Advertisement

சக்திவேல் “இல்ல இல்ல கண்டிப்பா இப்படி பெண்பார்ப்பது போன்று.. மீண்டும் குடும்பங்கள் இரண்டும் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் கொஞ்சம் கோவங்கள் குறையும்.. நடைமுறை புரியும்” என்றார்.

அதனால் இந்த சந்திப்பு.

நல்ல நேரத்தில் பரணியின் குடும்பம்.. அவனின் சித்தப்பா குடும்பம் என பத்து நபர்கள் எளிமையாக பூ பழம் தாம்பூலத்தோடு காயத்ரியை பெண் கேட்டு வந்தனர்.

கார்த்திக் துளசி வரவேற்ப்பில் நின்று எல்லோரையும் கைகூப்பி வரவேற்றனர். சக்திவேலும் வந்துவிட்டார் வாசலுக்கு.. அவரும் எல்லோரையும் வரவேற்றார். கௌசல்யா ஹாலில் நின்றார்.. உதடுகள் இறுகி.. பிரியாமல் அழுத்தமாக வளைந்தது போல இருந்தது.. கண்கள் உதாசீனமாகவே வந்தவர்களை பார்த்தது.

வள்ளி அருகில் வரவில்லை.. கௌசல்யாவை பார்த்ததும்.. அவரிடம் இசைவு இல்லை எனவும் தன் பார்வையை துளசியை நோக்கி மாற்றிக் கொண்டார்.

இனியனும்.. உமேஷ்ஷும்.. நீண்டநாள் சென்று.. இங்கே வருவதால்.. “ஹேய்..” என கத்திக் கொண்டே சோபாவில் ஏறி குதித்து.. பின் இறங்கி மாடி படி பாதி ஏறி.. பின் அங்கிருந்து இரண்டு இரண்டு படியாக குதித்து இறங்கி.. பின் ஷ்ரவனோடு விளையாட தொடங்கியிருந்தனர். இந்த நிமிடம் அந்த இடம் குழந்தைகளின் ஆரவாரத்தில் கொஞ்சம் புன்னகையை பூசிக் கொண்டது.

சக்திவேல் உள்ளே வந்தவர் “கௌசி.. தண்ணீர் கொடு” என்றார்.. மனைவியின் இறுகிய முகம் பார்த்து.

துளசி எடுத்து வந்தாள். 

சக்திவேல் “வாங்கன்னு கேளு” என்றார்.

கௌசல்யா “வாங்க அண்ணா, அண்ணி..” என்றார். பரணியை பார்க்கவேயில்லை சாரதாவையும் திரும்பியே பார்க்கவில்லை. 

சக்திவேல் “ஹேய் மாப்பிள்ளையை பாரு” என்றார் முறைத்தபடி.

கௌசல்யா “வா பரணி” என்றார்.

சக்திவேல் “காயத்ரியை கூப்பிடும்ம்மா.. சொல்லனுமா” என்றார் சின்ன குரலில் அதட்டலாக.

கௌசல்யா “எல்லாம் அவளே வருவாள்” என்றார் பற்களை கடித்துக் கொண்டு.

துளசி எல்லோருக்கும் சிற்றுண்டி எடுத்துக் கொண்டிருந்தாள்.

சாரதா “மாமா, நான் போய் காயத்ரியை பார்த்துட்டு வரேன்” என்றாள்.

சக்திவேல் “ம்.. இப்போதான் உனக்கு புரியுதா ம்மா.. நீ எங்க வீட்டு பொண்ணு.. போம்மா போ..” என்றார்.

சாரதா மாமனாரின் உரிமையான அதட்டலில்.. ஏதும் பேசாமல் மேலே செல்ல போக.. கௌசல்யா “விடு, அவளே வருவா” என்றார்.

சட்டென என்னமோ போலானது சாரதாவிற்கு.  

சக்திவேல் சத்தமில்லாமல் முறைத்தார் மனையாளை. அதற்கெல்லாம் அவர் அசரவில்லை “இல்ல, என் பொண்ணு வாழ்க்கையாவது நல்லா இருக்கனுமில்ல” என்றார்.

