மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தான் சக்திவேல். அவன் தம்பி வீட்டை விட்டுச் சென்று இன்றுடன் ஒருவாரம் ஆகி இருந்தது. பெயருக்கு, ‘அவனை காணவில்லை‘ என்று ஒரு புகார் கொடுத்தவன், தனது ஷோ ரூமை அடித்து நொறுக்கியவர்களை பற்றி உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தான்.
அவன் புகார் கொடுத்து, ஷோ ரூமுக்கு வந்த அரைமணி நேரத்தில் அவனது பிரிவைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது அவனுக்கு. சுற்றி வளைத்துப் பார்த்தால் எப்படியும் சொந்தத்தில் தான் வந்து நிற்கும். அவரது அழைப்பை யோசனையுடன் பார்த்தவன், அழைப்பை ஏற்காமல் தவிர்த்துவிட, சில நிமிடங்களில் அவனது தாத்தா வந்து நின்றார்.
“சக்தி. சபாபதி மேல போலீஸ் கேஸ் கொடுத்து இருக்கியா?” என,
“ஆமாம் தாத்தா. என் கடையை அடிச்சு உடைச்சு இருக்கான். பதில் சொல்ல வேணாமா?”
“நம்ம பைய அவன் பொண்ணை இழுத்துட்டுப் போய் இருக்காண்டா. அவன் இதைக்கூட செய்ய மாட்டானா? பிரச்சனையை வளர்த்த வேண்டாம் சக்தி. கேஸை வாபஸ் வாங்கிடு.”
“அதெல்லாம் முடியாது தாத்தா. இன்னைக்கு இதை விட்டா, அவன் தொடர்ந்து நம்மை சீண்டிட்டே இருப்பான். எல்லா நேரமும் அமைதியா இருக்க முடியாது.
“வெற்றி எங்க இருக்கான்னு தகவல் கிடைக்கிற வரையாச்சும் நாம பொறுத்து தான் ஆகணும் சக்தி.”
“எதை பொறுத்து போக சொல்றிங்க? இன்னைக்கு கடையை உடைப்பான். நாளைக்கு வீட்டை உடைப்பான். அடுத்து நம்ம மேல கையை வைப்பான். அதுவரைக்கும் உங்க பேரன் வரலைன்னா, அதுக்கும் பொறுத்து தான் போகணுமா?” என்று சக்தி சத்தமிட, அவனிடம் பதில் பேச முடியவில்லை பெரியவரால்.
இவர்கள் இருவரும் அறையில் பேசிக் கொண்டிருந்த நேரம் அவனது அலுவலக உதவியாளன் வேகமாக உள்ளே ஓடிவர, சக்தி நிமிர்ந்து பார்க்கவும், “அந்த சபாபதி ஆளுங்களை கூட்டிட்டு வந்திருக்கார் சார்” என்றான் பதட்டமாக.
“அதுக்கு ஏன் இப்படி பதறுறீங்க?” என்று கேட்டபடியே எழுந்து கொண்ட சக்தி வெளியே வர, இதற்குள் சபாபதி, அவர் மகன் வாசு மற்றும் சிலரை அழைத்துக் கொண்டு கடைக்குள் நுழைந்திருந்தார்.
சக்தியின் பின்னோடு பெரியவரும் வெளியே வந்திருக்க, ஒப்புக்காக அவரை கையெடுத்துக் கும்பிட்டார் சபாபதி.
பெரியவர் தலையசைக்க, “நடக்கிறது எதுவும் சரியில்லையே ஐயா. உங்க ரெண்டாவது பேரன் என் மகளை இழுத்துட்டு போவான். மொத பேரன் என் பிள்ளை மேல போலீஸ் கேஸ் கொடுப்பானா? எல்லாத்தையும் நான் அமைதியா வேடிக்கை பார்க்கனுமா?” என,
“யார் அமைதியா இருக்க சொன்னது? உன்னால முடிஞ்சதை பாரு. கிளம்புய்யா” என்று சக்தி நிற்க,
“தம்பி. அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்க. பின்னால ரொம்ப வருத்தப்படுற மாதிரி ஆகிடும்.” என சபாபதி உரைத்ததில் கோபம் கொண்ட சக்தி, “இதுக்கெல்லாம் வேற ஆளை பாருங்க சபாபதி. உங்களை போல பல பேரை பார்த்து தான் இந்த இடத்துக்குவந்திருக்கோம்.” என,
“என்னடா… உன் தம்பி எங்க வீட்டு பிள்ளையை இழுத்துட்டு போன திமிர்ல பேசறியா. இதே போல நான் உன் வீட்டு பிள்ளையை…..” என்றவன் வார்த்தையை முடிக்கும் முன்னதாகவே அவன் மீது பாய்ந்திருந்தான் சக்தி.
