Advertisement

துளசி ஹாலுக்கு சென்று “வாங்க பெரியப்பா” என்றாள்.

கார்த்திக் எழுந்து கைகழுவி, தன் அன்னையின் அருகில் வந்தான் “கொஞ்சம் அமைதியா இரும்மா” என்றான்.

சக்திவேலும் ஹாலுக்கு வந்து சேர்ந்தார். தணிகாசலம் சக்திவேலை பார்த்ததும் “சம்பந்தி” என்றார் சங்கடமான குரலில்.

சக்திவேல் “வாங்க சம்பந்தி.. உட்காருங்க வாங்க” என இயல்பாக்கிக் கொண்ட குரலில். பிள்ளைகளின் செயலில் பாவம் அவர் என்ன செய்வார்.. ஏற்கனவே, பெண் வாழாத  துக்கத்தில் இருக்கிறார் என சக்திவேல் எண்ணிக் கொண்டே இயல்பாக பேசினார்.

தணிகாசலம் “இதெல்லாம் நடக்கும்ன்னு நான் நினைக்கலை. முன்பே சொல்லி இருந்தால்.. நானே முன்னின்று பேசி.. எல்லாவற்றையும் சரி செய்திருப்பேன். இப்படி பரணி செய்வான்னு நான் எதிர்பார்க்கலை.. இனி நீங்க என்ன சொன்னாலும் சரிதாங்க” என முழுவதுமாக ஒப்புக் கொடுத்துவிட்டார். 

கார்த்திக் வெளியே வந்தான் “வாங்க மாமா.. வா பரணி சாப்பிடலாம்” என்றான் இயல்பாக. 

பரணி “இல்ல கார்த்திக், சாப்பிட்டுதான் வந்தோம்.” என்றவன் தன் தந்தையை பார்த்தான்.

தணிகாசலம் சக்திவேல் ஏதும் பதிலே சொல்லாததால்.. அவர் முகத்தையே பார்த்திருந்தார்.

கார்த்திக் பரணியின் அருகே வந்து அமர்ந்தான். “ஆமாம் நேற்று எதோ அண்ணா பத்தி சொன்னீங்களே பரணி, எதுக்கு கமல் பேசினான்” என்றான்.

பரணி “ம்.. கமல் இரண்டு நாளில் வருகிறாராம்.. டிவொர்ஸ் இங்கேருந்தே அப்ளே செய்தால்.. வசதி என சொல்லியிருந்தோமே, அதன் ஏற்பாடுகளை கவனிக்க சொன்னார். அதான் பேசலாம்ன்னு” என்றான் திடமான குரலில்.

சக்திவேல் தணிகாசலம் காதுகளில் இது விழுகிறது. ஒரு திருமணம் உறுதிக்காக போராடுகிறது. இன்னொன்று விடுவித்துக் கொள்ள போராடுகிறது என எண்ணிக் கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சங்கடமாக மட்டுமே இருந்தது அந்த பார்வை.

பரணி அதை உணர்ந்தான் போல “மாமா அப்பா.. நீங்க நம்பிக்கையாக இருங்க.. எல்லாம் சரியாதான் இருக்கு. நான்தானே இதில் தவறானேன்.. நானே பேசுகிறேன் அவங்க வீட்டில்.” என்றான்.

தணிகாசலம் “இருப்பா அவசரபடாதே.. இரு.. இது இரண்டு குடும்பம் சம்பந்தப்பட்டது. நீ இரு..” என்றாரவர் சக்திவேலை பார்த்தார்.

சக்திவேல் “ம்.. இருப்பா, பரணி.. அப்பா சொல்றதுதானே சரி.” என்றவர், தணிகாசலத்தை பார்த்து “நாம.. ஒரு பொதுவான இடத்தில் ஆதியோட அப்பாகிட்ட பேசணும்” என்றார்.

தணிகாசலம் “ம்.. சரிதானுங்க..” என்றார்.

பின்னர் சக்திவேல் “அப்படியே உறுதியப்போ வந்திருந்தாங்கள்ள.. பொதுவான ஆட்கள்.. அதான், பெரியசாமி.. சங்கத்திலிருந்து நாராயணமூர்த்தி அவங்ககிட்டவும் அதன்பிறகு பேசி.. சொல்லணும்.” என்றார்.

