Advertisement

நீ என்னுள் யாரடா!

5

பரணிக்கு, கமல் சொல்லிய ‘அவள் கல்யாணம் செய்துக்கட்டும். பிள்ளைகள் என்கூட இருக்கட்டும் என்ற வார்த்தைகளை கேட்கவே கோவமாக வந்தது.. நீ உன் வேலையை பார்த்துட்டு போடா..’ என கத்த வேண்டும் போல இருந்தது. அங்கேயே நின்று இந்த பெரியவர்களின் பேச்சை கேட்க்க முடியாமல்.. டிக்கெட் புக் செய்ய.. தனது லாப் எடுத்துக் கொண்டு மற்றொரு அறைக்கு சென்றான்.

போகும் போது தன் அக்காவின் அருகில் வந்து “தைரியமா பேசு அக்கா, போதும் நீ அவஸ்த்தை பட்டது.. ம்..” என்றான் தன் தமக்கையின் கண்களை பார்த்துக் கொண்டு நிதானமாக.

சாரதா, கண்ணில் நீர் கசிய.. கைகள் நடுங்க.. தன் தம்பியின் கைகளை பற்றினாள். பரணி, அந்த கைகளை பிடித்துக் கொண்டு தட்டி கொடுத்தான்.. பின் “விடுக்கா.. பசங்க இருக்கானுங்க.. பார்த்துக்கலாம்” என்றான் தெம்பான குரலில்.

பரணி உள்ளே சென்றுவிட்டான்.

கமல், பரணி உள்ளே செல்லுவதையே பார்த்திருந்தான்.. ‘என்ன கத்தி முடிச்சி போயிட்டான். அப்பாடா..’ என தோன்றியது.

சாரதா, இப்போது கண்களை துடைத்துக் கொண்டு, சோபாவில் அமர்ந்தாள். நிமிர்ந்து யாரையும் பார்க்க முடியவில்லை.. எல்லோரின் பார்வையும் தன்னை குற்றம் சொல்லுவதாக எண்ணினாள். எனவே, அமைதியாக அமர்ந்தாள்.

சக்திவேல் “என்ன ம்மா சாரதா.. நீ எதுக்கும் கவலைபடாத.. நாம ஊருக்கு போயிடலாம். போதும் அவன் வேலை பார்த்த லட்சணம்.” என்றார் தன் பெரிய மகனை பார்த்து முறைத்தபடியே.

கமல் “ம்.. அப்பா, போதும் அவளுக்கு ஹோப் கொடுக்காதீங்க.. சாரதா.” என அழைத்தான்.

சாரதா நிமிரவில்லை.. சாரு எனத்தான் அழைப்பான் கணவன். இப்போது, இந்த அழைப்பில் மீண்டும் மீண்டும் இறுக்கமாக்கினாள் பெண்.

அவள் ஏதும் பேசவில்லை எனவும் கமல் “சாரதா, உனக்கு ஏதாவது பேசணுமா” என்றான்.

அமைதியாக இருந்தாள்.

கார்த்தி இப்போதுதான் வாய் திறந்தான் “அண்ணி, நீங்க என்ன நினைக்கிறீங்க.. சொல்லுங்க அண்ணி” என்றான்.

சாரதா “எனக்கு, பசங்க வேண்டும்.” என்றாள் அழுத்தமான குரலில்.

சாரதா “பரணி, இனியன்.. இனியை கூப்பிடுடா” என்றாள் சலிப்பான குரலில்.

பரணிதான் அங்கு இல்லையே.. எனவே, கார்த்திக் செல்ல எத்தனித்தான்.

கமல் “இல்ல, பெரியவன் என்கிட்டே இருக்கட்டும்” என்றான்.

கார்த்திக், தன் அண்ணனை மதிக்கவே இல்லை.. எழுந்து அந்த அறை நோக்கி சென்று ‘இனியன்’ என அழைத்து குழந்தையை கூட்டி வந்தான்.

பெரியவர்கள் எல்லோரும் ஸ்தம்பித்து பார்த்திருந்தனர். ஆக, முடிவுகள் எல்லாம் எடுத்தாகிற்று போல.. எனத்தான் சக்திவேலிற்கும் தணிகாசலத்திற்கும் தோன்றியது.

சாரதாவின் மாமனார் “இரு ம்மா, நாங்க எல்லாம் இருக்கோம் பேசிக்கலாம்” என்றார்.

கார்த்திக் “இன்னும் என்ன ப்பா, பேசணும். இது சரியா வராது ப்பா” என்றான்.. இனியனை கையில் பிடித்துக் கொண்டு.

கமல், நிற்காமல் தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டான்.

கமலநாதன் அந்தப்பக்கம் சென்றதும் பெரியவர்கள் எல்லோரும் சாரதாவையே பார்த்தனர்.

