Advertisement

நீ என்னுள் யாரடா!

6

சாராதா கோவை வந்து சேர்ந்துவிட்டாள். சக்திவேல், தன் மருமகளை எங்கும் விடமால் “நீ வா ம்மா.. நம்ம வீட்டுக்கு போகலாம்” என ஏர்போர்ட்டிலிருந்து அழைத்து சென்றுவிட்டார்.

சாரதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, வேறு யாராலும் ஏதும் பேசவும் முடியவில்லை. எனவே, அங்கே சென்றுவிட்டாள். முதல் இரண்டு நாட்கள் ஏதும் தெரியவில்லை.. எதோ, விடுமுறைக்கு வந்ததது போல.. பிள்ளைகளை கவனிக்க.. காயத்ரியும் கல்லூரி செல்லவில்லை என்பதால், துளசி காயத்ரி பிள்ளைகள் என வெளியே செல்ல.. வர.. என ஒன்றும் தெரியவில்லை சாரதாவிற்கு. 

ஆனால், அடுத்தநாள் முதல் காயத்ரி கல்லூரி சென்றுவிட்டாள். காயத்ரி, கல்லூரி செல்லவும் வீடு என்னமோ அமைதியாக ஆகிவிட்டது போல இருந்தது பெண்ணுக்கு.. சாரதா என்னமோ தனியாக உணர தொடங்கினாள். பிள்ளைகள் விளையாட செய்ய என இருந்த இடம்.. இப்போது வெறுமையாக இருந்தது. இனியன் வந்து வந்து அப்பா வருவாரா.. நாம் ஏன் இங்க வந்திருக்கோம்.. என கேட்க்க தொடங்கிவிட்டான். விடுமுறை தினம்தான் என்பதால்.. பள்ளி பற்றி ஏதும் கேட்டவில்லை.. ஆனால், தன் அன்னை தந்தைக்கு பிரச்சனை என தெரிகிறது.. புரிகிறது.. பிள்ளைக்கு. எனவே, அவ்வபோது கேள்வியாக கேட்க்க.. சாரதா திணறிப் போனாள்.

காயத்ரி, வரும் வரை இனியனுக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை. சாரதா, தன் கணவனை விட்டு கொடுத்து அவனின் பெற்றோரிடமே சொல்லாதவள்.. எப்படி பிள்ளைகளிடம் வாய் திறப்பாள். எனவே, இனியனிடமிருந்து விலகத் தொடங்கினாள். பரணி மதியம் அக்காவிற்கு அழைத்து பேசுவான்.. அப்போதெல்லாம் இனியனை வந்து கூட்டி போகும்படி சொல்லிவிடுவாள். அதனால், இனியன் பாதி நேரம் பரணியோடு இருந்தான். ஆனாலும், அவனுக்கு இரவில் அம்மா வேண்டும் எனவே, உறங்க மட்டும் இங்கே வந்துவிடுவான். இப்படியே நாட்கள் சென்றது. 

சாரதாவிற்கு, ‘அடுத்து’ என  யோசிக்க முடியவில்லை. காதல் கணவன் முகமே நினைவில் வந்தது. அவன் செய்தது எல்லாம் அறிவிற்கு புரிந்தாலும்.. மனது என்னமோ கணவனோடு இருந்த கடந்தகால வாழ்க்கையை பற்றியே எண்ணத் தொடங்கியது. அதிலும் எல்லாம் அவ்வளவுதான் தன் வாழ்க்கையில் என தோன்ற தோன்ற.. சாரதாவிற்கு, வலிதான் அதிகம் எழுகிறது. இப்போது இந்த இடத்தில் தனக்கு இருப்பதற்கு உரிமை இல்லையோ என ஒருபுறம் மனம் கனக்கிறது.. அடுத்த ஷணம் பிள்ளைகள் வாழ்க்கை என்னாகும்.. நான் வேலைக்கு போகனும் என அதுவேறு ஒருபுறம் ஓடுகிறது. எனவே, மனது குழப்பத்தின் சிக்கிக் கொள்ள.. திணறினாள் சாரதா.

