நீ மட்டும் நிஜமாக 13

சக்திவேல் மருத்துவமனையில் இருந்து கிளம்பி முழுதாக இரண்டு நாட்கள் முடிந்திருக்க, சர்க்கரை ஆலையில் தான் அமர்ந்திருந்தான். அந்த ஆலையில் இருந்த வாசுவின் விசுவாசிகளை சக்தி விரட்டியடித்து இருக்க, அவர்களுக்கு பதிலாக புதியவர்களை தேர்ந்தெடுக்கும் வேலை தான் நடந்து கொண்டிருந்தது அன்று முழுவதும்.

இரவு ஏழு மணி அளவில் அத்தனையும் முடித்து தலையை இருபுறமும் அசைத்து, கழுத்தை சரிசெய்தபடி அமர்ந்து கொண்டிருந்தான். அந்த நேரம் வேல்விழி அவனுக்கு அழைக்க, அவளிடம் மீனுவின் உடல்நிலை குறித்து விசாரித்தான் சக்தி.

“அத்தனை அக்கறை இருந்தா நீயே வந்து பாரேன் அண்ணா” என்றாள் வேல்விழி.

“வேலு”

“உனக்கு நிச்சயம் பண்ண பொண்ணு அண்ணா அவ. உனக்கு பொண்டாட்டியாக போறவ. கல்யாணத்துக்கு பிறகு இப்படி ஏதாவது நடந்து இருந்தாலும், இப்படிதான் விட்டுட்டு கிளம்பி இருப்பியா? அவ உன்னை தேட மாட்டாளா?” என்று வேல்விழி அண்ணனை காய்ச்ச, கசப்புடன் சிரித்துக் கொண்டான் சக்தி.

“மீனு என்னை கேட்டாளா?” என்று ஏதோ ஒரு ஆர்வத்தில் அவன் கேட்டுவிட,

“அவ உனக்கு மேல அண்ணா. அவ என்ன நினைக்கிறான்னு அவளா சொன்னாதான் உண்டு. ஆனா, அவ பேசவே தயாரா இல்ல” என்று வேல்விழி சலிக்க, சக்திக்கு இது எச்சரிக்கையாகவே தோன்றியது.

“விடமாட்டாள் என்னை” என்பது இன்னமும் தெளிவாக, “நான் கூப்பிடறேன்ம்மா” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.

அதற்குமேல் அவன் நேரத்தை மொத்தமாக மீனாட்சியே ஆட்சி செய்ய நேரம் போனது தெரியவில்லை. பத்து மணி வரை அங்கேயே கிடந்தவன், அதற்குமேல் வீட்டிற்கு கிளம்பினான். வீட்டிலும் அவனைத் தவிர யாரும் இல்லாததால் உணவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அவன் படுக்கையில் விழ, அப்போதும் மீனுவின் நினைவு தான்.

“எப்படி இருக்கிறாளோ? என்ன செய்து கொண்டிருக்கிறாளோ? என்று அவளின் சிந்தனை தான்.

அத்தனைக்கும் மேலாக, “என்ன செய்ய காத்திருக்கிறாளோ” என்று அதுதான் அச்சமாக இருந்தது.

ஸ்வேதாவுடனான நிச்சயம் முறிந்து போனபோது கூட இத்தனை கவலை கொள்ளவில்லை அவன். அதே ஸ்வேதா காவல் நிலையம் வரை சென்றபோதும் கூட, ‘என்ன செய்வாளோ’ என்று அச்சப்படவில்லை அவன்.

 ஆனால், மீனு அவனை கலங்க வைத்தாள். ஏற்கனவே உடல்நிலை படுத்திக் கொண்டிருக்கிறது இன்னும் வள்ளியம்மை தன்னிடம் பேசியது தெரிய வந்தால், அவரை என்ன செய்ய காத்திருக்கிறாளோ? என்று எங்கு சுற்றினாலும், முடிவு அவளிடம் தான் வந்து நின்றது.

இத்தனைக்கும் இதுவரை தன்னை அவள் அழைக்கவில்லை என்பதில் அவளது கோபம் புரிய, எப்படி சரி செய்ய போகிறேன் என்று எண்ணமிட்டபடியே அவன் படுத்திருக்க, காத்தனிடம் இருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.

நேரம் இரவு பன்னிரண்டு மணியைக் காண்பிக்க, வேகமாக அவன் அழைப்பை ஏற்கவும், “தம்பி… கொஞ்சம் அவசரம் உடனே வாங்களேன். மாமா தனியா போயிருக்கு. இங்கே யாரோ தேனு வீட்டுக்குள்ள… சீக்கிரம் வாங்க தம்பி” என்று காத்தனின் மனைவி முடிக்கும்போது காரை எடுத்திருந்தான் சக்திவேல்.

