Advertisement

நீ என்னுள் யாரடா!

20

பரணியும் காயத்ரியும்.. ஒரு ஹைவே ஹோட்டலில் இருந்தனர் இப்போது. காயத்ரிக்கு, இவன்தான் வேண்டும்மென வீட்டில் சொல்லி பிடிவாதம் கொண்டு எல்லாம் செய்தாலும்.. இன்னும் பரணியை தெரியாதே. அதுவும் இந்த தனிமையில் அவனோடு வருவது அவளுக்கு ஆனந்தம் என்றாலும்.. அச்சம்தான். அவனின் முறைத்த பார்வைதான் அவனின் அடையாளமே. ஆனால், இன்று, தான் அவனின் விழி மூடிய போது கூட திருதிருவென அவன் விழிக்கதானே செய்தான்.. என எண்ணிக் கொண்டே.. அவனின் எதிரில் அமர போனாள் பெண்.

அவளின் எதிரில் இருந்த பரணி.. அவளை கைகாட்டி நிறுத்தி.. தன் கைகளை வளைத்து.. தன் அருகே அழைத்தான் காயத்ரியை. முகம் முழுவதும் மலர்ந்த புன்னகையோடு அருகில் பொத்தென அமர்ந்தாள் வேண்டுமென்றே, பெண்.

பரணிக்கும் புன்னகை வந்தது தானாக.

பரணிக்கு,  ஏதும் பேச வேண்டுமாக இல்லை போல.. அவளை அருகில் அமர்ந்திக் கொண்டான். ஆனால் காயத்ரி நிறைய பேச தொடங்கினாள்.. “எப்படி என்னை பிடிச்சுது” என்றாள் சற்று நேரத்தில் பேச்சு வாக்கில்.

பரணி பக்கவாட்டில் திரும்பி அவளின் முகம் பார்த்தான்.. காயத்ரி இரண்டு கண்களையும் சிமிட்டி “ம்.. என்னைத்தான்” என்றாள்.

பரணி “இந்த கொனைஷ்ட்டைகளுக்காகதான்” என்றான் ரசனையாக.

காயத்ரி “ஹப்பா.. என்ன பார்வைடா சாமி” என்றாள்.. அவனை தன் தோள்களால் இடித்துவிட்டு.

பரணி குஷன் போன்ற இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் “இன்னும் ஆர்டர் பன்னால நீ” என்றான்.

காயத்ரி முறைத்தாள்.

பரணி பேரரை அழைத்து ஆர்டர் செய்ய தொடங்கினான். காயத்ரியும் தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்தாள்.

பரணி “ம்.. சொல்லு, உனக்கு எப்படி பிடிச்சது” என்றான்.

காயத்ரி “ம்.. சத்தியமா தெரியலை. ஆனால், சத்தியமா உங்களை பிடிக்காதுன்னு நினைச்சிட்டுதான் இருந்தேன். ஆமாம் எப்படி பிடிச்சது என்ன பண்ணீங்க என்னை. இப்படி அப்பாவிடம் கூட சொல்லாமல் உங்களுக்காக வீட்டை விட்டு போக நினைச்சிருக்கேன்..” என சொல்லியவள் அமைதியானாள், சட்டென.

பரணி அவளின் கையை இழுத்து பிடித்து தனக்குள் வைத்துக்  கொண்டான்.

காயத்ரி “என்ன பண்றீங்க என்னை. விடுங்க” என்றாள் முறைப்பாக.

பரணி சட்டென விட்டுவிட்டான் அவளின் கையை. கொஞ்சம் அதிர்ந்து அவளையே பார்த்தான்.

காயத்ரி, பரணியை கண்டுக் கொள்ளாமல் இன்னமும் பேச தொடங்கினாள் “என்ன சொன்னீங்க என்கிட்டே ஒண்ணுமே சொல்லல.. எப்படி நான் முடிவெடுத்தேன்.. தெரியலையே” என்றாள் கண்கள் கலங்க.

பரணியும் கலங்கினான். ஏதும் பேச முடியவில்லை.. என்ன நடந்தது? ‘எல்லாம் நடந்தது.. என்னுள் நடந்தது. அவளிடம் என்னை எதுவோ ஒன்று கடத்தியிருக்கிறது.’ என விளக்க முடியாத நிலையை, மெல்ல தனக்குள் விழுங்கி கொண்டு “அ..க்கும்.. அது, என்னை உனக்கு எத்தனை வருஷமாக தெரியும். எங்கையோ.. நீயும் நானும் தெரியாமலே கமிட்டாகியிருப்போம். அதான் என்னோட வேவ்ஸ்.. பீலிங்க்ஸ்.. இப்படி இதெல்லாம்  உன்னை கனெக்ட் பண்ணியிருக்கும்.” என்றான் சமாதனமான குரலில்.