வாசுவின் கழுத்தை நெறித்து விட்டவன், “எங்கே நின்னு யாரைப் பத்தி பேசற” என்று அவனை சுவற்றில் சாய்த்து, தரையிலிருந்து ஒரே நிமிடத்தில் மேலே தூக்கியிருந்தான்.
சக்தியிடம் இருந்து விடுபட அவன் செய்த முயற்சிகள் அத்தனையும் வீணாக, சபாபதியும், அவர் ஆட்களும் சேர்ந்து சக்தியை இழுக்க முயன்றனர்.
அப்படியும் சில நிமிடங்கள் கழித்து, அவன் கண்கள் சொருகும் நிமிடத்தில் தான் அவனை விடுவித்தான் சக்தி.
வாசு மரணத்தை கண்முன் கண்டுவிட்டவன் போல் நிதானத்திற்கு வராமல் நிற்க, சபாபதி, “ஐயா இதெல்லாம் சரியில்ல” என்று சொக்கநாதரிடம் முறையிட,
“உன் பிள்ளை வார்த்தையை விட்டா, அவனும் தான் என்ன செய்வான் சபாபதி. எல்லாரோட பொறுமைக்கும் எல்லை உண்டு. எங்கே எதை செய்யணும்? யார்கிட்ட என்ன பேசணும்? எல்லாத்தையும் யோசிச்சு பண்ணனும். யாருக்கும் எதுவும் தெரியாம இல்ல. உன் வீட்டு பொண்ணு விருப்பப்பட்டு என் பேரனோட போய் இருக்கா. அதை நீயே கூட மறுக்க முடியாது”
“யார் சொன்னது உங்களுக்கு? உங்க பேரன் தான் எதையோ பண்ணி எங்க வீட்டு பொண்ணை இழுத்துட்டு போய் இருக்கான்”
“விருப்பமில்லாத பொண்ணை இழுத்துட்டு போற அளவுக்கு தரங்கெட்டவன் இல்ல என் பேரன். அவன் வரட்டும். நடந்ததை விசாரிச்சு முடிவு பண்ணுவோம்.”
“என்ன என்ன முடிவு. எங்க வீட்டு பொண்ணு எங்களோட வந்தாகணும்.” என்று வாசுவின் உடன் இருந்த ஒருவர் சத்தமிட,
“என் தம்பி என் கையில கிடைச்ச அடுத்த நிமிஷம் உன் பொண்ணு உன் முன்னாடி இருப்பா. அதுக்கு மேல எந்த முடிவா இருந்தாலும், அது உன் விஷயம்… உன் பொண்ணு விஷயம். அவங்க ரெண்டு பேரும் இங்கே வர்ற வரைக்கும் அமைதியா வாயை மூடிட்டு இருக்கணும்” என்று சக்தி எச்சரிக்க,
“உன் தம்பி என் கையில கிடைக்கட்டும். அப்புறம் தெரியும்டா முடிவு” என்று வாசு கத்த,
“வாங்கினது பத்தல… போடா… போ” என்று நக்கல் சிரிப்புடன் அவர்களை விரட்டி விட்டான் சக்திவேல்.
பெரியவர் கவலையுடன் அவனைப் பார்க்க, “வாங்க” என்றுவிட்டு உள்ளே நுழைந்து அவன் இருக்கையில் அமர்ந்தான் சக்தி.
“ஏன் கம்பிளைன்ட் கொடுத்தேன்னு கேட்டிங்க. இதுக்குதான்… புரியுதா? உங்க செல்லப்பேரன் இழுத்து வச்சு இருக்க ஏழரை இதோட நிற்காது. நாம அமைதியா இருந்தா, இவனுங்களும் இன்னும் இன்னும் எதையாவது செஞ்சுட்டே தான் இருப்பானுங்க. போலீஸ்னு போகவும் வந்து நிற்கிறான் பாருங்க… இதுவும் கொஞ்ச நாளைக்கு தான். அவன் அடங்கி இருக்க அந்த நேரத்துக்குள்ள உங்க பேரனை தூக்கணும். கிடைக்கட்டும் அந்த நாயி” என்று மேசையின் மீது தட்டியபடியே எழுந்தவன் வெளியே கிளம்பிவிட்டான்.
