Advertisement

15 வருடங்களுக்கு பிறகு..

சாரதா.. தன்னுடைய பொட்டிக்கின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தாள். இது அவளின் தலைமை அலுவலகம். நகரத்தில் நாலு கிளைகள் உள்ளது. அதன் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை. 

மாலையில் இனியன் காரெடுத்து வந்தான் அன்னையை அழைத்து செல்லுவதற்கு. இனியன் இப்போது மெடிசன் படிக்கிறான் இரண்டாம் வருடம். இனியன் அப்படியே பரணி போல பொறுப்பான பிள்ளை. அன்னையையும் மாமனையும் பார்த்து வளர்ந்ததாலோ என்னமோ.. ஒரு நிதானம் இனியனிடம் வந்துவிட்டிருந்தது.

இப்போது அப்படியே அன்னையை அழைக்க காரெடுத்து வந்துவிட்டான், கல்லூரி முடித்து. 

உமேஷ், அப்படியே நேர் எதிர். பனிரெண்டாம் ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கிறான். பூச்சி, புழு.. செடி கொடி.. தன் அன்னையின் பொட்டிக்.. அத்தையின் தோட்டம்.. தன் மாமாவின் பிள்ளைகள்.. தன் நண்பர்கள் என எல்லாவற்றையும் பற்றி வீடியோ போடுவான். இதில் அவனின் குரு.. காயத்ரி அத்தைதான். இப்போதெல்லாம் அவளின் பிள்ளைகள்.. கனிஷ்கா.. கிர்த்திக்.. தொடருகின்றனர்.

உமேஷ், அதிக செல்லம் வீட்டாருக்கு. அவனின் போக்கில் விட்டு விட்டனர். இனியன் பொறுப்பாகிவிட்டான். இன்று தன் மாமா மகள் கனிஷ்காவின் பதிமூன்றாம் பிறந்தநாள் விழா. அதனால் எல்லோரும் பரணியின் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். உமேஷ், தன் வண்டி எடுத்துக் கொண்டு நேரமாக வந்துவிட்டிருந்தான். உமேஷ்தான், ஆர்டர் செய்திருந்த கேக் வாங்கி வருவதாக ஏற்பாடு. அதனால் முன்பே கிளம்பிவிட்டான்.

ம்.. கமலநாதன், எங்கே என இவர்களும் தேடவில்லை.. அவனும் தேடி வரவில்லை. அதற்கு அவசியமே இல்லாமல் பிள்ளைகள் உறவுகளின்  கண்காணிப்பில் வளர்ந்தனர்.

கமல், தன் அன்னை கௌசல்யாவின்  இறப்பின் போது.. அதாவது நான்கு வருடம் முன்பு வீடு வந்திருந்தான்  கமல். கார்த்திக்கு அடையாளம் தெரியவில்லை முதலில். 

கௌசல்யாவிற்கும், மகன் மீதிருந்த அக்கறை வருடங்கள் ஆக ஆக குறைந்து போகிற்று.. தன் தந்தையின் இறப்பிற்கு கூட கமல் வரவில்லை.. அவனை போனில் தொடர்பு கொண்ட போது.. அந்த எண் உபயோகத்தில் இல்லை என வந்தது. அவனின் அலுவலகத்திற்கு அழைத்தான் கார்த்திக்.. அப்போதுதான் தெரிந்தது, கமல் இங்கு வேலை செய்யவில்லை.. சிங்கப்பூர் சென்றுவிட்டான் என. வீட்டில் யாரிடமும் தகவல் சொல்லவில்லை.. ஏன், அன்னையிடம் கூட பேசவில்லை தகவல் சொல்லவில்லை.

கௌசல்யா மனம் வாடி போனார்.. தன்னுடைய எல்லா சேமிப்பையும் நகையையும் கொடுத்தார்.. கணவரிடம் வாதாடி.. சொத்தாக இல்லாமல் கமலுக்கு என ஒரு தொகையை வாங்கிக் கமல் அக்கௌன்ட்டில்.. அவன் சொல்படி சேர்த்தார். ஆனால், மகன் தன்னிடம் ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டானே.. தலைமகன் தந்தையின் இறுதி காரியத்திற்கு கூட தகவல் சொல்ல முடியாத நிலையில் சென்றுவிட்டானா.. என கோவம்தான். 