காயத்ரி அதிர்ச்சியாக நிமிர்ந்து பரணியை பார்த்தாள்.

காயத்ரி “ஓ.. உங்ககிட்ட வேவ்ஸ் பீலிங் எல்லாம் இருக்கு. ம்.. இருக்குதான். அதான் அன்னிக்கு கூட என்னை ஏதோ பண்ணிச்சி. ம்.. அவ்வளோ ஸ்ட்ரோங்கானவங்க ஏன்.. எனக்காக வீட்டில் ஏதும் பேசலை” என்றாள் வாடிய பார்வையோடு.

பரணிக்கு உண்மையை தவிர வேறு காரணம் இல்லை.. ஆனால், உண்மையை எப்படி அவளிடம் சொல்ல முடியும். இப்போதுவரை அது உண்மையாகவே இருக்கிறதே.. ‘ம்.. நம் மூத்தவர்களின் வாழ்வில் நடந்த குளறுபடியால் நான் உன்னை நெருங்க தயங்கினேன்’ என எப்படி சொல்லுவது அவளிடம் என எண்ணியவன் தனது ஆயுதமான மௌனத்தை எடுத்துக் கொண்டான்.

காயத்ரி “ஏன் பயமா” என்றாள்.

பரணி எந்த பாவனையும் இல்லாமல் அவளை பார்த்தான்.

காயத்ரி “நான் சொல்லலைன்னா என்னை விட்டிருப்பீங்க” என்றாள். பரணியிடம் அதே பாவனைதான்.

காயத்ரி “ஏதாவது பேசுங்களேன்” என்றாள் கோவமான குரலில்.

பரணி “காயத்ரி.. இன்னிக்கே எல்லாம் பேசிடனுமா. ப்ளீஸ்.” என்றான் சத்தம் வராத திடமான குரலில்.

காயத்ரி “வேற எப்போ பேசறது” என்றாள்.

பரணி “உன்கூட இருக்கனும்ன்னுதான் வந்திருக்கேன். இதெல்லாம் நடக்காதுன்னு மைன்ட்டில் வைச்சது எல்லாம்.. இப்போது நடக்குது. அது உனக்கு புரியாது. இனி, பிரச்சனைகள் முடியும் வரை உன்னை எப்போ பார்ப்பேன்னு தெரியாது. மணி வேற ஆகிட்டே இருக்கு.. போனில் நிறைய பேசலாம்” என்றவன் இப்போது அவளின் கையை பிடித்து டேபிள் மேல் வைத்தான்.. தன் பெருவிரலால் அவளின் உள்ளங்கையை.. வருடியவன் “நீ பேசுவது எல்லாம் நிஜம். ஆனால், இதுவும் நிஜம். என்கிட்டே பதில் இல்லை.” என்றான் நிமிர்ந்து அவளை பார்த்து. இருவருக்கும் உண்மை புரிந்தாலும். பரணி தன்னை வீட்டில் பெண் கேட்கவில்லையே என காயத்ரிக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. என்ன செய்வது. இருவருக்கும் அது புரிகிறது. ஆனால், விளக்கிக் கொள்ள முடியவில்லை.

உணவு வந்தது இப்போது.. பரணி பேச்சை நிறுத்திக் கொண்டான். கைகளை விளக்கவில்லை. உணவை வைத்து சென்றார் சர்வர்.

பரணி நிதானமாக அவளின் விரல்களோடு.. தன் விரல்களை கோர்த்துக் கொண்டு.. இப்படியும் அப்படியும் திருப்பி தங்கள் கைகளை பார்த்தான். பின் தன்னவளை ரசனையாக பாரத்தான் ‘நெற்றி தொட்ட பூனை முடிகள்.. வரைந்து வைத்தார் போல.. வளைந்த புருவம்.. மத்தியில் கருமணியாய் சின்ன பொட்டு.. காதலும் குழப்பமும் நிறைந்த கண்கள்.. திடுக் திடுக்கென தன்னுடைய கருவிழியையே பார்த்து உருள.. லேசாக சிவந்த மூக்கின் நுனி.. அஹ.. வேண்டாம் வேண்டாம் என்றாலும்.. வார்த்தையாலும் தன் அழகாலும் என்னை இம்சிக்கும் அதரங்கள்.. ம்..’ என பொறுமையாக ரசித்தான்.. நீண்டநாள் கனவுகளில் கண்டவன். பின் இன்னும் நிதானமாக “ரொம்ப பேசாத. சாப்பிடு.. டைம் ஆச்சு.” என்றான், ஒன்றுமே இல்லா குரலில்.