இரவில் சரியாக உறங்குவதில்லை.. கிட்செனில் வேலைக்கு என ஆட்கள் இருந்தாலும் தன் மனஉளைச்சல் காரணமாக.. அங்கே சென்று வேலை செய்ய தொடங்கினாள். சரியாக உண்பதில்லை.. உமேஷ் உண்டு மிச்சம் வைப்பதை வாயில் போட்டுக் கொள்வது. மாமியார் சாப்பிட்டியா என்றால் இப்போதான் அத்தை சாப்பிடேன் என சொல்லி, அறையில் சென்று மறைந்துக் கொள்வது என.. என்னமோ சாரதா அடுத்த ஒருவாரம் தன்னிலையில் இல்லாமல் போக.. ஒருநாள் மாலை வேளையில்.. கிட்செனில் மயக்கமாகி கீழே விழுந்து.. நெற்றியில் அடியோடு மருத்துவனையில் இருக்கிறாள் இப்போது, சாரதா.

எல்லோரும், அவளை கவனிக்காமல் இல்லை. ஆனால், ஏதும் கேட்க்கவில்லை. எப்படி கேட்பார்.. என்னவென கேட்பர் எனவே அமைதியாக அவள் போக்கில் விடலாம் ஒருமாதம் ஆகட்டும்.. இனியன் பள்ளி செல்ல தொடங்கட்டும் அதன்பின் பேசலாம்.. இல்லை, அவளே ஏதேனும் சொல்லுவாள் என அமைதி காத்தனர் பெற்றோரும் தம்பியும். ஆனாலும் பரணி ‘என்ன க்கா, சாப்பிடுறீயா.. வீட்டுக்கு வா அக்கா.. ட்ரிப் எங்காவது போலாமா பசங்களோடு..’ என அவ்வபோது கேட்ப்பான். சாரதா, ‘அப்புறம் போலாம்.. துளசி வளைகாப்பு வேலையில் அத்தையும் மாமாவும் இருக்காங்க.. அது முடியட்டும் போலாம் பரணி’ என்றாள்.

சக்திவேலுக்கும் கவலைதான்.. துளசிக்கு வளைகாப்பு விழா இருக்கிறது. எனவே, அதிலேயே வரும் சொந்தங்கள் என்ன என்ன கேட்க்குமோ என கவலை வர தொடங்கிவிட்டது சாரதாவின் மாமனார் மாமியாருக்கு. அதனால், எதை பேசுவது என்ன சொல்லுவது.. எல்லாம் சாரதாவை பாதிகும் என அமைதியாக இருந்தனர் அவர்கள். இப்படி எல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்க.. அதேதான் சாரதாவின் நிலையம் எனும் போது.. அவளால் தாங்க முடியவில்லை. தன்னையும் பேணிக் கொள்ளவில்லை.. இரண்டுநாளில் விழா என்கையில்.. மருத்துவமனையில் இருந்தாள், சாரதா.

காயத்ரி அப்போதுதான் கல்லூரி முடித்து வீடு வந்தால்.. அதனால், அவளும் கௌசல்யாவும் சேர்ந்து வேலையாட்கள் உதவியோடு அடித்து பிடித்து சாரதாவை தூக்கிக் கொண்டு காரில் மருத்துவமனை சேர்த்தனர். 

தணிகாசலம் வள்ளி இருவரும் வந்து சேர்ந்தனர். வள்ளிக்கு, தன் பெண்ணை அவர்கள் கவனிக்கவில்லையோ என தோன்றியது, அத்தோடு சக்திவேல் வரவில்லை அதுவும் ஒரு தாக்கலாக மனதில் நின்றுவிட்டது தனிகாசலத்திற்கு.  எனவே, அமைதியாக இருந்தனர் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. 

பரணி வந்துவிட்டான். முன்பே முடியாதவர்.. மகன் படிப்பு முடித்து வந்ததும் சற்று ஓய்வாக இருந்தார், ஆனாலும் காலை மட்டும் அலுவலகம் செல்லுவார். மேற்பார்வை பார்த்து வந்துவிடுவார். இப்போது பெண்ணின் நிலை தெரிந்தது முதல்.. இன்னும் அமைதியாகிவிட்டார். தோன்றும் போதுதான் அலுவலகம் செல்லுகிறார். எனவே, தணிகாசலத்திற்கு இப்போதெல்லாம் மகன் இல்லாமல் வேலை ஓடுவதில்லை. எனவே, அமைதியாக பெண்ணை பார்த்து வந்தவர் அமர்ந்துக் கொண்டார். 

