மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் மீனாட்சி. இரண்டு நாட்களாக சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்க, அபாய கட்டத்தை தாண்டி இருந்தாலும், இன்னும் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தான் இருந்தாள்.
இன்னமும் நினைவு திரும்பாமல் இருக்க, “அதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம். மயக்கம்” என்றிருந்தனர் மருத்துவர்கள்.
தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே அவளுக்கு பிரியமான அத்தனை உறவுகளும் காத்திருக்க, உயிராகிப் போனவன் மட்டும் காணாமல் போயிருந்தான்.
ஆம். சக்திவேல் அங்கு இல்லை. நேற்றிரவு வரை கவலை தோய்ந்த முகத்தோடு மருத்துவமனையின் வாயிலில் தவம் கிடந்தவன், அவள் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரியவும் கிளம்பிவிட்டான்.
அவனைத் தவிர அவன் குடும்பம் மொத்தமும் மருத்துவமனையில் தான் இருந்தது. உள்ளே செல்ல தைரியம் இல்லாத வெற்றி கூட மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தான்.
ஆனால், சக்தி அங்கு இல்லை. உயிரைத் தொலைத்தவனாக கிளம்பிச் சென்றிருந்தான் அவன். காரை எடுத்துக் கொண்டு நேற்றிரவு கிளம்பியவனுக்கு நினைவெல்லாம் மீனாட்சி மட்டும்தான் நிறைந்திருந்தாள்.
எப்படி இருக்கிறாளோ? என்று அதுவே ஓடிக் கொண்டிருக்க, காலைப்பொழுது விடியும் வேளையில் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கண்களை மூடி உறங்க ஆரம்பித்திருந்தான். அதுவும் கண்கள் தானே மூடி விளையாட்டு காட்டியதில் பயந்து ஓரம் கட்டியிருந்தான்.
இப்போது உறக்கம் தெளிந்து எழுகையில், எங்கு இருக்கிறோம் என்பதே புரியவில்லை. சென்னையில் இருந்து கிளம்பியவன் அவன் ஊரை கடந்து எங்கோ வந்திருக்க, விசாரித்துப் பார்த்ததில் திருநெல்வேலியை அடைந்திருப்பது தெரிந்து, தலையில் அடித்துக் கொண்டான்.
அவள் பேச்சில் சிரித்துக் கொண்டவன், “வரேன்மா” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
‘வரேன்‘ என்று கூறி விட்டாலும் அங்கிருந்து நகரும் எண்ணமே இல்லை சக்திக்கு. மீண்டும் காரை எடுத்துக்கொண்டு திருச்செந்தூர் கிளம்பிவிட்டான். என்னவோ சண்முகர் அழைப்பதாக தோன்றியது அவனுக்கு.
திருச்செந்தூர் வந்து சேர்ந்தவன் அருகில் இருந்த விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கட்டிலில் விழுந்தான். இரண்டு நாட்களாக அவனுக்கு ஈடுகொடுத்து பட்டினி கிடந்த வயிறு இப்போது அவனை அலைக்கழிக்க, உணவை வரச் செய்து உண்டவன் அமைதியாக அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு படுத்துவிட்டான்.
அன்று முழுவதும் நல்ல உறக்கம். தொல்லை செய்ய யாருமில்லாத நிம்மதியில் வேண்டிய அளவுக்கு உறங்கி எழுந்தவன் அன்றிரவு கடற்கரையில் வந்து அமர்ந்து கொண்டான்.
அலைகளின் ஆர்ப்பரிக்கும் சத்தம் அவன் உள்ளத்தை மெல்ல மெல்ல அமைதியாக்க, ஏனோ, காரணம் இன்றி கண்கள் கலங்கியது.
அப்படியே அந்த கடற்கரை மணலில் படுத்துக்கொண்டான் சக்தி. கண்களை மூடினால், மருத்துவமனையில் குற்றுயிராய் கிடந்த அவன் மீனாளின் முகம் தான் தெரிந்தது.
மீனாட்சி வெட்டுண்ட விஷயம் வெற்றியின் வழியாகத் தான் தெரிந்தது இவர்களுக்கு. மீனாட்சியுடன் உடன் படிக்கும் தோழி ஒருத்தி வெற்றிக்கு அழைத்து விஷயத்தை தெரிவித்து இருந்தாள்.
“அவளோட அப்பா அம்மாகிட்ட பொறுமையா சொல்லி கூட்டிட்டு வாங்க அண்ணா. நாங்க அதுவரைக்கும் இங்கேயே இருக்கோம்” என்று அவள் கூறியிருக்க, அடித்துப் பிடித்து ஓடியிருந்தான் அவன்.