காயத்ரி “ம்.. அய்யோ நான் சிங்க்சான் மாதிரி எனக்கு ரூல்ஸ் பிடிக்காதே” என்றாள் அவனையே காதலாக பார்த்துக் கொண்டு, கண்ணில் சிரிப்போடு. அவன் ரூல்ஸ் பேசுகிறானாம்.. கிண்டலாக சொன்னாள். 

பரணிக்கு புரிந்துவிட்டது. அந்த பக்கம் திரும்பி, அவளை பார்க்காமல் சிரித்தவன்.. இப்போது திரும்பி புன்னகையோடு அவளின் கைகளை விடுத்தவன் “சாப்பிடு.. போலாம்” என்றான் இயல்பான குரலில்.

காயத்ரி பரணி இருவரும் மௌனமாக உண்ணத் தொடங்கினர். 

அவர்கள் இருவரும் பில் செய்து கிளம்பும் நேரம் கார்த்திக், காயத்ரிக்கு அழைத்துவிட்டான். பரணிக்கு, ‘லேட் ஆகிடுச்சே’ என தோன்ற வண்டியை எடுத்தான்.

காயத்ரி அழைப்பை ஏற்று “அண்ணா, இதோ இன்னும் பத்து நிமிஷத்தில் வந்திடுவோம்” என்றாள்.

டிராப்பிக் சற்று குறைந்திருந்தது. எனவே, இருபது நிமிடத்தில் விரட்டிக் கொண்டு வந்துவிட்டான் பரணி. காரை அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்தினான். காயத்ரி இறங்கினாள்.. தானும் இறங்கினான்.

காயத்ரி “எல்லாம் சரியா நடக்குமா” என்றாள்.

பரணி “ம்.. நடந்தே ஆகணும். இனி ஒன்னும் பண்ண முடியாது. உங்க அண்ணன் கமல் காலையில் வந்திடுவான். பாரு.. வீட்டில் என்ன என்ன நடக்கும்ன்னு” என்றான் ஒன்றும் செய்ய முடியாத குரலில்.

காயத்ரி “நாம பாவமில்ல” என்றாள்.

பரணி “போடி.. சும்மா பாவம் புண்ணியம்’ன்னு.. உங்க அம்மா வாசலில் குச்சியோட நிப்பாங்க.. போ. இன்னும் அந்த ஆதிக்கு விஷயத்தை பேசலை.. நாம.. ஒருதரம் பேசணும்.. பெரியவங்க சொல்லிடட்டும். நாம பேசணும்” என்றான்.

காயத்ரி “அய்யோ.. மாமா” என அவனின் அருகில் வந்தாள், சலிப்பாக.

பரணி உடல் இறுக நிமிர்ந்தான்.. காயத்ரி பரணியின் நெஞ்சில் சாய்ந்தாள் பட்டென.. “அவன் பேரை சொல்லாதீங்க.. நீங்களே பேசிடுங்க.. நான் என்ன பேசறது.” என சொல்லிக் கொண்டிருந்தவள் நிறுத்தினாள் பேச்சை. பரணியின் எகிறி துடித்த இதய துடிப்பின் சத்தம் கேட்டு.

காயத்ரி கொஞ்சம் சத்தமாக சிரித்து.. தன்னவனை நிமிர்ந்து பார்த்தாள். பரணி இறுக்கமாகவே நின்றிருந்தான்.. காயத்ரி இன்னும் இறுக்கமாக அவனை கட்டிக் கொண்டாள் நடு ரோட்டில். போக்குவரத்து இல்லா சாலைதான் அவர்களின் வீடு இருக்குமிடம்.. அத்தோடு.. இப்போது அவர்களின் முன்பக்க தோட்டத்தில்தான் நிற்கின்றனர் இருவரும். ஆனாலும் பரணியின் கைகள் அவளை அணைக்கவில்லை.