பரணி, கௌசல்யாவை பார்த்து புன்னகைத்தான். அம்மா அப்பா அருகில் வந்து விவரம் கேட்டான். காயத்ரியிடம் சாக்லேட் உண்டுக் கொண்டிருந்த உமேஷை பார்த்துவிட்டு, மருத்துவரை பார்க்க சென்றான்.

சற்று நேரம் சென்றுதான் வெளியே வந்தான்.

தன் அக்காவிடம், மருத்துவர்கள் சொன்னதை சொன்னான்.. ப்லெட் இப்போது ஏற்றியே ஆகவேண்டும் என சொல்லிவிட்டனர்.. அந்த அளவுக்கு ஹீமோக்லோபீன் இல்லை என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர், என விவரித்துக் கொண்டிருந்தான்.

வெளியே, காயத்ரி கையிலிருந்த உமேஷ் அழுகை. இனியனுக்கும் என்ன என புரியாததால் அழுகைதான். எனவே, பெரியவர்கள் பிள்ளைகளோடு சமாளிக்க முடியாமல் நின்றனர். 

கெளசல்யாவிற்கு, துளசி அவங்கே தனியே இருக்கிறாள் என் தோன்ற.. மருமகளை சென்று பார்த்து.. சொல்லிக் கொண்டு.. வீடு கிளம்பிவிட்டார். 

காயத்ரி இங்கேயே இருந்துக் கொண்டாள், உமேஷை பார்த்துக் கொண்டாள். ஆனால், இனியனை அவளால் சமாளிக்க முடியவில்லை.. அவனிற்கு அழுகையும் கோவமும் வந்தது.. காயத்ரியை அடிக்க தொடங்கிவிட்டான்.. காயத்ரிக்கு திருப்பி மிரட்ட தெரியவில்லை.. ‘நீ ஸ்வீட்டா தானே.. ப்ளீஸ்.. அத்தைக்கு வலிக்குது’ என கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

வள்ளி, பாவம் அவரால் சமாளிக்க முடியவில்லை பேரனை. ஏதாவது பேசினால்.. எழுந்து அங்கும் இங்கும் ஓடுகிறான்.. வராண்டாவில் கூட்டமாக இருக்க.. ஏழு வயது இனியனை சமாளிக்க முடியவில்லை இரு பெண்களாலும்.

பரணி ப்லெட் சொல்லி, அதற்கு ஈடாக.. அவன் இரவில் தான் டொனேட் செய்வதாக சொல்லி ஏற்பாடு செய்தான், பின், அக்காவை தனி அறைக்கு மாற்ற சொல்லிவிட்டு வந்தான். இப்படி வேலைகளை முடித்து வர நாற்பது நிமிடம் ஆகிற்று. 

காயத்ரியையும் தன் அன்னையையும் பார்க்க.. பாவமாக இருந்தது. உமேஷ், உறக்கத்திற்கு அழுகை போல.. காயத்ரியின் தோளில் படுப்பதும்  தன் அண்ணனின் பேச்சை கவனிப்பதுமாக அவன் அழுத்துக் கொண்டிருந்தான். இனியன் அம்மாவை பார்க்கணும் என அழுகை. தன் அன்னை, பேரனை கையில் பிடித்திருந்தாலும்.. அவன் திமிறிக் கொண்டிருக்க.. காயத்ரி ஒருகையால் அவனை பிடித்து பேசிக் கொண்டிருந்தாள்.

இப்போது பரணி வந்தான். இனியனை தோளில் தொட்டு திருப்பினான் இனியன் “மாமா.. அம்மா..” என அழ தொடங்கிவிட்டான்.

இனியனை அப்படியே தூக்கிக் கொண்டான் பரணி.. புரிந்தும் புரியாத வயது.. தந்தையை தேடுகிறான் குழந்தை.. அன்னையை பார்க்க முடியவில்லை.. அவருக்கும் எதோ உடல்நிலை சரியில்லை என தெரிய அழுகையும் கோவமும் வருகிறது குழந்தைக்கு.. இப்போது மாமாவை பார்த்தும் அழுகை.

பரணி தூக்கிக் கொண்டு சற்று நேரம்.. பார்க்கிங் சென்றுவிட்டான். பின் அரைமணி நேரம் சென்று இருவரும் வந்தனர்.. இனியன் முகம் முன்போல பயந்து இல்லை.. இயல்பாக, பரணியின் கை பிடித்து பேசிக் கொண்டே வந்தான் தன் மாமாவோடு.

