Advertisement

வள்ளி “நீங்க பேசிட்டே இருங்க.. நாங்க சாமிக்கு பட்டு எடுத்திட்டு வந்திடறோம்” என கூறி தன் கணவன் மகளோடு அங்கே சென்றார்.

பரணி தன்னவளின் அருகில் வந்து “ஹப்பா.. எவ்வளோ கம்ப்ளைன்ட்..” என்றான்.

காயத்ரி “போங்க.. நீங்க பேசாதீங்க” என்றாள்.

அவ்வளவுதான் பரணி “இல்ல இல்ல நீ கம்ப்ளைன்ட் சொல்லு.. அதெல்லாம் பிரச்சனையில்ல.. ம்.. என்ன ஆச்சுன்னா, நான் உன்னை பார்த்ததும் எக்ஸ்சைட் ஆகிட்டேன். அதான், கொஞ்சம் டைம் எடுக்க.. அப்படி சொன்னேன். அப்செட் ஆகாத ம்.. இங்க பாரு..” என்றான். 

காயத்ரி அவ்வளவு சீக்கிரம் பரணியை பார்க்கவில்லை.

சற்று நேரம் அவளிடம் கொஞ்சினான் பரணி “பாருடா.. என்ன இன்னிக்கு பார்த்து.. நீ இவ்வளோ அழகா இருக்க.. நான் பாவமில்ல. நிமிர்ந்து பாரு டா” என்றான் ரசனையான குரலில்.. யாருக்கும் கேட்க்காமல் தன் தாடையை தடவிக் கொண்டே கௌரவமாக கெஞ்சிக் கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரம் எடுத்தது காயத்ரி சமாதானம் ஆக.. நீண்டநாள் சென்று தன்னவனை பார்க்கிறாள்.. தன்னவன் தன்னை முதலிலேயே.. கவனிக்கவில்லை.. தேடவில்லை என பெண்ணவளுக்கு சின்ன தாங்கல்.. அதுதான் இப்படி. 

பரணி “உன் ஹாப்பி முகத்தைத்தான் பார்க்க வந்தேன். முகமே சரியில்ல. வேலை டா.. எனக்கு. அதான் வர முடியலை.. இங்க பாரு காயூ” என்றான் பொறுமை இழக்கிறது எனும் விதமாக.. இடுப்பில் ஒருகையை வைத்துக் கொண்டு.. வளைத்து கையால் நெற்றியை தேய்த்தது கொண்டே விளக்கினான். குரல் இப்போது பொறுமையை இழந்துக் கொண்டிருந்தது.

இப்போதுதான் நிமிர்ந்தாள் பெண்.

பரணி, குழந்தைத்தனம் கடந்து.. தன்னையே தேடும் காதலியின் சாயலைத்தான் அவளின் முகத்தில் கண்டான் காதலன்.. அவளின் முகத்தை கையில் ஏந்திக் கொள்ளவே தோன்றியது அந்த ஷனம், ஆனாலும் சூழ்நிலை உணர்ந்து பரணி  “சாரி டா.. எல்லா வேலையையும் விட்டுட்டு உன்னை பார்க்க மட்டுமே வந்திருக்கேன்.. முகத்தை அப்படி வைக்காத.. ச்சில் காயூ..” என்றான்.. தன்னையும் மீறி தன்னவளின் கைகளை தானாக தேடி பிடித்துக் கொண்டான்.

காயத்ரி “அப்படி என்னதான் வேலையோ.. உள்ளூரில் இருக்கீங்க.. பார்க்க வரலை.. இருக்கட்டும், கல்யாணம் முடியட்டும் பார்த்துக்கிறேன்” என்றாள் கொஞ்சம் கோவம் கொஞ்சம் சமாதனமுமான குரலில்.

பரணி புன்னகையோடு “அவனை கொடு” என சொல்லி ஷ்ரவனை வாங்கிக் கொண்டான் அவளிடமிருந்து. பின் “விடு டா.. அதான் வந்துட்டேன்னில்ல.. என் காயத்ரிக்கு பக்குவம் இருக்குன்னு எல்லோருக்கும் தெரிய வேண்டாமா.. அதான் என் சார்பாக நீயும் இந்த வேலைகளை பார்க்கலாம்ன்னு அப்படி சொன்னேன்..” என்றவன் அவளின் கைகளை பிடித்துக் கொண்டான்.

அதன்பின் மணமக்களுக்கு உடைகள் எடுக்க தொடங்கினர். பரணி, ஆசையாக தன்னவளுக்கு புடவையை தேர்வு செய்தான். பின் ஓவ்வொருவருக்காகவும் உடைகள் வாங்கினர். உண்டு முடித்து வீடு வந்தனர் அனனவரும்.

