Advertisement

நீ யாரடா என்னுள்!

22

வள்ளி, இப்போதெல்லாம் மகனிடம் அதிகமாக பேசுவதில்லை. அதிலும், அன்று, சக்திவேல் வந்து உணவருந்திவிட்டு.. தன் மனையாளுக்கு இந்த திருமணத்தில் அதிக நாட்டமில்லை என சொல்லி சென்றதிலிருந்து.. மனதே கேட்கவில்லை வள்ளிக்கு. ‘ஏன் தன் மகனுக்கு இப்படி ஒரு புத்தி..’ என மனது கசந்து போனது. 

சாரதாவிடம் “ஏன் உன் தம்பி இப்படி பண்றான்.. அவனுக்கு வேற பெண்ணே கிடைக்கலையா” என தன் வருத்தத்தை கொட்டி தீர்த்தார்.

சாரதாவிற்கு அன்று, அவர்களை கண்களால் பார்த்துவிட்ட போது.. அவளுடைய எண்ணங்கள் மாறி இருந்ததுவே. ம்.. காதல் கொண்ட ஜீவன்கள் நிலையை கண்களால் பார்த்துவிட்டவளால்.. அதனை எதிர்க்க முடியவில்லை. ‘முகத்தில் மினுமினுப்போடு.. கண்களில் கனவோடும் நிற்கும் இந்த ஜோடிகளுக்கு காதல் கைகூடட்டும்’ என மனதுள் எண்ணிக் கொண்டு தன் அன்னையிடம் சமாதானம் செய்வாள் அப்போதெல்லாம்.

ஆனாலும், வள்ளிக்கு மனது சமாதானம் ஆகவில்லை.. என் மகளுக்கு நியாயம் கிடைக்காத வீடு என.. எண்ணிக் கொள்வார் மனதில். ஆனால், அதை வெளியில் சொல்ல முடியவில்லை அவரால். மகனின் விருப்பம்.. அவனின் உற்சாக மனநிலையை பார்க்கிறாரே.. அதனால், எதையும் வெளியில் காட்ட முடியவில்லை அன்னையால். 

அடுத்தடுத்த மாதங்கள் எப்போதும் போலதான் கடந்தது. எல்லோரின் மனதிலும் தாக்கம்தான்.. பரணி காயத்ரியின் விஷயம். ஆனாலும், காலம் இவர்கள் இருவருக்கும்தான் திருமணம் நடக்கும் என்ற நிதர்சனத்தை எல்லோரின் மனதிலும் விதைத்திருந்தது. 

கமல் சாரதா டிவோர்ஸ் வழக்கு முடிந்திருந்தது. இருவருக்கும் மனமொத்து பிரிவதால்.. எளிதில் விடுதலை கிடைத்துவிட்டது. சாரதா கையெழுத்திட நீதிமன்றம் சென்றாள். கார்த்திக் பரணி இருவரும் துணை நிற்க.. வந்துவிட்டிருந்த நிதானத்தில்.. பொறுமையாக எந்த சலனமும் இல்லாமல் கையெழுத்திட்டு.. கமலை நிமிர்ந்து பார்த்து.. புன்னகை செய்து.. தனக்கான பத்திரத்தை வாங்கிக் கொண்டாள் பெண். அந்த புன்னகையில் அத்தனை தன்னம்பிக்கை.

கமல், அதே விட்டேற்றி மனநிலையில் இருந்தான். அதை யாருமே கண்டுக் கொள்ளவில்லை. இனி இவனை பற்றி கவலைபட வேண்டியதில்லை என்ற எண்ணம்தான் கார்த்திக்கு. ம்.. அண்ணன் குறித்து ஒரு தம்பி இப்படி எண்ணுவது.. என்றால், அதன் செயல்பாடுகள் எப்படி இருந்திருக்கும். எவ்வளவு வெறுப்பை தந்திருக்கும். கமல் எதையும் பெரிதாக எண்ணவில்லை. அப்படியே சென்றுவிட்டான்.

கமல், அந்த பத்திரத்தை வாங்கிக் கொண்டு வீடு வந்தான். சக்திவேல்.. மகனை வாவென கேட்க்க கூட இல்லை. ஆனால், கௌசல்யா “எப்போ டா.. அந்த பெண்ணை கல்யாணம் செய்துக்க  போற” என்றார்.

கமல் அன்னையை வினோதமாக பார்த்தான்.

