முகிலன் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் கண் மூடி திறக்கும் முன் ஓடியது போல ஓடிவிட்டது., அவனுக்கும் வயது 29 முடிய போகிறது. அதனால் கல்யாணம் பேச வேண்டும் என்று வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். முகிலனிடம் கேட்டதற்கு சரி என்று சம்மதித்துள்ளான். அவர்கள் சொந்தத்திலேயே பெண் பார்க்கலாம் என முடிவு செய்து பேசிக்கொண்டனர். பெரும்பாலும் அவர்களுடைய சொந்தங்கள் அந்த பகுதியிலே இருப்பதால், பேசி முடிக்க வீட்டிற்கு போக வேண்டாம். முதலில் கோவிலில் வைத்து பேசி முடிப்போம். அதற்கு பின்பு வீட்டிற்கு சென்று பேசிக் கொள்ளலாம் என்று பெரியவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
இவர்கள் வீட்டு சார்பாக யார் யாரை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதை பேசிக் கொண்டிருக்கும் போது முகிலனின் தாத்தா தான், “பாலா ராஜனுக்கும் ஒரு வார்த்தை சொல்லிரு, அவன் உன்னுடன் கூடவே இருப்பவன் சூர்யாவின் திருமணத்தின் போதும் இனியாவின் திருமணத்திலும் பேசும்போது அவனும் நம் வீட்டு சார்பாக இருந்தான். அதனால் இந்த திருமணத்திற்கும் பேசும் போது அவன் உடன் இருக்கவேண்டும்” என்று சொன்னார். அது எப்போதும் செய்யும் வழக்கம் தான் அதனால் சரி என்று பேசிக் கொண்டனர்.
மதியும் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் முடிந்து விட்ட காரணத்தினால் அவள் வீட்டிலும் ஏற்கனவே ஜாதகப்பொருத்தம் பார்க்க தொடங்கியிருந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமையாததால் காத்திருக்க வேண்டியது இருந்தது.
மதி மாப்பிள்ளை பற்றியோ வேறு எதைப் பற்றியோ பேசாத போதும் ஸ்ரீராமும் சூர்யாவும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர். எந்த மாப்பிள்ளை பற்றிய தகவல் வந்தாலும் சூர்யாவிடம் ஸ்ரீராம் சொல்லிவிடுவான். அதற்கு தகுந்தார் போல் சூர்யாவும் விசாரித்து படிப்பு பற்றி, குடும்பம் பற்றி, விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக சொன்னதால் இரண்டு மூன்று வந்த இடங்களையும் சூர்யாவை வேண்டாமென தட்டிக் கழிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அவன் சொன்ன ஒரே விஷயம் மதியின் தன்மை க்கு இந்த இடம் சரிவராது என்பது மட்டுமே..
அங்கு மதி வேலை செய்யுமிடத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகவே பொழுதைப் போக்கி கொண்டிருந்தாள். அவள் வேளையிலும் நல்ல முன்னேற்றம் இருந்தது, நல்ல திறமையான பெண் என்ற பெயர் பெற்றிருந்தாள். எனவே அவளது படிப்பு அவளது திறமை என அதற்கு தகுந்தார் போல் அவர்கள் வீட்டிலும் வரன் தேடிக் கொண்டிருந்தனர். அவளும் தன் மேற்படிப்பின் இரண்டாம் வருடத்தை இந்த வருடத்தோடு முடித்திருந்தாள்..
சூர்யா வீட்டிலும் அவ்வப்போது மாப்பிள்ளை பற்றி பேசும் போதும் சரி., அவளுக்கு பார்க்கும் வரன் எப்படி அமைய வேண்டும் என்று சூர்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதும்., இனியா விற்கு காதில் புகை வராத குறை தான்.