கௌசல்யாவின் கோவம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே.. வேண்டும் என்றால்.. அவன் எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும்.. மகனை தாங்கினார். வேண்டாம்.. என் கணவரின் இறுதி காரியத்திற்கு கூட வரவில்லை.. எனவும் வெறுப்பு வந்துவிட்டது. முழுவதுமாக மகனை வெறுத்துவிட்டார். காலம் கடந்து எல்லாம் இழந்துதான் உணர்ந்தார் அன்னை. அதில் அவரின் உடல்நலம் பின்தங்கியது. அடிக்கடி மருத்துவமனை சென்றார். கணவர் இறந்து எட்டு மாதத்தில் கௌசல்யாவும் இறைவனடி சேர்ந்தார்.

கார்த்திக், மெயில் செய்து.. அதை கமல் பார்த்துவிட்டு வருவதற்கு பத்துநாட்கள் ஆனது. அப்போதுதான் குடும்பத்தார் யாருக்கும் கமலநாதனை அடையாளமே தெரியவில்லை. மெலிந்து ஓய்ந்த தோற்றமாகதான் இருந்தான். யாரும் பெரிதாக கமலநாதனை என்னவென கூட கேட்கவில்லை. காயத்ரிதான், கமல் தங்கியிருந்த நான்கு நாட்களும் அண்ணனுக்கு காபி கொடுப்பது உணவு கொடுப்பது என இருந்தாள்.

உமேஷ் சென்று பேசினான் தன் தந்தையிடம்.. கமல், அதிர்ந்துதான் போனான்.. மகனின் உயரம்.. பேச்சு.. தோரணை கண்டு. தந்தையும்  ஆவலாக மகனோடு பேசினான்.. ஆனால், அதற்குமேல் உமேஷ் நெருங்கவில்லை தன் தந்தையிடம். உமேஷின் வருகை கமலின் மனதில் தன் பெரிய மகனின் வரவையும் எதிர்நோக்க வைத்தது. ஆனால், இனியன் கமல் இருக்கும் வரை.. தன் பாட்டி வீட்டிற்கு வரவில்லை.

கமல் ஒரு மணி நேரம் அப்செட்டில் இருந்தான். அதன்பிறகு இயல்பாகிவிட்டான். எந்த பாதிப்பையும் காட்டிக் கொள்ளவில்லை யாரிடமும் கமல். ம்.. எந்த உரிமையும் இல்லாத வீடாக இப்போது தோன்றியது கமலநாதனுக்கு.

காயத்ரியும் அவ்வபோது வந்து அண்ணனுக்கு உணவு கொடுத்து சென்றிடுவாள். ஏதும் பேசவில்லை. ஒருநாள் கமலாகவே, அவளிடம் வருத்தம் கொண்டு பேசினானாம்.. “அம்மாவின் பணம் என்கிட்டே நிறைய இருக்கு.. அவங்களுக்கு சம்பாதித்து கொடுக்கனும்ன்னுதான் சிங்கப்பூர் போனேன். என்ன செய்ய.. என்னால் அங்க என் செலவையே கவனிக்க போதவில்லை.” என்றான், தங்கையிடம்.

காயத்ரி “ம்கூம்.. எத்தனை பிள்ளைகள்..” என்றாள்.

கமல் சிரித்தான் “அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நோ கமிட்மென்ட்ஸ். கமிட்மென்ட் இருக்க கூடாதுன்னு தானே.. மேரேஜ் வேண்டாம்ன்னு இருந்தோம். ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்தது. நாங்கள்  இரண்டு பேரும் சேர்ந்து கால் சென்ட்டர் போல ஒரு பிஸினெஸ் ஸ்ட்ராட் செய்தோம். எங்க தப்பாச்சுன்னு தெரியலை. அது லாஸ்.. வீட்டை சேல் செய்து.. செட்டில் செய்தோம். நான் வேலையை அப்போவே விட்டுட்டேன். சோ, அடுத்து என்னான்னு தெரியாமல் கொஞ்சநாள்.. எனக்கும் அவளுக்கும் எல்லா நாளும் சண்டை.. சச்சரவு. அதற்கு நடுவில்  ட்ரிங்க்ஸ்.. பார்ட்டி.. பிரெண்ட்ஸ்..  எங்களோட லெக்ஸ்சுலரி லைப்க்கு நிறைய கடன்.. வேலையும் இல்ல.

அப்போ, அம்மாதான் நகையை கொடுத்தாங்க.. மேனேஜ் பண்ணினோம். அப்புறம்.. சமாளிக்க முடியலை.. அவளும் போயிட்டா.. நான் தனியா தான் இருந்தேன். 