கௌசல்யா மீண்டும்.. அதே கேள்வியை கேட்டார். கமல் இந்த முறை “நான் எப்போ, கல்யாணம் பத்தி பேசினேன். நாங்க  இப்போது சுவிஸ் போகனும்.” என்றவன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.

கௌசல்யா “கல்யாணம் செய்துகிட்டு போடா” என்றார்.. அக்கறையான குரலில்.

கமல் ஏதும் பேசவில்லை. மதியம் உண்டு தனது அறையில் அமர்ந்துக் கொண்டான். கமலுக்கு சற்று பணம் தேவையாக இருந்தது. முன்பு போல செலவுகள் கைக்குள் அடங்குவதில்லை. என்னமோ அவனின் கையை கடிக்க தொடங்கிவிட்டது. இப்போது, அவனின் வெளிநாட்டு பயணத்திற்கு பெரிய தொகை தேவைப்படுகிறது. அதனால், அன்னையிடம் கேட்டான் அன்று இரவு. கௌசல்யாவும், தன் கணவனுக்கு தெரியாமல் தனது நகையை கொடுத்தார் மகனிடம். கமல் வாங்கிக் கொண்டு சென்றான்.

!@!@!@!@@!@!@!@!

பரணி காயத்ரி இருவருக்கும் ஒவ்வொரு நாளும் கடப்பதும் கொஞ்சம் பாரமாகதான் இருந்தது. ஆனாலும், இரவில் இருவரும் பேசிக் கொள்ளும் அந்த பத்து நிமிஷத்தில்.. பாரமான நேரம் எல்லாம்.. காதலான நேரமாக மாறி போகிற்று இருவருக்கும்.

ஆதிக்கு பெண் அமைந்து திருமண தேதியை குறித்துவிட்டனர் என சங்கத்திலிருந்து செய்தி வந்தது சக்திவேலுக்கு. அப்பாடா என நிம்மதி சக்திவேலுக்கும் தணிகாசலத்திற்கும்.

இனி என்ன.. நல்லநாள் பார்த்து சக்திவேல் வீட்டிற்கு பெண் கேட்டு வந்தார் தணிகாசலம் குடும்பத்தார். 

காயத்ரி, மதியம் லஞ்ச் முடிந்ததும் வந்து  கிட்செனில் நின்று கொண்டாள். வீட்டில் வேலை செய்யும் அக்காவிடம் நின்றுக் கொண்டு “அக்கா, பஜ்ஜி வேண்டாம்.. மாமாக்கு ஒத்துக்காதாம். அவருக்கு ஸ்ட்ரீம் ஐய்டெம்.. என்ன க்கா செய்யறீங்க..” என்றாள். பின் “ஸ்வீட்டில் அந்த பூசணிக்காய் வைச்சு ஒரு ஸ்வீட் பன்னுவோமில்ல.. அது செய்யணும் அக்கா.. அத்தைக்கு அந்த ஸ்வீட் பிடிக்குமாம்..” என மதியமே தேவையானதை சொல்லி.. என்ன செய்ய வேண்டும் என சொன்னாள்.

வீட்டில் புது கர்ட்டன்ஸ் மாற்றி.. வாசலில் வாசனை மலர்களை நிரப்பி.. என சுற்றிக் கொண்டிருந்தாள். துளசியும் அவளோடு சேர்ந்துக் கொண்டு மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டே.. பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. “காயத்ரி, போதும் பொண்ணு கேட்டுதான் வராங்க.. நீ ஓவர் ஆக்ட் பண்ணின.. அப்புறம் உன்னை கொடுக்கனுமா வேண்டாம்ன்னு யோசிக்க வேண்டி வரும்” என்றாள்.

காயத்ரி “ம்.. யோசிப்பீங்க யோசிப்பீங்க.. என் ஆளு எதோ பொறுமையாக இருக்கார். அதனால் இப்படி பேசுறீங்க.. இனி அப்படி பொறுமையாக எல்லாம் இருக்கமாட்டார். ம்.. நான் இருக்கவும் விடமாட்டேன். பொண்ணு கொடுக்க யோசிப்பீங்களாமே..” என்றாள் தன் அண்ணியை வெட்டவா குத்தவா என பார்த்துக் கொண்டே.

துளசி விடாமல் “ம்.. அத சொல்லு.. நீ விட மாட்டன்னு. பாவம் பரணி.. உன்னை கட்டிகிட்டு என்ன பாடுபட போறானோ” என்றாள்.