அவளுக்கு என்ன அப்படி தனித்துவம் கொடுத்து பார்ப்பது என கேட்கும் போது, “அவங்க வீட்ல பார்க்காங்க., உனக்கு என்ன செய்து” என்று வசந்தி திட்டினாலும் ஏன் இவள் இப்படி இருக்கிறாள், என்று சில சமயம்அவளை பெற்றவர்களாக வருத்தப்பட தான் செய்தனர்.
முகிலன் இடம் அதைப்பற்றி ஒரு முறை இனியா சொல்லும் போது, அவனுடைய பதவியும் அவனுடைய வயதும் அனுபவமும், அவனை முதன்முதலாக அவளை கண்டிக்க செய்தது. “அடுத்த வீட்டு பொண்ணு விஷயத்தில் நம்ம தலையிடக்கூடாது, தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே, அந்த பொண்ணு பார்த்து பேசி கிட்ட தட்ட ஐஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும்னு நினைக்கிறேன். நம்மள பார்த்தாலே ஒதுங்கி போவது அப்படி இருக்கும்போது தேவையில்லாம போய் பிரச்சனை இழுக்கக் கூடாது” என்று சொன்னான்.,
“சூர்யா அண்ணன் அவளுக்கு பார்த்து பார்த்து மாப்பிள்ளை பார்க்கிறான்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…
“அவ குணம் அவனுக்கு தெரியும் அதனால் பார்த்திருப்பான். உன்கென்ன., நீ பேசாம இரு”., என்றான்.
நல்ல நாள் பார்த்து அனைவரும் கோயிலுக்கு சென்று அங்கு வைத்து பேச வேண்டும் என முடிவு செய்தனர். ஏற்கனவே பெண்ணைப் பற்றியும், இவனைப் பற்றியும் இரு வீட்டினருக்கும் தெரியும் என்பதால் , அனேகமாக பேசி தேதி குறிக்க வேண்டியது தான் மிச்சம் என்ற நினைப்போடு கோயிலுக்கு சென்றனர்.
விசேஷம் என்று ஒன்று வந்தால் கண்டிப்பாக அங்கு பிரச்சனை என்று ஒன்று இருக்கும். அதுவும் கூட இருந்தே பேசிக் கெடுக்கும் சொந்தங்களும் அதிகமிருக்கும்., அப்படித் -தான் அவர்களுடைய வீட்டிலும் ஒருவரின் வாய் வார்த்தை மூலமாக பிரச்சினை கிளம்பியது..
திருமணம் பேசி முடிக்கும் போது கொடுக்கல்-வாங்கல் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். எவ்வளவு தான் வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்றாலும், இப்போது எல்லாம் அது கௌரவ பிரச்சனை ஆக பார்க்கப்படுகிறது. அப்போது முகிலனின் அப்பா “எங்க வீட்டில அந்த மாதிரிலாம் பிரச்சினை கிடையாது. உங்க பொண்ணுக்கு நீங்க செய்யறதை செஞ்சு அனுப்புங்க” என்று சொன்னார்.
இவர் சாதாரணமாகவே சொன்னாலும் பெண் வீட்டின் பக்கத்தில் உள்ள பெரியவர் “இப்ப உள்ள காலத்துல காசு பணத்திற்கும், பெருமையா வெளியே பதவிய சொல்லிக்கவும் தான், போலீஸ் அதிகாரி க்கு பொண்ணு கொடுக்குறது எல்லாம்., அது மட்டும் இல்லாமல் போலீஸ்காரனுக்கு பொண்ணு கிடைப்பதே பெரிய விஷயம் இதுல நீங்க பெருந்தன்மையா ஒன்னும் வேண்டாம் சொல்ற மாதிரி சொல்லிக்கிறீங்க ப்பா” என்று சொன்னார்.
மாப்பிள்ளை வீட்டின் பக்கத்தில் உள்ள பெரியவர் ஒருவர் “அது என்ன அப்படி சொல்லிட்டீங்க, அவனோட பதவிக்கும் அவனோட தகுதிக்கும் அவனுக்கு என்ன பொண்ணு கிடைக்காமலா இருக்கும்., போலீஸ்காரங்க ன்னா, பொண்ணே கிடைக்காது என்கிற மாதிரி பேசுறீங்க” என்று சொன்னார்.
