Advertisement

அடுத்தடுத்த நாட்கள் சகலவிதமான பிரச்சனைகளோடும் நாட்கள் கடந்தது நத்தை வேகத்தில்.

சாரதா தம்பியிடம் அதிகமாக பேசுவதில்லை. அவன் வருத்தம் கொள்ளுவான் என மனதில் அக்காவிற்கு இருந்தாலும், ஒருபக்கம்.. இதை அவள் முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.. எப்படி என்னை தள்ளி வைத்தவனின் தங்கை மேல்.. தம்பி ஆசைபடலாம் என ஒரு சின்ன ஆற்றாமை. அவளுக்கே அது தவறு என தெரிகிறது. ஆனால், என்னமோ மீண்டும் அந்த குடும்பத்திடம் ஏமாந்த உணர்வுதான் சாரதாவிற்கு. அடிக்கடி ‘இல்ல, தம்பிக்கு பிடிக்குது. உன்னோட வாழ்க்கையோட இதை ஒப்பிடாதே’ என தனக்குள் சொல்லிக் கொண்டே.. தன்னை தானே சமாதானம் செய்துக் கொள்ளுகிறாள் சாரதா.

ஆனால், பரணி தினமும் அக்காவின் வீட்டிற்கு மதிய உணவிற்கு வருகிறான்.. நிறைய முறை பேசியும் இருக்கிறான்.. காயத்ரி பற்றி. ஆனால், அதிகமாக சாரதா கவனமெடுத்து அந்த பேச்சுகளை ரசிக்கவில்லை என பரணிக்கும் புரிய.. இப்போதெல்லாம் ஏதும் சொல்லுவதில்லை.. அத்தோடு, கமலின் வருகை.. பரணியை வேறு விஷயங்கள் பேச விடாமல் செய்திருந்தது.

கமல் வந்து சேர்ந்தான். இருவரும் சேர்ந்து பரணி ஏற்பாடு செய்திருந்த வக்கிலை பார்த்து.. பேசி முடித்தனர். சாரதாவும் கமலும் மனமொத்து விவாகரத்து பெறுவதாக மனு கொடுத்துவிட்டனர். பிள்ளைகளை சாரதா தானே பார்த்துக் கொள்கிறேன் என்றாள். கமல் எந்த மறுப்பும் சொல்லவில்லை. வக்கீல்தான் நான்குமுறை தெளிவாக சாரதாவிடம் கேட்டார் ‘உண்மையாக ஜீவனாம்சம் வேண்டாமா.. சிறுதொகை என்றாலும் உங்களுக்கு உதவும்’ என எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார்.

சாரதா தம்பியை பார்த்தாள்.

பரணி தன் அக்காவின் பார்வையை எதிர்கொண்டான்.. சின்ன குரலில் ‘நீ என்ன சொன்னாலும் நான் உன் கூட எப்போதும் இருப்பேன். இது உனக்கான நேரம். முடிவு எடு.. என்னவந்தாலும் பார்த்துக்கலாம்’ என்றான். சாரதாவிற்கு தம்பியை நினைத்து நெகிழ்ந்து போனது மனது.

வக்கிலிடம் குடும்ப விஷயத்தை தனிப்பட்ட முறையில்.. கார்த்தியோடு வந்து பேசினர் மறுநாள். அதாவது சக்திவேல், தன் பெரியமகனுக்கு கொடுக்கவிருக்கும் சொத்துகளை பேரன்களுக்கு கொடுத்திடுவார்.. என விளக்கம் கொடுத்தனர் பரணியும்  கார்த்தியும்.

அந்த வார இறுதியில் கோர்ட் வந்தனர் கமல் சாரதா இருவரும். சாரதா, நீண்ட மாதங்கள் சென்று கமலை பார்த்தாள்.. அவளுக்கு மனதில் ஆசையோ.. ஆர்வமோ இல்லை. சகஜ நிலைக்கு வந்திருந்தாள். ‘ஒரு குற்றவுணர்ச்சி இல்லாமல், அவரே இருக்கும் போது எனக்கென..’ என ஒரு ஸ்த்திரநிலை வந்திருந்தது சாரதாவிடம். எனவே, தம்பியோடு கோர்ட்டு சென்றாள். கமலை நேராக பார்த்தாள்.. கண்கள் லேசாக அந்த நொடியில் கலங்கியதுதான். ஆனால், உடைந்து அழும் நிலைக்கு போகவில்லை பெண். வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ள.. மனமும் மூளையும் குழப்பதில் இல்லை போல.. தெளிவாக சுதாரித்துக் கொண்டாள், சாரதா. தெளிவாக சட்டத்தின்முன் எல்லாம் பேசிவிட்டனர். இப்போதும் தனியாகத்தான் இருக்கிறோம் ஆறுமாதமாக என்றும் சொல்லிவிட்டனர். எனவே, எளிதில் விவாகரத்து கிடைத்திடும் அவர்களுக்கு.

கமல் அந்த வாரம்  முழுவதும் தங்கள் வீட்டிலேயே தங்கி  வேலையை முடித்தான். சக்திவேல் என்ன ஏது என ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. கார்த்திக், இந்த அண்ணன் அண்ணி விஷயம் பற்றி ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. பரணியிடம் பேசிக் கொண்டான்.. துளசி சாரதாவிடம் பேசி எல்லாம் கேட்டுக் கொண்டாள். சக்திவேல்.. கோர்ட்டுக்கு சென்று வந்த அன்று.. தன் மருமகளிடம் பொதுவாக பேசினார் இரண்டு வார்த்தைகள். கௌசல்யா மட்டும் சாரதாவிடம் பேசவில்லை.

