இனியன் இப்போது கண் திறந்திருந்தான், மணிவிழியால் காயத்ரியை பார்க்க தொடங்கினான், அவளும் “அண்ணி, பார்க்கிறான் என்னை பார்க்கிறான்.” என்றாள் குதுகலமாக.
அடுத்து காயத்ரி“அண்ணி எப்போ என்னை அத்தைன்னு கூப்பிடுவான்.” என்றாள் அடுத்த கேள்வியாக.
சாரதா “இரண்டு வயசு ஆகும் டா..” என சொல்லிக் கொண்டிருந்தாள்.
இப்போது பரணியிடம் வந்த வள்ளி “எப்போடா வந்த” என்றார். குடிப்பதற்கு ஏதாவது வேண்டுமா என கேட்டார்.
பரணி, யாருக்கோ அழைத்துக் கொண்டே ‘வேண்டாம்’ என சொல்லி வாசல் சென்றான்.
சற்று நேரத்தில் காயத்ரியும் கௌசல்யாவும் விடைபெற்று கிளம்பினர்.
இப்படியே சாரதாவின் நாட்கள் சென்றது,
சாரதா, ஐந்தாம் மாதம் புனே கிளம்பி வந்தாள் மகனோடு. இந்தமுறை, பத்து நாட்கள் வள்ளியும், அடுத்த பத்து நாட்கள் கௌசல்யா என தங்கி பேரனை மாற்றி மாற்றி கவனித்துக் கொண்டனர். இரண்டு மாதங்கள் அப்படியே சென்றது. அதற்குமேல் அன்னையரால் வர முடியாமல் போக.. சாரதா பொறுப்பாக குழந்தையையும் வீட்டையும் பார்க்க தொடங்கினாள்.
கமலநாதன், குடும்பத்திற்கும் தன் சுதந்திரத்துக்கும் இடையே திண்டைனான். முன்போல நண்பர்களோடு வெளியே செல்ல முடிவதில்லை.. உணவுகள் முன்போல இருபதில்லை, அவனுக்கு இட்லி.. சாம்பார்.. என பிடிக்காதவை சேர்ந்தன.. செலவுகள் அதிகமாகின.. அவனின் தனிப்பட்ட செலவுகளை முன்போல தாரளமாக செய்ய முடிவதில்லை.. நேரமாக வீடு வர வேண்டி இருக்கிறது.. ஒருமாதிரி அவனின் சுதந்திரம் பறிபோக தொடங்கியது. கமலநாதன் எரிச்சலாக தொடங்கினான்.
அதன் நடுவே, இனியனுக்கு மொட்டையடிக்க குலதெய்வம் கோவில் வந்தனர். சக்திவேல்.. சிறப்பாக அந்த விழாவை நடத்தினார். பரணியின் மடியில் அமர வைத்து மொட்டியடித்து காது குத்தி என சிறப்பாக நடந்தது வைபவம்.
இதற்கு முதலில் ஒத்துக்கொள்ளவில்லை கமலநாதன். அதென்ன அங்கேதான் செய்யனுமா என எப்போதும் போல எதிர்த்து பேசினான்.
சக்திவேல் “மற்றது எல்லாம் உன்பாடு பா, இது நம்ம வழக்கம்.. சொல்லபோனால் எல்லோரின் வழக்கம் இது. இதையெல்லாம் யாராலும் மாற்றமுடியாது மொட்டை போட்டு கெடாவிருந்து கொடுக்கனும்.. சொல்லிட்டேன். வந்து சேர்” என்றுவிட்டார்.
கமல், அங்கே வீட்டில் இரண்டுநாள் இதே யோசனையில் இருந்தான். மனையாள், மகனை கூட அதிகமாக கண்டுக் கொள்ளாமல் இருந்தான். சாரதா பேசி பேசி கணவனை கொஞ்சம் சம்மதிக்க வைத்திருந்தாள். அதன்பின்னேதான் வந்து சேர்ந்தான் கமலநாதன்.
இப்படியாக சடங்கு சம்பர்தாயம் என வரும்போதெல்லாம் ஏனோ முறுக்கிக் கொண்டான் கமலநாதன்.
மகனுக்கு ஒருவயது எனும் போது.. இனியனின் பிறந்தநாளை கோவையில் கொண்டாடலாம் என்றாள் சாரதா. கமல், தன் நண்பர்களை அழைத்து பெரிதாக விருந்து கொடுத்து ஆர்பாட்டமாக நடத்த எண்ணினான். இங்கேதானே, அவனின் வேலை நண்பர்கள் என கடந்த ஆறு வருடமாக இருந்தான். அதனால் கமல் ஆசை கொண்டான். அப்படியே அவனின் விருப்பபடியே குழந்தையின் பிறந்தநாள் விழா நடந்தது.
