினைத்துக் கொண்டான் வெற்றி.

“ஏன் அவ வர மாட்டாளாம்மா” என்று வெற்றி கேட்க,

“உன் அண்ணனை மீறி வர முடியுமா?” என்றான் அவன் நண்பன்.

சிறிது பேசிக் கொண்டிருந்துவிட்டு இருவருக்குமான இரவு உணவையும் வாங்கி வந்து கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்ப, குளித்து முடித்து, வயிறார உண்டு, இருவரும் படுக்கையில் விழ, அப்படி ஒரு நிம்மதி வெற்றிக்கு.

என்னவோ இத்தனை நாட்கள் இருந்த அச்ச உணர்வு இல்லை. மாறாக, எங்கள் இடம் என்ற தைரியம் பிறக்க, அப்படி ஒரு உறக்கம் இருவருக்கும்.

தனிமை கொஞ்சமும் அவர்களை அசைத்துப் பார்க்கவில்லை என்பதே உண்மை. இருவருக்குமே திருமணம் முடிந்த அந்த பிரத்யேக உணர்வுகள் எல்லாம் இல்லை. காலையில் காவல் நிலையத்தில் வைத்தே ஒரு மஞ்சள் கயிற்றை கட்டிதான் அழைத்து வந்திருந்தான்.

ஆனால், என்னவோ இப்போது வேறு எதையும் நினைக்காமல் அமைதியாக உறங்க தொடங்கினர் அந்த கணவனும் மனைவியும். 

நேற்று இரவு மதுரைக்கு வந்து சேர்ந்திருந்த மீனாட்சி காலை நேரமாகவே கிளம்பி தனது மாமன் வீட்டிற்கு வந்திருந்தாள். தங்கபாண்டியன் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்த நேரம் அவளுக்கு பரீட்சை நடந்து கொண்டிருந்ததால், அப்போது வர முடியாமல் போக, இதோ நேற்று கல்லூரி விடுமுறை கிடைக்கவும் வந்து சேர்ந்திருந்தாள்.

மீனாட்சி முத்தையா-வள்ளியம்மையின் ஒரே மகள். பெற்றவர்களுக்கு மட்டும் இல்லாமல் மாமன் அத்தை, தாத்தா பாட்டி என்று அத்தனைப் பேருக்கும் செல்லம். தற்போது சென்னையில் வணிக மேலாண்மை படித்துக் கொண்டிருக்கும் இவள்தான் வெற்றிக்கான வீட்டினரின் தேர்வு.

சக்திவேல் இவளை விட 10 வயது மூத்தவனாக இருக்க, அடுத்தவன் வெற்றிக்கும் இவளுக்கும் மூன்று வயது தான் வித்தியாசம். சிறு வயது முதலாகவே இருவரும் எந்த நேரமும் ஒன்றாகச் சுற்றி திரிவதால் எல்லாருக்குமே இப்படி ஒரு எண்ணம் உண்டு.

சக்திவேல் வயதில் சற்றே பெரியவனாக இருப்பதால், எப்போதும் இவர்களுக்கு சமமாக விளையாடுவது, அரட்டை அடிப்பது இதெல்லாம் நடக்காது. அவனது நண்பர் கூட்டமும், பொழுது போக்கும் வேறாகவே இருந்தது. இடையில் வேலை என்று ஐந்து ஆண்டுகள் வெளிநாட்டில் வேறு இருந்ததால், பெரிதாக பேச்சு வார்த்தைகள் கூட இருக்காது இவர்களிடம்.

அவன் வழி வேறு என்பதாக தான் திரிவான் எப்போதும். வீட்டினர் அத்தனைப் பேரும் மறுத்தும் பிடிவாதமாக ஜெர்மனி சென்றவன் அங்கே அவன் துறையில் சிறந்து விளங்க, இங்கே தங்க பாண்டியனின் குடும்பம் செழித்து வளர்ந்திருந்தது.