அப்புறம்தான் என் பிரெண்ட்தான் ஒருத்தன்.. சிங்கப்பூரில் இருக்கும் கம்பெனியில் ஒரு சின்ன வேலை வாங்கி தந்தான். அதில்தான் ஓடுது. என் செலவே சரியா இருக்கு.. இப்போ சுகர் அது இதுன்னு.. அந்த செலவு வேற.. அம்மாவை கவனிக்க முடியலை..” என்றான் வருத்தமாக.

காயத்ரி கேட்டுக் கொண்டாள்.. பதில் பேசவில்லை.. அம்மா உன்னை தேடினார்கள் என்றோ.. அம்மா இறுதி நாட்களில் உன்னை தேடவில்லை என்றோ ஏதும் சொல்லவில்லை. எங்கோ அண்ணன் நல்லா இருந்தால் சரி என விட்டுவிட்டாள்.

!@!@!@!@!@!@!@!@!@!@!

இப்போது,

இனியன் சாரதா இருவரும் வீடு வந்தனர். சாரதா, தன் அன்னையின் வீட்டின் அருகிலேயே வீடு வாங்கிவிட்டிருந்தாள். அதனால் பக்கம்தான்,அன்னை மகன் இருவரும் கிளம்பி நேராக பரணியின் வீடு வந்து சேர்ந்தனர்.

நேரம் சரியாக இருந்தது. காயத்ரி, வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள். பரணி இன்னும் அலுவலகம் முடித்து வரவில்லை. கார்த்திக் துளசி வந்துவிட்டனர். மகிழன்.. மதுமதி  என இரு பிள்ளைகள் அவர்களுக்கு.

மதுமதி கிருத்திக்கோடு விளையாட தொடங்கிவிட்டாள். இவர்கள் இருவரும் மற்ற எல்லோரையும் விட பாசமானவர்கள். கிட்டத்தட்ட.. முதல் குழந்தைக்கு பிறகு நீண்ட இடைவெளியில் கடந்து பிறந்தவர்கள் இவர்கள். இவர்களுக்குள் வயது வித்யாசமும் எட்டு மாதம்தான். அதனால்.. இயல்பாக இருவரும் கார்த்திக் பரணி போல தோழமையோடு விளையாடுவது பேசுவது என இருப்பார். சண்டை என்பது மிகவும் குறைவு.

கனிஷ்கா தன் நண்பர்கள் தோழிகள் படைகளோடு பேசிக் கொண்டிருந்தாள். அவளிற்கு தன் அப்பா இன்னும் வரவில்லையே என மனதில் ஓடிக் கொண்டிருந்தது. தன் அன்னையை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். காயத்ரி மகளை கண்களால் அமைதிபடுத்திக் கொண்டிருந்தாள்.

உமேஷ் மும்முறமாக, அந்த விழாவை தன்னுடை கேமராவில் பதிவு செய்துக் கொண்டிருந்தான்.

தணிகாசலம் இப்போது உயிரோடில்லை. வள்ளி, தன் தேவைகளை கவனித்துக் கொள்ளும் அளவிற்கு நடமாடுகிறார். இப்போது அவர், ஹாலில் அமர்ந்திருந்தார். சாரதா தன் அன்னையிடம் பேசிவிட்டு.. காயத்ரியிடம் வந்தார்.. “ஏன் தம்பி இன்னும் வரலை.. பாரு காயூ.. கனி, டல் ஆகறா.. இன்னும் ஒருதரம் கூப்பிட்டு பாரேன்” என்றாள்.

காயத்ரி “இல்ல அண்ணி.. அவருக்கு இன்னிக்கு மீட்டிங் இருக்கு. லேட் ஆகும்ன்னு சொல்லிட்டுதான் போனார். அவகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியலை. கண்டிப்பா இன்னும் ஒருமணி நேரமாகும்.” என்றாள் சமோசாக்களை எடுத்துக் கொண்டே.

சின்ன அளவிலான ஒரு விழா.. அக்கம் பக்கத்தில் அழைத்திருந்தனர். கனிஷ்காவின் ப்ரெண்ட்ஸ் அவர்களின் பெற்றோர்.. பின், தங்களின் அண்ணன்.. அக்கா அவ்வளவுதான். ஆக, சின்ன அளவிலான விழா.