தணிகாசத்தால், பேரனின் பிறந்தநாள் விழாவிற்கு வரமுடியவில்லை. அவரின் காலில் ஃப்ராக்சர். அலுவலகமே செல்லவில்லை கடந்த ஒருமாதமாக. அடுத்த ரெண்டு மாதமும் மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லியிருந்தனர். எனவே, அலுவலகத்தை பரணீஷ்வரன்தான் இப்போது முழுவதுமாக கவனித்துக் கொள்கிறான். ம்.. இப்போதுதான் MBA அப்ளே செய்திருந்தான், பெங்களூர் கல்லூரியில். தந்தைக்கு இப்படி ஆகவும். இப்போது அலுவலகம் பார்ப்பது பரணியின் வேலையானது. ஆக, இன்னும் அவனிடம் இறுக்கம்தான் சேர்ந்தது.
சக்திவேலிற்கு கோவம் பேரனின் பிறந்தநாள் விழாவை அங்கே வைத்தால் எப்படி வருவது.. முதல் பேரனின் பிறந்தநாள்.. நம்ம வீட்டில் நடக்க வேண்டாமா? என கோவம். எனவே, செல்லவில்லை.. புனேவிற்கு. ஆக இரு தாத்தாமார்களும் விழாவில் கலந்துக் கொள்ளவில்லை. அதனால், இருகுடும்பத்தின் முக்கிய சொந்தங்கள் மட்டும் முதல்நாள் விமானத்தில் கிளம்பி புனே வந்து சேர்ந்தனர்.
இன்று மதியம்தான் விமானத்தில் வந்தான் பரணீஷ்வரன். ம்.. பரணிக்கு வேலைகள் அதிகம்.. எனவே, கடைசி நேரத்தில் அக்காவின் மகன் விழாவிற்கு வராமல் இருந்தால் நன்றாக இருக்காது என எண்ணி அவசர அவசரமாக வந்து சேர்ந்தான்.
சாரதா.. கணவனோடு வெளியே சென்றிருந்தாள், இவன் வரும்போது. பரணியை அங்கிருந்த பெரியவர்கள் எல்லோரும் வரவேற்றனர். வந்ததும்.. உண்டு அப்படியே கார்த்தியோடு மேலே உள்ளே அறையில் படுத்துக் கொண்டான். நீண்ட நாட்கள் சென்று, மதியம் அவனுக்கு கிட்டிய ஒய்வு. மனதில் இருந்த கனவுகளும்.. அதை செயல்படுத்த முடியாத நிலையில் உண்டான வெறுப்பும்.. அவனை நிறைய வாட்டியிருந்தது. அது அவனின் நடவடிக்கைகளிலும்.. முகத்தில் அப்பட்டமாக தெரியவும் செய்து. அதனாலோ என்னமோ இயல்பான பேச்சுகள் இருப்பதில்லை. இன்றும் வந்தான் உண்டான் மேலே வந்துவிட்டான்.
தளர்ந்து அப்படியே படுத்து உறங்கியும் விட்டான், பரணி.
சாரதா வீடு வந்ததும்.. தம்பி வந்திருப்பது தெரிந்து பார்க்க மேலே வந்தாள். தம்பி அப்படியே, கட்டிலுக்கு அடங்காமல்.. நீண்டு.. அசந்து இலகுவாக உறங்கிக் கொண்டிருந்தான். சராதாவிற்கு தம்பியை பார்க்கவே பாவமாக இருந்தது.. இரண்டு நிமிடம் நின்று பார்த்தாள்.. உறங்கட்டும் என எண்ணி.. கீழே சென்றுவிட்டாள்.
நேரம் ஆக, பெண்கள் முதலில் கிளம்பி விழா நடக்குமிடம் சென்றனர்.
கார்த்திக், பரணி வந்ததும், அவனோடு, பார்ட்டி ஹாலுக்கு வருகிறேன் என்றுவிட்டான். ஆக, ஆண்கள் இருவர் மட்டும் வீட்டில் இருந்து இப்போதுதான் கிளம்பி ஹாலுக்கு வந்தனர்.
கமலநாதன் விழாவை பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தான், மினி பார்ட்டி ஹாலில் புக் செய்திருந்தான். முகப்பில், குழந்தைகளுக்கு என பஞ்சுமிட்டாய்.. பானிபூரி ஐஸ்கிரீம் என பல.. உள்ளே வரும் குழந்தைகளுக்கு கையில் ஏதேனும் ஒரு பொம்மை. அத்தோடு.. பப்பூல்ஸ் என நிறைய ஏதேதோ குழந்தைகளை கவர நிறைய ஏற்பாடுகள் செய்திருந்தான்.