“இப்போது உள்ள போலீஸ் காரங்க, எல்லாம் என்ன எப்படி இருக்காங்கன்னு தெரியாமலா இருக்கோம். பார்த்துகிட்டு தானே இருக்கோம் எவ்வளோ பிரச்சனை வருது, டிவியில பார்க்காமலா இருக்கோம்”. என்று அவர் பதிலுக்கு பேசினார்.
” ஒருத்தரை வைத்து அத்தனை பேரையும் எடைப் போடக்கூடாது” என்று மற்றொருவர் சொன்னார்.
அங்கு பேச்சுவார்த்தை பெரிதாக தொடங்கியது. அந்த சூழ்நிலையில் தான் மாப்பிள்ளை வீட்டு சார்பாக பேசிக் கொண்டிருந்த ஒருவர் சட்டென முகத்தில் அடித்தால் போல் “இந்த பொண்ண விட்டா வேற பொண்ணே கிடைக்காதா” என்று பேசவும் அவர்கள் சொந்தத்திலேயே ஒருவர் பேசவும் யாரும் பதில் சொல்ல முடியாத சூழ்நிலையில் அங்கு ஒரு நிசப்தமான அமைதி நிலவியது.
அந்நேரத்தில் சூர்யாவிடம் மெதுவாக சென்ற முகிலன் “கல்யாண பேச்சை இத்துடன் நிறுத்த சொல்லு., எனக்கு இது அசிங்கமா இருக்கு அப்படி யாரையும் போய் கெஞ்சி எல்லாம் பொண்ணு கேட்க வேண்டாம்., எனக்குன்னு ஒருத்தி பிறந்திருப்பா அவ வரும்போது கல்யாணம் பண்ணிக்கலாம் விடு” என்று சொன்னான்.
” டேய் முப்பது வயசு பொறக்க போகுது இன்னும் ஒரு மாசம் தாண்டா இருக்கு”., என்று சொன்னான்.
“விதி என்ன நடக்கனும் விதிச்சி இருக்கோ அது தான் நடக்கும்., எப்போ கல்யாணம் பண்ணனும் ன்னு இருக்கோ அப்ப தான் பண்ண முடியும்., என்னைய கேவலப்படுத்தாம பேச்சை விட சொல்லு., என்று சத்தம் போடவும்”அவர்கள் இருவரும் அமைதியாக ரகசியமாக பேசுவதை பார்த்த பெண் பார்க்க வீட்டார்கள் மறுபடியும் பேசத் தொடங்கினர்…
“மாப்பிள்ளை தம்பியும், அண்ணனும் என்ன ரகசியம் பேசுறீங்க…, என்ன விஷயம் எதுனாலும் சத்தமா பேசுங் -கப்பா”என்று சொன்னார்.
” நாங்க வந்து கெஞ்சிட்டு பொண்ணு கேட்கணும்னு அவசியமில்லை., உங்க பொண்ண நீங்களே வச்சுக்கோங்க”. என்று முகிலன் சத்தமாக சொல்லிவிட்டான்.
“நாங்க பொண்ணு வீட்டுக்காரங்க., வேற வேலை இல்லாமல் தான் இங்க உட்கார்ந்து இருக்கோமா… இவ்வளவு சாதாரணமாக பதில் சொல்றீங்க”. என்று பெண் வீட்டார் பதிலுக்கு பேசினர்.
“ஒரு வீட்ல பொண்ணு இருக்கு., ஒரு வீட்டில் மாப்பிள இருக்குன்னா பேசத்தான் செய்வாங்க, அதுக்காக நீங்க வாய்ல வருவதை எல்லாம் பேசுவீங்களா”, என்று மாப்பிள்ளை வீட்டு சார்பாக பேசிக் கொண்டிருந்த ஒருவர் பேசினார்.