Advertisement

நீ என்னுள் யாரடா!

21

சக்திவேல் மேல்.. ஆதியின் வீட்டில், சங்கத்தில் புகார்.. இல்லை நியாயம் கேட்டிருந்தனர். எனவே, அதன் சார்ப்பாக நான்கு பெரியவர்கள், இரு வீட்டு மனிதர்களையும் கூப்பிடிருந்தனர். கார்த்திக் சக்திவேல் கௌசல்யா வந்திருந்தனர் மற்றும் பரணி தணிகாசலம். அந்த பக்கம் ஆதியின் பெற்றோர் ஆதியின் சித்தப்பா ஒருவர்.. மற்றும் அவனின் மாமா என வந்திருந்தனர். 

கௌசல்யா அப்பட்டமாக ‘எனக்கு இதில் விருப்பம் இல்லை.. எங்க பெண்தான். அவளின் பேச்சை கேட்டு இவர்களும் நடக்கிறார்கள்..’ என கணவனையும் மகனையும் குற்றவாளி ஆக்கினார். கௌசல்யாவிடம் ஆதியின் வீட்டினர் அதிகம் பேசவில்லை. ஆனால், கௌசல்யா சமாதானமாகவே பேசினார்.

அங்கே, நான்கு பெரியவர்கள் இருந்தனர்..  சற்று தூரமாக தணிகாசலம்  பரணி அமர்ந்திருந்தனர். ஆதியின் வீட்டில்தான் சற்று கோவமாக அங்கே நின்றிருந்த பரணியை முறைத்துக் கொண்டே  அமர்ந்திருந்தனர். ‘செவ்வாய் தோஷம்.. பார்த்து பார்த்துதான் பெண் தேடினோம்.. வசதியான இடம் என காட்டிவிட்டனர்’ என புகார் படித்தனர். 

அமைதியாகவே இருந்தார் சக்திவேல். அவரிடம் சங்கம் இந்த செய்கையை எதிர்பார்க்கவில்லை. சொல்ல போனால்.. அவர்தான் முன்னால் நின்று நல்லது கெட்டது எல்லாம் பேசுவார்.. செய்வார். இப்போது அவர் மீது குற்றம் வரவும் மற்ற உறுப்பினர்களுக்கே சற்று சங்கடம். என்ன கேட்பது அவரிடம் என.

கார்த்திக்தான் “என்ன செய்வது, பெண்ணுக்கு பிடிக்கவில்லை.. அவளை நாங்கள்தான் வற்புறுத்திவிட்டோம்.. குடும்ப பிரச்சனையை கண்டு.. நாங்கள்தான் சற்று மிரட்டிவிட்டோம். எங்கள் மீதுதான் தவறு. நாங்க என்ன செய்வது அடுத்து..” என்றான் தன் தந்தையின் சார்ப்பாக எல்லோரிடமும்.

தூரமாக நின்றிருந்த பரணிக்கு, அந்த அமைதியில்.. கார்த்தியின் வார்த்தைகள் காதில் நன்றாக விழுந்தது. தலையை கோதிக் கொண்டான். தன்னால் அவர்கள் கீழிறங்கி போகிறார்களே என்றிருந்தது.. அமர முடியாமல் எழுந்து கதவை ஒட்டி நடந்தான். அங்கே இருக்க  முடியவில்லை.. தணிகாசலம் “பரணி, கம்பெனி போப்பா.. நாங்க பேசி முடிச்சிட்டு வரோம். வராதன்னு சொன்னால் கேட்கவில்லை நீ” என சற்று அதட்டினார்.

கௌசல்யா அங்கே கார்த்தியின் வார்த்தைகளுக்கு “உன் தங்கையை ரெண்டு அடி போட்டால், சரியாகிடும்.” என முணுமுணுத்தார். கார்த்திக் திரும்பி முறைத்தான். சற்று அமைதியாகினார்.