கெளசல்யா, கமல் வந்த அன்றே ஆரம்பித்தார். அழுது.. ஆர்பாட்டம் செய்து திட்டி என சாரதாவை மீண்டும்.. நீ இப்படி ஆனதற்கு காரணம் அவள்தான் என்றார், பெரிய மகனிடம்.

கமல் இந்தமுறை சாரதாவை பற்றி ஏதும் வாய்திறக்கவில்லை. அவள் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளுகிறேன் என்றுவிட்டால்.. ஜீவனாம்சம் என ஏதும் இப்போதிக்கு கேட்கவில்லை. அதனால், அமைதியாகினான் காரியக்காரன்.

ஆனால், கௌசல்யாவின் கோவம் இப்போது மகள் மீதும் இருக்கிறதே. எனவே, மகளை பற்றியும் திட்டி தீர்த்தார். திட்டுவது என்பதை விட   குற்றம் சொன்னார் தன் பெரிய மகனிடம்.

ஆனால், இந்தமுறை கமல் “ம்.. நீ இன்னும் எத்தனைநாள் இப்படியே இருப்ப.. காயத்ரிக்கு எது பிடிக்குதோ அதை செய்.. என்ன இப்போ நிச்சயம்தானே ஆகியிருக்கு. நல்லவேளை இப்போதே அவ சொல்லிட்டால். சும்மா அதையே பேசாதீங்க” என்றான் தங்கைக்கு ஆதரவாக.

கௌசல்யா பெரியமகனின் அதட்டலில் இன்னும் மனம் ஒடிந்து போனார். என்ன செய்வது என தெரியவில்லை இப்போ அவருக்கு. சக்திவேல்.. எப்போதும் ‘நீ பேசாத.. நான் சம்பந்தி வீட்டாரிடம் பேசிட்டேன். அவங்க கோவமாக இருக்காங்க.. சங்கத்தில் நாலு பெரியவங்ககிட்ட விஷயம் போயிருக்கு. அதனால.. நீ அவங்க வீட்டுக்கு பேசாதே’ என சொல்லிவிட்டார். அதிலேயே கௌசல்யா இந்த சம்பந்தம் என்னை மீறி நின்றுவிட்டது என ஒடுங்கி போனவர். பெரிய மகனின் வருகையில்.. கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தவர். அவனின் பேச்சில் மீண்டும் வெளியே வரவில்லை.

கமல் ஊருக்கு கிளம்பிவிட்டான். 

காயத்ரி கீழே அதிகம் வருவதில்லை. அன்று பரணியை பார்த்தோடு சரி.. அதன்பின் அவனை பார்க்கவில்லை. அன்றே, கெளசல்யாவிடம் அடி வாங்க வேண்டியவள்.. தன் தந்தையின் அருகே அமர்ந்து ‘சாரிப்பா.. இனி உங்ககிட்ட சொல்லாமல் போகமாட்டேன். நான்தான் கூப்பிட்டேன் மாமாவை. சாரி பா’ என கொஞ்சினாள் பெண்.

சக்திவேல் கார்த்திக் முகத்தை பார்த்தார்.

கார்த்திக் “என்கிட்டே சொல்லிட்டாப்பா.. நான்தான் போயிட்டு வர சொன்னேன்.” என்றான் இறுக்கமாக.

சக்திவேல் பெண்ணிடம் “இப்போ வளர்ந்துட்டீங்க. ம்.. செய்வதெல்லாம் பெரியவேலை.. ம்.. “ என்றார்.

காயத்ரி “அப்படி எல்லாம் இல்ல ப்பா” என மீண்டும் மீண்டும் தன் தந்தையை சமாதானம் செய்தாள். சக்திவேல் ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டார் தனதறைக்கு.

காயத்ரி அப்படியே மேலே தனதறைக்கு சென்றுவிட்டாள்.

அதனால், பரணியை அதன்பின் பார்க்க வேண்டும் என இவள் யோசிக்க கூட இல்லை. பரணி நான்கு நாட்களாக அக்கா வீட்டில் இருப்பதால்.. அதிகமாக போனும் பேசவில்லை காயத்ரி. தோட்டம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செல்லுகிறாள், மற்ற நேரம் ஷரவனோடு மேலே தனதறையில் இருந்துக் கொள்ளுகிறாள் காயத்ரி.

துளசி, கெளசல்யாவிடம் ஏதும் திருமணம் விஷயங்கள் பற்றி கேட்பதில்லை என்றாலும்.. ‘அத்தை இப்படி இருக்காதீங்க.. பரணி, நம்ம வீட்டு பையன் போலதானே’ என பரணியை ஒத்து பேசுவாள்.

அதனாலேயே கௌசல்யா துளசியிடம் அதிகம் பேசுவதில்லை. தன் அறையிலேயே இருந்துக் கொள்ளுகிறார். கௌசல்யா அதிகம் வெளியே வருவதில்லை.

ஆக, வீடு ஒரு இறுக்கத்திலும்.. சங்கடத்திலும் இருந்தது.

Advertisement