Advertisement

அத்தியாயம் 7

நீ பூமழையா..

இல்லை புயல்மழையா

என்னை செழிக்க வைப்பவனா

இல்லை வேரோடு

வீழ்த்த போகிறவனா

எதுவும் தெரியாமல்

வாழ்ந்து விடுவேன் என்ற

நம்பிக்கையில் உன் பாதம்

பின்பற்றி நான்….

   அதிகாலையில் எழுந்தவளுக்கு மெயிலில் காத்திருக்கும் அணுகுண்டைப் பற்றி தெரியாமல் நிதானமாகவே வேலைக்கு கிளம்பினாள்.

        காலை உணவை முடித்துக்கொண்டு வேலை பார்க்கும் இடத்திற்கு தோழிகளோடு சென்று சேர்ந்த பிறகு தான், மெயிலை ஓப்பன் செய்து பார்த்தாள்.

      அப்போது தான் மாப்பிள்ளை பற்றிய தகவல்கள் அதில் இருந்ததை பார்த்தாள். முதலில் போட்டோவையும் அவனை பற்றிய தகவலையும் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாள்.

        சூர்யா அண்ணா இதுக்கு எப்படி சம்மதிச்சாங்க, என்ற யோசனையோடு அமைதி காத்தாள், ஏன் இந்த முடிவு என்ற எண்ணம் முதலில் தோன்றியது. ஏனெனில் அவர்கள் குடும்பத்தில் அவர்கள் இனத்தில்தான் முடிப்பார்கள். ஏன் இந்த திடீர் மாற்றம் இப்போது என்ற எண்ணம் முதலில் தோன்றியது, பின் இந்த திருமணத்திற்கு வீட்டிலுள்ளவர்கள் எப்படி சம்மதித்தார்கள். இனியா, முகிலனின் சம்மதம் எப்படி கிடைத்தது, என்ற யோசனையோடு வேலையில் கவனம் செலுத்த முடியாமல்,  நட்புகளிடம் கொஞ்சம் வேலையை பாருங்கள், என்று சொல்லிவிட்டு சற்று நேரம் தனது கணினியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

          முகிலனை அவளுடைய பிளஸ்டூ படிக்கும் காலத்தில் பார்த்தவள் தான்., அதன் பிறகு இப்பொழுது தான் போட்டோவில் பார்க்கிறாள். இடையே ஒரே தெருவில் இருந்தாலும் எதிர்த்திசையில் இரண்டு வீடு தள்ளி இருந்தாலும் பார்த்தது கிடையாது.

 அவனுக்கும், அவளுக்கும் இருக்கும் பிரச்சனை வரும் என்று தெரியும்… தங்கை பேச்சை கேட்டுக்கொண்டு ஏதாவது பிரச்சினை கிளப்பி விடுவான்., என்றே அவனை  காணாமல் ஒதுங்கி செல்வாள்.

 கீதா இந்த விஷயம் தெரிந்திருக்குமா., கீதா தெரிந்திருந்தால் சொல்லாமல் இருக்க மாட்டாளே என்ற எண்ணத்தோடு அமைதி காத்தவள் முதலில் யாரிடம் பேசவேண்டும் என்ற யோசனையோடு இருந்தாள்.,

முதலில் சூர்யாவிடம் பேசுவதா, பெற்றோர்களிடம் பேசுவதா,  இல்லை கீதாவிடம் பேசுவதா என்ற யோசனையோடு சற்று நேரம் அமைதி காத்தாள்.., என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ள முடிவெடுத்து முதலில் பெற்றவர்களுக்கு தொலை -பேசியில் அழைத்தாள்…

முதலில் அவள் அப்பாவிற்கு தான் அழைத்தாள். போனை எடுத்த உடன் அவளின் அப்பா மதிம்மா பாத்தியாடா., புடிச்சிருக்கா., உனக்கு ஓகே தானே என்று கேட்டார்.

         அப்பாவின் சந்தோஷமான குரலில் அவள் எதுவும் பதில் சொல்ல முடியாமல்., என்னாச்சுப்பா, எதனால இப்படி ஒரு முடிவு ஏன் எப்படிப் பேசினீங்க.., என்று கேட்டாள்.

           அன்று அங்கு நடந்த பிரச்சினைகள் அனைத்தும் விலாவரியாக சொன்னார்.

    அவர் சொல்லி முடித்ததும் “ஒத்துவரும் நினைக்கிறீர்களா” என்று கேட்டாள்.

      மறுபடியும் அவர்கள் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தை   அனைத்தும் ஏற்கனவே இரு குடும்பத்தாரும் பகிர்ந்து இருந்ததால்.., அதையும் சொன்னார்.  இனியாவிற்கு சம்மதம் இல்லை என்பதையும் தெரியப்படுத்தினார்.

      இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும்  கேட்டாள். “உனக்கு ஏதும் பிரச்சனையா என்று அவர் கவலை தேய்ந்த குரலில் கேட்கவும்.,அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா என்று பேச்சை நிறுத்தி விட்டாள்”….

     அவர் பேசி முடித்த பின் சற்று அமைதி காக்கவும்., வேறு எதுவும் பேசத் தோன்றாமல் சூர்யாவிடம் கீதாவிடம் இதை பற்றி எதுவும் கேட்கத் தோன்றாமல் அமைதியாக இருந்தாள். சற்று நேரத்தில் சூர்யாவே  அவளுக்கு அழைத்திருந்தான்..

        “ஏன் மதிம்மா கோவமா…? ” என்று போனை எடுத்தவுடன் கேட்டான்.

     “அதெல்லாம் ஒன்னும் இல்ல ண்ணா., என்ன பண்ணனும் தெரியல யோசிச்சிட்டு இருக்கேன். எனக்கு ஒரு மைண்ட் செட்  இன்னும் ஆகல., நான் யோசிக்கல ண்ணா இவங்களா இருப்பாங்கன்னு.. சின்ன கெஸ்ஸிங் கூட., ஏன் அந்த மாதிரி தோண கூட இல்ல…  எப்படி அண்ணா உங்க வீட்ல தாத்தா ரொம்ப பார்ப்பாங்க இல்ல”.. என்று கேட்டாள்.

         “இல்லை தாத்தா பற்றி எல்லாம் பிரச்சனை இல்ல., இங்க சொந்தம் அப்படிங்கறதை விட வெளியே இருந்து எடுக்கிறது இன்னும் நல்லது ன்னு தாத்தா க்கு தோன்னுச்சி போல, அதுவும் உன்னை அப்படி ன்னு சொன்னதும் தாத்தாவுக்கு முழு சம்மதம்., உன்ன பத்தி நல்லாவே தெரியும், வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரியும்,” அதனால தான் என்று சொன்னான்.

    அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவும்., “ஏன் மா ஏதும் கோபம் னா சொல்லிருடா”., என்று சொன்னான்.

        “ஒன்னும் இல்லன்னா இது இரண்டு குடும்பத்துக்கான கௌரவப் பிரச்சனை., யாருக்கு என்ன எழுதி இருக்கோ., அதுதான் நடக்கும் விடுங்க பார்த்துக்கலாம்”., என்று சொன்னாள்.

       “இல்லை நீ ஏதோ கோவமா பேசுற மாதிரி இருக்கு., மாமா ட்ட இப்படித்தான் பேசினியா, மாமா வருத்தப்பட்டு எனக்கு போன் பண்ணினாங்க., மாமா போன் பண்ணதுக்கு அப்பறம் தான், நான் உனக்கு காலையில ஃபோட்டோ அனுப்புனது ஞாபகம் வந்துச்சு., சாரிடா நானும் போன் பண்ணி இருக்கணும்., கொஞ்சம் வொர்க் டென்ஷன்ல, பிஸியா இருந்துட்டேன்., கண்டிப்பா உன் லைஃப்ல எந்த பிரச்சினையும் வராது, நீ என்னை நம்பலாம். முகிலனும் முன்னாடி மாதிரி கிடையாது அவனோட வேலை அப்படி., அவனோட வேலைக்கு ஏத்தாப்பல, அவனோட மைண்ட் செட் மாறி இருக்கு.., அவன் இப்பவே ஓரளவுக்கு என்ன,  இந்த மாதிரி பிரச்சனை வரும்போதுதான் உன் பக்கமும் புரிஞ்சிட்டு தான் பேசுறான்., என இனியா விடம் நிறைய பேசினான்” என்று சொன்னான்.

         “பிரச்சினைகள் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது., நான் அட்ஜஸ்ட் பண்ணி போகலாம், கண்டிப்பாக முடியும். ஆனா எப்படி இருக்கும் ன்னு எனக்கே தெரியல.., கண்டிப்பா நானும் சாதாரண மனுஷி  தான். எனக்கும் எல்லாவித வருத்தங்களும் வரலாம்., சண்டைகள் சமாதானங்கள் எல்லாமே இருக்கும். ஆனால்  எனக்கு புரியல.,   இப்ப வரைக்கும்  என்னால இதை ரியலைஸ் பண்ண முடியல.,  பட் ஒரு பயம் மனசுக்குள்ளே இருக்கு., அது என்னமோ உண்மைதான்., எனக்கு ஓகே தான்., யாரோ தெரியாத ஒருத்தரை பண்றதை விட., இந்த மேரேஜ் ஓகே., எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ண்ணா” என்று சூர்யா மனது வருத்தப்படக் கூடாது., என்பதற்காக மதி பேசினாள்.