கௌசல்யா “நாம ஊருக்கு போய் பேசிக்கலாம் சாரதா” என்றார்.

வள்ளிக்கும் அதே கவலைதான்..  எனவே தன் பெண்ணிடம் “சிறுவயது.. இன்னும் காலம் எங்கோ இருக்கிறது சாரதா. பேசி.. நாலு பெரியவர்கள் நல்லது கெட்டது எடுத்து சொல்லுவார்கள் டா.. அப்போ மாப்பிள்ளைக்கும் கொஞ்சம் புரியும். அதனால், அவசர பட வேண்டாமே..” என்றார்.

தணிகாசலம் “விடுங்க.. கொஞ்ச நாள் அவள் அங்கே வந்து இருக்கட்டும் யோசிக்கட்டும்.. பேசிக்கலாம்..” என்றார்.

சக்திவேலும் “ம்.. சரிதான் சம்பந்தி கொஞ்சநாள் ஆகட்டும்.. எப்போ பா, டிக்கெட் போட்டிருக்கீங்க.. எப்போ கிளம்பனும்” என்றார்.

கார்த்திக் “பரணி பார்க்கிறார் அப்பா” என்றான்.

கமலநாதன் இப்போது ஸ்வேதாவோடு வெளியே வந்தான்.. இருவரும் ஹால் பக்கமாக  திரும்பிக் கூட பார்க்காமல் வெளியே கிளம்பினர்.

கார்த்திக் “அப்பா, பாருங்க.. நீங்க இன்னும் என்ன யோசிக்க போறீங்க” என்றான், தன் அண்ணன் சென்ற திசையை பார்த்தவாறு.

பெரியவர்களிடம் பதிலில்லை. அமைதி சூழ்ந்தது. அமைதி என்பதைவிட ஒன்றும் செய்ய முடியாத ஒரு நிலை.. இத்தனை பெரியவர்கள் நாங்கள் இருந்தும் இப்படி பெண்ணை விடுத்து இன்னொருத்தியோடு செல்லுகிறான்.. எங்களால் ஏதும் செய்ய முடியவில்லையே என ஆதங்கத்தில்.. கண்கொண்டு அந்த காட்சியை பார்க்க முடியாமல் தலை தாழ்ந்து அமர்ந்திருந்தனர்.

இரண்டு நிமிடம்.. எல்லாம் கைமீறி விட்டது என்ற உண்மை அவர்களின் தலையில் இறங்கியது. ஆனால், அதை ஏற்க முடியவில்லை நான்கு பெரியவர்களுக்கும்.. காயத்ரிக்கும்தான்.

காயத்ரி “அண்ணா…” என்றாள் சத்தமே வராத குரலில்.

கமலநாதந்தான் சென்றுவிட்டிருந்தானே. காது கேட்கவில்லை.

வள்ளியும் கௌசல்யாவும் உணவு என்ன என பார்க்க சென்றனர். 

சாரதா இப்போது எல்லோரையும் பார்த்தாள்.. ஓய்ந்து அமர்ந்திருந்த தன் தந்தையையும் மாமனாரையும் பார்த்து “தப்பா நினைக்காதீங்க மாமா, கல்யாணம் எனும்போது மனதில் எங்களுக்கு எல்லாம் ஒரு எண்ணம் இருக்கும்.. இவர்தான் சாஸ்வதம்.. வந்து சேர்ந்துவிட்டேன் என் உயிரிடம் என ஒரு எண்ணம் இருக்கும்.. எனக்கு அவர், அவருக்கு நான் என. அதுதானே வழக்கம். சரிதானே.

ஆனால், இவர் விஷயத்தில் எல்லாம் பொய்யாகி போச்சு மாமா. எனக்கு இனி இவர் வேண்டாமே.” என்றாள் மெல்லிய வார்த்தைகளை கோர்த்து திடமாக சொன்னாள்.

பெரியவர்களுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. தலையசைத்தனர் ஆமோதிப்பாக. ஆனால், ஏற்றுக் கொள்வது சிரமமாக இருந்தது.. மறுத்து பேசவும் முடியவில்லை.. அதான், மகன் தைரியமாக போகிறானே.. குற்றவுணர்வே இல்லாமல் போகிறானே என தோன்றியது. அமைதியாகினர். இரு பெரியவர்களும் எழுந்து சென்றனர் ஒன்றும் பேச முடியாமல். இனியன் இப்போது தாத்தாக்களோடு சென்றான்.

சற்று நேரம் அமைதி.

கார்த்திக், அதை களைத்தான். ‘உணவு ஆர்டர் செய்துக்கலாம்’ என சொல்லி என்ன வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தான்.