பரணியின் காதில், அந்த வார்த்தைகள் விழவில்லை. இப்போது அத்தை எதோ சொல்லுகிறார்கள் என தெரிந்தவனுக்கு இன்னும் தன்னையே நொந்துக் கொள்ள முடிந்தது.

இப்போது ஆதியின் வீட்டில் பதிலே இல்லை.. அவர்களுக்கு யோசனையே இல்லை.. கோவமே இருந்தது. அவர்களின் கோவம் நியாயமானதுதான். எனவே, சங்கமும் அமைதிப்படுத்தியது. ‘திருமணத்திற்கு முன்பே தெரிந்தது நல்லதுதானே. மன சங்கடம் உண்டுதான். ஆனால், வாழ்க்கை முழுதும் தவறாகி விடாமல் இருப்பதற்கு இது பரவாயில்லையே.. இவர்கள் பெரிய மகன் விவகாரம் தெரியுமே நமக்கு.. கொஞ்சம் கோவத்தை விடுத்து.. சமாதானமாக போங்கள்.. நம்ம அமைப்பிலிருந்து நல்ல வரனாக உடனே அமைத்து தருவோம்’ என்றனர்.

பரணிக்கு, மீண்டும் சங்கடம்.. கமல் மற்றும் தன் அக்காவின் வாழ்க்கை அங்கே பேசப்படவும் அங்கே நிற்க முடியவில்லை. கிளம்பிவிட்டான் கார் சாவி எடுத்துக் கொண்டு.

அடுத்த இரண்டு மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தது. கௌசல்யாவை சமாளிப்பதே கார்த்திக்கு பெரிதாக இருந்தது. சற்று நேரத்தில்  தணிகாசலம் வந்து நின்றார்.. ‘நாங்கதான் பெண் கேட்டிருக்கணும்.. என் பொண்ணு விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்ததால்.. மகனின் விஷயத்தில் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டோம். நாங்க சரியாக பேசியிருந்தால்.. இதை தவித்திருக்கலாம்’ என இன்னும் பொறுமையாக பேசினார். என்னமோ வளர்ந்துக் கொண்டே சென்றது பேச்சுகள்.. ஒருவழியாக பேச்சு வார்த்தை முடிந்து, அவர்கள் போட்ட நகையை கொடுத்து.. நிச்சய செலவு என ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர்.. பின்னர் அபராதம்.. என சில நடைமுறையை செய்துதான் நிச்சயத்தை அவர்கள் முறித்துக் கொண்டனர்.

பரணிக்கு, என்னமோ மனதேயில்லை.. காரிலேயே அமர்ந்துக் கொண்டான். ஏன் இத்தனை நடைமுறைகள்.. என என்னமோ சலிப்பாக வந்தது. அக்காவின் திருமணம் எப்படி ஒவ்வொன்றாக நடந்தது.. இப்போது ஒவ்வொன்றாக நடந்து பிரிகிறது என உறுத்தியது. நான் காதல் செய்தேன் அவ்வளவுதான்.. அதற்காக மாமா சங்கடப்பட்டு நிற்கிறார்.. அக்காவின் திருமண முறிவிலும் அப்பா சங்கடப்பட்டு நிற்கிறார். ச்ச.. ஏன் இந்த அமைப்பு.. என கொஞ்சம் சலித்தான் பரணி. ஆனால், திருமணத்தில் தன் அம்மா அப்பா.. அத்தை மாமா.. என எல்லோரும் பின்னி பிணைந்து நிற்பதையும் உணர்ந்தான். 

பரணிக்கு விரக்தியும் காதலும் கலந்த புன்னகைதான் வந்தது. இயற்கைக்கும்.. நாம் உருவாக்கியதற்கும்.. நடுவில் இந்த மனிதன் எப்படி எல்லாம் போராட வேண்டி இருக்கிறது என மனம் உண்மையை உணர்ந்து.. புன்னகையாக அவனின் உதட்டில் உறைந்தது ஒரு ப்பாவம்.

