Advertisement

நீ என்னுள் யாரடா!..

4

கமல், தன் தம்பியின் திருமணம் முடிந்து பெண்டாட்டியை அழைத்துக் கொண்டு எங்கும் செல்லவில்லை. தன் நண்பர்களோடு கொடைக்கானல் சென்றுவிட்டான். தன் குடும்பத்தோடு செலவிட, வேலையை பார்க்க நேரம் இல்லாதவன்.. கொண்டாட்டங்களுக்கு நேரத்தை கொடுத்தான்.

அன்னை கௌசல்யா, மண்டபத்திலேயே கமலை நிறுத்தி கேள்விகேட்டார்.. ‘தம்பி கல்யாணம் வீட்டில் அத்தனை சொந்தம் இருக்கு.. பொண்டாட்டி பிள்ளை எல்லாம் இங்க இருக்கு.. நீ எங்கடா போற, அப்பா தனியா இருக்கார். கார்த்திக் இப்போது மாப்பிள்ளை, நீ இருடா வேலை இருக்கு’ என்றார்.

கமலநாதன் ‘அம்மா, இதென்ன எனக்கே எப்போவாதுதான் லீவ் அமையுது. ரொம்பநாள் பிளான் இது. அவனுக்கு கல்யாணம்ன்னா, நானென்ன பண்ண முடியும்.’ என்றான் ஒட்டாத குரலில். காயத்ரி அப்போது அன்னையின் அருகேதான் நின்றிருந்தாள்.. தன் அண்ணனின் பதிலில், எதோ புரிந்தது பெண்ணுக்கு. அதனால்தான், என்னதான் பிரச்சனை என தன் அண்ணியிடமும் கேட்டாள். 

சாரதா ஏதும் சொல்லவில்லை. கிட்செனில் இருவரும் பேச முடியாமல் நிற்க.. சரியாக அந்த நேரம் பரணி போனில் அழைத்தான், சாரதாவிற்கு.

சாரதா சின்ன குரலில் போனில் பேச தொடங்கினாள் “சொல்லுடா” என்றாள்.

பரணி “வண்டி அனுப்பவா க்கா, நீ எப்போ இங்க வர” என வினவினான்.

சாரதா சின்ன குரலில், ஆப்பிளை எடுத்து உமேஷ்க்கு ஊட்டிக் கொண்டே ‘இல்ல, இந்ததரம் நான் அங்க வரலை டா.. டிக்கெட் போடணும்.. ஃப்ரைடே எதோ டெஸ்ட் இருக்காம் இனியனுக்கு. நான் இப்படியே கிளம்பறேன்..” என பேசிக் கொண்டிருந்தாள்.

காயத்ரிக்கு கோவமாகவே வந்தது.. ‘அப்படி என்னதான் இவங்க ரெண்டுபேரும் பேசுவாங்களோ.. இவங்க கூட பொறந்ததாலோ என்னமோ.. இந்த அண்ணியும் வரவர சிரிக்கறதே இல்லை’ என எண்ணிக் கொண்டே, உமேஷ்ஷோடு விளையாடினால் பெண்.

அதன்பிறகு, சாரதா இந்தமுறை பிறந்தவீடு செல்லவில்லை. நேராக  புனே கிளம்பி சென்றுவிட்டாள். பெரியவனுக்கு பள்ளி இருக்கிறது என சொல்லி திருமணம் முடிந்து இரண்டுநாளில் கிளம்பிவிட்டாள்.

காயத்ரி சாரதா உடன் சென்றாள்.. அதனால், பரணி இந்தமுறை வரவில்லை.

காயத்ரி, தன் அண்ணியின் நடவடிக்கைகளை கவனிக்க் தொடங்கினாள்.

ஆனால், அவள் மனதில் பதிந்தது என்னமோ தன் அண்ணனின் நடவடிக்கைகள்தான். ம்.. அந்த வாரம் முழுவதும் கமல் வீடு வரவில்லை.

காயத்ரி “ஏன் அண்ணி, அண்ணன் ஏன் இன்னும் வீடு வரலை” என்றாள்.