காயத்ரி அண்ணியின் அருகே வந்தாள், இப்போது. அண்ணியின் தோள் சாய்ந்துக் கொண்டாள்.. “உங்களுக்கு முன்னாடியே அண்ணன் இப்படி வேற ஒருத்தரோட பழகுறாங்கன்னு தெரியுமா அண்ணி.. அதான், யார்கிட்டவும் எதுவும் சொல்லலையா” என்றாள்.

சாரதா சோபாவில் அப்படியே சாய்ந்தாள். என்ன சொல்லுவது இவளிடம் என இருந்தது.

சாரதா “மூணு மாசத்துக்கு முன்னாடி தெரியும். அவங்க வீட்டில் ஸ்டே பண்ணியிருந்தார் உங்க அண்ணன். இப்போ எதோ, வீட்டை வக்கேட் பண்ண சொல்லிட்டாங்களாம். இங்க வந்துட்டாங்க. அவர்தான் சொன்னார். அஹ.. சாரி டா காயூ, நான் சொல்லலை உங்க அண்ணனை பற்றின்னு உனக்கு கோவம் இருக்கலாம்..” என்றாள்.

காயத்ரி “அண்ணி, சாரி அண்ணி, அப்படி இல்லை.. இப்படி நீங்க தனியா இல்லை அண்ணி, நாங்க எல்லோரும் கூட இருக்கோம்.. அப்போவே சொல்லியிருந்தால்.. முன்னாடியே, அப்பா.. ஊருக்கு கூட்டிட்டு போயிருப்பாரில்ல” என்றாள் குழந்தையாக.

சாரதா சிரித்தாள் “அஹ.. என காயூ.. இன்னமும் நாம பழைய காலம் மாதிரி, ஆண்கள் எல்லாம் அப்படிதான் இருப்பாங்க, அப்படின்னு சொல்லி சமாளிக்கனுமா. ம்.. ஏன் உன் அண்ணனுக்கு கல்யாணம்.. வாழ்வியல்.. வரைமுறை ஏதும் தெரியாதா.. வானத்திலிருந்து குதிச்சாரா.. ஏன் நான் சொல்லி, அவரை கண்ட்ரோலில் வைக்கணுமா.. ம்.. என் மனசுக்கு என்ன மரியாதை. சாரி, அப்படி நான்.. என் கணவரே என்றாலும்.. தக்க வைத்துக் கொள்ள கூடாதில்ல. அன்பு இல்லறம் எல்லாம் முறைபடுத்தப்பட்ட.. வாழ்வியல்.. இருபாலருக்கும் பொதுவானது. இதில், ஒருவர் தவறு செய்தால்.. பாதிக்கப்பட போவது மற்றொருவர். அதனால, அந்த தவறை மறைச்சி அப்படியே அவரோடு வாழ என்னால் முடியாது.. ம்..” என்றாள் திடமான குரலில். காயத்ரிக்கு தன் அண்ணியை பார்க்கவே பயமாக இருந்தது.. தன் அண்ணியின் நேர்மையான பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை அவளால். காயத்ரிக்கு, விவரம் தெரிந்து வீட்டில் பிரச்சனை என இப்போது தன் அண்ணிக்கும் அண்ணனுக்கும் நடப்பதுதான் தெரியும். மற்றபடி.. பிரச்சனை.. பேசி தீர்க்கக் வேண்டும் என ஏதும் இருந்ததில்லை அவர்கள் வீட்டில். அவள் அறிந்ததேயில்லை. அதனாலோ என்னமோ அவளால், அண்ணி சொல்லவில்லை என்பதும் தவறுதானே என அவளுள் ஓட.. அதை கேட்டேவிட்டாள். 

காயத்ரி “எல்லோரும் தவறு செய்வாங்கதானே, மூணு மாசம் முன்னாடியே தெரியுமில்ல.. சொல்லியிருக்கலாமில்ல.. தப்பு செய்யாதவங்க யாரு அண்ணி..” என்றாள். சாரதா நிமிர்ந்து பார்க்கவும் “இல்ல.. வீட்டுக்கு கூட்டிட்டு வரவரைக்கும்.. ஏன் சகிக்கனும்” என விழித்துக் கொண்டே கேட்டாள். ஏனோ அண்ணியை யாருமே எதுமே சொல்லவில்லையே என்ற எண்ணம்.. கேட்க்க தோன்றியது.

பரணி கார்த்திக் இருவரும் அப்போதுதான் பேசியபடியே வந்தனர். பரணி  கார்த்திக்கிடம் “டிக்கெட் நாளை காலை 11மணிக்கு..” என சொல்லிக் கொண்டே வந்து அமர்ந்தனர் இருவரும் சாரதாவின் எதிரில்.

இப்போது காயத்ரியின் பேச்சு காதில் விழுந்தது.

சாரதா “என்னை கம்ப்ளைன்ட் பண்ண சொல்றீய..” என்றாள், சலிப்பாக.

Advertisement