ம்.. காதல் என்பதற்கு எந்த நடைமுறையும் இல்லை.. காற்று மணல் தண்ணீர் போல. ஆனால், திருமணம் என்பது தங்கம் போல.. எல்லோரும் காணததை காணும் ஆர்வம் கொண்ட சொர்க்கம் போல. இந்த காற்று.. மணல்.. தண்ணீர் இதற்கெல்லாம் தடைகள் இல்லை.. கட்டுபாடுகள் இல்லை.. இயற்கையானது. அனுபவிக்கலாம்.. லயித்துக் கிடக்கலாம்.. எங்கும் கரை மீறி ஓடலாம். ம்.. இயற்கையானது காதல். 

ஆனால், திருமணம் என்பது உருவானது.. உருவாக்கப்பட்டது. தங்கம்.. சொர்க்கம்.. என உயர்ந்ததாக சொல்லுவது போல. இது நாமாக மதிப்பு கொடுத்து உருவாக்கிக் கொண்டது. மனிதர்களுக்குள் பொறுப்புகளை பிரித்து.. திறம்பட பகிர்ந்து.. அதனை ஒத்து வாழ்ந்து.. அடுத்தவரும் தலைமுறைக்கும்.. கடமை பொறுப்பு அன்பு அறம் மதிப்பு என எல்லாவற்றையும்  மாண்புற தாரைவார்த்து நெறிபடுத்துவது. அதுதான் சாதாரண மண் துகள்கள் தங்கமாவது வைரமாவது போல. எனவே அந்த திருமணத்தில் அத்தனை தடை தடங்கல்.. தாங்கும் சக்தி.. அன்பின் ஆழம்.. பொறுப்பின் சுமை.. என எல்லாம் உண்டு. அதை தாங்கினால் தான்.. தங்கமாக சொர்க்கமாக மின்னும் திருமணம். இல்லையெனில் இடையில் சிக்கி.. கமல் சாரதா போல.. பொறுத்து போக முடியாமல்.. சிதறவும் செய்கிறது. அதே இயற்கை மணல் பரல்கள்.. கனக்கிறது.. நரகமாகிறது. ஆனால், இந்த திருமணத்திற்கு காதல்தான் அடிப்படை. தங்கம் வைரம் சொர்க்கம் எல்லாவற்றுக்கும் இயற்கையே அடிப்படை. 

இப்போது தணிகாசலம் மகனை அழைக்க.. உள்ளே வந்தான்.. மீண்டும் இருமுறை சக்திவேலிடம் “மாமா, என்னால்தான்” என தொடங்க..

கௌசல்யா இடைமறித்தார் “ம்.. நீ நினைச்சதை நடத்திகிட்ட.. அப்புறம் என்ன முகத்தை அப்படி வச்சிருக்க.. சந்தோஷம் தானே..” என்றார் கோவமாக.

சக்திவேல் “கௌசி..” என மனையாளை அதட்டியவர் “இல்ல ப்பா, இது நடக்கணும்ன்னு இருக்கு.. பெரியவன் கணக்கையும் என்னால் யோசிக்க முடியலை. நீங்க அமைதியாக இருந்துட்டீங்க. ஆனால், என் பொண்ணு வாழ்கையைவாது யோசிக்க முடியுதேன்னு சந்தோஷம்தான் எனக்கு. நீ வா.. இப்படி இங்க வர வேண்டாம்ன்னு சொன்னேனே.. நாங்க பார்த்துக்குவோம்.. அந்த ஆதிக்கு முடிந்ததும் நாங்க கல்யாணம் செய்துக்கிறோம்ன்னு சொன்ன பாரு. நீ அப்படியேதான் இருக்க.. என்ன முன்னாடியே சொல்லி இருந்தால்.. ஆர்பாட்டமாக இந்த கல்யாணத்தை முடிச்சிருப்பேன்.. அதுதான் வருத்தம். நீ வா.. இங்கிருந்து போயிடலாம்” என்றார் திடமான குரலில்.