ஐந்து ஆண்டுகள் அங்கே வேலைப் பார்த்தவன் ஒரு கட்டத்தில் வேலையை விட்டதும் அவனது சொந்த முடிவு தான். அப்போதும் யாரின் ஆலோசனையும் கேட்கவில்லை அவன். மதுரை வந்திறங்கிய ஒரு மாதத்தில் அத்தனை வேலைகளையும் முடித்து, இரவு பகல் பாராமல் அலைந்து திரிந்து தனக்கான இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டான் அவன்.

சக்தியைப் பொறுத்தவரை அவனது வேர் இந்த மண்தான். அவனது தந்தையின் உழைப்பை பார்த்தே வளர்ந்தவன் என்பதால், அப்போதே அடுத்த கட்டம் என்ன என்ற தெளிவோடு ஓட துவங்கி அதை சாதித்தும் முடித்து அவன் அமர்ந்த நேரம் தான் வெற்றிவேலன் இப்படி ஒரு சிக்கலை இழுத்து வைத்தது.

அதில் வந்த கோபம் தான் சக்திவேலனை முழுதாக ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது இப்போது வரை. மற்றபடி, எந்த அளவிற்கு கோபக்காரனோ அதே அளவிற்கு பாசக்காரன் தான் அவன். வெற்றி, வேல்விழி, மீனாட்சி என்று அத்தனைப் பேரின் மீதும் கண்ணுக்கு தெரியாத ஒரு அக்கறை எப்போதுமே இருக்கும்.

இதோ இப்போதும் வந்திருந்தவளை வா என்று கூட வாய் திறந்து அழைக்கவில்லை. “வந்தாயா. உன்னை பார்த்துவிட்டேன்” என்பது போல் ஒரு தலையசைப்பு தான். மீனாட்சி உள்ளூர ஒரு குற்றவுணர்வுடன் தலையசைத்து வைக்க, அதற்குமேல் அங்கு நிற்காமல் வெளியே நகர்ந்துவிட்டான்.

அவன் தலை மறையவும், ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள், “சாரி மாமா” என்று தனக்குள்ளாக முணுமுணுக்க, அதற்குள் அவளது அத்தை அழைத்துவிட்டார்.

“வரேன் அத்த” என்றபடி அவள் உள்ளே ஓட, இதற்குள் இட்லியும், மீன்குழம்பும் தயாராக தட்டில் எடுத்து வைத்திருந்தார் சுந்தரவடிவு.

சமையலறையின் உட்புறம் இருந்த திண்டில் அமர்ந்தபடியே அவள் உண்ண தொடங்க, அடுப்பில் கவனமானார் வடிவு. 

“நீங்க வெற்றியைப் பார்த்தீங்களா அத்த” என்று சிறியவள் மேலோட்டமாக தொடங்க, 

“அவன் பேரைக் கூட சொல்லாத பாப்பா. நீ சாப்பிடு” என்றார் வடிவு.

“காதலிச்சது தப்பா அத்த”

“யாரு அப்படி சொன்னது?”

“அப்புறம் ஏன் வெற்றியை வெளியே அனுப்பிட்டிங்க”

“உன் மாமன் காதலிச்சது தப்பு இல்ல. என் மகன் கல்யாணத்தை கெடுத்தது தான் தப்பு. அவன்கிட்ட எப்படியெல்லாம் போராடி இந்த கல்யாணத்துக்கு ஒப்புதல் வாங்கினேன் தெரியுமா? கல்யாணமே வேண்டாம்னு சொன்னவன் என் பிள்ளை. அவனை ஊர்கூடி மேடையேத்தி அசிங்கப்படுத்தியாச்சு. இனி அவன்கிட்ட கல்யாணப் பேச்சை எடுக்க முடியுமா? வாய் திறக்க விடுவானா அவன்? இதெல்லாம் யாரால?” என்று கண்ணீருடன் கேட்டவர், “நீ சின்னப்பிள்ளை… உனக்கு இதெல்லாம் வேண்டாம் சாப்பிடு” என்று மருமகளின் தலையில் தட்டிவிட்டு வெளியேச் சென்றுவிட்டார்.