செய்தி கேட்ட நிமிடம் முத்தையனுக்கும், சக்திக்கும் அவன் தகவல் கொடுத்துவிட, அடுத்த விமானத்தில் சென்னையில் இறங்கியிருந்தது சக்தியின் குடும்பம்.
மகளைப் பார்த்த நிமிடம் வள்ளியம்மை வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதற, அவரை தாங்குவதே பெரும் பாடாக இருந்தது. முத்தையன் எதுவும் பேசாமல் ஒரு ஓரம் அமர்ந்துவிட்டார்.
செயற்கை கருவிகளின் தயவால் மூச்சு விட்டுக் கொண்டிருந்த மகளின் நிலை அவரது மூச்சையே நிறுத்திவிடும் போலிருந்தது. மனிதர் அன்று மதியம் வரை தாக்குப்பிடிக்க, அதற்குமேல் முடியாமல் மயங்கி விழுந்திருந்தார்.
அவரையும் அதே மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை. அன்று இரவு வரையும் மருத்துவர்கள் எதையும் உறுதியாக சொல்லாமல் நேரத்தை கடத்திக் கொண்டிருந்ததில், சொக்கநாதர்,மனோன்மணி, தங்கபாண்டியன் என்று அத்தனை பேருக்கும் சேர்த்து அறை எடுத்து கொடுத்து அவர்களை அங்கே அனுப்ப முயன்றான் சக்தி.
வள்ளியம்மை இருக்குமிடம் விட்டு நகரமாட்டேன் என்று அமர்ந்துவிட, மற்றவர்கள் அத்தனைப் பேரையும் அனுப்பி வைத்து சக்தி அவருடன் இருந்து கொண்டான்.
அவனுக்கும் மீனாட்சியை விட்டு நகரும் எண்ணமில்லை. அரைமணி நேரத்திற்கு ஒருமுறை முத்தையன் இருக்கும் அறையையும் சென்று பார்த்துவிட்டு வந்தவன் அத்தையை விட்டு அகலாமல் அமர்ந்திருக்க, அடுத்தநாள் காலை விடிந்தும் விடியாமலும் வெற்றி வந்து நின்றான்.
சக்தி அவனை பார்த்தாலும் எதுவும் பேசவில்லை. ஆனால், வெற்றி அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் கூட இல்லை.
“சக்தி… மீனு எப்படி இருக்கா? நான் ஒருமுறை அவளைப் பார்த்துட்டு போய்டறேண்டா. நேத்துல இருந்து இங்கே தான் இருக்கேன். அப்பா என்னை உள்ளே விடவே இல்ல. ஒரே ஒரு முறை சக்தி” என்றவன் விட்டால் அழுதுவிடும் நிலையில் தான் இருந்தான்.
சக்தி பேச வாயெடுப்பதற்குள், “அடப்பாவி… இங்கேயும் வந்துட்டியா” என்று கத்தி விட்டார் வள்ளியம்மை.
“அத்தை” என்று சக்தி நெருங்க,
“எதுக்குடா இங்கே வந்த? என் மகளை கொன்னுட்டு தான் போவியா? பாவி… பாவி… உன்னை பெத்த புள்ளையாட்டம் தானே வளர்த்தேன். என் மகளை இப்படி கொண்டு வந்து போட்டுட்டியே. நீ நல்லா இருப்பியா?” என்று வெற்றியின் சட்டையை பிடித்துவிட்டார்.
“அத்தை” என்று சக்தி அவரை விலக்கிவிட முயற்சிக்க,
“விடுடா என்னை.” என்று அவனை உதறியவர், “என்னடா பாவம் பண்ணோம் உனக்கு. நீ எவளையோ இழுத்துட்டுப் போனா, உன்னை வெட்டி போட வேண்டியது தானே. இல்ல, உன்னோட ஓடி வந்தாளே அந்த கழுதை அவளை வெட்டணும். என் மகளை ஏன்டா இப்படி கூறு போட்டிங்க. ஐயோ… என் பிள்ளை வெட்டுப்பட்டு கிடக்கே. நான் கும்பிட்ட ஒரு சாமி கூட அவ கூட நிக்காம போச்சே.” என்று அழுது அரற்றியவர்,
“எனக்கு யாரும் வேணாம். யாரும் என் மகளை பார்க்கக்கூடாது. நீ இங்கே இருக்கவே கூடாது. போ…. போ வெளியே” என்று வெற்றியை பிடித்து தள்ளிவிட,
“அத்தை அவனை விடுங்க” என்று அவரை பிடித்து இழுத்து அமர்த்தினான் சக்தி.