காயத்ரி “நீங்க என்னை லவ்வே பண்ணல.. எங்க அம்மா சொன்னது போல.. ரேவேஞ் எடுக்குறீங்க” என்றாள் வேண்டுமென்றே..  அவனை சீண்டுவதற்காக.

பரணி லேசாக தளர்ந்தான் “ம்.. கண்டுபிடுச்சிட்டியா.. போ..” என்றான் கடுப்பான குரலில்.

காயத்ரி இன்னும் தன்னவனை ஆசையாக இறுக்கிக் கொண்டாள்.

பரணி “போதும் டா.. நான் காலி.. ம்.. ப்ளீஸ்..” என்றான் காதலான குரலில்.

காயத்ரி “அஹ.. நான் பாவம்” என்றாள், தன்னை அவன் அணைக்கவில்லையே என்ற எண்ணத்தில்.

பரணி “ ம்கூம்.. என்னால இப்படி தொட்டுக்கோ பிச்சிக்கோவேல்லாம் ஆகாது. நீ பாவமாகவே இரு” என்றான்.

காயத்ரி நிமிர்ந்து தன்னவனை மீண்டும் பார்க்க.. அவனின் கண்கள் காதலாக அவளின் கண்களையே மொய்த்தது.. காயத்ரி அப்போது போலேயே “ஹப்பா.. என்ன பார்வை டா சாமி” என்றாள்.. அவன் நெஞ்சில் தன் தாடையை வைத்து அழுத்திக் கொண்டு.

பரணி “கிளம்பு.. தள்ளி போ.. “ என்றான் புன்னகையோடும் வெட்கத்தோடும்.

காயத்ரி “மாட்டேன்.. ஆதிக்கு கல்யாணம் ஆகார வரைக்கும் என்னால் வெயிட் பண்ண முடியாது. எங்க அண்ணன் பார்க்கட்டும்.. இப்போவே கல்யாணம் வைக்கட்டும்.. நகர மாட்டேன்” என்றாள் திருடனை பிடித்துக் கொண்ட.. திருட கொடுத்தவள்.

பரணி “இங்க பாரு.. அக்காவிற்கு டைவர்ஸ் ஆகும் வரை” என எதோ தொடங்க.. காயத்ரி பட்டென தன்னவனை விட்டு நகர்ந்தாள்.

பரணி “ம்.. இன்னும் இத்தனை மலை கடல் எல்லாம் இருக்கு டா..” என்றான்.

காயத்ரி “ம்ம்.. சரி விடுங்க. நைட் கூப்பிடவா” என்றாள்.

பரணி அவளின் நெற்றி வருடி.. காது மடலில் அகப்பட்டு கிடந்த கற்றை கூந்தலை விடுவித்தவன்.. “ம்..” என்றான் பொருமூச்சோடு.

பரணி “போ.. அம்மாகிட்ட பொறுமையா பேசு.. இல்ல.. பேசாமல் மேலே போய்டு. சண்டை போடாத. நாம நல்லா காம்பிளிகேட் செய்து வைச்சிருக்கோம்.. ம்.. இனி சாத்வீகம்மாதான் நாம போகனும்” என்றான்.

காயத்ரிக்கு, அவனின் பேச்சில் புன்னகை வந்தது “ஆமாம்.. இவரு பெரிய அக்ஷன் ஹீரோ. போங்க சார்.. நீங்க லிட்டில் கிர்ஷ் மாதிரி.. தத்துவமா பேசி கொல்றீங்க. ரொம்ப பேசாதீங்க.. “ என்றாள்.

பரணி “நீ ரொம்ப பேசாமல்.. போடி” என்றான்.

காயத்ரி “ஓ.. அப்படி ஆகிபோச்சி” என்றாள்.

பரணி “போடி.. மணியாகி போச்சு” என்றான் டென்ஷன் ஆன குரலில்.

காயத்ரி புன்னகைத்துவிட்டு “இது என்னோட பரணி மாமா.. இப்படி சிடுசிடுன்னு இருந்தால் தான்.. முகமே அழகாக இருக்கு” என்றாள்.

பரணிக்கு இன்னும் இன்னும் அவளின் கலாட்டாக்களை ரசிக்கத்தான் தோன்றியது. ஏதும் சொல்லாமல் அமைதியாக கைகட்டி நின்றான்.

காயத்ரி திரும்பி பார்த்துக் கொண்டே வீடு நோக்கி நடந்தாள்.

Advertisement