தணிகாசலம் “ம்.. முதலில் அந்த மாப்பிள்ளை வீட்டில் பேசிடலாம். அதன்பிறகு அவர்கள் என்ன சொல்றாங்கோ அப்புறம் வெளிய சொல்லிக்கலாம்..” என்றார்.

இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்க. கார்த்தியும் பரணியும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர் இடையிடாமல். இப்போது பரணி “மாமா, க்கும்.. அந்த பையன் கல்யாணம் முடியட்டும். அப்புறம் எங்க கல்யாணம் வைத்துக் கொள்ளலாம். நான்.. என் விஷயத்தில் சரியாக யோசிக்க முடியலை அப்போ. அக்கா.. மாமா.. என ஆயிரம் ஓடிகிட்டு இருந்தது. இதில் இப்படி இவங்க கஷ்ட்ட்படுங்கான்னு நினைக்கலை..” என்றான் நிமிர்ந்து பாராமல் தயக்கமாக.

கார்த்திக் “விடு பரணி.. நம்ம குடும்பத்துக்குள்ளேயே முடிய வேண்டியது. விடு.. நேரம்தான். நீ சொல்றது சரிதான் ஆதியோட திருமணம் முடியட்டும்.. அப்படியே பேசுங் அப்பா” என்றான் தந்தையை பார்த்து.

தந்தைகள் இருவரும் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தனர். ‘நேரம்தான்’ என வார்த்தயை செமித்துக் கொண்டு.

கௌசல்யாவை கார்த்திக் அங்கு வர கூடாது என சொல்லியிருந்தான்.. ‘அத்தை வரல.. நீ வராத.. அமைதியாக இரு. அப்பாவின்மேல் மதிப்பு இருந்தால் வராதே’ என எச்சரித்துதான் வெளிய ஹாலுக்கு வந்தான்.

அதனால் கௌசல்யா ஹாலுக்கு வரவில்லை. துளசி பழசாறு எடுத்து வந்து கொடுத்துவிட்டு நகர்ந்துக் கொண்டாள்.

அடுத்தடுத்த நாட்கள் பேச்சு வார்த்தையில் கடந்தது.

அடுத்த வாரத்தில் ஒருநாள், காயத்ரி.. ஷாப்பிங் வந்திருந்தாள். வீட்டில் பெரியதாக யாரும் பேசுவதில்லை.. தந்தை “சாப்பிட்டியா ம்மா” என கேட்பதோடு சரி.. அன்னை மதிப்பதே இல்லை.. அதனால், அதிகம் வீட்டில் இல்லை அவள். தோட்டம் தோட்டம்தான். இன்று, மதியமே தோட்டத்திலிருந்து கிளம்பி.. ஷாப்பிங் வந்திருந்தாள். எத்தனை நாட்கள் பேசாமல் இருப்பது.. உண்மையாகவே நாங்க கல்யாணம் செய்தக்கதான் போறோமா என சந்தேகமே வந்தது பெண்ணுக்கு .. ‘ம்.. எதோ காட்டிலிருந்து காப்பாற்றிவிட்ட பூதம் போல.. அப்படியே விட்டுட்டு போயிட வேண்டியது. இவரென்ன அடியாளா.. இவர்தானே ஹீரோ.. ம்.. எங்க புரியுது’ என மனதில் சலித்துக் கொண்டே அழைத்தாள் பரணியை. ம்.. இன்னும் பரணியும் அவளும் பேசிக் கொள்ளவில்லை. அது என்னமோ ஒரு பயத்தை தர.. பரணிக்கு அழைத்தாள், பெண்.

பரணிக்கும் அழைக்க வேண்டும் என இருந்தாலும்.. இவனின் இயல்பு குணம் ‘எல்லாம் தீரட்டும்’ என்பதாக இருந்ததால்.. அமைதியாக இருந்தான்.

காயத்ரி இரண்டு அழைப்புகள் முடிந்தும் அவன் தன் அழைப்பை ஏற்காமல் இருந்ததால் அப்படியே ஸ்தம்பித்துவிட்டாள்.. கோவையின் கடைவீதியில் நின்றிருந்தாள்.. என்னமோ தனியே இருப்பதாக எண்ணம்.. அவனை பார்க்கலாம், இல்லை.. பேசவாவது செய்யலாம் என அழைத்தால்.. எடுக்கவில்லை..’ என எதோ டாப்ஸ் எடுக்கிறேன் என அந்த துணி கடையின் எல்லா ப்ளோர்களையும் சுற்றி வந்தாள்.