இப்போது சிக்கன் லாலிபாப் ஒரு பக்கம்.. சமோசா ஒருபக்கம் என பிள்ளைகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள், காயத்ரி.

இனியன் தன் சித்தப்பாவோடு நின்றுக் கொண்டான். அமைதிதான் அவன். இப்போது கார்த்திக் எதோ கேட்க.. பொறுப்பாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

சாரதா கனிஷ்காவிடம் வந்தார்.. “ப்ரெண்ட்ஸ் ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க டா.. நாம கேக் கட் பண்ணிடலாம். ம்… அப்பா.. வந்துடுவான்.. சாப்பிடும் போது கண்டிப்பா வந்திடுவான்.. இப்போ கட் பண்ணலாமா” என தன்மையாக வினவினார்.

கனிஷ்கா தன் அன்னையை முறைத்தாள்.. காயத்ரி மகளிடம் வந்தாள்.. “டைம் ஆச்சே டா.. டாட் வந்திடுவார் அம்மு. முகத்தை அப்படி வைக்காத.. வா, எல்லோரும் வெயிட் பண்றாங்க.. சாப்பிட்டு அவங்களும் கிளம்பனுமில்ல.. ம்.. வாடா” என்றாள்.

இப்போது துளசி அருகில் வந்தாள்.. என்ன நடக்கிறது என.. புரிந்து அவளும் பிள்ளையிடம் சொல்ல.. கனிஷ்கா, கேக் நோக்கி வந்தாள்.

சின்ன அலங்கார மேடையில் கேக் இருக்க.. கனிஷ்கா நடுவில் நிற்க.. சுற்றிலும்.. சிறகு முளைத்த பூக்களாக.. மது, கிர்த்திக்.. கனிஷ்காவின் தோழமைகள் எல்லாம் சூழ நின்றாள்.. பரணி காயத்ரியின் சீமந்த புத்ரி.

எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடினார். மலர்ந்த முகமாக கேக் கட் செய்தாள்.. கனிஷ்கா. குழந்தைகள் எல்லோரும் தங்களுக்குள் கேக் எடுத்து ஊட்டிக் கொண்டும் முகத்தில் பூசிக் கொண்டும் விளையாடியது.

பெரியவர்கள் யாரும் ஏதும் சொல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் பத்து நிமிடம்.. பிள்ளைகள் தலைகால் தெரியாமல் விளையாட தொடங்கவும்..  மெதுவாக அவர்களை நிறுத்தி.. எல்லோரையும் உண்பதற்கு அனுப்பி வைத்தனர்.

இனியன் எல்லோரையும் டின்னெர் உண்பதற்கு அழைத்துக் கொண்டிருந்தான். பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோருக்கும் பஃப்பே முறையில் உணவு  ஏற்பாடு செய்திருந்தனர்.

உமேஷ்ஷை, மிரட்டி.. அவனின் கையிலிருந்த கேமராவை வாங்கிக் கொண்டு.. அவனின் கையில் தானே ஒரு ப்ளேட் எடுத்து கொடுத்து ஓரிடத்தில் அமர வைத்தாள் காயத்ரி.

கார்த்திக் இனியன் இருவரும் இப்போது.. பிள்ளைகள் உண்டு முடித்து வரவும்.. சின்ன ஸ்பீக்கரில் பாடல்கள் போட்டு விட்டு பிள்ளைகள் நடனமான ஏதுவாக.. கார்டனில் இடம் ஏற்படுத்திக் கொண்டுத்தனர்.

இந்த நேரத்தில்தான் பரணி வந்து சேர்ந்தான் அதே நிதான நடையோடு. முன்பைவிட.. முகம் தேஜஸாக மின்னியது.. லேசாக ஆங்காங்கே வெள்ளி கம்பிகளாக சிகை மின்னினாலும்.. அதெல்லாம் அவனின் அனுபவத்தின் சாயல்களைதான் சொல்லியது.. வயதின் கணக்கை அல்ல. கண்களில் இன்னும் கனிவு கூடி தெரிந்தது. மெதுவாக மகளின் அருகில் வந்தான் பரணி.

கனிஷ்கா தந்தையை பார்த்ததும்.. முறைத்துக் கொண்டு.. தன் இரு கைகளையும்.. தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டு நின்றாள் கோவமாக. மகளின் கோவத்தை தாங்க முடியாத பரணி.. மகளின் உச்சி தொட்டு.. “கனிகுட்டி.. மேனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே..” என்றான் மீண்டும் ஒருமுறை கனிவாக.