அவன் கையில் அந்த கார் பறக்க, ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் தம்பி வீட்டிற்கு ஓடி வந்திருந்தான்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போதே சூழ்நிலை ஓரளவுக்கு பிடிபட, காரை வாசலில் நிறுத்தியவன் வேகமாக  உள்ளே ஓட, காத்தன் கையிலும், காலிலும் வெட்டுப்பட்டு விழுந்திருந்தான்.

“அண்ணே” என்று சக்தி அவரை தூக்க, ‘தம்பி தம்பி… பின்னாடி பின்னாடி… ஓடுங்க. புள்ள பாவம் தம்பி. ஓடுய்யா” என்று கத்தி கதறினார் மனிதர்.

அவரை அப்படியே விட்டு ஓடியவன், பின்வாசல் படியில் அனாதையாக கிடந்த அரிவாளை கையில் எடுத்துக்கொண்டு இருட்டுக்குள் ஓட, சில நிமிடங்களில் வாசுவின் அல்லக்கைகள் இருவரைப் பார்த்துவிட்டான்.

வந்த ஆத்திரத்திற்கு இருட்டிலேயே அவர்கள் மீது பாய்ந்தவன் அவர்களின் காலில் கிழித்து வைக்க, நகரமுடியாமல் கீழே விழுந்தனர் இருவரும்.

சக்தி ஏற்கனவே செண்பகப்பாண்டியனுக்கும் தகவல் கொடுத்து இருக்க, எப்படியும் வந்து விடுவான் என்பதால் தானே துணிந்து களத்தில் இறங்கி இருந்தான்.

ஆனால், இருட்டில் அவன் எத்தனை துழாவியும் வேறு யாரும் கண்ணில் படவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் அவன் தேங்கி நிற்க, “ஐயோ…” என்ற அலறல் குரல் கேட்டது.

வந்தது பெண் குரலாக இருக்க, எதைப்பற்றியும் யோசிக்காமல் குரல் வந்த திசையை நோக்கி ஓடினான் சக்தி. அவன் எதிர்பார்த்து வந்தது தான் அரங்கேறிக் கொண்டிருந்தது அங்கே.

அலைபேசியின் வெளிச்சத்தில் வாசு தேனருவியின் முடியைக் கையில் பிடித்து சுற்றிக் கொண்டிருந்தது தெரிய, அவனைச் சுற்றி ஏழெட்டு பேர் நின்றிருந்தனர்.

“அண்ணா என்னை விட்டுடுண்ணா ப்ளீஸ்ணா. பயமா இருக்குண்ணா” என்று உடன்பிறந்தவள் கதற, காதில் வாங்கவில்லை வாசு.

“அண்ணனா? ஓடிப் போகும்போது தெரியலையா. உன்னை பெத்து பேரு வச்சு, சோறு போட்டு வளர்த்த எங்களுக்கு உன்னை கட்டி கொடுக்க தெரியாதா? அதுக்குள்ள அரிப்பெடுத்து நீயே வேற ஜாதி நாயோட ஓடிப் போவ… அதை நாங்க வேடிக்கை பார்க்கணுமா?”

“சபாபதி மானஸ்தன். ஓடிப்போனவளை வெட்டி போட்டுட்டான் சபாபதி மகன்னு இந்த ஊர் பேசணும். உன்னை கொன்னு அந்த நாய் வீட்டு வாசலில் போட்டுட்டு போறேன்” என்றவன் அரிவாளை ஒங்க, இருட்டிலிருந்து வெளியே வந்தான் சக்தி.

வந்த வேகத்தில் யாரும் எதிர்பாரா விதமாக, கையிலிருந்த அரிவாளை வாசுவின் கழுத்தில் இறக்கியிருந்தான். சுற்றி நின்ற அவன் ஆட்கள் சக்தியை நெருங்க, யாரைக் கண்டும் அஞ்சுவதாக இல்லை அவன்.

‘அப்படியென்ன வெறி இவனுக்கு’ என்பதே பிரதானமாக இருக்க, அவனுடன் வந்தவர்களையும் ஒரு கை பார்க்கும் முடிவில் தான் இறங்கினான்.

மீனாட்சி, காத்தன், தேனு வாசுவின் பட்டியல் நீண்டதில் முற்றிலுமாக பொறுமை இழந்துவிட்டான். அவன் குலதெய்வமான கருப்பன் தான் உடலில் இறங்கிவிட்டதோ, என்று நினைக்கும் அளவுக்கு அச்சமூட்டினான் அவன்.