சாரதா இப்போது இரண்டு மடங்கு பிஸி. வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் கல்யாண உடைகளை ரெடி செய்வது அவளின் வேலையாகிற்றே அதனால்தான்.

!@!@!@!@!@@@!@

கமலநாதனுக்கு, தன் மகளின் நிச்சயத்தை.. தானாக போன் செய்து சொல்லமாட்டேன் என சக்திவேல் சொல்லிவிட்டார். 

அதனால், அப்போது முதல் கௌசல்யா சண்டையில் இறங்கினார். சக்திவேல் பெரிதாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. கெளசல்யாவிற்கு, தன் பெரியமகனை இப்படி யாருமே மதிக்காமல் இருக்கிறார்கள்.. அதைவிட நிச்சயத்தில்.. சாரதாவை இன்னும் உசத்திவிட்டனர் எல்லோரும்.. என மீண்டும் அவருக்கு தோல்வியாக உணர்ந்தார். இன்னும் சாரதாவை வெறுத்தார்.

கமல், இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நிச்சயம் முடிந்து கூட அழைக்கவில்லை அன்னைக்கு. கௌசல்யா அழைத்தாலும் அந்த அழைப்பு சுவிட்ச் ஆப் என்றே வந்தது. ஆக, மகன் இன்னும் சுற்றுலா முடித்து வரவில்லை என எண்ணிக் கொண்டார்.

ஒருவழியாக கமல் அன்னையிடம் அழைத்து பேசினான். கௌசல்யா ஆசையாக விசாரித்தார்.. இங்கே காயத்ரிக்கு நடந்த நிச்சயம் பற்றி சொன்னார்.. நீ பேசு டா அவளுக்கு.. என்றார். 

ஆனால் கமல், நடுவயதில் கொண்டிருந்த மோகத்தில் லயித்திருந்தான். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தங்கையின் திருமணத்திற்கு என கௌசல்யா அழைத்து பேசி.. பத்திரிக்கையை அனுப்பி வைத்து.. கெஞ்சி மிரட்டி.. மகனை எந்த வகையிலேனும்.. இங்கே வர செய்திட வேண்டும் என எண்ணி மகனிடம் பேசினார்.

கெளசல்யாவினால் தன் பெரிய மகனை நினைக்காமல் இருக்க முடியவில்லை. என்னமோ பிள்ளை பாசம் அவரை வாட்டியது அளவிற்கு அதிகமாக அப்படிதான் சொல்ல வேண்டும் போல. உடல் மெலிந்தார்.. சரியாக உண்பதில்லை.. கோவில் கடை.. உறவினர் வீடு என எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கினார். வீட்டில் அவரின் பேச்சு  இப்போதெல்லாம் கேட்பதேயில்லை. எல்லாம் துளசிதான். சக்திவேல் கூட மனையாளிடம் பேசி பார்த்தார்.. ‘இதென்ன கௌசி.. கொஞ்சம் வீட்டையும் பார். அவனை விடு..’ என்றார். ஆனால், கௌசல்யாவின் மனம் சமாதானம் ஆகவில்லை.

காயத்ரியின் திருமணத்திற்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தது. கார்த்திக் ஒருமுறை அன்னையை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றான். பெரிதான பாதிப்பு என இல்லை.. சின்ன சின்னதாக பாதிப்புகள்.. சரி செய்ய கூடிய பாதிப்புகள்தான் என்றனர். அடுத்து என யோசிக்கும் போது.. அவர்கள் விரகிதியாக இருக்காங்க.. வீட்டில் ஏதேனும் பிரச்சனை என்றால் பேசி பாருங்கள் என அந்த பெண் மருத்துவர் ஆலோசனை கொடுத்து.. உடல்நிலை தேற.. மாத்திரைகள் கொடுத்தனர்.

அதிலிருந்து காயத்ரி அன்னையை கவனிக்க தொடங்கினாள். அதில், பெண்ணவள் உணர்ந்தது.. அன்னைக்கு அண்ணன் பேசவில்லை.. திருமணத்திற்கு வரமாட்டேன் என்றது கவலை என. எனவே, தானே அண்ணனை அழைத்து பேசினாள்.

காயத்ரி “கண்டிப்பாக திருமணத்திற்கு வா அண்ணா, அம்மா எப்படி இருக்கான்னு வந்து பார்த்திட்டு போ.. உன் நினைப்பில் உடம்பை கொடுத்துக்கிறாங்க.. வா.. எங்களுக்காக நான் கேட்கலை.. அவர்களை வந்து மட்டும் பாரு” என்றாள்.

