Advertisement

நீ என்னுள் யாரடா!

19

காயத்ரி, உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள். கெளசல்யாவிற்கு ஆத்திரமாக வந்தது.. இன்னும் பெண்ணை நான்கு அடி அடிக்கும் கோவம்.. அப்படியே அறையில் தள்ளி தாழிடும் கோவம்.. இப்போதே திருமணத்தை முடித்து அவளை  அந்த ஆதியோடு அனுபிவிடுகிறேன் பார் என தனக்குள் சூளுரைத்துக் கொண்டு, தன் மகளிடம் “எப்படி டி, அவனை போய் கல்யாணம் செய்துகிறேன்னு சொல்ற. அவன் குடும்பம் சந்தோஷமா இருந்து நீ பார்த்திருக்கியா.. அவன் சிரிச்சு பேசி நீ பார்த்திருக்கியா.. அவங்க எல்லாம் சரியான ஆளுங்களே இல்ல. பெண்ணை தனியாக வைத்துவிட்டு எப்படி நிம்மதியாக இருக்காங்க.. உனக்கு நாளைக்கு ஒரு பிரச்சனையின்னா.. என்னடி செய்வ..” என்றார் எதிரில் நின்று வரவழைத்துக் கொண்ட நிதான குரலில்.

காயத்ரியின் முகத்தில் அன்னையின் பேச்சை கேட்டு அசித்ரைதான் வந்தது.. அமைதியாக கண்மூடி.. அந்த சோபாவின் வளைவில் தலையை சாய்ந்துக் கொண்டாள்.

கௌசல்யா “பதில் சொல்லுடி.. ஆதி எவ்வளோ ஹன்ட்சம்.. வெளிநாட்டில் இருக்கான்.. அளவான குடும்பம்.. இப்போவே ஆபரேஷன் வேண்டாம்.. கல்யாணம் இருக்குன்னு யோசிக்கிறாங்க.. எவ்வளோ அழகா பிளான் பண்றாங்க.. நீ.. நீ ஏன்.. ஏன்டி உனக்கு இப்படி புத்தி போகுது..” என்றார்.

கார்த்திக் “விடும்மா.. மணி பதினொன்று.. சாப்பிட்டு படுக்கலாம்.. காலையில் பேசிக்கலாம்.” என்றான்.

கௌசல்யா “டேய்.. “ என சொல்லி அமர்ந்துக் கொண்டார்.

கார்த்திக் “இல்ல, அப்பாக்கு டைம் ஆச்சு.. காலையில் பேசிக்கலாம். கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா..” என்றான்.

துளசி இவ்வளவு நேரம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு ஹாலில்தானே இருந்தாள்.. அதனால், “மாமா.. நேரமாச்சு மாமா.. சாப்பிடுங்க, அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம். அத்தை நீங்களும்தான்” என்றாள் மெல்லிய குரலில்.

காயத்ரிக்கு இப்போது பசிப்பது போலிருக்க.. நேராக எழுந்து கைகழுவி வந்தவள்.. உண்பதற்கு அமர்ந்தாள்.. வேலை செய்யும் அக்கா வந்து “பாப்பு, பொடி இட்லி இருக்குடா” என ஹாட்பாக் திருந்தார்.

காயத்ரிக்கு பரிமாறினார்.. காயத்ரி அதை தொட்டு பார்த்துவிட்டு “அக்கா, சூடாவே இல்லை.. ஓவென்னில் ஹீட் செய்து நெய் ஊற்றி கொடுங்க க்கா.. வேற  என்ன  இருக்கு” என்றாள், யாரையும் கண்டுக் கொள்ளாமல்.

துளசி மனதினுள் ‘(they you are)’ என சொல்லிக் கொண்டே “காயத்ரி, இன்னிக்கு வெஜ்  ஊத்தப்பம்.. சாம்பார் சூடாகதான் இருக்கு.. இரு பரிமாறுறேன்” என காயத்ரியின் அருகில் வந்து பரிமாற தொடங்கினாள்.. துளசி. எதையும் யோசிக்காமல் நீண்டநாள் சென்று நிம்மதியாக உண்டாள், காயத்ரி. 