கையில், காலில், இடுப்பில், நெஞ்சில் என்று நிதானமில்லாமல் அவன் கையில் இருந்த ஆயுதம் இறங்கியதில், எதிரில் இருந்தவர்கள் தரையில் விழ, சக்திக்கும் காயம் தான். ஆனால், அவனுக்கு இருந்த ஆத்திரத்தில், அது கவனத்தில் பதியவே இல்லை.

 தேனருவி பயத்தில் ஒடுங்கி போனவளாக அந்த நெல் வயலின் சேற்றில் சுருண்டிருக்க, மீண்டும் குறையாத வெறியுடன் வாசுவை நெருங்கினான் சக்திவேல்.

“நீ என் குடும்பத்தை நிம்மதியாவே விடமாட்ட வாசு. என்னால யாரையும் இழக்க முடியாது. நீ செத்திடு. வர்றது வரட்டும். நான் போறேன் ஜெயிலுக்கு.” என்றவன் வாசுவின் நெஞ்சில் காலை வைத்து அழுத்திக்கொண்டு தன்கையில் இருந்த அரிவாளை ஒங்க, “டேய்… டேய்…” என்று கத்திக்கொண்டே ஓடி வந்தான் செண்பகபாண்டியன்.

சக்தியை பிடித்து தன்னிடம் இழுத்துக் கொண்டவன், அவன் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டான்.

“படிச்சவனாடா நீ. என்ன காரியம் பண்ண துணிஞ்சடா” என்று செண்பகப்பாண்டியன் ஆத்திரம் கொள்ள,

“இது சரியா வராது பாண்டி. இவன் அடங்கமாட்டான்டா. என்னை விட்டுடு. நான் இன்னைக்கே முடிச்சுடறேன்” என்று சக்தி மீண்டும் முன்னேற, வாசு உயிர்பயத்தில் ஒடுங்கியிருந்தான்.

அரைமயக்க நிலையில் இருந்தாலும், புலன்கள் விழிப்புடன் தான் இருந்தது அவனுக்கு. ஏற்கனவே அவன் வெட்டியதில், அசைய முடியாமல் தான் கிடந்தான். இதற்குமேல் சக்தி உயிரையும் எடுப்பதாக சொல்ல, அச்சத்தில் ஈரக்குலையே நடுக்கம் கண்டது.

ஆனால், செண்பகப்பாண்டியன் சக்தியை அப்படியெல்லாம் விடுவதாக இல்லை.

“வாடா” என்று அவன் நண்பனை பிடித்து இழுக்க, அவன் கையை உதறியவன், நடுங்கி கொண்டிருந்த தேனருவியை நெருங்கினான்.

“வாம்மா…” என்று தன் கையை நீட்ட, அதை பற்றிக்கொண்டு எழுந்தவள் வலியில், “அம்மா” என்றிட,

“என்னடா… என்னம்மா” என்று பதறினான் சக்தி.

“இல்ல… கால்ல” என்றவள் மடங்கி அமர, “இவனை இன்னுமாடா விட்டு வைக்க சொல்ற. கூடப் பிறந்தவடா. அந்த எண்ணமே இல்ல இந்த நாய்க்கு.” என்றவன் வாசுவை இன்னும் இரண்டு மிதி மிதித்தான்.

“டேய் வாடா” என்று செண்பகப்பாண்டியன் அவனை இழுத்துவர, தேனருவியை நெருங்கினான் சக்தி.

“என்னை அண்ணனா நினைச்சுக்கோ.” என்று நொடியும் தயங்காமல் அவளை கையில் தூக்கி கொண்டான்.

காத்தனை செண்பகப்பாண்டியனின் ஆட்கள் ஏற்கனவே மருத்துவமனையில் சேர்த்திருக்க, இப்போது தேனருவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சக்திக்கும் அங்கேயே வைத்தியம் பார்க்க, இருவருக்கும் லேசான காயங்களும், சிராய்ப்புகளும் தான்.

காத்தனின் நிலை தான் கொஞ்சம் மோசமாக இருந்தது அப்போதைக்கு. அவருக்கும் உயிருக்கெல்லாம் ஆபத்து இல்லை. ஆனால், காயம் ஆழமாக இறங்கியிருந்தது.

அவர் மனைவி அழுதபடியே இருக்க, “ஒன்னும் இல்லக்கா. சரியாகிடும். நான் இருக்கேன்ல. நான் பார்த்துக்கறேன் அண்ணனை” என்று நம்பிக்கை கொடுத்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான் சக்தி.