கமல் அதனால், திருமணத்திற்கு முதல்நாள் வந்து சேர்ந்தான் தன் வீட்டிற்கு. கௌசல்யாவின் கண்ணில் உயிர் வந்தது. மகனை கவனிக்க வேண்டியே.. கௌசல்யா வீட்டில் வளையவந்தார் இன்று.

வீட்டில் அனைவருக்கும் திருப்தியானது. சக்திவேல் எதும் சொல்ல முடியாமல் பொருத்து போனார்.

பரணி காயத்ரியின் வரவேற்பு இனிதாக மாலையில் தொடங்கியது. அழகான பிங்க் ப்ரவுன் நிற லெஹங்கா.. அதற்கு தக்க.. ப்ரவுன் நிற சூட்டில் நின்றான் பரணி. ஆழ்சிவப்பு நிற ரோஜா இதழ் மாலை.. இருவரின் மேனியை தழுவி இருக்க.. மனம் முழுவதும் நேசம் நிரம்பியிருக்க.. இன்னும் அழகாக தெரிந்தனர்.. மணமக்கள். அங்கிருந்த வாசம் கொண்ட மலர்கள்.. வண்ணம்  கொண்ட விளக்குகள்..  எல்லாம் தோற்று போகிற்று.. காதலர்களின் ஜோடி பொருத்திற்குமுன்.

பெரியவர்கள் அமர்ந்து.. பெண் மாப்பிளைக்கு நலங்கு வைத்தனர். இப்போதும் வள்ளி ஆரம்பித்து வைக்க.. சாரதா, முன்னே வந்து நின்றாள். 

ஆழ்நீலமும் வான நீலமும் கொண்ட மென்பட்டு.. ப்ளைன் ப்ளௌவுஸ்.. அழகான அளவான அணிமணிகள்.. எதற்கும் ஏங்காத கண்கள்.. அலட்டாத புன்னகை. அழகான உடை.. அத்தனை பாந்தமான சேலை.. அதையெல்லாம் விட.. தன்னம்பிக்கை என்ற அழகை தனக்கென எடுத்துக் கொண்டவளின் மிளிர்வும் நிமிர்வும் அந்த இடத்தைய ஆர்கஷித்துக் கொண்டது. குறையே இல்லையே என எல்லாவற்றையும் நிறுத்தி நிதானமாக செய்து.. மணமக்களை வாழ்த்தி.. காயத்ரிக்கு நலங்கு வைத்து.. பிள்ளைகளோடு நின்று முதலில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டாள், சாரதா. 

கமலநாதனை யாரும் பேருக்கு கூட மேடைக்கு அழைக்கவில்லை. கௌசல்யா, கணவனோடு செல்லும் போது.. கமல்’லை அழைத்தார். சக்திவேல் மனையாளை முறைத்தார். தன் மகள் மணகோலத்தில் பரணியோடு நடுவில் நிற்க.. தன் மனையாளும் தானும்.. அந்த அலங்கார சோபாவில் அமர்ந்துக் கொண்டார். முதல் மருமகள்.. பரணியோடு நிற்க வைத்தார். ஷ்ரவனை மடியில் அமர்த்திக் கொண்டு.. மற்ற இரு பேரன்களை அருகமர்த்திக் கொண்டு..  இரண்டாம் மகன் மருமகளோடு அழகாக குடும்ப புகைப்படம் எடுத்தக் கொண்டார், சக்திவேல். பெரியமகனை பார்வையால் கூட தீண்டவில்லை. அதன்பின் தனியாக கமலநாதனும் கௌசல்யாவும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஒதுக்கி வைக்க வேண்டும் என இல்லை.. ஆனால், முறை தவறினால்.. என்னவாகும் என தன் மகன் உணரவேயில்லை.. என எண்ணினார் சக்திவேல். சாரதா, அத்தனை சங்கபடுத்தபடுகிறாள்.. இன்னமும் தன் மனைவியால். ஆனால், மகனை இன்னமும் தேடுகிறாள்.. தன் மனைவி. என்னமோ அவருக்கு.. சரியாக படவில்லை இது. மனைவியிடம் சொல்லி பார்த்துவிட்டார்.. மிரட்டி அதட்டியும் பார்த்து விட்டார்.. ஆனாலும் கேட்கவில்லை. எனவே, இருவருக்கும் சேர்த்து வலிக்கட்டும் என சபையில் அப்படி நடந்துக் கொண்டார் சக்திவேல்.

Advertisement