அவர் பேசியதை சமையல் அறையின் வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த மனோன்மணி பூஜையறையைப் பார்த்து அப்போதே புலம்பத் தொடங்கிவிட்டார். 

மீனாட்சிக்கு இதுவரை புரியாத விஷயங்கள் இப்போது புரிய, நிதர்சனம் அவள் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. 

வெற்றி விஷயம் முன்பே தெரிந்தும் வீட்டில் சொல்லாமல் மறைத்தது தவறோ என்று அவசரமாக சிந்திக்க தொடங்கினாள் அவள். ஆனால், வெற்றி மட்டும் இந்த முடிவை எடுக்காமல் போயிருந்தால் இந்நேரத்திற்கு தேனருவி என்ற ஒருத்தி உயிருடன் இருந்திருக்கமாட்டாள் அதையும் மறுக்க முடியாதே என்று மனது கிடந்து அடித்துக் கொண்டது.

அன்று நாள் முழுவதும் அங்கே இருக்க வேண்டும் என்று வந்தவள் அங்கிருப்பவர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்த இரண்டு மணி நேரங்களிலேயே வீடு திரும்பிவிட்டாள். அவள் அங்கிருந்த அந்த இரண்டு மணி நேரத்தில் மூன்று பேர் வந்து விசாரித்துச் சென்றிருக்க, மனோன்மணி தான் அத்தனைப் பேருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட துக்க வீடு போல் தான் இருந்தது தங்கபாண்டியனின் வீடு. மீனாட்சியும் அதை தாங்க முடியாமல் தான் திரும்பிவிட்டது. தன் வீடு வந்த பின்னும் யாரிடமும் பேச மனமில்லாமல் அறையில் அடைந்து கொண்டாள்.

இங்கே சக்தியோ தனது அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தான். காலையிலிருந்து பத்து முறைக்கும் மேலாக அழைத்துவிட்டாள் சுவேதா. அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்.

முதல் முறை ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தான் அவனும் அழைப்பை ஏற்றது. ஆனால், மொத்தமாக அவள் சக்தி தான் திருமணத்தை நிறுத்தியதைப் போல் பேசி வைக்க உண்மையில் கடுப்பாகிவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

இருந்து தனது பொறுமையை இழுத்து பிடித்து நடந்த அத்தனையும் எடுத்துக் கூறி, இதற்குமேல் இந்த உறவு சரிவராது என்று அவன் எடுத்து கூறிய பின்னும், எனக்கு என்ன வழி என்றவளிடம், “உன் வீட்டை விட்டு மொத்தமா வந்திட முடியுமா உன்னால?” என்று சக்தி கேட்டுவைக்க, 

“அதெப்படி உங்க தம்பி தப்பு பண்ணதுக்கு நான் ஏன் என் குடும்பத்தை பிரியணும்?” என்று அவள் கேட்க, 

“வேறென்ன தான் செய்ய சொல்ற?” என்று சக்தி கேட்டதற்கு, 

“என் அப்பாகிட்ட பேசுங்க. உங்க தம்பியை மொத்தமா வெட்டி விட்டுட்டேன்னு சொல்லி, மறுபடியும் என்னை பெண் கேளுங்க” என்றதில் பொங்கிவிட்டான் சக்தி.

“என் தம்பியை நான் வெட்டி விட்டுட்டேன்னு உனக்கு யார் சொன்னது?”

“உங்களுக்கு நான் எப்படி போனாலும் கவலை இல்லையா?”

“அதை நீ உன் அப்பன்கிட்ட கேட்கணும். உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். நிச்சயம் முடிஞ்சு இந்த ரெண்டு மாசம் தான் உன்னை எனக்கு தெரியும். உனக்காக என் தம்பியை வெட்டி விடுவேன்னு எப்படி நீ எதிர்பார்க்கிற” என்று சக்தி கேட்டதற்கு பதில் கொடுக்காமல் அவள் கண்ணீர்விட, 

“இந்த அழுகை எதையும் மாத்திடாது சுவேதா. ஒழுங்கா உன் அப்பா சொல்றபடி உன் ஜாதிக்காரன் எவனையாவது கட்டிக்க. என்னை தொந்தரவு பண்ணாத. மறுபடி எனக்கு கூப்பிடாத” என்று சொல்லி அழைப்பை அவன் துண்டித்த பின்னும் தொடர்ந்து அவனுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறாள் அவள்.