தணிகாசலம் “வாங்க சம்பந்தி “வீட்டுக்கு போலாம்” என்றார்.

சக்திவேல் மனையாளை பார்த்தார். கௌசல்யா “நான் வீட்டுக்கு போறேன்” என்றார் இரண்டடி முன்னால் சென்று நின்றுக் கொண்டு.

தணிகாசலத்தின் முகமே வாடி போய்விட்டது. சக்திவேல் “நாங்க வாங்க சம்பந்தி.. நான் வரேன். கார்த்திக்.. நீ அம்மாவோட வீட்டுக்கு போ.. நான் அப்புறம் வரேன்” என்றவர்.. பரணி தணிகாசலத்தோடு.. அவர்கள் வீடு சென்றார்.

வள்ளி, அன்பாக் வரவேற்று.. மதிய உணவு பரிமாறினார். ஏதும் பெரியவர்கள் அடுத்து என்ன என ஏதும் பேசிக் கொள்ளவில்லை. உண்டு முடித்து சற்று நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்துவிட்டு.. பரணியோடு சக்திவேல் தங்களின் வீடு வந்து சேர்ந்தார்.

!@!@!@!@!@!@!@!@!

காயத்ரி நீண்டநாள் சென்று இன்று, சாரதாவின் பொட்டிக் வந்து சேர்ந்தாள் காலையிலேயே. 

சாரதா நேற்று தைப்பதற்கு வாங்கிய துணிகளை தேதி வாரியாக எடுத்து வைத்து.. உடனே முடிக்க வேண்டியது என பார்த்துக் கொண்டிருந்தாள். இரு பெண்கள் வேலைக்கு வருகின்றனர். அதனால், சாரதா தைக்கவும் செய்வாள்.. உடைகளை பார்க்க வருபவர்களையும் கவனித்துக் கொள்ளுவாள். ஆக, அந்த சூழ்நிலைக்கு பழகி இருந்தாள்.

இப்போது துணிகளை எடுத்துக் கொண்டிருக்க.. காயத்ரி காரிலிருந்து இறங்கி உள்ளே வர.. சாரதா கவனத்தை திருப்பி.. யாரென வாசலை பார்க்க.. காயத்ரி. முகத்தை ஒழுங்காக்கிக் கொண்டாள் சாரதா. என்னமோ சொல்ல முடியாத வலி.. அவளிடம் காட்டக் கூடாது.. என எண்ணி அமைதியாக தன்னை இருத்திக் கொண்டாள் சாரதா,

காயத்ரி உள்ளே வந்து “அண்ணி.. எப்படி இருக்கீங்க” என்றாள்.

சாரதா “ம்..” என்றாள்.

காயத்ரி “அண்ணி, உமேஷ் அதுக்குள் ப்ளே கிளாஸ் போகிட்டனா.. அவன் கடைக்கு வரமாட்டானா” என்றாள்.

சாரதா துணிகளோடு உள்ளே சென்றாள்.

காயத்ரியும் உள்ளே சென்றாள்.. “ஏன் அண்ணி, கோவமா என்மேல” என்றாள் பீடிகை இல்லாமல்.

சாரதாவிற்கு பேச தோன்றுகிறது. ஒரு கோவம்.. ‘எப்படி சொல்லுவது மீண்டும் அதே வீட்டில் ஒரு சம்பந்தம். வேண்டாம்.. எனதானே ஒதுங்கி வந்தேன்.. எப்படி என் தம்பியை பிடித்தது உனக்கு.. உனக்குதான் நானே சரியில்லை.. ம்.. அப்படிதானே அன்று சொன்னாய்..’ என காயத்ரியிடம் கொட்டி தீர்க்கும் ஆவேசம்தான். ‘ஆனால், என்ன செய்வது.. தம்பிக்கு இவளை பிடித்துவிட்டது..’ என எண்ணிக் கொண்டு பொறுமை காத்தாள் சாரதா.

Advertisement