சற்று நேரத்தில் கார்த்தியும் சக்திவேலும் வந்தனர் உண்பதற்கு.. வந்து அமர்ந்தனர். துளசி “அத்தை வாங்க மணியாச்சு” என்றாள். கெளசல்யாவிற்கு மகளை நினைத்து கோவமாக வந்தது, அதிலும் இப்போது அவள் தன்னை கேலி செய்வதாக அவர்க்கு தோன்றியது. எனவே அப்படியே வெறித்தபடி அமர்ந்துக் கொண்டார் அன்னை. 

காயத்ரி உண்டு யாரின் முகத்தையும் பார்க்காமல் மேலே தனதறைக்கு சென்றுவிட்டாள்.

கார்த்திக் உண்டு, மகனோடு நேரே தனதறைக்கு வந்துவிட்டான். துளசியும் உண்டு முடித்து, எடுத்து வைத்துவிட்டு வந்தாள். சக்திவேல் கௌசல்யா இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

காயத்ரியின் மனது இன்று சுதந்திரமாக உணர்ந்தது.. ஏனோ பரணியை மனதில் நிரப்ப எந்த தடையும் இன்று அவளுக்கு இல்லையே.. அதுதான் காரணம் என உணர்ந்தாள் பெண். எங்கேனும் ஆதி அழைத்து விடுவானோ என தோன்ற, போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்து விட்டாள். நிம்மதியாக பரணி.. தன்னை கண்டுக் கொண்டது.. தந்தையிடம் நின்று பேசியது.. என அனைத்தையும் அசைபோட்டபடி உறங்கினாள்.

மறுநாள் காலையில் காபி குடிக்க கூட இல்லை.. சாரதாவை அழைத்துவிட்டார் கௌசல்யா. கௌசல்யா, காலையிலிருந்து ஒரு ஆத்திரத்தில் வேலை செய்துக் கொண்டிருகிறார். 

இப்போது, சாரதாவிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தார் “என்ன பழிவாங்கிறீங்களா.. எப்படி இந்த கல்யாணத்தை நடத்துகிறேன் பார். என் பொண்ணு குழந்தை. அவன் பேசி செய்து.. எதோ செய்துட்டான் உன் தம்பி. அவளுக்கு நிச்சயம் முடிந்திடுச்சி. உங்க குடும்பத்திடம் சொல்லி வை.. இது நடக்காது..” என பேசிக் கொண்டிருக்க.. சக்திவேல் வந்தார் தன் அறைக்கு.

சக்திவேல் வாக்கிங் சென்றுவிட்டு வந்தார் இப்போதுதான். மனையாளை காணோம் எனவும்.. தங்களின் அறைக்கு வந்தார்.. சரியாக கௌசல்யா சாரதாவிடம் பேசியது கேட்டது. மனையாளின் எதிரில் வந்து நின்றார்.

நேற்றே சக்திவேல் சொல்லிவிட்டார்.. “நீ ஏதும் பேசகூடாது. சாரதாவிடமும் சரி.. அவங்க வீட்டிலும் சரி. அந்த ஆதி வீட்டில் நாங்க பேசிக்கிறோம். நீ அமைதியாக இரு.. பெரிய சிக்கலாக்கிடாத..” என இரவு அமர்ந்து தன் மனையாளுடன் பேசி இருந்தார். 

சக்திவேலுக்கு புரிகிறது.. தன் மனையாளின் நிலை.. இப்போதெல்லாம் சாரதாவையும் அவர்கள் வீட்டு ஆட்களையும் சற்று தள்ளி வைக்க தொடங்கிவிட்டார் கௌசல்யா என. ம்.. தன் மகனின் வாழ்க்கை இப்படி ஆனதற்கு காரணம் சாரதா என நம்புகிறார் கௌசல்யா.. என புரிகிறது கணவனுக்கு. ஆனால், நடைமுறையில் யாரையும் யாரும் கட்டி வைத்தோ.. பிடித்து வைத்தோ வாழ முடியாதுதானே..’ அந்த நிதர்சனமும் புரிகிறது இந்த தலைவனுக்கு. இது இப்படிதான் நடக்க வேண்டும் என ஆணையிட முடியாதே.. அது கமலாக இருந்தாலும் சரி.. தன் பெண் காயத்ரியாக இருந்தாலும் சரி. ஆனால், ஒன்று செய்யலாம் பாதிப்பை குறைக்க முயலலாம்.. அவ்வளவுதான் தங்களால் இயலும் என உணருகிறார் சக்திவேல். அதனாலேயே அமைதியாக இரு.. இரு.. என படித்து படித்து சொன்னார், தன் மனையாளிடம்.