இவளை என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தான் சக்திவேல்.

இது போதாது என்று மனோன்மணி மீண்டும் பேரனின் ஜாதகத்தை தரகரிடம் கொடுக்க தயாராக, சுந்தரவடிவுக்கு உள்ளூர உதறல் தான். மகனின் ருத்ர ரூபம் அவருக்கு தெரியுமே. ஆனால், மனோன்மணி அதற்கெல்லாம் கவலை கொள்வாரா என்ன? 

அவர் போக்கில் அவர் வேலையைத் தொடங்கிவிட, நடந்த நிகழ்வுகளால் சக்திக்கு பெண் கிடைப்பது சற்று கடினமாகத் தான் இருந்தது. அப்படியும் வசதியில் குறைவாக இருந்தாலும் சரி என்று மனோன்மணி இறங்கிவர, அடுத்த நான்கு நாட்களில் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் வந்து நின்றார் தரகர்.

மனோன்மணிக்கும் பெண்ணைப் பிடித்து இருக்க, வடிவுக்கு திருப்தி தான். வீட்டு ஆண்களிடம் கூட கலக்காமல் பெண்கள் இந்த வேலையைச் செய்திருக்க, இப்போது சக்தியிடம் யார் பேசுவது என்று யோசிக்கும்போது தான் உள்ளூர உதறியது இருவருக்கும்.

மனோன்மணி வடிவைப் பார்க்க, “என்னை கொன்னுடுவான் அத்த. என்னை விட்டுடுங்க” என்று தலை தெறிக்க ஓடிவிட்டார் அவர்.

மனோன்மணி இரவு வெகுநேரம் உறங்காமல் அமர்ந்திருந்ததில் சொக்கநாதர் விசாரிக்க, மனோன்மணி அத்தனையும் கூறி, பெண்ணின் புகைப்படத்தையும் அவர் கையில் கொடுக்க, “இது வேண்டாத வேலை மனோ. அவனே நொந்து போயிருக்கான். கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும் அவனுக்கு. அவனுக்கும் மனசு இருக்கும்ல. ஒருத்திகூட நிச்சயம் பண்ணி, அது நின்னு போய் 20 நாள்ல அவனுக்கு அடுத்த பொண்ணு பார்த்திருக்கிற நீ. ஒழுங்கா தூக்கிப் போட்டுட்டு வேற வேலையை பாரு” என்று திட்டிவிட்டார் சொக்கநாதர்.

“உங்களுக்கென்ன. உங்களுக்கு எல்லாம் அந்தந்த வயசுல அதது நடந்துடுச்சு இல்ல. அதுதான் பேசறீங்க. ஏற்கனவே முப்பது முடிஞ்சு போச்சுங்க அவனுக்கு. எவனோ என்னவோ பண்ணிட்டு போனா, என் பேரன் வாழ்க்கையை பலி கொடுக்கணுமா? எனக்கு என் பேரனுக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்கணும். அது உடனே நடக்கணும். நீங்க பேசுங்க அவன்கிட்ட” என்று அவர் கணவரை கோர்த்துவிடப் பார்க்க, 

“நீ என்ன சொன்னாலும் சரி. என்னால அவன்கிட்ட பேச முடியாது. நீயாச்சு. அவனாச்சு” என்று கழன்று கொண்டார் சொக்கநாதர்.

மனோன்மணி இதை இப்படியே விட தயாராக இல்லை. அவரே நேரடியாக பேசிவிடுவது என்று முடிவு செய்து கொண்டு அடுத்தநாள் காலையில் பேரன் உணவு உண்ணும் நேரம் அவர் விஷயத்தை தொடங்க, சக்தியின் முன்னால் இருந்த சாப்பாட்டுத் தட்டு பறந்திருந்ததது.