மகளோ தந்தையின் மேல் கோவம் இருந்தாலும்.. தந்தையின் இடுப்போடு கட்டிக் கொண்டாள் மகள்.

காயத்ரி இப்போது கேக் எடுத்து வந்தாள்.. இவர்களின் அருகே.. பரணி மனையாளை நிமிர்ந்து பார்க்க.. காயத்ரி கண்களால் மகளுக்கு ஊட்டுங்கள் என்றாள். 

பரணியும் அதனை புரிந்து கொண்டு.. மகளுக்கு சின்ன துண்டு கேக் எடுத்து.. மகளின் தலையை நிமிர்த்தி.. மகளுக்கு ஊட்டினான்.. கனிஷா “லவ் யூ ப்பா” என்றாள்.. அந்த கேக் வாங்கிக் கொண்டு.

உமேஷ் இப்போது “மாம்ஸ்.. மாம்ஸ்.. அப்படியே அத்தைக்கும் ஊட்டுங்க.. உங்களையே பார்க்கிறாங்க” என்றான்.

காயத்ரி திரும்பி உமேஷை முறைத்தாள்.. கணவன் ‘இதுக்கு என்னை எப்படி எல்லாம் திட்ட போறாரோ’ என தோன்ற உமேஷை முறைத்தாள். 

பரணி “டேய்.. கேமராவை ஆஃப் பண்ணு டா..” என்றான் செல்ல கோவத்தோடு.

உமேஷ் “மாம்ஸ்.. லுக்கிங் ஸ்மார்ட் மாம்ஸ்.. என் கேமரா ஸ்டர்ன் ஆகிடுச்சு மாம்ஸ்..” என்றான்.

பரணி திரும்பிக் கொண்டான்.. உமேஷ்ஷோடு பேசாமல். பரணிக்கு இதெல்லாம் அலர்ஜி.

சாரதா “உமேஷ்.. ஆஃப் பண்ணு” என அதட்டினாள்.

உமேஷ் “மை கார்ஜீயஸ்..” என சொல்லிக் கொண்டே கேமராவை.. தன் அன்னையின் பக்கம் திருப்பினான். சாரதாவும் கைகளை கேமரா நோக்கி விரித்தாள்.

கார்த்திக்தான் வந்தான் இப்போது.. “டேய்.. பாமிலி பாங்க்ஷ்ன்ல..” என அவனின் கேமராவை தொட வர.. உமேஷ் வாரி சுருட்டிக் கொண்டு.. தன் கேமராவை அவர் பக்கம் திருப்பி.. “சித்தப்பா.. எங்கள் சூரியா சித்தப்பா.. ஜெம் ஒப் பெர்சன்..” என பேசிக் கொண்டே கார்த்திக்கை நோக்கி வர.. பரணிக்கு பொறுமை பறந்தது.

உமேஷ்ஷின் பின்னிலிருந்து வாகாக.. அந்த கேமராவை சட்டென பிடுங்கினான்.

அதை கண்ட பிள்ளைகள் எல்லாம் “ஹோ.. “ என குதித்துக் கொண்டு சிரிக்க.. பெரியவர்கள் எல்லோரும் உமேஷின் கலவரமான முகத்தை பார்த்து.. சிரிக்காமல் இருக்க பாடுபட்டனர்.

உமேஷ் கோவமும் புன்னகையுமாக நின்ற மாமன் சித்தப்பன் முகத்தை பார்த்தவன்.. “ட்ரென்ட் ஆக்கலாம்ன்னு நினைச்சேன்.. அங்கிள்ஸ்.” என சொல்ல..

கார்த்திக் புன்னகைத்துக் கொண்டே உமேஷின் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு.. “போதும் டா.. எவ்வளோ நேரம் அதிலேயே டைம் ஸ்பென்ட் பண்ணுவ.. நீயும் என்ஜாய் பண்ணு.. போ.. டான்ஸ் ஆடு.. பிள்ளைகள் கூட விளையாடு.. எப்போ பாரு கையில் கேமரா.. போடா. இதில் நாங்கள் அங்கிள்ஸ்சாம்.. போடா..” என தொரத்தினான்.

சாரதா காயத்ரி துளசி மூவரும் சிரித்தனர். காயத்ரியை தவிர மற்ற இருவரும் உண்பதற்கு சென்றனர். காயத்ரி பரணியை பார்த்துக் கொண்டே இருப்பதைதான் அவர்கள் உணர்ந்து விட்டனரே, அதனால் தள்ளி சென்றனர்.