பெரியவருக்கு பேரனின் வார்த்தைகள் புரிந்தாலும், உள்ளே ஏதோ நெருடிக் கொண்டு தான் இருந்தது. சபாபதியைப் பற்றி நன்கு தெரியும் அவருக்கு. எத்தனை சாதிவெறி பிடித்தவன் அவன் என்பது ஊரறிந்த விஷயம்.
இப்போதும், மகளின் காதல் கேள்விப்பட்ட நொடியில் இருந்தே அவளை கொன்று போட துடித்திருக்கிறான் என்பதையும் அரசல் புரசலாக விசாரித்து அறிந்து கொண்டிருந்தார். அவன் கையில் வெற்றி கிடைத்துவிட கூடாது என்பதில் பெரியவரும் தெளிவாகத் தான் இருந்தார். ஆனால், பேரன் எங்கே எப்படி இருக்கிறானோ? என்று எந்த தகவலும் கிடைக்காததில் சற்று கவலையாகத் தான் உணர்ந்தார் சொக்கநாதர்.
அவர் கவலைக்கு சொந்தக்காரனோ, இங்கே தன் கையில் மயங்கி கிடந்தவள் கன்னம் பற்றி, “தேனு… தேனு…” என்று கத்திக் கொண்டிருந்தான்.
அரை மயக்கத்தில் நடந்து கொண்டிருந்தவள் இப்போது முழுதாகவே மயங்கியிருக்க, தண்ணீர் தெளித்து அவளை எழுப்பி அமர்த்தி இருந்தான் வெற்றி.
“என்னம்மா. என்ன ஆச்சு? என்ன செய்யுது?” என்று அவன் பதற, பதிலேதும் கூறாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
“என்ன பண்ணுது தேனு” என்று அவன் மீண்டும் அதட்ட, மறுப்பாக தலையை மட்டுமே அசைத்தாள் அவள்.
“ஏய்… என்ன பண்ணுது சொல்லுடி. இருக்க பிரச்சனையில இவ வேற” என்று வெற்றி அதட்ட,
“பசிக்குது” என்றாள் பயந்து தேம்பியபடியே.
அப்போதுதான் நேற்றிலிருந்து இருவரும் சாப்பிடவே இல்லை என்பது உரைத்தது வெற்றிவேலனுக்கு.
தன் மடத்தனத்தை எண்ணி தலையிலேயே அடித்துக் கொண்டவன், “இரு. நான் சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வரேன். பசிச்சா கூட வாயைத் திறந்து சொல்லமாட்டியா?” என்று அவளைக் கடிந்தபடியே எழுந்து கொள்ள, அவனை விடாமல் அவன் கையைப் பற்றிக் கொண்டாள் அவள்.
“என்னடி” என்றபடி வெற்றி நிற்க, “எனக்கு தனியா பயமா இருக்கு வெற்றி. ப்ளீஸ் என்னை விட்டுட்டு போகாத” என்று நடுங்கினாள் பெண்.
அவளை சொல்லியும் குற்றமில்லை. இந்த ஒருவாரமாக அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்கள் அப்படி. சுதந்திரமாக வெளியே நடமாடக் கூட முடியாமல் கிட்டத்தட்ட வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தனர் இருவரும்.
அவ்வபோது வெற்றி அலைபேசியை உயிர்ப்பித்து அவன் நண்பர்களிடம் பேசி நடந்ததை அறிந்தபடி தான் இருக்கிறான். ஆனால், காதில் விழும் செய்திகள் எதுவும் நிம்மதியை தருவதாக இல்லை. கையில் எடுத்து வந்திருந்த பணமும் மொத்தமாக கரைந்திருக்க, இவர்கள் கிளம்பிய அன்றே அவனது வங்கி கணக்கு, அவனது கடன் அட்டை என்று அத்தனையும் முடக்கியிருந்தான் அண்ணன்காரன்.
“சகுனி” என்று அவனை மனதார சபித்தபடியே தான் இருந்தான் வெற்றியும். அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் இருவரும் வெகு நேரம் அமர்ந்திருக்க, இதற்குமேலும் விட்டால், மறுபடியும் மயங்கி விடுவாளோ, என்று பயந்து தேனருவியை அழைத்துக் கொண்டு சாப்பிடக் கிளம்பினான்.