சாரதா “நீயே போன் செய்து கேளு உன் அண்ணனை” என்றாள்.

காயத்ரி போன் செய்தால் எடுக்கவில்லை, கமல்.

காயத்ரி “என்னதான் நடக்குது இங்க” என அடிக்கடி தன் அண்ணியை கேள்வி கேட்டாள். ஆனால், எந்த பதிலும் சாராதாவிடமிருந்து வரவில்லை காயத்ரிக்கு.

சாரதா, இனியனை பள்ளிக்கு கிளம்பினாள். உமேஷுக்கு உணவு கொடுத்தாள்.. வீட்டை பராமரித்தாள்.. உண்டாள் உறங்கினாள். காயத்ரி, படம் பற்றி பேசினால்.. பதில் சொன்னால் சாரதா. பாட்டு பற்றி பேசினார்கள், வேலை, படிப்பு பற்றி பேசினார்கள். ஆனால், அண்ணன் பற்றி காயத்ரி கேட்ட எந்த கேள்விக்கும் சாரதா பதில் சொல்லவில்லை. மற்றபடி காயத்ரியை நன்றாக கவனித்துக் கொண்டாள். 

காயத்ரிக்கு, அந்த சூழ்நிலையில்  இருக்க முடியவில்லை.. அவளுக்கு சிரிப்பு வேண்டும்.. சந்தோஷம் வேண்டும்.. விளையாட இனியனும் உமேஷும் இருந்தாலும்.. அந்த வீடு என்னமோ இறுக்கமாக இருக்க.. பத்து நாட்களில் கோவை வந்து சேர்ந்தாள் பெண்.

இப்படி எல்லோருக்கும் தெரிந்ததை கூட சாரதா வாய்விட்டு யாரிமும் சொல்லவில்லை. சாரதாக்கு, ‘எனக்கு பிரச்சனை’ என வாய்விட்டு சொல்லவும்.. தோள் சாய்ந்து அழவும் கூட மனம் இல்லை. ம்.. சாரதாவிற்கு ஏனோ யாரிடமும் சொல்லவே தோன்றவில்லை. என்னவென சொல்லுவேன்.. நான் நம்பிய ஜீவனே.. என்னை புரிந்துக் கொள்ளவில்லை. நீ என் விருப்பத்திற்கு இல்லை என ஆறு வருடம் வாழ்ந்து விட்டு சொல்லுகிறது. அதை யாரிடம் சொல்லுவேன். ஒருமாதிரி என் வீழ்ச்சி இல்லையா.. என் கணவனுக்கு என்னை பிடிக்கவில்லை.. அவரின் விருப்பத்திற்கு நான் இல்லை.. என்கிறார். எல்லாம்தான் செய்தேன்.. வேலைக்கு சென்றேன்.. ஜீன் குர்த்தி என மாறினேன்.. பார்ட்டிக்கு போனேன். ஆனால், இப்போது பிள்ளைகள் இருக்கே.. என்னால், பிள்ளைகளை யாரையும் நம்பி விட முடியாது. அதனால், பார்ட்டி அவுட்டிங் என அவரோடு போக முடிவதில்லை.. என்ன செய்ய.. எனக்கு பிள்ளைகள் முக்கியம். ம்.. இதை எப்படி சொல்லுவேன் எல்லோரிடமும்.

அவர், எனக்கு கிட்செனில் நின்று உதவுவது போல.. ஈசியாக இல்லை,  அவரின் விருப்பம், எனக்கு. குடும்பம் என்ற கட்டமைப்பில் எனக்கு நம்பிக்கை உண்டு.. ஆனால், அவருக்கு தன்போல் பிள்ளைகள் வளரும்.. நீ அதனை தாங்கி பிடிக்காதே என்கிறார். இதை எப்படி சொல்லுவேன், எல்லோரிடமும். 