பரணி, இப்போது இனியனை அழைத்தான் கையசைத்து. இனியன் மாமனிடம் வந்தான். பரணி “இனி.. பசங்களுக்கு ஐஸ்கிரீம் எல்லாம் இருக்கா.. ஏதாவது இல்லைன்னா.. உடனே ஆர்டர் போட்டுடு டா..” என்றான்.

இனியனும் தலையசைத்துவிட்டு சென்றான்.

காத்துக் கொண்டிருந்த காயத்ரி, கணவனின் அருகில் வந்தாள் “எவ்வளோ லேட் நீங்க.. எல்லோரையும் சமாளிச்சு.. என் பெண்ணையும் சமாளிச்சு வைச்சிருக்கேன்.. எனக்கு என்ன வேணும்ன்னு கேட்க்காமல்.. பிள்ளைகளுக்கு ஐஸ்கிரீம் போதும்மான்னு கேட்க்குறீங்க.. ப்ளேஸ் ஆர்டர்.. ஜாம்மூன் வித் ஐஸ்கிரீம்.. ம்..” என்றாள், கணவனிடம் செல்ல அதட்டலாக.

பரணி கண்களை சுழற்றி அருகில் யாரும் இல்லாததை உறுதி செய்துக் கொண்டு.. பட்டான குரலில்  “பட்டூ.. இன்னிக்கு பேபிக்குதான் பர்த்டே.. உனக்கில்லை டா.. போ.. போ.. இதே பொறுப்போட எல்லோரையும் நாமதானே கவனிக்கனும். இப்போ நீ சாப்பிட்டால், கோல்ட் வந்திடும். நெக்ஸ்ட் வீக்தான். ம்.. பாரு, இனியன் வரான்” என மனையாளிடமிருந்து தள்ளி நின்றான் பரணி.

காயத்ரிக்கு, கணவனின் கைகளை பற்றிக் கொண்டு நிற்கும் எண்ணம்தான்.. ஆனால், பரணிக்கு அது பிடிக்காதே.. அதனால் “லவ் யூ மாம்ஸ்” என்றாள் தள்ளி போகிறவனை பார்த்து.

பரணி இப்போதும்.. அவள் எதோ முதல்முறை லவ் யூ சொல்லுவது போல.. கண்களில் கண்டிப்பை காட்டி.. இதழ்களில் புன்னகையை காட்டினான் மனையாளிடம்.

காயத்ரி அதை நிறைவாக பார்த்து.. உணவு உண்ணுமிடம் சென்றாள்.

இப்போது விருந்தினர்கள் எல்லோரும் விடை பெற்று சென்றிருந்தனர். வீட்டு ஆட்கள் மட்டும்தான்.. பிள்ளைகள் எல்லாம் வள்ளி பாட்டியோடு உறங்க சென்றிருந்தனர்.

இளையவர்கள் எல்லோரும்.. கார்டனில் அமர்ந்து பேச தொடங்கினர். நீண்ட நாட்கள் ஆகிற்று எல்லோரும் ஒன்று கூடி.. எனவே, பேச்சுகள் உண்டபடியே சென்றது அவர்களுக்குள். பரணியும் கார்த்திக்கும் புதிதாக வாங்கியுள்ள ஒரு ப்ராப்பர்ட்டி குறித்து பேசிக் கொண்டிருந்தனர். துளசி காயத்ரி சாரதா.. மூவரும் பிள்ளைகளின் பெருமையை பேசிக் கொண்டே.. இந்த நியூ இயர் விடுமுறைக்கு எங்காவது செல்ல வேண்டும் என பேசிக் கொண்டிருந்தனர்.

மறுநாள் விடுமுறை என்பதால்.. இரவு எல்லோரும் இங்கேதான் ஸ்டே. அதனால், நேரம் காலம் தெரியாமல் பேச்சுகள் தொடர்ந்தது.

காதல் கொண்ட மனையாளோடு.. குடுமேன்னும் தேரில் வாழ்க்கை முழுவதும் ஊர்வலம்தான் பரணிக்கு. அந்த தேரின் சாரதி மட்டுமே அவன்.. அதை வழி நடத்துபவள் காயத்ரியே. இந்த அழகான தேர்.. ஆடி அசைந்து.. எல்லோரின் கண்களையும் நிறைக்கட்டும் ஆனந்தத்தில்.

$$$$$

Advertisement