“என் மகளுக்கு யாரும் வேண்டாம். என் மக எனக்கு வேணும் உயிரோட வேணும். என் மகளை நான் விடமாட்டேன். நான் விடவே மாட்டேன்” என்று விடாமல் அவர் புலம்பிக் கொண்டே இருக்க, வெற்றி அழுதபடியே மீண்டும் மருத்துவமனையின் வாயிலில் வந்து அமர்ந்துவிட்டான்.
அங்கு இருந்த பிள்ளையாரிடம், “அவளை கொடுத்திடுப்பா” என்று தான் நேற்றிலிருந்து அவனும் அழுது கொண்டு இருக்கிறான். இதை யார் வள்ளிக்கு சொல்வது.
வள்ளி விடாமல் புலம்பிக் கொண்டே இருந்தவர், ஒருகட்டத்தில் அரைமயக்கத்திற்கு செல்ல, அவரது கண்முன்னே மீனாட்சி மீண்டும் வெட்டப்படுவது போல் கனவு வந்து அவரை விழிக்கச் செய்ய, “ஐயோ மீனு” என்றபடி எழுந்தவர், நேரே மீனு வைக்கப்பட்டிருந்த அறைக்குள் தான் நுழைய முயன்றார்.
சக்தி இந்த முறையும் அவரை சமாளித்து அமர வைக்க, அமைதியாக வெகுநேரம் அமர்ந்திருந்தவர் என்ன நினைத்தாரோ, “சக்தி…” என்றார் தெளிவாக.
“சொல்லுங்க அத்தை” என்றவன் வேகமாக அவரை நெருங்க,
“நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன். கொடுப்பியா?” என,
“என்னத்தை இந்த நேரத்துல” என்றான் சக்தி.
“கொடுப்பியா” என்று அதிலேயே நின்றவர் அவன் தலையசைக்கவும், தன் முந்தானையை ஏந்தினார் அவனிடம்.
“அத்தை” என்று பதறியவனாக அவன் மண்டியிட, “என் பொண்ணை என்கிட்டே கொடுத்திடுய்யா” என்று அழுதார் அவர்.
“அத்தை”
“எனக்கு என் மக உசுரோட இருக்கணும் சக்தி. நான் என் அண்ணனுக்கு தங்கச்சி. உனக்கு அத்தை எல்லாமே முக்கியமான உறவு தான். ஆனா, எல்லாத்துக்கும் மேல நான் என் பொண்ணுக்கு அம்மா. ஒரு அம்மாவா எனக்கு என் பிள்ளை தான் முக்கியம்.”
“அத்தை”
“எனக்கு வேண்டாம். என் பிள்ளை உயிரை காவு கேட்கிற எந்த உறவும் எனக்கு வேண்டாம். எனக்கு என் மக வேணும் சக்தி. நீ என்கிட்டே கொடுத்திடு” என்று அவர் அழ,
“புரியல அத்தை”
“என் மக பிழைச்சு வந்தா, அவளை மொத்தமா என் மகளாவே கொடுத்திடு சக்தி. இந்த கல்யாணம், நிச்சயம் எதுவும் வேண்டாம். எனக்கு என் மக உசுரோட இருந்தா போதும்” என்ற அவரது வார்த்தைகளில் உடைந்து போனான் சக்தி.
“அத்தை இதுக்கும், கல்யாணத்துக்கும்…”
“அவனுங்க என் மகளை வாழவே விட மாட்டானுங்க சக்தி. உன்னோட நிச்சயம் பண்ணதுக்கே அவளுக்கு இந்த நிலைமை. ஒவ்வொரு நிமிஷமும் என் மக உயிரோட என்னால விளையாட முடியாது. என் பொண்ணை விட்டுடுங்கடா” என்று கையெடுத்துக் கும்பிட்டார் அவர்.
அவர் கையை தன் இருகைகளாலும் பிடித்து கீழே இறக்கியவன் கண்களிலும் கண்ணீர் கரை தட்டி இருக்க, “அழாதீங்க அத்தை” என்று அவர் கண்ணீரை துடைத்துவிட்டான்.
வள்ளி விடாமல் தேம்ப, “அவளுக்கு ஒன்னும் ஆகாது. உங்க பொண்ணு அவ. நீங்க எடுக்கிறது தான் முடிவு. அழாதீங்க” என்றவன் சட்டென்று எழுந்து விலகிச் சென்றுவிட்டான்.
அன்று முழுவதும் அவர்களை கண்ணீரில் கரைய விட்டவள் அன்றிரவு உயிர் பிழைத்திருக்க, அடுத்த கணமே கிளம்பிவிட்டான் சக்தி.
