Advertisement

இதனிடையே இரண்டாம்முறை கருத்தரித்தாள் சாரதா. வீடே இப்போது சாரதாவை, இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. அப்போதாவது கமல் மனையாளை புள்ளைகளை தேடுவான்.. என பெரியோர்களின் எண்ணம். அதனால், இனியனை காரணம் காட்டி, கூட்டிக் கொண்டு வந்துவிட்டனர் சாரதாவை.

ஆனால், கமல் நிம்மதியாக இருந்தான். யாரும் அவனை காசு கேட்க்கவில்லை.. குடிக்காத, விழாவிற்கு வா என யாரும் அழைக்கவில்லை. எனவே, சந்தோஷமாக மனையாளோடு போனில் பேசினான் இனியனோடு பேசினான். அவள் மருத்துவமனை செல்லும் போது பணம் அனுப்புவது.. என நல்ல கணவனாக இருந்தான் இந்த நாட்களில்.

சாரதாக்கு, வளைகாப்பு நடந்தது. கமல் வந்தான்.. சந்தோஷம் பெற்றோருக்கு. நல்லவிதமாக வளைகாப்பு முடிந்தது. சாரதாக்கு அப்படி ஒரு சந்தோஷம்.. இத்தனை நாட்கள் வாடி இருந்தவள் இன்றுதான் மலர்ந்து தெரிந்தாள்.

காயத்ரி “அண்ணிக்கு அண்ணனை பார்த்தும் தான் ஹாப்பியே.. எவ்வளோ அழகாக இருக்காங்க இன்னிக்கு” என்றாள் உள்ளதை உள்ளபடி. எல்லோரும் அமோதிப்பாய் தலையசைத்தனர்.

பரணி, தன் அக்காவின் முகத்தையே பார்த்திருந்தான். கமலிடம் பேசுவதேயில்லை அவன். அவரும் அப்படியே. இப்போதெல்லாம் தலையசைப்பு மட்டுமே. பார்த்து பார்த்து வளர்த்தோம் எங்கள் அக்காவை.. எப்படி நோகடிக்கிறார் என வருத்தம் கோவம் இன்னும் என்ன என்னமோ கமலின் மேல் பரணிக்கு. எதையும் பேசுவதற்கும் யோசனை.. ம்.. அக்காவை எண்ணி அமைதியாக இருக்கிறான். எனவே, இப்போதும் கமலை பார்த்தான்.. நல்ல பிட்டாக வந்து நிற்கிறான்.. முகத்தில் எந்த  கவலையும் இல்லை. ஊள்ளூரில் இருந்த நான்கு நண்பர்களை அழைத்திருந்தான் கமல், எனவே, அவர்களோடு பேச்சும் சிரிப்புமாக இருந்தான்.

இப்போது பரணி தன் அக்காவை பார்க்க.. வயிறு பெரிதாக தெரிந்தது.. கன்னங்கள் ஒட்டி.. பொலிவில்லா முகம்.. எங்கள் வீட்டில் இருந்தபோது இருந்த மினுமினுப்பு காணோம் அவளிடம். இப்போது ஓடுகிறான் இனியன்.. அவனுக்கு எதையோ ஊட்டிக் கொண்டிருந்தாள் அவள். கிட்ட தட்ட போராடுகிறாள்.. அவள் வாழ்க்கையை அவள் வாழவேயில்லை.. ம்.. மூன்று ஜீவன்களோடு போராடிக் கொண்டிருக்கிறாள்.. என எண்ணிக் கொண்டான் பரணி.

தம்பியாக ஒன்றும் தன்னால் செய்ய முடியவில்லையே என தன் மீதே வருத்தம். தனக்கு தானே, அக்காவை இங்கே கூட்டி வந்திட வேண்டும்.. போதும் அங்கே இருந்து கஷ்ட்டபட்டது என எண்ணிக் கொண்டான்.

ஆனால், இனிதான் சிக்கலே ஆரம்பமானது.

சாரதாவிற்கு அடுத்தும் மகன் பிறந்தான்.