சக்திவேலுக்கு சொல்ல முடியாத கோவம்.. மனையாளை பார்வையால் எரித்தார் என்றே சொல்ல வேண்டும். பரணியின் சித்தி.. கௌசல்யாவின் இந்த பேச்சை கவனித்துவிட்டார்.. அவரால் பொறுமை காக்க முடியவில்லை.. பரணியின் கவனத்தை ஈர்ப்பது போல சத்தமாக “ஏன் பரணி.. இந்த பெண்ணேதான் வேணுமா உனக்கு” என்றார் சத்தமாக.

பரணிக்கு, இதென்ன தன் சித்தியே இப்படி கேட்க்கிறார்.. என் மாமியார்தான் வம்பு செய்வார் என வந்தால்.. இதென்ன என் வீட்டிலேயே வம்பு என எண்ணிக் கொண்டே “என்ன சித்தி..” என்றான் தன்மையாக.

அந்த சித்தி “இல்ல பா.. உன் வருங்கால மாமியார்.. சாரதாவை இப்படி பேசுறாங்க. என்னமோ அவள்தான் வாழமாட்டேன்னு வந்தவள் போல” என்றார்.

சக்திவேல் மனையாளை இன்னும் முறைத்தார்..

பரணி “சித்தி, என்ன..” என்றான்.

சித்தி “அவ என்ன வேணும்ன்னே வந்தாளா.. அங்கே இன்னொரு பெண்ணை வீட்டுக்கு கூட்டி வந்து.. ச்சே ச்சே.. எப்படி எல்லாம் அவளை அசிங்கபடுத்தியிருக்காங்க.. இவங்க பையன். இவங்களுக்கு இப்படி நடந்தால் தெரியும்.. அதையெல்லாம் மறந்துட்டு நாம பொண்ணு கேட்டு வந்தால்.. என்னமோ அவங்க அப்படி பேசுறாங்க.. சாரதா நீ மேல போய்.. உன் தம்பி பொண்டாட்டிய கூட்டி வா. இவங்க இப்படி ஒரு ஒழுக்கமில்லா பையனை பெத்துட்டு இவங்களே பேசும்போது.. எங்க வீட்டு பசங்க.. ஒழுக்கத்திற்கு.. நாங்க எவ்வளோ பேசணும்.. நீ போ சாரதா” என்றார் சத்தமாக சண்டை போட வேண்டும் என இல்லாமல்.. சத்தமாக உடைத்து பேசினார் சித்தி.

வள்ளிக்கு அப்படி ஒரு சந்தோஷம்.. கண்களில் நீர் ததும்ப தன் ஓரகத்தியை பார்த்தார். சித்தி “அக்கா.. நீங்க இதெல்லாம் முன்னமே பேசிடனும்.. நாளைக்கு மண்டபத்தில் ஏதேனும் சொல்லு வந்திட கூடாது சொல்லிட்டேன்.” என்றவர் கௌசல்யாவை திரும்பி பார்த்து.. சக்திவேலிடம் பேசினார் “அண்ணா, எங்க பொண்ணுக்கு எந்த சங்கடமும் வர கூடாது சொல்லிட்டேன். அவள் ஏற்கனவே மனசளவில் காயம் பட்டிருக்கா. கல்யாணத்தில்.. அவளை ஏதாவது சொல்றது.. அவளின் முன்னால் கணவன்னு சொல்லிக்கிட்டு அவர் வந்து நிற்பது எல்லாம் ஆகாது. கமல் கல்யாணத்திற்கு வந்தால்.. பார்த்திட்டு அமைதியா போகிடனும். அந்த பொண்ணு.. அது இதுன்னு இப்படி வேற யாரும் வர கூடாது. எங்க பொண்ணுதான் எல்லாத்துக்கும் முதலில் எங்களுக்கு. அவ மனசு திரும்பவும் நோகக் கூடாது. இதெல்லாம் நீங்களே உணர்ந்து நடத்தி இருக்கணும்.. நாங்க சொல்லுவது சரியாக இருக்காது. ஆனாலும், இப்படி காயத்ரியோடு அம்மா பேசுவதால்.. எல்லாத்தையும் நானே முன்னாடி பேசிட்டேன் எங்க வீட்டு சார்பாக. என்னை, நீங்க  தவறாக நினைத்தாலும் பரவாயில்ல அண்ணா.. தெரியாதவர்களுக்கு சொல்ல வேண்டியது எங்கள் பொறுப்பே” என்றார் அழுத்தம் திருத்தமாக.. படபடவென.

அஹ.. அம்மாவை  விட இவங்க நாலுமடங்கு போல என கார்த்திக் எண்ணிக் கொண்டான்.