செண்பகப்பாண்டியன், “வீட்டுக்கு தகவல் சொல்லணும்டா” என,

“அந்த நாய்க்கு போனை போடு” என்றான் சக்தி.

“டேய்”

“போட்றா” என, வெற்றியை அலைபேசியில் அழைத்தான் பாண்டி.

அவன் அழைப்பை எடுக்கவும், செண்பகப்பாண்டியன் வாயைத் திறப்பதற்குள் அலைபேசியை பிடுங்கி கொண்டான்.

“எங்கடா இருக்க நீ?” என்று கத்தினான் சக்தி.

“சக்தி… இங்கே ஹாஸ்பிடல்ல…”

“அங்கே என்ன ******* இருக்க? இல்ல, அவ செத்துட்டாளா?” என,

“சக்தி” என்று வெற்றியும் கத்த,

“நாயே… வாயைத் திறந்த… வாயிலேயே மிதிப்பேன். அவளை பார்த்துக்க தான் சொக்கநாதன் குடும்பம் மொத்தமும் அங்கே கிடக்கே. நீ என்னடா கிழிக்கிற. வச்சு வாழ துப்பில்லாதவனுக்கு எதுக்கு பொண்டாட்டி. நீ உன் அத்தை மகளை பார்த்துக்கணும்னா,  இவளை ஏன்டா கட்டிக்கிட்ட?” என்று தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் சக்தி கத்த,

“என்னடா ஆச்சு. தேனுக்கு என்ன?”

“என்ன செய்வியோ தெரியாது. விடியும் போது நீ இங்க இருக்கணும்” என்று ஆணையிட்டு அலைபேசியை துண்டித்தான் சக்தி.

வெற்றி மீண்டும் செண்பகப்பாண்டியனுக்கு அழைத்து விவரம் கேட்டுக்கொண்டவன், செண்பகப்பாண்டியன் ஏற்பாடு செய்து கொடுத்த காரிலேயே மதுரைக்கு வந்து சேர்ந்தான்.

அவன் மட்டுமில்லாமல், செண்பகப்பாண்டியன் சொக்கநாதருக்கும் தகவல் கொடுத்திருக்க, சொக்கநாதரின் குடும்பமும் காலையில் மதுரைக்கு வந்து சேர்ந்தது.

முத்தையனும் உடன் வருவேன் என்று நிற்க, சொக்கநாதர் மறுத்துவிட்டார். வள்ளியம்மை வாய் திறக்காமல் நிற்க, அப்போது இருந்த சூழலில் அவரை யாரும் கவனிக்கவில்லை.

மொத்த குடும்பமும் கிளம்பிச் சென்றவுடன், “நானும் போயிருக்கணும் வள்ளி” என்று முத்தையன் புலம்ப,

“இனி யாரும் எதுக்கும் போக வேண்டாம். உங்க வேலையை பாருங்க” என்றார் வள்ளி.

“வள்ளி நீயா பேசற?”

“எனக்கு என் பொண்ணு தான் முக்கியம். அவளை கட்டி கொடுத்துட்டு இப்படி தினம் தினம் செத்து பிழைக்க முடியாது.” என்றார் வள்ளி.

“நிச்சயம் முடிஞ்சு என்ன பேச்சு இது வள்ளி. சக்தி நம்ம வீட்டு பிள்ளை”

“மீனாட்சி என் பிள்ளை. நான் பத்து மாசம் சுமந்து பெத்த பிள்ளை. எனக்கு என் பிள்ளை முக்கியம்” என்று ஒரே பேச்சாக முடித்துவிட்டார் வள்ளியம்மை.

கண்களை மூடியிருந்த மீனாட்சி அரைகுறை உறக்கத்தில் இருக்க, இவர்கள் பேசுவது அத்தனையும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்.  கேட்ட செய்தியில் உறக்கம் முழுதாக களைந்துவிட, கண்களில் கண்ணீர் திரண்டது.

உறங்குவது போலவே கிடந்தவள், அன்று மதியமே “வீட்டிற்கு போக வேண்டும்” என்று நிற்க, முத்தையனுக்கு ஒன்றும் புரியவில்லை.

இருந்தாலும், மகளின் விருப்பத்திற்காக அவர் மருத்துவரிடம் பேசி,மீனாட்சியை  மதுரைக்கு அழைத்து வர, சக்திவேல் காவல் நிலையத்தில் இருந்தான்.

இந்த முறை வாசுவை வெட்டியதாக கூறி அவனே சரணடைந்து இருக்க, அடித்துப் பிடித்து ஓடி வந்தார் சபாபதி.