எல்லோரும் வாழ்வை பார்த்தனர். மீண்டும் எதோ வசந்தம் வந்திடும் என எண்ணிக் கொண்டாள் சாரதா. உமேஷ் என நார்த்சைடு பெயராக.. கணவனுக்கு பிடிக்குமே என வைத்தாள். கணவனும் நல்லா இருக்கு என்றான். போனில் பேச செய்ய என.. மாதங்கள் கடந்தது.

பரணி, படித்து முடித்து வந்துவிட்டான், அவன் இப்போது முழு நேரமாக தொழிலை கவனிக்கிறான். 

பெரிதாக கமல் மேல் நம்பிக்கை இல்லாததால்.. இப்படி இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு அவள் என்ன செய்வாள்.. மீண்டும் பொறுப்பில்லாமல் ஏதேனும் செய்வார் என தோன்ற, பரணி ‘ஏன் அக்கா, சிரமம்ப்படுற.. இங்கேயே இரு.. மாமா அங்கே இருக்கட்டும்.. மாதம் ஒருமுறை வந்து போகட்டும். கமலுக்கு, ஆறுமாசம் போனால், இங்கேயே ஸ்கூல் பார்க்கலாம். அங்க தனியா என்ன பண்ணுவ, உனக்கும் வேலை இருக்கும்.. உமேஷ்க்கு இப்போதுதான் ஏழுமாதம் நீ இங்கேயே இரு” என்றான்.

சாரதா தம்பியை முறைத்தாள் “டேய்.. அங்க அவர் தனியா இருக்கார்.. இனியனை அங்கேதான் சேர்க்கணும்.. ஸ்கூல் பார்த்து வைச்சிருக்கார்.. அதெல்லாம் நல்லா இருக்காது” என சொல்லி கிளம்பினாள் புனேவிற்கு.

இந்தமுறை.. கமல் இன்னும் மாறியிருந்தான். நாட்கள் சென்றது.

கமல், மனையாளுக்கு வேலை அதிகம் என புரிந்திருந்தான். தானும் உதவினான். இரவில், தன் மனையாளிடம் “எவ்வளோ வேலை உனக்கு, நீ கொஞ்சம் பீர் மட்டும் எடுத்துக்க சாரு.. காலையில் ப்ரெஷ்ஷா இருக்கும்.. அதான் உமேஷ்க்கு ஒரு வயசு ஆகிடுச்சில்ல..” என்றான்.

சாரதா அலறி பயந்து போனாள்.

கமல் விளக்கினான். அளவாக எடுத்தால் ஒன்னும் ஆகாது. என வகுப்பெடுத்தான். சாரதா முடியாது என்றுவிட்டாள்.

கமல் பேசவில்லை மனையாளோடு. சாரதா சமாதானமாக பேசினாள், கணவனோடு. ஆனால், கமல் ‘நீ அவுட் டேட்டட். நாம லைப் பார்ட்னர்ஸ்.. எனக்கும் உனக்கும் வேற வேற டேஸ்ட்.. என்னால், இதுக்கு மேல பொறுமையாக இருக்க முடியாது. எப்படி சொல்றது, எனக்கு இக்குவல்லாக நீ இருக்கனும்..” என மீண்டும் வகுபெடுத்தான்.. பின் “டைம் தரேன் கொஞ்சம் புரிஞ்சிக்க” என்றான் தன்மையாக.

ஆனால், சரதாவினால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. 

இருவருக்கும் நடுவில் விரிசல் வந்தது. கமல் அடிக்கடி வெளியே தங்கிக் கொண்டான். தன் அன்னை மாமியார் வந்தால் வீடு வந்தான். அதிகம் வீடு தங்கவில்லை. சரியாக மாதமானால் ஒரு தொகையை அவளின் அக்கௌன்ட்க்கு அனுப்பினான். இனியனுக்கு பள்ளி ஏற்பாடு செய்தான்.. எல்லாம் பார்த்தான். பாவம் சாராதவை பார்க்கவில்லை.