      அதை புரிந்து கொண்ட சூர்யா “நான் பாத்துக்குறேன், எல்லாம் நல்லபடியா நடக்கும்  எந்தப் பிரச்சினையும் வராது,  எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு, நானும் அதை தான் சொன்னேன் என் தம்பியை கூட நான் எந்த ஒரு விஷயத்துலையும் சந்தேகப்பட்டுருவேன்,  ஆனா கண்டிப்பா உன்ன சந்தேகப்பட மாட்டேன். என்ன உன்ன பத்தி எனக்கு முழுசா தெரியும்” என்று சூர்யா சொன்னான்.

      “சரி அண்ணா பார்த்துக்கலாம்” என்று சொன்னாள்.

        அதன் பிறகு சூர்யா மெதுவாக “ஒரு டூ டேஸ் ல முகிலன் உனக்கு போன் பண்ணுவான்,  பேசிக்கோ இதுக்காக ன்னு இல்லை எதுவும் உங்களுக்குள்ள பிரச்சினைகள் வரும் முன்  முதல்ல  இரண்டு பேரும் பேசிருங்க” என்று சொன்னான்.

      “பார்க்கலாம் ண்ணா., எனக்கு அவங்ககிட்ட பேச முடியும்னு தோணல., எனக்கு தெரிஞ்சி அவங்க என்ட்ட பேசினது ரொம்ப ரேர். நானும் அவங்க கிட்ட பேசினது ரொம்ப அதிகம் கிடையாது., ஏதோ ஒன்னு ஒன்னு பேசி இருப்போம்…  எனக்கு தெரிஞ்சு லாஸ்ட்டா பேசினது காலேஜ் விஷயத்தில் அதுக்கப்புறம் நான் அவங்களை பார்த்ததுகூட இல்லை., மே பி அவங்களும்   பார்த்திருக்க முடியாது.,  ஓகே  எது நடக்குமோ அது நடக்கும் விட்டுருங்க..,  இதுக்கு பிறகு இத பத்தி பேச வேண்டாம்” என்று அவள் பேசும் போதே அவளுடைய குரலில் வந்த நடுக்கமும் சூர்யாவிற்கு கொண்டு சற்று வருத்தமாகத் தான் இருந்தது.

       “எல்லாம் சரியாக போகும் நம்புமா” என்று சொல்லி போனை வைத்தான்.

        பின்பு கலையிடம் அத்தனை விஷயங்களையும் பகிர்ந்து கொண்டபோது கலை சொல்லியது இதுதான்., “ஒரு பெண்ணாக அவள் மனதின் பயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது., எப்போதும் தங்கைக்காக பேசி அவளோடு சண்டை போட்டவன் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழப் பதிந்திருக்கும், அதுமட்டுமல்லாமல் அவனோடு ஒரு வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பயமும் வந்து இருக்கும்., எல்லாவற்றிற்கும் தங்கை சொல்வதை கேட்பவன் இதிலும் கேட்க மாட்டான் என்று என்ன நிச்சயம் என்ற பயமும், அதனால்தான் அவள் பயப்படுகிறாள்”, என்று எனக்கு தோன்றுகிறது. “நீங்கள் எதற்கும் உங்கள் தம்பியிடம் பேசுங்கள்” என்று சொல்லி கலை சொன்னாள்.

         “கண்டிப்பா பேசறேன்” என்று சொல்லிவிட்டு சூர்யாவின் வேலை முடிந்ததும் அதற்கு தகுந்தார் போல் முகிலனை அழைத்தான்.

      முகிலன் அந்த நேரம் முக்கியமான கேஸ் விஷயமாக வெளியே இருந்ததால் வீட்டிற்கு வந்த பிறகு அவனுக்கு அழைப்பதாக சொன்னான். “சூர்யாவோ முக்கியமான விஷயம் பேசவேண்டும் மறந்து விடாதே என்று சொல்லி வைக்கவும்” முகிலனுக்கு யோசனை ஓடிக் கொண்டிருந்தது.  ஒருவேளை வேறு ஏதும் திருமணத்தில் பிரச்சனை வந்துவிட்டதா இல்லை, அவள் சம்மதிக்க வில்லையோ  என்ற எண்ணமும் தோன்றியது. இதுவரை முகிலன் அவள் போட்டோவை கூட கேட்கவில்லை…

      வீட்டிற்கு வந்து ரெப்ரஸ் செய்து கொண்டு சூர்யாவிற்கு அழைத்தான். அவனது வேலை மட்டுமின்றி கொஞ்சம் அதிக அலைச்சலும் கூடியது. எனவே ஏற்கனவே சோர்வாக இருந்தவன் பேசும்போது குரலும் சோர்வாக தான் இருந்தது. “ஏன் ஒரு மாதிரி பேசுற” என்று சூர்யா கேட்டான்.

Advertisement