பதினைந்து நிமிடம் சென்று பரணி அழைத்தான், காயத்ரிக்கு. மாலை நேரம்.. இருள் சூழ தொடங்கியிருந்தது.. இப்போதுதான் பரணியின் அலுவலகம் முடிந்தது.. அதனால் இப்போது அழைத்தான் அவளுக்கு. காயத்ரி அழைப்பை ஏற்று அமைதியாக இருந்தாள்.

பரணி “ஹலோ..” என்றான் ரசனையாக. அலுவலகத்தில் யாருமில்ல.. எல்லோரும் கிளம்பியிருந்தனர். விஸ்ராந்தையாக அந்த சுழல்நாற்காலியில் அமர்ந்திருந்தான். வேலையை முடித்துவிட்டு அவளிடம் பேசலாம் என எண்ணி அவளின் அழைப்பை ஏற்கவில்லை, அப்போது. இப்போது அவளின் அமைதி ஒரு புன்னகையைதான் அவனுக்கு கொடுத்தது.. அதனால், தன்போல குரலில் ரசனை வந்தது பரணிக்கு.

காயத்ரி “நான் உங்களை பார்க்கணும்..” என்றாள் அதட்டலாக.

பரணி “அஹ.. அதுகெல்லாம் இன்னும் கொஞ்சநாள் ஆகும்.. உங்க வீட்டில் என்னை பார்த்தால் அவ்வளவுதான்” என்றான்.

காயத்ரி கடையின் பெயர் சொன்னால் “அங்க இருக்கேன் வாங்க..” என்றவள் வைத்துவிட்டாள்.

பரணி அதிர்ந்து அவளுக்கு அழைத்துக் கொண்டே.. வண்டியை எடுத்தான். காயத்ரி அழைப்பை ஏற்கவில்லை.

பரணி அரைமணி நேரம் ஆனது அங்கே வர.. பார்க்கிங்கில் வண்டியை விட்டு.. மீண்டும் காயத்ரிக்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை மேசேஜ்ஜில் “எங்க இருக்க.. நான் வந்துட்டேன்” என்றான்.

காயத்ரி அழைத்தாள் “5th ப்ளோர்” என சொன்னாள்.

பரணி லிஃப்ட்டில் நின்று.. கண்ணாடியை பார்த்து.. தலையை கோதிக் கொண்டு, தன்னையே ரசித்துக் கொண்டான். தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும்.. இறங்கினான். அவளை தேடினான்.. நடையில் நிதானம் இருந்தாலும் கண்களில் தேடல்தான். காயத்ரி லிஃப்ட் பார்த்துக் கொண்டே மறைந்து நின்றுக் கொண்டாள்.. பரணி, சுற்றிலும் பார்க்க அவளை காணோம்.. இங்கேதானே இருக்கிறாள்.. பொறுமையாக நடந்தான்.. அவளை தேடாமல்.. கண்டுக் கொள்ளாமல்.. நடந்தான். பரணிக்கு என்னமோ புதிதாக இருந்தது.. இந்த சுற்றல் எல்லாம்.. உதடுகள் எப்போது புன்னகைக்கு விரியலாம் என அதக்கிய புன்னகையில் இருக்க.. கண்களும் அவளை காணும் நேரத்திற்காக அலைபாய்ந்தது இன்னும்.. இப்போது.

ஐந்து நிமிடத்திற்கு மேல் பொறுமையில்லை.. பரணிக்கு. தன்னவளுக்கு  அழைத்தான். அவள் எடுக்கவில்லை. பரணி நிதானமாக சுற்றிலும் விழிகளை சுழற்றினான்.. எங்கும் காணோம்.. ‘விளையாடுகிறாள்..’ என மனது குதூகலிக்க.. அவள் அழைப்பையும் ஏற்கவில்லை எனவும் பொறுமையிழந்தவன்.. அமருவதற்காக.. இடம் தேடி அமர்ந்துக் கொண்டான்.