பின் சாரதாவை அறைக்கு மாற்றி இருக்க.. பிள்ளைகளோடு சென்று அவளை பார்த்து.. பிள்ளைகளுக்கு அவளை காட்டி.. மறைமுகமாக, தன் அக்காவை முறைத்துக் கொண்டே நின்றான், பரணி.

காயத்ரி உறங்கும் உமேஷை தோளில் போட்டுக் கொண்டே.. அறைக்கு சென்று அமர்ந்துக் கொண்டாள். பரணியை விட்டு அவளின் பார்வை எங்கும் நகரவில்லை. என்னமோ முதல்முறை அவனை பார்ப்பது போல.. இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உமேஷ் எழுந்துக் கொண்டான்.. அவனும் அன்னையிடம் அமர்ந்து விளையாடத் தொடங்கினான். பின் பரணி, காயத்ரி இருவரும் குழந்தைகளோடு உணவு உண்பதற்கு சென்றனர். சாரதாவின் அறையில் பெற்றோர் இருந்தனர்.

நல்ல ஹோட்டல் சென்றான் பரணி. உமேஷ், காயத்ரியை விட்டு இறங்கவில்லை. இனியன் இப்போது இயல்பாக இருந்தான். எனவே, அமைதியாக என்ன வேண்டும் என காயத்ரி இனியனை கேட்டு ஆர்டர் செய்து வாங்கி உண்ண வைத்தான். 

உமேஷ்க்கு, காயத்ரி உணவு ஊட்டுகிறேன் என.. அவளின் விரல்தான் உள்ளே சென்றது உணவு உள்ளேயே செல்லவில்லை. அதை கவனித்து பரணி, தோசையை உமேஷ் கையில் சிறிது சிறிதாக கொடுக்க.. அதை குழந்தை வாயில் போட்டுக் கொண்டது. பிள்ளைகளுக்கு நல்ல பசி.

உண்டு முடித்து, உமேஷ்க்கு, தண்ணீர் கொடுக்கிறேன் என பெரிய கிளாஸ் எடுத்து அவன் வாய் அருகே பிடித்துக் கொண்டாள் காயூ.. குழந்தைக்கு குடிக்க தெரியாமல்.. மூக்கு உள்ளே தண்ணீரில் சென்றுவிட.. உமேஷ்க்கு மூச்சு விடவும் முடியாமல்.. அழவும் முடியாமல் குழந்தை திணற.. பரணி குழந்தையை வாங்கி மூக்கிலும் உச்சியிலும் ஊதிவீட்டு, சரி செய்தான்.. அதற்குள் காயத்ரிக்கு, கண்ணில் நீர் வந்துவிட்டது.. பரணிக்கு, ஆவியில்லை.. இப்போது காயத்ரியை திட்டினான் “ஏங்க, குழந்தைக்கு தண்ணீர் கூடவா கொடுக்க தெரியாது.. அறிவே இல்லையா.. கவனமாவே இருக்க மாட்டீங்களா.. யாராவது அவ்வளோ பெரிய கிளாஸ்சில் தண்ணீர் கொடுப்பாங்களா..’ என சரவாரியாக திட்டினான்.

காயத்ரிக்கு, தவறு புரிய.. பயம்தான் இருந்தது எனவே, ஏதும் பேசவில்லை. உமேஷை வாங்கவும் இல்லை அவனிடமிருந்து.. உண்ணவும் இல்லை.. அமைதியாக கைகழுவி வந்து அமர்ந்துக் கொண்டாள்.

பரணி, எதையும் கவனிக்கவில்லை. உமேஷ் இனியன் என பார்த்து.. பில் பே செய்து.. கார் நோக்கி வந்தான். காயத்ரிதான் பின்னால் வரும்படி ஆகிற்று.

இவர்கள் மருத்துவமனை வரவும்.. உணவு எடுத்துக் கொண்டு, கார்த்திக்கும் சக்திவேலும் வந்தனர்.

தணிகாசலத்திடம் அமைதியாக விவரம் கேட்டுக் கொண்டு சமாதானமாக பேசிக் கொண்டிருந்தார் சக்திவேல்.

நேரம் சென்றது.. கார்த்திக், எல்லோரையும் வீட்டிற்கு கிளப்பினான். வள்ளி அத்தை இங்கே இருக்கட்டும், நாம் எல்லோரும் காலையில் வரலாம் என்றான்.