சாரதாவும் யாரிடமும் ஏதும் சொல்லிக் கொள்ளவில்லை. கமல்தான் சொந்த ஊர் வருவதில்லை.. சொந்தங்களை பார்ப்பதில்லை.. அன்னையோடு போன் என்பதே அரிதுதானே. இவள் சொன்னால் தானே, என்ன நடக்கிறது என்றே தெரியும். சாரதா வாயே திறக்கவில்லை தன் கணவனின் நடவடிக்கைகள் பற்றி.

உமேஷ்க்கு, மொட்டயடிக்க காதுகுத்து.. என எதற்கும் கமலை எதிர்பார்க்கவில்லை சக்திவேல். எல்லாம் பெரிய பேரனுக்கு செய்தபடியே செய்தார். அதனால் கமலிடம், தந்தைக்கு பேச்சுவார்த்தை இல்லை.

பிறந்தநாள் விழாவை, கமல் எப்போதும் போல நண்பர்களோடு புனேவில் சிறப்பாக கொண்டாடினான். பரணி, கார்த்திக், காயத்ரி மட்டும் வந்தனர் கடமைக்காக.

பரணிக்கு, எப்போதும் பயம்தான், தன் மாமா குறித்து. இப்போதெல்லாம் அக்கா அடிக்கடி தன் கணவனை பற்றி பேசுவதில்லை என எண்ணிக் கொள்வான். எனவே, அவன் அழைக்கும் போதெல்லாம் என்ன அக்கா, எப்படி இருக்க.. என கேட்பான்.. அனுசரணையாக பேசுவான்.. மாமா இப்போ எப்படி இருக்கார் என கேட்ப்பான். ஆனால், ஒருவார்த்தை சாரதா ஏதும் சொல்லவில்லை தம்பியிடம்.

சாரதாவிற்கு இந்த உமேஷ் பிறந்து இரண்டு வருடங்களில் கணவனின் செய்கை பார்த்து மனது விட்டு போனது. யாரிடம் சொல்லி இழுத்து பிடிக்க முடியும் என. ஆனால், அடுத்து என்ன செய்வது என புரியவில்லை அவளுக்கு. அடுத்து என யோசிக்க மனது நடுங்குகிறது.. போகட்டும் அவராகதானே எல்லாம் பேசினார்.. அதையும் அவரே பேசட்டும் என அமைதியாகவே இருந்தாள்.

எல்லாவற்றையும் பழகிக் கொண்டாள்.. மளிகை சாமான்கள் வாங்க நடந்தே சென்றாள்.. பையனை பள்ளியில் விட வேன் ஏற்பாடு செய்தாள். தனியாக பார்க்க தொடங்கினாள் வாழ்க்கையை. ஆனால், இரவில் அழுதாள்.. பகலில் இருந்த தைரியம் எல்லாம் இரவில்.. இருட்டில்.. எங்கோ ஒளிந்துக் கொண்டது. ஏன் என் வாழ்க்கை இப்படி என தன்னையே நொந்துக் கொண்டாள்.

கமல், வாரம் ஒருமுறை வீடு வந்தான் என்றால்.. தனியாக ஒரு அறைக்கு சென்றுவிடுவான். அவனின் உடைகள் பொருட்களை அங்கே மாற்றிக் கொண்டான். கதவை சாற்றிக் கொள்வான்.. தன் வேலை முடித்து வந்து பிள்ளைகளோடு விளையாடுவான்.. சாரதா உணவு கொடுத்தால் உண்ணுவான்.. ஏதாவது வேண்டுமா.. EB பில் கட்டிட்டேன்.. அம்மா இந்த வாரம் வரேன்னு சொன்னாங்க என இரண்டு வார்த்தை பேசுவான். அதன்பின் கிளம்பிவிடுவான்.