காயத்ரி நிதானமாக அவனை தேடிவிட்டு அவனின் பொறுமையை சோதித்துவிட்டு.. மிகநிதானமாக பின்னிலிருந்து அவன் கண்களை மூடினாள். பவளமல்லி பூக்களின் வாசம் தாங்கி.. பூக்களின் மென்மையை விரல்களில் தாங்கி.. பெண்ணவள் அவன் கண்களை மூட.. பரணிக்கு ‘இந்த கஷ்ட்டம்.. பிரிவு.. பெரியவர்களின் பாராமுகம்.. அக்காவின் கோவம்’ எல்லாம் சரிதான் என மூளை மனம் எல்லாம் ஒருசேர யோசித்தது அவனுக்கு. மனதேயில்லாமல் அவளின் விரல்களை பற்றி.. விடுவித்தபடி.. அவளை சுற்றி தன்முன் இழுத்தான்.  காயத்ரி முன் வந்து நின்றாள்.

“என் தாகங்கள் தீர்த்திட 

நீ பிறந்தாயே..

ஓ.. வசந்தராஜா..

தேன் சுமந்த ரோஜா..”

இரண்டு நிமிடம் இருவருக்கும் பாஷைகள் மறந்து போயின.. அவர்களையும் மீறிய நேசம் கண்வழி கசிந்து.. உயிர் நனைந்தது. பரணி நிதானமாக இருக்க முனைந்தான்.. வரவில்லை.. உதடுகள் விரிந்தது அவளை பார்த்ததும். வெட்கம் வந்து சேர்க்கிறது அவளிடம் பேச முடியாமல். சுற்றிலும் பார்த்தான்.. ஓரிருவர் தங்களை பார்ப்பதாக உணருகிறான்.. அவளின் பிடித்திருந்த கையை விட்டான். அது ப்ரைடல் செக்க்ஷன். அதிகம் கூட்டமில்லை. ஆனாலும், இந்த கலாட்டாக்கள் அவர்களை ஈர்க்கிறது போல. அவளின் பிடித்திருந்த கையை விட்டான்.

பரணி முன்னே நடந்தபடியே கவனத்தை ஈர்க்காமல் “எப்போ வந்த” என தலையை கோதிக் கொண்டே கேட்டான். யாரின் கவனத்தையும் ஈர்க்க கூடாதென.

காயத்ரி “இரண்டு மணி நேரமாச்சு..” என்றாள்.

பரணி “என்ன வாங்கியிருக்க.. முடிச்சிட்டியா” என்றான்.

காயத்ரி ஏதும் சொல்லாமல்.. அவனோடு நடந்தாள். பரணி “வா.. பாரு. என்ன வேண்டும்” என்றான்.

காயத்ரி அவனின் கைகளை பிடித்துக் கொண்டாள்.. பரணிக்கு இனிதான தடுமாற்றம்.. ஆனால், அவளின் மென்மையான பிடியை இறுக்கிக் கொண்டான்.. “என்ன வேணும்” என்றான், குரல் குழைந்தது.

காயத்ரி “தெரியலை.. ஏதாவது வாங்கணும்” என்றாள்.

பரணி புடவைகள் பக்கம் சென்று நின்றான்.. டிஸ்ப்ளேயில் இருந்தவற்றை பார்த்தான்.. அழகான ஒரு ஜார்ஜெட் சாரீ.. கிரீன் ஆப்பிள் நிறத்தில் தலைப்பில் மட்டும் ஆரி வொர்க் செய்த புடவை நன்றாக இருக்கிறதா பார்.. என்றான். காயத்ரி “ம்..” என்றாள். அவ்வளவுதான் பில் செய்து வாங்கிக் கொண்டு கிளம்பினர் இருவரும்.

பரணி காரெடுத்து வந்தான். காயத்ரி அமர்ந்ததும் அந்த டிராப்பிக்கில் அமைதியாக நகர்ந்தது கார்.. காயத்ரி “ம்.. சாரதா அண்ணி என்ன சொன்னாங்க” என்றாள்.

பரணி அவளின் முகம் பார்த்து சிரித்தான் பதில் சொல்லவில்லை.

காயத்ரி “அத்தை என்ன சொன்னாங்க” என்றாள்.

பரணி “விடு, அப்புறம் பேசலாம்.. சாப்பிட போலாமா” என்றான்.

காயத்ரி “மணி எட்டுக்கு மேல..” என்றாள்.

பரணி “போகனும்.. உன் அண்ணன்கிட்ட சொல்லிடு” என்றான், அவளை போலவே அதட்டலாக.

காயத்ரி திரும்பி ஆசையாக பார்த்தாள் பரணியை. பரணி யூ டேர்ன் எடுத்து.. உணவகம் நோக்கி சென்றான்.

 

Advertisement