ஆனால், அதையெல்லாம் காற்றில் விட்டார் கௌசல்யா. இதோ இப்போது சாரதாவிடம் இப்படி பேசிக் கொண்டிருப்பதை கேட்கவும்.. போனை பிடுங்கினார் தன் மனையாளிடம்.. காதில் வைத்தவர் “சாரதா” என்றார் அதட்டலாக.

சாரதாவின் குரல் கரகரப்பாக வந்தது “ம்.. மாமா.. எனக்கு எதுவும் தெரியாது மாமா. உண்மையாக, பரணி ஏதும் என்னிடம் சொல்லவில்லை.” என்றாள் அழுகையும் அமைதியுமான குரலில்.

சக்திவேல் “இங்க பார் ம்மா.. கொஞ்சம் நான் சொல்றத கேளு” என்றார்.

கௌசல்யா “எல்லாம் திட்டம் போட்டு செய்றாங்க.. நீங்க என்னமோ  சமாதனாம பேசுறீங்க” என பொரிந்தார்.

சக்திவேல் “நீ போ காபி கொடுவா” என்றார். கௌசல்யா நகராமல் அப்படியே நின்றார்.

சக்திவேல் போனோடு ஹாலுக்கு வந்தார். மனையாளும் பின்னாடி வந்தார்.

 சாரதா அமைதியாகவே இருந்தாள். சக்திவேல் “உங்க அத்தை பற்றி தெரியுமில்ல ம்மா. அவளுக்கு இப்போவெல்லாம் எதையும் நேராக யோசிக்க தெரியலை. நீ இப்போ இவள் பேசினதை மறந்திடு. நீ பரணியிடமோ, அப்பாவிடமோ ஏதும் கேட்க்காதே. எல்லாம் உன் தம்பி பேசட்டும்.. சரியா. இவள் சொல்லுவது போல.. உன்மேல் ஏதும் தவறில்லை.. நீ வேலையை பாரு ம்மா.. எங்க இனியன் எழுந்துட்டானா..” என்றார்.

சாரதா “அப்படி இல்ல மாமா, நாங்க எதுக்கு பழி வாங்க.. அப்படி எல்லாம் நினைக்க போறோம்..” என ஆரம்பித்தாள்.

சக்திவேல் “சாரதா, நீயாவது என் பேச்சை கேளும்மா.. அமைதியா இரு. உங்க அத்தையை விடு. அவளுக்கு அதிர்ச்சி.. அதான் பேசறா. நீ எப்போதும் போல.. வேலையை பாரு. என் பொண்ணு மாதிரிம்மா நீ. உன்கிட்ட சொல்றதுக்கு என்ன.. புள்ளைங்க ரெண்டும் இப்படி நிற்குதேன்னு கோவம்.. அவளுக்கு..  அதில் என் பொண்டாட்டி பேசிட்டா.. நீ கொஞ்சம் பொருத்து போமாட்டியா..” என்றார் இறங்கிய குரலில் ஒரு யாசிப்போடு…  இறுதி வார்த்தையில் ஒரு சின்ன அதட்டலோடு, மருமகளிடம்.. மகனிடம் கூட பேசியிராத ஒரு உரிமையோடு பேசினார் சக்திவேல்.

சாரதாவிற்கு ஆதங்கம்தான் ‘ஏன் என் அம்மாவிற்கு மட்டும் இருக்காதா.. நான் இப்படி இருக்கிறேன் என.. இப்போது என் தம்பியும் இங்கேயே வந்து நிற்கிறானே என.. அதனால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா’ என தோன்றியது. ஆனால், இப்படி தன் மாமனார் பேசும் போது.. தானும் பதிலுக்கு பதில் சண்டை போட தோன்றவில்லை மருமகளுக்கு. சாரதா “அய்யோ மாமா” என்றவள் என்ன சொல்லுவது என நிறுத்தினாள், பின் அவளே “ம்.. சரி மாமா.. நான் ஏதும் நினைக்கலை. நான் தம்பிகிட்ட பேசலை. உமேஷ் எழுந்துட்டான். நீங்க அத்தையை பாருங்க மாமா..” என்றவள் “வைக்கட்டுமா மாமா” என்றாள்.

சக்திவேல் “ம்.. சரி ம்மா.. சரி” என்றார் அமைதியான குரலில்.