காயத்ரி “ம்.. நீங்கயெல்லாம் என்ன பண்ணீங்களோ.. அப்படிதான் நாங்களும்..” என்றாள் சின்ன குரலில்.

துளசி “அடியேய்.. உன்கிட்ட பேசினேன் பாரு.. உனக்கு முத்தி போச்சு..” என்றாள் புன்னகையோடு.

காயத்ரி “இப்போவாது புரியுதா உங்களுக்கு” என்றாள் வேலையை முடித்துக் கொண்டு.. இரு கைகளையும்  தட்டிக் கொண்டு.

துளசி “அஹ.. காயூ.. இனி உன்கிட்ட பேசமாட்டேன்.. கல்யாணம் முடியும் வரை.. ஒரு மார்கமாத்தான் இருக்க நீ” என்றாள்.

காயத்ரி “குட் டிசிஷன் அண்ணி. ஷரவனை நல்ல தூங்க வைங்க.. ஈவினிங் அவன்தான் எனக்கு கம்பெனி.. கொஞ்ச நேரம் நான் ரெஸ்ட் எடுக்கிறேன்” என சொல்லி மேலே தன்னறைக்கு சென்றாள்.

கௌசல்யா காலையிலிருந்து டென்ஷனில் இருக்கிறார். ‘எனக்கு சுத்தமாக இந்த ஏற்பாட்டில் விருப்பமில்லை’ என தெரிந்தும் கணவன் இப்படி செய்வது பிடிக்கவில்லை.. பெண்ணிடமும் பேசுவதில்லை.. முன்போல  எதையும் பார்ப்பதில்லை. எல்லாம் துளசிதான் பார்க்கிறாள் இப்போது. அடிக்கடி, தன் அறையில் சென்று முடங்கிக் கொண்டார் கௌசல்யா.

சக்திவேல் மனையாளிடம் “இங்க பாரு.. உன் பெரிய  பையனுக்கு வேணும் என்பதையும் பார்த்து பார்த்துதான் செய்தோம்.. இப்போது அவன் தறிகெட்டு திரிகிற போதும்.. நீ, அவனுக்கு டிவோர்ஸ் வாங்கி தந்திருக்க. அதையெல்லாம் நான் ஏதும் சொல்லாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கேன். இப்போ இது  என் பெண் விஷயம்.. இதில், உன் மூலமாக எந்த  தடங்களையும் நான் அனுமதிக்க மாட்டேன். பார்த்து நடந்துக் கொள்..” என முன்பே சொல்லிவிட்டார். அதுவும் கெளசல்யாவிற்கு கோவத்தை கொடுத்திருந்தது.  அதனால், காயத்ரியின் இந்த ஆர்பாட்டங்களை பொருமியபடியே கவனித்துக் கொண்டே தன் அறையில் அமர்ந்துக் கொண்டார்.

சக்திவேல்.. மதியம் சற்று உறங்கி எழுந்து வந்து பார்க்க.. காயத்ரி கிட்செனில் நின்றுக் கொண்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்துக் கொண்டிருந்தாள்.. வீடு விருந்தினரை வரவேற்க்க தயாராக இருந்தது. தந்தை புன்னகை முகமாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு “காயூ மா, அப்பாக்கு காபி கிடைக்குமா.. இல்லை, அவங்க வந்த பிறகுதானா” என்றார்.

காயத்ரி “அப்பா.. இப்போது குடித்தால்.. அவர்கள் வரும் போது எல்லோருக்கும் கொடுப்பேன், உங்களுக்கு கிடையாது. பரவாயில்லையா” என்றாள் கண்டிக்கும் குரலில்.

சக்திவேலும் “ம்.. சரிதான். நான் எல்லோரின் வாயையும் பார்த்துக்கிறேன். பரவாயில்லை. இப்போது ஒரு காபி கொடு டா” என்றார்.

காயத்ரி “ம்.. இல்லை, வாய் பார்க்கவெல்லாம் வேண்டாம்.. தக்காளி சேவை.. பஜ்ஜி ஒன்னு.. ஒரு ஸ்பூன் அல்வா.. இதெல்லாம் சாப்பிடலாம்” என்றாள் பெருந்தன்மையாக.

சக்திவேல் “உங்க அம்மாவே பரவாயில்ல போல.. ம்..” என்றார் சின்ன குரலில்.

காயத்ரி காபியை கையில் கொடுத்துவிட்டு “என்ன சொன்னீங்க” என்றாள் கொஞ்சம் மிரட்டலாக.