சாரதா, பிள்ளைகளின் விடுமுறைக்கு ஊருக்கு சென்றாள்.. ம்.. ப்ளே கிளாஸ் போகிறான் கமல். எனவே, விடுமுறையின் போது கோவை செல்லுவாள். கார்த்திக்கு பெண் பார்க்கிறார்கள் எனவே, அது விஷயமாக ஊருக்கு செல்லுவாள். அப்போதெல்லாம் கார்த்திக் அல்லது பரணி இருவரில் யாரேனும் ஒருவர் வந்து சராதா பிள்ளைகளை ஊருக்கு அழைத்து செல்லுவர். ஆனால், மறந்தும் கணவன் கேட்கவில்லை நான் வரணுமா என. அவளும் வாருங்கள் என சொல்லவில்லை. அவளின் உரிமையை பறித்துக் கொண்டான் அவளிடமிருந்து சத்தமில்லாமல், கமல். 

கார்த்திக் திருமணம்.

பரணி, அக்காவை அழைத்து வர, அங்கே சென்றான். நால்வரும் வந்து இறங்கினர் விமானநிலையத்தில்.

பரணிக்கு, இப்போதெல்லாம் தன் அக்கா தைரியமாக இருப்பதாக எண்ணம்.. ம்.. முன்பெல்லாம் லக்கேஜ் எடுக்க மாட்டாள்.. id கார்ட் மறந்துவிடுவாள். ‘எந்த பக்கம் போகனும் என பார்த்து செல்லமாட்டாள்.. யாரின் கைகளையாவது பற்றிக் கொள்வாள். ஆனால், இப்போதெல்லாம்  ஏர்போர்ட்டில் பிள்ளைகளை சரியாக கையாளுகிறாள்.. லக்கேஜ் எங்கே என அவளாக பார்த்து எடுக்கிறாள். எந்த நேரத்தில் பிள்ளையை தூக்கிக் கொள்ளவேண்டும்.. அவனின் பிடிவாதத்தை எப்போது கண்டிக்க வேண்டும்.. என எல்லாவற்றையும் சரியாக தன் அக்கா பார்ப்பதாக எண்ணம் பரணிக்கு. எனவே, அமைதியாக அக்காவை ஆராய்ந்துக் கொண்டே வந்தான்.

கார்த்திக் திருமணம் முடிந்தது. அதற்கு திருமணத்தன்று காலையில் வந்து நின்றான் கமல். இந்தமுறை சாரதாவின் முகத்தில் பொலிவு இல்லை கணவனை கண்டதும். பொலிவென்ன புன்னகை கூட இல்லை. தன் வேலை பிள்ளைகளை பார்ப்பது என இருந்துக் கொண்டாள்.

காயத்ரி, இப்போது தன் அண்ணியின் அருகில் நின்றிருந்தவள் சின்ன குரலில் “ஏன் அண்ணி, அண்ணனுக்கும் உங்களுக்கும் பிரச்சனையா” என்றாள்.

கார்த்திக்கின் திருமணம் முடிந்து இரண்டாம் நாள். அவர்கள் எல்லோரும் மறுவிருந்துக்கு சென்றிருக்க..  சாரதா உமேஷ் காயத்ரி எல்லோரும் பதினோரு மணிக்கு செல்லலாம் என இருக்க..  அப்போது, எதோ மகனுக்கு எடுத்துக் கொண்டிருக்க.. காயத்ரி கிட்சனில் கேட்டாள். 

அதிர்ந்து திரும்பினாள் சாரதா.

சாரதா ‘இவளே குழந்தை, இவளுக்கு தெரிகிறதா…’ என தோன்ற “இல்ல டா காயூ..”  என்றாள். காயத்ரி இப்போது கல்லூரி இறுதி வருடம் பரீட்சை எழுதி முடித்திருந்தாள். 

காயத்ரி “இல்ல அண்ணி, என்னமோ இருக்கு.. பிரச்சனை சின்னாதாக இருக்கும் போதே பேசிடலாம் அண்ணி.. எல்லோருக்கும் தெரியுது.. நீங்க பேசுங்க அண்ணி” என்றாள் அப்போதே.

சாரதா கீழே குனிந்து அந்த வேக வைத்த ஆப்பிள்ளை மசிக்க தொடங்கியவள் அதையே அடுத்த பத்து நிமிடமும் செய்தாள். நிமிரவேயில்லை.

Advertisement