அதற்குமேல் அங்கிருக்க மூச்சு முட்டுவது போல் இருந்தது அவனுக்கு. படுத்திருப்பவள் எழுந்து என்ன சொல்வாளோ? என்ன கேட்பாளோ? என்பது தாண்டி, தான் அவளுக்கு என்ன பதில் சொல்வோம் என்று புரியவில்லை அவனுக்கு.
பெரிதாக சொல்லிவிட்டான். ‘நீங்க எடுக்கிறதுதான் முடிவு‘ என. அதை ஏற்றுக் கொள்ளும் மனத்திடம் அவனுக்கே இல்லையே. பின்னே, அவளிடம் என்ன சொல்வான் அவன்?
அதையெல்லாம் வள்ளியம்மை பார்த்துக் கொள்வார் என்று தோன்ற கிளம்பிவிட்டான். இதோ, அவன் கிளம்பியும் முழுதாக ஒருநாள் முடிந்திருக்க, இந்நேரம் அவனைத் தேட தொடங்கி இருப்பார்கள்.
அப்படியெல்லாம் தப்பித்தும் ஓடிவிட முடியாது அவனால். தலைமகன் ஆகிற்றே. அதுவும் இப்போது அவன் தலைவிக்கும் சேவகன். அவளிடம் இருந்தும் அத்தனை எளிதில் தப்பிவிட முடியாது.
சுலபத்தில் விட்டுவிடுவாள் என்று தோன்றவில்லை சக்திக்கு. இப்போது அவன் விலகி வந்தது வள்ளியம்மைக்காக. இந்த விலகல் அவருக்கு குறைந்தபட்ச நிம்மதியைக் கொடுக்கும் என்று கிளம்பி வந்துவிட்டான்.
ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்பதில் அவனுக்கும் தெளிவு இல்லை. ஆனால், என்ன வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்று ஒரு புது உறுதி பிறந்திருக்க, மூன்று மணி அளவில் எழுந்து அறைக்கு வந்தவன் குளித்து முடித்து அதிகாலையில் சண்முகரை தரிசித்து மதுரைக்கு கிளம்பிவிட்டான்.
மதுரை வந்தபின் அவன் அலைபேசியை உயிர்ப்பிக்க, வரிசையாக அழைப்புகள். முத்தையன் தொடங்கி காத்தன் வரை அத்தனைப் பேரிடமும் பேசிவிட்டு, தன் வேலைகளை கவனிக்க தொடங்கினான்.
இங்கு சென்னையிலோ கண் விழித்த கணம் முதலாக தன்னவனின் தரிசனம் காண காத்திருந்தாள் மீனாள். யாரிடமும் இதுவரை ஒற்றை வார்த்தைக்கூட பேசி இருக்கவில்லை.
யார் என்ன கேள்வி கேட்டாலும், அத்தனைக்கும் வெறும் தலையசைப்பு மட்டும்தான்.
பேச முடியலையாடா என்றதற்கு மறுப்பாக ஒரு தலையசைப்பு.
இறுதியில், மருத்துவர் வந்து நிற்க, “எனக்கு பேச முடியுது டாக்டர்” என்றாள் அவரிடம்.
வள்ளியம்மை, ” என்னடா மீனு. பேசுடா அம்மாகிட்ட” என,
‘என்ன பேசுவாள் அவள்‘
கண்ணிமைக்கும் நொடியில் அவள் யோசிக்கக்கூட தயங்கும் கொடூரம் நடந்து முடிந்திருக்க, ஏன், எதற்கு என்று ஒன்றும் புரியாமல் அத்தனை வலி, வேதனைகளையும் தாங்கி அவள் பிழைத்திருக்க, ‘எல்லாமே நீதான்‘ என்றவன் எங்கும் கண்ணில் படவில்லை.
‘என்ன யோசிக்க முடியும் அவளால்‘ அவன் வராமல் யாரிடமும் பேசும் எண்ணமும் இல்லை அவளுக்கு. கண்களை மூடி மீண்டும் பழையபடி ஓய்வெடுக்க தொடங்கிவிட்டாள்.
அன்று மட்டுமில்லாமல், அடுத்து வந்த நாட்களிலும் அவள் இதையே தொடர, வள்ளியம்மையும், முத்தையனும் தலையைப் பிய்த்துக் கொண்டனர்.
இத்தனைக்கும் ஒரு வார்த்தை “சக்தி எங்கே” என்று யாரிடமும் கேட்கவில்லை.
“ஏன் கேட்கணும்? நீ வரும் போது வா” என்று காத்திருப்பை தொடங்கினாள் அவள்.