சக்திவேல் “இல்ல ஒண்ணுமில்ல டா.. நீ இந்த மேக்அப் போட்டுக்கலை” என்றார்.

காயத்ரி “ம்ஹூம்.. கொஞ்சமா டுச்சஅப் மட்டும். போதும், என்னை என்ன புதிதாகவா பார்க்கிறாங்க” என்றாள் நிதான குரலில்.

சக்திவேல் “கௌசி.. வெளிய வந்து என்னான்னு பாரு.. காயூவே எல்லாத்தையும் பார்க்கனுமா.. வா வெளியே” என்றார் சத்தமாக அதட்டலாக.

கௌசல்யா பத்து நிமிடம் சென்றுதான் வெளியே வந்தார். நேராக கிட்சென் சென்றுவிட்டார்.

காயத்ரி.. ரகசியமாக தன் அன்னையை.. கண்காட்டி தந்தையிடம் கிண்டல் செய்துக் கொண்டிருந்தாள்.

சக்திவேல் “காயூ ம்மா.. அவ உன் அம்மா.. நீ போய் தயாறாகுடா” என்றார்.

காயத்ரி  அதற்கும் “ஓ.. சொல்லவேயில்ல” என கண்சிமிட்டினாள் தந்தையிடம்.

சக்திவேல் “அடி வெளுக்க போறேன் பாரு.. இரு அவளையே கூப்பிடுறேன்” என்றார்.

காயத்ரி “அய்யோ, நான் மேலே போயிட்டேன்” என ஓடினால் மேலே.

காயத்ரி அன்னையின் எந்த பேச்சையும் செய்கையையும் பெரிதுபடுத்தவில்லை. அதனால், அவளால் இலகுவாக இருக்க முடிந்தது. ம்.. அவளுக்கு அன்னையை பற்றி தெரிந்துவிட்ட பிறகு.. தனக்கான வேலையை பார்த்துக் கொண்டாள் பெண். அன்னையிடம் சிலசமயம் பேச நினைத்தாலும்.. கௌசல்யாவின் வார்த்தைகள் எப்போதும் பரணியையும் சாரதாவையுமே தாக்கியது. சமாதானம் ஆகவேயில்லை அவர். அதனாலேயே பெண்ணவளுக்கு அன்னையிடம் பேச கொஞ்சம் பயம்.. அதனால் அமைதியாகிட்டாள்.

சாரதாவிற்கு எங்கு செல்லுவது என தெரியவில்லை. சக்திவேலும் காலையில் அழைத்து “இங்க வாம்மா” என்றிருந்தார்தான். 

வள்ளியும்  காலையிலேயே அழைத்துவிட்டார் மகளை “இன்னும் அங்க போய் நிக்காத.. நம்ம வீட்டு பெண்ணாக வா போகலாம்” என திடமாக அழைத்துவிட்டார். சாரதா தடுமாற்றமாக மதியம் வரை யோசித்துக் கொண்டிருந்தாள். மதியம் பரணி “அக்கா, கிளம்பு வா.. போகலாம் பசிக்குது..” என சொல்லி அவளையும் உமேஷையும்  அழைத்துக் கொண்டு தங்களின் வீடு வந்துவிட்டான்.

இனியனை கம்பெனியில் பணி செய்பவரை விட்டு தங்களின் வீட்டிற்கு அழைத்து வர செய்துவிட்டான், பரணி. 

முன்பே கார்த்திக் சக்திவேல் தணிகாசலம் பரணி என நால்வரும் பேசி முடிவு எடுத்துவிட்டனர். மண்டபம் வரை தேதி பார்த்து புக் செய்துவிட்டனர். ஆக, எல்லாம் முடிவாகிவிட்டது. நிச்சயம் வேண்டாம்.. என்று பெரியவர்கள் பேசிக கொண்டனர். திருமணத்தை விமர்சையாக செய்திடலாம் எனவும் பேசிக் கொண்டனர். ஆனால், இந்த சந்திப்பு தேவை என சக்திவேல் சொல்ல.. தணிகாசலம் சற்று பயந்தார் ‘எதுக்கு சம்பந்தி.. சரியாக வருமா.. அவங்களுக்கு இதெல்லாம் இன்னும் கோவத்தை தருவதாக அமைந்திட போகுது. நாம.. நேர கல்யாணத்தை வைத்துவிடலாம்” என்றார்.

Advertisement