குடும்பம் எதோ ஓரிடத்தில் ஒருவருக்கு கட்டுப்பட வேண்டும். அப்படி இருந்தால்தானே.. சரியாக இருக்கும். அதில் சாரதாவிற்கே முதல் பங்கு.. இப்போதும் சாரதாவே, தன் மாமனாரின் பேச்சிற்கு முதலில் கட்டுபட்டாள்.

கௌசல்யா கணவருக்கு காபியோடு வந்து அமர்ந்தார்.. சக்திவேல் “கோவிலுக்கு போகனும் கிளம்பி வா” என்றார்.

கௌசல்யா “நீங்க காயத்ரிகிட்ட பேசுங்க.. இப்போ என்ன கோவில்.” என்றார்.

சக்திவேல் “போகனும் கிளம்பு” என்றார்.. காபியை பருகிக் கொண்டே.

கௌசல்யா “எனக்கு, அங்க சம்பந்தி வீட்டுக்கு போகனும்.” என சொல்லியவர் உள்ளே சென்றுவிட்டார்.

சக்திவேல், ஏதும் சொல்லாமல் காபியை குடித்து முடித்து.. குளிப்பதற்கு சென்றார்.

கௌசல்யா, இன்று சம்பந்தி வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தார். அதனால், இப்போது அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார்.  ஆதியின் அம்மாவிற்கு அடுத்த வாரத்தில் ஆபரேஷன் செய்துக் கொள்ளலாம் என நாள் சொல்லியிருந்தனர். எனவே, நேற்று இரவே அவர்கள் வீடு சென்றுவிட்டனர். அதனால், கௌசல்யா இன்று காலையில் வருகிறேன் வீட்டிற்கு என சம்பந்தியிடம் சொல்லி இருந்தார்.

கௌசல்யா வேலை செய்பவரிடம் அவர்களுக்கும் சேர்த்து, மதிய சமையலை செய்ய சொல்லி இருந்தார். எனவே, அந்த வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது. 

காயத்ரி எழுந்து கீழே வந்தாள். வீடு ஷ்ரவனின் விளையாட்டு சாமான்கள் போல கலைந்து இருந்தது.. ம்.. யாரும் யாருடனும் பேசவில்லை. ஒவ்வொருவரும் எதோ யோசனையில் இருந்தனர் போல. 

கார்த்திக், அமைதியாக அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தான்.. காயத்ரி கிட்சென் உள்ளே சென்று தனக்கு காபி கலந்துக் கொண்டு வந்து தன் அண்ணனின் எதிரில் அமர்ந்தாள்.

கார்த்திக் ஏதும் பேசவில்லை. துளசிதான் “சாப்பிடலாமில்ல காயூ. அப்புறம் காபி குடிக்கலாமில்ல” என்றாள்.

காயத்ரி “கொஞ்சம் தலையை வலிக்குது அண்ணி.” என்றாள்.

கௌசல்யா ரைமிங்காக “எல்லோருக்கும் தலைவலியை கொடுத்துட்டு.. உனக்கு தலை வலிக்குதா” என்றார், கிட்செனிலிருந்து.

காயத்ரி அமைதியாக இருந்தாள்.

கௌசல்யா “சரி கிளம்பு, போய்.. உங்க வீட்டு ஆட்களை பார்த்துட்டு வந்திடுவோம்” என்றார்.

காயத்ரி அன்னையிடம் ஏதும் பேசாமல் “அண்ணி, எனக்கு டிபன் பத்து நிமிஷம் சென்று.. தேனு அக்காகிட்ட கொடுத்து விட்டுடுங்க” என்றுவிட்டு.. மேலே தனதறைக்கு சென்றுவிட்டாள்.

கௌசல்யா “கழுத.. எங்க போறேன்னு பார்க்கிறேன். டேய் கார்த்திக் என்ன பார்த்துட்டே இருக்க.. உன் தங்கச்சிகிட்ட என்னான்னு கேட்கமாட்டியா.. ஆளாளுக்கும் ஒருபக்கம் நிக்குறீங்க.. எனக்கு பயமா இருக்குடா” என்றார்.

கார்த்திக் “அம்மா.. அதான் அப்பா பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாரில்ல” என பேசிக் கொண்டிருக்க.. இப்போது பரணியின் வீட்டிலிருந்து.. தணிகாசலம் பரணி இருவரும் வந்தனர்.

Advertisement