பரணி, இனியனிடம் பேசி.. கார்த்திக்குடன் வீடு அனுப்பி வைத்தான். கார்த்திக், இனியன்.. காயத்ரி, தன் தந்தை, தணிகாசலம் மாமா என எல்லோரையும் அழைத்துக் கொண்டு.. அவரை அவர் வீட்டில் விட்டு விட்டு, மற்ற மூவரும் வீடு வந்தான்.

பரணிக்கு, அதன்பின் வேலை மருத்துவமனையில் சரியாக இருந்தது. தான் ப்லெட் டோனேட் செய்து.. உமேஷை வைத்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான். சாரதா, அப்போது விழிக்கவும், பரணி தன் அக்காவிடம் பேசினான். ‘அக்கா, நீதான் எல்லாம் இனி பார்க்கணும். இனியனுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்குது.. ப்ளீஸ், நீ தைரியமானவள். இப்படி இருக்காத, என்ன வேண்டும் நான் செய்து தரன். நீ தைரியமா இருக்கணும் ம்.. ‘ என பேசினான்.

வள்ளிக்கு, என்ன சொல்லுவது என தெரியவில்லை அன்னையாக ஓய்ந்து போனார்.. பிள்ளைகள் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டார்.

சாரதாவிற்கு அதன்பின் உறக்கம் அவ்வளவு சீக்கரமாக வரவில்லை. உமேஷ் உறங்கவும், பரணியும் உறங்கினான். 

விடியலில் சாரதாவை பார்க்க மருத்துவர்கள் வந்தனர்.. அதில் எழுந்தான், பரணி. பின் நேரம் சரியாக இருந்தது.

அடுத்த ஒருநாள் சாரதா மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றுவிட்டனர். கௌசல்யா நேரமாக வந்தார். சாரதா சாதரணமாக இருந்தாள்.. தன் மாமியார் கொடுத்த உணவை உண்டாள். தன் அன்னையை வீடு சென்று வருமாறு கூறினாள்.

பரணி, தன் அன்னையோடு வீடு கிளம்பினான். உமேஷ் சாரதாவோடு இருந்துக் கொண்டான்.

சாரதா, தன் மாமியாரிடம் பேச தொடங்கிவிட்டாள்.. “அத்தை நான் தனியா அப்பார்மென்ட் பார்த்துக்கலாம்ன்னு இருக்கேன். டெக்ஸ்டையில் தானே, படிச்சேன்.. வேலைக்கு போலாம்ன்னு இருக்கேன்.” என்றாள்.

கௌசல்யா “மாமாவை கேட்கனும் ம்மா..” என்றார்.

சாரதா “நீங்க கேளுங்க.. நான், எனக்கு.. என்ன சொல்றதுன்னு தெரியலை.. நான் தம்பிகிட்ட சொல்ல போறேன்.. தனியா வாழறதை பற்றி. நான் வேலைக்கு போகபோறேன் அத்தை. நான் பசங்களை பார்க்கணுமே” என்றாள்.

கெளசல்யாவிற்கு.. ஏதும் புரியவில்லை “நீ வீட்டுக்கு வா ம்மா, பேசிக்கலாம்” என்றார்.

சாரதா “இல்ல அத்தை, நான் அங்கே வரலை.. எங்க வீட்டுக்கு போறேன். அங்கே இருக்கவே எனக்கு கில்டியா இருக்கு ப்ளீஸ் அத்தை” என்றாள்.

கௌசல்யா “நம்ம வீட்டில் என்ன சாரதா.. இதெல்லாம் சட்டென்னு முடிவு செய்ய முடியாது. நீ இரு” என்றார்.

சாரதா அதன்பின் ஏதும் பேசவில்லை.

கார்த்தியும் சக்திவேலும் நேற்று போல வந்தனர் இரவு. மருத்துவமனையில் பார்த்து சென்றனர். அப்போதே சாரதா “நான் எங்க வீட்டுக்கு போறேன் மாமா” என்றாள்.

அதன்பின் என்னமோ ஏதும் பேசவில்லை சக்திவேல். என்னமோ கண்ணுக்கு தெரியாத இடைவெளி வந்தது அந்த இருகுடும்பங்களுக்கும் நடுவில்.

Advertisement