துளசி ‘ம்.. நீங்க பேசினா.. அவங்க வீட்டிலும் பேச எத்தனை நேரமாகும்.. என் மாமியாருக்கு தேவைதான் இது’ என எண்ணி.. பரணியின் சித்தியை பார்த்து “சித்தி.. அப்படி இல்ல.. அத்தைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, அதான். நீங்க அப்படி எல்லாம் நினைக்காதீங்க.. எங்க சாரதா அக்காவை நாங்க எங்கும் விட்டு கொடுக்க மாட்டோம்.. மாமா சொல்லுங்க” என்றாள்.. தன் மாமனாரை பார்த்து.

சக்திவேல் “ம்.. அவளுக்கு உடம்பு முடியலை.. எதோ உளறுறா.. நீங்க சாப்பிடுங்க.” என்றார்.

பரணி “எங்க சித்தி, எல்லாவற்றிலும் சரியாக இருப்பாங்க. தப்புன்னா சொல்லிடுவாங்க, அதான் மாமா.. அத்தை நீங்க ஏதும் நினைக்காதீங்க.. உங்களுக்கு உடம்பு முடியாதுன்னு அவங்களுக்கு தெரியாது” என சமாதானம் செய்தான்.

கெளசல்யாவிற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.. முகம் சிருத்து போனது.. ‘அசிங்கமாக போனது. நமக்கும் மேலே என்ன வாய் பேசுறாங்க.. எனக்கு என்ன நான் நல்லாத்தான் இருக்கேன். உடம்பு சரியில்லையாம். நான் ஏன் பேச கூடாது’ என வெறிதான் வந்தது.

சக்திவேல் “கௌசி BP மாத்திரை போட்டியா..” என்றார் மனையாளின் வெறித்த பார்வை பார்த்து. இப்போது முறைப்பது கௌசல்யாவின் முறையாகிற்று.

உண்டு முடித்து.. சித்தி “சாரதா துளசி இரண்டுபேரும் போய்.. காயத்ரியை கூட்டி வாங்க.. அவங்களுக்குதான் உடம்பு முடியலையே” என்றார்.

மறுக்க முடியாமல் துளசி சாரதா இருவரும் மேலே சென்று காயத்ரியை அழைத்து வந்தனர்.

காயத்ரி, ராமர் பச்சையும் ஊதாநிறமும் கலந்த காஞ்சி பட்டு கட்டியிருந்தாள். கண்ணில் மை.. அளவாக மல்லிகை..  ததும்ப ததும்ப பரணியிடம் கொண்ட காதல்.. என சபையில் வந்து நின்றாள் பெண்.

பார்த்த பெண்தான்.. தங்களின் முன் வளர்ந்த பெண்தான்.. என வள்ளி பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், இப்போது காயத்ரி பூரிப்போடு நின்றாள்.. என்ன என ஆராய்ந்தார் வள்ளி.. காயத்ரியின் பார்வை.. தன் மகனையே பார்ப்பதை உணர்ந்தார் ‘எத்தனை குறை இருந்தாலும்.. என் மகன்தான் வேண்டும் என.. ஊரறிய சொல்லி.. என் மகனை தூக்கி பிடித்தவள்’ என.. இந்த நொடி வள்ளிக்கு மனதில் இருந்த ரணமெல்லாம் விலக.. “காயத்ரி.. வா இங்க வந்து உட்கார்” என தனதருகே அழைத்து அமர்த்திக் கொண்டார்.

சற்று நேரம் சென்று.. காயத்ரிக்கு சாரதாவின் கைகளால் நலங்கு வைக்க சொல்லி.. பூ வைத்து.. அவளிடமே.. தாங்கள் வாங்கியிருந்த நகையை போட்டு விட செய்தனர்.. அன்னையும்  சித்தியும். 

பின் பரணியும் காயத்ரியையும் அருகருகே நிற்க வைத்து புகைபடம், எடுத்தன் கார்த்திக். மோதிரம் மாற்றிக் கொண்டனர் இருவரும்.. 

துளசியின் அலைபேசியிலிருந்து 

“கண்ட நாள் முதலாய் 

காதல் பெருகுதடி..

கையினில் வேல் பிடித்த 

கருணை சிவபாலனை..

கண்டநாள் முதலாய்.. 

காதல் பெருகுதடி..”

என ஆனந்தபண் இசைத்து சத்தமாக.

 

Advertisement