அப்படிதான், குழந்தைகளுக்கான மேஜிக் ஷோ நடந்துக் கொண்டிருந்தது. குழந்தைகளோடு குழந்தையாக காயத்ரி முன் வரிசையில் நின்று கொண்டு வாய்திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது கல்லூரிக்கு செல்லவிருக்கிறாள்.. அக்ரி படிக்கிறாள். இப்போதுதான் சேர்ந்து ஒருமாதம் ஆகிறது. ஆனால் கொஞ்சமும் அந்த குறுப்பும் அலட்சியமும் மாறவில்லை.
அப்போதுதான் உள்ளே வந்த பரணியின் கண்ணில் காயத்ரிதான் முதலில் தென்பட்டாள். கார்த்திக், நேரே உள்ளே சென்றுவிட்டான். ஆனால், பரணி சற்று தாமதமானான்.. இவளை பார்த்ததும். ‘எப்படிதான் கவலையே இல்லாமல் சந்தோஷமாவே இருக்காளோ’ என ஒரு எண்ணம் சட்டென வந்துவிட்டது அவனுள்.
இமைக்கா பார்வையும்.. ஆர்வமாக அந்த மேஜிஷியன் சொல்லுவதை அவள் செய்வதும் கண்ணில் பட.. ஓரகண்ணால் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான், பரணி.
பரணி “இதென்ன” என அதட்டியவன் இனியனை தூக்கினான். இனியன் மாமனை பார்த்து உதடு பிதுக்கினாலும்.. அவனின் ஷிர்ட்டில் இருந்த பேனாவை பார்த்து அதை எடுக்க தொடங்கிவிட்டான்.
சாரதா “வா.. ஜூஸ் குடி” என்றாள். இப்போது கமல் வந்தான் தன் மச்சான் அருகில். அவனும் வரவேற்றான் பரணியை.
கமலும் வா சாப்பிடு என்க. பரணி தலையசைத்து “நீங்க பாருங்க மாமா” என்றான். கமல் சிரித்துக் கொண்டே நகர்ந்தான்.
சாரதா அப்படியே நின்ற, பரணி “நான் பார்த்துக்கிறேன். நீ வேலையை பாரு.. போ” என்றான் அமைதியான குரலில்.
சாரதா அமைதியாக புன்னகைத்து கணவனை நோக்கி சென்றாள்.
கமலின் நண்பர்கள்.. அலுவலக வட்டாரம்.. தெரிந்தவர்கள் என எல்லோரும் வந்திருந்தனர். அவர்களை பார்த்து கமல் நின்றிருந்தான். அங்கேயே சாரதாவும் சென்றாள்.
கார்த்திக், இனியனை தேடி வந்தான். இனியனை கார்த்தியிடம் கொடுத்தான், பரணி. சற்று தள்ளி ஓரமாக அமர்ந்துக் கொண்டான் கார்த்தியும் இவனும்.
பரணி, கண்ணில் எல்லோரையும் தாண்டி.. பலூனோடு விளையாடிக் கொண்டிருந்த பாவைதான் தெரிந்தாள்.. பலூனை மொத்தமாக அணைத்து கொண்டு அதை வெடிக்க வைக்கும் முயற்ச்சியில் இருப்பாள் போல.. எல்லா பலூனையும் அணைத்துக் கொண்டு.. மூக்கை சுருக்கி.. இறுக்கமாக அணைப்பது போல பாவனை செய்தாள். என்னமோ அந்த காட்சி பரணியை புன்னகைக்க வைத்தது. தன்னை மறந்து சுவாரசியமாக அங்கேயே பார்வை நிலைத்து அவனுக்கு.
மனது இந்த சின்ன சின்ன விஷயங்களில் தொலையதான் ஆசைப்பட்டது, பரணிக்கு. என்னமோ அவளின் அடாவடி மனதை உறுத்தினாலும்.. இப்படி அப்பாவியாய் எல்லாவற்றையும் ரசிக்கும் அவளை இப்போதெல்லாம் அதிகாமாக பார்ப்பதில்லை அவன். எனவே, எதையும் யோசிக்க முடியாமல் பார்வை நிலைத்தது.. பரணிக்கு.
எப்படியோ தன் நகத்தினால்.. ஒரு பலூனை அவள் வெடிக்க.. ஹேய் என அவளை சூழ்ந்திருந்த வாண்டுகள் கை தட்ட.. கையில் வைத்திருந்த அணைத்து பலூனையும் பறக்க விட்டு.. தானும் குதிக்க தொடங்கினாள் குமரி.. ம்கூம்.. குழந்தை.
பரணிக்கு, அவளின் செய்கையில் உதடு விரிந்த புன்னகை வந்திருந்தது அவனையும் அறியாமல். மனதுள் கூட சின்ன புன்னகை.
சற்று நேரத்தில் சுற்றுபுறம் உணர்ந்தான் பரணி. சுற்றிலும் இப்போது பார்வையை சுழற்றினான்.. எதோ தவறு செய்தனாக. யாரும் தன்னை பார்க்கவில்லை என உணர்ந்து.. எழுந்து வேறு பக்கம் சென்றுவிட்டான்.