அதைவிட அவர்  என் முகத்தை பார்த்தே நாளாகிற்று.. என எல்லோரிடமும் எப்படி சொல்லுவேன். இப்போதெல்லாம் கமல், வீட்டில்  பால் கூட வாங்கி வந்து தருவதில்லை. வீடு தங்குவதே அரிதாகிவிட்டது.. நான் அவரை கேள்வியே கேட்கவில்லையே.. உங்கள் விருப்படி இருங்கள் எனத்தானே விட்டேன். ஆனால், என்னையும் அப்படி இருக்க சொல்லுவது எனக்கு பிடிக்கவில்லையே..  இதை எப்படி நான் எல்லோரிடமும் சொல்லுவேன். ம்.. எனக்கென மனம் இல்லையா.. போகட்டும் எதுவரை போகும்.. என்னை பிடிக்காமல் யாரை பிடிக்குமாம்.. வருவார். அவராகவே வருவார்.. என  எண்ணிக் கொண்டாள் பெண்.

ஏனோ இன்னமும் கமலநாதனை நம்பினாள், சாரதா. அதனால், விலகி போக தோன்றவில்லை.

கமலநாதனுக்கு, எதை பற்றியும் கவலையில்லை. அவனுக்கு, யாரும் கேள்விக் கேட்க்க கூடாது. அவன் நினைத்த நேரம் நினைப்பது போல இருப்பான். ம்.. வீடு வருவான்.. பிள்ளைகளை பார்ப்பான். மனையாள் வீட்டில் இருக்கிறாள் என இப்போதெல்லாம் கண்கொண்டு பார்ப்பதேயில்லை. கமலின் உலகம் பெரியது. அதில் குடும்பம் சடங்கு.. போக்குவரத்து.. கடமை என ஏதும் கிடையாது. வேலை.. கொண்டாட்டம் நண்பர்கள், மனம்போல் வாழ்வு.. என்பதாக கட்டமைத்துக் கொண்டான்.

பொதுவாக சொல்லலாம் இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. ஆண் என்றால் அப்படிதான் இருப்பான். எல்லாம் சரி சரின்னு போயிடனும்ன்னு சொல்லிடுவாங்க சிலபேர். எப்படி முடியும்.. நாம் என்ன அலுவலகத்திலா வேலை செய்கிறோம்.. அந்த மனுஷன் அப்படிதான் என கண்டுகொள்ளாமல் போக. நாங்கள் ஒரு கட்டமைப்புகள் நுழைந்து.. உடல் பொருள் ஆவி எல்லாம் கலந்து.. சாகும் வரை கைகோர்த்து செல்ல வேண்டிய உறவு. அதில் இந்த பிரச்சனை மற்றொரு நபரை பாதிக்க கூடாது என்பது அபத்தம்தானே.

ஆகிற்று மாதங்கள்.

ஒருநாள், சாரதா தன் தம்பிக்கு காலை பத்து மணிக்கு அழைத்தாள். குரலில் வெறுமைதான் பரபரப்பு இல்லை.. அழுகையில்லை.. என்னமோ வெறுமையோடு “பரணி, உங்க மாமா வீட்டுக்கு வந்திருக்கார் டா..” என்றாள்.

பரணி “சரி க்கா.. என்ன சொல்லு” என்றான்.

சாரதா “யாரோ ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்திருக்கார்.. பசங்க இனியன் இன்னிக்கு ஸ்கூல் போகலை.. என்னமோ அவனை அந்த ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.. எனக்கு ஒன்னும் புரியலை.. உங்க மாமாகிட்ட பேசி என்னான்னு கேட்டு சொல்லுடா..” என்றாள் வெறுப்பான குரலில்.

பரணிதான் அதிர்ந்து போனான்.. “என்ன சொல்ற..” என்றான்.

சாரதா “என்ன சொல்றேன் புரியலையா.. போனை வை” என்றாள் சலிப்பாக.

பரணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

மாலையில் புனேவில் இரு குடும்பத்தாரும் கூடி இருந்தனர்.

கார்த்திக் மனைவி துளசி மாசமாக இருப்பதால் வரவில்லை மற்றபடி காயத்ரி உற்பட எல்லோரும் வந்து சேர்ந்துவிட்டனர்.

இவர்கள் வரவும், அப்போதுதான் கிட்செனில் இருந்து கமலும் அந்த பெண் இருவரும் வந்தனர் வெளியே.

Advertisement